யெகோவாவில் நம்பிக்கையாயிரு!
“உன் முழு இருதயத்தோடும் யெகோவாவில் நம்பிக்கையாயிரு.”—நீதிமொழிகள் 3:5, NW.
1. நீதிமொழிகள் 3:5 எப்படி ஓர் இளம் மனிதனைக் கவர்ந்தது, என்ன நெடுநாள் விளைவோடு?
ஒரு நெடுங்கால மிஷனரி எழுதுகிறார்: “‘உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிரு.’ நான் சென்றிருந்த ஒரு வீட்டில் ஃபிரேம் செய்து சுவரில் தொங்கவிடப்பட்டிருந்த பைபிளிலுள்ள அந்த வார்த்தைகள் என் கவனத்தை ஈர்த்தன. அந்த நாளின் மீதிநேரம் முழுவதும் அவற்றின்மீது ஆழ்ந்த சிந்தனையில் இருந்தேன். என்னுடைய முழு இருதயத்தோடு கடவுளை நம்ப என்னால் முடியுமா? என்று என்னை நானே கேட்டுக்கொண்டேன்.” அப்போது இவருக்கு வயது 21. 90 வயதாகி, ஆஸ்திரேலியாவிலுள்ள பெர்த்தில் ஒரு மூப்பராக இன்னும் உண்மையுடன் சேவித்துவரும் இவரால், இலங்கை (தற்போது ஸ்ரீ லங்கா), பர்மா (தற்போது மயன்மார்), மலேயா, தாய்லாந்து, இந்தியா, பாகிஸ்தான் ஆகிய புதிய மிஷனரி பிராந்தியங்களில் 26 வருடங்கள் கடுமையான பயனியர் சேவை உட்பட, யெகோவாவில் முழு இருதயத்தோடு வைத்த நம்பிக்கையின் பயனால் செழிப்பூட்டப்பட்ட ஒரு வாழ்க்கையைப் பின்னிட்டுப் பார்க்க முடியும்.a
2. நீதிமொழிகள் 3:5 என்ன உறுதியான நம்பிக்கையை நம்மில் வளர்க்க வேண்டும்?
2 “உன் முழு இருதயத்தோடும் யெகோவாவில் நம்பிக்கையாயிரு”—புதிய உலக மொழிபெயர்ப்பில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள நீதிமொழிகள் 3:5-ன் இந்த வார்த்தைகள், நம்முடைய வாழ்க்கையை முழு இருதயத்தோடு யெகோவாவுக்கு ஒப்படைக்கும்படி நம் அனைவரையும் தூண்டுவிக்க வேண்டும்; மலைபோன்ற தடைகளைக்கூட மேற்கொள்ளும் அளவிற்கு அவர் நம்முடைய விசுவாசத்தைப் பலப்படுத்த முடியும் என்ற உறுதியான நம்பிக்கையுடன் அவ்வாறு செய்யவேண்டும். (மத்தேயு 17:20) இப்போது நாம் நீதிமொழிகள் 3:5-ஐ அதன் சூழமைவில் ஆராய்வோம்.
தகப்பனைப்போன்ற அறிவுரை
3. (அ) நீதிமொழிகளின் முதல் ஒன்பது அதிகாரங்களில் என்ன உற்சாகமூட்டுதல் காணப்பட இருக்கிறது? (ஆ) நீதிமொழிகள் 3:1, 2-க்கு நாம் ஏன் நெருங்கிய கவனம் செலுத்தவேண்டும்?
3 பைபிள் புத்தகமாகிய நீதிமொழிகளின் தொடக்கத்திலுள்ள ஒன்பது அதிகாரங்களும் தகப்பனைப்போன்ற அறிவுரையோடு பொலிவுடன் காணப்படுகின்றன; பரலோகத்தில் புத்திரத்துவத்தை அல்லது ஒரு பரதீஸிய பூமியில் “தேவனுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான சுயாதீனத்தை” அனுபவித்துக் களிப்பதற்கு எதிர்நோக்கி இருக்கும் எல்லாருக்கும் அது யெகோவாவிடமிருந்து வரும் ஞானமான ஆலோசனையாக இருக்கிறது. (ரோமர் 8:18-21, 23) மகன்களையும் மகள்களையும் வளர்ப்பதற்குப் பெற்றோர் பயன்படுத்தக்கூடிய ஞானமான ஆலோசனை இங்கு இருக்கிறது. “என் மகனே, என் போதகத்தை மறவாதே; உன் இருதயம் என் கட்டளைகளைக் காக்கக்கடவது,” என்ற எச்சரிப்புடன் தொடங்கும் நீதிமொழிகள் 3-ம் அதிகாரத்தின் புத்திமதி சிறந்ததாக இருக்கிறது. சாத்தானின் பொல்லாத உலகின் கடைசி நாட்கள் அவற்றின் இறுதிக்கட்டத்தை நோக்கிச் செல்கையில், யெகோவாவின் நினைப்பூட்டுதல்களுக்கு நாம் என்றுமில்லாத நெருங்கிய கவனத்தைச் செலுத்துவோமாக. அந்த வழி நீண்டதாகத் தோன்றி இருக்கலாம், ஆனால் சகித்திருப்பவர்களுக்கான வாக்குறுதி என்னவென்றால், “உனக்கு நீடித்த நாட்களையும், தீர்க்காயுசையும், சமாதானத்தையும் பெருகப்பண்ணும்”—யெகோவாவின் புதிய ஒழுங்குமுறையில் நித்திய ஜீவன்.—நீதிமொழிகள் 3:1, 2.
