பைபிளின் பிரதான குறிப்புகள் பிரசங்கி 1:1 -12:14
“தேவனுக்குப் பயந்து அவர் கற்பனைகளைக் கைக்கொள்”
இந்தக் காலத்தில் இந்த யுகத்தில், சாதகமான சூழ்நிலைகைளின் கீழ், தேவனுக்குப் பயந்து அவருக்குக் கீழ்ப்படிந்திருப்பது செயல் முறைக்கு ஒத்து வராது என்பதாக கருதப்படுகிறது. ஆனால் சாலொமோன் ராஜாவால் (1:1) 3000 ஆண்டுகளுக்கு முன்பாக எழுதப்பட்ட பிரசங்கி புத்தகம் (எபிரேயுவில், Qohe’leth, பிரசங்கி) கடவுளுடைய நோக்கத்தை அசட்டை செய்து மனிதன் எடுக்கும் முயற்சிகள் வீணானது என்பதை விவரிக்கிறது.
எழுத்தாளன் பல்வேறு பொருட்களின் பேரிலும்—மனித ஞானமும் ஆட்சியும், பொருள் சம்பந்தமான ஐசுவரியங்களும் சிற்றின்பங்களும், புற ஆசாரங்கள் நிறைந்த மதம் போன்ற—இவை அனைத்தையும் பற்றிய உண்மைகளைத் தேடி ஆராய்ந்திருப்பதே இந்தப் புத்தகத்தை இத்தனை கவர்ச்சியானதாகச் செய்கிறது. இவை அனைத்தும் மாயையாக இருக்கின்றன. ஏனென்றால் அவை நிலையானவை இல்லை. மறுபட்சத்தில், இவற்றைக் குறித்து தியானிக்கையில் அது பகுத்துணரும் மனதை ஒரே முடிவுக்கே வழிநடத்துகிறது: “தேவனுக்குப் பயந்து அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர் மேலும் விழுந்த கடமை இதுவே”.—பிரசங்கி 12:13.
“எல்லாம் மாயை”
தயவு செய்து 1 மற்றும் 2 அதிகாரங்களை வாசியுங்கள். முடிவில்லாத இயற்கை சுழற்சிகளோடு ஒப்பிடுகையில், மனித முயற்சிகள் அனைத்தும் வேகமாக கடந்து செல்வதாகவும் தற்காலிகமாக மட்டுமே நிலைத்திருப்பதாகவும் இருக்கின்றன. (1:4-7) பிரசங்கியின் மாபெரும் சாதனைகளுங்கூட, ஒருவேளை குறைந்த அளவே தகுதியுள்ள வேறெருவனுக்கு வைத்துப் போக வேண்டியதாக இருக்கும். (2:18, 19) எபிரேயுவில் “மாயை” என்பது “ஆவி” அல்லது “சுவாசத்தை” அர்த்தப்படுத்துகிறது.
◆1:9—எந்த விதத்தில் “சூரியனுக்குக் கீழே நூதனமானது ஒன்றுமில்லை”?
சூரியன் பிரகாசிக்கும் அன்றாட வாழ்க்கையின் இயற்கை சுழற்சிகளில் மொத்தத்தில் நூதனமானது ஒன்றுமில்லை. “நூதன” கண்டு பிடிப்புகளிலுங்கூட பெரும்பாலும் யெகோவா ஏற்கெனவே சிருஷ்டிப்பில் பிரயோகித்திருக்கும் அதே நியமங்களே பிரயோகிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் “சூரியனுக்குக் கீழே” யெகோவா மனிதவர்க்கத்தை பாதிக்கின்ற புதிய ஆவிக்குரிய முன்னேற்றங்கள் நடந்தேறும்படி செய்திருக்கிறார்.—1987 மார்ச் 1 ஆங்கில காவற்கோபுரம், பக்கங்கள் 27-29 பார்க்கவும்.
◆2:2—சந்தோஷமாக இருப்பது தவறா?
