மனதைத் தொடும் ஒரு பைபிள் மொழிபெயர்ப்பு
“கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது.”—எபி. 4:12.
1. (அ) யெகோவா ஆதாமுக்கு என்ன வேலை கொடுத்தார்? (ஆ) அந்தச் சமயத்திலிருந்து மொழி என்ற பரிசை கடவுளுடைய மக்கள் எப்படிப் பயன்படுத்தியிருக்கிறார்கள்?
மொழி என்ற அருமையான பரிசை யெகோவா மனிதர்களுக்குக் கொடுத்திருக்கிறார். அந்த பரிசைப் பயன்படுத்தி எல்லா மிருகங்களுக்கும் பெயர் வைக்கும்படி ஆதாமிடம் சொன்னார். ஆதாம் எல்லா மிருகங்களுக்கும் அர்த்தமுள்ள ஒரு பெயரை வைத்தான். (ஆதி. 2:19, 20) அந்தச் சமயத்திலிருந்து, கடவுளுடைய மக்கள் மொழி என்ற பரிசைப் பயன்படுத்தி கடவுளைப் புகழ்கிறார்கள்; அவரைப் பற்றி மற்றவர்களுக்குச் சொல்கிறார்கள். சமீப காலங்களில், கடவுளுடைய மக்கள் அந்தப் பரிசைப் பயன்படுத்தி பைபிளை மொழிபெயர்த்திருக்கிறார்கள். நிறையப் பேர் யெகோவாவைப் பற்றி தெரிந்துகொள்ள இது உதவியாக இருந்திருக்கிறது.
2. (அ) புதிய உலக பைபிளின் மொழிபெயர்ப்புக் குழு என்ன 3 விஷயங்களைப் பின்பற்றி மொழிபெயர்த்தார்கள்? (ஆ) இந்தக் கட்டுரையில் எதைப் பற்றி பார்ப்போம்?
2 இன்று, ஆயிரக்கணக்கான பைபிள் மொழிபெயர்ப்புகள் இருக்கின்றன. அதில் சில மொழிபெயர்ப்புகள் மற்ற மொழிபெயர்ப்புகளைவிட திருத்தமாக இருக்கின்றன. புதிய உலக பைபிளின் மொழிபெயர்ப்புக் குழு 3 விஷயங்களை ஞாபகத்தில் வைத்து பைபிளைத் திருத்தமாக மொழிபெயர்த்தார்கள். (1) கடவுளுடைய பெயரைப் புகழ வேண்டும்; அதற்கு, முதன்முதலில் எழுதப்பட்ட பைபிளில் கடவுளுடைய பெயர் எந்தெந்த இடங்களில் இருந்ததோ அந்தந்த இடங்களில் எல்லாம் இருக்க வேண்டும். (மத்தேயு 6:9-ஐ வாசியுங்கள்.) (2) முடிந்தளவு பைபிளை வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்க்க வேண்டும். அப்படிச் செய்ய முடியவில்லை என்றால் அதன் சரியான அர்த்தத்தை மொழிபெயர்க்க வேண்டும். (3) வாசிப்பதற்கும் புரிந்துகொள்வதற்கும் சுலபமாக இருக்கும் விதத்தில் அதை மொழிபெயர்க்க வேண்டும்.a (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) (நெகேமியா 8:8, 12-ஐ வாசியுங்கள்.) இந்த 3 விஷயங்களை ஞாபகத்தில் வைத்து 130-க்கும் அதிகமான மொழிகளில் பைபிள் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. இந்த விஷயங்களைப் பின்பற்றி 2013-ல் வெளியிடப்பட்ட ஆங்கில புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளில் என்ன மாற்றங்கள் செய்திருக்கிறார்கள் என்று இந்தக் கட்டுரையில் பார்க்கலாம். அதோடு, மற்ற மொழிகளில் மொழிபெயர்க்கும்போது இந்த 3 விஷயங்களை எப்படிப் பின்பற்றியிருக்கிறார்கள் என்றும் பார்க்கலாம்.
