இளைஞர் கேட்கின்றனர் . . .
புறங்கூறுதல் அதில் என்ன தீங்கு இருக்கிறது?
“அவர்கள் [வளரிளமைப் பருவத்தினர்] . . . பல இடங்களிலும் சுற்றித்திரிந்து ஒருவரோடொருவர் புறங்கூறித் தங்கள் பொழுதைக் கழிக்கிறார்கள்.”—சாக்ரட்டீஸ், பொ.ச.மு. 400.
‘கடைசியாக நடந்ததை நீ கேள்விப்பட்டாயா?’ ‘என்னவென்று ஊகி’ ‘இதை கேட்கும் வரைக் காத்திரு!’ ‘உன்னால் ஓர் இரகசியத்தை வைத்துக் கொள்ளமுடியுமா?’ இவை அனைத்துமே பொதுவாக மற்றவர்களைப் பற்றிய இரகசியமான, ஆவலைத்தூண்டும் அல்லது கவர்ச்சியான செய்திகளையும்கூட பரப்புவதற்கு முன்னால் சொல்லப்படும் பீடிகைகளாகும். இப்பழக்கம் பொதுவாக புறங்கூறுதல் என்றறியப்படுகிறது.
சாக்ரட்டீஸ் நாட்களிலிலிருந்தது போலவே, இன்னும் இளைஞர்கள் குறிப்பாக இந்தப் பழக்கத்தை விரும்புகிறவர்களாக இருக்கிறார்கள். ஆய்வாளர்கள் புறங்கூறுதலை, இனம், வயது மற்றும் கலாச்சாரத்தை ஊடுருவிச் செல்லும் அனைத்துலகின் இயல்பான நிகழ்ச்சி என்றழைக்கிறார்கள். ஏன், செய்தி தொடர்பு பத்திரிகையின்படி (Journal of Communication) சிறு பிள்ளைகளும்கூட “அவர்கள் உண்மையில் பேசவும் மற்றவர்களை அடையாளங் கண்டுகொள்ளவும் ஆரம்பிக்கும் சமயம் முதற்கொண்டு புறங்கூறுகிறார்கள்.”
புறங்கூறுதல் கண்டிப்பாகவே பெண்களின் பழக்கமல்லவா? தவறு! ஆய்வாளர்கள் லெவினும் ஆர்லூக்கும் ஆண்களும் பெண்களுமடங்கிய கல்லூரி மாணவர்களின் ஒரு தொகுதியின் சம்பாஷணைகளைப் பகுத்து ஆராய்ந்தனர். விளைவு? ஆண்கள் பெண்களைப் போல அப்படியே புறங்கூறும் மனச்சாய்வுள்ளவர்களாக நிரூபித்தனர்!
ஆனால் புறங்கூறுதலை நாம் ஏன் அத்தனை கவர்ச்சியூட்டுவதாகக் காண்கிறோம்? அதைக் குறித்து எச்சரிக்கையாயிருக்க நல்ல காரணமிருக்கிறதா?
புறங்கூறுதல்—நல்லது, கெட்டது மற்றும் அருவருப்பானது
புறங்கூறுதல் வீண்பேச்சாகும். ஆனால் எப்போதும் அது காரியங்களின் மீது அல்ல, ஆனால் மக்களின் குறைபாடுகள், தோல்விகள், வெற்றிகள் மற்றும் இன்னல்கள் மீதே கவனத்தை ஊன்றவைக்கின்றன. இப்படிப்பட்ட பேச்சு கட்டாயமாகவே தீங்கிழைப்பதாக அல்லது கெட்ட நோக்கமுள்ளதாக இருக்க வேண்டியதில்லை. எப்படியும் மற்ற ஆட்களில் அக்கறையுள்ளவர்களாக இருப்பது மனித இயல்பாகவே இருக்கிறது. பைபிள் நம்முடைய ‘சொந்த காரியங்களின் பேரில் தனிப்பட்ட அக்கறையை அல்ல, மற்றவர்களின் தனிப்பட்ட அக்கறையின் பேரிலும்கூட கவனமாயிருக்கும்படி’ அறிவுறுத்துகிறது.—பிலிப்பியர் 2:4.
