யெகோவாவின் இருதயத்தை சந்தோஷப்படுத்தும் வாலிபர்கள்
“என்னை நிந்திக்கிறவனுக்கு நான் உத்தரவு கொடுக்கத்தக்கதாக, நீ ஞானவானாகி என் இருதயத்தைச் சந்தோஷப்படுத்தும்.”—நீதிமொழிகள் 27:11
நீங்கள் அதை உணர்ந்தாலும் உணராவிட்டாலும் நீங்கள் உங்களுடைய வாழ்க்கையை எவ்விதமாக வாழ்கிறீர்கள் என்பது ஒரு பாதிப்பை உண்டுபண்ணுவதாக இருக்கிறது. உதாரணமாக அது உங்களுடைய பெற்றோரைபாதிக்கிறது. “ஞானமுள்ள மகன் தகப்பனைச் சந்தோஷப்படுத்துகிறான்” என்பதாக பைபிள் விளக்குகிறது. (நீதிமொழிகள் 10:1 ;21:24, 25) ஆனால் இன்னும் அதிக முக்கியமாக, நீங்கள் உங்களுடைய வாழ்க்கையை எவ்விதமாக வாழ்கிறீர்கள் என்பது, நம்முடைய சிருஷ்டிகராகிய யெகோவாவை சந்தோஷப்படுத்தவோ, துக்கப்படுத்தவோ கூடும். “என் மகனே என்னை நிந்திக்கிறவனுக்கு நான் உத்தரவு கொடுக்கத்தக்கதாக, நீ ஞானவானாகி என் இருதயத்தைச் சந்தோஷப்படுத்து” என்பதாக யெகோவா நமக்கு புத்தி சொல்லுகிறார்.—27:11
2. நிச்சயமாகவே, யெகோவாவை நிந்திப்பது பிசாசாகிய சாத்தானாக இருக்கிறான். ஏதேன் தோட்டத்தில் சாத்தான் இன்றியமையாத ஒரு பிரச்னையை எழுப்பினான். இது கடவுளிடமிருந்து ஒரு பதிலை கேட்பதாக இருந்தது. பிசாசினால் ஏவாளையும் பின்னர் ஆதாமையும், வெளிப்படையாகவே சுலபமாக கடவுளுடைய கட்டளையை மீறும்படியாக செய்துவிட முடிந்தபோது, அவன் யெகோவாவை சவாலுக்கு அழைத்தான் என்பதற்கு ஆதாரம் இருக்கிறது. உண்மையில் சாத்தான் பின்வருமாறு உறுதியாகச் சொன்னான்: ‘எனக்கு ஒரு வாய்ப்பை மட்டும் கொடுங்கள். உம்மை சேவிப்பதிலிருந்து எவரையும் என்னால் விலகிப் போய்விட செய்திடமுடியும்’. (யோபு 1:6-12) ஆகவே, சாத்தானின் சவாலுக்கு பதிலளிக்கும் பொருட்டு தம்முடைய மகன் “ஒரு உத்தரவை“ தமக்கு கொடுக்கும்படியாக யெகோவா, மேலே பதிவுசெய்யப்பட்டுள்ள இருதயத்துக்கு அனலூட்டும் இந்த வேண்டுகோளை விடுத்தார்.
3. என்றபோதிலும், “என் மகனே” என்பதாக அழைத்து, குறிப்பாக யாரை கருத்தில் கொண்டு இந்த வேண்டுகோளை விடுத்தார்? இயேசு கிறிஸ்து அவருடைய ஒரே பேரான குமாரனாக இருப்பதால் ஒப்பற்ற விதத்தில் அவர் கடவுளுடைய குமாரனாக இருக்கிறார். (யோவான் 1:14) மேலுமாக தன்னுடைய சிருஷ்டிகருக்கு ஏமாற்றத்தைக் கொடுத்த ஆதாமை தவிர இயேசுவே பூமியில் நடமாடிய ஒரே பரிபூரண மனிதனாக இருந்தார். ஆகவே கடவுளிடம் உண்மைத் தன்மையை காத்துக்கொள்ள முடியும் என்பதை முழுமையான கருத்தில் நிரூபிக்கக்கூடிய ஒரே மனிதனாக அவர் இருந்தார். (1 கொரிந்தியர் 15:45) ஆகவே யெகோவாவின் வேண்டுகோள் குறிப்பாக இயேசுவுக்கு பொருத்தமாயிருக்கிறது. இயேசு தம்முடைய தகப்பனை ஏமாற்றிவிடவில்லை. சோதனையின் கீழ் மனிதர்கள் அவரை உண்மையுடன் சேவிக்க மாட்டார்கள் என்ற சாத்தானின் தற்பெருமையான சவாலுக்கு இயேசு, தம்முடைய உண்மையுள்ள வாழ்க்கைப் போக்கின் மூலமாக கடவுளுக்கு ஒரு உத்தரவை கொடுத்தார். (எபிரேயர் 2:14; 12:2) மேலுமாக, கிறிஸ்துவோடு பரலோகத்தில் ஆட்சிசெய்யப் போகும் அனைவரும் மரணம் வரையாகவும் கூட கடவுளுக்கு உண்மையுள்ளவர்களாக நிலைத்திருப்பதன் மூலம் யெகோவாவின் இருதயத்தை சந்தோஷப்படுத்தியிருப்பார்கள்.—வெளிப்படுத்தின விசேஷம் 2:10.