இல்லை. தவறு இல்லை. நகைப்பது அல்லது சந்தோஷமாக இருப்பது ஒருவருடைய பிரச்னைகளிலிருந்து தற்காலிகமாக மனதை வேறு திசையில் திருப்ப உதவியாக இருக்கக்கூடும். ஆனால் பிரச்னைகள் நீங்கிவிடுவதில்லை. ஆகவே மகிழ்ச்சியான பொழுது போக்கின்மூலமாக மெய்யான சந்தோஷத்தைக் கண்டடைய முயற்சி செய்வது “பைத்தியமாக” அர்த்தமற்றதாக இருக்கிறது. அதே விதமாகவே, “சந்தோஷமும்” கூட வாழ்க்கையின் பிரச்னைகளைத் தீர்த்துவிடுவதில்லை. இவ்விதமாக களியாட்டங்களும் சிற்றின்பங்களும் ஒருவருடைய கிரியைகளின் மீது யெகோவாவின் ஆசீர்வாதத்தைக் கொண்டிருப்பதால் வரும் மகிழ்ச்சியிலிருந்து வேறுபடுத்திக் காண்பிக்கப்படுகிறது.—2:25.
நமக்குப் பாடம்: நாம் சாலொமோனின் புத்திமதிக்குச் செவி கொடுத்து, பொருளுடைமைகளைப் பெருக்கிக் கொள்வதையும் கிளர்ச்சியூட்டும் புதிய அனுபவங்களைப் பெற்றுக்கொள்வதையும் நம்முடைய வாழ்க்கையின் ஒரே நோக்கமாக கொள்ளக்கூடாது. மாறாக நாம் அவருக்குக் கீழ்ப்படிவதன் மூலம், யெகோவாவுக்கு முன்பாக நல்லவர்களாக இருக்க வேண்டும். அப்பொழுது நாம் அவருடைய ஆசீர்வாதங்களாகிய, “ஞானத்தையும் அறிவையும் இன்பத்தையும்” அனுபவித்துக் களிப்போம்.—2:26.
ஒவ்வொன்றிற்கும் ஒரு காலம்
3 மற்றும் 4 அதிகாரங்களை வாசியுங்கள். சாலொமோன், வாழ்க்கை விதிவசத்திலிருக்கிறது என்ற நம்பிக்கையை ஆதரித்துப் பேசிக்கொண்டில்லை. (3:1-9) மாறாக தேவன் செய்வது எதுவோ, அதை மனுஷன் மாற்றவே முடியாது என்பதைச் சுட்டிக் காண்பித்துக் கொண்டிருந்தான். (3:14) இந்த விஷயத்தில், மனிதர்கள் மிருகங்களைக் காட்டிலும் மேன்மையானவர்கள் இல்லை. (3:19-21) ஆகவே போட்டி போடும் ஒரு ஆவியை விட ஒற்றுமையான மனநிலையே எவ்வளவோ பயனுள்ளதாக இருக்கிறது. (4:4).
◆தேவன் சகலத்தையும் எவ்விதமாக “அழகாக அதினதன் காலத்திலே” (NW) செய்திருக்கிறார்?
“அழகாக” என்ற வார்த்தைக்கு “நேர்த்தியாக, சரியாக மற்றும் பொருத்தமாக” என்னும் அர்த்தங்களும் உண்டு. அதினதன் காலத்தில், கடவுளின் ஒவ்வொரு கிரியையும் அவருடைய நோக்கத்தில் பொருந்தும் சரியான இடமானது வெளிப்படுத்தப்படுகிறது. கடவுள் மனதிவர்க்கத்துக்காக அநேக காரியங்களை “அழகாகச்” செய்திருக்கிறார். உதாரணமாக அவர் மனிதர்களுக்கு ஏதேனில் ஒரு பரிபூரணமான ஆரம்பத்தைக் கொடுத்தார். மனிதன் பாவத்துக்குள் வீழ்ந்து போனபோது, மீட்கும் வித்தின் வருகையை முன்னறிவித்தார். சரியான நேரத்தில் கடவுள் வித்தை அனுப்பினார். எல்லாவற்றிலும் மிக “அழகானது” யெகோவா தம்முடைய ராஜ்யத்தின் ராஜாவாகிய வித்தை உண்டுபண்ணினதே ஆகும்.
◆4:6—சாலொமோன் ஒரு சுலபமான வாழ்க்கையை ஆதரித்துப் பேசிக் கொண்டிருந்தானா?
