உங்கள் வாழ்க்கை—அதன் நோக்கமென்ன?
‘மனுபுத்திரர் உயிரோடிருக்கும் நாளளவும் பெற்று அநுபவிக்கத்தக்கது இன்னதென்று அறியும்பொருட்டு, என் இருதயத்தை ஞானத்தால் தேற்றிக்கொண்டிருந்தேன்.’—பிரசங்கி 2:3.
1, 2. ஒருவர் தன்னைப்பற்றி நியாயமான அக்கறையுள்ளவராக இருப்பது ஏன் தவறல்ல?
நீங்கள் உங்களைப்பற்றி அக்கறையுள்ளவர்களாய் இருக்கிறீர்கள் அல்லவா? இது இயல்பானதே. இதன் காரணமாக நாம் ஒவ்வொரு நாளும் சாப்பிடுகிறோம், களைப்பாய் இருக்கும்போது உறங்குகிறோம், மேலும் நண்பர்களோடும் அன்பானவர்களோடும் இருக்கவிரும்புகிறோம். சில சமயங்களில் நாம் விளையாடுகிறோம், நீந்துகிறோம் அல்லது நாம் அனுபவித்து மகிழும் மற்ற காரியங்களைச் செய்து, நம்மில் நமக்கு இருக்கும் சமநிலையான விருப்பத்தை வெளிக்காட்டுகிறோம்.
2 இப்படிப்பட்ட சுய-அக்கறை, சாலொமோனை கடவுள் எழுதும்படியாக தூண்டிய காரியத்தோடு இணக்கமாயிருக்கிறது: “மனுஷன் புசித்துக் குடித்து, தன் பிரயாசத்தின் பலனை அநுவிப்பதைப் பார்க்கிலும், அவனுக்கு ஒரு நன்மையும் இல்லை.” அனுபவத்தின் அடிப்படையில் சாலொமோன் மேலுமாகச் சொன்னார்: “இதுவும் தேவனுடைய கரத்திலிருந்து வருகிறது என்று நான் கண்டேன். என்னைப் பார்க்கிலும் சம்பிரமமாய்ச் சாப்பிடத்தக்கவன் யார்?”—பிரசங்கி 2:24, 25.
3. குழப்பமுண்டாக்கும் என்ன கேள்விகள் இன்னும் பதிலளிக்கப்படாமலே இருப்பதை அநேகர் காண்கின்றனர்?
3 இருப்பினும், வாழ்க்கை என்பது வெறுமனே சாப்பிடுவது, குடிப்பது, உறங்குவது, கொஞ்சம் நல்லதைச் செய்வது ஆகியவற்றைக் காட்டிலும் அதிகத்தை உட்படுத்துகிறது என உங்களுக்குத் தெரியும். நமக்கு வருத்தங்களும் ஏமாற்றங்களும் கவலைகளும் இருக்கின்றன. மேலும் நம்முடைய வாழ்க்கையின் அர்த்தத்தைப்பற்றி சிந்திப்பதற்கு நாம் கொஞ்சமும் நேரமில்லாதவர்களாய் இருக்கிறோம். உங்களுடைய விஷயத்தில் இது உண்மையாக இல்லையா? தி வால் ஸ்டீர்ட் ஜர்னலின் முன்னாள் பதிப்பாசிரியர் வெர்மான்ட் ராய்ஸ்டர், நம்முடைய விரிவான அறிவையும் திறமைகளையும் பற்றி குறிப்பிட்ட பிறகு இவ்வாறு எழுதினார்: “இது விசித்திரமாயுள்ளது. மனிதவர்க்கத்தைப்பற்றியும் அவனுடைய இரண்டக நிலைப்பற்றியும், இந்தப் பிரபஞ்சத்தில் அவனுக்குரிய ஸ்தானத்தைப்பற்றியும் நாம் சிந்தித்துப்பார்க்கையில், கால ஓட்டத்தின் ஆரம்பம் முதற்கொண்டு நாம் அதிகத்தை இன்னும் அறியாமலே இருக்கிறோம். நாம் யார், நாம் ஏன் உயிரோடிருக்கிறோம், நாம் எங்கே போகிறோம் என்பதைப் பற்றிய கேள்விகள் இன்னும் பதிலளிக்கப்படாமலே இருக்கின்றன.”
4. நம்மை உட்படுத்தும் கேள்விகளுக்கு நாம் ஏன் ஒவ்வொருவரும் பதிலளிக்கக்கூடியவர்களாக இருக்க விரும்ப வேண்டும்?
4 நாம் யார்? நாம் ஏன் இங்கே இருக்கிறோம்? நாம் எங்கே போகிறோம்? என்ற கேள்விகளுக்கு நீங்கள் எவ்வாறு பதிலளிப்பீர்கள்? கடந்த ஜூலை மாதம் திரு. ராய்ஸ்டர் மரித்துப்போனார். அதற்குள் அவர் திருப்தியளிக்கும் பதில்களைக் கண்டுபிடித்துவிட்டிருப்பார் என்பதாக நீங்கள் நினைக்கிறீர்களா? இன்னும் அதிக பொருத்தமாக, அதைச் செய்வதற்கு உங்களுக்கு ஒரு வழி இருக்கிறதா? மேலுமாக இது எவ்வாறு மகிழ்ச்சியான, அதிக அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ்வதற்கு உங்களுக்கு உதவிசெய்யக்கூடும்? நாம் பார்க்கலாம்.
உட்பார்வைக்கு ஒரு முக்கிய ஊற்றுமூலம்
5. வாழ்க்கையின் அர்த்தத்தைப்பற்றிய கேள்விகளின்பேரில் உட்பார்வையை நாம் நாடும்போது நாம் ஏன் கடவுளை நோக்கியிருக்கவேண்டும்?