4, 5. (அ) யோவான் 5:19, 20-ல் என்ன மகிழ்ச்சியான உறவு விளக்கப்பட்டிருக்கிறது? (ஆ) உபாகமம் 11:18-21-லுள்ள ஆலோசனை நம்முடைய நாள்வரைக்கும் எப்படிப் பொருந்துகிறது?
4 தகப்பனுக்கும் மகனுக்கும் இடையிலான ஒரு மகிழ்ச்சியான உறவு மிகவும் மதிப்புவாய்ந்ததாக இருக்கலாம். நம்முடைய சிருஷ்டிகராகிய யெகோவா தேவன் அது அவ்வாறு இருக்கும்படியே ஏற்பாடு செய்தார். யெகோவாவோடுள்ள தம் சொந்த நெருங்கிய உறவைப்பற்றி கிறிஸ்து இயேசு சொன்னார்: “பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிறதெதுவோ, அதையேயன்றி, வேறொன்றையும் தாமாய்ச் செய்யமாட்டார்; அவர் எவைகளைச் செய்கிறாரோ, அவைகளைக் குமாரனும் அந்தப்படியே செய்கிறார். பிதாவானவர் குமாரனிடத்தில் அன்பாயிருந்து, தாம் செய்கிறவைகளையெல்லாம் அவருக்குக் காண்பிக்கிறார்.” (யோவான் 5:19, 20) அதேவிதமான ஒரு நெருங்கிய உறவு தமக்கும் பூமியிலுள்ள அவருடைய முழு குடும்பத்துக்கும் இடையில், அதோடு மனித தகப்பன்மாருக்கும் அவர்களுடைய பிள்ளைகளுக்கும் இடையில் நிலைத்திருக்க வேண்டும் என்று யெகோவா நோக்கம் கொண்டிருந்தார்.
5 பூர்வ இஸ்ரவேலில் ஒரு நம்பத்தக்க குடும்ப உறவு ஊக்குவிக்கப்பட்டது. யெகோவா அங்கிருந்த தகப்பன்மாருக்கு ஆலோசனை கொடுத்தார்: “கர்த்தர் உங்கள் பிதாக்களுக்குக் கொடுப்பேன் என்று அவர்களுக்கு ஆணையிட்ட தேசத்தில் உங்கள் நாட்களும், உங்கள் பிள்ளைகளின் நாட்களும், பூமியின்மேல் வானம் இருக்கும் நாட்களைப்போல அநேகமாயிருக்கும்படிக்கு, நீங்கள் என் வார்த்தைகளை உங்கள் இருதயத்திலும் உங்கள் ஆத்துமாவிலும் பதித்து, அவைகளை உங்கள் கையின்மேல் அடையாளமாகக் கட்டி, உங்கள் கண்களின் நடுவே ஞாபகக்குறியாக வைத்து, அவைகளை உங்கள் பிள்ளைகளுக்கு உபதேசித்து, நீங்கள் வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியிலே நடக்கிறபோதும், படுத்துக்கொள்ளுகிறபோதும், எழுந்திருக்கிறபோதும் அவைகளைக் குறித்துப் பேசுவீர்களாக. அவைகளை உங்கள் வீட்டு நிலைகளிலும் உங்கள் வாசல்களிலும் எழுதுவீர்களாக.” (உபாகமம் 11:18-21) நம்முடைய மகத்தான போதகராகிய யெகோவா தேவனின் ஏவப்பட்ட வார்த்தை, பெற்றோருடனும் அவர்களுடைய பிள்ளைகளுடனும், அதோடு கிறிஸ்தவ சபையில் அவரைச் சேவிக்கும் எல்லாருடனும் அவரை நெருங்கிய தொடர்பு கொள்ளச் செய்யும்படியாக உண்மையிலே அமையலாம்.—ஏசாயா 30:20, 21.
6. கடவுளோடும் மனிதனோடும் நாம் எப்படித் தயவை கண்டடையக்கூடும்?