இல்லை. ஆனால் இலாபம் கருதி கடினமாக உழைப்பதும் தேர்ச்சித் திறமையும் அநேகமாக போட்டிக்கும் பொறாமைக்கும் வழிநடத்துகிறது என்பதாகச் சொன்னான். (4:4) இது பிரச்னைகளுக்குக் காரணமாயிருந்து விரைவில் ஒருவரை கல்லறைக்குக் கொண்டு செல்லக்கூடும். (1 தீமோத்தேயு 6:9, 10) ஆகவே சமநிலையான நோக்கு என்ன? பிரயாசத்தோடும் சண்டைகளோடும்கூட இரண்டு மடங்கு இலாபத்தைத் சம்பாதிப்பதைவிட சமாதானத்தோடே கொஞ்ச இலாபத்தைக் கொண்டிருப்பதிலேயே திருப்தியாக இருங்கள்.
நமக்குப் பாடம்: தீவிரமாக சொந்த அக்கறைகளைத் தேடிக் கொண்டிருப்பதற்குப் பதிலாக, இது முதலாவது தேவனுடைய ராஜ்யத்தைத் தேடுவதற்குரிய காலமாக இருக்கிறது. (3:1) பிரிந்து போவதற்குப் பதிலாக நாம் உடன் கிறிஸ்தவர்களோடு சேர்ந்து வேலை செய்ய வேண்டும். (4:9-12) இதன் மூலமாக, கஷ்டங்களும் எதிர்ப்பும் இருந்த போதிலும், நாம் தேவையான உதவியையும் ஊக்குவிப்பையும் பெற்றுக்கொள்ளலாம்.
மெய் வணக்கம் திருப்தி செய்கிறது
5 மற்றும் 6 அதிகாரங்களை வாசியுங்கள். யெகோவா சர்வ வல்லமையுள்ளவராக இருப்பதன் காரணமாக, அவரோடு நம்முடைய உறவை நாம் முக்கியமானதாக கருத வேண்டும். நாம் மூடரைப் போல நடந்து கொண்டு நம்முடைய “பலியை” அவர் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கக்கூடாது. (பிரசங்கி 5:1, 2) தேவனுக்குப் பயப்படுகிறவர் தன்னுடைய செல்வத்தைப் பயன்படுத்துவதால் திருப்தியடைகிறார். ஆனால் அதைச் சேமித்து வைக்கிறவர் எந்த மகிழ்ச்சியையும் அடைவதில்லை.—6:2, 3 ஐ 5;18-20 ஒப்பிடவும்.
◆5:2—இந்த ஆலோசனை எவ்விதமாக பொருந்துகிறது?
நாம் நம்முடைய இருதயங்களைக் கடவுளிடம் ஊற்ற வேண்டும். ஆனால் அவருடைய மேன்மை மற்றும் மாட்சிமையின் காரணமாக, உணர்ச்சி வசப்படாமலும் முன்யோசனையின்றி பேசாதபடிக்கும் நாம் எச்சரிப்பாயிருக்க வேண்டும். (சங்கீதம் 62:8) மனம் போனபடி பேசுவதற்குப் பதிலாக நாம், எளிமையானதும் இருதயத்திலிருந்து வருகிறதுமான வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டும். (மத்தேயு 6:7) ஐந்தே சுருக்கமான எபிரேய வார்த்தைகளில் மோசே மிரியாமுக்காக வேண்டிக்கொண்டு சாதகமான பதிலை பெற்றுக் கொண்டான்.—எண்ணாகமம் 12:13
◆6:9—“ஆத்துமா அலைந்து தேடுவது” (NW) என்பது என்ன?
இங்கே “ஆத்துமா” என்பதற்குப் பொருள் “உளமார்ந்த ஆசை” என்பதாகும். ஆகுவே இந்தச் சொற்றொடரானது நிறைவேற முடியாத ஆசைகளைத் திருப்தி செய்துகொள்ள முடிவில்லாமல் தேடிக்கொண்டிருப்பதை அர்த்தப்படுத்துகிறது. இது “கண் காண்பதோடு” அதாவது நிஜங்களை எதிர்படுவதோடு வேறுபடுத்திக் காண்பிக்கப்படுகிறது. இதன் காரணமாகவே கடவுளுடைய ராஜ்யத்தால் மாத்திரமே உண்மையான ஒரு மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என்பதை அறிந்தவர்களாய், நாம் திருப்தியுள்ளவர்களாய் இருந்து நடைமுறையில் சாத்தியமற்ற அல்லது கிட்டமுடியாத ஆசைகள் நம்முடைய சமாதானத்தைப் பறித்துவிட நாம் அனுமதிக்கக்கூடாது.