அப்படியென்றால் கவனமாகக் கட்டுப்படுத்தப்படுகையில், புறங்கூறுதல் வெறுமென பயனுள்ள தகவல் பரிமாற்றமாக இருக்கக்கூடும். உதாரணமாக திருமதி ஜோன்ஸ் நோயுற்றிருக்கிறாள், அவளுக்கு கடைக்குச் செல்வதற்கு உதவி தேவை என்பதும், உங்கள் நண்பன் ஜான், பள்ளிநேரத்துக்குப் பின் செய்துகொண்டிருந்த வேலையை இழந்ததன் காரணமாக சோர்வுற்றிருப்பதும், அல்லது உங்கள் பக்கத்து வீட்டில் வசிக்கும் சாலி இடம் மாறிச் செல்கிறாள் என்பதும் உங்களுக்கு எப்படித் தெரியவரும்? முறையான ஓர் அறிவிப்பின் மூலமாக? இல்லை, அநேகமாக, இந்தக் காரியங்கள் முறைப்படியல்லாத பேச்சின் மூலமாக—வேண்டுமென்றால் புறங்கூறுதல் மூலமாகவே தெரியவருகின்றன.
பைபிளில் “புறங்கூறுகிறவர்”களுக்குப் பயன்படுத்தப்படும் கிரேக்க வார்த்தை “தேவைக்கு மேலான வார்த்தைகளைப் பேசுவது” என்று பொருள்படும் வினைச்சொல்லிலிருந்து பெறப்பட்டது. (1 தீமோத்தேயு 5:13; லிட்டெல் மற்றும் ஸ்கட் எழுதிய கிரேக்க–ஆங்கில சொற்களஞ்சியம், A Greek-English Lexicon) நீதிமொழிகள் 10:19-லுள்ள வார்த்தைகள் நமக்கு நினைப்பூட்டப்படுகின்றன: “சொற்களின் மிகுதியில் பாவமில்லாமற் போகது, தன் உதடுகளை அடக்குகிறவனோ புத்திமான்.” சம்பாஷணையில் பொன்விதி பேசுவதற்கு முன் சிந்திப்பதை அர்த்தப்படுத்துகிறது!
தீங்கு விளைவிக்கும் மற்றும் தீங்கற்ற புறங்கூறுதலுக்கிடையிலான கோடு வஞ்சிக்கும் வகையில் மெல்லியதாக இருக்கக்கூடும். ‘ஜான் இனிமேலும் கடையில் வேலை செய்வதில்லை’ என்று தெரிவிப்பது, ‘ஜானால் ஒரு வேலையில் நிலைத்திருக்க முடியாது போல் தெரிகிறது’ என்று கூடுதலாகச் சொல்வதற்கு அருகில் வந்துவிடக்கூடும்—அவதூறுடன் கூடிய விளையாட்டுத்தனம்! எவராவது ஒருவரைப் பற்றி ஏதாவது நல்ல காரியத்தைச் சொல்வதற்கு செய்யப்படும் முயற்சியும்கூட அநேகமாக இடக்குமுடக்காகிவிடக்கூடும். ‘ஜூடிதான் வகுப்பில் மிகவும் கூர்மையான அறிவுள்ள பெண்’ என்ற கூற்றைத் தொடர்ந்து எளிதாக, ‘ஆனால் அவள் உடுத்தும் விதத்தை நீ கவனித்திருக்கிறாயா?’ என்று சொல்லிவிடக்கூடும். அநேகமாக புறங்கூறுதல் வெளிப்படையாகவே அருவருப்பானதாக மாறிவிடக்கூடும். மற்றவர்களைப் பற்றி அவதூறான பொய்களையும் வதந்திகளையும் பரப்புவதற்கு உதவும் சாதனமாகிவிடக்கூடும்.
எதிர்மறையான புறங்கூறுதல்—அது ஏன் சம்பவிக்கிறது
அப்படியென்றால் புறங்கூறுதல் ஏன் அநேகமாக எதிர்மறையின் பக்கமாக சாய்ந்துவிடுகிறது? ஒரு காரியமானது ‘இருதயம் திருக்குள்ளதாக’ இருக்கிறது. எதிர்மறையான பேச்சு அநேகமாக ஒருசில சுயநலமான உணர்ச்சிகள் சம்பந்தப்பட்ட தேவைகளைப் பூர்த்தி செய்கிறது.—எரேமியா 17:9.