6 நீதிமொழிகள் 3-ம் அதிகாரம், 3 மற்றும் 4-ம் வசனங்களில் கடவுளுடைய மக்களுக்கு, முதியோருக்கும் இளைஞருக்கும் ஞானமான, தகப்பனைப்போன்ற புத்திமதி தொடர்கிறது: “கிருபையும் [அன்புள்ள தயவும், NW] சத்தியமும் உன்னைவிட்டு விலகாதிருப்பதாக; நீ அவைகளை உன் கழுத்திலே பூண்டு, அவைகளை உன் இருதயமாகிய பலகையில் எழுதிக்கொள். அதினால் தேவனுடைய பார்வையிலும் மனுஷருடைய பார்வையிலும் தயையும் நற்புத்தியும் பெறுவாய்.” யெகோவா தேவன்தாமே அன்புள்ள தயவையும் சத்தியத்தையும் வெளிக்காட்டுவதில் மேம்பட்டு விளங்குகிறார். சங்கீதம் 25:10 குறிப்பிடுவதுபோல், “அவருடைய பாதைகளெல்லாம் கிருபையும் [அன்புள்ள தயவும், NW] சத்தியமுமானவைகள்.” யெகோவாவைப் பின்பற்றுபவர்களாக, நாமும் இந்தக் குணங்களையும் அவற்றின் பாதுகாக்கும் வல்லமையையும் போற்றிக்காக்கவேண்டும்; ஒரு விலைமதிப்பற்ற அட்டிகையை மதிப்பிடுவதுபோல், அவற்றை மதிப்பிட்டு நம்முடைய இருதயத்தில் துடைத்தழிக்க முடியாதபடி பதித்து வைத்துக்கொள்ள வேண்டும். அப்போது, நாம் ஆர்வத்துடன், “யெகோவாவே, . . . உமது அன்புள்ள தயவும் உமது உண்மையுமே எப்பொழுதும் என்னைக் காக்கக்கடவது,” என்று ஜெபிக்கலாம்.—சங்கீதம் 40:11, NW.
ஒரு நிலையான நம்பிக்கை
7. யெகோவா தம்முடைய நம்பத்தக்கத்தன்மையை என்ன வழிகளில் காண்பித்திருக்கிறார்?
7 வெப்ஸ்டர்ஸ் நைன்த் காலஜியேட் டிக்ஷனரி நம்பிக்கை என்பதை “ஒருவர் அல்லது ஒன்றின் பண்பு, திறமை, பலம், அல்லது உண்மையின்மீது உறுதியாக சார்ந்திருத்தல்” என்று விளக்குகிறது. யெகோவாவின் பண்பு அவருடைய அன்புள்ள தயவில் உறுதியாக நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது. மேலும் அவர் வாக்களித்திருப்பதைச் செய்து முடிக்கும் அவருடைய திறமையில் நாம் முழு நம்பிக்கையைக் கொண்டிருக்கலாம், ஏனென்றால் யெகோவா என்ற அவருடைய பெயர்தானே அவர் பெரிய நோக்கத்தையுடைய ஒருவர் என்று அவரை அடையாளம் காட்டுகிறது. (யாத்திராகமம் 3:14; 6:2-8) சிருஷ்டிகராக, அவரே பலம் மற்றும் இயங்கும் ஆற்றலின் ஊற்றாக இருக்கிறார். (ஏசாயா 40:26, 29) அவர் சத்தியத்தின் உருவாக இருக்கிறார், ஏனென்றால் ‘கடவுள் பொய் சொல்லக்கூடாதவராய் இருக்கிறார்.’ (எபிரெயர் 6:18) எனவே, எல்லா சத்தியத்திற்கும் மிகப் பெரிய ஊற்றுமூலமான நம் கடவுளாகிய யெகோவாவிடம் முழுநிறைவான நம்பிக்கை வைக்கும்படி நாம் உற்சாகப்படுத்தப்படுகிறோம்; அவர் தம்மை நம்பியிருக்கிறவர்களைப் பாதுகாக்கவும் தம்முடைய எல்லா மகத்துவமான நோக்கங்களையும் மகிமையான வெற்றிக்குக் கொண்டுவரவும் சர்வவல்லமை உடையவராய் இருக்கிறார்.—சங்கீதம் 91:1, 2; ஏசாயா 55:8-11.
8, 9. உலகில் ஏன் நம்பிக்கை கவலைக்குரிய விதத்தில் குறைவுபட்டிருக்கிறது, யெகோவாவின் மக்கள் எப்படி ஒரு வேறுபாட்டை அளிக்கின்றனர்?
8 நம்மைச் சுற்றியுள்ள சீரழிந்த உலகில், நம்பிக்கை கவலைக்குரிய விதத்தில் குறைவுபட்டிருக்கிறது. பதிலாக, எங்கும் பேராசை மற்றும் ஊழலை நாம் காண்கிறோம். உவர்ல்ட் ப்ரஸ் ரிவ்யூ பத்திரிகையின் மே 1993 வெளியீட்டின் முன் அட்டையில் “ஊழலின் திடீர் அதிகரிப்பு—புதிய உலக ஒழுங்குமுறையில் அழுக்குப் பணம். ஊழல் நடவடிக்கைகள் பிரேஸிலிலிருந்து ஜெர்மனி வரை, ஐக்கிய மாகாணங்களிலிருந்து அர்ஜன்டினா வரை, ஸ்பெய்னிலிருந்து பெரு வரை, இத்தாலியிலிருந்து மெக்ஸிகோ வரை, வாடிகனிலிருந்து ரஷ்யா வரை பரவியிருக்கிறது,” என்ற செய்தி பொறிக்கப்பட்டிருந்தது. பகை, பேராசை, அவநம்பிக்கை ஆகியவற்றின் அடிப்படையிலான புதிய உலக ஒழுங்குமுறை என்று மனிதனால் சொல்லப்படுவது, மனிதவர்க்கத்திற்கு அதிகரிக்கும் துயர்களைத்தவிர வேறு எதையும் அறுவடைசெய்வதில்லை.
