உயிர் எனும் பரிசை தகுந்த முறையில் மதிப்பிடுங்கள்
“கிறிஸ்துவினுடைய இரத்தம் ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியஞ் செய்வதற்கு நம் மனச்சாட்சியைச் செத்த கிரியைகளறச் சுத்திகரி[க்கும்].”—எபிரெயர் 9:14.
1. உயிரை உயர்வாக மதிக்கிறோம் என்பதற்கு என்ன அத்தாட்சி இருக்கிறது?
உங்கள் உயிரின் விலை என்ன என்று கேட்டால், நீங்கள் என்ன பதில் சொல்வீர்கள்? உயிரை—நம்முடைய உயிரையும் சரி பிறருடைய உயிரையும் சரி—நாம் உயர்வாக மதிக்கிறோம். அதனால்தான் வியாதி வரும்போது டாக்டரிடம் செல்கிறோம் அல்லது உடம்பை தவறாமல் பரிசோதனை செய்துகொள்கிறோம். நாம் உயிர் வாழவும் ஆரோக்கியமாக இருக்கவுமே விரும்புகிறோம். வயதானவர்களோ ஊனமானவர்களோகூட பெரும்பாலும் சாக விரும்புகிறதில்லை; அவர்களும் உயிர் வாழவே விரும்புகிறார்கள்.
2, 3. (அ) என்ன கடமையை நீதிமொழிகள் 23:22 சிறப்பித்துக் காட்டுகிறது? (ஆ) நீதிமொழிகள் 23:22-ல் குறிப்பிடப்படுகிற கடமையில் கடவுள் எவ்வாறு உட்பட்டுள்ளார்?
2 நீங்கள் உயிரை எந்தளவு உயர்வாக மதிக்கிறீர்கள் என்பது மற்றவர்களுடன் உங்கள் உறவை பாதிக்கிறது. உதாரணமாக, “உன்னைப் பெற்ற தகப்பனுக்குச் செவிகொடு; உன் தாய் வயதுசென்றவளாகும்போது அவளை அசட்டை பண்ணாதே” என்று கடவுளுடைய வார்த்தை கட்டளையிடுகிறது. (நீதிமொழிகள் 23:22) ‘செவிகொடுப்பது’ என்பது வெறுமனே வார்த்தைகளை கேட்பதை மட்டுமல்ல, கேட்பதையும் அதற்குக் கீழ்ப்படிவதையும் அர்த்தப்படுத்துகிறது. (யாத்திராகமம் 15:26; உபாகமம் 7:12; 13:17; 15:4; யோசுவா 22:2; சங்கீதம் 81:13) ஏன் பெற்றோருக்கு செவிகொடுக்க வேண்டும் என கடவுளுடைய வார்த்தை சொல்கிறது? உங்களைவிட வயதானவர்கள், அதிக அனுபவசாலிகள் என்பதற்காக மட்டுமல்ல, அவர்கள் ‘உங்களைப் பெற்றவர்கள்’ என்பதற்காகவும்தான். “உனக்கு உயிர் கொடுத்த உன் தகப்பனுக்குக் செவிகொடு” என இந்த வசனத்தை சில மொழிபெயர்ப்புகள் மொழிபெயர்க்கின்றன. ஆகவே, உங்கள் உயிரை மதித்தால், அந்த உயிரின் ஊற்றுமூலருக்கு நீங்கள் கடமைப்பட்டிருப்பதாக உணருவீர்கள் என்பதில் சந்தேகமில்லை.
3 நீங்கள் உண்மைக் கிறிஸ்தவராக இருந்தால், யெகோவாவையே உங்கள் உயிரின் ஊற்றுமூலராக ஏற்றுக்கொண்டிருப்பீர்கள். ஏனென்றால் அவரால்தான் நீங்கள் ‘பிழைக்கிறீர்கள்,’ ‘அசைகிறீர்கள்,’ உணர்ச்சிகளுள்ள ஜீவியாக வாழ்கிறீர்கள், மொத்தத்தில் உயிருடன் ‘இருக்கிறீர்கள்’; அதனால் நித்திய ஜீவன் உட்பட, எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்கவும் அதற்காகத் திட்டமிடவும் உங்களால் முடிகிறது. (அப்போஸ்தலர் 17:28; சங்கீதம் 36:9; பிரசங்கி 3:11) ஆகவே நீதிமொழிகள் 23:22-க்கு இசைவாக, கீழ்ப்படிதலுடன் கடவுளுக்கு “செவிகொடு”ப்பதே சரியானது; உயிரை வேறெந்த விதமாகவும் மதிப்பிடுவதற்குப் பதிலாக அவருடைய நோக்குநிலைக்கு ஏற்ப மதிப்பிடவும் அதன் பிரகாரமாக செயல்படவும் விரும்புவது ஏற்றது.
உயிருக்கு மதிப்பு கொடுங்கள்
4. மனித சரித்திரத்தின் ஆரம்பத்தில், உயிருக்கு மதிப்பு காட்டுவது எப்படி முக்கிய விவாதமானது?
