“காற்றுள்ள போதே தூற்றிக்கொள்”
அப்பா வீட்டில்தான் இருந்தார்; ஆனால் புற்று நோயால் மரணப்படுக்கையில் இருந்தார். அவருடைய மகன் தச்சு பட்டறையில் அப்பாவின் கருவிகளை சுத்தப்படுத்திக் கொண்டிருந்தான். அவ்வாறு சுத்தப்படுத்துகையில், அப்பாவின் கைவண்ணத்தால் உருவான அற்புத படைப்புகளைப் பற்றி சிந்தித்துப்பார்த்தான். வீட்டிற்கு அருகிலேயே அந்தப் பட்டறை இருந்தபோதிலும், தன்னுடைய அப்பா இனி ஒருபோதும் அங்கு வரமாட்டார், திறமையுடன் பயன்படுத்திய அந்தக் கருவிகளை இனி ஒருபோதும் தொடமாட்டார் என்பதை அவன் அறிந்திருந்தான். அவருடைய சகாப்தம் முடிந்துவிட்டது.
பிரசங்கி 9:10-ல் உள்ள வசனத்தை அந்த மகன் யோசித்துப்பார்த்தான்: “செய்யும்படி உன் கைக்கு நேரிடுகிறது எதுவோ, அதை உன் பெலத்தோடே செய்; நீ போகிற பாதாளத்திலே [பிரேதக்குழியிலே] செய்கையும் வித்தையும் அறிவும் ஞானமும் இல்லையே.” அந்த வசனம் அவனுக்கு மனப்பாடமாக தெரியும். மரணம் செயலற்ற ஒரு நிலை என்ற பைபிள் சத்தியத்தை மற்றவர்களுக்கு கற்பிக்கையில், அதை பல தடவை அவன் பயன்படுத்தியிருந்தான். இப்பொழுது சாலொமோனின் வலிமைமிக்க விவாதம் அவன் இதயத்தை தாக்கியது. நம்மால் முடிந்தபோதே நம்முடைய வாழ்க்கையை முழுமையாக வாழவும் நம்முடைய நாட்களை அனுபவிக்கவும் வேண்டும்; ஏனெனில் இனிமேலும் நாம் அவ்விதமாக செய்ய முடியாத காலம் வரும்.
வாழ்வை அனுபவியுங்கள்
பிரசங்கி புத்தகம் முழுவதிலுமே, வாழ்வில் மகிழ்ச்சியை கண்டடையும்படிதான் தன்னுடைய வாசகர்களுக்கு ஞானியாகிய சாலொமோன் புத்திமதி கூறுகிறார். உதாரணமாக, 3-ம் அதிகாரம் குறிப்பிடுகிறது: “மகிழ்ச்சியாயிருப்பதும், உயிரோடிருக்கையில் நன்மைசெய்வதுமேயல்லாமல், வேறொரு நன்மையும் மனுஷனுக்கு இல்லையென்று அறிந்தேன். அன்றியும் மனுஷர் யாவரும் புசித்துக் குடித்துத் தங்கள் சகலப் பிரயாசத்தின் பலனையும் அநுபவிப்பது தேவனுடைய அநுக்கிரகம்.”—பிரசங்கி 3:12, 13.
இந்தக் கருத்தை திரும்ப சொல்வதற்கு சாலொமோன் கடவுளால் ஏவப்பட்டார்: “இதோ, உயிரோடிருக்கும்படி தேவன் அருளிச்செய்த நாளெல்லாம் மனுஷன் புசித்துக் குடித்து, சூரியனுக்குக் கீழே தான் படும் பிரயாசம் அனைத்தின் பலனையும் அநுபவிப்பதே நலமும் உத்தமுமான காரியமென்று நான் கண்டேன், இதுவே அவன் பங்கு.”—பிரசங்கி 5:18.
