கடவுளை இதயப்பூர்வமாக நேசிக்கப் பிள்ளைகளுக்குக் கற்பியுங்கள்
இ க்காலத்தில், யெகோவா தேவனோடு நெருக்கமான பந்தத்தை வளர்த்துக்கொள்வது ஒருவருக்கு உண்மையில் சவாலான விஷயம்தான். (சங்கீதம் 16:8) தீர்க்கதரிசன வார்த்தைகளின்படி, நாம் ‘கடைசிநாட்களின் கொடிய காலங்களில்’ வாழ்கிறோம். பெரும்பாலான ஜனங்கள் ‘தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியராய்’ இருக்கிறார்கள். (2 தீமோத்தேயு 3:1-5) ஆம், இன்றைய உலகில் கடவுளை உள்ளப்பூர்வமாக நேசிக்கிறவர்களைப் பார்ப்பதே அபூர்வமாக இருக்கிறது.
ஒரு பிள்ளை தானாகவே கடவுள்மீது அன்பை வளர்த்துக்கொள்ளும் என பெற்றோர் நினைக்கக்கூடாது. பிள்ளைகள் யெகோவாவை இதயப்பூர்வமாக நேசிப்பதற்கு நாம்தான் கற்றுத்தர வேண்டும். இதை நாம் எப்படிச் செய்யலாம்?
மனம்விட்டுப் பேசுங்கள்
கடவுள்மீது ஆழமான அன்பு நம் இதயத்தில் இருந்தால்தான் நம் பிள்ளைகளின் இதயத்தில் அதை நம்மால் வளர்க்க முடியும். (லூக்கா 6:40) பின்வருமாறு சொல்வதன்மூலம் பைபிள் இதை ஆதரிக்கிறது: ‘நீ உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக. இன்று நான் உனக்குக் கட்டளையிடுகிற இந்த வார்த்தைகள் உன் இருதயத்தில் இருக்கக்கடவது. நீ அவைகளை உன் பிள்ளைகளுக்குக் கருத்தாய்ப் போதிப்பாயாக.’—உபாகமம் 6:4-7.
நம் பிள்ளைகள் இதயப்பூர்வமாக கடவுளை நேசிக்க நாம் எப்படி உதவ முடியும்? முதலில் பிள்ளையின் இதயத்தில் என்ன இருக்கிறது என்பதை நாம் அறியவேண்டும். அடுத்து, நம்முடைய இதயத்தில் என்ன இருக்கிறது என்பதை அவர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும்.
இயேசு கிறிஸ்து தம்முடைய இரண்டு சீஷர்களோடு எம்மாவு என்ற இடத்திற்குப் போய்க்கொண்டிருந்தார். அப்போது, அவர்களுடைய எதிர்பார்ப்புகளைப் பற்றியும் அவர்களது மனதை வாட்டும் விஷயங்களைப் பற்றியும் சொல்வதற்கு இயேசு முதலில் அவர்களை ஊக்கப்படுத்தினார். அவர்கள் சொல்வதைக் கொஞ்சம் நேரம் காதுகொடுத்துக் கேட்ட பிறகே வேதவாக்கியத்திலிருந்து விளக்கி அவர்களுடைய எண்ணங்களைச் சரி செய்தார். பிறகு அவர்கள் இவ்வாறு சொன்னார்கள்: ‘அவர் நம்முடனே பேசினபோது . . . நம்முடைய இருதயம் நமக்குள்ளே கொழுந்துவிட்டு எரியவில்லையா?’ மனம்விட்டுப் பேசுவதற்கு இந்த உரையாடல் ஓர் உதாரணமாகத் திகழ்கிறது. (லூக்கா 24:15-32) எனவே, நம்முடைய பிள்ளையின் இதயத்தில் இருக்கும் உணர்ச்சிகளை நம்மால் எப்படி புரிந்துகொள்ள முடியும்?