4 எந்தவொரு காரணத்திற்காகவும் உயிரை மனிதர் பயன்படுத்துவதை (அல்லது தவறாக பயன்படுத்துவதை) தாம் அனுமதிப்பதில்லை என்பதை மனித சரித்திரத்தின் ஆரம்பத்திலேயே யெகோவா தெளிவுபடுத்தினார். பொறாமையால் கோபாவேசமடைந்து, காயீன் தன் சகோதரன் ஆபேலின் குற்றமற்ற உயிரைப் பறித்தான். அவ்வாறு ஒரு உயிரைக் கொல்ல காயீனுக்கு உரிமை இருந்ததென்று நினைக்கிறீர்களா? அவனுக்கு உரிமை இருந்ததாக கடவுள் நினைக்கவில்லை. ஆகவே அவர் காயீனிடம் கணக்கு கேட்டார்; “என்ன செய்தாய்? உன் சகோதரனுடைய இரத்தத்தின் சத்தம் பூமியிலிருந்து என்னை நோக்கிக் கூப்பிடுகிறது” என்றார். (ஆதியாகமம் 4:10) ஆபேலின் இரத்தம் அவருடைய உயிரை பிரதிநிதித்துவம் செய்ததை கவனியுங்கள்; உரிய காலத்திற்கு முன்னரே கொடூரமான முறையில் பறிக்கப்பட்ட அந்த உயிர், பழிவாங்கும்படி கடவுளை நோக்கி கூக்குரலிட்டது.—எபிரெயர் 12:24.
5. (அ) நோவாவின் நாளில் கடவுள் என்ன தடை விதித்தார், அது யாருக்குப் பொருந்தியது? (ஆ) என்ன கருத்தில் இந்தத் தடை ஒரு முக்கிய படியாக இருந்தது?
5 ஜலப்பிரளயத்திற்குப் பின், எட்டே ஆட்களுடன் ஒரு புதிய மனித சமுதாயம் உருவானது. அப்போது எல்லா மனிதருக்கும் பொருந்தும் ஓர் அறிவிப்பை கடவுள் செய்தார்; அதில் உயிரையும் இரத்தத்தையும் பற்றிய தம் மதிப்பீட்டை இன்னும் அதிகமாக தெளிவுபடுத்தினார். மிருக மாம்சத்தை மனிதர் புசிக்கலாம் என்று சொன்னார், ஆனால் பின்வரும் தடையையும் விதித்தார்: “நடமாடுகிற ஜீவஜந்துக்கள் யாவும், உங்களுக்கு ஆகாரமாய் இருப்பதாக; பசும் பூண்டுகளை உங்களுக்குத் தந்தது போல, அவைகள் எல்லாவற்றையும் உங்களுக்குத் தந்தேன். மாம்சத்தை அதின் உயிராகிய இரத்தத்தோடே புசிக்க வேண்டாம்.” (ஆதியாகமம் 9:3, 4) உயிருள்ள மிருகத்தின் மாம்சத்தையும் இரத்தத்தையும் புசிக்க வேண்டாமென இந்த வசனத்தில் கடவுள் சொன்னதாக யூதர்களில் சிலர் விளக்கினர். ஆனால் உயிரைக் காப்பதற்காக இரத்தத்தைப் புசிக்க வேண்டாம் என்றே கடவுள் சொன்னது பின்னால் தெளிவாக காட்டப்பட்டது. மேலும், நோவாவின் மூலம் கடவுள் கொடுத்த கட்டளை, இரத்தம் சம்பந்தப்பட்ட அவரது உயர்ந்த நோக்கம்—அதாவது மனிதர் நித்திய ஜீவனை பெற வழிவகுக்கும் உயர்ந்த நோக்கம்—நிறைவேறுவதில் ஒரு முக்கிய படியாக இருந்தது.
6. உயிரின் மதிப்பைப் பற்றிய தமது நோக்குநிலையை நோவாவின் மூலம் கடவுள் எவ்வாறு வலியுறுத்தினார்?
6 மேலும் கடவுள் இவ்வாறு கூறினார்: “உங்களுக்கு உயிராயிருக்கிற உங்கள் இரத்தத்திற்காகப் பழிவாங்குவேன்; சகல ஜீவ ஜந்துக்களிடத்திலும் மனுஷனிடத்திலும் பழிவாங்குவேன்; மனுஷனுடைய உயிருக்காக அவனவன் சகோதரனிடத்தில் பழிவாங்குவேன். மனுஷன் தேவசாயலில் உண்டாக்கப்பட்டபடியால், மனுஷனுடைய இரத்தத்தை எவன் சிந்துகிறானோ, அவனுடைய இரத்தம் மனுஷனாலே சிந்தப்படக்கடவது.” (ஆதியாகமம் 9:5, 6) மனிதனுடைய இரத்தம் அவனுடைய உயிரை பிரதிநிதித்துவம் செய்வதாக கடவுள் கருதுகிறார் என்பதை மனித குடும்பம் முழுவதற்கும் கூறப்பட்ட இந்த அறிவிப்பிலிருந்து நீங்கள் புரிந்துகொள்ளலாம். படைப்பாளராகிய அவரே உயிரைக் கொடுக்கிறார், ஆகவே இரத்தத்தால் பிரதிநிதித்துவம் செய்யப்படுகிற அந்த உயிரைப் பறிக்க யாருக்கும் அதிகாரமில்லை. காயீனைப் போல் யாராவது கொலை செய்தால், அந்தக் கொலைகாரரின் உயிரை ‘பழிவாங்க’ அல்லது ‘கேட்க’ படைப்பாளருக்கு உரிமை இருக்கிறது.
