தீமை தொடருவது ஏன்?
‘யெ கோவா தமது வழிகளிலெல்லாம் நீதியுள்ளவர்’ என்று பைபிள் சொல்கிறது. (சங்கீதம் 145:17; வெளிப்படுத்துதல் 15:3) “அவர் கிரியை உத்தமமானது; அவர் வழிகளெல்லாம் நியாயம், அவர் நியாயக்கேடில்லாத சத்தியமுள்ள தேவன்; அவர் நீதியும் செம்மையுமானவர்” என்று அவரை மோசே தீர்க்கதரிசி விவரித்தார். (உபாகமம் 32:4) “கர்த்தர் [யெகோவா] மிகுந்த உருக்கமும் இரக்கமுமுள்ளவராயிருக்கிறாரே” என்று யாக்கோபு 5:11 சொல்கிறது. தீமைக்கு கடவுள் காரணம் இல்லை, அப்படி அவர் காரணமாக இருக்கவும் முடியாது.
“சோதிக்கப்படுகிற எவனும், நான் தேவனால் சோதிக்கப்படுகிறேன் என்று சொல்லாதிருப்பானாக; தேவன் பொல்லாங்கினால் சோதிக்கப்படுகிறவரல்ல, ஒருவனையும் அவர் சோதிக்கிறவருமல்ல” என்று சீஷனாகிய யாக்கோபு எழுதினார். (யாக்கோபு 1:13) யெகோவா தேவன் மக்களைத் தீமையால் சோதிப்பதுமில்லை, தீய காரியங்களில் ஈடுபட அவர் தூண்டுவதுமில்லை. அப்படியென்றால், தீமைக்கும் அதனால் விளையும் துன்பத்திற்கும் யார்தான் காரணம்?
தீமைக்கு யார் காரணம்?
தீமைக்கு மனிதர்கள் ஓரளவு காரணமாயிருக்கிறார்கள் என பைபிள் எழுத்தாளராகிய யாக்கோபு குறிப்பிடுகிறார். “அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான். பின்பு இச்சையானது கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கும், பாவம் பூரணமாகும்போது, மரணத்தைப் பிறப்பிக்கும்” என்று அவர் குறிப்பிடுகிறார். (யாக்கோபு 1:14, 15) ஆட்கள் தங்களுடைய தவறான ஆசைகளைப் பூர்த்திசெய்துகொள்ள முயற்சி செய்யலாம். மனிதன் வழிவழியாய் பெற்றுக்கொண்ட பாவத்தையும் கவனத்தில் வையுங்கள். இந்தப் பாவத்தின் ஆதிக்கம் தவறான ஆசைகளுக்கு எண்ணெய் வார்க்கிறது; மிக மோசமான விளைவுகளுக்கு வழிநடத்துகிறது. (ரோமர் 7:21-23) உண்மையில், வழிவழியாய் பெற்ற இந்தப் பாவம் மனித குலத்தை “ஆண்டுகொண்டது”; பெருந்துன்பத்தை விளைவிக்கும் மோசமான செயல்களைச் செய்ய மனிதர்களை அடிமைப்படுத்தி வைத்திருக்கிறது. (ரோமர் 5:21) மேலும், பொல்லாத மனிதர்கள் மற்றவர்களையும் பொல்லாதவர்களாக்க முடியும்.—நீதிமொழிகள் 1:10-16.
என்றபோதிலும், தீமைக்கு அதிமுக்கிய காரணம் பிசாசாகிய சாத்தானே. அவன்தான் தீமையை உலகத்திற்குள் புகுத்தியவன். அவனை இயேசு கிறிஸ்து, ‘பொல்லாங்கன்’ என்றும் “இந்த உலகத்தின் [அநீதியான மனித சமுதாயத்தின்] அதிபதி” என்றும் அழைத்தார். யெகோவா தேவன் அளித்துள்ள சரியான வழிமுறைகளை ஒதுக்கித் தள்ளும்படி மனிதர்களை சாத்தான் தூண்டுகிறான். பெரும்பாலோர் அவனுடைய வழியில்தான் செல்லுகிறார்கள். (மத்தேயு 6:13, NW; யோவான் 14:30; 1 யோவான் 2:15-17) “உலகமுழுவதும் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறதென்று” 1 யோவான் 5:19 குறிப்பிடுகிறது. சொல்லப்போனால், சாத்தானும் அவனுடைய பேய்களும், ‘உலகமனைத்தையும் மோசம்போக்குவதன்மூலம்’ ‘ஆபத்தை’ மட்டுமே உண்டாக்குகிறார்கள். (வெளிப்படுத்துதல் 12:9, 12) ஆக, தீமைக்கு முக்கால்வாசிப் பொறுப்பு பிசாசாகிய சாத்தானே.