பிள்ளைகளோடு மனம்விட்டுப் பேசுவதைப்பற்றி சில பெற்றோரிடம் சமீபத்தில் கருத்து கேட்கப்பட்டது. அவர்களுடைய பிள்ளைகள் இப்போது வளர்ந்து பெரியவர்களாக இருக்கிறார்கள் அல்லது வாலிப வயதை கடந்தவர்களாக இருக்கிறார்கள்; சபையில் நல்ல முன்மாதிரிகளாகத் திகழ்கிறார்கள். உதாரணத்திற்கு, நான்கு பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கியிருக்கும் மெக்சிகோவைச் சேர்ந்த க்ளென் என்பவர் சொல்வதைக் கேளுங்கள்:a “பெற்றோரும் பிள்ளைகளும் ஒருவருக்கொருவர் மனம்விட்டுப் பேசுவதென்பது இயல்பாகவே வந்துவிடாது. நானும் என் மனைவியும் அந்தளவுக்கு முக்கியமில்லாத வேலைகளை ஓரம்கட்டிவிட்டு பிள்ளைகளுடன் அதிக நேரம் செலவழிப்போம். அவர்கள் பருவ வயதிலிருந்தபோது நாங்கள் சிலசமயம் மாலை நேரம் முழுவதும் அவர்களோடு செலவழிப்போம்; அவர்கள் என்னவெல்லாம் பேச விரும்பினார்களோ எல்லாவற்றையும் பேசுவோம். அதேபோல சாப்பாட்டு வேளையிலும் அவர்கள் பேசுவதைக் கவனமாக கேட்போம். அவர்களுக்கு என்னென்ன பிரச்சினைகள் இருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டு அதைப் பக்குவமாக சரிசெய்வோம். நாங்கள் அவர்களைச் சரிசெய்கிறோம் என்பதே பெரும்பாலும் அவர்களுக்குத் தெரியாது.”
நம் இதயத்தில் இருப்பதைச் சொல்வதும் மனம்விட்டுப் பேசுவதில் அடங்கும். “நல்ல மனுஷன் தன் இருதயமாகிய நல்ல பொக்கிஷத்திலிருந்து நல்லதை எடுத்துக் காட்டுகிறான்; . . . இருதயத்தின் நிறைவினால் அவனவன் வாய் பேசும்” என்று இயேசு சொன்னார். (லூக்கா 6:45) டோஷீகீயின் மூன்று பிள்ளைகள் ஜப்பானில் முழுநேர ஊழியர்களாக சேவை செய்கிறார்கள்; அவர் இவ்வாறு சொல்கிறார்: “நான் யெகோவாவை விசுவாசிப்பதற்கான காரணத்தை, அதாவது கடவுள் இருக்கிறார் என்பதை நான் ஏன் ஆணித்தரமாக நம்புகிறேன் என்பதற்கான காரணத்தை என் பிள்ளைகளிடம் பலமுறை சொல்லியிருக்கிறேன். பைபிளில் இருப்பதெல்லாம் உண்மை, அதுவே வாழ்க்கைக்கு மிகச் சிறந்த வழிகாட்டி என்பதுபோன்ற விஷயங்களை என்னுடைய சொந்த வாழ்க்கையிலிருந்து நான் எப்படிக் கற்றுக்கொண்டேன் என்பதையும் சொல்லியிருக்கிறேன்.” மெக்சிகோவில் வசிக்கும் சின்டீ இவ்வாறு சொல்கிறார்: “என் கணவர் எப்போதும் பிள்ளைகளுடன் சேர்ந்திருந்தே ஜெபம் செய்வார். அவர் கடவுளிடம் மனம்விட்டுப் பேசுவதை பிள்ளைகள் கேட்டபோது யெகோவா ஒரு கற்பனையான நபர் அல்ல என்பதைப் புரிந்துகொண்டார்கள்.”
நம் முன்மாதிரியின் பலமான செல்வாக்கு
வார்த்தைகளைவிட நம்முடைய வாழ்க்கை முறைதான் பிள்ளைகள்மீது பலமான செல்வாக்கு செலுத்தும். ஏனெனில், நாம் கடவுளை எந்தளவுக்கு நேசிக்கிறோம் என்பதை அது நம் பிள்ளைகளுக்கு காட்டும். இயேசு கிறிஸ்து, யெகோவாவுக்கு கீழ்ப்படிந்த விதத்தைப் பார்த்தபோது கடவுள்மீது அவருக்கிருந்த ஆழமான அன்பை ஜனங்கள் புரிந்துகொண்டார்கள். “நான் பிதாவில் அன்பாயிருக்கிறேன் என்றும், பிதா எனக்குக் கட்டளையிட்டபடியே செய்கிறேன் என்றும், உலகம் அறியும்படிக்கு இப்படி நடக்கும்” என்று இயேசு சொன்னார்.—யோவான் 14:31.