நமக்குப் பாடம்: நம்முடைய வணக்கத்துக்குரிய இடத்தில் நாம் பொருத்தமான கண்ணியத்தோடு நடந்து கொண்டு, அங்கே செவி கொடுத்துக் கேட்க வேண்டும். (5:1) யெகோவாவுக்கு முன்பாக நம்முடைய கடமைகளை நிறைவேற்றுவதிலும் கூட நாம் தாமதிக்கக்கூடாது. நாம் விவாகமானவர்களாக இருந்தால், இது விவாக பொருத்தனைகளை நிறைவேற்றுவதையும் கூட உட்படுத்தும்.—5:4.
ஞானமான வார்த்தைகள்
7 மற்றும் 8 அதிகாரங்களை வாசியுங்கள். பிரசங்கி மரணத்தின் தெளிவான பாதிப்புகளையும் (7:1-4) ஞானத்தின் மதிப்பையும் பற்றி (7:11, 12, 16-19) எழுதுகிறான். கீழ்த்தரமான பெண்களைப் பற்றியும் கூட அவன் எச்சரிக்கிறான். (7:26) ராஜாக்களிடம் ஞானமாக நடந்து கொள்வது (8:2-4) மற்றும் நேர்மை கேட்டைக் குறித்து உணர்ச்சிவசப்படாதிருப்பது போன்ற விஷயங்களின் பேரில் ஆலாசனை கொடுக்கப்படுகிறது.—8:11-14.
◆7:28—இந்த வார்த்தைகள் பெண்களை மதிப்புக் குறைவானவர்களாகச் செய்கிறதா?
அப்போது மேலோங்கியிருந்த ஒழுக்கத் தராதரங்கள் மிகவும் கீழ்த்தரமாக இருந்திருக்கவேண்டும் என்று தோன்றுகிறது. இதன் காரணமாகவே சாலொமோன் நீதியுள்ள புருஷர்களை அல்லது ஸ்தீரிகளைக் காண்பது ஆபூர்வமாக இருப்பதைக் குறித்துப் பேசினான். ஆயிரம் பேரில் ஒரு நீதிமானைக் காண்பது அரிதாகவும், ஒரு நீதியுள்ள ஸ்தீரியைக் காண்பது அதிலும் அதிக அரிதாகவும் இருந்தது. என்ற போதிலும் பைபிள் “குணசாலிப் பெண்”ணையும் “குணசாலியான ஸ்தீரியையும் பற்றியும் கூட பேசுகிறது. (ரூத் 3:11; நீதிமொழிகள் 31:10) இந்த வசனம் தீர்க்கதரிசன அர்த்தமுள்ளதாகவும்கூட இருக்கும். ஏனென்றால் யெகோவாவுக்குப் பரிபூரணமான கீழ்ப்படிதலை எந்த ஒரு ஸ்திரீயும் ஒருபோதும் கொடுத்தது கிடையாது. ஆகிலும், கீழ்ப்படிதலுடன் இருந்திருக்கும் ஒரு புருஷன்—அதாவது இயேசு கிறிஸ்து இருந்திருக்கிறார்.
◆8:8—இங்கே பிரசங்கி எதைக்குறித்து பேசிக் கொண்டிருக்கிறான்?
அவன் மரணத்தைக் குறித்து பேசிக்கொண்டிருந்தான். மரண நாளை தள்ளிப்போடுவதற்காக, உயிர்சக்தி உயிரணுக்களிலிருந்து பிரிந்து போவதை ஒருவரால் தடுக்க முடியாது. நம்மெல்லாருடைய சத்துருவாகவும் இருக்கும் மரணத்தோடு போராடுகையில், ஒருவராலும் அதிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு வரவோ அதற்குப் பதிலாகக் கொடுக்கவோ முடியாது. (சங்கீதம் 49:7-9) பொல்லாதவர்கள் தங்களுடைய தந்திரமான சூழ்ச்சிகளோடும் கூட மரணத்திலிருந்து தப்பித்துவிட முடியாது.