9 அரசியல் தேசங்களுக்கு மாறாக, யெகோவாவின் சாட்சிகள் ‘யெகோவாவைத் தங்கள் கடவுளாகக் கொண்ட ஜனமாக’ இருப்பதில் மகிழ்ச்சியாய் இருக்கின்றனர். அவர்கள் மட்டுமே “நாங்கள் கடவுளில் நம்பிக்கை வைக்கிறோம்,” என்று உண்மையாகச் சொல்ல முடியும். “தேவனை முன்னிட்டு அவருடைய வார்த்தையைப் புகழுவேன்; . . . தேவனை நம்பியிருக்கிறேன், நான் பயப்படேன்,” என்று ஒவ்வொருவரும் சந்தோஷமாக உரத்த குரலில் சொல்ல முடியும்.—சங்கீதம் 33:12; 56:4, 11.
10 ஆயிரக்கணக்கான இளம் சாட்சிகள் கடுமையான அடிகளையும் சிறைத்தண்டனைகளையும் அனுபவித்திருக்கும் ஓர் ஆசிய நாட்டில், யெகோவாவில் நம்பிக்கையே அவர்களில் பெரும்பான்மையானோர் சகித்து நிலைத்திருப்பதற்கு உதவியிருக்கிறது. சிறையில் ஓரிரவு, பயங்கரமான சித்திரவதைகளை அனுபவித்திருந்த ஓர் இளம் சாட்சி, தன்னால் இதற்குமேலும் தாக்குப்பிடிக்க முடியாதென உணர்ந்தார். ஆனால் மற்றொரு இளைஞர் இருட்டின் போர்வையில் பதுங்கி அவரிடம் வந்தார். அவர் கிசுகிசுத்துச் சொன்னார்: “விட்டுக்கொடுத்துவிடாதே; நான் விட்டுக்கொடுத்தேன், ஆனால் அப்போதுமுதல் எனக்கு எந்த மனச்சமாதானமும் இல்லை.” அந்த முதல் இளைஞர் தன்னுடைய நிலைநிற்கையில் உறுதியாக இருக்கவேண்டும் என்ற தன் தீர்மானத்தைப் புதுப்பித்துக் கொண்டார். நம்முடைய உத்தமத்தை அரித்துவிடுவதற்கான சாத்தானின் எந்த முயற்சியையும் மற்றும் ஒவ்வொரு முயற்சியையும் மேற்கொள்ள நமக்கு யெகோவா உதவி செய்வார் என்று நாம் அவரில் முழு நம்பிக்கையைக் கொண்டிருக்கலாம்.—எரேமியா 7:3-7; 17:1-8; 38:6-13, 15-17.
11. யெகோவாவில் நம்பிக்கை வைக்க நாம் எவ்வாறு தூண்டுவிக்கப்படுகிறோம்?
11 முதல் கட்டளையின் ஒரு பகுதி இவ்வாறு வாசிக்கிறது: “உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் [யெகோவாவிடத்தில், NW] உன் முழு இருதயத்தோடும் . . . அன்புகூருவாயாக.” (மாற்கு 12:30) நாம் கடவுளுடைய வார்த்தையின் பேரில் தியானிக்கையில், நாம் கற்றுக்கொள்ளும் மகத்தான சத்தியங்கள் நம் இருதயத்தின் ஆழத்திற்குச் சென்று பதிகின்றன; அதனால் நம்முடைய மகத்தான கடவுளாகிய, பேரரசரான யெகோவா தேவனைச் சேவிப்பதில் நமக்கிருக்கிற எல்லாவற்றையும் செலவிடும்படி நாம் உந்துவிக்கப்படுகிறோம். அவருக்கான போற்றுதலால்—அவர் நமக்குக் கற்றுக்கொடுத்திருக்கும், நமக்குச் செய்திருக்கும், இன்னும் நமக்குச் செய்யப்போகும் எல்லாவற்றிற்கான போற்றுதலால்—நிரம்பித் ததும்பும் இருதயத்துடன் அவருடைய இரட்சிப்பில் அசைக்கமுடியாத நம்பிக்கையைக் கொண்டிருக்க நாம் தூண்டப்படுகிறோம்.—ஏசாயா 12:2.
12. வருடங்களினூடே, யெகோவாவில் தங்களுடைய நம்பிக்கையை எவ்வாறு அநேக கிறிஸ்தவர்கள் காண்பித்திருக்கின்றனர்?