4. ஆனால் இளைஞனாகிய உங்களையும் உட்பட இன்று நம்மைப் பற்றியதென்ன? மனிதர்கள் கடவுளுக்கு உண்மையுள்ளவர்களாக இருப்பார்களா மாட்டார்களா என்ற இந்த பிரச்னையில் நீங்கள் சம்பந்தப்பட்டிருக்கிறீர்களா? நிச்சயமாகவே நீங்கள் சம்பந்தப்பட்டிருக்கிறீர்கள். (சங்கீதம் 147:11 ; 148:12, 13) நீங்கள் உங்களுடைய வாழ்க்கையை வைத்து என்ன செய்கிறீர்கள் என்பது, பிரச்னையில் கடவுளுடைய பக்கத்தையாவது, சாத்தானுடைய பக்கத்தையாவது ஆதரிக்கிறது. அது ஒன்று யெகோவாவை சந்தோஷப்படுத்துகிறது. உண்மையில் யெகோவாவின் அழைப்பு அல்லது வேண்டுகோள் தனிப்பட்ட விதமாக உங்களையும் கூட கருத்தில் கொண்டு சொல்லப்பட்டதாக கருதப்படலாம்: “என் மகனே [அல்லது மகளே] என்னை நிந்திக்கிறவனுக்கு நான் உத்தரவு கொடுக்கத்தக்கதாக, நீ ஞானவானாகி, என் இருதயத்தைச் சந்தோஷப்படுத்து” (நீதிமொழிகள் 27:11) உங்களுடைய சிருஷ்டிகரின் இருதயத்தை சந்தோஷப்படுத்துவது என்பது நீங்கள் வைத்துக் கொள்ளக்கூடிய திருப்தியளிக்கும் ஒரு இலக்காக இருக்கிறதல்லவா?
ஏன் அது ஞானமாக இருக்கிறது
5. “ஞானவானாகு” என்று யெகோவா உற்சாகப்படுத்துவதை கவனியுங்கள். யெகோவாவின் இருதயத்தை சந்தோஷப்படுத்தும்போது நாம் ஏன் ஞானமுள்ளவர்களாக இருக்கிறோம்? ஏனென்றால் யெகோவா நமக்கு மிகச் சிறந்ததை மட்டுமே விரும்பும் ஒரு அன்புள்ள தகப்பனாக இருக்கிறார். அவர் நம்மைச் செய்யும்படியாக கேட்கும் எதுவுமே நம்முடைய நன்மைக்காகவே இருக்கிறது. ஏசாயா 48:17, 18. சொல்லுகிறவிதமாகவே: “பிரயோஜனமாயிருக்கிறதை உனக்குப் போதித்து, நீ நடக்க வேண்டிய வழியிலே உன்னை நடத்துகிற உன் தேவனாகிய யெகோவா நானே. ஆ என் கற்பனைகளைக் கவனித்தாயானால் நலமாயிருக்கும்; அப்பொழுது உன் சமாதானம் நதியைப்போலும் உன் நீதி சமுத்திரத்தின் அலைகளைப்போலும் இருக்கும்.”
6. அன்புள்ள ஒரு பெற்றோராக, யெகோவா அவரின் விலைமதிப்புள்ள ஜீவனின் ஈவை முழுமையாக நீங்கள் அனுபவிக்க வேண்டும் என்று விரும்புகிறார். ஆகவே அவர் சொல்லுகிறார்: “வாலிபனே! உன் இளமையிலே சந்தோஷப்படு, உன் வாலிப நாட்களிலே உன் இருதயம் உன்னைப் பூரிப்பாக்கட்டும்; உன் நெஞ்சின் வழிகளிலும் உன் கண்ணின் காட்சிகளிலும் நட.” இப்பொழுது நிச்சயமாகவே நீங்கள் விரும்பும் இன்பம் தருகிற காரியம் எதையாகிலும் செய்வதற்கான அழைப்பாக இது இல்லை. பின்வரும் இந்த எச்சரிப்பில் இது காணப்படுகிறது: “ஆனாலும் இவையெல்லாவற்றினிமித்தமும் தேவன் உன்னை நியாயத்திலே கொண்டுவந்து நிறுத்துவார் என்று அறி.” (பிரசங்கி 11:9) ஆம், உங்களுடைய செயல்களின் விளைவுகளை உங்களால் தவிர்க்கமுடியாது; நீங்கள் செய்யும் காரியங்களுக்கு, நீங்கள் பதில் சொல்லும் பொறுப்புள்ளவர்களாக இருக்கிறீர்கள். பின்வரும் இந்த நியதி விலக்க முடியாததாக இருக்கிறது; “மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்.”—கலாத்தியர் 6:7.