5 நாம் ஒவ்வொருவரும் சொந்தமாக தனித்தனியே நம்முடைய வாழ்க்கையின் நோக்கத்துக்காக தேடிக்கொண்டிருந்தால், நமக்கு கொஞ்சம் வெற்றியே கிடைக்கலாம் அல்லது கிடைக்காமலே போகலாம். மிகப் பரந்தளவில் கல்வியையும் அனுபவத்தையும் உடையவர்கள் உட்பட பெரும்பாலான ஆண்கள் மற்றும் பெண்களின் விஷயத்தில் இது உண்மையாக இருந்திருக்கிறது. ஆனால் நாம் தனியாக விடப்பட்டில்லை. நம்முடைய படைப்பாளர் உதவியை அளித்துள்ளார். அதைக் குறித்து நீங்கள் சிந்தித்துப் பார்க்கையில், அவர் “அநாதியாய் என்றென்றைக்கும்” இருப்பவராய் சர்வலோகத்தையும் வரலாற்றையும் பற்றி முழுமையான அறிவைப் பெற்றிருப்பதால் அவரே உட்பார்வைக்கும் ஞானத்துக்கும் இறுதியான ஊற்றுமூலராய் இருக்கிறார் அல்லவா? (சங்கீதம் 90:1, 2) அவர் மனிதர்களைப் படைத்தார், மனிதனின் முழு அனுபவத்தையும் கவனித்திருக்கிறார். ஆகவே உட்பார்வைப் பெற்றுக்கொள்வதற்காக நாம் அவரையே நோக்கியிருக்கவேண்டும், குறைவான அறிவையும் பகுத்துணர்வையும் கொண்ட அபூரணமான மனிதனை அல்ல.—சங்கீதம் 14:1-3; ரோமர் 3:10-12.
6. (அ) தேவையான உட்பார்வையை படைப்பாளர் எவ்வாறு அளித்திருக்கிறார்? (ஆ) சாலொமோன் எவ்வாறு உட்பட்டிருக்கிறார்?
6 வாழ்க்கையின் அர்த்தத்தைக் குறித்து படைப்பாளர் தனிப்பட்ட விதமாக நமக்கு வெளிப்படுத்தும்படியாக நாம் எதிர்பார்க்க முடியாதிருக்கையில், உட்பார்வையின் ஒரு ஊற்றுமூலத்தை—அவருடைய ஏவப்பட்ட வார்த்தையை—அவர் அளித்திருக்கிறார். (சங்கீதம் 32:8; 111:10) பிரசங்கி புத்தகம் குறிப்பாக இந்த விஷயத்தில் நமக்கு பயனுள்ளதாக இருக்கிறது. கடவுள் அதன் எழுத்தாளரை தம்முடைய ஆவியால் ஏவினதால், ‘சகல கிழக்கத்திப் புத்திரரின் ஞானத்தை பார்க்கிலும் சாலொமோனின் ஞானம் சிறந்ததாயிருந்தது.’ (1 இராஜாக்கள் 3:6-12; 4:30-34) ‘சாலொமோனுடைய ஞானத்தை’ நேரில் வந்து பார்த்த ஒரு அரசி அந்தளவு கவரப்பட்டதால் இவற்றில் பாதியாகிலும் தனக்கு அறிவிக்கப்படவில்லை என்றும் அவருடைய ஞானத்தைக் கேட்கிறவர்கள் நிச்சயமாகவே மகிழ்ச்சியுள்ளவர்களாயிருப்பர் என்றும் சொன்னார்.a (1 இராஜாக்கள் 10:4-8) சாலொமோனின் வாயிலாக நம்முடைய படைப்பாளர் அளித்திருக்கும் தெய்வீக ஞானத்திலிருந்து நாமும்கூட உட்பார்வையையும் மகிழ்ச்சியையும் பெற்றுக்கொள்ளலாம்.
7. (அ) வானத்தின்கீழ் செய்யப்பட்டுவரும் பெரும்பாலான நடவடிக்கைகளைப்பற்றி சாலொமோன் என்ன முடிவுக்கு வந்தார்? (ஆ) சாலொமோனின் யதார்த்தமான மதிப்பீடுகளை எது விளக்குகிறது?
7 பிரசங்கி புத்தகம் கடவுள் கொடுத்த ஞானத்தைப் பிரதிபலிக்கிறது; இது சாலொமோனின் இருதயத்தையும் மூளையையும் நல்லவிதத்தில் பாதித்தது. நேரத்தையும், வள ஆதாரங்களையும் உட்பார்வையையும் கொண்டிருந்த காரணத்தால் சாலொமோன் “வானத்தின்கீழ் நடப்பதையெல்லாம்” ஆராய்ந்துபார்த்தார். அவற்றில் பெரும்பாலானவை “மாயையும், மனதுக்குச் சஞ்சலமு”மாயிருப்பதை அவர் கண்டார். வாழ்க்கையில் நம்முடைய நோக்கத்தைப்பற்றி சிந்திக்கையில் நாம் மனதில் வைக்கவேண்டிய ஏவப்பட்ட ஒரு மதிப்பீடாக இது இருக்கிறது. (பிரசங்கி 1:13, 14, 16) சாலொமோன் ஒளிவுமறைவின்றியும் யதார்த்தமாகவும் பேசுகிறார். உதாரணமாக, பிரசங்கி 1:15, 18-ல் காணப்படும் அவருடைய வார்த்தைகளைப் பற்றி சிந்தித்துப்பாருங்கள். பல நூற்றாண்டுகளாக மனிதர்கள் பல்வேறு விதமான அரசாங்கங்களை முயன்று பார்த்து, சிலசமயங்களில் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணவும் மனிதருடைய வாழ்க்கை நிலையை முன்னேற்றுவிக்கவும் உண்மையாகவே முயன்றிருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். ஆனால் எந்த அரசாங்கமாவது உண்மையில் இந்த அபூரணமான அமைப்பின் ‘கோணலான [எல்லா] காரியங்களையும்’ நேராக்கியிருக்கிறதா? ஒரு நபருக்கு அறிவு அதிமாயிருக்கையில், குறுகிய ஒரு வாழ்நாள் காலத்தில் காரியங்களை முழுமையாக சரிவர செய்வது முடியாத காரியம் என்பதை அவர் அதிக தெளிவாக உணருவதை நீங்கள் பார்த்திருக்கலாம். இப்படிப்பட்ட ஒரு உணர்வு அநேகருக்கு ஏமாற்றத்தைக் கொண்டுவருகிறது; ஆனால் நமக்கு கட்டாயமாகவே அது ஏமாற்றத்தைக் கொண்டுவர வேண்டியதில்லை.