துன்பத்திற்கு, அதாவது துயரத்திற்கான இன்னொரு காரணத்தை புதிய உலக மொழிபெயர்ப்பு ஆங்கில பைபிளில் பிரசங்கி 9:11 இவ்வாறு கூறுகிறது: “சமயமும் எதிர்பாராத சம்பவமும் [நம்] அனைவருக்கும் ஏற்படுகிறது.” ஒரு கோபுரம் விழுந்து 18 பேர் கொல்லப்பட்ட ஒரு சோக சம்பவத்தைப்பற்றி இயேசு கிறிஸ்து குறிப்பிட்டார். (லூக்கா 13:4) தவறான நேரத்தில் தவறான இடத்தில் அவர்கள் இருந்ததால் அத்தகைய துன்பத்தைச் சந்தித்தார்கள். அதுபோன்ற சம்பவங்கள் இன்றும் நடக்கின்றன. உதாரணமாக, உயரமான ஒரு கட்டடத்தின் செங்கல் ஒன்று உடைந்து வழியில் நடந்து போகிற ஒருவர்மீது விழலாம். அதற்கு கடவுள் காரணமா? இல்லை. அது திட்டமிடப்படாத, எதிர்பாராத சம்பவமாகும். அதேபோல, குடும்ப அங்கத்தினர்கள் நோய்வாய்ப்படுவது அல்லது குடும்பத் தலைவரின் திடீர் மரணத்தால் குடும்பத்தில் உள்ளவர்கள் அநாதைகளாகவும் விதவைகளாகவும் ஆவது ஆகியவையும் பெரும்பாலும் எதிர்பாராமல் நடப்பவையே.
இதிலிருந்து, தீமைக்கு கடவுள் பொறுப்பாளி இல்லையென்றும் துன்பத்திற்கு அவர் காரணகர்த்தா இல்லையென்றும் தெளிவாகத் தெரிகிறது, அல்லவா? மாறாக, தீமையையும் அதற்குக் காரணமானவர்களையும் துடைத்தழிப்பதே யெகோவாவின் நோக்கமாகும். (நீதிமொழிகள் 2:22) அது மட்டுமல்ல, அதைவிட அதிகத்தையும் செய்வார் என்பது நிச்சயம். கிறிஸ்து மூலமாக, ‘பிசாசினுடைய கிரியைகளை அழிப்பதே’ கடவுளுடைய நோக்கமென்று வேதவசனங்கள் கூறுகின்றன. (1 யோவான் 3:8) பேராசையிலும் பகைமையிலும் கொடுஞ்செயல்களிலும் ஊறிப்போயிருக்கும் இன்றைய பொல்லாத உலகம் உருத்தெரியாமல் அழிக்கப்படும். கடவுள், “அவர்களுடைய [அனைவருடைய] கண்ணீர் யாவையும் . . . துடைப்பார்”; இவ்வாறு, துன்பத்திற்கு முடிவு கட்டுவார். (வெளிப்படுத்துதல் 21:4) அப்படியென்றால், ‘கடவுள் முன்னதாகவே ஏன் இதைச் செய்யவில்லை? தீமையையும் துன்பத்தையும் அவர் ஏன் இன்றுவரை அனுமதித்திருக்கிறார்?’ என்று நீங்கள் கேட்கலாம். ஆதாம் ஏவாளைப் பற்றிய பைபிள் பதிவில் இதற்கான பதில் இருக்கிறது.