கடவுளுடைய பெயருக்கு புகழ் சேர்க்கும் பைபிள்
3, 4. (அ) நான்கு எபிரெய மெய்யெழுத்துக்களால் எழுதப்பட்ட கடவுளுடைய பெயர் எந்தெந்த பிரதிகளில் இருந்தன? (ஆ) நிறைய பைபிள் மொழிபெயர்ப்பாளர்கள் என்ன செய்திருக்கிறார்கள்?
3 பழங்காலத்து எபிரெய கையெழுத்துப் பிரதிகளில், அதாவது சவக்கடல் சுருள்களில், கடவுளுடைய பெயரைப் பார்க்க முடியும்.b (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) அதோடு, கி.மு. இரண்டாம் நூற்றாண்டு முதல் கி.பி. முதல் நூற்றாண்டு வரை இருந்த கிரேக்க செப்டுவஜின்ட் பிரதிகளிலும் பார்க்க முடியும். பழைய கையெழுத்துப் பிரதிகளில் கடவுளுடைய பெயர் நிறைய தடவை இருந்ததைப் பார்த்து மக்கள் ஆச்சரியப்பட்டார்கள்.
4 கடவுளுடைய பெயர் பைபிளில் நிச்சயம் இருக்க வேண்டும் என்பது இதிலிருந்து தெளிவாகத் தெரிகிறது. 1950-ல் கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தின் புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளில் கடவுளுடைய பெயர் எல்லா இடங்களிலும் இருந்தது. இருந்தாலும், நிறைய பைபிள் மொழிபெயர்ப்புகளில் கடவுளுடைய பெயர் நீக்கப்பட்டது. உதாரணத்துக்கு, 1901-ல் வெளியிடப்பட்ட அமெரிக்கன் ஸ்டான்டர்ட் வர்ஷன் பைபிளில் கடவுளுடைய பெயர் இருந்தது. ஆனால், 1952-ல் வெளியிடப்பட்ட அமெரிக்கன் ஸ்டான்டர்ட் வர்ஷனின் திருத்திய பதிப்பில் கடவுளுடைய பெயர் இல்லை. ஏனென்றால் அதை மொழிபெயர்த்தவர்கள், யெகோவாவுடைய பெயரைப் பயன்படுத்துவது சரியாக இருக்காது என்று நினைத்து அதை எடுத்துவிட்டார்கள். ஆங்கிலத்திலும் சரி, மற்ற மொழிகளிலும் சரி, இன்னும் நிறைய மொழிபெயர்ப்பாளர்கள் கடவுளுடைய பெயரைப் பயன்படுத்துவது கிடையாது.
5. பைபிளில் கடவுளுடைய பெயரைப் பயன்படுத்துவது ஏன் முக்கியம்?
5 பைபிளில் கடவுளுடைய பெயரைப் பயன்படுத்துவது ரொம்ப முக்கியம். ஏனென்றால் பைபிளின் நூலாசிரியரான யெகோவா, அவருடைய பெயரை மக்கள் தெரிந்துகொள்ள வேண்டுமென்று விரும்புகிறார். ஒரு புத்தகத்தை அதன் ஆசிரியர் என்ன நோக்கத்தோடு எழுதியிருக்கிறார் என்று அதை மொழிபெயர்ப்பவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான், அவர்களால் அந்தப் புத்தகத்தை நன்றாக மொழிபெயர்க்க முடியும். கடவுளுடைய பெயர் ரொம்ப முக்கியம் என்றும் அந்தப் பெயர் புகழப்பட வேண்டுமென்றும் நிறைய பைபிள் வசனங்கள் காட்டுகின்றன. (யாத். 3:15; சங். 83:17; 148:13; ஏசா. 42:8; 43:10; யோவா. 17:6, 26; அப். 15:14) பைபிள் எழுத்தாளர்கள் தம் பெயரை ஆயிரக்கணக்கான தடவை பயன்படுத்தும்படி யெகோவா செய்தார். (எசேக்கியேல் 38:23-ஐ வாசியுங்கள்.) மொழிபெயர்ப்பாளர்கள் பைபிளில் இருந்து யெகோவாவுடைய பெயரை நீக்கினால் அவர்கள் யெகோவாவுக்கு மரியாதை கொடுக்கவில்லை என்று அர்த்தம்.