8. என்ன சுழற்சிகள் நீண்டகாலமாக இருந்துவந்திருக்கின்றன?
8 சூரிய உதயமும் அதன் மறைவும் அல்லது காற்று மற்றும் தண்ணீரின் இயக்கம் போன்ற நம்மைப் பாதிக்கும் திரும்பத் திரும்ப நிகழும் சுழற்சிகள் சிந்திக்கவேண்டிய மற்றொரு குறிப்பாகும். அவை மோசே, சாலொமோன், நெப்போலியன் மற்றும் நம்முடைய பாட்டனார்களுடைய நாட்களிலும் இருந்தன. அவை தொடர்ந்து இன்னும் இருந்துகொண்டிருக்கின்றன. அதேவிதமாகவே, “ஒரு சந்ததி போகிறது, மறு சந்ததி வருகிறது.” (பிரசங்கி 1:4-7) மனிதருடைய நோக்குநிலையிலிருந்து காண்கையில் மாற்றம் அவ்வளவு இல்லை. பண்டைய கால மக்களும் நவீன நாளைய மக்களும் தொடர்புபடுத்தி பார்க்கமுடிந்த வேலைகளையும், நம்பிக்கைகளையும், ஆசைகளையும், சாதனைகளையும் கொண்டவர்களாக இருந்திருக்கின்றனர். மனிதவர்க்கத்தினர் மத்தியிலும், எவரோ ஒரு தனி நபர் குறிப்பிடத்தக்கவராக ஆகியிருந்தாலோ அல்லது அழகில் அல்லது திறமையில் பிரபலமானவராக இருந்தாலும்கூட, அந்த நபர் இப்பொழுது எங்கே? மரித்துப்போயிருப்பார், மறக்கப்பட்டும் இருப்பார். அது நம்பிக்கையிழந்த நோக்குநிலை அல்ல. பெரும்பாலான ஆட்கள் அவர்களுடைய தாத்தா பாட்டியின் பெயரைக்கூட அறியாதவர்களாக இருக்கின்றனர், அல்லது அவர்கள் எங்கே பிறந்தார்கள், எங்கே புதைக்கப்பட்டார்கள் என்று சொல்ல முடியாதவர்களாக இருக்கின்றனர். மனிதரின் பிரயத்தனங்களிலும் முயற்சிகளிலும் ஏன் சாலொமோன் யதார்த்தமாக மாயையைக் கண்டார் என்பதை உங்களால் புரிந்துகொள்ள முடியும்.—பிரசங்கி 1:9-11.
9. மனிதவர்க்கத்தின் நிலைமையைக் குறித்து யதார்த்தமான உட்பார்வையைப் பெற்றுக்கொள்வதன் மூலம் நாம் எவ்வாறு உதவப்படலாம்?
9 நம்மை ஏமாற்றமடையச் செய்வதற்குப் பதிலாக, மனிதவர்க்கத்தின் அடிப்படை நிலைமையைப்பற்றிய இந்த தெய்வீக உட்பார்வை பிரயோஜனமுள்ளதாய் இருந்து, விரைவில் மறைந்துபோய் மறக்கப்பட்டுவிடக்கூடிய இலக்குகள் அல்லது நாட்டங்களுக்கு தேவைக்கு அதிகமான முக்கியத்துவத்தை கொடுப்பதைத் தவிர்க்கும்படியாக நம்மைச் செய்விக்கும். இந்தத் தெய்வீக உட்பார்வை வாழ்க்கையிலிருந்து நாம் பெற்றுக்கொள்ளுபவற்றையும் நாம் என்ன சாதிக்க முயற்சிசெய்கிறோம் என்பதையும் மதிப்பிடுவதற்கு நமக்கு உதவிசெய்ய வேண்டும். இதை விளக்குவதற்கு, முற்றும் துறந்த துறவிகளாக இருப்பதற்கு பதிலாக, சமநிலையோடு சாப்பிடுவதிலும் குடிப்பதிலும் நாம் சந்தோஷத்தைக் கண்டடையலாம். (பிரசங்கி 2:24) மேலும் நாம் பார்க்கப்போகிற விதமாக, சாலொமோன் மிகவும் உடன்பாடான மற்றும் நன்னம்பிக்கையுள்ள முடிவுக்கே வருகிறார். நித்தமும் மகிழ்ச்சியுள்ள, நோக்கமுள்ள ஒரு எதிர்காலத்தை அனுபவிக்க நமக்கு உதவிசெய்யும் நம் படைப்பாளரோடு நம்முடைய உறவை நாம் ஆழமாக போற்ற வேண்டும் என்பதே அதன் சுருக்கமாகும். சாலொமோன் வலியுறுத்திக் கூறினதாவது: “காரியத்தின் கடைத்தொகையைக் கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே.”—பிரசங்கி 12:13.