7. இரத்தம் சம்பந்தமாக நோவாவுக்கு கடவுள் கொடுத்த அறிவிப்பில் நாம் ஏன் அக்கறை காட்ட வேண்டும்?
7 இரத்தத்தை தவறாக பயன்படுத்தக் கூடாது என்ற கட்டளையை மனிதருக்கு கடவுள் கொடுத்தார். ஏன் என்று நீங்கள் எப்போதாவது சிந்தித்திருக்கிறீர்களா? இரத்தத்தை கடவுள் இவ்வாறு கருதுவதற்கு காரணம் என்ன? உண்மையில் இதற்குரிய பதில், பைபிளின் மிக முக்கியமான ஒரு போதகத்துடன் தொடர்புடையது. சர்ச்சுகள் பல அந்தப் போதகத்தை வேண்டுமென்றே அசட்டை செய்திருக்கின்றன; ஆனாலும் அதுவே கிறிஸ்தவ செய்திக்கு அடிப்படையாக இருக்கிறது. அந்தப் போதகம் என்ன? அதனுடன் உங்கள் வாழ்க்கையும் தீர்மானங்களும் செயல்களும் எவ்வாறு சம்பந்தப்பட்டுள்ளன?
இரத்தம்—அதை எவ்வாறு பயன்படுத்தலாம்?
8. இரத்தத்தை பயன்படுத்துவது சம்பந்தமாக நியாயப்பிரமாணத்தில் யெகோவா என்ன தடை விதித்திருந்தார்?
8 இஸ்ரவேலுக்கு நியாயப்பிரமாணத்தை கடவுள் கொடுத்தபோது, உயிரையும் இரத்தத்தையும் பற்றிய கூடுதலான விவரங்களை வழங்கினார். அப்போது, தமது நோக்கத்தை நிறைவேற்ற மேலும் ஒரு படியை எடுத்தார். அவருக்குக் காணிக்கையாக தானியம், எண்ணெய், திராட்சரசம் போன்றவற்றை செலுத்த வேண்டுமென்று நியாயப்பிரமாணம் கட்டளையிட்டதை நீங்கள் ஒருவேளை அறிந்திருக்கலாம். (லேவியராகமம் 2:1-4; 23:13; எண்ணாகமம் 15:1-5) மிருக பலிகளும்கூட செலுத்தப்பட வேண்டியிருந்தது. அவற்றைப் பற்றி கடவுள் இவ்வாறு சொன்னார்: “மாம்சத்தின் உயிர் இரத்தத்தில் இருக்கிறது; நான் அதை உங்களுக்குப் பலிபீடத்தின்மேல் உங்கள் ஆத்துமாக்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்படிக்குக் கட்டளையிட்டேன்; ஆத்துமாவிற்காகப் பாவநிவிர்த்தி செய்கிறது இரத்தமே. அதினிமித்தம் உங்களில் ஒருவனும் இரத்தம் புசிக்க வேண்டாம் . . . என்று இஸ்ரவேல் புத்திரருக்குச் சொன்னேன்.” வேட்டைக்காரன், விவசாயி போன்ற எவராவது உணவுக்காக ஒரு மிருகத்தைக் கொன்றால், அதன் இரத்தத்தை வடியவிட்டு மண்ணினால் மூடிவிட வேண்டும் என்றும் கடவுள் சொன்னார். பூமி அவருடைய பாதபடி என்பதால், அதில் இரத்தத்தை ஊற்றுவது என்பது உயிரை அளித்தவரிடமே உயிரை திரும்ப கொடுத்துவிடுவதை அர்த்தப்படுத்தியது.—லேவியராகமம் 17:11-13; ஏசாயா 66:1.
9. எதற்கு மாத்திரமே இரத்தத்தைப் பயன்படுத்தலாம் என நியாயப்பிரமாணம் குறிப்பிட்டது, அதன் நோக்கம் என்ன?