வேல்ஸ் என்ற இடத்தில் வசிக்கும் யெகோவாவின் சாட்சிகளில் ஒருவரான கேரெத் சொல்வதாவது: “நமக்கு யெகோவாமீது அன்பு இருக்கிறது என்பதையும் அவர் சொல்கிற விதத்திலேயே எல்லாவற்றையும் செய்ய முயலுகிறோம் என்பதையும் நம் பிள்ளைகள் பார்க்கவேண்டும். உதாரணமாக, தவறு செய்கையில் அதை ஒத்துக்கொள்ள வேண்டுமென கடவுள் சொல்வதற்கிசைவாக நான் நடப்பதை என் பிள்ளைகள் பார்க்கிறார்கள். இப்போது அவர்களும் அப்படியே செய்ய முயலுகிறார்கள்.”
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கிரெஃக் என்பவர் இவ்வாறு சொல்கிறார்: “சத்தியத்திற்குத்தான் எங்கள் வாழ்க்கையில் முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்பதை எங்கள் பிள்ளைகள் தெரிந்துகொள்ள வேண்டுமென விரும்பினோம். வேலை அல்லது பொழுதுபோக்கு சம்பந்தமாக தீர்மானிக்கையில் அது எங்களுடைய கிறிஸ்தவ பொறுப்புகளை எப்படி பாதிக்கும் என்பதைத்தான் முதலில் யோசிப்போம். இப்போது எங்களுடைய 19 வயது மகளும் துணை பயனியர் ஊழியத்தில் இதேபோன்ற மனநிலையைக் காட்டுவதைப் பார்க்கும்போது பூரித்துப்போகிறோம்.”
கடவுளைப் புரிந்துகொள்ள நம் பிள்ளைகளுக்கு உதவுதல்
ஒருவரைப்பற்றி புரிந்துகொள்ளாமல் அவரை நேசிக்கவோ அவர்மீது நம்பிக்கை வைக்கவோ நம்மால் முடியாது. பிலிப்பியிலிருந்த கிறிஸ்தவர்கள் யெகோவாமீது வைத்திருக்கும் அன்பில் மேன்மேலும் வளரவேண்டும் என்று அப்போஸ்தலன் பவுல் விரும்பினார். எனவே, அவர் இவ்வாறு எழுதினார்: “உங்கள் அன்பானது அறிவிலும் எல்லா உணர்விலும் இன்னும் அதிகமதிகமாய்ப் பெருக . . . வேண்டுதல் செய்கிறேன்.” (பிலிப்பியர் 1:9, 11) நான்கு பிள்ளைகளின் தகப்பனான ஃபால்கோனெரியோ பெரு நாட்டில் வசிக்கிறார். அவர் இவ்வாறு சொல்கிறார்: “என் பிள்ளைகளோடு சேர்ந்து நான் பைபிளை தவறாமல் வாசித்து, ஆழ்ந்து படிக்கும்போது அவர்களுடைய விசுவாசம் பலப்படுவதைப் பார்க்கிறேன். ஆனால் அதைச் செய்ய நான் சில சமயம் தவறும்போது கடவுள்மீது அவர்களுக்கிருக்கும் அன்பு கொஞ்சம் கொஞ்சமாக குறைவதையும் பார்க்கிறேன்.” ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஃகாரீ சொல்வதாவது: “என் பிள்ளைகளுக்கு, பைபிள் தீர்க்கதரிசனங்கள் துல்லியமாக நிறைவேறி வருவதை ஆதாரங்களுடன் அடிக்கடி விளக்குகிறேன். அதோடு, பைபிள் நியமங்களுக்கு இசைய வாழ்வதால் வரும் நன்மைகளைப் பற்றியும் சொல்கிறேன். குடும்பப் படிப்பை தவறாமல் நடத்துவது அவர்களுடைய விசுவாசத்தை வளர்க்க உறுதுணையாக இருக்கிறது.”