12 இந்த நம்பிக்கை, வருடங்களினூடே வளர்க்கப்பட முடியும். உவாட்ச் டவர் சொஸையிட்டியின் புரூக்லின் தலைமை அலுவலகத்தில் ஏப்ரல் 1927-ல் துவங்கி 50 வருடங்களுக்கு மேலாக உண்மையுடன் பணியாற்றிய மனத்தாழ்மையுள்ள ஒரு யெகோவாவின் சாட்சி எழுதினார்: “அந்த மாதத்தின் முடிவில், நீதிமொழிகள் 3:5, 6-லுள்ள பைபிள் வாசகத்தைச் சிறப்பித்துக் காட்டும் ஓர் அழகிய வாழ்த்திதழுடன் சேர்த்து ஓர் உறையினுள் வைக்கப்பட்ட $5.00 உதவித்தொகையைப் பெற்றேன் . . . யெகோவாவில் நம்பிக்கை வைப்பதற்கு எல்லா காரணமும் இருந்தது; ஏனென்றால், தலைமை அலுவலகத்தில், இங்கு பூமியில் ராஜ்ய அக்கறைகளை உண்மையுடன் கவனிப்பதற்கு யெகோவா ஓர் ‘உண்மையும் விவேகமுமுள்ள அடிமையைக்’ கொண்டிருக்கிறார் என்று நான் சீக்கிரத்தில் மதித்துணர ஆரம்பித்தேன்.—மத்தேயு 24:45-47.”b இந்தக் கிறிஸ்தவருடைய இருதயம், பண ஆசையில் அல்ல, ஆனால் ‘ஒருபோதும் குறையாத பொக்கிஷத்தை பரலோகத்தில்’ பெறுவதில் செலுத்தப்பட்டிருந்தது. அதேவிதமாக தற்போது, உலகெங்கும் உவாட்ச் டவர் சொஸையிட்டியின் பெத்தேல் வீடுகளில் சேவைசெய்யும் ஆயிரக்கணக்கானோர் ஒரு வகையான சட்டப்பூர்வமான வறுமையின் உறுதிமொழியின்கீழ் அவ்வாறு செய்கின்றனர். தங்களுடைய தினசரி தேவைகளை அளிக்கும்படி அவர்கள் யெகோவாவில் நம்பிக்கையாய் இருக்கின்றனர்.—லூக்கா 12:29-31, 33, 34.
யெகோவாவின்மேல் சார்ந்திருங்கள்
13, 14. (அ) முதிர்ச்சியுள்ள புத்திமதி எங்கு மட்டுமே காணப்படக்கூடும்? (ஆ) துன்புறுத்தலைத் தப்பிப்பிழைப்பதற்கு எது தவிர்க்கப்பட வேண்டும்?
13 நம் பரலோக தகப்பன் நமக்கு அறிவுறுத்துகிறார்: ‘உன் சுயபுத்தியின்மேல் சாயாதே.’ (நீதிமொழிகள் 3:5) உலக ஆலோசகர்களும் உளநூல் வல்லுநர்களும் யெகோவா வெளிக்காட்டும் ஞானத்தையும் புரிந்துகொள்ளுதலையும் அணுகலாமென ஒருபோதும் எண்ண முடியாது. “அவருடைய புரிந்துகொள்ளுதல் அளவிடப்பட முடியாதது.” (சங்கீதம் 147:5, NW) உலகின் பிரசித்திப்பெற்ற மனிதரின் ஞானத்திலோ நம்முடைய சொந்த பரந்த அறிவில்லாத உணர்ச்சிகளிலோ சார்ந்திருப்பதற்கு மாறாக, நாம் முதிர்ச்சியுள்ள புத்திமதிக்காக யெகோவாவையும் அவருடைய வார்த்தையையும் கிறிஸ்தவ சபையிலுள்ள மூப்பர்களையும் நாடுவோமாக.—சங்கீதம் 55:22; 1 கொரிந்தியர் 2:4.
14 மனித ஞானம் அல்லது பதவிக்குரிய பெருமை விரைந்து நெருங்கிக்கொண்டிருக்கும் கடுமையான சோதனையின் நாளில் நம்மை எங்குமே கொண்டுச் செல்லாது. (ஏசாயா 29:14; 1 கொரிந்தியர் 2:14) ஜப்பானில் இரண்டாம் உலக போரின்போது, கடவுளுடைய மக்களின் திறமையுள்ள, ஆனால் பெருமையான ஒரு மேய்ப்பன் தன் சொந்த புரிந்துகொள்ளுதலின்மேல் சார்ந்திருப்பதைத் தெரிந்துகொண்டார். அழுத்தத்தின்கீழ் அவர் விசுவாச துரோகியாக மாறினார்; துன்புறுத்தலின்கீழ் மந்தையில் பெரும்பான்மையோரின் நடவடிக்கைகளும் முடங்கிவிட்டன. அருவருப்பான சிறை அறைகளில் பயங்கரமாக நடத்தப்பட்டதைத் தைரியமாகத் தப்பிப்பிழைத்த ஓர் உண்மைத்தவறாத ஜப்பானிய சகோதரி இவ்வாறு குறிப்பிட்டாள்: “உண்மையாக நிலைத்திருந்தவர்களுக்கு எந்த விசேஷித்த திறமைகளும் இருக்கவில்லை; அவர்கள் எந்தக் கவனத்தையும் ஈர்க்காத சாதாரண ஆட்களாய் இருந்தார்கள். நிச்சயமாக நாம் எல்லோரும் எப்போதும் நம் முழு இருதயத்தோடும் யெகோவாவில் நம்பிக்கை வைக்கவேண்டும்.”c
15. நாம் யெகோவாவைப் பிரியப்படுத்த வேண்டுமானால் என்ன தெய்வீக குணம் அவசியப்படுகிறது?
