-
பேசுவதற்கென்று ஒரு நேரம் இருக்கிறதா?காவற்கோபுரம் (படிப்பு)-2020 | மார்ச்
-
-
படிப்புக் கட்டுரை 12
பேசுவதற்கென்று ஒரு நேரம் இருக்கிறதா?
“பேசுவதற்கு ஒரு நேரம் இருக்கிறது, பேசாமல் இருப்பதற்கு ஒரு நேரம் இருக்கிறது.”—பிர. 3:7.
பாட்டு 63 என்றும் பற்றுள்ளோராய்
இந்தக் கட்டுரையில்...a
1. பிரசங்கி 3:7-லிருந்து என்ன கற்றுக்கொள்கிறோம்?
சிலருக்குப் பேசிக்கொண்டே இருக்க பிடிக்கும். வேறு சிலருக்கோ, அமைதியாக இருக்கத்தான் பிடிக்கும். இந்தக் கட்டுரையின் முக்கிய வசனம் சொல்வதுபோல், பேசுவதற்கு ஒரு நேரம் இருக்கிறது, பேசாமல் இருப்பதற்கு ஒரு நேரம் இருக்கிறது. (பிரசங்கி 3:7-ஐ வாசியுங்கள்.) அதனால், சில சகோதர சகோதரிகளைப் பற்றி, ‘இவங்க இன்னும் நிறைய பேசினா நல்லா இருக்குமே!’ என்று நாம் நினைக்கலாம். வேறு சிலரைப் பற்றி, ‘இவங்க பேசுறத கொஞ்சம் குறைச்சிக்கிட்டா நல்லா இருக்குமே’ என்று நாம் யோசிக்கலாம்.
2. நாம் எப்போது பேச வேண்டும், எப்படிப் பேச வேண்டும் என்பதற்கான நெறிமுறைகளை ஏற்படுத்துவதற்கு யாருக்கு அதிகாரம் இருக்கிறது?
2 பேசும் திறன் யெகோவா நமக்குக் கொடுத்த வரம். (யாத். 4:10, 11; வெளி. 4:11) அதை எப்படிச் சரியாகப் பயன்படுத்த வேண்டும் என்று அவர் பைபிளில் சொல்லியிருக்கிறார். நாம் எப்போது பேச வேண்டும், எப்போது பேசாமல் இருக்க வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்ள உதவும் சில உதாரணங்களை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம். நாம் மற்றவர்களிடம் பேசும் விஷயங்களைப் பற்றி யெகோவா என்ன நினைக்கிறார் என்றும் பார்க்கலாம். முதலாவது, எப்போது பேச வேண்டும் என்பதைப் பற்றிக் கவனிக்கலாம்.
நாம் எப்போது பேச வேண்டும்?
3. ரோமர் 10:14-ன்படி, பிரசங்கிப்பதைப் பற்றி நமக்கு என்ன மனப்பான்மை இருக்க வேண்டும்?
3 யெகோவாவையும் அவருடைய அரசாங்கத்தையும் பற்றிப் பேசுவதற்கு நாம் எப்போதுமே தயாராக இருக்க வேண்டும். (மத். 24:14; ரோமர் 10:14-ஐ வாசியுங்கள்.) அப்படிச் செய்தால், இயேசுவைப் போல் நடந்துகொள்கிறோம் என்று அர்த்தம். சொல்லப்போனால், இயேசு பூமிக்கு வந்ததற்கான முக்கியக் காரணங்களில் ஒன்றே தன்னுடைய தகப்பனைப் பற்றிய உண்மைகளை மக்களுக்குச் சொல்வதுதான்! (யோவா. 18:37) ஆனால், அந்தச் செய்தியை நாம் எப்படிச் சொல்கிறோம் என்பதும் முக்கியம். மற்றவர்களிடம் யெகோவாவைப் பற்றிப் பேசும்போது “சாந்தத்தோடும் ஆழ்ந்த மரியாதையோடும்” பேச வேண்டும். கேட்பவர்களின் உணர்வுகளுக்கும் நம்பிக்கைகளுக்கும் மதிப்பு கொடுக்க வேண்டும். (1 பே. 3:15) இப்படிச் செய்யும்போது, வெறுமனே பேசிக்கொண்டிருக்காமல் அவர்களுக்குக் கற்றுக்கொடுப்போம்; மனதைத் தொடும் விதத்தில் பேசுவோம்.