முக்கியமான விவாதம் எழுப்பப்படுகிறது
கடவுள் இன்றுவரை தீமையை அனுமதித்திருப்பதற்கும் மனித சரித்திரத்தின் ஆரம்பத்தில் நடந்த சம்பவங்களுக்கும் தொடர்பிருக்கிறது. அந்தச் சமயத்தில் நடந்த ஒரு சம்பவத்தில் படைப்பாளர் சம்பந்தமாக, சீக்கிரமாகவோ சுலபமாகவோ தீர்க்கப்பட முடியாத முக்கியமான விவாதம் ஒன்று எழுப்பப்பட்டது. அதற்கு நாம் கூர்ந்து கவனம் செலுத்துவோம்.
யெகோவா தேவன் முதல் மனிதனையும் மனுஷியையும் பரிபூரணர்களாகப் படைத்து பூங்காவன பூமியில் குடிவைத்தார். தெரிவு செய்வதற்கான திறனை அவர்களுக்கு வழங்கினார்; இந்தத் திறன் அவர்களை விலங்குகளிடமிருந்து வேறுபடுத்திக் காட்டியது. (ஆதியாகமம் 1:28; 2:15, 19) தெரிவு செய்வதற்கான திறன் ஆதாமுக்கும் ஏவாளுக்கும் இருந்ததால், படைப்பாளரிடம் அன்பு காட்டவும், அவருக்குச் சேவை செய்யவும், கீழ்ப்படியவும் தங்களுடைய மனத்திறனைப் பயன்படுத்த முடியும். அல்லது கடவுளைவிட்டு விலகி மனம்போல் வாழ்வதற்கும் மனமறிய அவருக்குக் கீழ்ப்படியாமல் போவதற்கும் அந்தத் திறனை அவர்கள் பயன்படுத்த முடியும்.
உண்மை கடவுளாகிய தம்மை ஆதாமும் ஏவாளும் நேசிக்கிறார்களா என்பதைக் காட்டுவதற்கு வாய்ப்பளிக்கும் விதத்தில் அவர்களுக்கு ஒரு கட்டுப்பாட்டை யெகோவா வைத்தார். “நீ தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியையும் புசிக்கவே புசிக்கலாம். ஆனாலும் நன்மைதீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம்; அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய்” என்று அவர் ஆதாமுக்குக் கட்டளையிட்டார். (ஆதியாகமம் 2:16, 17) ஆதாமும் ஏவாளும் தொடர்ந்து கடவுளுடைய ஆதரவைப் பெறுவதற்குக் குறிப்பிட்ட ஒரு மரத்தின் பழத்தைச் சாப்பிடாதிருக்க வேண்டும். அப்படிச் சாப்பிடாமல் இருந்தால்தான் அவர்களும் அவர்களுடைய சந்ததியாரும் பயனடைய முடியும். அவர்கள் சாப்பிடாமல் இருப்பார்களா?
என்ன நடந்தது என்பதை பைபிள் சொல்கிறது. பிசாசாகிய சாத்தான் ஒரு பாம்பைப் பயன்படுத்தி ஏவாளை அணுகி, “நீங்கள் தோட்டத்திலுள்ள சகல விருட்சங்களின் கனியையும் புசிக்கவேண்டாம் என்று தேவன் சொன்னது உண்டோ” என்று கேட்டான். அதற்கு பதில் அளிக்கும் விதத்தில், கடவுளுடைய கட்டளையை ஏவாள் திரும்பச் சொன்னாள்; அப்போது சாத்தான் அவளிடம், “நீங்கள் சாகவே சாவதில்லை; நீங்கள் இதைப் புசிக்கும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல் இருப்பீர்கள் என்றும் தேவன் அறிவார்” என்று சொன்னான். அதைக் கேட்ட பிறகு, அந்த மரம் ஏவாளுக்கு மிகுந்த ஆசையைத் தூண்டுவதாக இருந்தது, அதனால் அவள் அதன், “கனியைப் பறித்து, புசித்து, தன் புருஷனுக்கும் கொடுத்தாள்; அவனும் புசித்தான்” என்று பதிவு தொடர்ந்து சொல்கிறது. (ஆதியாகமம் 3:1-6) இவ்விதமாக, தெரிவு செய்வதற்கான திறனை ஆதாமும் ஏவாளும் தவறாகப் பயன்படுத்தினார்கள்; கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் போவதன்மூலம் பாவம் செய்தார்கள்.
