‘செம்மையான பாதையில்’ நடவுங்கள்
‘நீதிமான்களுக்கு நன்மையுண்டாகும்’ என்று ஏசாயா தீர்க்கதரிசி கூறினார், ஏனென்றால் “அவர்கள் தங்கள் கிரியைகளின் பலனை அநுபவிப்பார்கள்.” ஏசாயா மேலும் இவ்வாறு சொன்னார்: “நீதிமானுடைய பாதை செம்மையாயிருக்கிறது.” (ஏசாயா 3:10; 26:7) நம்முடைய நடத்தையாலும் நல்ல பலன்கள் கிடைக்க வேண்டுமானால், கடவுளுடைய பார்வையில் எது சரியானதோ அதை செய்வது அவசியம் என்பது தெளிவாக தெரிகிறது.
ஆனால் நாம் எவ்வாறு செம்மையான பாதையில் நடக்கலாம்? அப்படி நடக்கையில் என்ன ஆசீர்வாதங்களை எதிர்பார்க்கலாம்? கடவுளுடைய நீதியுள்ள தராதரங்களுக்கு இசைவாக நாம் வாழ்ந்தால் மற்றவர்கள் எப்படி நன்மையடைவார்கள்? நீதிமொழிகள் என்ற பைபிள் புத்தகத்தின் 10-ம் அதிகாரத்தில் பூர்வ இஸ்ரவேலரின் அரசன் சாலொமோன், நீதிமானுக்கும் துன்மார்க்கனுக்கும் உள்ள வித்தியாசத்தை எடுத்துக் கூறுவதன் மூலம் இந்தக் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார். அப்படி பதிலளிக்கையில் ‘நீதிமான்[கள்]’ என்ற வார்த்தையை 13 தடவை பயன்படுத்துகிறார். 15 முதல் 32 வரையுள்ள வசனங்களில் இது ஒன்பது தடவை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அப்படியென்றால் நீதிமொழிகள் 10:15-32 வரையுள்ள வசனங்களை சிந்திப்பது உற்சாகமளிப்பதாக இருக்கும்.a
சிட்சையை ஏற்றுக்கொள்
நீதி எவ்வளவு முக்கியம் என்பதை சாலொமோன் சுட்டிக்காட்டுகிறார். அவர் இவ்வாறு கூறுகிறார்: “ஐசுவரியவானுடைய பொருள் அவனுக்கு அரணான பட்டணம்; ஏழைகளின் வறுமையோ அவர்களைக் கலங்கப்பண்ணும். நீதிமானுடைய பிரயாசம் ஜீவனையும், துன்மார்க்கனுடைய விளைவோ பாவத்தையும் பிறப்பிக்கும்.”—நீதிமொழிகள் 10:15, 16.
அரணான பட்டணம் அதில் வசிப்பவர்களுக்கு ஓரளவு பாதுகாப்பை அளிப்பது போலவே, வாழ்க்கையின் நிச்சயமற்ற சில சந்தர்ப்பங்களில் செல்வம் பாதுகாப்பை அளிக்கலாம். எதிர்பாராத சில சம்பவங்கள் நேரிடுகையில் ஏழ்மை, நிலைமையை மிக சீர்குலைத்துவிடும். (பிரசங்கி 7:12) ஆனால் செல்வத்தில் செழித்தாலும், வறுமையில் வாடினாலும் இரண்டிலுமே ஆபத்து இருப்பதை ஞானமுள்ள ராஜா குறிப்பால் உணர்த்துவதாகவும் இருக்கலாம். ஒரு பணக்காரன், மதிப்புமிக்க தன் பொருட்கள் “உயர்ந்த மதில்போலி”ருப்பதாக எண்ணி தன்னுடைய செல்வத்தையே முழுவதுமாக நம்பியிருக்கலாம். (நீதிமொழிகள் 18:11) அதேவிதமாக பரம ஏழையும் வறுமையால் தன் எதிர்காலமே இருண்டுவிட்டதாக தப்புக்கணக்குப் போடலாம். இவ்வாறு இரு தரப்பினருமே கடவுளிடம் நல்ல பெயரை எடுக்க தவறிவிடலாம்.