4. நீதிமொழிகள் 9:9 சொல்கிறபடி, மூப்பர்களுடைய பேச்சு மற்றவர்களுக்கு எப்படிப் பிரயோஜனமாக இருக்கும்?
4 ஒரு சகோதரனுக்கோ சகோதரிக்கோ ஆலோசனை தேவைப்பட்டால், அதைக் கொடுப்பதற்கு மூப்பர்கள் தயங்கக் கூடாது. பேசுவதற்கான நேரம் அது! அதேசமயத்தில், சரியான நேரத்தில் அந்த ஆலோசனையைக் கொடுக்க வேண்டும். ஒருவேளை, அந்த நபரைச் சுற்றி யாரும் இல்லாத ஒரு நேரத்தை மூப்பர்கள் தேர்ந்தெடுக்கலாம். அப்படிச் செய்யும்போது அவர் தர்மசங்கடப்பட மாட்டார். அதுமட்டுமல்ல, அவருடைய சுயமரியாதையைக் குறைத்துவிடாதபடி பேசுவதற்கு மூப்பர்கள் கவனமாக இருப்பார்கள். அதற்காக, பைபிளிலிருந்து ஆலோசனைகளைக் கொடுக்கத் தயங்க மாட்டார்கள். (நீதிமொழிகள் 9:9-ஐ வாசியுங்கள்.) பேச வேண்டிய நேரத்தில் பேசுவதற்கு நமக்குத் தைரியம் தேவை. ஏன்? வித்தியாசமாக நடந்துகொண்ட இரண்டு பேருடைய உதாரணங்களைப் பார்க்கலாம். ஒருவர், தன்னுடைய மகன்களுக்கு ஆலோசனை கொடுக்க வேண்டியிருந்தது. இன்னொருவர், ராஜாவாக ஆகப்போகிறவரிடம் பேச வேண்டியிருந்தது.
5. பேச வேண்டிய நேரத்தில் ஏலி எப்படிப் பேசாமல் இருந்துவிட்டார்?
5 தலைமைக் குரு ஏலிக்கு இரண்டு மகன்கள் இருந்தார்கள். அவர்களை அவர் நெஞ்சார நேசித்தார். ஆனால், அவருடைய மகன்களுக்கு யெகோவாவின் மேல் துளிகூட மரியாதை இல்லை. வழிபாட்டுக் கூடாரத்தில் முக்கியப் பொறுப்பில் அவர்கள் இருந்தார்கள். அதாவது, குருமார்களாக சேவை செய்தார்கள். ஆனால், தங்களுடைய அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தினார்கள். யெகோவாவுக்குக் கொடுக்கப்பட்ட பலிகளை அவர்கள் கொஞ்சம்கூட மதிக்கவில்லை. அதுமட்டுமல்ல, பெண்களோடு பாலியல் முறைகேட்டில் ஈடுபட்டார்கள். அதுவும், அப்பட்டமாக அப்படிச் செய்தார்கள்! (1 சா. 2:12-17, 22) திருச்சட்டத்தின்படி, அவர்களுக்கு மரண தண்டனைதான் கிடைத்திருக்க வேண்டும். ஆனால், ஏலி அவர்களை லேசாகத் திட்டியதோடு நிறுத்திக்கொண்டார். வழிபாட்டுக் கூடாரத்தில் தொடர்ந்து சேவை செய்யவும் அனுமதித்தார். (உபா. 21:18-21) ஏலி இப்படி நடந்துகொண்டது யெகோவாவுக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை. “நீ ஏன் என்னைவிட உன் மகன்களுக்கு அதிக மதிப்புக் கொடுக்கிறாய்?” என்று கேட்டார். அதோடு, ஏலியின் கேடுகெட்ட இரண்டு மகன்களையும் கொல்வதென்று முடிவெடுத்தார்.—1 சா. 2:29, 34.
6. ஏலியிடமிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?
6 ஏலியிடமிருந்து முக்கியமான பாடத்தைக் கற்றுக்கொள்கிறோம். நம்முடைய நண்பரோ சொந்தக்காரரோ குடும்பத்தாரோ யெகோவாவின் சட்டத்துக்குக் கீழ்ப்படியாமல் போனால், அதைப் பார்த்துக்கொண்டு சும்மா இருந்துவிடக் கூடாது. யெகோவாவின் நெறிமுறைகளைப் பற்றி அவருக்கு ஞாபகப்படுத்த வேண்டும். அடுத்து, யெகோவாவின் பிரதிநிதிகளிடம் அவர் உதவி கேட்கிறாரா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். (யாக். 5:14) ஏலியைப் போல் நாம் நடந்துகொள்ளக் கூடாது. அதாவது, யெகோவாவைவிட, தவறு செய்த நபருக்கு அதிக மதிப்பு கொடுத்துவிடக் கூடாது. ஒருவரைத் திருத்துவதற்கு நிச்சயம் தைரியம் தேவை. ஆனால், நம்முடைய முயற்சிகளுக்குக் கண்டிப்பாக நல்ல பலன்கள் கிடைக்கும். இப்போது, அபிகாயிலுடைய உதாரணத்தைப் பார்க்கலாம். ஏலியைப் போல் இல்லாமல் இவள் எப்படிச் சரியானதைச் செய்தாள் என்று கவனிக்கலாம்.
7. தாவீதிடம் பேச வேண்டும் என்று அபிகாயில் ஏன் நினைத்தாள்?
7 செல்வச் சீமானான நாபாலின் மனைவிதான் அபிகாயில்! சவுல் ராஜாவிடமிருந்து தாவீது ஓடி ஒளிந்துகொண்டிருந்த சமயத்தில், அவரும் அவருடைய ஆட்களும் நாபாலின் மேய்ப்பர்களோடு நேரம் செலவு செய்தார்கள். கொள்ளைக்கூட்டத்திடமிருந்து நாபாலின் ஆடுகளைப் பாதுகாத்தார்கள். இதற்கு நாபால் நன்றியோடு இருந்தானா? இல்லை! தாவீது தன்னுடைய ஆட்களுக்குக் கொஞ்சம் உணவையும் தண்ணீரையும் தரும்படி கேட்டபோது, அவனுக்குக் கோபம் பொத்துக்கொண்டு வந்தது. தாவீதின் ஆட்களை கன்னாபின்னாவென்று திட்டி அனுப்பிவிட்டான். (1 சா. 25:5-8, 10-12, 14) அதனால், நாபாலின் வீட்டில் இருக்கும் எல்லா ஆண்களையும் தீர்த்துக்கட்ட வேண்டும் என்று தாவீது முடிவு செய்தார். (1 சா. 25:13, 22) இப்போது, தாவீதின் கையிலிருந்து அத்தனை பேரையும் காப்பாற்ற வேண்டுமே! இது பேசுவதற்கான நேரம் என்பதை அபிகாயில் புரிந்துகொண்டாள். உடனே செயலில் இறங்கினாள். பசியோடும் கோபத்தோடும் இருந்த தாவீதையும் அவருடைய 400 ஆட்களையும் சந்திக்க தைரியமாகக் கிளம்பினாள்.
8. அபிகாயிலிடமிருந்து என்ன கற்றுக்கொள்கிறோம்?
