“கடிந்து கொள்ளுதலைக் கவனித்து நடக்கிறவனோ விவேகி”
“உன் இருதயத்தைப் புத்திமதிக்கும், உன் செவிகளை அறிவின் வார்த்தைகளுக்கும் சாய்ப்பாயாக” என்று நீதிமொழிகள் 23:12 சொல்கிறது. “புத்திமதி” என்று இந்த வசனத்தில் சொல்லப்படுவது, நமக்கு நாமே அளித்துக்கொள்ளும் புத்திமதியையும் பிறர் நமக்கு அளிக்கும் புத்திமதியையும் குறிக்கிறது. இதற்கு, என்ன புத்திமதி அளிப்பது, அதை எப்படி அளிப்பது என்பதைப் பற்றிய அறிவு தேவை. ஆக, புத்திமதி அளிப்பதற்கு நம்பகமான இடத்திலிருந்து வரும் ‘அறிவின் வார்த்தைகள்’ அவசியமாக இருக்கின்றன.
பைபிளிலுள்ள நீதிமொழிகள் புத்தகத்தை, பொன்மொழிகளின் சுரங்கம் என்றே சொல்லலாம். இவற்றால் நாம் “ஞானத்தையும் போதகத்தையும் அறிந்து, . . . விவேகம், நீதி, நியாயம், நிதானம் என்பவைகளைப் பற்றிய உபதேசத்தை அடையலாம்.” (நீதிமொழிகள் 1:1-3) இவற்றிற்கு ‘செவிசாய்ப்பது,’ ஞானமானது. எவ்விதத்தில் கோபத்தைக் கட்டுப்படுத்தலாம், நாவைப் பயன்படுத்தலாம், அறிவைப் புகட்டலாம் ஆகியவற்றின் பேரில் நீதிமொழிகள் 15-ம் அதிகாரம் சிறந்த ஆலோசனைகளைத் தருகிறது. இந்த அதிகாரத்திலிருந்து சில வசனங்களை இப்போது நாம் ஆராயலாம்.
எது “உக்கிரத்தை மாற்றும்”?
நாம் பேசும் விதம் மற்றவரின் கோபத்தையோ உக்கிரத்தையோ குறைக்கலாம் அல்லது கூட்டலாம் என்பதை நீதிமொழிகள் 15:1 இவ்வாறு விளக்குகிறது: “மெதுவான பிரதியுத்தரம் உக்கிரத்தை மாற்றும்; கடுஞ்சொற்களோ கோபத்தை எழுப்பும்.” ஒருவரது முகத்தில் அல்லது செயலில் வெளிப்படும் கடுமை உணர்வையே ‘கோபம்’ என்கிறோம். இதே கோபம் சற்று தீவிரமடைகையில் அதை ‘உக்கிரம்’ என்கிறோம். பிறர் கோபமாக இருக்கும்போதும்சரி, நாமே கோபமாக இருக்கும்போதும்சரி, நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதைப் பற்றி இந்த நீதிமொழி என்ன சொல்கிறது?