15 நம்முடைய சொந்த புரிந்துகொள்ளுதலுக்கு மாறாக யெகோவாவில் நம்பிக்கையாய் இருத்தல், மனத்தாழ்மையை உட்படுத்துகிறது. யெகோவாவைப் பிரியப்படுத்த விரும்பும் எல்லோருக்கும் இந்தக் குணம் எவ்வளவு முக்கியமானதாய் இருக்கிறது! ஏன், நம்முடைய கடவுள்கூட, சர்வலோகத்தின் பேரரசராய் இருக்கிறபோதிலும், தம்முடைய அறிவுக்கூர்மையுள்ள சிருஷ்டிகளுடன் செயல்தொடர்பு கொள்கையில் மனத்தாழ்மையை வெளிக்காட்டுகிறார். நாம் அதற்காக நன்றியுள்ளவர்களாய் இருக்கலாம். “அவர் வானத்திலும் பூமியிலுமுள்ளவைகளைப் பார்க்கும்படி தம்மைத் தாழ்த்துகிறார். அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து தூக்கிவிடுகிறார்.” (சங்கீதம் 113:6, 7) அவருடைய பெரிய இரக்கத்தால், தம்முடைய நேசக் குமாரன், கிறிஸ்து இயேசுவின் விலைமதிப்பற்ற கிரய பலியாகிய மனிதவர்க்கத்திற்கான அவருடைய மிகப் பெரிய பரிசின் அடிப்படையில் நம்முடைய குறைபாடுகளை நமக்கு மன்னிக்கிறார். இந்தத் தகுதியற்ற தயவிற்காக நாம் எவ்வளவு நன்றியுள்ளவர்களாய் இருக்க வேண்டும்!
16. சபையில் சிலாக்கியங்களுக்காகச் சகோதரர்கள் எப்படித் தகுதிபெற நாடக்கூடும்?
16 இயேசுதாமே நமக்கு நினைப்பூட்டுகிறார்: “தன்னை உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்.” (மத்தேயு 23:12) மனத்தாழ்மையுடன், கிறிஸ்தவ சபையில் பொறுப்புகளை ஏற்பதற்காக முழுக்காட்டுதல் பெற்ற சகோதரர்கள் தகுதிபெற நாடவேண்டும். இருப்பினும், கண்காணிகள் தங்களுடைய நியமிப்பை ஓர் அந்தஸ்தின் அடையாளமாக அல்லாமல், இயேசுவைப்போல் ஒரு வேலையை மனத்தாழ்மையாக, போற்றுதலுடன், ஆர்வமாகச் செய்வதற்கான வாய்ப்பாகக் கருத வேண்டும்; அவர் சொன்னார்: “என் பிதா இதுவரைக்கும் கிரியைசெய்துவருகிறார், நானும் கிரியைசெய்துவருகிறேன்.”—யோவான் 5:17; 1 பேதுரு 5:2, 3.
17. நாம் எல்லோரும் எதை மதித்துணரவேண்டும், எந்த நடவடிக்கைக்கு வழிநடத்தும்படி?
17 யெகோவாவின் பார்வையில் நாம் வெறும் தூசியைவிட பெரியவர்கள் அல்ல என்பதை மனத்தாழ்மையுடனும் ஜெப சிந்தையுடனும் எப்போதும் மதித்துணருவோமாக. அப்படியானால், “கர்த்தருடைய கிருபையோ [அன்புள்ள தயவோ, NW] அவருக்குப் பயந்தவர்கள்மேலும், அவருடைய நீதி அவர்கள் பிள்ளைகளுடைய பிள்ளைகள்மேலும் அநாதியாய் என்றென்றைக்கும் உள்ளது,” என்பதால் நாம் எவ்வளவு சந்தோஷமுள்ளவர்களாய் இருக்கலாம்! (சங்கீதம் 103:14, 17) ஆகவே நாம் எல்லோரும் கடவுளுடைய வார்த்தையைக் கூர்ந்து படிக்கும் மாணவர்களாக இருக்கவேண்டும். தனிப்பட்ட மற்றும் குடும்பப்படிப்பிலும், சபை கூட்டங்களிலும் நாம் செலவிடும் மணிநேரங்கள் ஒவ்வொரு வாரத்திலும் நம்முடைய விலைமதிப்பற்ற மணிநேரங்களாக இருக்கவேண்டும். இந்த வழியில் நாம் ‘மகா பரிசுத்தமானவரைப் பற்றிய அறிவை’ பெருக்குகிறோம். அதுவே ‘புரிந்துகொள்ளுதலாக’ இருக்கிறது.—நீதிமொழிகள் 9:10.
“உன் வழிகளிலெல்லாம் . . .”
18, 19. நம்முடைய வாழ்க்கையில் நீதிமொழிகள் 3:6-ஐ நாம் எப்படிப் பொருத்திப் பிரயோகிக்கக்கூடும், என்ன விளைவோடு?