9 கடவுளுடைய அந்தக் கட்டளை நமக்கு எந்த முக்கியத்துவமும் இல்லாத ஏதோவொரு மத சடங்கு அல்ல. இஸ்ரவேலர் ஏன் இரத்தத்தைப் புசிக்கக் கூடாது என்பதை கவனித்தீர்களா? “நான் அதை [இரத்தத்தை] உங்களுக்குப் பலிபீடத்தின்மேல் உங்கள் ஆத்துமாக்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்படிக்குக் கட்டளையிட்டேன்” என்று கடவுள் சொன்னார். “அதனிமித்தம் உங்களில் ஒருவனும் இரத்தம் புசிக்க வேண்டாம் . . . என்று இஸ்ரவேல் புத்திரருக்குச் சொன்னேன்” என்றும் அவர் கூறினார். இரத்தத்தை மனிதர் புசிக்கக் கூடாதென்று நோவாவிடம் கடவுள் சொன்னதற்குரிய காரணத்தை புரிந்துகொள்கிறீர்களா? படைப்பாளர் இரத்தத்தை அதிக முக்கியத்துவமுடையதாக கருதி, பல உயிர்களைக் காப்பாற்றும் ஒரு விசேஷ ஏற்பாட்டிற்கு அதை உபயோகிக்கத் தீர்மானித்தார். பாவங்களை நிவிர்த்தி செய்வதில் அது ஒரு முக்கிய பாகத்தை வகிக்கவிருந்தது. ஆகவே, இரத்தத்தை ஒரேவொரு காரியத்திற்காக பயன்படுத்தவே நியாயப்பிரமாணத்தில் கடவுள் அதிகாரமளித்தார்; அதாவது யெகோவாவின் மன்னிப்பை நாடிய இஸ்ரவேலர் தங்கள் உயிர்களுக்காக பாவநிவிர்த்தி செய்ய பலிபீடத்தின்மீது அதை செலுத்துவதற்கு மாத்திரமே அதிகாரம் அளித்தார்.
10. மிருக இரத்தம் ஏன் பூரண மன்னிப்பை பெற உதவாது, ஆனால் நியாயப்பிரமாணத்தின்படி செலுத்தப்பட்ட பலிகள் எதை நினைப்பூட்டின?
10 இரத்தம் பாவநிவிர்த்தி செய்கிறது என்ற இந்தக் கருத்து கிறிஸ்தவத்திற்கு முரணான ஒன்றல்ல. கடவுளால் கொடுக்கப்பட்ட நியாயப்பிரமாணத்தின் இந்த அம்சத்தைப் பற்றி கிறிஸ்தவ அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: “நியாயப்பிரமாணத்தின்படி கொஞ்சங்குறைய எல்லாம் இரத்தத்தினாலே சுத்திகரிக்கப்படும்; இரத்தஞ் சிந்துதலில்லாமல் மன்னிப்பு உண்டாகாது.” (எபிரெயர் 9:22) பலிகள் இஸ்ரவேலரை பரிபூரணராக, பாவமற்றவராக மாற்றவில்லை என்பதை பவுல் தெளிவாக்கினார். “பாவங்கள் உண்டென்று அவைகளினாலே வருஷந்தோறும் நினைவுகூருதல் உண்டாயிருக்கிறது. அல்லாமலும், காளை வெள்ளாட்டுக்கடா இவைகளுடைய இரத்தம் பாவங்களை நிவிர்த்தி செய்ய மாட்டாதே” என அவர் எழுதினார். (எபிரெயர் 10:1-4) இருப்பினும், அத்தகைய பலிகள் ஒரு நோக்கத்தை நிறைவேற்றின. அதாவது, தாங்கள் பாவிகள், பூரண மன்னிப்பை பெற மிருக பலிகளைக் காட்டிலும் மேலான ஒன்று தேவை என்பதை இஸ்ரவேலருக்கு நினைப்பூட்டின. ஆனால் மிருகங்களின் உயிரை பிரதிநிதித்துவம் செய்த அந்த இரத்தத்தால் மனித பாவங்களை முழுமையாக ஈடுசெய்ய முடியாதென்றால், வேறெந்த இரத்தத்தாலாவது ஈடுசெய்ய முடியுமா?
உயிரை அளிப்பவர் தரும் தீர்வு
11. மிருக இரத்தத்தின் பலிகள் ஏதோவொன்றை சுட்டிக்காட்டின என்பதை நாம் எப்படி அறிந்துகொள்கிறோம்?
11 கடவுளுடைய சித்தத்தை மிகச் சிறந்த விதத்தில் நிறைவேற்றப் போகும் ஒன்றையே நியாயப்பிரமாணம் உண்மையில் சுட்டிக்காட்டியது. “அப்படியானால், நியாயப்பிரமாணத்தின் நோக்கமென்ன?” என்று பவுல் கேட்டார். அதற்கு அவரே பதிலும் அளித்தார்: “வாக்குத்தத்தத்தைப் பெற்ற சந்ததி வருமளவும் அது அக்கிரமங்களினிமித்தமாகக் கூட்டப்பட்டு, தேவதூதரைக் கொண்டு மத்தியஸ்தன் [மோசேயின்] கையிலே கட்டளையிடப்பட்டது.” (கலாத்தியர் 3:19) அதேபோல், ‘நியாயப்பிரமாணம் வரப்போகிற நன்மைகளின் பொருளாயிராமல் [அல்லது நிஜமாயிராமல்], அவைகளின் நிழலாய் மாத்திரம் இருக்கிறது’ என்றும் குறிப்பிட்டார்.—எபிரெயர் 10:1.
12. இரத்தம் சம்பந்தமாக கடவுளுடைய நோக்கம் படிப்படியாக வெளிப்பட்டதை நாம் எவ்வாறு காணலாம்?