மறுபட்சத்தில் நீதிமானிடம் பொருள் அதிகமிருந்தாலும் குறைவாக இருந்தாலும் அவனுடைய ஒழுக்கமுள்ள செயல்கள் ஜீவனுக்கு வழிநடத்தும். எவ்வாறு? அவன் போதுமென்ற மனதுடன் திருப்தியாக இருக்கிறான். தன் நிதி நிலைமை கடவுளோடு தனக்கிருக்கும் நல்ல நிலைநிற்கையை பாதிக்க அவன் அனுமதிப்பதில்லை. ஏழையானாலும் பணக்காரனானாலும் நீதிமானின் வாழ்க்கை முறை, இப்போது சந்தோஷத்தையும் எதிர்காலத்தில் நித்தியஜீவ நம்பிக்கையையும் அளிக்கிறது. (யோபு 42:10-13) துன்மார்க்கனுக்கு செல்வம் இருந்தாலும் அதிலிருந்து அவன் நன்மையடைவதில்லை. செல்வம் தரும் பாதுகாப்பின் மதிப்பை போற்றி, கடவுளுடைய சித்தத்திற்கிசைய வாழ்வதற்கு பதிலாக பாவத்தை விளைவிக்கும் வாழ்க்கைக்கு தன் செல்வங்களை பயன்படுத்துகிறான்.
“சிட்சையை ஏற்றுக்கொள்பவன் ஜீவ பாதை; கடிந்துகொள்ளுதலை விட்டுவிடுகிறவனோ பாதைமாறிப்போக செய்கிறான்” என்று தொடர்ந்து இஸ்ரவேலின் அரசன் கூறுகிறார். (நீதிமொழிகள் 10:17, NW) இந்த வசனத்தை இரண்டு விதமாக புரிந்துகொள்ளலாம் என்று ஒரு பைபிள் அறிஞர் கூறுகிறார். சிட்சையை ஏற்றுக்கொண்டு நீதியை நாடுபவன் ஜீவ பாதையில் தொடருகிறான்; கடிந்துகொள்ளுதலை விட்டுவிடுகிறவனோ பாதைமாறி போகிறான் என்பது ஒரு அர்த்தம். இது வேறொரு அர்த்தத்தையும் தரலாம், அதாவது, “சிட்சையை ஏற்றுக்கொள்பவன் ஜீவனுக்குப் போகிற வழியை [பிறருக்கு] காட்டுகிறான் [ஏனென்றால் அவனுடைய நல்ல முன்மாதிரி அவர்களுக்கு பயனளிக்கிறது], ஆனால் திருத்தத்தை அசட்டை செய்கிறவன் மற்றவர்களை வழிவிலகி போகச் செய்கிறான்.” (நீதிமொழிகள் 10:17, நியூ இன்டர்நேஷனல் வர்ஷன்) எப்படியானாலும், சிட்சையை உறுதியாக ஏற்றுக்கொண்டு, கடிந்துகொள்ளுதலை விட்டுவிடாமல் இருப்பது எவ்வளவு முக்கியம்!