6. புதிதாக வெளியிடப்பட்ட ஆங்கில பைபிளில் கடவுளுடைய பெயர் ஏன் 6 இடங்களில் சேர்க்கப்பட்டிருக்கிறது?
6 பைபிளில் கடவுளுடைய பெயரைப் பயன்படுத்துவது எவ்வளவு முக்கியம் என்பதற்கு இன்றும் நிறைய ஆதாரங்கள் இருக்கின்றன. 2013-ல் வெளியிடப்பட்ட ஆங்கில பைபிளில் கடவுளுடைய பெயர் 7,216 தடவை இருக்கிறது. அதாவது, 1984-ல் வெளியிடப்பட்ட பைபிளில் இருந்த எண்ணிக்கையைவிட 6 தடவை அதிகமாக இருக்கிறது. சவக்கடல் சுருள்களில் கடவுளுடைய பெயர் இன்னும் 5 இடங்களில், அதாவது, 1 சாமுவேல் 2:25; 6:3; 10:26; 23:14, 16-ல் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.c (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) அதனால், 2013-ல் வெளியிடப்பட்ட பைபிளில் கடவுளுடைய பெயர் இந்த 5 இடங்களில் சேர்க்கப்பட்டிருக்கிறது. பழைய கையெழுத்துப் பிரதிகளில் கடவுளுடைய பெயர் நியாயாதிபதிகள் 19:18-ல் இருந்ததால் அந்த வசனத்திலும் சேர்க்கப்பட்டிருக்கிறது. இப்படி 6 இடங்களில் கடவுளுடைய பெயர் புதிதாகச் சேர்க்கப்பட்டிருக்கிறது.
7, 8. யெகோவா என்ற பெயரின் அர்த்தம் என்ன?
7 கடவுளுடைய பெயரின் அர்த்தத்தைப் புரிந்துகொள்வதை உண்மை கிறிஸ்தவர்கள் ரொம்ப முக்கியமாக நினைக்கிறார்கள். கடவுளுடைய பெயரின் அர்த்தம் “நினைத்ததைச் செய்பவர்.”d (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) முன்பெல்லாம் யாத்திராகமம் 3:14-ஐ (NW) பயன்படுத்தி கடவுளுடைய பெயரின் அர்த்தத்தை விளக்குவோம். அந்த வசனம் இப்படிச் சொல்கிறது: “நான் எப்படியெல்லாம் ஆக நினைக்கிறேனோ அப்படியெல்லாம் ஆவேன்.” இதைப் பற்றி 1984-ல் வெளியிடப்பட்ட ஆங்கில புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிள் இப்படிச் சொல்கிறது: யெகோவா தம் வாக்குறுதியைக் நிறைவேற்ற எதையெல்லாம் செய்ய வேண்டுமென்று நினைக்கிறாரோ அதையெல்லாம் செய்வார்.e (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) ஆனால், 2013-ல் வெளியிடப்பட்ட ஆங்கில பைபிள் யெகோவாவுடைய பெயருக்கு கூடுதல் விளக்கத்தை கொடுக்கிறது: “யெகோவா அவருடைய வாக்குறுதிகளையும் நோக்கங்களையும் நிறைவேற்ற எதையெல்லாம் செய்ய வேண்டும் என்று நினைக்கிறாரோ அதை அவர் மட்டும் செய்யாமல், அவருடைய படைப்புகளையும் செய்ய வைப்பார்.”