‘ரிலாக்ஸாகவும்’ அதே சமயத்தில் மரியாதையாகவும் இருக்கிற சூழலில் கற்றுக்கொள்வது பிள்ளைகளுக்கு ஆனந்தமாக இருக்கும். அப்போதுதான் கடவுளைப் பற்றிய அறிவும் பிள்ளையின் இதயத்தை எட்டும். (யாக்கோபு 3:18) பிரிட்டனில் வசிக்கும் ஷான் மற்றும் பாலீன் தம்பதியருக்கு நான்கு பிள்ளைகள். அவர்கள் இவ்வாறு சொல்கிறார்கள்: “குடும்பப் படிப்பு நடத்தும்போது பிள்ளைகள் குறும்பு செய்தால்கூட அவர்களைத் திட்டாமலிருக்க முயற்சிப்போம். குடும்பப் படிப்பை ஒரேமாதிரி நடத்த மாட்டோம். சில சமயம் பிள்ளைகளையே ஒரு தலைப்பைத் தேர்ந்தெடுக்கும்படி சொல்வோம். யெகோவாவின் அமைப்பு வெளியிட்டிருக்கும் வீடியோக்களைப் போட்டு பார்ப்போம். சில சமயம் அந்த வீடியோவில் ஒரு பகுதியை மறுபடியும் போட்டுப் பார்ப்போம் அல்லது சிறிது நேரம் நிறுத்திவிட்டு பார்த்த விஷயங்களைப்பற்றி கலந்து பேசுவோம்.” பிரிட்டனில் வசிக்கும் கிம் என்ற தாய் இவ்வாறு சொல்கிறார்: “குடும்பப் படிப்புக்காக நான் கவனமாக தயாரிப்பேன். அதனால் பிள்ளைகளை யோசிக்க வைக்கும் கேள்விகளை என்னால் கேட்க முடிகிறது. இதனால் குடும்பப் படிப்பு சுவாரஸ்யமாகவும் இருக்கிறது, ஜாலியாகவும் இருக்கிறது.”
நண்பர்களைத் தேர்ந்தெடுத்தல்
யெகோவாவின் நண்பர்களாக இருக்கும் ஆட்களோடு நம் பிள்ளைகள் பழகினால், கடவுள்மீது அன்பும் உண்மை வணக்கத்தின்மீது மதிப்பும் அவர்களிடம் அதிகரிக்கலாம். விளையாடுவதற்கும் நல்ல விஷயங்களைப் பேசுவதற்கும் நம் பிள்ளைகளுக்கு நண்பர்கள் தேவை; அத்தகைய நண்பர்களுடன் பழகுவதற்கான சந்தர்ப்பங்களை நாம் ஏற்படுத்தி தர வேண்டும். இதற்கு முயற்சி தேவைப்படலாம். ஆனால் அத்தகைய முயற்சிக்கு முத்தான பலன்கள் நிச்சயம்! அதுமட்டுமல்ல, யெகோவாவின் சாட்சிகளில் முழுநேர ஊழியத்திற்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தவர்களைச் சந்திப்பதற்கான வாய்ப்புகளை நம் பிள்ளைகளுக்கு ஏற்படுத்தித் தருவதும் பிரயோஜனமானது. கடவுளுக்கு பக்திவைராக்கியமாக ஊழியம் செய்கிறவர்களோடு பழகியதால்தான் அநேகர் முழுநேர ஊழியத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். மிஷனரியாகச் சேவை செய்யும் ஒரு சகோதரி இவ்வாறு சொல்கிறார்: “என் பெற்றோர் சாப்பாட்டுக்காக பயனியர்களை அடிக்கடி வீட்டுக்கு அழைப்பார்கள். ஊழியத்தில் அவர்கள் பெறும் சந்தோஷம் பளிச்சென்று தெரியும். அவர்களைப் போலவே கடவுளை சந்தோஷமாக சேவிக்கவேண்டும் என்ற ஆசை என்னையும் தொற்றிக்கொண்டது.”