வாழ்க்கைச் சுழற்சிகளை முன்னிட்டுப்பார்க்கையில் நோக்கம்
10. எந்த விதத்தில் சாலொமோன் மிருகங்களையும் மனிதர்களையும் ஒப்பிட்டு பேசினார்?
10 பிரசங்கி புத்தகத்தில் வெளிக்காட்டப்படும் தெய்வீக ஞானம் வாழ்க்கையில் நம்முடைய நோக்கத்தைப்பற்றி சிந்திக்கையில் மேலுமாக நமக்கு உதவிசெய்யக்கூடும். எப்படி? சாலொமோன் நாம் அரிதாகவே யோசிக்கும் மற்ற உண்மைகளின்பேரில் யதார்த்தமாக கவனத்தை ஊன்றவைக்கிறார். ஒன்று, மனிதர்களுக்கும் மிருகங்களுக்குமிடையே உள்ள ஒற்றுமைகளை உட்படுத்துகிறது. இயேசு தம்மைப் பின்பற்றினோரை செம்மறியாடுகளுக்கு ஒப்பிட்டு பேசினார்; என்றபோதிலும் மக்கள் பொதுவாக மிருகங்களோடு ஒப்பிட்டு பேசப்படுவதை விரும்புவதில்லை. (யோவான் 10:11-16) இருந்தபோதிலும் சாலொமோன் ஒருசில மறுக்கமுடியாத உண்மைகளைக் கொண்டுவந்தார்: “மனுபுத்திரர் தாங்கள் மிருகங்களைப் போல் இருக்கிறார்களென்பதை அவர்கள் காணும்படிக்கு தேவன் அவர்களை சோதிக்கிறாரென்று நான் மனுஷருடைய நிலைமையைக் குறித்து என் உள்ளத்தில் எண்ணினேன். மனுபுத்திரருக்குச் சம்பவிக்கிறது மிருகங்களுக்கும் சம்பவிக்கும்; அவர்களுக்கும் இவைகளுக்கும் ஏக சம்பவமுண்டு; இவைகள் சாகிறதுபோலவே அவர்களும் சாகிறார்கள்; . . . மிருகத்தைப்பார்க்கிலும் மனுஷன் மேன்மையுள்ளவன் அல்ல; எல்லாம் மாயையே. . . . எல்லாம் மண்ணிலே உண்டாகிறது; எல்லாம் மண்ணுக்குத் திரும்புகிறது.”—பிரசங்கி 3:18-20.
11. (அ) ஒரு மிருகத்தினுடைய யதார்த்த வாழ்க்கை சுழற்சி எவ்வாறு விவரிக்கப்படலாம்? (ஆ) இப்படிப்பட்ட ஒரு பகுப்பாய்வைக் குறித்து நீங்கள் எவ்வாறு உணருகிறீர்கள்?
11 நீங்கள் பார்த்து மகிழும் ஒரு மிருகத்தைப்பற்றி, ஒருவேளை கடற்பறவையை அல்லது ஒரு முயலைப் பற்றி எண்ணிப்பாருங்கள். (உபாகமம் 14:7; சங்கீதம் 104:18; நீதிமொழிகள் 30:26) அல்லது நீங்கள் ஒரு அணிலை கற்பனைசெய்து பாருங்கள்; உலகம் முழுவதிலும் 300-க்கும் மேற்பட்ட வகை உள்ளது. அதன் வாழ்க்கை சுழற்சி எப்படிப்பட்டது? அது பிறந்தப் பிறகு, அதன் தாய் ஒருசில வாரங்களுக்கு அதற்கு பால்கொடுக்கிறாள். விரைவில் அதற்கு மிருதுவான உரோமம் வளர்ந்துவிடுகிறது, அதனால் இப்போது வெளியே செல்லமுடியும். அது அங்குமிங்கும் வேகமாய் ஓடிப்போய் உணவைத் தேடக் கற்றுக்கொள்வதை நீங்கள் பார்க்கலாம். ஆனால் அநேகமாக அது வெறுமனே விளையாடிக்கொண்டிருப்பதைப் போல, அதன் இளமையை அனுபவித்துக்கொண்டிருப்பது போலவே தோன்றுகிறது. ஏறக்குறைய ஒரு வருடம் வளர்ந்த பிற்பாடு, அது ஒரு துணையைத் தேடிக்கொள்கிறது. பின்பு அது ஒரு கூட்டை அல்லது வீட்டைக் கட்டி அதன் குட்டிகளைப் பராமரிக்க வேண்டும். அது போதிய அளவில் பழங்களையும், கொட்டைகளையும் விதைகளையும் கண்டடைய முடிந்தால், அணில் குடும்பம் செழிப்பாக வளரலாம்; தங்கள் வீட்டை விரிவாக்கவும் நேரத்தைக் கொண்டிருக்கலாம். ஆனால் வெறும் சில ஆண்டுகளுக்குள்ளேயே இந்த விலங்குக்கு வயதாகிவிடுகிறது, விபத்துக்கு அல்லது நோய்க்கு ஆளாகிவிடுகிறது. சுமார் பத்து வயதாகையில் அது மரித்துப்போகிறது. வித்தியாசமான பலவகை அணில்களில் சிறிய வித்தியாசங்கள் இருக்கலாம், ஆனால் இதுவே அதன் வாழ்க்கைச் சுழற்சியாகும்.