7. இந்த காரணத்தினாலேதான் யெகோவா மேலுமாக இவ்விதமாகச் சொல்லுகிறார்: “நீ உன் இருதயத்திலிருந்து சஞ்சலத்தையும் (அல்லது கவலைக்கான காரணத்தை) உன் மாம்சத்திலிருந்து தீங்கையும் நீக்கிப்போடு; இளவயதும் வாலிபமும் மாயையே.” (பிரசங்கி 11:10) நிச்சயமாகவே, பின்னால் சஞ்சலமான பிரச்னைகளை உண்டாக்கும் நடவடிக்கைகளை தவிர்ப்பது ஞானமான காரியமாகும். நீங்கள் குடித்து வெறித்திருந்து. கள்ளத்தனமான பாலுறவுகளை கொண்டிருந்து அல்லது இதுபோன்ற வேறு ஒரு “துணிச்சலான” காரியத்தை செய்தாலொழிய நீங்கள் வாய்ப்பை இழந்துவிடுகிறீர்கள்—நீங்கள் ‘உண்மையில் வாழவில்லை’ என்பதாகச் செல்பவர்கள் இருப்பார்கள். ஆனால் அவர்கள் எவ்வளவு முட்டாள்த்தனமாக இருக்கிறார்கள்! “அது நிச்சயமாகவே தகுதியுள்ளதாக இல்லை” என்பதாக வேசித்தனம் செய்துவிட்ட ஒரு மாணவி கண்ணீரோடு புலம்பினாள். “அப்போதிலிருந்து எனக்கு கவலையாகவே இருக்கிறது.”
8. ஆகவே இளைஞர்களே, துணிச்சலான அல்லது தன்னலமான வாழ்க்கைமுறையை நாடிச்செல்லும் வாலிபர்கள் அனுபவிக்கும் மனஸ்தாபத்துக்கான அல்லது கவலைக்கான ஏதுக்களை உங்களுடைய இருதயத்திலிருந்து நீக்கிப் போடும்படியான கடவுளுடைய புத்திமதிக்கு ஞானமாக செவிகொடுங்கள். 17-ம் நூற்றாண்டு கட்டுரையாளர் இவ்விதமாக குறிப்பிட்டார்: “தங்களுடைய பின்னான வாழ்க்கையை, துயர்மிகுந்ததாகச் செய்வதற்கு தங்களுடைய முற்பட்ட ஆண்டுகளை, மனிதவர்க்கத்தில் பெரும்பாலானவர்கள் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.” உண்மைதான், ஆனால் எத்தனை வருந்தத்தக்கது! ஒரு இளைஞைன், பின் ஜீவியத்தை அதிக கடினமானதாகச் செய்யும் வழியில் தன்னுடைய சரீரத்தின் சக்திகளையும் திறமைகளையும் வீணாக செலவழிக்கும்போது, நிச்யமாகவே அவனுடைய இளவயதும் வாலிபமும் மாயையாக இருக்கிறது! (நீதிமொழிகள் 22:3) ஆகவே ஞானமுள்ளவர்களாயிருங்கள்! “நீ உன் வாலிபப் பிராயத்திலே உன் சிருஷ்டிகரை நினை” என்ற அறிவுரையை பின்பற்றுங்கள்.—பிரசங்கி 12:1
9. உங்களுடைய வாலிபப் பிராயத்திலே யெகோவாவை நினைப்பதன்மூலம், உண்மையில் நீங்கள் தாமே நன்மையடைவீர்கள். சஞ்சலத்தையும் தீங்கான தொந்தரவுகளையும் நீங்கள் தவிர்ப்பது மட்டுமல்லாமல், உங்களுடைய மகத்தான சிருஷ்டிகரை சேவிப்பதில் இப்பொழுதோ நீங்கள் மகிழ்ச்சியான, பயனுள்ள வாழ்க்கையை அனுபவிப்பீர்கள், மேலுமாக நித்தியத்துக்குமாக, உங்களுக்கு பிரயோஜனமாயிருக்கும் பொக்கிஷங்களை நீங்கள் ஞானமாக பரலோகத்தில் சேர்த்துக் கொண்டிருப்பீர்கள். (மத்தேயு 6:19-21) அவருடைய சித்தத்தைச் செய்வதன்மூலம், நீங்கள் இப்பொழுது யெகோவாவை நினைப்பீர்களானால், அவர் உங்களை நினைவில் வைத்து “உங்கள் இருதயத்தின் வேண்டுதல்களை” உங்களுக்கு தந்தருள்வார். ஆம், பரதீஸ் என்றுமாக ஒரு மகிழ்ச்சியான முழுமையான வாழ்க்கை!—சங்கீதம் 37:4; 133:3; லூக்கா 23:43; வெளிப்படுத்தின விசேஷம் 21: 3, 4.
யெகோவாவைப் பற்றி நீங்கள் எவ்விதமாக உணருகிறீர்கள்?
10. என்ற போதிலும் யெகோவாவை சேவிப்பதற்கான உங்களுடைய தீர்மானம் எது ஞானமானது என்பதைப் பற்றிய ஒரு உணர்ச்சியற்ற மதிப்பீடாக மட்டுமே இருக்க முடியாது. சாத்தான் அத்தனை தந்திரமுள்ள சத்துருவாக இருப்பதன் காரணமாக, நீங்கள் உங்களுடைய தனிப்பட்ட நன்மையை மட்டுமே சிந்தித்துக் கொண்டிருப்பீர்களானால் யெகோவாவை சேவிப்பதிலிருந்து உங்களை வழி விலகிப் போகச் செய்ய கடைசியாக ஏதாவது ஒரு தன்னலமான விருப்பத்துக்கு கவர்ச்சியூட்டக்கூடியவனாக இருப்பான். ஆகவே வெறுமென ஞானமுள்ளவனாக இருக்கும்படியாக மட்டுமே யெகோவா உங்களை அழைப்பதில்லை. இல்லை, அவருக்கு தனிப்பட்ட விதமாக ஒப்புக் கொடுக்கும் படியாகவும் அழைக்கிறார். இயேசு சொன்னார்: “உன் தேவனாகிய யெகோவாவிடத்தில் உன் முழு இருதயத்தோடும் அன்பு கூருவாயாக” (மத்தேயு 22:37) யெகோவாவினிடத்தில் முழு இருதயத்தோடு அன்பு கூருவது என்பது எதை அர்த்தப்படுத்துகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?