8 யெகோவா, அவர் நினைத்ததை நிறைவேற்ற அவருடைய படைப்புகளை எதை வேண்டுமானாலும் செய்ய வைக்க முடியும். உதாரணத்துக்கு, நோவாவை பேழை கட்ட வைத்தார்... பெசலெயேலை கைதேர்ந்த கலைஞனாக ஆக்கினார்... கிதியோனை தைரியமுள்ள போர்வீரனாக ஆக்கினார்... பவுலை ஒரு மிஷனரியாக ஆக்கினார். கடவுளுடைய பெயர் அவருடைய மக்களுக்கு ரொம்ப முக்கியமாக இருக்கிறது. அதனால்தான், பைபிளை மொழிபெயர்க்கும்போது புதிய உலக பைபிளின் மொழிபெயர்ப்புக் குழு கடவுளுடைய பெயரைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
9. ஆளும் குழு ஏன் மற்ற மொழிகளிலும் பைபிளை மொழிபெயர்க்க வேண்டுமென்று நினைத்தார்கள்?
9 இன்று நிறைய பைபிள் மொழிபெயர்ப்பாளர்கள் யெகோவாவுடைய பெயரை பைபிளிலிருந்து எடுத்துவிட்டு, “கர்த்தர்” என்ற பட்டப்பெயரைப் பயன்படுத்துகிறார்கள். அல்லது, வேறு ஏதோ ஒரு கடவுளுடைய பெயரைப் பயன்படுத்துகிறார்கள். இந்த முக்கியமான காரணத்திற்காகத்தான், கடவுளுடைய பெயர் இருக்கும் பைபிளை, எல்லா மொழி பேசும் மக்களுக்கும் கொடுக்க வேண்டுமென்று ஆளும் குழு நினைத்தார்கள். இப்படிப்பட்ட ஒரு பைபிள் மொழிபெயர்ப்புதான் கடவுளுடைய பெயருக்குப் புகழ் சேர்க்கும். (மல்கியா 3:16-ஐ வாசியுங்கள்.) கடவுளுடைய பெயருக்குப் புகழ் சேர்க்கும் விதத்தில், புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிள் இதுவரை 130-க்கும் அதிகமான மொழிகளில் வெளியிடப்பட்டிருக்கிறது.
தெளிவான, திருத்தமான மொழிபெயர்ப்பு
10, 11. புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளை மற்ற மொழிகளில் மொழிபெயர்ப்பதில் என்ன சில பிரச்சினைகள் இருந்தன?
10 முன்பிருந்த ஆங்கில புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளை (1984 பதிப்பு) மற்ற மொழிகளில் மொழிபெயர்ப்பதில் சில பிரச்சினைகள் இருந்தன. உதாரணத்துக்கு, “ஷியோல்” என்ற எபிரெய வார்த்தை பிரசங்கி 9:10-லும் மற்ற சில வசனங்களிலும் இருக்கிறது. அந்த வார்த்தையை மற்ற ஆங்கில மொழிபெயர்ப்புகளிலும் பார்க்க முடிகிறது. ஆனால், அந்த வார்த்தையை வேறு மொழிகளில் பயன்படுத்த முடியவில்லை. ஏனென்றால், அந்த மொழிகளைப் பேசும் மக்களுக்கு அந்த எபிரெய வார்த்தை தெரியவில்லை; அந்த வார்த்தை அவர்கள் டிக்ஷனரியிலும் இல்லை. அதுமட்டும் இல்லாமல் அது ஏதோ ஒரு ஊர் பெயர் என்றும்கூட சிலர் நினைத்தார்கள். அதனால், “ஷியோல்” என்ற எபிரெய வார்த்தையையும் “ஹேடீஸ்” என்ற கிரேக்க வார்த்தையையும் “கல்லறை” என்று மொழிபெயர்க்க மொழிபெயர்ப்பாளர்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டது. இப்படி மொழிபெயர்த்தது திருத்தமாக இருந்தது; எல்லாராலும் சுலபமாகப் புரிந்துகொள்ளவும் முடிந்தது.