12 இதுவரை சிந்தித்தவற்றின் சுருக்கத்தைக் கவனியுங்கள்: உயிரைக் காப்பதற்கு மிருக மாம்சத்தைப் புசிக்கலாம், ஆனால் இரத்தத்தைப் புசிக்கக் கூடாதென்று நோவாவின் காலத்தில் கடவுள் கட்டளையிட்டார். பிற்பாடு, “மாம்சத்தின் உயிர் இரத்தத்தில் இருக்கிறது” என்று கூறினார். ஆம், உயிரைப் பிரதிநிதித்துவம் செய்யும் ஒன்றாக இரத்தத்தைக் கடவுள் கருதினார். ஆகவே, “நான் அதை உங்களுக்குப் பலிபீடத்தின்மேல் உங்கள் ஆத்துமாக்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்படிக்குக் கட்டளையிட்டேன்” என்று கூறினார். என்றாலும், கடவுளுடைய நோக்கம் இன்னும் மகத்தான விதத்தில் படிப்படியாக வெளிப்பட இருந்தது. நியாயப்பிரமாணம் வரப்போகிற நல்ல காரியங்களுக்கு முன் நிழலாக இருந்தது. என்ன நல்ல காரியங்களுக்கு?
13. இயேசுவின் மரணம் ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது?
13 இயேசு கிறிஸ்துவின் மரணத்தை மையமாக கொண்ட நிஜங்களுக்கே அது முன் நிழலாக இருந்தது. இயேசு கிறிஸ்து சித்திரவதை செய்யப்பட்டு கழுமரத்தில் அறையப்பட்டார் என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். ஒரு குற்றவாளியைப் போல் அவர் மரித்தார். பவுல் இவ்வாறு எழுதினார்: “நாம் பெலனற்றவர்களாயிருக்கும்போதே, குறித்த காலத்தில் கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார். நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப் பண்ணுகிறார்.” (ரோமர் 5:6, 8) கிறிஸ்து நமக்காக மரித்ததால் நம் பாவங்களை மூடுவதற்கு கிரயபலியைக் கொடுத்தார். மீட்பின் அந்தக் கிரயபலியே கிறிஸ்தவ செய்தியின் மையப் பொருளாகும். (மத்தேயு 20:28; யோவான் 3:16; 1 கொரிந்தியர் 15:3; 1 தீமோத்தேயு 2:6) கிரயபலிக்கும் இரத்தத்திற்கும் உயிருக்கும் என்ன தொடர்பு இருக்கிறது, இதில் உங்கள் உயிர் எவ்வாறு உட்பட்டுள்ளது?
14, 15. (அ) எவ்வாறு சில மொழிபெயர்ப்புகள் எபேசியர் 1:7-ல் இயேசுவின் மரணத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன? (ஆ) எபேசியர் 1:7-ஐ பற்றிய என்ன உண்மையை நாம் கவனியாமல் விட்டுவிடக்கூடும்?
14 சில சர்ச்சுகள் இயேசுவின் மரணத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன; அதனால் “இயேசு எனக்காக மரித்தார்” என அவற்றின் அங்கத்தினர்கள் சொல்கின்றனர். எபேசியர் 1:7-ஐ சில பைபிள்கள் எப்படி மொழிபெயர்த்திருக்கின்றன என்பதைக் கவனியுங்கள்: “அவரிலும் அவருடைய மரணத்தின் மூலமும் நமக்கு விடுதலை உண்டாயிருக்கிறது, அதாவது நம் குற்றங்கள் விலக்கப்படுகின்றன.” (தி அமெரிக்கன் பைபிள், பிராங்க் ஷைல் பலன்டைன் என்பவரால் மொழிபெயர்க்கப்பட்டது, 1902) “கிறிஸ்துவின் மரணத்தால் நாம் விடுதலை செய்யப்படுகிறோம், நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.” (டுடேஸ் இங்லிஷ் வர்ஷன், 1966) “கிறிஸ்துவிலும் கிறிஸ்துவின் மூலமும் அவருடைய உயிர் பலியின் மூலமும் நாம் விடுதலை செய்யப்பட்டிருக்கிறோம், அது பாவங்களின் மன்னிப்பைக் குறிக்கிற ஒரு விடுதலை.” (த நியு டெஸ்டமென்ட், உவில்லியம் பார்க்ளேயால் மொழிபெயர்க்கப்பட்டது, 1969) “கிறிஸ்துவின் மரணத்தின் மூலமே நம் பாவங்கள் மன்னிக்கப்பட்டு நாம் விடுதலை செய்யப்படுகிறோம்.” (த டிரான்ஸ்லேட்டர்ஸ் நியு டெஸ்டமென்ட், 1973) இத்தகைய மொழிபெயர்ப்புகளில் இயேசுவின் மரணத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதை நீங்கள் காணலாம். ‘இயேசுவின் மரணம் உண்மையிலேயே முக்கியமானது. அப்படியிருக்கையில், இந்த மொழிபெயர்ப்புகளில் என்ன தவறு?’ என சிலர் கேட்கலாம்.