“மற்றவர்களுக்குத் தெரிந்திராத ஏதோ ஒன்று உங்களுக்குத் தெரிந்திருக்கிறது என்பதை அறிந்து கொள்வது உங்களை முக்கியமானவராக உணரச் செய்கிறது” என்பதாக கானி ஒப்புக்கொள்கிறாள். அநேகமாக அந்த “ஏதோ ஒன்று” வேறு ஒருவரைப் பற்றிய சுவையற்ற ஒரு தகவலாக இருக்கிறது. மற்றவர்களுடைய குறைகளையும் தவறுகளையும் உயர்த்திக் காண்பிப்பது தங்களுடைய சொந்த குறைபாடுகளை மறைத்துவிடுவதாக மற்றவர்கள் நினைப்பது போல் தெரிகிறது. இன்னும் மற்றவர்களுக்கு, மற்றவர்கள் மத்தியில் தங்களுடைய சொந்த மதிப்பை வளர்த்துக் கொள்வதற்கு புறங்கூறுதல் ஒரு கருவியாக இருக்கிறது. மற்றவர்களுக்குச் சொல்வதற்கு முதலாவதாக இருப்பதற்காக இவர்கள் தகவல் அறிந்துகொள்ள பாடுபடுகிறார்கள். மற்றவர்களுக்கு முன் இந்தப் பிரபலமான நிலையில் ஒருசில விநாடிகள் இருப்பதை அனுபவிப்பதற்காக தங்களுடைய மிகச்சிறந்த நண்பர்களின் நம்பிக்கையையும் அவர்கள் கெடுத்துவிடுவார்கள். மற்றவர்களைப் பற்றி உங்களிடம் பேசும் நபர், பொதுவாக உங்களைப் பற்றி மற்றவர்களிடம் பேசுவார் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
அடக்கிவைத்த கோபத்தை, வருத்தத்தை, பொறாமையை வெளியிடுவதற்கு புறங்கூறுதல் வசதியான கருவியாக பயன்படுத்தப்படக்கூடும். சிலர் தாங்கள் பகைமை எண்ணம் கொண்டிருக்கும் ஒருவரைப் பற்றி, வேதனையை அவர் அனுபவிக்கும்படிச் செய்ய பொய்யை புனைந்து கட்டவும்கூடும். (நீதிமொழிகள் 26:28 ஒப்பிடவும்.) இவ்விதமாக ஒரு பெண், பள்ளித்தோழி ஒருத்தி கர்ப்பமாக இருப்பதாக ஒரு வதந்தியைப் பரப்பினாள்—காரணம் அவள் காதலித்த பையனை இவளும் விரும்பினாள் என்பதே.
அடிக்கடி எதிர்மறையான புறங்கூறுதல், அவ்வளவாக கெட்ட நோக்கின் விளைவாக இல்லாமல், சிந்திக்காமல் பேசுவதால் விளைகிறது. பருவ வயது பெண்ணொருத்தி ஒப்புக் கொள்கிறாள்: “நான் சொல்லவிருக்கும் காரியம் ஒருவேளை 100 சதவீதம் உண்மையாக இல்லாதிருப்பதை நான் சில சமயங்களில் உணருகிறேன். ஆனால் அது பெரும்பாலும் கெட்ட ஒரு பழக்கத்துக்கு அடிமையாகிவிட்டிருப்பது போல் இருக்கிறது. நான் என்னைக் கட்டுப்படுத்திக் கொள்வதற்கு முன்பாகக் காரியங்களைப் பேசிவிடுகிறேன்—அநேக சமயங்களில் இவை அனைத்தும் பின்னால் என்னிடமே வருகின்றன.”