12. (அ) உண்மையில், அநேக மனிதர்களுடைய வாழ்க்கை சுழற்சி ஏன் ஒரு சராசரி மிருகத்தினுடையதைப் போலவே இருக்கிறது? (ஆ) நம் மனதில் கொண்டிருக்கும் ஒரு மிருகத்தை நாம் அடுத்த முறை காணும்போது நாம் எதைப்பற்றி சிந்திப்போம்?
12 ஒரு விலங்கினுடைய அந்தச் சுழற்சியை பெரும்பாலான ஆட்கள் ஆட்சேபிக்கமாட்டார்கள்; ஒரு அணில் தன் வாழ்க்கையில் அறிவுப்பூர்வமான ஒரு நோக்கத்தைக் கொண்டிருக்கவேண்டும் என்றும் எதிர்பார்க்கமாட்டார்கள். என்றபோதிலும், அநேக மனிதர்களுடைய வாழ்க்கை அதிலிருந்து அதிகம் வித்தியாசமாக தோன்றுவதில்லை, இல்லையா? அவர்கள் பிறக்கிறார்கள், குழந்தைகளாக கவனித்துக்கொள்ளப்படுகிறார்கள். அவர்கள் சாப்பிடுகிறார்கள், வளருகிறார்கள், இளைஞர்களாக விளையாடுகிறார்கள். வெகு விரையில் அவர்கள் முழு வளர்ச்சிப்பருவத்தை அடைகிறார்கள், துணையை கண்டுபிடித்து, வாழ்வதற்கு ஒரு இடத்தையும் உணவை அளிப்பதற்காக ஒரு வழியையும் தேடிக் கொள்கிறார்கள். அவர்கள் வெற்றிபெற்றால், அவர்கள் புஷ்டியுடன் வளர்ந்து தங்கள் குடும்பத்தை வளர்ப்பதற்காக தங்கள் வீட்டை (கூட்டை) விரிவாக்குகிறார்கள். ஆனால் பல பத்தாண்டுகள் வேகமாக கடந்துசெல்கின்றன, அவர்கள் வயதானவர்களாகிறார்கள். அதற்கு முன் இல்லாவிட்டால், அவர்கள் ‘வருத்தமும் சஞ்சலமும்’ நிறைந்த 70 அல்லது 80 வருடங்களுக்குப் பின் மரித்துப்போவார்கள். (சங்கீதம் 90:9, 10, 12) அடுத்த முறை ஒரு அணிலை (அல்லது உங்கள் மனதில் இருந்த மற்ற ஒரு விலங்கை) காண்கையில் சிந்தனையைத் தூண்டும் இந்த உண்மைகளைப் பற்றி நீங்கள் சிந்தித்துப் பார்க்கலாம்.
13. மிருகங்களுக்கும் மனிதர்களுக்கும் என்ன முடிவு உண்மையாக நிரூபிக்கப்பட்டுள்ளது?
13 சாலொமோன் மனிதரின் வாழ்க்கையை ஏன் விலங்குகளுக்கு ஒப்பிடுகிறார் என்பதை உங்களால் காணமுடியும். அவர் எழுதினார்: “ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு காலமுண்டு, . . . பிறக்க ஒரு காலமுண்டு, இறக்க ஒரு காலமுண்டு.” நேரிடக்கூடிய பின்கூறப்பட்ட சம்பவம், அதாவது இறப்பு, மனிதனுக்கும் மிருகங்களுக்கும் ஒரேவிதமாகவே உள்ளது; “இவைகள் சாகிறதுபோலவே அவர்களும் சாகிறார்கள்.” அவர் மேலுமாகச் சொன்னார்: “எல்லாம் மண்ணிலே உண்டாகிறது, எல்லாம் மண்ணுக்குத் திரும்புகிறது.”—பிரசங்கி 3:1, 2, 19, 20.
14. பொதுவான வாழ்க்கை சுழற்சியை சில மனிதர்கள் எவ்விதமாக மாற்ற முயற்சிசெய்கின்றனர், ஆனால் என்ன நடக்கிறது?
14 யதார்த்தமாக உள்ள இந்த மதிப்பீட்டை நாம் எதிர்மறையான சிந்தனை என்பதாக கருதவேண்டிய அவசியமில்லை. உண்மைதான், சிலர் தங்களுடைய பெற்றோரைக் காட்டிலும் தங்கள் பொருளாதார நிலைமையை முன்னேற்றுவித்துக்கொள்ள கூடுதலாக வேலைசெய்வதன் மூலம் நிலைமையை மாற்ற முயற்சிசெய்கிறார்கள். உயர்ந்த வாழ்க்கைத் தரத்தை அளிப்பதற்காக அவர்கள் அதிகமான ஆண்டுகள் கல்வியைத் தொடர்ந்து வாழ்க்கையைப் பற்றிய தங்கள் புரிந்துகொள்ளுதலை விரிவாக்க முயற்சிசெய்யலாம். அல்லது அவர்கள் மேம்பட்ட உடல் ஆரோக்கியத்தைப் பெற்று சற்று கூடுதலான காலம் வாழ்வதற்காக உடற்பயிற்சியில் அல்லது திட்ட உணவில் கவனத்தை ஒருமுகப்படுத்தலாம். இந்த முயற்சிகள் ஒருசில நன்மைகளைக் கொண்டுவரக்கூடும். ஆனால் இப்படிப்பட்ட முயற்சிகள் வெற்றிகரமானதாய் நிரூபிக்கும் என்பதைக் குறித்து யாரால் நிச்சயமாக இருக்கமுடியும்? அவை வெற்றிகரமானதாய் நிரூபித்தாலும்கூட, எவ்வளவு காலத்துக்கு?
15. பெரும்பாலான ஆட்களின் வாழ்க்கையைப் பற்றிய ஒளிவுமறைவற்ற என்ன மதிப்பீடு நியாயமாக இருக்கிறது?