நமக்குப் பாடம்: பொருள் சம்பந்தமான ஐசுவரியங்கள் அநேகருக்கு அவர்களுடைய வாழ்க்கையின் இலக்காக இருந்தபோதிலும், தெய்வீக ஞானம் மாத்திரமே நித்திய ஜீவனுக்கு வழிநடத்தக்கூடும். (7:12; லூக்கா 12:15) ‘சென்று விட்ட நல்ல காலங்களுக்காக’ ஏங்குவது காரியங்களை மேம்பட்டதாகச் செய்யப்போவதில்லை. (7:10) மாறாக, தொடர்ந்து கடவுளுக்குப் பயந்திருந்தால் மாத்திரமே நாம் “நன்றாயி”ருப்போம்.—8:5, 12
வாழ்க்கையின் பின்வருநிலை
9 மற்றும் 10 அதிகாரங்களை வாசியுங்கள். ஜீவன் விலைமதிப்புள்ளதாக இருக்கிறது. அதை நாம் அனுபவித்துக் களிக்க வேண்டுமென்று கடவுள் விரும்புகிறார். (9:4, 7) வாழ்க்கையின் விளைவுகளின் மீது எந்த அதிகாரமும் நமக்கில்லாததால், (9:11, 12) பெரும்பாலான ஆட்கள் அதை மதித்துணரா விட்டாலும் கூட தெய்வீக ஞானத்துக்குச் செவிகொடுப்பதே மேலானதாகும். (9:17) வாழ்க்கை அநிச்சயமானதாக இருப்பதால் நாம் நம்முடைய இருதயத்தைக் காத்துக் கொண்டு (10:2) நாம் செய்யும் அனைத்திலும் எச்சரிக்கையாயிருந்து நடைமுறையான ஞானத்தோடு செயல்பட வேண்டும்—10:8-10.
◆9:1—நீதிமான்களுடைய கிரியைகள் எவ்விதமாக தேவனுடைய கைவசமாயிருக்கிறது?
துன்பங்கள், ஞானிகளையும் நீதிமான்களையும் நெருக்கித் தாக்கினால், இது கடவுளுடைய அனுமதியினால் தானே நடை பெறுகிறது. அவர் அவர்களை ஒரு போதும் கைவிடமாட்டார். தேவனுடைய “கரத்தினால்” அல்லது அவர் பிரயோகிக்கும் வல்லமையினால் நீதிமான் ஒரு சோதனையிலிருந்து விடுவிக்கப்பட முடியும் அல்லது அதை தாங்கிக்கொள்ள அவன் பலப்படுத்தப்பட முடியும். (1 கொரிந்தியர் 10:13) இந்த உண்மையை நினைவில் கொள்வது, துன்பங்கள் வரும்போது யெகோவாவின் ஊழியனுக்கு ஆறுதலாக இருக்கக்கூடும்.
◆10:2—இருதயம் எவ்விதமாக வலது கையில் இருக்கிறது?
“வலது கை” அநேகமாக தயவான ஒரு ஸ்தானத்தை அர்த்தப்படுத்துகிறது. (மத்தேயு 25:33) ஆகவே ஞானியின் இருதயம் “அவனுடைய வலது கை”யில் இருக்கிறது என்ற உண்மை அது நல்ல நெறியில் சாதகமான போக்கில் செல்ல அவனைத் தூண்டுகிறது என்பதை அர்த்தப்படுத்துகிறது ஆனால் மூடனுக்கோ நல்லெண்ணம் இல்லாததால் அவன் மடத்தனமாகவும் தவறான விதத்திலும் நடந்து கொள்கிறான். அவனுடைய இருதயம் இடது கையிலிருப்பது, தவறான பாதையில் செல்ல அவன் தூண்டப்படுவதை அர்த்தப்படுத்துகிறது.