ஒருவர் ஏற்கெனவே கோபமாக இருக்கும்போது அவரை இன்னும் கோபப்படுத்துகிற விதத்தில் பேசுவது நிலைமையை மிகவும் மோசமாக்கிவிடலாம். ஆனால் மெதுவாக பிரதியுத்தரம் கொடுப்பது, அதாவது சாந்தமாகப் பதிலளிப்பது பெரும்பாலும் நிலைமையைச் சுமுகமாக்குகிறது. ஆனாலும், கோபத்தைக் கொப்பளிக்கும் ஒருவரிடம் சாந்தமாகப் பேசுவது எப்போதுமே சுலபமானதல்ல. எனவே, அந்த நபர் எதற்காக கோபப்படுகிறார் என்பதைப் புரிந்துகொள்ளும்போது சாந்தமாகப் பதிலளிப்பது சுலபமாகிவிடும். “மனுஷனுடைய விவேகம் அவன் கோபத்தை அடக்கும்; குற்றத்தை மன்னிப்பது அவனுக்கு மகிமை” என்று பைபிள் சொல்கிறது. (நீதிமொழிகள் 19:11) தன்னம்பிக்கை இல்லாததாலோ மற்றவர்களால் கண்டும் காணாமல் விடப்படுவதாலோகூட ஒருவர் கோபப்படலாம். சில சமயங்களில் ஒருவரைக் கோபப்படுத்தும் விதத்தில் நாம் ஒன்றுமே சொல்லியும் இருக்க மாட்டோம், செய்தும் இருக்கமாட்டோம். என்றாலும் அவர் நம்மீது கோபப்படலாம். நம்மைப் பற்றியும் நம் நம்பிக்கைகள் பற்றியும் சரியாகப் புரிந்திராத ஆட்களை அடிக்கடி வெளி ஊழியத்தில் சந்திக்கும்போது அவர்கள் இதுபோல் கோபப்படுவதைப் பார்க்கிறோம், அல்லவா? அப்படிப்பட்ட சூழலில் அவர் நம்மைத்தான் தாக்கிப் பேசுகிறார் என்று நினைத்துக்கொண்டு பதிலடி கொடுத்தே ஆக வேண்டுமா? ஒருவர் எதற்காகக் கோபப்படுகிறார் என்பது நமக்குப் புரியாவிட்டாலும் அவரது மனம் நோகும்படி பேசிவிடக்கூடாது; ஏனெனில் அப்படி வெடுக்கென்று பேசிவிட்டால், நமக்கு தன்னடக்கம் இல்லை என்றாகிவிடும். எனவே, அப்படிப் பேசுவதைத் தவிர்க்க வேண்டும்.
நம் கோபத்தைக் கட்டுப்படுத்தும் விஷயத்தில்கூட இந்தப் புத்திமதி மிகவும் பொருத்தமானது. கேட்பவரின் மனம் புண்படாத விதத்தில் நம் உணர்ச்சிகளை வெளிப்படுத்தக் கற்றுக்கொள்வதற்கு இந்தப் புத்திமதி நமக்கு உதவுகிறது. இதை நாம் பொருத்தினால், குடும்ப அங்கத்தினர்களிடம் பேசும்போது உணர்ச்சிவசப்பட்டு கத்தாமல், அவர்களை மட்டம்தட்டிப் பேசாமல் சாந்தமாக நம் உணர்ச்சிகளை வெளிப்படுத்த முயலுவோம். பொதுவாக கோபமாகப் பேசுவதைக் கேட்கும் ஒருவருக்கு, அவ்விதமே பதிலடி கொடுக்கத் தோன்றும். ஆனால், நம் உணர்ச்சிகளை மென்மையான முறையில் வெளிப்படுத்தினால் அவற்றைக் கேட்பவரின் மனமும் புண்படாது, ஒருவேளை அவர் தன் நடத்தையையும் மாற்றிக்கொள்ளலாம்.
‘ஞானியின் நாவு அறிவை உபயோகப்படுத்தும்’
நாம் என்ன பேசுகிறோம், எப்படிப் பேசுகிறோம் என்பதில் கவனமாய் இருக்க சுயகட்டுப்பாடு உதவுகிறது. “ஞானிகளின் நாவு அறிவை உபயோகப்படுத்தும்; மூடரின் வாயோ புத்தியீனத்தைக் கக்கும்” என்று சாலொமோன் சொல்கிறார். (நீதிமொழிகள் 15:2) மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற ஆசையோடு கடவுளுடைய நோக்கத்தையும் அவர் செய்திருக்கும் அருமையான ஏற்பாடுகளையும் பற்றி அவர்களிடம் பேசுகையில் நாம் ‘அறிவை உபயோகப்படுத்துகிறோம்,’ அல்லவா? மூடன் அறிவை உபயோகப்படுத்தாததால் அவன் இதைச் செய்வதில்லை.