8 அபிகாயில் தாவீதைச் சந்தித்தபோது, தைரியமாகவும் மரியாதையாகவும் பேசினாள். தான் சொல்வதை அவர் ஏற்றுக்கொள்ளும் விதத்திலும் பேசினாள். தன்மீது எந்தத் தவறும் இல்லை என்றாலும் அவரிடம் மன்னிப்பு கேட்டாள். அவரிடம் இருந்த நல்ல குணங்களைப் பற்றி எடுத்து சொன்னாள். உதவிக்காக யெகோவாவை நம்பியிருந்தாள். (1 சா. 25:24, 26, 28, 33, 34) நமக்கு என்ன பாடம்? யாராவது ஒருவர் தவறான பாதையில் போய்க்கொண்டிருந்தால், அதைப் பற்றி அவரிடம் பேசுவதற்கு அபிகாயிலைப் போலவே நமக்கும் தைரியம் தேவை. (சங். 141:5) நாம் மரியாதையோடு பேச வேண்டும். அதேசமயத்தில் தைரியமாகவும் இருக்க வேண்டும். இப்படி அன்பாக ஆலோசனை கொடுக்கும்போது, நாம் அவருடைய உண்மையான நண்பர் என்பதை நிரூபிப்போம்.—நீதி. 27:17.
9-10. மற்றவர்களுக்கு ஆலோசனை கொடுக்கும்போது மூப்பர்கள் எதை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்?
9 முக்கியமாக, மூப்பர்களுக்குத் தைரியம் தேவை! சபையில் இருக்கும் ஒருவர் தவறான பாதையில் அடியெடுத்து வைக்கும்போது, அதைப் பற்றி அவரிடம் அவர்கள் தைரியமாகப் பேச வேண்டும். (கலா. 6:1) தாங்களும் பாவ இயல்புள்ளவர்கள் என்பதையும், தங்களுக்கும் ஒருநாள் ஆலோசனை தேவைப்படலாம் என்பதையும் மூப்பர்கள் மனத்தாழ்மையோடு ஒத்துக்கொள்கிறார்கள். அதற்காக, தேவைப்படும்போது மற்றவர்களை அவர்கள் கண்டிக்காமல் இருப்பதில்லை. (2 தீ. 4:2; தீத். 1:9) ஒருவருக்கு ஆலோசனை கொடுக்கும்போது, தங்களிடம் இருக்கும் பேச்சு என்ற வரத்தைத் திறமையாகப் பயன்படுத்தி அவருக்குக் கற்றுக்கொடுக்கிறார்கள்; பொறுமையாகப் பேசுகிறார்கள். சகோதர சகோதரிகளின் மேல் அன்பு இருப்பதால்தான் ஆலோசனை கொடுக்கிறார்கள். (நீதி. 13:24) ஆனால், அதைவிட முக்கியமான காரணம் ஒன்று இருக்கிறது. யெகோவாவின் நெறிமுறைகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் அவரை மகிமைப்படுத்துவதும், தீங்கிலிருந்து சபையைப் பாதுகாப்பதும்தான் அது!—அப். 20:28.
10 எப்போது பேச வேண்டும் என்பதை இதுவரை பார்த்தோம். இருந்தாலும், சிலசமயங்களில் நாம் எதுவுமே பேசாமல் இருப்பது நல்லது. அதுபோன்ற சூழ்நிலைகளில் என்னென்ன சவால்கள் வரலாம்?
நாம் எப்போது பேசாமல் இருக்க வேண்டும்?
11. எந்த உதாரணத்தை யாக்கோபு பயன்படுத்தியிருக்கிறார், அது ஏன் பொருத்தமானது?
11 நாக்கை அடக்குவது நமக்குச் சவாலாக இருக்கலாம். இதைப் புரிந்துகொள்வதற்கு ஓர் உதாரணத்தை யாக்கோபு பயன்படுத்தினார். “பேச்சில் தவறு செய்யாதவன் எவனோ அவனே பரிபூரணமான மனிதன்; அவன் தன்னுடைய முழு உடலையும் கடிவாளம்போட்டு அடக்க முடிகிறவனாக இருப்பான்” என்று அவர் சொன்னார். (யாக். 3:2, 3) குதிரையின் வாயிலும் தலையிலும் நீண்ட வாருடன் சேர்த்து கட்டப்பட்டிருப்பதுதான் கடிவாளம்! வாரைப் பிடித்து இழுப்பதன் மூலம் ஒருவரால் குதிரையை ஓட்டவும் முடியும், நிறுத்தவும் முடியும். ஆனால் வாரை சரியாகப் பயன்படுத்தவில்லை என்றால், குதிரை கன்னாபின்னாவென்று ஓடிவிடும். பிறகு குதிரையும் காயமடையும், ஓட்டுபவரும் காயமடைவார். அதேபோல்தான் நம்முடைய பேச்சும்! நாம் அதைக் கட்டுப்படுத்தவில்லை என்றால், ஆபத்துதான்!! நம்முடைய வாய்க்கு கடிவாளம் போட வேண்டிய சில சூழ்நிலைகளைப் பற்றி இப்போது பார்க்கலாம்.