பகைமைக்கு பதிலாக அன்பு
அடுத்து ஒரே அர்த்தம் தரும் இரண்டு வாக்கியங்களில் ஒரு நீதிமொழியை சாலொமோன் கூறுகிறார். இரண்டாவது வாக்கியம் முதல் வாக்கியத்துக்கு அதிக முக்கியத்துவத்தை அளிக்கிறது. அவர் இவ்வாறு சொல்கிறார்: “பகையை மறைக்கிறவன் பொய் உதடன்.” இருதயத்தில் மற்றொருவனை பகைத்தும், இனிக்க இனிக்க அவனை புகழ்ந்து பேசி அதை மூடிமறைப்பவன் ஏமாற்றுக்காரன், அவன் “பொய் உதடன்.” இதோடுகூட ஞானமுள்ள அரசன் இவ்வாறு கூறுகிறார்: “புறங்கூறுகிறவன் மதிகேடன்.” (நீதிமொழிகள் 10:18) தங்கள் பகைமையை மறைப்பதற்கு பதிலாக சிலர் தாங்கள் வெறுப்பவர்களைப் பற்றி பொய் குற்றங்களைச் சாட்டுகிறார்கள் அல்லது அவர்களைப் பற்றி தரக்குறைவாக மற்றவர்களிடம் பேசுவார்கள். இப்படிச் செய்வது முட்டாள்தனமானது, ஏனென்றால் ஒருவரை பழிதூற்றுவது உண்மையில் அவரை எந்த விதத்திலும் மாற்றிவிடப் போவதில்லை. இப்படி பழிதூற்றுபவர் சொல்வதைக் கேட்பவர் புத்திசாலியாக இருந்தால் இவருடைய கெட்ட எண்ணத்தை புரிந்துகொள்வார், இவரையே மோசமானவராக நினைப்பார். இவ்வாறு ஒருவரைப் பற்றி தவறான செய்தியைப் பரப்புகிறவர் தனக்கே தீங்கு விளைவித்துக் கொள்கிறார்.
யாரையும் ஏமாற்றாமலும் பழிதூற்றாமலும் இருப்பதே நீதியின் வழி. கடவுள் இஸ்ரவேலரிடம் இவ்வாறு கூறினார்: “உன் சகோதரனை உன் உள்ளத்தில் பகையாயாக.” (லேவியராகமம் 19:17) இயேசு தமக்குச் செவிசாய்த்தவர்களிடம் இவ்வாறு கூறினார்: ‘உங்கள் [சத்துருக்களையும்கூட] சிநேகியுங்கள்; . . . உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள். இப்படிச் செய்வதினால் நீங்கள் பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவுக்குப் புத்திரராயிருப்பீர்கள்.’ (மத்தேயு 5:44, 45) நம் இருதயத்தை பகைமைக்குப் பதிலாக அன்பால் நிரப்புவது எத்தனை மேலானது!
‘உதடுகளை அடக்கு’
நாவை அடக்குவது அவசியம் என்பதை வலியுறுத்துபவராக ஞானமுள்ள அரசன் இவ்வாறு கூறுகிறார்: “சொற்களின் மிகுதியில் பாவமில்லாமற்போகாது; தன் உதடுகளை அடக்குகிறவனோ புத்திமான்.”—நீதிமொழிகள் 10:19.
“மூடன் மிகுதியாய்ப் பேசுகிறான்.” (பிரசங்கி 10:14) அவன் வாய் “புத்தியீனத்தைக் கக்கும்.” (நீதிமொழிகள் 15:2) அதிகம் பேசுகிறவர்கள் அனைவருமே முட்டாள்கள் என்று சொல்வதற்கில்லை. ஆனால் அதிகம் பேசுகிற ஒருவர் தீங்கிழைக்கும் வீண்பேச்சை அல்லது வதந்தியைப் பரப்புவதற்கு காரணமானவராக இருப்பது எவ்வளவு சுலபம்! முட்டாள்தனமான பேச்சு பெரும்பாலும் நற்பெயரை கெடுக்கலாம், உணர்ச்சிகளைப் புண்படுத்தலாம், உறவில் விரிசலை உண்டுபண்ணலாம், சரீரப்பிரகாரமான காயத்தையும் ஏற்படுத்தலாம். “மட்டுக்கு மிஞ்சின பேச்சு அளவற்ற தீமைகளை விளைவிக்கும்.” (நீதிமொழிகள் 10:19, பொ.மொ.) ஒவ்வொரு விஷயத்தைப் பற்றியும் ஏதாவது சொல்லிக்கொண்டிருப்பவரின் அருகில் இருப்பது எரிச்சலூட்டுவதாக இருக்கிறது. நாம் அளவுக்கு அதிகமாக பேசாமல் இருப்போமாக.