15 உங்களிடம் இத்தகைய மொழிபெயர்ப்புகள் மட்டுமே இருந்தால் மிக முக்கியமான ஒரு குறிப்பை நீங்கள் கவனியாமல் விட்டுவிட வாய்ப்பு இருக்கிறது; பைபிளின் செய்தியை நன்றாக புரிந்துகொள்வதற்கு இது தடையாக இருக்கலாம். எபேசியர் 1:7-ன் மூல வசனத்தில் “இரத்தம்” என்று அர்த்தம் தரும் ஒரு கிரேக்க வார்த்தை இருப்பதை இத்தகைய மொழிபெயர்ப்புகள் மறைத்துவிடுகின்றன. ஆகவே புதிய உலக மொழிபெயர்ப்பு போன்ற பல பைபிள்கள் மூலமொழியின்படி இதைத் திருத்தமாக இவ்வாறு மொழிபெயர்க்கின்றன: ‘அவருடைய கிருபையின் ஐசுவரியத்தின்படியே இவருடைய இரத்தத்தினாலே பாவ மன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் நமக்கு உண்டாயிருக்கிறது.’
16. ‘இவருடைய இரத்தம்’ என்று குறிப்பிட்டிருப்பது எதை நம் மனதிற்கு கொண்டுவர வேண்டும்?
16 ‘இவருடைய இரத்தம்’ என மொழிபெயர்த்திருப்பது அர்த்தம் நிறைந்தது, அது இரத்தத்தைப் பற்றிய பல அம்சங்களை நம் மனதிற்குக் கொண்டுவர வேண்டும். முதலாவதாக, எவராவது ஒருவர் இறப்பது—ஏன் பரிபூரண மனிதராகிய இயேசு இறப்பதும்கூட—போதுமானதாக இல்லை. நியாயப்பிரமாணத்தில், குறிப்பாக பாவநிவாரண நாளில் முன்நிழலாய் காட்டப்பட்டதை இயேசு நிறைவேற்றினார். அந்த முக்கியமான நாளில், நியாயப்பிரமாணத்தில் சொல்லப்பட்ட மிருகங்கள் பலி செலுத்தப்பட்டன. பின்பு பிரதான ஆசாரியன் அந்த இரத்தத்தில் சிறிதளவை ஆசரிப்புக் கூடாரத்திற்குள் அல்லது ஆலயத்தின் மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள் கொண்டு சென்று, கடவுளுடைய பிரசன்னம் அங்கிருப்பது போல், அவருக்கு முன்பு அதை அளித்தார்.—யாத்திராகமம் 25:22; லேவியராகமம் 16:2-19.
17. பாவநிவாரண நாள் முன்நிழலாக காட்டியதை இயேசு எவ்வாறு நிறைவேற்றினார்?
17 பாவநிவாரண நாள் முன்நிழலாக காட்டியதை இயேசு நிறைவேற்றியதாக பவுல் விளக்கினார். முதலாவதாக, இஸ்ரவேலில் பிரதான ஆசாரியர் “தமக்காகவும் மக்கள் அறியாமையால் செய்த பிழைகளுக்காகவும்” ஆண்டுக்கு ஒருமுறை மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள் இரத்தத்துடன் பிரவேசித்ததை அவர் குறிப்பிட்டார். (எபிரெயர் 9:6, 7, பொது மொழிபெயர்ப்பு) இதற்கு இசைய, இயேசு ஆவியாக உயிர்த்தெழுப்பப்பட்ட பின்பு பரலோகத்திற்கு சென்றார். மாம்சமும் இரத்தமுமுள்ள உடலின்றி நமக்காக ‘தேவனுடைய சமுகத்துக்கு’ முன் ஆவியாக அவர் போக முடிந்தது. கடவுளிடம் அவர் எதை அளித்தார்? சடப்பொருளான ஏதோவொன்றை அல்ல, ஆனால் மிகவும் மதிப்புமிக்க ஒன்றை அளித்தார். பவுல் தொடர்ந்து இவ்வாறு கூறினார்: ‘கிறிஸ்து பிரதான ஆசாரியராய் வெளிப்பட்டு, வெள்ளாட்டுக்கடா, இளங்காளை இவைகளுடைய இரத்தத்தினாலே அல்ல, தமது சொந்த இரத்தத்தினால் ஒரேதரம் மகா பரிசுத்த ஸ்தலத்திலே பிரவேசித்து, நித்திய மீட்பை உண்டுபண்ணினார். அதெப்படியெனில், காளை வெள்ளாட்டுக்கடா இவைகளின் இரத்தம் சரீர சுத்தியுண்டாகும்படி பரிசுத்தப்படுத்துமானால், நித்திய ஆவியினாலே தம்மைத்தாமே பழுதற்ற பலியாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்த கிறிஸ்துவினுடைய இரத்தம் ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியஞ் செய்வதற்கு உங்கள் மனச்சாட்சியைச் செத்த கிரியைகளறச் சுத்திகரிப்பது எவ்வளவு நிச்சயம்!’ ஆம், தமது உயிராகிய இரத்தத்தின் மதிப்பை கடவுளிடம் இயேசு அளித்தார்.—எபிரெயர் 9:11-14, 24, 28; 10:11-14; 1 பேதுரு 3:18.