12. நம்முடைய வாய்க்கு எப்போது கடிவாளம் போட வேண்டும்?
12 ரகசியமாக வைக்க வேண்டிய ஒரு விஷயம் ஒரு சகோதரருக்கோ சகோதரிக்கோ தெரிந்திருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். இப்போது என்ன செய்வீர்கள்? உதாரணத்துக்கு, நம்முடைய வேலை தடை செய்யப்பட்ட ஒரு நாட்டில் வாழ்கிற ஒரு சகோதரரைச் சந்தித்தால், அந்த நாட்டில் நம்முடைய வேலைகள் எப்படி நடக்கின்றன என்று கேட்க ஆசைப்படுவீர்களா? நல்ல எண்ணத்தோடு நாம் அப்படி கேட்க நினைக்கலாம். அங்கிருக்கும் சகோதர சகோதரிகள்மேல் அன்பு இருப்பதால், அவர்களுக்கு என்ன நடக்கிறது என்று தெரிந்துகொள்ளவும் நாம் விரும்பலாம். அவர்களுடைய பிரச்சினைகளைச் சொல்லி ஜெபம் செய்வதற்காகவும் நாம் அப்படிக் கேட்க நினைக்கலாம். ஆனால், நம்முடைய வாய்க்குக் கடிவாளம் போட வேண்டிய சமயம் இது! ரகசியமாக வைக்கப்பட வேண்டிய விஷயத்தைச் சொல்லும்படி நாம் ஒருவரைக் கட்டாயப்படுத்தினால், நமக்கு அன்பில்லை என்றுதான் அர்த்தம். யாரைக் கட்டாயப்படுத்துகிறோமோ அவர்மீதும், தகவல்களை அவர் ரகசியமாக வைத்துக்கொள்வார் என்று நம்புகிற சகோதர சகோதரிகளின் மீதும் நமக்கு அன்பில்லை என்று அர்த்தம். நம்முடைய வேலை தடை செய்யப்பட்டிருக்கும் நாடுகளில் இருக்கிற சகோதர சகோதரிகளின் கஷ்டத்தைக் கூட்ட வேண்டும் என்று நாம் நினைக்க மாட்டோம். அதேபோல், அதுபோன்ற நாடுகளில் இருக்கிற சகோதரர்களும், தாங்கள் ஊழியம் செய்கிற விதத்தைப் பற்றியோ கூட்டங்களை நடத்தும் விதத்தைப் பற்றியோ வழிபாடோடு சம்பந்தப்பட்ட மற்ற விஷயங்களைப் பற்றியோ மற்றவர்களிடம் சொல்ல விரும்ப மாட்டார்கள்.
13. நீதிமொழிகள் 11:13 சொல்வதுபோல், மூப்பர்கள் என்ன செய்ய வேண்டும், ஏன்?