நாவை அடக்குகிறவன் பொய் பேசுவதை தவிர்ப்பதோடு விவேகமாகவும் நடந்துகொள்கிறான். அவன் பேசுவதற்கு முன் யோசிக்கிறான். யெகோவாவின் தராதரங்களை நேசிப்பதாலும் தன் சகமனிதருக்கு உதவ மனதார விரும்புவதாலும் தன் பேச்சு மற்றவர்களை எவ்வாறு பாதிக்கும் என்பதை நிதானிக்கிறான். அவன் அன்பாகவும் தயவாகவும் பேசுகிறான். பிறர் விரும்பும் விதத்திலும் அவர்களுக்குப் பிரயோஜனமான விதத்திலும் பேசுவது எப்படி என்பதை நன்கு யோசித்து பேசுகிறான். அவனுடைய வார்த்தைகள் “வெள்ளித்தட்டில் வைக்கப்பட்ட பொற்பழங்களுக்குச் சமானம்” அதாவது அவை எல்லா சமயங்களிலும் நயத்தோடும் கண்ணியத்தோடும் பேசப்படும்.—நீதிமொழிகள் 25:11.
“அநேகரைப் போஷி”
“நீதிமானுடைய நாவு சுத்த வெள்ளி, துன்மார்க்கனுடைய மனம் அற்ப விலையும் பெறாது” என்று சாலொமோன் தொடர்ந்து சொல்கிறார். (நீதிமொழிகள் 10:20) நீதிமானின் பேச்சு சுத்தமானது—தரமான, புடமிடப்பட்ட வெள்ளியைப் போன்றது, கசடு இல்லாதது. யெகோவாவின் வார்த்தையின் உயிர் காக்கும் அறிவை அவருடைய ஊழியர்கள் மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளும் விஷயத்தில் இது நூற்றுக்கு நூறு உண்மை. அவர்களுடைய மகத்தான போதகராகிய யெகோவா தேவன் அவர்களுக்குப் போதித்து, ‘இளைப்படைந்தவனுக்கு சமயத்திற்கேற்ற வார்த்தை சொல்ல அறியும்படி அவர்களுக்குக் கல்விமானின் நாவைத் தந்தருளி’ இருக்கிறார். (ஏசாயா 30:20, NW; 50:4) பைபிள் சத்தியத்தைப் பேசுகையில் உண்மையிலேயே அவர்களுடைய நாவு தரமான வெள்ளியைப் போல் இருக்கிறது. துன்மார்க்கரின் எண்ணங்களைவிட நல்மனமுள்ளவர்களுக்கு இவர்கள் சொல்லும் வார்த்தைகள் விவரிக்க முடியாதளவுக்கு எவ்வளவு அதிக மதிப்புமிக்கவை! கடவுளுடைய ராஜ்யத்தையும் அவருடைய வியத்தகு செயல்களையும் பற்றி பேசுவதற்கு ஆர்வமுள்ளவர்களாய் இருப்போமாக.
நீதிமான் தன்னை சுற்றியிருப்பவர்களுக்கு ஒரு ஆசீர்வாதமாக இருக்கிறான். “நீதிமானுடைய உதடுகள் அநேகரைப் போஷிக்கும்; மூடரோ மதியீனத்தினால் மாளுவார்கள்” என்று சாலொமோன் தொடர்ந்து கூறுகிறார்.—நீதிமொழிகள் 10:21.
எவ்வாறு ‘நீதிமான் அநேகரைப் போஷிக்கிறான்’? இங்கே பயன்படுத்தப்பட்டுள்ள எபிரெய வார்த்தையின் அர்த்தம் “மேய்ப்பு” என்பதாகும். பண்டைய காலங்களில் ஒரு மேய்ப்பன் தன் ஆடுகளை பராமரித்த விதமாகவே வழிநடத்தி, போஷிக்கும் கருத்தில் குறிப்பிடப்படுகிறது. (1 சாமுவேல் 16:11; சங்கீதம் 23:1-3; சாலொமோனின் உன்னதப்பாட்டு 1:7) நீதிமான் மற்றவர்களை நீதியின் பாதைக்கு வழிநடத்துகிறான், அவன் வாயின் வார்த்தைகள் செவிசாய்த்து கேட்பவர்களை போஷிக்கும். இதன் விளைவாக அவர்கள் அதிக மகிழ்ச்சியும், அதிக மனநிறைவும் அளிக்கும் வாழ்க்கை வாழ்கிறார்கள், அவர்கள் நித்திய ஜீவனையும்கூட பெறலாம்.