18 புரிந்துகொள்ளுதலின் தெய்வீக ஊற்றுமூலமாகிய யெகோவாவிடம் நம்மைத் திருப்பி, நீதிமொழிகள் 3:6 அடுத்ததாகக் குறிப்பிடுகிறது: “உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்.” யெகோவாவை நினைத்துக்கொள்வது, ஜெபத்தில் அவரோடு நெருங்கி இருப்பதை உட்படுத்துகிறது. நாம் எங்கிருந்தாலும், எப்படிப்பட்ட சூழ்நிலை எழும்பினாலும், நாம் உடனடியாக ஜெபத்தில் அவரோடு தொடர்பு கொள்ளும் வாய்ப்பைக் கொண்டிருக்கிறோம். நம்முடைய அன்றாட வேலைகளைச் செய்துகொண்டிருக்கையில், வெளி ஊழியத்திற்காகத் தயாரிக்கையில், அவருடைய ராஜ்யத்தைப்பற்றி அறிவித்துக் கொண்டு வீடுவீடாகச் செல்லுகையில், அவர் நம்முடைய நடவடிக்கையை ஆசீர்வதிக்க வேண்டும் என்பது நம்முடைய இடைவிடாத ஜெபமாக இருக்கலாம். இவ்வாறு, ‘கடவுளோடு நடந்துகொண்டிருக்கும்’ விலைமதிக்கமுடியாத சிலாக்கியத்தையும் சந்தோஷத்தையும் நாம் கொண்டிருக்கலாம்; கடவுள்பயமுள்ள ஏனோக்குக்கும் நோவாவுக்கும், யோசுவா, தானியேல் போன்ற உண்மையுள்ள இஸ்ரவேலர்களுக்கும் செய்ததைப்போல், அவர் ‘நம்முடைய பாதைகளையும் செவ்வைப்படுத்துவார்’ என்ற நம்பிக்கையுடன் செல்லலாம்.—ஆதியாகமம் 5:22; 6:9; உபாகமம் 8:6; யோசுவா 22:5; தானியேல் 6:23; இதையும் பார்க்கவும்: யாக்கோபு 4:8, 10.
19 நம்முடைய வேண்டுகோள்களை யெகோவாவிடம் தெரியப்படுத்தும்போது, ‘எல்லா புத்திக்கும் மேலான தேவசமாதானம் நம் இருதயங்களையும் நம் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்’ என்று நாம் உறுதியாக இருக்கலாம். (பிலிப்பியர் 4:7) நம்முடைய சந்தோஷமுள்ள முகபாவத்தில் பிரதிபலிக்கப்படும் இந்தத் தேவ சமாதானம், நம்முடைய பிரசங்க வேலையில் நாம் சந்திக்கும் வீட்டுக்காரர்களுக்கு நம்முடைய செய்தியைப் பரிந்துரைக்கக்கூடும். (கொலோசெயர் 4:5, 6) இன்றைய உலகில் மிக சாதாரணமாக இருக்கும் அழுத்தங்களால் அல்லது அநியாயங்களால் புண்பட்டிருப்பவர்களுக்கு, பின்வரும் பதிவு காண்பிப்பதுபோல உற்சாகம் அளிப்பதாகவும் இருக்கலாம்.d
20, 21. (அ) நாசி அச்சுறுத்தலின்போது, எப்படி யெகோவாவின் சாட்சிகளின் உத்தமத்தன்மை, மற்றவர்களை உற்சாகப்படுத்தியது? (ஆ) யெகோவாவின் குரல் நம்மில் என்ன தீர்மானத்தை விழிப்பூட்ட வேண்டும்?
20 ஓர் அற்புதத்தைப்போல் தோன்றியதன்மூலம் பேரழிவைத் தப்பிய இயற்கையான யூதனாகிய மாக்ஸ் லிப்ஸ்டர், நாசி துடைத்தழிப்பு முகாமுக்குச் சென்ற தன் பயணத்தை இந்த வார்த்தைகளால் விவரித்தார்: “நாங்கள் ரயில் பெட்டிகளில் அடைக்கப்பட்டோம்; அவை இருவருக்கான பல சிறிய அறைகளாக மாற்றியமைக்கப்பட்டன. அவற்றில் ஒன்றினுள் தள்ளப்பட்டு, சாந்தமான கண்களுடன் காட்சியளித்த ஒரு கைதியை எதிர்ப்பட்டேன். மற்ற மக்களின் இரத்தத்தைச் சிந்துவதைக்காட்டிலும் சிறையையும் ஒருவேளை மரணத்தையும் அனுபவிப்பதைத் தெரிந்துகொண்டு, கடவுளுடைய சட்டத்தை மதித்ததற்காக அவர் அங்கு இருந்தார். அவர் யெகோவாவின் சாட்சிகளில் ஒருவர். அவருடைய பிள்ளைகள் அவரிடமிருந்து பிரிக்கப்பட்டிருந்தனர்; அவருடைய மனைவி கொல்லப்பட்டிருந்தாள். அவரும் அவளுக்கேற்பட்ட அதே முடிவில் பங்கெடுப்பதை எதிர்பார்த்து இருந்தார். அந்த 14-நாள் பயணம் என்னுடைய ஜெபங்களுக்குப் பதிலைக் கொண்டுவந்தது; ஏனென்றால் மரணத்திற்கான இந்தப் பயணத்தில்தானே நான் நித்திய ஜீவனுக்கான நம்பிக்கையைக் கண்டுபிடித்தேன்.”