நாவைப் பயன்படுத்துவது குறித்து கூடுதலான ஆலோசனைகள் தருவதற்கு முன்பு நீதிமொழிகளை எழுதிய சாலொமோன் நம் சிந்தனையைத் தூண்டும் ஒரு வேறுபாட்டைக் குறிப்பிடுகிறார். “கர்த்தரின் [யெகோவாவின்] கண்கள் எவ்விடத்திலுமிருந்து, நல்லோரையும் தீயோரையும் நோக்கிப்பார்க்கிறது.” (நீதிமொழிகள் 15:3) இதைக் குறித்து நாம் சந்தோஷப்பட வேண்டும், ஏனென்றால், “தம்மைப்பற்றி உத்தம இருதயத்தோடிருக்கிறவர்களுக்குத் தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணும்படி, கர்த்தருடைய [யெகோவாவுடைய] கண்கள் பூமியெங்கும் உலாவிக்கொண்டிருக்கிறது” என்று நமக்கு உறுதியளிக்கப்படுகிறது. (2 நாளாகமம் 16:9) நாம் நல்ல காரியங்களைச் செய்கிறோமெனில் அவற்றைக் கடவுள் பார்க்கிறார். கெட்ட காரியங்களைச் செய்கிறவர்களையும் அவர் கவனிக்கிறார், அவர்களுடைய செயல்களுக்கு கணக்கும் கேட்கிறார்.
மென்மையாகப் பேசும் நாவின் மதிப்பை சாலொமோன் மேலுமாக உணர்த்தி இவ்வாறு கூறுகிறார்: “ஆரோக்கியமுள்ள நாவு ஜீவவிருட்சம்; நாவின் மாறுபாடோ ஆவியை நொறுக்கும்.” (நீதிமொழிகள் 15:4) ‘ஜீவவிருட்சம்’ என்பது, குணப்படுத்துவதையும், ஆரோக்கியமளிப்பதையும் அர்த்தப்படுத்துகிறது. (வெளிப்படுத்துதல் 22:2) ஞானமுள்ள மனிதரின் சாந்தமான பேச்சு கேட்பவரின் மனதைக் குளிர்விக்கும். அதோடு தன்னிடமுள்ள நல்ல குணங்களை வளர்க்கவும் அவரை உந்துவிக்கும். மறுபட்சத்தில், பொய்புரட்டுகளைப் பேசும் நாவு கேட்பவரின் மனதை நொந்துபோகச் செய்யும்.
சிட்சையை ஏற்று “அறிவை இறைப்பது”
“மூடன் தன் தகப்பன் புத்தியை அலட்சியம் பண்ணுகிறான்; கடிந்து கொள்ளுதலைக் கவனித்து நடக்கிறவனோ விவேகி” என்கிறார் ஞானியாகிய சாலொமோன் ராஜா. (நீதிமொழிகள் 15:5) கடிந்துகொள்ளப்பட்டால்தானே ஒருவன் அதைக் ‘கவனித்து நடக்க’ முடியும்? தேவைப்படுகையில் சிட்சை கொடுக்கப்பட வேண்டும் என்பதை இந்த வசனம் அர்த்தப்படுத்துகிறதல்லவா? குடும்பத்தில் சிட்சை அளிப்பது பெற்றோரின் பொறுப்பு, முக்கியமாக தகப்பனின் பொறுப்பு. அதை ஏற்று நடப்பது பிள்ளையின் கடமை. (எபேசியர் 6:1-3) என்றாலும், யெகோவாவின் ஊழியர்களாய் இருக்கும் எல்லாருக்குமே ஏதாவது ஒரு விதத்தில் சிட்சை கிடைக்கிறது. ‘கர்த்தர் [யெகோவா] எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனை அவர் சிட்சிக்கிறார்’ என்பதாக எபிரெயர் 12:6 சொல்கிறது. பார்க்கப்போனால், அவர், ‘தாம் சேர்த்துக்கொள்ளுகிற எந்த மகனையும் தண்டிக்கிறார்.’ நாம் சிட்சையை ஏற்றுக்கொள்கிறோமா இல்லையா என்பதை வைத்து நாம் ஞானமுள்ளவரா மூடரா என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.