எதிர்மறையான புறங்கூறுதல்—இருபுறமும் கருக்குள்ள பட்டயம்
உள்நோக்கம் என்னவாக இருப்பினும், எதிர்மறையான புறங்கூறுதல் இருபுறமும் கருக்குள்ள ஒரு பட்டயமாகும். ஒரு பக்கத்தில், மற்றொரு நபரின் பெயருக்கும் புகழுக்கும் அது சீர்செய்யமுடியாத சேதத்தை உண்டுபண்ணக்கூடும். பருவ வயது (’Teen) பத்திரிகை குறிப்பிட்ட வண்ணமே: “மற்ற ஆட்களைப் பற்றி புறங்கூறி, குறை கூறி நம்பிக்கைக் கெடுத்து, மிகைப்படுத்தி அல்லது அப்பட்டமான பொய்யையும்கூட சொல்வீர்களானால், நீங்கள் உறவுகளை ஆபத்துக்குள்ளாக்கி அல்லது அழித்துக்கொண்டிருக்கிறீர்கள்—ஒருவேளை புதிய நட்புறவுகளை உருவாக்கிக் கொள்வதை தடைசெய்யவும்கூட செய்கிறீர்கள்.” அல்லது பைபிள் சொல்லும் வண்ணமாக: “குற்றத்தை மூடுகிறவன் சிநேகத்தை நாடுகிறான்; கேட்டதைச் சொல்லுகிறவன் பிராணசிநேகிதரையும் பிரித்துவிடுகிறான்.”—நீதிமொழிகள் 17:9; நீதிமொழிகள் 16:28 ஒப்பிடவும்.
மறுபட்சத்தில் புறங்கூறுதல் புறங்கூறுகிறவரையே திரும்பி வந்து தாக்கி தீங்கிழைக்கக்கூடும். செவிகொடுத்துக் கேட்கும் செவிகளை பெறுவதற்குப் பதிலாக, புறங்கூறுதல் அவநம்பிக்கையை வளர்க்கக்கூடும்: “புறங்கூறித் திரிகிற எவனிடமும் ஓர் இரகசியத்தை ஒப்படைக்க முடியாது” என்கிறது நீதிமொழிகள் 11:13. (இன்றைய ஆங்கில மொழிபெயர்ப்பு) எவரைக்குறித்துப் பேசப்பட்டதோ அவர் இரகசியம் வெளியானது அல்லது தவறு பரப்பப்பட்டுவிட்டது என்பதை அறியவரும்போது வருத்தமடைவது நிச்சயம். “வடகாற்று மழையைக் கொண்டு வருவது நிச்சயமாயிருப்பது போலவே புறங்கூறுகிற நாவும் கோபத்தைக் கொண்டுவரும்” என்று நீதிமொழிகள் 25:23 சொல்கிறது.—இன்றைய ஆங்கில மொழிபெயர்ப்பு
மற்றவர்களைக் குறித்து மதிப்புக் குறைவாய் பேசும் ஒருவர் கடவுளோடு கொண்டுள்ள உறவையும்கூட சேதப்படுத்திக்கொள்ளும் ஆபத்திலிருக்கிறார். அநேகமாக வம்புப் பேச்சு பழிதூற்றுவதற்கு சமமாக இருக்கிறது. யெகோவா “தன் நாவினால் புறங்கூறாமலும் தன் தோழனுக்குத் தீங்கு செய்யாமலும் இருக்கிற”வனுடன் மாத்திரமே தோழமைக் கொள்கிறார். (சங்கீதம் 15:1, 3) என்றபோதிலும், ஆதாரமற்ற ஒரு வதந்தியை நாம் பரப்புகையில், ஒரு பொய்க்கு உடந்தையாகிவிடுகிறோம்—இது யெகோவா தேவன் அருவருக்கும் காரியங்களில் ஒன்று.—நீதிமொழிகள் 6:16, 17.
புறங்கூறும் கண்ணியைத் தவிர்த்தல்
மற்ற ஆட்களைப் பற்றி பேசுவதை நிறுத்திவிடுவது சாத்தியமற்றதாகும்—குறைந்த பட்சம் முழுமையாக. ஆனால் நீங்கள் பொன் விதியை பொருத்திப் பிரயோகித்தால் அநேக பிரச்னைகளைத் தடுத்திடமுடியும்: “ஆதலால், மனுஷர் உங்களுக்கு எவைகளைச் செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்.”—மத்தேயு 7:12.