11. உங்களுடைய இருதயம் என்பது உங்கள் சிந்திக்கும் திறமைகளோடு கூட உங்கள் உள்ளெண்ணங்களை, உங்கள் மனநிலைகளை, உங்கள் ஆழமான உணர்ச்சிகளை குறிப்பிடுகிறது. ஆகவே முழு இருதயத்தோடு யெகோவாவினிடத்தில் அன்பு கூறுகிறீர்கள் என்றால், நீங்கள் அவரை அருமையாக நேசிக்கிறீர்கள் என்றும், வாழ்க்கையில் வேறு எல்லாவற்றிற்கும் மேலாக, சாத்தானின் நிந்தனைக்கு அவருக்கு ஒரு உத்தரவை கொடுப்பதன் மூலம், அவருடைய இருதயத்தை சந்தோஷப்படுத்துவது ஆராய்ந்து செய்யப்பட்ட உங்களுடைய தெரிவாக இருக்கிறது என்றும் அர்த்தமாகிறது. இத்தகைய உள்ளார்ந்த பகுத்துணர்வும், கடவுளிடமாக அன்பு மற்றும் அக்கறையின் ஆழ்ந்த உணர்ச்சிகளும் அவருடைய சித்தத்தைச் செய்வதற்கு மிக பலமான தூண்டுதலை அளிக்கும். மற்றபடி செய்வது அதிக கவர்ச்சியாக இருந்தாலும் கூட இதை செய்ய நமக்கு அது தூண்டுதலை அளிக்கும், வாலிபனான யோசேப்புக்கு இப்படிப்பட்ட அன்பிருந்தது. ஆகவே செல்வாக்குள்ள ஒரு ஸ்திரீ “என்னோடே சயனி” என்று அழைத்த போது யோசேப்பு “நான் இத்தனைப் பெரிய பொல்லாங்குக்கு உடன்பட்டு தேவனுக்கு விரோதமாய்ப் பாவம் செய்வது எப்படி என்பதாக பதிலளித்தான்.ஆதியாகமம் 39:7-9.
12. நீங்கள் ஜெபத்தில் அவரிடம் சென்று நீங்கள் அவருடையவராக இருக்க விரும்புவதையும் என்றுமாக அவரை சேவிக்க விரும்புவதையும் தெரியப்படுத்தும் போது நீங்கள் யெகோவாவிடத்தில் முழு இருதயத்தோடும் அன்பு கூருவதை காண்பிக்கிறீர்கள். இவ்விதமாக நீங்கள் உங்களை யெகோவாவுக்கு ஒப்புக்கொடுக்கிறீர்கள். இதை நீங்கள் செய்துவிட்டீர்களா? இல்லையென்றால், ஏன் இல்லை? உங்களை பின்வாங்கச் செய்வது என்ன? யெகோவாவுக்கும் சாத்தானுக்குமிடையேயுள்ள மிகப்பெரிய பிரச்னையை புரிந்து கொள்ளவும் மதித்துணரவும் போதியவயதுள்ளவராக நீங்கள் இருக்கிறீர்களா? யெகோவாவின் இருதயத்தை சந்தோஷப்படுத்து நீங்கள் விரும்புகிறீர்களா? யெகோவாவிடம் நீங்கள் முழு இருதயத்தோடு அன்பு கூறுவதை சாத்தான் நிச்சயமாகவே விரும்புவதில்லை. தன்னலமாக “உங்களுடைய சொந்த காரியத்தை நீங்கள் செய்து கொண்டு” உங்களையே பிரியப்படுத்திக் கொள்ளவேண்டும் என்று அவன் விரும்புகிறான். யாரை நீங்கள் சந்தோஷப்படுத்துவீர்கள், யெகோவாவையா சாத்தானையா? இதை ஆழ்ந்து சிந்தித்துப்பாருங்கள்.
13. நீங்கள் உங்களை கடவுளுக்கு ஒப்புக்கொடுத்து இதை தண்ணீரில் முழுக்காட்டுதலின் மூலமாக அடையாளப்படுத்தி காண்பித்திருந்தால், உங்களுடைய இருதயம் உண்மையில் யெகோவாவுக்கு உரியதாக இருக்கிறது என்பதை உங்களுடைய வாழ்க்கைப்போக்கு தெளிவாக காண்பிக்கிறது? உங்களுடைய அக்கறைகள் உங்களுடைய உள்ளான விருப்பங்கள் எதில் ஒருமுகப்படுத்தப்பட்டிருக்கின்றன? ஒரு புதிய மோட்டார் வண்டியை வாங்குவதிலா? துணிமணிகள் அல்லது உங்களுக்கு மற்ற பொருட்களை வாங்குவதற்கு பணத்தை சம்பாதிப்பதிலா? யாருடைய அக்கறைகள் முதலிடத்தைப் பெறுகின்றன—உங்களுடைய சொந்த அக்கறைகளா அல்லது யெகோவாவுடையதா? இருதயத்தை தரும்படியான யெகோவாவின் வேண்டுகோலுக்கு நீங்கள் உண்மையில் சாதகமாக பிரதிபலிக்கிறீர்களா?