நடந்த சம்பவத்தின் முக்கியத்துவத்தை உங்களால் புரிந்துகொள்ள முடிகிறதா? ஆதாமிடம் கடவுள் சொன்னதற்கு நேர்மாறான ஒன்றை பிசாசு கூறினான். நல்லது எது, கெட்டது எது என்று தீர்மானிக்க யெகோவாவின் உதவி ஆதாமுக்கும் ஏவாளுக்கும் இனி தேவையில்லை என்று சாத்தானுடைய வார்த்தைகள் மறைமுகமாகச் சுட்டிக்காட்டின. ஆகையால், மனிதர்கள்மீது ஆட்சி செய்ய யெகோவாவுக்கு உரிமையும் தகுதியும் இருக்கிறதா என்ற கேள்வியைச் சாத்தானின் சவால் எழுப்பியது. எனவே, அவன் எழுப்பிய முக்கியமான இந்த விவாதம் மனிதகுலத்தை ஆட்சிசெய்வதற்கான யெகோவாவின் பேரரசுரிமை பற்றியே இருந்தது. உண்மையான கடவுள் இந்தச் சவாலுக்கு எவ்வாறு பதிலளித்தார்?
கால அவகாசம் அவசியம்
சாத்தான், ஆதாம், ஏவாள் என மூன்று கலகக்காரர்களையும் அழித்துவிட யெகோவாவுக்கு வல்லமை இருந்தது. அவர்களைவிட கடவுள் பலம் படைத்தவர் என்பதில் எள்ளின் முனையளவுகூட சந்தேகமில்லை. ஆனால், கடவுளுடைய வல்லமையைக் குறித்து சாத்தான் கேள்வி எழுப்பவில்லை. மாறாக, ஆட்சி செய்ய யெகோவாவுக்கு உரிமை இருக்கிறதா என்றே கேள்வி எழுப்பினான். எல்லா தேவதூதர்களையும் மனிதர்களையும் இந்த விவாதம் உட்படுத்தியது. தெரிவு செய்ய தங்களுக்கு இருக்கும் திறனைச் சரியான விதத்தில், அதாவது கடவுள் தந்த இயற்கை சட்டங்கள், ஒழுக்கநெறிகள், ஆன்மீக வழிநடத்துதல் ஆகியவற்றுக்கு இசைவாகப் பயன்படுத்துவதன் அவசியத்தை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டியிருந்தது. அப்படிச் செய்யாதிருந்தால், புவியீர்ப்பு விதியை பொருட்படுத்தாது உயரமான ஒரு கட்டடத்தின் மேலிருந்து குதிக்கிற ஒருவருக்கு காயமேற்படுவதுபோல தீமையான விளைவுகளே ஏற்படும். (கலாத்தியர் 6:7, 8) கடவுளை விட்டுப் பிரிந்து மனம்போல் வாழ தேர்ந்தெடுப்பதால் வரும் மோசமான விளைவுகளை உற்றுக் கவனிப்பதிலிருந்து அனைத்து தேவதூதர்களும் மனிதர்களும் பாடம் கற்றுக்கொள்ள முடியும். இதற்குக் கால அவகாசம் அவசியமாயிருந்தது.
சில விவாதங்களைத் தீர்ப்பதற்குக் கால அவகாசம் தேவைப்படும் என்ற உண்மையை பின்வரும் உதாரணத்தின்மூலம் விளக்கலாம்: யார் பலசாலி என்பதை நிரூபிப்பதற்கு ஒரு குடும்பத்தின் தகப்பன் இன்னொரு குடும்பத்தின் தகப்பனை போட்டிக்கு அழைக்கிறாரென வைத்துக்கொள்வோம். இந்த விவாதத்தில் சீக்கிரமாக முடிவு தெரிந்துவிடும். பாறாங்கல்லைத் தூக்க வைப்பதன்மூலம் இருவரின் பலத்தையும் எடைபோட முடியும். எந்தத் தகப்பன் மிக கனமான பாறாங்கல்லைத் தூக்குகிறாரோ அவரே பலசாலியாக நிரூபிப்பார். ஆனால், எந்தத் தகப்பன் தன் பிள்ளைகளை உண்மையாக நேசிக்கிறார், பிள்ளைகளும் அதேபோல் அவரை நேசிக்கிறார்களா என்ற கேள்விகள் தலைதூக்கும்போது என்ன செய்வது? அல்லது எந்தத் தகப்பன் தன்னுடைய குடும்பத்தைச் சிறந்த முறையில் நிர்வகிக்கிறார் என்ற கேள்வி எழும்பினால் என்ன செய்வது? இந்த விஷயத்தில் பலத்தைக் காண்பிப்பதோ வாய் வார்த்தைகளோ போதுமானதாக இருக்காது. போதுமான கால அவகாசமும், நடப்பவற்றை உற்றுக் கவனிப்பதும், இவற்றின் அடிப்படையில் சரியான முடிவுகள் எடுப்பதும் விவாதத்தைத் தீர்க்க உதவும்.