சாலொமோன் இன்னொரு முரண்பாட்டையும் சொல்கிறார்: “ஞானிகளின் உதடுகள் அறிவை இறைக்கும்; மூடரின் இருதயமோ அப்படியல்ல.” (நீதிமொழிகள் 15:7) அறிவைப் புகட்டுவது, விதையைத் தூவுவது போன்றது. பூர்வ காலங்களில் விவசாயி, எல்லா விதைகளையும் ஒரே இடத்தில் விதைத்துவிட மாட்டார். மாறாக, விதைகளைக் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து நிலம் முழுவதிலும் தூவுவார். அதேபோல்தான் அறிவைப் புகட்டுவதும். உதாரணத்திற்கு, ஒருவர் ஊழியத்தில் தான் சந்திக்கும் நபரிடம் பைபிளைப் பற்றி தனக்குத் தெரிந்திருக்கும் எல்லா விஷயங்களையும் ஒரே சந்தர்ப்பத்தில் கொட்டிவிடுவது விவேகமானதல்ல. மாறாக, ஞானமுள்ள நபர் தன் பேச்சில் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிப்பார். அவர் பைபிள் சத்தியங்களில் ஒரு விஷயத்தைக் குறித்து மட்டுமே ஒரு சந்தர்ப்பத்தில் பேசுவார்; கேட்பவரின் பிரதிபலிப்பைப் பொறுத்து அதே விஷயத்தைப் பற்றி இன்னும் அதிகமாகப் பேசுவார். இவ்வாறு அவர் அறிவை ‘இறைப்பார்.’ நமக்கு முன்மாதிரியாகத் திகழும் இயேசு கிறிஸ்து சமாரியப் பெண்ணிடம் பேசினபோது இப்படியே செய்தார்.—யோவான் 4:7-26.
அறிவைப் புகட்டுவது, புத்திமதி அளிப்பதையும் பிரயோஜனமான விஷயங்களைச் சொல்வதையும் உட்படுத்துகிறது. ஆனால் அறிவுரையூட்டுகிற, ஊக்கமூட்டுகிற வார்த்தைகளைச் சொல்வதற்கு முன் நன்கு யோசிக்க வேண்டும். எனவே, “நீதிமானுடைய மனம் பிரதியுத்தரம் சொல்ல யோசிக்கும்.” (நீதிமொழிகள் 15:28) கண்மண் தெரியாமல் எல்லாவற்றையும் அடித்துக்கொண்டு செல்லும் பெருமழைபோலின்றி பயன்தரும் விதத்தில் மண்ணைப் பதப்படுத்தும் இதமான மழையைப் போலவே நம் பேச்சும் இருந்தால் எவ்வளவு நன்றாய் இருக்கும்!
‘நடத்தையில் பரிசுத்தராயிருங்கள்’
யெகோவாவைப் பற்றியும் அவருடைய நோக்கத்தைப் பற்றியும் அறிவைப் புகட்டுவதும் ‘உதடுகளின் கனியை’ அவருக்கு ‘ஸ்தோத்திர பலியாக’ செலுத்துவதும் நிச்சயமாகவே ஞானமான செயல்தான். (எபிரெயர் 13:15) ஆனால், அப்படிப்பட்ட பலி கடவுளுக்குப் பிரியமானதாக இருப்பதற்கு நாம் ‘நடத்தையில் பரிசுத்தராயிருக்க வேண்டும்.’ (1 பேதுரு 1:14-16) ஒன்றுக்கொன்று முரண்பட்ட இரண்டு பழமொழிகள் மூலம் சாலொமோன் இந்த முக்கியமான உண்மையை நம் கவனத்திற்குக் கொண்டுவருகிறார். அவர் சொல்கிறார்: “துன்மார்க்கருடைய பலி கர்த்தருக்கு அருவருப்பானது; செம்மையானவர்களின் ஜெபமோ அவருக்குப் பிரியம். துன்மார்க்கனுடைய வழி கர்த்தருக்கு அருவருப்பானது; நீதியைப் பின்பற்றுகிறவனையோ அவர் நேசிக்கிறார்.”—நீதிமொழிகள் 15:8, 9.