இது போலவே, இளைஞர்களுக்கும் அவர் இவ்வாறு புத்திமதி கூறுகிறார்: “வாலிபனே! உன் இளமையிலே சந்தோஷப்படு, உன் வாலிப நாட்களிலே உன் இருதயம் உன்னைப் பூரிப்பாக்கட்டும்; உன் நெஞ்சின் வழிகளிலும், உன் கண்ணின் காட்சிகளிலும் நட.” (பிரசங்கி 11:9அ) இளமையின் பலத்தையும் துடிப்பையும் முழுமையாக அனுபவிப்பது எத்தனை சிறந்தது!—நீதிமொழிகள் 20:29.
“உன் சிருஷ்டிகரை நினை”
நம்முடைய இருதயத்திற்கும் கண்களுக்கும் கவர்ச்சியாக தோன்றும் அனைத்தையும் நாடுவது சரியே என்று சாலொமோன் அர்த்தப்படுத்தவில்லை. (1 யோவான் 2:16-ஐ ஒப்பிடுக.) அவர் அடுத்து எழுதும் காரியத்திலிருந்து இது தெளிவாக தெரிகிறது: “ஆனாலும் இவையெல்லாவற்றினிமித்தமும் [உன் விருப்பங்களைப் பூர்த்திசெய்யும் காரியங்கள்] தேவன் உன்னை நியாயத்திலே கொண்டுவந்து நிறுத்துவார் என்று அறி.” (பிரசங்கி 11:9ஆ) நாம் எந்த வயதினராக இருந்தாலும்சரி, நம்முடைய வாழ்க்கையை எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதை கடவுள் கவனிக்கிறார், அதற்கேற்ப நம்மை நியாயந்தீர்ப்பார் என்பதை நாம் மனதில் வைக்க வேண்டும்.
நமக்கு திருப்தியளிக்கும் வாழ்க்கையை வாழலாம், வயதானபிறகு தேவ பக்தியை நாடலாம் என்று வாதிடுவது எவ்வளவு முட்டாள்தனம்! எந்தச் சமயத்திலும் நாம் மரணத்தை சந்திக்கலாம். அப்படி நேரிடாவிட்டாலும்கூட, வயதான காலத்தில் கடவுளை சேவிப்பது எளிதாக இருக்காது. இந்த உண்மையை உணர்ந்து சாலொமோன் எழுதுகிறார்: “நீ உன் வாலிபப்பிராயத்திலே உன் சிருஷ்டிகரை நினை, தீங்குநாட்கள் வராததற்குமுன்னும், எனக்குப் பிரியமானவைகளல்ல என்று நீ சொல்லும் வருஷங்கள் சேராததற்குமுன்னும் [நினை].”—பிரசங்கி 12:1.
வயதாக ஆக மற்ற தொல்லைகளும் சேர்ந்து வருகின்றன. வயதான காலத்தில் வரும் விளைவுகளை அடையாள அர்த்தத்தில் சாலொமோன் அடுத்து வர்ணிக்கிறார். கைகளும் புயங்களும் நடுங்குகின்றன, கால்கள் தளர்ச்சியடைகின்றன, பற்கள் பல விழுந்துவிடுகின்றன. முடி நரைத்து, உதிர்ந்தும்விடுகிறது. சரியான உறக்கம் வருவதில்லை, பறவையின் ஒலிக்கும்கூட விழித்துக்கொள்கிறார். பார்வை, கேட்டல், தொடுதல், முகர்தல், சுவை ஆகிய புலன் உணர்வுகள் மங்கிவிடுகின்றன. பலவீனமடைந்த சரீரம் தடுமாற்றத்திற்கும் பொது இடங்களில் வேறுசில ‘பயத்திற்கும்’ வழிநடத்துகிறது. கடைசியில் அந்த ஆள் இறந்துவிடுகிறார்.—பிரசங்கி 12:2-7.