14. வயதானவர்களிடம் அதிக அனுபவமும் பொதுவாக அதிக ஞானமும் இருக்கையில், வாலிபர்களிடம் கடவுளைப் பிரியப்படுத்துவதற்கு பயன்படுத்தக்கூடிய ஒரு மதிப்புள்ள சொத்து இருக்கிறது. “வாலிபரின் அலங்காரம் அவர்கள் பராக்கிரமம்” என்பதாக பைபிள் சொல்லுகிறது. (நீதிமொழிகள் 20:29) ஆகவே அந்த பராக்கிரமத்தை இப்பொழுது பயன்படுத்திக் கொள்ளுங்கள். உடல் பலவீனமடைந்து அதன் அங்கங்கள் ஆற்றலையிழந்து சரிவர செயல்பட தவறும் “தீங்கு நாட்களாகிய” வயோதிபம் வராததற்கு முன் உங்களுடைய சிருஷ்டிகரை நினையுங்கள். ஒரு நபர் வாலிப பிராயத்தில் தன்னுடைய சிருஷ்டிகரை நினைக்கத் தவறியதால், வயதான காலத்தில் கடவுளுக்கு தன்னை பிரியமுள்ளவனாக்கிக் கொள்ள ஒன்றையும் கொண்டில்லாத போது அது எத்தனை வருத்தமான காரியமாக இருக்கிறது! அதுவே “மிகப்பெரிய மாயை‘” யாகும். (பிரசங்கி 12:1-8) ஆகவே ஞானமாக உங்களுக்கு பலமும் உடல் வலிமையும் இருக்கும்போதே உங்களுடைய சிருஷ்டிகரை நினையுங்கள் கடவுளுக்குச் செய்யும் உண்மையுள்ள ஊழியத்தினால் ஒரு பதிவை படிப்படியாக ஏற்படுத்திக் கொள்ளுங்கள். ஆம், நித்திய ஜீவனுக்கென்று, சாதகமான ஒரு தீர்ப்பினால் அவர் உங்களை நினைவு கூறுவார்.—எபிரேயர் 6:10-12; பிரசங்கி 12:13, 14.
அவர்கள் கடவுளுடைய இருதயத்தை சந்தோஷப்படுத்தினார்கள்
15. வாலிபர்கள் தங்களுடைய “அலங்கார” மாகிய பராக்கிரமத்தை—கடவுளுடைய சேவையில் பயன்படுத்தியதைப் பற்றி உதாரணங்கள் பைபிளில் நிறைய இருக்கின்றன, வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தை வேகமாக உற்சாகமாகவும் வேவு பார்த்துக்கொண்டு வந்தது ‘வாலிபர்களே” ஆவர். (யோசுவா 6:22, 23; 2:15, 16, 23) தாவீது, அவனே 20 வயதுகளில் தானே இருந்தபோது, நாபாலின் தயவைப்பெற்றுக் கொள்வதற்காக “பத்து வாலிபரை” அவனிடத்துக்கு அனுப்பி வைத்தான். (1 சாமுவேல் 25:4, 5) தாக்கப்படும் அபாயத்தின் கீழ் யூதர்கள், அதிபதியான நெகேமியாவின் கீழ் எருசலேமின் மதில்களை திரும்ப கட்டியபோது, ஆபத்தான கடினமான வேலையை செய்தது யார்? “என் வாலிபர்களில் பாதிப்பேர் வேலை செய்தார்கள், பாதிப்பேர் ஈட்டிகளையும் பரிசைகளையும் வில்லுகளையும், கவசங்களையும் பிடித்து நின்றார்கள்” என்பதாக நெகேமியா விளக்கினான். (நெகேமியா 4:16) அனனியாவும் சப்பீராளையும் அவர்கள் பொய் சொன்னதற்காக, கடவுள் மரணத்தால் அடித்தபோது, “வாலிபர்” அவர்களை வெளியே கொண்டுபோய் அடக்கம்பண்ணினார்கள்.—அப்போஸ்தலர் 5:5, 6,10.