நீதியின் வழியைவிட்டு விலகிச் செல்பவர்கள் சிட்சையை எப்படிக் கருதுகிறார்கள்? அவர்களுக்கு என்ன காத்திருக்கிறது? (மத்தேயு 7:13, 14) “வழியை விட்டு விலகுகிறவனுக்குப் புத்திமதி விசனமாயிருக்கும்; கடிந்து கொள்ளுதலை வெறுக்கிறவன் சாவான்.” (நீதிமொழிகள் 15:10) தவறான வழியில் செல்லும் சிலர், சபையிலுள்ள பொறுப்பான சகோதரர்களின் அறிவுரையை ஏற்றுக்கொண்டு உள்ளப்பூர்வமாக மனந்திரும்புவதற்குப் பதிலாக நீதியின் வழியைவிட்டு விலகவே பார்க்கிறார்கள். அது எவ்வளவு முட்டாள்தனமானது! ஈஸி டு ரீட் வர்ஷன் இந்தப் பழமொழியை இவ்வாறாகச் சொல்கிறது: “ஒருவன் தவறாக வாழத்தொடங்கினால் அவன் தண்டிக்கப்படுவான். கண்டிக்கப்படுவதை வெறுப்பவன் அழிக்கப்படுவான்.”
ஒருவேளை சிட்சையை வெறுக்கிற ஒருவர் அதை ஏற்றுக்கொள்வதுபோல் பாசாங்கு செய்தால்? இதுவும்கூட ஞானமற்ற செயல்தான். “பாதாளமும் அழிவும் கர்த்தரின் பார்வைக்குப் பிரத்தியட்சமாயிருக்க, மனுபுத்திரருடைய இருதயம் அதிக பிரத்தியட்சமாயிருக்குமல்லவோ?” என்று இஸ்ரவேல் ராஜா சொல்கிறார். (நீதிமொழிகள் 15:11) அடையாள அர்த்தத்தில் பார்த்தால், இறந்தவர்கள் புதைக்கப்படும் பாதாளத்தைவிட வேறு எந்த இடமும் ஜீவனுள்ள தேவனிடமிருந்து அந்தளவு தொலைவில் இருக்க முடியாது. ஆனால், அதுவே அவர் கண்ணெதிரில் இருப்பதாய் சொல்லப்படுகிறது. அங்கிருக்கும் எல்லாருடைய அடையாளங்களும் குணாம்சங்களும் அவருக்கு அத்துப்படியாகத் தெரியும், அதுமட்டுமல்ல அவர்கள் அனைவரையும் உயிர்த்தெழுப்பும் சக்தியும் அவருக்கு இருக்கிறது. (சங்கீதம் 139:8; யோவான் 5:28, 29) அப்படியென்றால் ஒருவரது இருதயத்தில் இருப்பதைத் தெரிந்துகொள்வது யெகோவாவுக்கு எவ்வளவு சுலபம்! “சகலமும் அவருடைய கண்களுக்கு முன்பாக நிர்வாணமாயும் வெளியரங்கமாயுமிருக்கிறது, அவருக்கே நாம் கணக்கு ஒப்புவிக்கவேண்டும்” என்று அப்போஸ்தலன் பவுல் எழுதினார். (எபிரெயர் 4:13) பாசாங்கினால் மனிதரை ஏமாற்றலாம், கடவுளை ஏமாற்ற முடியாது.