இது தீங்கு செய்யும் புறங்கூறுதலை செவிகொடுத்துக் கேட்க மறுப்பதை அர்த்தப்படுத்துகிறது. “தன் உதடுகளினால் அலப்புகிறவனோடே கலவாதே” என்று பைபிள் அறிவுறுத்துகிறது. (நீதிமொழிகள் 20:19) கெட்ட நோக்குடைய அல்லது சேதப்படுத்துகிற பேச்சை நீங்கள் கேட்கும்போது, நீங்கள் அதை ஆதரிக்கிறீர்கள். ரோஸிலின் என்ற இளம் பெண் சொல்லும் வண்ணமே: “புறங்கூறுதலுக்குச் செவிகொடுத்துக் கேட்பவர்கள் புறங்கூறுபவர்களை உற்சாகப்படுத்துகிறார்கள்.” தவிர ‘சுவையான வதந்தி’ உங்களிடம் வைத்துக் கொள்ள முடியாதபடி அத்தனை கவர்ச்சியானதாக இருப்பதாக நீங்கள் காண, இது புண்படுத்தும் அவதூறான சங்கிலியின் ஒரு பாகமாக மாறிவிடும் வாய்ப்பு இருக்கிறது.
ஆகவே எதிர்மறையான பேச்சைத் தவிர்க்க முயற்சி செய்யுங்கள். இது, தீங்கு செய்யும் புறங்கூறுதலின் தீமைகளைப் பற்றிய ஒரு பிரசங்கத்தைக் கொடுப்பதை கட்டாயமாக அர்த்தப்படுத்துவதில்லை. ஆனால் பேச்சை மாற்றலாம், புதிய திசையில் சம்பாஷணையைத் திருப்பலாம், அல்லது விமர்சிக்கப்படும் நபரைப் பற்றிய பாராட்டுக்குரிய எதையாவது சொல்லலாம். புண்படுத்தும் பேச்சு தொடருமானால், நீங்கள் சம்பாஷணையில் கலந்து கொள்ளாதிருக்க ஒரு நினைப்பூட்டுதலாக அதை எடுத்துக் கொள்ளுங்கள்.
ஆம், ஏதாவது ஒரு காரியம் நிச்சயமாகவே உண்மையானதாக, மகிழ்ச்சியூட்டுவதாக, கிளர்ச்சியூட்டுவதாக இருக்கலாம், ஆனால் அது சொல்லப்படுவது உண்மையில் அவசியமா? அது புண்படுத்துவதாக, பழிதூற்றுவதாக, அவமதிப்பதாக, அல்லது சங்கடமாக உணரச் செய்வதாக இருக்குமா? அந்த நபரிடம் நேரில் அதைச் சொல்வீர்களா? உங்களைப் பற்றி ஒருவர் அவ்விதமாகச் சொன்னால் நீங்கள் எவ்விதம் உணருவீர்கள்? “ஞானிகளின் நாவு அறிவை உபயோகப்படுத்தும்” என்கிறது நீதிமொழிகள் 15:2, “மூடரின் வாயோ புத்தியீனத்தைக் கக்கும்.”
ஆகவே உங்கள் நாவைக் கட்டுப்படுத்தி வையுங்கள். உயர்ந்த மனங்கள் புதுக்கருத்துக்களைப் பற்றியும், சராசரி மனங்கள் பொருட்களைப் பற்றியும், சிறிய மனங்கள் மக்களைப் பற்றியும் பேசுவதாகச் சொல்லப்படுகிறது! உங்கள் சம்பாஷணை பரந்து விரிவாகட்டும். அர்த்தமில்லாத, புண்படுத்துகிற புறங்கூறுதல்களைவிட மேம்பட்ட சம்பாஷணைக்குப் பொருளை அளிக்கக்கூடிய ஆவிக்குரிய விஷயங்கள் உட்பட அநேக காரியங்கள் இருக்கின்றன.a (g89 7/8)
[அடிக்குறிப்புகள்]
a புறங்கூறுதலுக்குப் பலியானவராக இருப்பதைப் பற்றி பின்னால் வரவிருக்கும் ஒரு கட்டுரை ஆலோசிக்கும்.
[பக்கம் 19-ன் படம்]
புறங்கூறுகிறவர் அநேகமாக கவனத்தின் மையமாக இருப்பதில் மகிழ்ச்சி காண்கிறார்
[பக்கம் 20-ன் படம்]
நீங்கள் கெட்ட நோக்குடைய அல்லது சேதப்படுத்துகிற பேச்சை செவிகொடுத்துக் கேட்டால் நீங்கள் அதை ஆதரிக்கிறீர்கள்