11 “ஆத்துமா” என்பதற்கான எபிரெய வார்த்தையையும் கிரேக்க வார்த்தையையும் மொழிபெயர்ப்பது சில மொழிகளில் கஷ்டமாக இருந்தது. அந்த மொழிகளில், “ஆத்துமா” என்ற வார்த்தை பேய் அல்லது செத்த பிறகு உடலிலிருந்து பிரிந்து போகும் ஏதோவொன்றை அர்த்தப்படுத்தலாம். “ஆத்துமா” என்ற வார்த்தையைத் தவறாகப் புரிந்துகொள்ளாமல் இருப்பதற்கு அதை சூழமைவுக்கு ஏற்ற மாதிரி மொழிபெயர்க்க அனுமதி கொடுத்தார்கள். 1984-ல் வெளிவந்த ஆங்கில புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளின் பிற்சேர்க்கையில் இந்த வார்த்தையின் அர்த்தங்களை விளக்கியிருக்கிறார்கள். அதோடு எபிரெய, கிரேக்க வார்த்தைகளைப் பற்றிய தகவல்களை அந்தந்த வசனத்தின் அடிக்குறிப்பில் கொடுத்திருக்கிறார்கள். அதனால், வசனங்களைச் சுலபமாக வாசிக்கவும் புரிந்துகொள்ளவும் முடிகிறது.
12. என்ன மாற்றங்களை 2013-ல் வெளியிடப்பட்ட ஆங்கில புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளில் செய்திருக்கிறார்கள்? (இதே இதழில் இருக்கிற, 2013-ல் வெளியிடப்பட்ட ஆங்கில ‘‘புதிய உலக மொழிபெயர்ப்பு” என்ற கட்டுரையைப் பாருங்கள்.)
12 பைபிளில் சில வார்த்தைகளை தவறாகப் புரிந்துகொள்ளும் வாய்ப்பு இருக்கிறது என்பது மொழிபெயர்ப்பாளர்கள் அனுப்பிய கேள்விகளிலிருந்து தெரிய வந்தது. அதனால், ஆங்கில புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளை இன்னும் எளிமையாக்க செப்டம்பர் 2007-ல் ஆளும் குழு அனுமதி கொடுத்தார்கள். இப்படி எளிமையாக்கிய சமயத்தில் புதிய உலக பைபிளின் மொழிபெயர்ப்புக் குழு, மொழிபெயர்ப்பாளர்கள் அனுப்பிய ஆயிரக்கணக்கான கேள்விகளை ஆராய்ச்சி செய்தார்கள். பழங்காலத்து ஆங்கில வார்த்தைகளுக்குப் பதிலாக தினசரி பேசப்படும் வார்த்தைகளைப் பயன்படுத்தினார்கள். அதனால், பைபிளை வாசிப்பதும் புரிந்துகொள்வதும் சுலபமாக இருந்தது. அதேசமயத்தில் திருத்தமாகவும் இருந்தது. பைபிளை ஏற்கெனவே மற்ற மொழிகளில் மொழிபெயர்த்திருந்ததால் ஆங்கில பைபிளை இன்னும் நன்றாக மொழிபெயர்க்க அது உதவியாக இருந்தது.—நீதி. 27:17.
நன்றி சொல்கிறார்கள்
13. நிறையப் பேருக்கு 2013-ல் வெளியிடப்பட்ட பைபிள் கிடைத்தபோது எப்படி இருந்தது?