13 நீதிமொழிகள் 11:13-ல் இருக்கிற நியமத்தை முக்கியமாக மூப்பர்கள் கடைப்பிடிக்க வேண்டும்; சில விஷயங்களை அவர்கள் ரகசியமாக வைக்க வேண்டும். (வாசியுங்கள்.) கல்யாணமான ஒரு மூப்பருக்கு இது சவாலாக இருக்கலாம். ஏன்? பொதுவாக, தங்கள் உறவை பலமாக வைத்துக்கொள்வதற்குத் தம்பதிகள் மனம்விட்டு பேசிக்கொள்வார்கள். ஒளிவுமறைவில்லாமல், தங்களுடைய யோசனைகளையும் உணர்வுகளையும் கவலைகளையும் பகிர்ந்துகொள்வார்கள். ஆனால் இதுபோன்ற சமயங்களில், சபையில் இருப்பவர்களைப் பற்றிய “ரகசியத்தை” தன் மனைவியிடம் சொல்லக் கூடாது என்பதை ஒரு மூப்பர் மனதில் வைப்பார். ஒருவேளை, அவர் ரகசியத்தைக் காத்துக்கொள்ளவில்லை என்றால், மற்றவர்களின் நம்பிக்கையை இழந்துவிடுவார். அவருக்கு இருக்கும் நல்ல பெயரும் கெட்டுவிடும். சபையில் மூப்பர்களுக்கு முக்கியப் பொறுப்புகள் கொடுக்கப்பட்டிருப்பதால், அவர்கள் ‘இரட்டை நாக்கு இல்லாதவர்களாக,’ அதாவது பொய் பேசாதவர்களாக, இருக்க வேண்டும். (1 தீ. 3:8, அடிக்குறிப்பு) வேறு வார்த்தைகளில் சொன்னால், மற்றவர்களை ஏமாற்றுகிறவர்களாகவோ புறணி பேசுகிறவர்களாகவோ இருக்கக் கூடாது. ஒரு மூப்பர் தன் மனைவியை உண்மையிலேயே நேசிக்கிறார் என்றால், அவள் தெரிந்துகொள்ளக் கூடாத விஷயங்களைச் சொல்லி அவளைக் கஷ்டப்படுத்த மாட்டார்.
14. ஒரு மூப்பர் தன்னுடைய நற்பெயரைக் காத்துக்கொள்வதற்கு அவருடைய மனைவி எப்படி உதவுகிறாள்?
14 ரகசியமாக வைக்கப்பட வேண்டிய விஷயங்களைத் தன்னிடம் சொல்லும்படி ஒரு மனைவி தன் கணவரைக் கட்டாயப்படுத்தாமல் இருப்பதன் மூலம் அவருடைய நற்பெயரைக் காப்பாற்றுகிறாள். இப்படிப்பட்ட ஒரு மனைவி, தன்னுடைய கணவரை ஆதரிக்கிறாள். அதோடு, தன் கணவரை நம்பி சில ரகசியமான விஷயங்களைச் சொன்ன சகோதர சகோதரிகளையும் மதிக்கிறாள். எல்லாவற்றுக்கும் மேலாக, சபையில் சமாதானமும் ஒற்றுமையும் பெருகுவதற்கு உதவுவதன் மூலம் யெகோவாவின் மனதைச் சந்தோஷப்படுத்துகிறாள்.—ரோ. 14:19.
நாம் என்ன பேசுகிறோம் என்பதைப் பற்றி யெகோவா என்ன நினைக்கிறார்?
15. யோபுவின் மூன்று நண்பர்களைப் பற்றி யெகோவா என்ன நினைத்தார், ஏன்?
15 நாம் எப்படிப் பேச வேண்டும்... எப்போது பேச வேண்டும்... என்பதைப் பற்றி யோபு புத்தகத்திலிருந்து நிறைய கற்றுக்கொள்ளலாம். யோபுவை பிரச்சினைகள் அடுத்தடுத்து இடியாய்த் தாக்கியபோது, அவருக்கு ஆறுதல் சொல்லவும் ஆலோசனை தரவும் நான்கு பேர் வந்தார்கள். அவர்கள் ரொம்ப நேரம் எதுவும் பேசாமல், பிறகு பேச ஆரம்பித்தார்கள். அவர்களில் மூன்று பேரான எலிப்பாஸ், பில்தாத், மற்றும் சோப்பாரின் வார்த்தைகளைப் படிக்கும்போது, யோபுவுக்கு எப்படி உதவலாம் என்று யோசிப்பதற்கு அமைதியாக இருந்த அந்த நேரத்தை அவர்கள் பயன்படுத்தவில்லை என்று தெரிகிறது. அதற்குப் பதிலாக, யோபுவை எப்படிக் குற்றம்சாட்டலாம் என்பதைப் பற்றிதான் யோசித்திருக்கிறார்கள். அவர்கள் சொன்னதில் சில உண்மைகள் இருந்தாலும், யெகோவாவைப் பற்றியும் யோபுவைப் பற்றியும் அவர்கள் சொன்ன விஷயங்கள் அநியாயமாக இருந்தன. யோபு மோசமானவர் என்று அவர்கள் முத்திரை குத்தினார்கள். (யோபு 32:1-3) அப்போது யெகோவாவுக்கு எப்படி இருந்தது? அந்த மூன்று பேரின் மேலும் அவருக்குப் பயங்கரக் கோபம் வந்தது. அவர்களை முட்டாள்கள் என்று அவர் சொன்னார். அதோடு, யோபுவிடம் போகும்படியும் தங்களுக்காக ஜெபம் செய்யும்படி அவரிடம் கேட்கும்படியும் அவர்களிடம் சொன்னார்.—யோபு 42:7-9.