15 சாலொமோன் கேட்டார்: “மாயையைப் பெருகப்பண்ணுகிற அநேக விசேஷங்கள் உண்டாயிருக்கிறபடியால் அதினாலே மனுஷருக்குப் பிரயோஜனமென்ன? நிழலைப்போன்ற மாயையான தன் ஜீவகாலத்தைப் போக்கும் மனுஷனுக்கு இந்த ஜீவனில் நன்மை இன்னதென்று அறிந்தவன் யார்? தனக்குப்பின்பு சூரியனுக்குக் கீழே சம்பவிக்குங்காரியம் இன்னதென்று மனுஷனுக்கு அறிவிப்பவன் யார்?” (பிரசங்கி 6:11, 12) ஒப்பிடுகையில் வெகு சீக்கிரத்திலேயே மரணம் மனிதனுடைய முயற்சிகளை முடிவுக்கு கொண்டுவந்துவிடுவதால், அதிகமான பொருளாதார காரியங்களைப் பெற்றுக்கொள்ள போராடுவதில் அல்லது முக்கியமாக அதிகமான உடைமைகளைப் பெற்றுக்கொள்ளவேண்டும் என்பதற்காக அதிக வருடங்கள் கல்வியைத் தொடருவதில் உண்மையில் அதிகம் நன்மை இருக்கிறதா? வாழ்க்கை மிகவும் குறுகினதாய், ஒரு நிழலைப் போல கடந்துவிடுவதால், தங்களுடைய இலக்கை முயன்று பெறுவதில் தாம் தோல்வியடைந்திருப்பதை அவர்கள் உணரும்போது இன்னொரு இலக்கை நோக்கி தங்களுடைய முயற்சிகளை மறுபடியும் தொடருவதற்கு நேரம் கிடையாது என்பதை அநேகர் புரிந்துகொள்கிறார்கள்; மேலுமாக “தனக்குப்பின்பு” தன்னுடைய பிள்ளைகளுக்கு என்ன நடக்கும் என்பதைக் குறித்து எந்த மனிதனும் நிச்சயமாயிருக்க முடியாது.
ஒரு நல்ல பெயரை வாங்குவதற்கான காலம்
16. (அ) மிருகங்களால் செய்யமுடியாத எதை நாம் செய்யவேண்டும்? (ஆ) வேறு என்ன உண்மை நம்முடைய சிந்தனையைப் பாதிக்கவேண்டும்?
16 மிருகங்களைப் போலில்லாமல், மனிதர்களாகிய நாம், ‘நான் வாழ்வதன் அர்த்தமென்ன? அது பிறப்பதற்கு ஒரு காலத்தையும் இறப்பதற்கு ஒரு காலத்தையும் கொண்ட நிர்ணயிக்கப்பட்ட ஒரு சுழற்சிதானா?’ என்பதைச் சிந்திக்கும் திறமையுள்ளவர்களாக இருக்கிறோம். அதன் சம்பந்தமாக, மனிதனையும் மிருகத்தையும் பற்றிய சாலொமோனின் வார்த்தைகளிலுள்ள உண்மையை எண்ணிப்பாருங்கள்: “எல்லாம் மண்ணுக்குத் திரும்புகிறது.” மரணம் ஒருவருடைய வாழ்க்கையை முழுவதுமாக முடிவுக்குக்கொண்டுவந்துவிடுகிறது என்பதை அது அர்த்தப்படுத்துகிறதா? சரி, உடலைவிட்டு பிரிந்து வாழும் ஒரு சாவாமையுள்ள ஆத்துமாவை மனிதர்கள் கொண்டில்லை என்பதை பைபிள் காண்பிக்கிறது. மனிதர்களே ஆத்துமாக்களாக இருக்கின்றனர், பாவம் செய்கிற ஆத்துமாவே சாகும். (எசேக்கியேல் 18:4, 20) சாலொமோன் இதை விரிவுபடுத்தி சொன்னார்: “உயிரோடிருக்கிறவர்கள் தாங்கள் மரிப்பதை அறிவார்களே, மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள்; இனி அவர்களுக்கு ஒரு பலனுமில்லை, அவர்கள் பேர்முதலாய் மறக்கப்பட்டிருக்கிறது. செய்யும்படி உன் கைக்கு நேரிடுகிறது எதுவோ, அதை உன் பெலத்தோடே செய்; நீ போகிற பாதாளத்திலே செய்கையும் வித்தையும் அறிவும் ஞானமும் இல்லையே.”—பிரசங்கி 9:5, 10.
17. பிரசங்கி 7:1, 2 எதைச் சிந்தித்துப் பார்க்கும்படியாக நம்மைச் செய்யவேண்டும்?
17 தவிர்க்கமுடியாத அந்த உண்மையின் காரணமாக, இந்தக் கூற்றை சிந்தித்துப்பாருங்கள்: “பரிமளதைலத்தைப்பார்க்கிலும் நற்கீர்த்தியும், ஒருவனுடைய ஜநநநாளைப் பார்க்கிலும் மரணநாளும் நல்லது. விருந்துவீட்டுக்குப் போவதிலும் துக்கவீட்டுக்குப் போவது நலம்; இதிலே எல்லா மனுஷரின் முடிவும் காணப்படும்; உயிரோடிருக்கிறவன் இதைத் தன் மனதிலே சிந்திப்பான்.” (பிரசங்கி 7:1, 2) மரணம் “எல்லா மனுஷரின் முடி”வாகவும் இருந்திருப்பதை நாம் ஒப்புக்கொள்ளவேண்டும். நித்திய ஜீவனில் விளைவடையக்கூடிய எந்த அமிர்தத்தையும் உண்ணவோ, எந்த விட்டமின் கலவையையும் உண்ணவோ, எந்த உணவுத் திட்டத்தையும் பின்பற்றவோ அல்லது எந்த உடற்பயிற்சியிலும் ஈடுபடவோ எந்த மனிதனாலும் முடியாமல் இருந்திருக்கிறது. மேலும் பொதுவாக, அவர்களுடைய மரணத்துக்குப்பின் விரைவிலேயே அவர்கள் ‘பேர்முதலாய் மறக்கப்பட்டுவிடுகிறார்கள்.’ ஆகவே ஒரு பெயர் ஏன், “பரிமளதைலத்தைப்பார்க்கிலும்” நல்லதாயும் “ஒருவனுடைய ஜநநநாளைப்பார்க்கிலும் மரணநாளும்” நல்லதாயும் இருக்கிறது?