சிட்சையை ஏற்க மறுக்கிறவர் கடிந்துகொள்ளுதலை மட்டும் வெறுப்பதில்லை, அதைக் கொடுப்பவரையும் வெறுக்கிறார். “பரியாசக்காரன் தன்னைக் கடிந்து கொள்ளுகிறவனை நேசியான்” என்று சாலொமோன் சொல்கிறார். இந்தக் குறிப்பை வலியுறுத்திக் காட்டுவதற்கு அவர் மேலும் இப்படியாகச் சொல்கிறார்: “ஞானவான்களிடத்தில் போகவுமாட்டான்.” (நீதிமொழிகள் 15:12) இப்படிப்பட்டவர்கள் திருந்துவது கஷ்டம்தான்!
நல்லதையே எதிர்பார்த்தல்
சாலொமோனின் அடுத்த மூன்று நீதிமொழிகளும் ‘இருதயத்தை’ குறித்துப் பேசுகின்றன. நம் உள்ளத்து உணர்ச்சிகளை நம் முகம் காட்டிக்கொடுப்பது சம்பந்தமாக ஞானியான இந்த ராஜா இவ்வாறு சொல்கிறார்: “மனமகிழ்ச்சி முகமலர்ச்சியைத்தரும்; மனோதுக்கத்தினாலே ஆவி முறிந்துபோம்.”—நீதிமொழிகள் 15:13.
எது மனதை துக்கப்படுத்தலாம்? “மனுஷனுடைய இருதயத்திலுள்ள கவலை அதை ஒடுக்கும்” என்று பைபிள் சொல்கிறது. (நீதிமொழிகள் 12:25) வாழ்க்கையின் சோகமான சம்பவங்கள் நம் மனதை கவலையில் மூழ்கடிக்காமல் இருப்பதற்கு என்ன செய்யலாம்? நம்மால் ஒன்றும் செய்ய முடியாத காரியங்களைக் குறித்தே எப்பொழுதும் யோசித்துக் கொண்டிருக்காமல் யெகோவா நமக்கு இன்று அளித்திருக்கும் ஆன்மீக ஆசீர்வாதங்களைக் குறித்தும் எதிர்காலத்தில் அளிக்கப்போகும் ஆசீர்வாதங்களைக் குறித்தும் சிந்திக்கலாம். இப்படிச் செய்வதால் நாம் அவரிடம் நெருங்கிச் செல்ல முடியும். ஆம், ‘நித்தியானந்த தேவனிடம்’ நெருங்கிச் செல்வது கவலையில் நொந்துபோயிருக்கும் நம் மனதிற்கு ஆறுதல் அளிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.—1 தீமோத்தேயு 1:11.
அதுமட்டுமல்ல பைபிளிலுள்ள விஷயம் ஆறுதலையும் சந்தோஷத்தையும் வாரிவழங்கும் அற்புத ஊற்றாகத் திகழ்கிறது. “கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற” மனுஷன் சந்தோஷமுள்ளவன் என்று சங்கீதக்காரன் கூறினார். (சங்கீதம் 1:1, 2) நாம் துக்கத்தில் தவிக்கும்போதுகூட, பைபிளை வாசித்து அது சொல்பவற்றைத் தியானிப்பது நமக்கு ஊக்கமளிக்கும். கடவுள் நம்மிடம் ஒப்படைத்திருக்கும் ஊழியமும்கூட நமக்குச் சந்தோஷமளிக்கும். “கண்ணீரோடே விதைக்கிறவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள்” என்று பைபிளில் நமக்கு உறுதியளிக்கப்பட்டிருக்கிறது.—சங்கீதம் 126:5.