16. நிச்சயமாகவே, தேவைப்படும் சமயங்களில், வாலிபர்கள் எந்த சேவையையும் செய்ய முன்வரும்போது, அது யெகோவாவின் இருதயத்தை சந்தோஷப்படுத்துகிறது. என்ற போதிலும் சரீர பெலத்துக்கும் சகிக்கும் ஆற்றலுக்கும் மேலாக அதிகம் தேவைப்படும் ஆவிக்குரிய காரியங்களில் வாலிபர்கள் ஈடுபாடு கொண்டிருந்திருக்கிறார்கள். “இன வயதுள்ளவன்” என்பதாக எலிகூ தன்னைப்பற்றி ஒப்புக்கொண்டான், என்ற போதிலும் யோபுவின் தவறை எடுத்துச்சொல்ல யெகோவா அவனை பயன்படுத்தினார். (யோபு 32:4-6) சீலோவிலே யெகோவாவின் கூடாரத்தில் பணிவிடைச் செய்ய ஆரம்பித்தபோது, சாமுவேல் ஒரு “பிள்ளையாண்டானாகவே” இருந்தான். (1 சாமுவேல் 2:18) நாகமானின் வீட்டில் ஒரு அடிமையாக இருந்த போதிலும், யெகோவாவின் தீர்க்கதரிசியால் என்ன செய்ய முடியும் என்பதை தைரியமாகச் சொன்னது ஒரு “சிறு பெண்ணே” (2 இராஜாக்கள் 5:2-4) யெகோவா ஒரு தீர்க்கதரிசியாக எரேமியாவை கட்டளையிட்டபோது, “நான் சிறுபிள்ளையாயிருக்கிறேன்” என்று எரேமியா சொன்னான். (எரேமியா 1:5, 6) “நாலு வாலிபரு”மாகிய—தானியேலும் அவனுடைய மூன்று எபிரேயத் தோழர்களும்—பாபிலோனின் நாடுகடத்தப்பட்ட நிலையில், யெகோவாவின் மிக சிறப்பான ஊழியர்களாக இருந்தார்கள்! (தானியேல் 1 மற்றும் 3 அதிகாரங்கள்) வாலிபனாக இருந்த, பவுலின் சகோதிரியின் குமாரன் பவுலுக்காக தைரியமாக செயல்பட்டான். (அப்போஸ்தலர் 23:16-22) பின்பு சிறுபிராயம் முதற்கொண்டு பரிசுத்த எழுத்துக்களை அறிந்தவனாகவும், தன்னுடைய வாலிபத்தை யெகோவாவின் சேவையில் பயன்படுத்தியவனாகவும் இருந்த தீமோத்தேயு என்ற இளைஞன் இருந்தான்.—2 தீமோத்தேயு 3:15; பிலிப்பியர் 2:19-23; 1 கொரிந்தியர் 4:17.
கடவுளுடைய இருதயத்தை இன்று சந்தோஷப்படுத்துவது
17. தங்களுடைய உண்மையுள்ள சேவையால் கடவுளுடைய இருதயத்தை சந்தோஷப்படுத்தியிருப்பது முற்காலத்து வாலிபர்கள் மட்டுமே இல்லை. “கடைசி நாட்களில் நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன், அப்பொழுது உங்கள் குமாரரும், உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ் சொல்லுவார்கள்; உங்கள் வாலிபர் தரிசனங்களை அடைவார்கள்” என்பதாக கடவுள் சொல்லுகிறார். (அப்போஸ்தலர் 2:17; யோவேல் 2:28) ஆகவே இந்த கடைசி நாட்களில் அநேக வாலிப கிறிஸ்தவர்கள் யெகோவாவை பிரியப்படுத்துவதை காண நாம் சரியாகவே எதிர்பார்க்கலாம் நாம் அவர்களை காண்கிறோம்! நம்மில் எவருமே குற்றமற்றவர்களாக இல்லாதது போலவே, இளம் சாட்சிகளும் அவ்விதமாக இல்லாவிட்டாலும் அநேகர் கிறிஸ்தவர்களாக மிகச் சிறப்பாக வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் யெகோவாவின் இருதயத்தை சந்தோஷப்படுத்துவதைக் குறித்து அக்கறையுள்ளவர்களாக இருக்கிறார்கள்—நீதிமொழிகள் 27:11; 3:1, 2.
18. இந்த கடைசி நாட்களில், யெகோவா அவருடைய ராஜ்யத்தைப்பற்றி உலகம் முழுவதிலும் சாட்சிகொடுக்கப்பட வேண்டும் என்று சிந்தித்துக்கொண்டிருக்கிறார். இது அதிகமான முயற்சியை உட்படுத்துகிறது. (மத்தேயு 24:14) வணக்கத்துக்காக, ராஜ்யமன்றங்களும், வட்டார மாநாடுகளுக்காக பெரிய கட்டிடங்களும் கட்டப்படுவது அவசியமாக இருக்கிறது. அநேக தேசங்களில், பைபிள் பிரசுரங்களை வெளியிடுவதற்கு கூடுதலாக தொழிற்சாலைக்கு இடமும், பெத்தேல் வீடுகளில் கூடுதலான அறைகளும் கட்டப்படுவது அவசியமாக இருக்கிறது. இந்த புதிய வசதிகளை செய்து கொடுப்பதற்கு பிரமாண்டமான கட்டிட வேலை செய்யப்பட வேண்டும். நெகேமியாவின் நாளில் மதில்களை கட்டியபோது செய்த விதமாகவே பலமும் உள்ளுரமும் மிக்க வாலிபர்கள் அதிகமான வேலையைச் செய்கிறார்கள்.
19. ஒவ்வொரு வருடமும் பைபிள் பிரசுரங்களை அச்சிடவும் கட்டவும், பல்வேறு இடங்களுக்கு அனுப்பி வைக்கவும், செய்யப்பட வேண்டிய சரீரப்பிரகாரமான வேலையில் பெரும் பகுதியையும்கூட, இப்படிப்பட்ட இளைஞர்கள் செய்கிறார்கள். உண்மையில், நியுயார்க்கிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய தலைமைக் காரியாலயத்திலும் காவற்கோபுர பண்ணைகளிலும் 25 வயதில் அல்லது அதற்கும் இளைய வயதுகளில், 1,400 வாலிபர்கள் இருக்கிறார்கள். வாரம் முழுவதிலும் அவர்கள் செய்யும் கடினமான சரீர பிரகாரமான வேலைக்கு மட்டுமே அவர்களுடைய சேவை கட்டுப்படுத்தப்பட்டதாக இல்லை. வாரத்தின் இறுதி நாட்களில் அவர்கள் வீட்டுக்குவீடு பிரசங்க வேலையிலும் உள்ளூர் சபைகளில் கிறிஸ்தவ கூட்டங்களிலும் பங்குகொள்கிறார்கள். அவர்கள் யெகோவாவின் இருதயத்தை எவ்வளவு சந்தோஷப்படுகிறார்கள்!