18. சாலொமோன் உயிர்த்தெழுதலை நம்பினார் என்று நாம் ஏன் நிச்சயமாயிருக்கலாம்?
18 கவனித்த வண்ணமாகவே, சாலொமோன் யதார்த்தமாக யோசிக்கிறவராய் இருந்தார். நம்முடைய படைப்பாளரிடம் நிச்சயமாகவே ஒரு நல்ல பெயரை எடுத்திருந்த அவருடைய முன்னோர்களாகிய ஆபிரகாமையும், ஈசாக்கையும், யாக்கோபையும் அவர் அறிந்திருந்தார். ஆபிரகாமோடு நல்ல தொடர்புள்ளவராய் இருந்த யெகோவா தேவன் அவரையும் அவருடைய வித்தையும் ஆசீர்வதிப்பதாக வாக்களித்தார். (ஆதியாகமம் 18:18, 19; 22:17) ஆம், ஆபிரகாமுக்கு கடவுளிடம் ஒரு நல்ல பெயர் இருந்தது. அவருடைய நண்பராக ஆனார். (2 நாளாகமம் 20:7; ஏசாயா 41:8; யாக்கோபு 2:23) ஆபிரகாம் தன்னுடைய வாழ்க்கையும் தன்னுடைய மகனுடைய வாழ்க்கையும் வெறுமனே ஒருபோதும் முடிவுறாத பிறப்பு மற்றும் இறப்பின் ஒரு சுழற்சியின் பாகமாயில்லை என்பதை அறிந்திருந்தார். நிச்சயமாகவே அதைக் காட்டிலும் அதிகத்தை அது அர்த்தப்படுத்தியது. மறுபடியுமாக வாழும் உறுதியளிக்கப்பட்ட ஒரு எதிர்பார்ப்பு—சாவாமையுள்ள ஒரு ஆத்துமாவை அவர்கள் கொண்டிருந்ததால் அல்ல, ஆனால் அவர்கள் உயிர்த்தெழுப்பப்படுவதன் மூலமாக வரும் எதிர்பார்ப்பு—அவர்களுக்கு இருந்தது. ஈசாக்கை “மரித்தோரிலிருந்துமெழுப்ப தேவன் வல்லவராயிருக்கிறார்” என்பதைக் குறித்து ஆபிரகாம் உறுதியாய் நம்பினார்.—எபிரெயர் 11:17-19.
19. பிரசங்கி 7:1-ன் அர்த்தத்தைக் குறித்து யோபுவிலிருந்து நாம் என்ன உட்பார்வையைப் பெற்றுக்கொள்ளலாம்?
19 இதுவே, எவ்வாறு “பரிமளதைலத்தைப்பார்க்கிலும் நற்கீர்த்தியும், ஒருவனுடைய ஜநநநாளைப்பார்க்கிலும் மரணநாளும் நல்லது” என்பதைப் புரிந்துகொள்வதற்கு உதவியாக உள்ளது. அவருக்கு முன்பிருந்த யோபுவைப் போலவே, மனித உயிரைப் படைத்தவரால் அதை மீண்டும் தரவும் முடியும் என்பதை சாலொமோன் உறுதியாக நம்பினார். மரித்துப்போன மனிதர்களை அவரால் மீண்டும் உயிருக்கு கொண்டுவரமுடியும். (யோபு 14:7-14) உண்மையுள்ள யோபு இவ்வாறு சொன்னார்: “என்னைக் கூப்பிடும், அப்பொழுது நான் உமக்கு [யெகோவா] உத்தரவு சொல்லுவேன்; உமது கைகளின் கிரியையின்மேல் விருப்பம் வைப்பீராக.” (யோபு 14:15) அதைப் பற்றி எண்ணிப்பாருங்கள்! மரித்துவிட்டிருக்கும் தம்முடைய உண்மைப்பற்றுறுதியுள்ள ஊழியர்களுக்காக நம்முடைய படைப்பாளர் “விருப்பம்” வைத்திருக்கிறார். (“உம் கைகளின் படைப்பை நீர் மீண்டும் காணவிழைவீர்.”—தி ஜெருசலேம் பைபிள்.) இயேசு கிறிஸ்துவின் மீட்பின் பலியைப் பொருத்தி பயன்படுத்தி, படைப்பாளர் மனிதர்களை உயிர்த்தெழுப்ப முடியும். (யோவான் 3:16; அப்போஸ்தலர் 24:15) மரித்துப்போகும் மிருகங்களிலிருந்து மனிதர்கள் வித்தியாசமாக இருக்கமுடியும் என்பது தெளிவாக இருக்கிறது.
20. (அ) பிறந்த நாளைக் காட்டிலும் மரண நாள் எப்போது நல்லதாக இருக்கிறது? (ஆ) லாசருவின் உயிர்த்தெழுதல் எவ்விதமாக அநேகரைத் தூண்டியிருக்க வேண்டும்?
