நியாயமற்ற உலகம்
நியாயமற்ற ஓர் உலகில் நாம் வாழ்கிறோம் என்பதை நீங்கள் ஒத்துக்கொள்கிறீர்களா? நிச்சயம் ஒத்துக்கொள்வீர்கள் என்பதில் சந்தேகமில்லை. உண்மை என்னவென்றால், நமக்கு எவ்வளவுதான் திறமைகள் இருந்தாலும் நாம் எவ்வளவுதான் ஞானமாக திட்டங்கள் போட்டாலும், நமக்கு செல்வமோ வெற்றியோ அல்லது உணவோகூட கிடைக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. “பிழைப்புக்கு ஞானமுள்ளவர்களின் ஞானமும் போதாது; ஐசுவரியம் அடைகிறதற்குப் புத்திமான்களின் புத்தியும் போதாது; தயவு அடைகிறதற்கு வித்துவான்களின் அறிவும் போதாது” என்று ஞானி சாலொமோன் சொன்னபடியே நடக்கிறது. ஏன்? ஏனென்றால் “நேரமும் எதிர்பாரா சம்பவங்களும் எல்லாருக்கும் நேரிடுகின்றன” என்று அவர் கூறினார்.—பிரசங்கி 9:11; NW.
“திடீரென கெட்ட காலம் வரும்போது”
ஆம், தவறான இடத்தில் தவறான சமயத்தில் இருக்கும்போது, நம்முடைய திட்டங்களையும் ஆசைக்கனவுகளையும் “நேரமும் எதிர்பாரா சம்பவங்களும்” தவிடுபொடியாக்கி விடுகின்றன. சாலொமோன் சொன்ன விதமாக, ‘திடீரென கெட்ட காலம் வரும்போது, வலையில் சிக்கிய மீன் போலவும் கண்ணியில் அகப்பட்ட பறவை போலவும்’ இருக்கிறோம். (பிரசங்கி 9:12, தி நியூ இங்லிஷ் பைபிள்) உதாரணமாக, தங்களுடைய சாப்பாட்டுக்காக கோடிக்கணக்கான மக்கள் நெற்றி வேர்வை சிந்த நிலத்தை உழுது பாடுபட்டு பயிர் செய்கிறார்கள். ஆனால் அவர்களுடைய “கெட்ட காலம்,” மழை பொய்த்துப்போய் பயிர்கள் வாடி வதங்கிவிடுகின்றன.
மற்றவர்களோ உதவிக்கரம் நீட்டுகிறார்கள், ஆனால் ‘கெட்ட காலத்திற்கு’ பலியானவர்களுக்கு, உலக சமுதாயத்தினர் அளிக்கிற உதவிகூட பெரும்பாலும் நியாயமற்றதாகவே தோன்றுகிறது. உதாரணமாக, பஞ்சத்தை முறியடிக்க சமீப ஆண்டில், “வளைகுடா போருக்கு ஒதுக்கப்பட்ட பணத்தில் ஐந்தில் ஒரு பங்கைத்தான் முழு [ஆப்பிரிக்க] கண்டத்தில் இருப்பவர்கள் உதவியாக பெற்றார்கள்” என முன்னணி நிவாரண ஏஜென்ஸி ஒன்று கூறியது. முழு கண்டத்தையும் பஞ்சம் பாதித்தபோது, மக்களின் வேதனையையும் துன்பத்தையும் தணிப்பதற்கு பதிலாக, அனைத்து வளங்களையும் கொண்ட நாடுகள் ஐந்து மடங்கு பணத்தை போருக்காக செலவழித்தது நியாயமா? அநேகர் பொருளாதார செழுமையை அனுபவிக்கும்போது, பூமியில் வாழ்பவர்களில் நான்கில் ஒருவர் கொடிய பஞ்சத்தில் வாழ்வது நியாயமா? ஒவ்வொரு வருஷமும் லட்சோபலட்சம் பிள்ளைகள் வியாதிகளால் இறப்பது, அதுவும் தடுக்கக்கூடிய வியாதிகளால் இறப்பது நியாயமா? நிச்சயமாகவே இல்லை!
உண்மையில், “திடீரென கெட்ட காலம் வரும்போது,” அதில் “நேரமும் எதிர்பாரா சம்பவங்களும்” மாத்திரமே உட்பட்டிருப்பதில்லை. நம்முடைய சக்திக்கு அப்பாற்பட்ட வலிமைமிக்க சக்திகள் நம் வாழ்க்கையை ஆட்டிப்படைக்கின்றன, நமக்கு நேரிடும் காரியங்களிலும் ஆதிக்கம் செலுத்துகின்றன. அலனியாவில் பெஸ்லான் என்ற இடத்தில் நடந்த சம்பவம் இதையே காட்டுகிறது. 2004 இலையுதிர் காலத்தில், பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படைகளுக்கும் இடையே நடைபெற்ற கொடூர சண்டையில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டார்கள், அவர்களில் பெரும்பாலோர் முதல் நாள் பள்ளிக்குச் சென்ற சிறுபிள்ளைகள். அந்தச் சோக சம்பவத்தில் சிலர் இறந்துபோனதும் சிலர் உயிர்தப்பியதும் பெரும்பாலும் எதேச்சையாக நடந்தவை—ஆனால் மனிதருக்குள் ஏற்பட்ட சண்டையே அந்தக் ‘கெட்ட காலத்திற்கு’ மூலக் காரணம்.
எப்போதும் இப்படித்தான் இருக்குமா?
அநீதிகளைப் பற்றி பேசும்போது சிலர் இப்படி சொல்கிறார்கள்: “வாழ்க்கையே அப்படித்தான். என்றைக்கும் அப்படித்தான் இருந்திருக்குது, இனியும் அப்படித்தான் இருக்கப்போகுது.” பலசாலிகள் எப்போதும் பலவீனரை ஒடுக்குவார்கள், பணக்காரர்கள் எப்போதும் ஏழைகளை சுரண்டிப் பிழைப்பார்கள் என்பதே அவர்களுடைய கருத்து. இதோடு, “நேரமும் எதிர்பாரா சம்பவங்களும்” சேர்ந்து, பூமியில் நாம் வாழும் காலமெல்லாம் நம்மை பாதிக்குமென அவர்கள் சொல்கிறார்கள்.
வாழ்க்கை இப்படித்தான் இருக்க வேண்டுமா? திறமைகளை ஞானமாக பயன்படுத்தி கஷ்டப்பட்டு உழைப்பவர்களுக்கு நியாயமான பலன் கிடைக்குமா? நியாயமற்ற உலகை நிரந்தரமாக மாற்றுவதற்கு யாராவது ஏதாவது செய்ய முடியுமா? இந்த விஷயத்தைப் பற்றி அடுத்தக் கட்டுரை என்ன சொல்கிறது என்பதைக் கவனியுங்கள்.
[பக்கம் 2-ன் படத்திற்கான நன்றி]
அட்டை: குழந்தையை வைத்திருக்கும் மனிதர்: UN PHOTO 148426/McCurry/Stockbower
[பக்கம் 3-ன் படத்திற்கான நன்றி]
MAXIM MARMUR/AFP/Getty Images