20. ஐக்கிய மாகாணங்களில் இந்த வாலிபர்களோடு தோளோடு தோள் சேர்த்து வேலை செய்வது, ஒழுங்கான பயனியர் ஊழியர்களாக சேவிக்கும் அதே வயதுகளிலுள்ள 12,7000-க்கும் அதிகமான இளைஞர்கள் ஆவர். உலகின் மற்ற பகுதிகளிலும் பல ஆயிரக்கணக்கானோர் பயனியர் ஊழியத்தை செய்கிறார்கள். முழு நேர ஊழியத்திலில்லாத ஒரு வாலிபனாக நீங்கள் இருந்தால், யெகோவாவை உங்களுடைய வாழ்க்கையில் முதலிடத்தில் வைக்கும் இலக்குகளை உங்களுக்கு ஏற்படுத்திக்கொள்ள முடியுமா? வெறுமென நல்ல வருவாயுள்ள உலகப்பிரகாரமான வேலையை தேடிக் கொண்டு, விவாகம் செய்துகொண்டு ஒரு குடும்பத்தைக் கொண்டிருப்பதற்கு பதிலாக இதைச் செய்ய முடியுமா? சர்வலோகத்தையும் உட்படுத்தும் பிரச்னையை நீங்கள் புரிந்து கொண்டிருக்கிறீர்களா? நம்முடைய மகத்தான சிருஷ்டிகரின் நாமத்திலிருந்து எல்லா நிந்தைகளும் துடைத்தழிக்கப்படுவதை பார்க்க நீங்கள் உண்மையில் கொண்டிருக்கிறீர்களா? நம்முடைய மகத்தான சிருஷ்டிகரின் நாமத்திலிருந்து எல்லா நிந்தைகளும் துடைத்தழிக்கப்படுவதை பார்க்க நீங்கள் உண்மையில் ஆவலாக இருக்கிறீர்களா? அப்படியானால், யெகோவாவின் ஊழியத்தில் உங்களால் இயன்ற அனைத்தையும் செய்வது பொருத்தமானதாக இருக்குமல்லவா? குறைந்தபட்சம் இன்னும் உங்களில் அநேகருக்கு பெத்தேல் வீடுகளில் சேவை செய்ய அல்லது பயனியர் ஊழியத்தில் ஈடுபட முன்வருவதை அது உட்படுத்துவதாக இருக்குமல்லவா?
21. கவனித்துக் கேளுங்கள்! யெகோவா உங்களை அழைக்கிறார், ஆம், சாத்தானுடைய பொல்லாத நிந்தனைகளுக்கு உத்தரவை கொடுக்கும்படியாக உங்களிடம் வேண்டிக்கொள்கிறார். ஏசாயாவைப் போலவே, யெகோவா ”யாரை நான் அனுப்புவேன், யார் நமது காரியமாய்ப் போவான்” என்று கேட்பதை உங்களால் கேட்க முடிகிறதா? ஏன் ஞானமாக இருந்து “இதோ, அடியேன் இருக்கிறேன், என்னை அனுப்பும்” என்று ஏசாயாவைப் போல பதிலளிக்கக்கூடாது? (ஏசாயா 6:8) வாலிபர்களாகிய உங்களில் இன்னும் அநேகர் இவ்விதமாக பதிலளிப்பீர்கள் என்று நாங்கள் நம்பிக்கையாயிருக்கிறோம். ஏனென்றால் கடவுளுடைய வார்த்தை இவ்விதமாக வாக்களிக்கிறது: “உமது பராக்கிரமத்தின் நாளிலே உம்முடைய ஜனங்கள் மனப்பூர்வ . . .முள்ளவர்களாயிருப்பார்கள்; விடியற்காலத்துக் கர்ப்பத்தில் பிறக்கும் பனிக்குச்சமானமாய் உம்முடைய யௌவன ஜனம் (யுவதிகளும்) உமக்குப்பிறக்கும்”. (சங்கீதம் 110:3 ; 148:12, 13) நீங்கள் சாதகமாக பிரதிபலிக்கையில், நீங்கள் அவருடைய இருதயத்தை சந்தோஷப்படுத்துவதை அவர் கவனிக்கிறார் என்பதையும் அதை அங்கீகரிக்கிறார் என்பதையும் தெரிந்து கொன்ளும் சந்தோஷத்தை கொண்டிருக்கலாம்.—W86 8/1
விமர்சனப்பெட்டி
இந்த குறிப்பு தமிழில் இல்லை.
[கேள்விகள்]
1. நாம் நம்முடைய வாழ்க்கையை வாழும் விதத்தின் மூலமாக, நம்முடைய பெற்றோர்களும் நம்முடைய சிருஷ்டிகருக்கும் எவ்விதமாக பாதிக்கப்படுகிறார்கள்?
2. என்ன இன்றியமையாத பிரச்னை சாத்தானுக்கு எழுப்பப்பட்டது? நாம் எவ்விதமாக இதில் உட்பட்டிருக்கிறோம்?