காலம் எதைக் காட்டியிருக்கிறது
கடவுளின் ஆட்சியுரிமையைக் குறித்து சாத்தான் கேள்வி எழுப்பி சுமார் 6,000 வருடங்கள் உருண்டோடிவிட்டன. சரித்திரம் எதைக் காட்டியிருக்கிறது? கடவுளுக்கு எதிராக சாத்தான் சுமத்திய குற்றச்சாட்டில் உட்பட்டிருந்த இரண்டு அம்சங்களைக் கவனியுங்கள். “நீங்கள் சாகவே சாவதில்லை” என்று சாத்தான் தைரியமாக ஏவாளிடம் சொன்னான். (ஆதியாகமம் 3:4) அந்தப் பழத்தைச் சாப்பிட்டால் ஆதாமும் ஏவாளும் சாவதில்லை என்று குறிப்பிடுவதன்மூலம் உண்மையில், யெகோவா ஒரு பொய்யர் என்றே சாத்தான் சொன்னான். எவ்வளவு மோசமான குற்றச்சாட்டு! இந்த விஷயத்திலேயே கடவுள் பொய் சொல்லியிருந்தால், அவரை வேறெந்த விஷயத்தில் நம்ப முடியும்? என்றாலும், கடந்துபோன வருடங்கள் என்ன காட்டுகின்றன?
ஆதாம் ஏவாள் இருவரும் வியாதியையும் கஷ்டத்தையும் முதுமையையும் இறுதியாக மரணத்தையும் சந்திக்க வேண்டியிருந்தது. “ஆதாம் உயிரோடிருந்த நாளெல்லாம் தொளாயிரத்து முப்பது வருஷம்; அவன் மரித்தான்” என்று பைபிள் சொல்கிறது. (ஆதியாகமம் 3:19; 5:5) இந்தச் சோகமான முடிவு ஆதாமிலிருந்து பரம்பரைச் சொத்தாக எல்லா மனிதர்களுக்கும் கிடைத்திருக்கிறது. (ரோமர் 5:12) சாத்தான், ‘பொய்யனும் பொய்க்குப் பிதாவுமாயிருக்கிறான்’ என்பதையும் யெகோவா, ‘சத்தியபரர்’ என்பதையும் காலம் காட்டியிருக்கிறது.—யோவான் 8:44; சங்கீதம் 31:5.
மேலும், “நீங்கள் இதைப் [விலக்கப்பட்ட மரத்தின் கனியை] புசிக்கும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள் [ஆதாமும் ஏவாளும்] நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல் இருப்பீர்கள் என்றும் தேவன் அறிவார்” என்று ஏவாளிடம் சாத்தான் சொன்னான். (ஆதியாகமம் 3:5) இந்த ஏமாற்று வார்த்தைகளைச் சொல்வதன்மூலம் மனிதர்கள் தங்களைத் தாங்களே ஆட்சி செய்துகொள்ளும் போலியான வாய்ப்பை சாத்தான் வழங்கினான். மனிதர்கள், கடவுளை விட்டுப் பிரிந்து சுதந்திரமாகச் செயல்பட்டால் மிக நன்றாக இருக்கலாம் என்று அவன் ஏமாற்றுத்தனத்தோடு மறைமுகமாகக் கூறினான். அவன் சொன்னது உண்மையென நிரூபிக்கப்பட்டிருக்கிறதா?