21 “சிங்கக் கெபி” என்று அவர் அழைத்த ஆஷ்விட்ஸில் துன்பம் அனுபவித்தபின், முழுக்காட்டப்பட்டும் இருக்கையில், இந்தச் சகோதரர் யெகோவாவின் சாட்சிகளில் ஒருத்தியைத் திருமணம் செய்தார்; அவள் தானே சிறையிலடைக்கப்பட்டவளாயும், அவளுடைய தந்தை டாக்யெயுவிலுள்ள சித்திரவதை முகாமில் துன்பம் அனுபவித்தவராகவும் இருந்தனர். அவளுடைய தந்தை அங்கிருந்தபோது, தன் மனைவியும் இளம் மகளும்கூட கைது செய்யப்பட்டனர் என்று கேள்விப்பட்டார். அவருடைய பிரதிபலிப்பை அவர் விளக்கினார்: “நான் ஆழ்ந்த கவலையுற்றேன். அப்போது ஒரு நாள் குளிப்பதற்காக வரிசையில் நிற்கும்போது, ஒரு குரல் நீதிமொழிகள் 3:5, 6-ஐ எடுத்துரைப்பதைக் கேட்டேன் . . . அது பரலோகத்திலிருந்து வரும் ஒரு குரலைப்போல எதிரொலித்தது. என்னுடைய சமநிலையைத் திரும்பப் பெற சரியாக அதுவே எனக்குத் தேவைப்பட்டது.” உண்மையில், அந்த குரல், இந்த வசனத்தை மேற்கோள்காட்டிய மற்றொரு கைதியின் குரலாக இருந்தது; ஆனால் கடவுளுடைய வார்த்தை நம்மீது செலுத்தக்கூடிய வல்லமையை இந்தச் சம்பவம் அழுத்திக் காண்பிக்கிறது. (எபிரெயர் 4:12) 1994-ன் வருடாந்தர வசனத்தின் வார்த்தைகள் மூலமாக யெகோவாவின் குரல் நம்மிடம் இன்று வல்லமையாகப் பேசட்டும்: “உன் முழு இருதயத்தோடும் யெகோவாவில் நம்பிக்கையாயிரு”!
[அடிக்குறிப்புகள்]
a க்ளாட் S. குட்மேன் சொன்ன, “யெகோவாவை என் முழு இருதயத்தோடு நம்புதல்,” என்ற கட்டுரையை தி உவாட்ச்டவர், டிசம்பர் 15, 1973, பக்கங்கள் 760-5-ல் பார்க்கவும்.
b ஹாரி பீட்டர்ஸன் சொன்ன, “யெகோவாவைத் துதிக்க தீர்மானமாய் இருத்தல்,” என்ற கட்டுரையை, தி உவாட்ச்டவர், ஜூலை 15, 1968, பக்கங்கள் 437-40-ல் பார்க்கவும்.
c மாட்ஸ்யூ ஈஷீ சொன்ன, “யெகோவா தம்முடைய ஊழியக்காரரைக் கைவிடுவதில்லை,” என்ற கட்டுரையை தி உவாட்ச்டவர், மே 1, 1988, பக்கங்கள் 21-5-ல் பார்க்கவும்.
d மாக்ஸ் லிப்ஸ்டர் சொன்ன, “விடுதலை! நம்மை நன்றியுள்ளவர்களாய் நிரூபித்தல்,” என்ற கட்டுரையையும் தி உவாட்ச்டவர், அக்டோபர் 1, 1978, பக்கங்கள் 20-4-ல் பார்க்கவும்.
சுருக்கமாக
◻ நீதிமொழிகளில் என்ன வகையான ஆலோசனை அளிக்கப்பட்டிருக்கிறது?
◻ யெகோவாவில் நம்பிக்கை எவ்வாறு நமக்குப் பலனளிக்கிறது?
◻ யெகோவாவைச் சார்ந்திருப்பதில் என்ன உட்பட்டிருக்கிறது?
◻ நம்முடைய வழிகளிலெல்லாம் நாம் ஏன் யெகோவாவை நினைத்துக்கொள்ள வேண்டும்?
◻ யெகோவா எப்படி நம்முடைய பாதைகளைச் செவ்வைப்படுத்துகிறார்?
10. உத்தமத்தைக் காத்துக்கொள்வதற்கு, அநேக இளம் கிறிஸ்தவர்களை எது பலப்படுத்தியிருக்கிறது?
[பக்கம் 15-ன் படங்கள்]
சந்தோஷமுள்ள ராஜ்ய செய்தி நேர்மை இருதயமுள்ள மக்களுக்கு கவர்ச்சியூட்டுவதாய் இருக்கிறது