3. யெகோவாவின் வேண்டுகோள் ஏன் குறிப்பாக இயேசுவுக்கு பொருந்துகிறது? வேறுஎவரும் கூட கடவுளுடைய இருதயத்தை சந்தோஷப்படுத்தியிருப்பார்கள்?
4. உங்களுடைய வாழ்க்கையை வைத்து என்ன செய்வது என்பதை தீர்மானிக்கையில், என்ன இன்றியமையாத ஒரு காரியத்தை நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்?
5. யெகோவாவின் இருதயத்தை சந்தோஷப்படுத்துவது ஏன் ஞானமுள்ளதாக இருக்கிறது?
6. (எ) வாழ்க்கையை நீங்கள் அனுபவிக்க வேண்டும் என்று யெகோவா விரும்புவதை எது காண்பிக்கிறது? (பி) என்ன விளைவுகளை உங்களால் தவிர்க்க முடியாது?
7, 8. (எ) நீங்கள் எவ்விதமாக சஞ்சலத்தையும் தீங்கையும் நீக்கிப்போட முடியும்? (பி) இளவயதும் வாலிபமும் எப்பொழுது மாயையாக இருக்கிறது?
9. யெகோவாவை உங்களுடைய வாலிபப் பிராயத்திலே நினைப்பதன் மூலம் என்ன நன்மைகளை நீங்கள் அனுபவித்துக் களிப்பீர்கள்?
10. (எ) கடவுளை சேவிப்பதற்கான உங்களுடைய தீர்மானம், எது ஞானமானது என்பதைப் பற்றிய ஒரு உணர்ச்சியற்ற மதிப்பீடாக மட்டும் ஏன் இருக்க முடியாது? (பி) என்ன கூடுதலான அழைப்பை யெகோவா கொடுக்கிறார்?
11. யெகோவாவுக்கு உங்களுடைய இருதயத்தை தருவது எதை அர்த்தப்படுத்துகிறது? (பி) சரியான இருதய தூண்டுதல் எவ்விதமாக கடவுளுடைய சித்தத்தைச் செய்வதற்கு நம்மை இயக்க முடியும் என்பதை யோசேப்பின் அனுபவம் எவ்விதமாக விளக்குகிறது?
12. (எ) யெகோவாவுக்கு உங்களுடைய இருதயத்தை நீங்கள் தந்திருப்பதை எவ்விதமாக காண்பிக்கிறீர்கள்? (பி) உங்களுடைய இருதயத்தை யெகோவாவுக்கு நீங்கள் தந்திராவிட்டால், என்ன கேள்விகளை நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்?
13. நீங்கள் ஒப்புக்கொடுத்து முழுக்காட்டப்பட்டவர்களாக இருந்தால், நீங்கள் உங்களை என்ன கேள்விகளை கேட்டுக்கொள்ளவேண்டும்?
14. (எ) வாலிபர்களுக்கும் விலைமதிப்புள்ள சொத்து என்ன? (பி) ஒரு வாலிபன் தன்னுடைய சிருஷ்டிகரை நினையாதிருப்பது ஏன் வருத்தமான காரியமாக இருக்கிறது?
15. தங்களுடைய பராக்கிரமத்தை கடவுளுடைய ஊழியத்தில் பயன்படுத்திய வாலிபர்களின் என்ன பைபிள் உதாரணங்கள் இருக்கின்றன?
16. கடந்த காலத்தில் என்ன ஆவிக்குரிய சேவையில் இளைஞர்கள் பங்கு கொண்டிருந்தார்கள்?
17. யெகோவாவை பிரியப்படுத்திக் கொண்டிருக்கும் வாலிபர்களை காண்பதை நாம் ஏன் எதிர்பார்த்திருக்கலாம்? நாம் காண்கிறோம்?
18, 19. இன்று என்ன வேலை செய்யப்பட வேண்டியதாக இருக்கிறது? வாலிபர்கள் ஏன் அதற்கு மிகவும் ஏற்றவர்களாக இருக்கிறார்கள்?
20. (எ) பயனியர் ஊழியத்தில் வாலிபர்கள் என்ன பங்கை கொண்டிருக்கிறார்கள்? (பி) முழுநேர ஊழியத்தில் இல்லாத வாலிபர்கள் தங்களை என்ன கேள்விகளை கேட்டுக்கொள்ளவேண்டும்?
21. (எ) யெகோவாவின் எந்த அழைப்புக்கு நீங்கள் பதிலளிக்க வேண்டும்? எவ்விதமாக? (பி) ஏசாயாவைப்போல இன்னும் அநேக இளைஞர்கள் யெகோவாவின் அழைப்புக்கு பதிலளிப்பார்கள் என்று நாம் ஏன் நம்பிக்கையாயிருக்கலாம்?
[பக்கம் 26-ன் சிறு குறிப்பு]
வாலிபர்கள் கடவுளுடைய கட்டளைகளை மீறும் போது, பின்னால் கசந்துகொள்ளவேண்டிய பின்விளைவுகளை அவர்கள் அறுவடை செய்கிறார்கள்
[பக்கம் 27-ன் படம்]
எருசலேமின் மதில்கள் திரும்ப கட்டுவதற்கு உதவுவதன் மூலம், வாலிபர்கள் கடவுளின் இருதயத்தை சந்தோஷப்படுத்தினார்கள்