மூடனைப் பற்றி என்ன சொல்லலாம்? மதியீனத்தால் தன் போக்கின் விளைவுகளைப் பற்றி நன்கு யோசிப்பதுமில்லை, கவலைப்படுவதுமில்லை. இப்படிப்பட்ட ஒருவன் விளைவுகளைக் குறித்து சற்றும் சிந்திக்காமல் மனம்போல் எல்லாவற்றையும் செய்கிறான். ஆகவே அவன் செய்கைக்குத் தக்க தண்டனையைப் பெறுகிறான். நீதிமான் மற்றவர்களின் உயிரைக் காக்க உதவிக்கரம் நீட்டுகையில் மதியீனனோ தன் உயிரையே காப்பாற்றிக் கொள்ள முடியாமல் திண்டாடுகிறான்.
ஒழுக்கங்கெட்ட நடத்தையை வெறுத்து ஒதுக்குங்கள்
ஒருவர் எப்படிப்பட்டவர் என்பதை அவருடைய விருப்பு வெறுப்புகளை வைத்து தெரிந்துகொள்ளலாம். இந்த உண்மையை சாலொமோன் ராஜா இவ்வாறு கூறுகிறார்: “தீவினை செய்வது [“ஒழுக்கங்கெட்ட நடத்தையில் ஈடுபடுவது,” NW] மூடனுக்கு விளையாட்டு; புத்திமானுக்கோ ஞானம் உண்டு.”—நீதிமொழிகள் 10:23.
ஒழுக்கங்கெட்ட நடத்தை சிலருக்கு பொழுதுபோக்கு, அல்லது விளையாட்டு; ‘ஒரு ஜாலிக்காக’ அதில் ஈடுபடுகின்றனர். இவர்கள் கடவுளுக்குக் கணக்கு கொடுக்க வேண்டும் என்ற எண்ணமில்லாதவர்கள், தவறான பாதையில் நடப்பதை ஒப்புக்கொள்ள மனமில்லாதவர்கள். (ரோமர் 14:12) தாங்கள் செய்யும் தவறுகளை கடவுள் பார்ப்பதில்லை என்று எண்ணும் அளவுக்கு அவர்கள் மாறுபாடான சிந்தனையுள்ளவர்களாகிறார்கள். அவர்கள் தங்கள் செயல்களின் மூலமாக “தேவன் [“யெகோவா,” NW] இல்லை” என்று சொல்கிறார்கள். (சங்கீதம் 14:1-3; ஏசாயா 29:15, 16) அது எத்தனை முட்டாள்தனம்!
ஆனால் விவேகிக்கோ ஒழுக்கங்கெட்ட நடத்தை விளையாட்டல்ல என்பது தெரியும். இது கடவுளுக்கு பிரியமில்லாதது, அவரோடு ஒருவருக்கிருக்கிற உறவை பாதிக்கும் என்பது அவனுக்குத் தெரியும். இந்த ஒழுக்கங்கெட்ட நடத்தை முட்டாள்தனமானது, ஏனென்றால் அது சுயமரியாதையை பறித்துவிடுகிறது, திருமணங்களை நாசமாக்கிவிடுகிறது, மனதையும் உடலையும் கெடுத்துவிடுகிறது, ஆன்மீக காரியங்களுக்கு போற்றுதல் காட்டாதபடிக்கு செய்துவிடுகிறது. ஒழுக்கங்கெட்ட நடத்தையை வெறுத்து தள்ளி ஞானத்தை அன்பான ஒரு சகோதரியைப் போல நேசிப்பதே ஞானமுள்ள செயல்.—நீதிமொழிகள் 7:5.