18. இரத்தத்தைப் பற்றிய பைபிளின் கூற்றுகள் இன்று கிறிஸ்தவர்களுக்கு ஏன் முக்கியமானவை?
18 இந்த தெய்வீக சத்தியம் இரத்தத்தைப் பற்றி பைபிள் சொல்கிற மகத்தான அம்சங்களைப் புரிந்துகொள்ள உதவுகிறது; அதாவது இரத்தத்தை கடவுள் ஏன் அவ்வாறு கருதுகிறார், அதை நாம் எவ்வாறு கருத வேண்டும், இரத்தத்தை உபயோகிப்பதன் சம்பந்தமாக கடவுள் வைத்திருக்கும் கட்டுப்பாடுகளை நாம் ஏன் மதிக்க வேண்டும் போன்றவற்றை புரிந்துகொள்ள உதவுகிறது. கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தை வாசிக்கையில், ‘கிறிஸ்துவின் இரத்தத்தைப்’ பற்றிய பல குறிப்புகளை நீங்கள் காண்பீர்கள். (பெட்டியைக் காண்க.) ஒவ்வொரு கிறிஸ்தவனும் ‘இயேசுவின் இரத்தத்தில் விசுவாசம்’ வைக்க வேண்டும் என்பதை இவை தெளிவாகக் காட்டுகின்றன. (ரோமர் 3:26) நாம் மன்னிப்பை பெறுவதும் கடவுளுடன் சமாதானமாக இருப்பதும் இயேசு ‘சிந்தின இரத்தத்தினாலேயே’ சாத்தியமாகிறது. (கொலோசெயர் 1:20) தம்முடன் பரலோகத்தில் ஆளுவதற்கு இயேசு தனிப்பட்ட உடன்படிக்கை செய்து கொண்டவர்களைக் குறித்ததில் இது நிச்சயமாகவே உண்மையாக இருக்கிறது. (லூக்கா 22:20, 28-30; 1 கொரிந்தியர் 11:25; எபிரெயர் 13:20) ‘மிகுந்த உபத்திரவத்தைத்’ தப்பிப்பிழைத்து, பூமிக்குரிய பரதீஸில் நித்திய ஜீவனை அனுபவித்து மகிழப்போகிற ‘திரள் கூட்டத்தாரைக்’ குறித்ததிலும் இது உண்மையாக இருக்கிறது. அடையாள அர்த்தத்தில், இவர்கள் ‘தங்கள் அங்கிகளை ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்திலே தோய்த்து வெளுக்கிறார்கள்.’—வெளிப்படுத்துதல் 7:9, 14.
19, 20. (அ) இரத்தத்தைப் பயன்படுத்துவதன் பேரில் ஏன் கடவுள் கட்டுப்பாட்டை விதித்தார், அதைப் பற்றி நாம் எவ்வாறு உணர வேண்டும்? (ஆ) எதைப் பற்றி அறிந்துகொள்வதில் நாம் அக்கறை காட்ட வேண்டும்?
19 தெளிவாகவே, கடவுளுடைய பார்வையில் இரத்தம் விசேஷ அர்த்தமுடையது. நமக்கும் அது அவ்வாறே இருக்க வேண்டும். உயிரைப் பற்றி அக்கறையுடைய படைப்பாளருக்கு, இரத்தத்தை மனிதர் எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதைக் குறித்ததில் கட்டுப்பாட்டை விதிக்க உரிமை இருக்கிறது. நம்முடைய உயிரைப் பற்றிகூட அவருக்கு மிகுந்த அக்கறை இருப்பதால், இரத்தத்தை மிகவும் முக்கியமான ஒரே வழியில் பயன்படுத்துவதற்கு, அதாவது நித்திய ஜீவனை சாத்தியமாக்குகிற ஒரே வழியில் பயன்படுத்துவதற்கு அவர் தீர்மானித்தார். அந்த வழி இயேசுவின் அருமையான இரத்தத்தை உட்படுத்தியது. இரத்தத்தை—இயேசுவின் இரத்தத்தை—உயிரைக் காக்கும் இந்த வழியில் நம்முடைய நன்மைக்கென யெகோவா பயன்படுத்துவதற்காக நாம் எவ்வளவு நன்றியுள்ளவர்களாக இருக்கலாம்! மேலும், இயேசு தமது இரத்தத்தை நமக்காக பலியாக ஊற்றியதற்கு நாம் அவருக்கு எவ்வளவு நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும்! அப்போஸ்தலன் யோவானின் இந்த உணர்ச்சிகளை நாம் புரிந்துகொள்ளலாம்: “நம்மிடத்தில் அன்புகூர்ந்து, தமது இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களற நம்மைக் கழுவி, தம்முடைய பிதாவாகிய தேவனுக்கு முன்பாக நம்மை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கின அவருக்கு மகிமையும் வல்லமையும் என்றென்றைக்கும் உண்டாயிருப்பதாக. ஆமென்.”—வெளிப்படுத்துதல் 1:5, 6.
