‘அரணான பட்டணத்தைப் பார்க்கிலும் அரிது’
“தற்போதைய கணக்கின்படி, ஐ.மா.-விலுள்ள ஏறக்குறைய 40% பிள்ளைகள், 18 வயதாவதற்கு முன்பே தங்களுடைய பெற்றோரின் திருமணங்கள் முறிந்துவிடுவதைக் காண்பார்கள்.” (சயன்ஸ், ஜூன் 7, 1991) என்னே ஓர் அச்சுறுத்தும் புள்ளிவிவரம்! இது ஏன் நிகழ்கிறது?
குடும்ப மற்றும் உயில் நிரூபண நீதிமன்ற (probate court) நீதிபதி எட்வர்டு M. கின்ஸ்பர்க் என்பவர் தி பாஸ்டன் குளோப் நடத்திய ஒரு பேட்டியில் அவருடைய கருத்தைக் கொடுத்தார். அவர் சொன்னார்: “நாம் ஒரு சுயநலமுள்ள சமுதாயமாக இருக்கிறோம். ‘எனக்கு’ என்று நாம் விரும்புகிறோம். ‘இப்பொழுது அதில் எனக்கு என்ன இருக்கிறது?’ என்று நாம் கேட்கிறோம். உடனடியான திருப்தியை நாம் விரும்புகிறோம்.”
இப்படிப்பட்ட முதிர்ச்சியற்ற சுயநலம் திருமணத்தில் கசப்பான தன்மைக்கும் சச்சரவுக்கும் வழிநடத்துகிறது. தம்பதிகள் கடைசியாக மணவிலக்கு நீதிமன்றத்திற்கு வருகையில், கணவனும் மனைவியும் நியாயநிரூபணம் செய்ய விரும்புகின்றனர் என்று நீதிபதி கின்ஸ்பர்க் சொல்கிறார். தாங்கள்தான் சரி, தங்களுடைய துணைதான் தவறு என்று யாராவது தங்களிடம் சொல்லும்படி விரும்புகின்றனர். யாராவது இவ்விதமாக சொல்லும்படி விரும்புகின்றனர்: “நீங்கள் சண்டையிலே ஜெயித்துவிட்டீர்கள்.”
அவருடைய வார்த்தைகள் ஏவப்பட்டெழுதப்பட்ட நீதிமொழியை நமக்கு நினைவுபடுத்துகின்றன: “அரணான பட்டணத்தை வசப்படுத்துவதைப்பார்க்கிலும் கோபங்கொண்ட சகோதரனை வசப்படுத்துவது அரிது.” (நீதிமொழிகள் 18:19) ஆம், திருமணத்தில் திடீரென சண்டை சச்சரவு எழும்புகையில், சண்டையிடுகிற தரப்பினர் நியாயமற்றவர்களாகவும் வளைந்துகொடுக்காதவர்களாகவும் இருக்கக்கூடும். பெரும்பாலும், முற்றுகையிடப்பட்ட ‘அரணான பட்டணம்’ போல, விட்டுக்கொடுப்பதற்குப் பிடிவாதமாக அவர்கள் மறுக்கிறார்கள்.
காரியங்கள் இப்படித்தான் இருக்கவேண்டுமா? இல்லை, ஒரு மாற்றீடு இருக்கிறது. ஆரம்பத்திலிருந்தே இருதரப்பினரும் பின்வரும் அப்போஸ்தலன் பவுலின் வார்த்தைகளுக்குச் செவிசாய்க்கும்போது, திருமணங்கள் பலமானவையாகவும் நிலைத்திருப்பவையாகவும் இருக்கின்றன: “ஒருவருக்கொருவர் தயவாயும் மன உருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.” (எபேசியர் 4:32) இத்தகைய குணங்களை வளர்ப்பது எளிதானதா? எப்பொழுதும் எளிதானதல்ல. ஆனால் மணவிலக்கு செய்வது எவ்வளவு எளிதானதாய் இருக்கிறது? முறிந்த திருமணத்தின் உணர்ச்சிப்பூர்வமான மற்றும் பொருளாதார பாரங்கள் எவ்வளவு வேதனையாக இருக்கின்றன? மேலும் வயதுவந்த வாழ்க்கைக்குள் அடிக்கடி தங்களுடைய பெற்றோருடைய மணவிலக்கின் தழும்புகளைக் கொண்டுசெல்கின்ற பிள்ளைகளைப் பற்றியென்ன?
திருமணத்தைப் பாதுகாக்க உழைத்து, ஒருவருக்கொருவர் “அரணான பட்டணத்தை” போல விட்டுக்கொடுக்காதவர்களாக இல்லாதிருப்பது இருவருக்கும் மிக நல்லது. கிறிஸ்தவர்களுக்கான பவுலினுடைய ஆலோசனை விசேஷமாக திருமணமான தம்பதிகளுக்குப் பொருந்துகிறது: “பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.”—கொலோசெயர் 3:14.