சரியான அஸ்திவாரத்தின்மீது கட்டுங்கள்
ஒருவர் தன் வாழ்க்கையை சரியான அஸ்திவாரத்தின்மீது கட்டுவதன் பயனை சுட்டிக்காட்டி சாலொமோன் இவ்வாறு கூறுகிறார்: “துன்மார்க்கன் பயப்படும் காரியம் அவனுக்கு வந்து நேரிடும்; நீதிமான் விரும்புகிற காரியம் அவனுக்குக் கொடுக்கப்படும். சுழல்காற்று கடந்து போவதுபோல் துன்மார்க்கன் கடந்து போவான்; நீதிமானோ நித்திய அஸ்திபாரமுள்ளவன்.”—நீதிமொழிகள் 10:24, 25.
துன்மார்க்கனைப் பார்த்து மற்றவர்கள் பயப்படுவார்கள். ஆனால் கடைசியில், அவன் பயப்படும் காரியம் அவனுக்கே நேரிடும். நீதியுள்ள நியமங்களின் அஸ்திவாரம் அவனுக்கு இல்லாததால் சுழல்காற்று வீசுகையில் ஆட்டங்கண்டு நொறுங்கி விழும் ஒரு கட்டடத்தைப் போலிருக்கிறான். அழுத்தத்தில் அவன் அமிழ்ந்துவிடுகிறான். ஆனால் நீதிமானே, இயேசுவின் வார்த்தைகளுக்கு இசைவாக நடக்கிறவனைப் போலிருக்கிறான். அவன் ‘கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனுஷன்.’ “பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதியும், அது விழவில்லை; ஏனென்றால், அது கன்மலையின்மேல் அஸ்திபாரம் போடப்பட்டிருந்தது” என்று இயேசு சொன்னார். (மத்தேயு 7:24, 25) இப்படிப்பட்ட ஒருவரை அசைக்க முடியாது, அவருடைய சிந்தனையும் செயல்களும் கடவுளுடைய நியமங்களின்மீது உறுதியாக ஸ்தாபிக்கப்பட்டிருக்கின்றன.
துன்மார்க்கனுக்கும் நீதிமானுக்கும் இடையே காணப்படும் இன்னும் அநேக வேறுபாடுகளை குறிப்பிடுவதற்கு முன், ஞானமுள்ள அரசன் சுருக்கமாக, முக்கியமான எச்சரிப்பைக் கொடுக்கிறார். அவர் இவ்வாறு கூறுகிறார்: “பற்களுக்குக் காடியும், கண்களுக்குப் புகையும் எப்படியிருக்கிறதோ, அப்படியே சோம்பேறியும் தன்னை அனுப்புகிறவர்களுக்கு இருக்கிறான்.” (நீதிமொழிகள் 10:26) காடி பற்களுக்கு அசெளகரியத்தைத் தரும். அதில் அசிட்டிக் அமிலம் இருப்பதால் வாயில் புளிப்பு சுவையை உண்டுபண்ணி, பற்களை கூசச் செய்யும். புகையும் கண்களுக்கு எரிச்சலையும் வலியையும் ஏற்படுத்துகிறது. அதைப் போலவே, சோம்பேறியை வேலைக்கு அமர்த்துபவன் அல்லது தன் சார்பாக அவனை அனுப்புகிறவன் தொல்லையை அனுபவிப்பான், பண நஷ்டத்தையும் அடைவான்.
‘யெகோவாவின் வழியே அரண்’
இஸ்ரவேலின் அரசன் தொடர்ந்து இவ்வாறு கூறுகிறார்: “ஆண்டவரிடம் [“யெகோவாவிடம்,” NW] கொள்ளும் அச்சம் ஆயுளை நீடிக்கச் செய்யும்; பொல்லாரின் ஆயுட்காலம் குறுகிவிடும். நல்லார் தாம் எதிர்பார்ப்பதைப் பெற்று மகிழ்வர்; பொல்லார் எதிர்பார்ப்பதோ அவர்களுக்குக் கிட்டாமற் போகும்.”—நீதிமொழிகள் 10:27, 28, பொ.மொ.