20 சகல ஞானமுள்ளவரும் உயிரளிப்பவருமாகிய நம் கடவுள், உயிரைக் காக்கும் இந்த ஏற்பாட்டை நெடுங்காலமாக மனதில் வைத்திருந்தார். அப்படியானால், நாம் இவ்வாறு கேட்டுக்கொள்ளலாம்: ‘நம்முடைய தீர்மானங்களையும் நடவடிக்கைகளையும் இது எவ்வாறு பாதிக்க வேண்டும்?’ பின்வரும் கட்டுரை இந்தக் கேள்வியை ஆராயும்.
எவ்வாறு பதிலளிப்பீர்கள்?
• ஆபேல் மற்றும் நோவாவைப் பற்றிய விவரங்களிலிருந்து இரத்தம் சம்பந்தமாக கடவுளுடைய நோக்குநிலையைக் குறித்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
• இரத்தம் சம்பந்தமாக நியாயப்பிரமாணத்தில் கடவுள் என்ன கட்டுப்பாட்டை விதித்தார், ஏன்?
• பாவநிவாரண நாள் முன்நிழலாக காட்டியதை இயேசு எவ்வாறு நிறைவேற்றினார்?
• இயேசுவின் இரத்தம் எவ்வாறு நம் உயிரைக் காக்கக்கூடும்?
[பக்கம் 18-ன் பெட்டி]
யாருடைய இரத்தம் உயிரைக் காக்கிறது?
“உங்களுக்கும் கடவுள் தமது சொந்த குமாரனின் இரத்தத்தினால் சம்பாதித்த தமது சபையை மேய்ப்பதற்குப் பரிசுத்த ஆவி உங்களைக் கண்காணிகளாக நியமித்த மந்தை முழுவதற்கும் கவனம் செலுத்துங்கள்.”—அப்போஸ்தலர் 20:28, NW.
“இப்படி நாம் அவருடைய இரத்தத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்க, கோபாக்கினைக்கு நீங்கலாக அவராலே நாம் இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே.”—ரோமர் 5:9.
“நம்பிக்கையில்லாதவர்களும், இவ்வுலகத்தில் தேவனற்றவர்களுமாயிருந்தீர்க[ள்] . . . முன்னே தூரமாயிருந்த நீங்கள் இப்பொழுது கிறிஸ்து இயேசுவுக்குள் கிறிஸ்துவின் இரத்தத்தினாலே சமீபமானீர்கள்.”—எபேசியர் 2:12, 13.
“சகல பரிபூரணமும் அவருக்குள்ளே வாசமாயிருக்கவும், அவர் சிலுவையில் சிந்தின இரத்தத்தினாலே சமாதானத்தை உண்டாக்கி, . . . யாவையும் அவர் மூலமாய்த் தமக்கு ஒப்புரவாக்கிக் கொள்ளவும் அவருக்குப் [கடவுளுக்குப்] பிரியமாயிற்று.”—கொலோசெயர் 1:19, 20.
‘ஆகையால், சகோதரரே, நாம் பரிசுத்த ஸ்தலத்தில் பிரவேசிப்பதற்கு இயேசுவின் இரத்தத்தினாலே நமக்குத் தைரியம் உண்டாயிருக்கிறது.’—எபிரெயர் 10:19, 20.
“உங்கள் முன்னோர்களால் பாரம்பரியமாய் நீங்கள் அநுசரித்து வந்த வீணான நடத்தையினின்று அழிவுள்ள வஸ்துக்களா[ல்] . . . மீட்கப்படாமல், குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப் பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்களென்று அறிந்திருக்கிறீர்களே.”—1 பேதுரு 1:18, 19.
“அவர் ஒளியிலிருக்கிறது போல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம்; அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்.”—1 யோவான் 1:7.
“தேவரீர் புஸ்தகத்தை வாங்கவும் அதின் முத்திரைகளை உடைக்கவும் பாத்திரராயிருக்கிறீர்; ஏனெனில் நீர் அடிக்கப்பட்டு, சகல கோத்திரங்களிலும் பாஷைக்காரரிலும் ஜனங்களிலும் ஜாதிகளிலுமிருந்து எங்களை தேவனுக்கென்று உம்முடைய இரத்தத்தினாலே மீட்டுக்கொண்[டீர்].”—வெளிப்படுத்துதல் 5:9.
“நம்முடைய சகோதரர்மேல் . . . குற்றஞ்சாட்டுகிறவன் தாழத்தள்ளப்பட்டுப் போனான். . . . ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினாலும் தங்கள் சாட்சியின் வசனத்தினாலும் அவனை ஜெயித்தார்கள்.”—வெளிப்படுத்துதல் 12:10, 11.
[பக்கம் 16-ன் படம்]
பாவங்கள் மன்னிக்கப்படுவதில் இரத்தத்தின் பங்கை நியாயப்பிரமாணத்தின் மூலம் கடவுள் தெளிவாக்கினார்
[பக்கம் 17-ன் படம்]
இயேசுவின் இரத்தத்தின் மூலம் பல உயிர்கள் இரட்சிக்கப்படக்கூடும்