“புத்திமானுடைய மனம் அறிவைத் தேடும்; மூடரின் வாயோ மதியீனத்தை மேயும்” என்று சாலொமோன் சொல்கிறார். (நீதிமொழிகள் 15:14) அறிவுரை கொடுப்பதில் ஞானமுள்ளவருக்கும் மூடருக்கும் இடையே உள்ள மிகப்பெரிய வித்தியாசத்தை இந்த நீதிமொழி நம் கவனத்திற்குக் கொண்டுவருகிறது. ஞானமுள்ளவர் அறிவுரை கொடுப்பதற்கு முன் அறிவைத் தேடுவார். அவர் நன்றாக கவனித்துக் கேட்டு தேவையான உண்மைகளை அறிந்துகொள்வார். அந்தச் சூழ்நிலைக்கு ஏற்ற பைபிள் சட்டங்களையும் நியமங்களையும் ஆராய்வார். அவருடைய அறிவுரை கடவுளுடைய வார்த்தையையே முழுமையாக சார்ந்திருக்கும். மறுபட்சத்தில், மூடனோ உண்மைகளை அறிந்துகொள்வதில் அக்கறை காட்டமாட்டான், தன் மனதில் தோன்றுவதை யோசிக்காமல் சட்டென்று பேசிவிடுவான். எனவே, நமக்கு அறிவுரை தேவைப்படும்போது புத்தியுள்ள, முதிர்ச்சியுள்ள நபர்களிடம் செல்ல வேண்டுமே தவிர நம் காதுக்கு இனிமையானவற்றை மட்டுமே பேசுகிற ஆட்களிடம் செல்லக்கூடாது. அறிவுரை கொடுப்பதற்கு முன்பு, ‘அறிவைத் தேடுகிற’ ‘மனித வடிவிலான வரங்களை’ கிறிஸ்தவ சபையில் பெற்றிருப்பதற்காக நாம் எவ்வளவு நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும்!—எபேசியர் 4:8, NW.
நல்லதையே எதிர்பார்ப்பதால் வரும் நன்மையை பின்வரும் நீதிமொழி விளக்குகிறது. இஸ்ரவேலின் ராஜா இவ்வாறு சொல்கிறார்: “சிறுமைப்பட்டவனுடைய நாட்களெல்லாம் தீங்குள்ளவைகள்; மனரம்மியமோ நித்திய விருந்து.” (நீதிமொழிகள் 15:15) நன்மை தீமைகளும் இன்ப துன்பங்களும் கலந்ததுதான் வாழ்க்கை. நமக்கு நேரிடும் தீமைகளையே நாம் எப்போதும் யோசித்துக்கொண்டிருந்தால் நம் வாழ்க்கையே துன்பமயமாகி விடும்; வாழ்நாளெல்லாம் கண்ணீரே கதியென்று இருக்க வேண்டியிருக்கும். ஆனால், தனிப்பட்ட விதமாக கடவுள் நமக்கு அளித்திருக்கும் ஆசீர்வாதத்தையும் எதிர்கால நம்பிக்கையையும் நாம் எப்போதும் எண்ணிப்பார்த்தால், நம் கஷ்டம், கஷ்டமாகவே தோன்றாது. நம் மனதில் சந்தோஷம் பிறக்கும். இப்படியாக நல்லதையே எதிர்பார்ப்பது, ‘நித்திய விருந்தை’ அனுபவிக்க நமக்கு வழிவகுக்கும்.
எனவே, சிட்சையை எப்போதும் முக்கியமாகக் கருதுவோமாக. அது நம் உணர்ச்சிகள், பேச்சு, நடத்தை ஆகியவற்றை மட்டுமல்ல நம் எதிர்பார்ப்பையும் மாற்றுவதற்கு அனுமதிப்போமாக.
[பக்கம் 13-ன் படம்]
“மெதுவான பிரதியுத்தரம் உக்கிரத்தை மாற்றும்”
[பக்கம் 15-ன் படம்]
சிட்சை அளிப்பது பெற்றோரின் பொறுப்பு
[பக்கம் 15-ன் படம்]
“ஞானிகளின் உதடுகள் அறிவை இறைக்கும்”