நீதிமான் கடவுள் பயத்தால் வழிநடத்தப்படுகிறான், அவன் சிந்தனையிலும் சொல்லிலும் செயலிலும் யெகோவாவை பிரியப்படுத்தவே விரும்புகிறான். கடவுள் அவனை கவனித்துக் கொள்கிறார், அவனுடைய நியாயமான எதிர்பார்ப்புகளை திருப்தி செய்கிறார். ஆனால் துன்மார்க்கனின் வாழ்க்கையில் கடவுளுக்கு இடமில்லை. சில சமயங்களில் அவனுடைய எதிர்பார்ப்புகள் நிறைவேறுவது போல தோன்றலாம். ஆனால் அது தற்காலிகமானதே, ஏனென்றால் வன்முறையோ அவனுடைய வாழ்க்கை பாணியால் வரும் நோயோ அவனுடைய ஆயுசு நாட்களைக் குறைத்துவிடுகிறது. அவன் இறக்கும்போது அவனுடைய நம்பிக்கையும் அழிந்துவிடுகிறது.—நீதிமொழிகள் 11:7.
“கர்த்தரின் [“யெகோவாவின்,” NW] வழி உத்தமர்களுக்கு அரண், அக்கிரமக்காரருக்கோ கலக்கம்” என்று சாலொமோன் கூறுகிறார். (நீதிமொழிகள் 10:29) இங்கே யெகோவாவின் வழி என்பது நாம் நடக்க வேண்டிய ஜீவ வழியைக் குறிப்பதில்லை. ஆனால் மனிதகுலத்துடன் கடவுள் தொடர்பு கொள்ளும் விதத்தை குறிக்கிறது. “அவர் கன்மலை; அவர் கிரியை உத்தமமானது; அவர் வழிகளெல்லாம் நியாயம்” என்று மோசே கூறினார். (உபாகமம் 32:4) கடவுளுடைய நீதியான வழி நீதிமான்களுக்கு பாதுகாப்பையும் துன்மார்க்கனுக்கு அழிவையும் அர்த்தப்படுத்தும்.
யெகோவா அவருடைய மக்களுக்கு எப்பேர்ப்பட்ட அரணாக நிரூபித்திருக்கிறார்! “நீதிமான் என்றும் அசைக்கப்படுவதில்லை; துன்மார்க்கர் பூமியில் வசிப்பதில்லை. நீதிமானுடைய வாய் ஞானத்தை வெளிப்படுத்தும்; மாறுபாடுள்ள நாவோ அறுப்புண்டுபோம். நீதிமான்களுடைய உதடுகள் பிரியமானவைகளைப் பேச அறியும்; துன்மார்க்கருடைய வாயோ மாறுபாடுள்ளது.”—நீதிமொழிகள் 10:30-32.
நீதிமானுக்கு எல்லாம் நல்லபடியாக நடக்கும், நீதியின் பாதையில் நடப்பதால் ஆசீர்வதிக்கப்படுகிறான். ஆம், “கர்த்தரின் [“யெகோவாவின்,” NW] ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும்; அதனோடே அவர் வேதனையைக் கூட்டார்.” (நீதிமொழிகள் 10:22) அப்படியென்றால் கடவுளுடைய நியமங்களுக்கு இசைவாக வாழ்வதற்கு நாம் எப்போதும் கவனம் செலுத்துவோமாக. நம்முடைய உதடுகளை அடக்கி, கடவுளுடைய வார்த்தையின் உயிர்காக்கும் சத்தியத்தினால் மற்றவர்களைப் போஷித்து, நீதியின் பாதையில் அவர்களை வழிநடத்த நம்முடைய நாவை பயன்படுத்துவோமாக.
[அடிக்குறிப்பு]
a நீதிமொழிகள் 10:1-14 வரையான வசனங்களின் விளக்கத்துக்கு 2001, ஜூலை 15, காவற்கோபுரம், பக்கங்கள் 24-7-ஐக் காண்க.
[பக்கம் 26-ன் படம்]
நாவு “சுத்த வெள்ளி”யைப் போல இருக்கலாம்