தங்கள் இளமைக்காலத்தில் “சிருஷ்டிகரை நினை”க்கத் தவறியவர்களுக்கு வயோதிபம் அதிக துயரம் நிறைந்ததாகிவிடுகிறது. அவன் அல்லது அவள் தன் வாழ்க்கையை வீணாக்கியதால், தன்னுடைய பிற்காலத்தில் அவருக்கு ‘எந்தச் சந்தோஷமும் இல்லை.’ தேவ பக்தியற்ற வாழ்க்கைப் பாணியும்கூட வயோதிபத்தின் பிரச்சினைகளையும் வேதனைகளையும் கூட்டலாம். (நீதிமொழிகள் 5:3-11) வருத்தகரமாக, இப்படிப்பட்டவர்களின் எதிர்பார்ப்பு கல்லறையைவிட்டால் வேறு எதுவுமில்லை.
முதுமையில் சந்தோஷப்படுதல்
வாழ்க்கையை முதியோரால் அனுபவிக்க முடியாது என்பதை இது அர்த்தப்படுத்துகிறதில்லை. பைபிளில் ‘நீடித்த நாட்களும், தீர்க்காயுசும்கூட’ கடவுளுடைய ஆசீர்வாதத்துடன் தொடர்புபடுத்தப்படுகின்றன. (நீதிமொழிகள் 3:1, 2) யெகோவா தம்முடைய நண்பனாகிய ஆபிரகாமிடம் இவ்வாறு சொன்னார்: “நீ . . . நல்ல முதிர்வயதிலே அடக்கம்பண்ணப்படுவாய்.” (ஆதியாகமம் 15:15) வயோதிபத்தினால் வரும் அசௌகரியங்களின் மத்தியிலும், ஆபிரகாம் தன்னுடைய பிற்பட்ட ஆண்டுகளில் சமாதானத்தையும் அமைதியையும் கண்டடைந்தார். ஏனென்றால் யெகோவாவுக்கு ஒப்புக்கொடுக்கப்பட்ட வாழ்வை திருப்தியுடன் அவரால் நினைத்துப்பார்க்க முடிந்தது. ‘உண்மையான அஸ்திபாரங்களுள்ள நகரமாகிய’ கடவுளுடைய ராஜ்யத்தையும் விசுவாசத்தோடு எதிர்நோக்கியிருந்தார். (எபிரெயர் 11:10, NW) இவ்விதமாய், ‘முதிர்ந்த பூரண ஆயுசில்’ இறந்தார்.—ஆதியாகமம் 25:8.
ஆகையால், சாலொமோன் இவ்வாறு புத்திமதி கூறினார்: ‘மனுஷன் அநேக வருஷம் ஜீவித்தாலும், அவற்றிலெல்லாம் அவன் மகிழ்ச்சியாயிருக்கட்டும்.’ (பிரசங்கி 11:8, NW) நாம் இளைஞராக இருந்தாலும்சரி முதியோராக இருந்தாலும்சரி, உண்மையான சந்தோஷம் கடவுளுடன் கொண்டுள்ள நம்முடைய உறவோடு சம்பந்தப்பட்டுள்ளது.
அந்த இளைஞன் தன்னுடைய அப்பாவின் கருவிகளை சுத்தப்படுத்தி முடித்தபோது, இந்த விஷயங்களை எல்லாம் சிந்தித்துப்பார்த்தான். வாழ்க்கையை முழுமையாக அனுபவிக்க முயன்று, ஆனால் சிருஷ்டிகரோடு எந்த உறவுமில்லாததால் எந்த மகிழ்ச்சியையும் காணாத அவனுக்குத் தெரிந்த எல்லா ஆட்களையும் பற்றி நினைத்துப்பார்த்தான். வாழ்க்கையில் சந்தோஷப்படும்படி உற்சாகப்படுத்திய பின்பு, சாலொமோன் பின்வரும் வார்த்தைகளில் இரத்தினச் சுருக்கமாய் விஷயங்களை உரைத்தது எவ்வளவு பொருத்தமாக தோன்றியது: “காரியத்தின் கடைத்தொகையைக் கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே”!—பிரசங்கி 12:13.