13 புதிதாக வெளியிடப்பட்ட ஆங்கில பைபிளைப் பற்றி நிறையப் பேர் என்ன சொல்கிறார்கள்? ஆயிரக்கணக்கான சகோதர சகோதரிகள் அந்த பைபிளுக்காக நன்றி சொல்லி புருக்லினிலுள்ள தலைமை அலுவலகத்துக்கு கடிதம் எழுதினார்கள். ஒரு சகோதரி என்ன எழுதினார் என்று பாருங்கள்: “பைபிளை ஒரு பெரிய பொக்கிஷம்னு சொல்லலாம். அந்த பொக்கிஷத்துல நிறைய விலைமதிக்க முடியாத நகைகள் இருக்கு. 2013-ல வெளியிடப்பட்ட பைபிளை வாசிக்கிறது அந்த பொக்கிஷத்தில இருக்குற ஒவ்வொரு நகையோட நிறம், அழகு, பொலிவு எல்லாத்தையும் ரசிக்கிற மாதிரி இருக்கு. இந்த பைபிளை சுலபமா புரிஞ்சுக்க முடியுறதுனால யெகோவாவை பத்தி இன்னும் நல்லா தெரிஞ்சுக்க முடியுது. யெகோவா ஒரு பாசமான அப்பாவா, என் தோள் மேல கை போட்டு அவரே எனக்கு வாசிச்சு காட்டுற மாதிரி உணர்றேன்.” நிறையப் பேர் இந்த சகோதரியைப் போலவே உணர்கிறார்கள்!
14, 15. சொந்த மொழியில் புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிள் கிடைத்தபோது மக்களுக்கு எப்படி இருந்தது?
14 சகோதர சகோதரிகளுக்கு அவர்களுடைய சொந்த மொழியிலேயே புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிள் கிடைத்ததால் அவர்கள் ரொம்ப நன்றியோடு இருக்கிறார்கள். பல்கேரியா நாட்டைச் சேர்ந்த வயதான ஒருவருக்கு பல்கேரிய மொழியிலேயே புதிய உலக மொழிபெயர்ப்பு கிடைத்தபோது இப்படிச் சொன்னார்: “பைபிளை நான் ரொம்ப வருஷமா படிச்சிருக்கேன். ஆனா, இந்த மாதிரி சுலபமா புரிஞ்சுக்க முடியுற ஒரு மொழிபெயர்ப்பை நான் படிச்சதே இல்ல. இந்த பைபிள் என் மனசை தொடுது.” அதேபோல் அல்பேனியாவில் இருந்த ஒரு சகோதரி இப்படி எழுதினார்: “அல்பேனிய மொழியிலேயே பைபிள் கிடைச்சது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. யெகோவா பேசுறதை சொந்த மொழியில கேட்கிறது எங்களுக்கு கிடைச்ச மிக பெரிய பாக்கியம்!”
15 பல நாடுகளில், பைபிளை நிறையப் பணம் கொடுத்துதான் வாங்க வேண்டும். அதோடு, பைபிள் கிடைப்பதும் கஷ்டம். இருந்தாலும், ஒரு பைபிள் கிடைக்கிறது என்றால் அது கடவுளுடைய ஆசீர்வாதம்தான்! ருவாண்டாவிலிருந்து வந்த ஒரு அறிக்கை இப்படிச் சொல்கிறது: “சிலர் யெகோவாவின் சாட்சிகளோடு ரொம்ப நாட்களுக்கு பைபிளைப் படித்தாலும் அவர்கள் எந்த முன்னேற்றமும் செய்யவில்லை. ஏனென்றால், அவர்களிடம் பைபிளே இல்லை. சர்ச்சுகள் வெளியிட்ட பைபிளையும் அவர்களால் வாங்க முடியவில்லை. அதோடு, பைபிள் படிப்பில் படித்த சில வசனங்களின் அர்த்தத்தை புரிந்துகொள்ள முடியாததால் அவர்கள் எந்த முன்னேற்றமும் செய்யவில்லை.” ருவாண்டாவில் இருக்கும் ஒரு குடும்பத்தில் 4 டீனேஜ் பிள்ளைகள் இருக்கிறார்கள். அந்தக் குடும்பத்தில் இருந்தவர்களுக்கு சொந்த மொழியில் புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிள் கிடைத்தபோது எப்படி இருந்தது என்று அவர்கள் சொல்கிறார்கள்: “எங்களுக்கு புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளை கொடுத்ததுக்காக நாங்க யெகோவாவுக்கும் உண்மையும் விவேகமும் உள்ள அடிமைக்கும் ரொம்ப நன்றி சொல்றோம். நாங்க ரொம்ப ஏழைங்களா இருக்கிறதுனால குடும்பத்தில இருக்கிற எல்லாருக்கும் பைபிள் வாங்குற அளவுக்கு பணம் இல்ல. ஆனா, இப்போ எங்க எல்லார்கிட்டயும் புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிள் இருக்கு. நாங்க தினமும் குடும்பமா பைபிளை படிக்கிறது மூலமா யெகோவாவுக்கு நன்றி சொல்றோம்.”