சரித்திரம் முழுவதிலும் வல்லரசுகள் தோன்றி, மறைந்தன. தன் மனதில் உதித்த எல்லா அரசாங்க முறைகளையும் மனிதன் முயன்று பார்த்தாகிவிட்டது. என்றாலும், மனிதகுலம் படுமோசமான நிலைமையையே மீண்டும் மீண்டும் சந்தித்திருக்கிறது. ‘ஒரு மனுஷன் தனக்கே கேடுண்டாக வேறொரு மனுஷனை ஆளுகிறான்’ என்று சுமார் 3,000 ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு பைபிள் எழுத்தாளர் ஞானமாகவே சொன்னார். (பிரசங்கி 8:9) “தன் நடைகளை நடத்துவது நடக்கிறவனாலே ஆகிறதல்லவென்று” எரேமியா தீர்க்கதரிசி எழுதினார். (எரேமியா 10:23) அறிவியலும் தொழில்நுட்பமும் கண்ட சமீப கால சாதனைகள்கூட இந்த வார்த்தைகளில் பொதிந்துள்ள உண்மையைப் பொய்யாக்கவில்லை. இந்த வார்த்தைகளை உண்மையென்றே காலம் நிரூபித்திருக்கிறது.
நீங்கள் என்ன செய்வீர்கள்?
கடவுள் அனுமதித்திருக்கிற இந்தக் காலம், ஆட்சி செய்ய யெகோவாவுக்கு இருக்கும் உரிமை சம்பந்தமாய் சாத்தான் எழுப்பிய விவாதம் பொய்யென நிரூபித்திருக்கிறது. யெகோவா தேவன் மட்டுமே ஈடிணையற்ற சர்வலோகப் பேரரசராய் இருக்கிறார். தம்முடைய படைப்புகள்மீது ஆட்சி செய்ய அவருக்கே உரிமை இருக்கிறது, அவருடைய ஆட்சியே மிகச் சிறந்தது. கடவுளுடைய ஆட்சியின்கீழ் ஆண்டாண்டு காலமாக வாழ்ந்து வரும் பரலோக சிருஷ்டிகள் இந்த உண்மையை ஒப்புக்கொண்டு, “கர்த்தாவே, தேவரீர், மகிமையையும் கனத்தையும் வல்லமையையும் பெற்றுக்கொள்ளுகிறதற்குப் பாத்திரராயிருக்கிறீர்; நீரே சகலத்தையும் சிருஷ்டித்தீர், உம்முடைய சித்தத்தினாலே அவைகள் உண்டாயிருக்கிறவைகளும் சிருஷ்டிக்கப்பட்டவைகளுமாயிருக்கிறது” என்று சொல்கிறார்கள்.—வெளிப்படுத்துதல் 4:11.
கடவுளுடைய பேரரசுரிமை பற்றிய கேள்வியைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? உங்களை ஆளுவதற்கு கடவுளுக்குத் தகுதியிருப்பதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா? அப்படியென்றால், நீங்கள் யெகோவாவின் பேரரசதிகாரத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்படி நீங்கள் ஏற்றுக்கொண்டிருப்பதை, அவருடைய வார்த்தையாகிய பைபிளில் காணப்படும் சத்தியங்களையும் ஆலோசனைகளையும் உங்களுடைய வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் பின்பற்றுவதன்மூலம் காட்டலாம். “தேவன் அன்பாகவே இருக்கிறார்”; அந்த அன்பின் அடிப்படையிலேயே தம்முடைய படைப்புகளுக்கு சட்டங்களையும் கட்டளைகளையும் அவர் கொடுத்திருக்கிறார். (1 யோவான் 4:8) நமக்கு நன்மையான எதையும் யெகோவா நம்மில் யாருக்கும் மறைத்து வைக்கவில்லை. எனவே, “உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து, உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்” என்ற பைபிளின் அறிவுரையை உங்கள் இருதயத்தில் பதித்துக்கொள்ளுங்கள்.—நீதிமொழிகள் 3:5, 6.
[பக்கம் 7-ன் படம்]
பைபிளைப் படித்து, அதன் போதனைகளை உங்கள் வாழ்க்கையில் பின்பற்றுவதன்மூலம் கடவுளுடைய ஆட்சியை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்
[பக்கம் 4-ன் படத்திற்கான நன்றி]
© Jeroen Oerlemans/Panos Pictures