நமக்குப் பாடம்: திடீரென்று மரணம் நம்மில் எவருக்கும் வரக்கூடுமாதலால், (9:12) நாம் நம்முடைய வாழ்க்கையை யெகோவாவின் ஊழியத்தில் பயன்படுத்திக் கொண்டிருக்க வேண்டும். ஏனென்றால் அந்த நிலை ஏற்படுமானால் நம்முடைய மரணம் அனைத்தையும் ஸ்தம்பித்துவிடச் செய்யும். (9:10) நம்முடைய ஊழியத்தில் நாம் திறம்பட்டவர்களாவதும் கூட அவசியமாயிருக்கிறது. ஏனென்றால் திறமையில்லாதிருந்தால், ஒரு குழியை வெட்டுவது அல்லது மரத்தை பிளப்பது போன்ற சிறிய காரியங்களும் கூட நமக்கும் மற்றவர்களுக்கும் சேதம் விளைவிப்பதாக இருக்கும்.
வாலிபமும் வாழ்க்கையின் நோக்கமும்
11 மற்றும் 12 அதிகாரங்களை வாசிக்கவும். நாம் அனைவருமே தாராள குணமுள்ளவர்களாயிருந்து, உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். (11:1-6) தங்களுடைய நேரத்தையும் சக்தியையும் யெகோவாவை சேவிப்பதற்குப் பயன்படுத்தும் வாலிபர்கள் பின் ஜீவியத்தில் இதற்காக மனஸ்தாபப்படமாட்டார்கள். (11:9, 10) மாறாக தங்களுடைய உடல் ஆரோக்கியத்தையும் வலிமையையும் இழந்துவிடுவதற்கு முன்பாக தேவனை பிரியப்படுத்திய திருப்தி அவர்களுக்கிருக்கும்.—12:1-7; 1977 டிசம்பர் 15, காவற்கோபுரம் பக்கம் 746 பார்க்கவும்.
◆11:1—“ஆகாரத்தை (அப்பத்தை, NW) போடுவது என்பது எதை அர்த்தப்படுத்துகிறது?
அப்பம் உணவு பொருட்களில் முக்கியமானதாக இருக்கிறது. அதை “தண்ணீர்கள்” மேல் போடுவது என்பது விலைமதிப்புள்ள ஏதோ ஒன்றை விட்டு பிரிவதாக இருக்கிறது. என்றாலும் நீ “அதின் பலனைக் காண்பாய்” ஏனென்றால் தாராள குணமுள்ளவனுக்கு எதிர்பாரா விதத்தில் ஏற்ற பலன் அளிக்கப்படும். (லூக்கா 6:38)
◆12:12—புஸ்தகங்களைப் பற்றி ஏன் இப்படிப்பட்ட ஒரு எதர்மறையான கருத்து?
யெகோவாவின் வார்த்தையோடு ஒப்பிடுகையில் உலகின் “அநேக” புஸ்தகங்களில் வெறும் மனிதனின் நியாயங்களையே காணமுடியும். இந்தச் சிந்தனையில் பெரும் பகுதி சாத்தானின் மனதையே பிரதிபலிக்கிறது. (2 கொரிந்தியர் 4:4) ஆதலால், உலகப் பிரகாரமான புஸ்தகங்களை “அதிகமாக படிப்பதனால்” நிலையான மதிப்புள்ள எதுவும் கிடைப்பதில்லை.
நமக்குப் பாடம்: சாலொமோனைப் போல நாம் வாழ்க்கையைப் பற்றி கடவுளுடைய வார்த்தை சொல்லும் காரியங்களின் பேரில் தியானம் செய்ய வேண்டும். அப்பொழுது கடவுளுக்குப் பயந்து அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ள வேண்டும் என்ற நம்முடைய தீர்மானம் பலப்படுத்தப்படும். நம்மைக்குறித்து யெகோவா உள்ளார்ந்த அக்கறையுள்ளவராக இருக்கிறார். (12:12, 13) என்பதை அறிந்திருப்பது நம்மை அவரிடம் நெருங்கி வரச் செய்கிறது.
ஆகவே நாம் மெய் தேவனுக்குப் பயந்து அவர் கற்பனைகளைக் கைக்கொள்வோமாக. இதுவே நம்முடைய கடமையாக இருக்கிறது. இது நமக்கு நிலையான மகிழ்ச்சியைக் கொண்டு வரும். (w87 9/15)