16, 17. (அ) தம்முடைய மக்கள் என்ன செய்ய வேண்டுமென யெகோவா விரும்புகிறார்? (ஆ) நாம் எதில் உறுதியாக இருக்க வேண்டும்?
16 சீக்கிரத்தில், 2013-ல் வெளியிடப்பட்ட புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிள் இன்னும் நிறைய மொழிகளில் கிடைக்கும். இந்த மொழிபெயர்ப்பு வேலையைத் தடுத்து நிறுத்த சாத்தான் முயற்சி செய்கிறான். ஆனால் யெகோவா, தாம் பேசுவதை தம்முடைய மக்கள் கேட்க வேண்டுமென விரும்புகிறார். யெகோவா தம்முடைய மக்களிடம் சுலபமாகப் புரிந்துகொள்ளும் மொழியில் பேசுகிறார். (ஏசாயா 30:21-ஐ வாசியுங்கள்.) ரொம்ப சீக்கிரத்தில், “சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறதுபோல், பூமி கர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்.”—ஏசா. 11:9.
17 யெகோவா கொடுத்திருக்கிற எல்லா பரிசுகளையும் நன்றாகப் பயன்படுத்த வேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும். முக்கியமாக, அவருடைய பெயரைப் புகழ உதவியாக இருக்கும் புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளை நன்றாகப் பயன்படுத்த வேண்டும். பைபிளை படிப்பதன் மூலம் யெகோவா பேசுவதை தினமும் கேளுங்கள். நம் ஜெபங்களை யெகோவா தேவனால் கவனமாகக் கேட்க முடியும். நாம் யெகோவாவிடம் பேசுவதன் மூலமும் அவர் நம்மிடம் பேசுவதை கேட்பதன் மூலமும் அவரைப் பற்றி நாம் நன்றாகத் தெரிந்துகொள்ள முடியும். அப்போது, அவர்மீது நமக்கு இருக்கும் அன்பு இன்னும் அதிகமாகும்.—யோவா. 17:3.
a 2013-ல் வெளிவந்த ஆங்கில புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளில் A1 பிற்சேர்க்கையைப் பாருங்கள்.
b கடவுளுடைய பெயர் எபிரெய மொழியில் நான்கு மெய்யெழுத்துக்களால் (டெட்ராகிராமட்டன்) எழுதப்பட்டது.
c எபிரெய மஸோரெட்டிக் பிரதிகளைவிட சவக்கடல் சுருள்கள் 1,000-க்கும் அதிகமான வருஷங்கள் பழமையானது. புதிய உலக மொழிபெயர்ப்பு எபிரெய மஸோரெட்டிக் பிரதிகளிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டது.
d சில புத்தகங்கள் இந்த விளக்கத்தைத் தந்தாலும் எல்லா அறிஞர்களும் இதை ஏற்றுக்கொள்வதில்லை.
e பைபிள் கையேடு என்ற சிறுபுத்தகத்தில் பக்கம் 1-5-ல் இருக்கும் “எபிரெய வேதாகமத்தில் கடவுளின் பெயர்” என்ற தலைப்பில் பாருங்கள்.