நம் பிள்ளைகள் நல்ல நண்பர்களோடு பழகும்போது நல்லதைக் கற்றுக்கொள்வதுபோல கெட்ட நண்பர்களோடு பழகும்போது கெட்டதைக் கற்றுக்கொள்கிறார்கள். அதனால்தான், கெட்ட சகவாசத்தால் வரும் அபாயங்கள் பெற்றோரின் திறமைகளுக்குச் சவால்விடுகின்றன. (1 கொரிந்தியர் 15:33) யெகோவாவை நேசிக்காதவர்களோடு அல்லது அவரைப்பற்றி தெரியாதவர்களோடு சேர்ந்து பொழுது போக்குவதை எப்படி தவிர்க்கலாம் என்று இளைஞர்களுக்குச் சொல்லிக்கொடுப்பது ஒரு கலை. (நீதிமொழிகள் 13:20) முன்னர் குறிப்பிடப்பட்ட ஷான் இவ்வாறு சொல்கிறார்: “உங்களுடன் படிக்கும் பிள்ளைகளோடு இனிமையாகப் பழகுங்கள், ஆனால் அதையெல்லாம் அங்கேயே, அதாவது பள்ளியிலேயே நிறுத்திக் கொள்ளுங்கள் என்று எங்கள் பிள்ளைகளிடம் சொல்வோம். எங்கள் பிள்ளைகள் பாடதிட்டத்தைச் சாராத பாட்டு, டான்ஸ் போன்ற நிகழ்ச்சிகளிலோ விளையாட்டுப் போட்டிகளிலோ ஏன் பங்குகொள்ளக்கூடாது என்பதைப் புரிந்துகொண்டார்கள்.”
பயிற்றுவிப்பின் முக்கியத்துவம்
தங்களுடைய நம்பிக்கைகளை மற்றவர்களிடம் தெரிவிப்பதற்கு நாம் பிள்ளைகளுக்கு பயிற்சியளிக்க வேண்டும்; அவ்வாறு செய்யும்போது கடவுள்மீது தங்களுக்கிருக்கும் அன்பைத் தயங்காமல் வெளிப்படுத்த நாம் பிள்ளைகளுக்கு உதவுகிறோம். அமெரிக்காவில் வாழும் மார்க் என்பவர் சொல்கிறார்: “ஊழியத்திற்குப் போகும்போது மட்டும்தான் நம்முடைய நம்பிக்கைகளைப்பற்றி பேசவேண்டும் என்பதில்லை, எல்லா சமயத்திலும் அவ்வாறு பேசுவதில் இன்பம் காண முடியும் என்பதை எங்கள் மகன்கள் உணர வேண்டுமென்று விரும்பினோம். எனவே, நாங்கள் பொழுதுபோக்குவதற்காக எங்காவது வெளியே செல்லும்போது அதாவது, பூங்கா, கடற்கரை அல்லது காட்டுப்பகுதி போன்ற இடங்களுக்குச் செல்லும்போது பைபிள்களையும் பிரசுரங்களையும் கையோடு எடுத்துச்செல்வோம். அங்கே சந்திக்கும் ஜனங்களிடம் எங்களுடைய நம்பிக்கைகளைப்பற்றி பேசுவோம். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் எங்களோடு சேர்ந்து எங்கள் மகன்களும் குஷியாக சாட்சி கொடுப்பார்கள். நாங்கள் மற்றவர்களிடம் கலந்துபேசும்போது அவர்களும் தங்களுடைய நம்பிக்கைகளைப்பற்றி பேசுவார்கள்.”
கடவுளை இதயப்பூர்வமாக நேசிக்க வயது முதிர்ந்த அப்போஸ்தலனாகிய யோவான் அநேகருக்கு உதவி செய்தார். அவர்களைப்பற்றி சொல்லும்போது அவர் இவ்வாறு எழுதினார்: “என் [ஆன்மீக] பிள்ளைகள் சத்தியத்திலே நடக்கிறார்கள் என்று நான் கேள்விப்படுகிற சந்தோஷத்திலும் அதிகமான சந்தோஷம் எனக்கு இல்லை.” (3 யோவான் 4) கடவுளை இதயப்பூர்வமாக நேசிக்க நம் பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுத்தால் நாமும் இவரைப்போலவே சந்தோஷமடைவோம்.
[அடிக்குறிப்பு]
a சில பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.
[பக்கம் 9-ன் படங்கள்]
நம் நம்பிக்கைகளைப்பற்றி மனம்விட்டுப் பேசுவது தானாகவே வந்துவிடாது
[பக்கம் 10-ன் படம்]
கடவுள்மீது இருக்கிற அன்பை வெளிகாட்ட உங்கள் பிள்ளைகளுக்குப் பயிற்சி அளியுங்கள்
[படத்திற்கான நன்றி]
Courtesy of Green Chimneys Farm