20 மரித்துப்போகும் உண்மையுள்ளவர்களை உயிர்த்தெழுப்பக்கூடிய யெகோவாவிடம் ஒருவர் ஒரு நல்ல பெயரை அதற்குள் எடுப்பாரேயானால், ஒருவருடைய பிறந்த நாளைப் பார்க்கிலும் அவருடைய மரண நாள் நல்லதாக இருக்கும் என்பதை இது அர்த்தப்படுத்துகிறது. பெரிய சாலொமோனாகிய இயேசு கிறிஸ்து அதை நிரூபித்தார். உதாரணமாக, உண்மையுள்ள மனிதனாகிய லாசருவை அவர் திரும்பவும் உயிருக்குக் கொண்டுவந்தார். (லூக்கா 11:31; யோவான் 11:1-44) உங்களால் கற்பனை செய்யமுடிகிற விதமாகவே, லாசரு திரும்பவும் உயிர்பெற்றுவருவதைப் பார்த்த அநேகர் வெகுவாக தூண்டப்பட்டு கடவுளுடைய குமாரனில் விசுவாசம் வைத்தார்கள். (யோவான் 11:45) தாங்கள் யார் என்பதையும் தாங்கள் எங்கே போகிறார்கள் என்பதையும் பற்றி எதுவும் அறியாமல் வாழ்க்கையில் நோக்கமற்றவர்களாக அவர்கள் உணர்ந்திருப்பார்கள் என்பதாக நீங்கள் நினைக்கிறீர்களா? நேர் எதிர் மாறாக, பிறந்து, கொஞ்ச காலத்துக்கு வாழ்ந்து, பின்னர் மரித்துப்போகும் வெறும் மிருகங்களைப் போல தாங்கள் இருக்க வேண்டியதில்லை என்பதை அவர்களால் காணமுடிந்தது. வாழ்க்கையில் அவர்களுடைய நோக்கமானது, இயேசுவின் தகப்பனை அறிந்து அவருடைய சித்தத்தைச் செய்வதோடு நேரடியாகவும் நெருக்கமாகவும் இணைக்கப்பட்டிருந்தது. உங்களைப் பற்றி என்ன? இந்தக் கலந்தாலோசிப்பு, உங்கள் வாழ்க்கை எவ்விதமாக உண்மையான நோக்கத்தைக் கொண்டிருக்க முடியும் மற்றும் கொண்டிருக்க வேண்டும் என்பதை காண அல்லது அதிக தெளிவாக காண உங்களுக்கு உதவியிருக்கிறதா?
21. நம்முடைய வாழ்க்கையின் அர்த்தத்தைக் கண்டுபிடிப்பதைப் பற்றியதில் எந்த அம்சத்தை நாம் இன்னும் ஆராய விரும்புகிறோம்?
21 என்றபோதிலும், வாழ்வதில் உண்மையான மற்றும் அர்த்தமுள்ள நோக்கத்தைக் கொண்டிருப்பது என்பது மரணத்தைப் பற்றியும் அதற்குப்பிறகு மறுபடியுமாக வாழ்வதைப் பற்றியும் சிந்தித்துக்கொண்டிருப்பதைக் காட்டிலும் அதிகத்தை உட்படுத்துவதாக உள்ளது. அனுதின அடிப்படையில் நம்முடைய வாழ்க்கையை வைத்து நாம் என்ன செய்துகொண்டிருக்கிறோம் என்பதை அது உட்படுத்துகிறது. பின்வரும் கட்டுரையில் நாம் காணப்போகும் விதமாக, சாலொமோன் அதையும்கூட பிரசங்கி புத்தகத்தில் தெளிவுபடுத்தியுள்ளார்.
[அடிக்குறிப்பு]
a “சேபாவின் ராஜஸ்திரீயைப் பற்றிய வரலாறு சாலொமோனின் ஞானத்தை வலியுறுத்திக்கூறுகிறது, இந்தக் கதை ஒரு புராணக்கதை என்பதாக அடிக்கடி அழைக்கப்பட்டிருக்கிறது (1 இரா. 10:1-13). ஆனால் சாலொமோனை அவள் சந்திக்க வந்தது உண்மையில் வியாபாரம் சம்பந்தமாக இருந்ததை சூழமைவு காட்டுகிறது, ஆக அது புரிந்துகொள்ளப்படத்தக்கதே; அதன் வரலாற்றுப்பூர்வமான உண்மை சந்தேகிக்கப்பட வேண்டியதில்லை.”—தி இன்டர்நேஷனல் ஸ்டான்டர்டு பைபிள் என்ஸைக்ளோப்பீடியா (1988), புத்தகம் IV, பக்கம் 567.
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
◻ என்ன விதங்களில் மிருகங்களும் மனிதர்களும் ஒப்பிடப்படுகையில் ஒன்றுபோல் இருக்கிறார்கள்?
◻ பெரும்பாலான மனித முயற்சியும் நடவடிக்கையும் மாயை என்பதை மரணம் ஏன் வலியுறுத்துவதாக உள்ளது?
◻ பிறந்த நாளைக் காட்டிலும் மரண நாள் எவ்வாறு நல்லதாக இருக்கமுடியும்?
◻ நாம் வாழ்க்கையில் அர்த்தமுள்ள ஒரு நோக்கத்தைக் கொண்டிருப்பது என்ன உறவின்பேரில் சார்ந்துள்ளது?
[பக்கம் 10-ன் படங்கள்]
உங்களுடைய வாழ்க்கை எவ்விதமாக மிருகங்களினுடையதைவிட குறிப்பிடத்தக்கவிதமாக வேறுபடுகிறது?