16. எலிப்பாஸ், பில்தாத், மற்றும் சோப்பாரிடமிருந்து நமக்கு என்ன பாடம்?
16 நாம் என்ன செய்யக் கூடாது என்பதை எலிப்பாஸ், பில்தாத், மற்றும் சோப்பாரிடமிருந்து கற்றுக்கொள்கிறோம். முதலாவது, நம்முடைய சகோதர சகோதரிகளை நியாயந்தீர்க்கக் கூடாது. (மத். 7:1-5) பேசுவதற்கு முன்பு, அவர்கள் சொல்வதைக் கவனமாகக் கேட்க வேண்டும். அப்போதுதான், அவர்களுடைய சூழ்நிலையை நன்றாகப் புரிந்துகொள்ள முடியும். (1 பே. 3:8) இரண்டாவது, நாம் பேசும்போது அன்பான வார்த்தைகளைப் பயன்படுத்துகிறோமா, சரியான தகவல்களைச் சொல்கிறோமா என்பதை நிச்சயப்படுத்திக்கொள்ள வேண்டும். (எபே. 4:25) மூன்றாவது, நாம் ஒருவருக்கொருவர் என்ன பேசிக்கொள்கிறோம் என்பதை யெகோவா கவனமாகக் கேட்கிறார் என்பதை ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும்.
17. எலிகூவிடமிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?
17 யோபுவைப் பார்க்க வந்த நான்காவது நபர், ஆபிரகாமின் சொந்தக்காரரான எலிகூ! யோபுவும் மற்ற மூன்று ஆண்களும் பேசியதை அவர் கவனித்தார். யோபுவுக்கு அன்பான, அதேசமயத்தில் நேரடியான ஆலோசனை கொடுத்ததிலிருந்து அவர்கள் பேசியதை எலிகூ கவனமாகக் கேட்டிருக்கிறார் என்பது தெரிகிறது. யோபு தன்னுடைய யோசனைகளைச் சரி செய்வதற்கு அந்த ஆலோசனைகள் உதவின. (யோபு 33:1, 6, 17) தன்னையோ மற்ற மனிதர்களையோ அல்ல, யெகோவாவை உயர்த்த வேண்டும் என்பதுதான் எலிகூவின் முக்கிய விருப்பமாக இருந்தது. (யோபு 32:21, 22; 37:23, 24) அமைதியாக இருந்து மற்றவர்கள் பேசுவதைக் கவனமாகக் கேட்பதற்கு ஒரு நேரம் இருக்கிறது என்பதை எலிகூவிடமிருந்து கற்றுக்கொள்கிறோம். (யாக். 1:19) அதுமட்டுமல்ல, மற்றவர்களுக்கு ஆலோசனை கொடுக்கும்போது, நம்மை அல்ல யெகோவாவை மகிமைப்படுத்துவதுதான் நம்முடைய முக்கியக் குறிக்கோளாக இருக்க வேண்டும்.
18. பேச்சுத் திறன் என்ற வரத்தை நாம் மதிக்கிறோம் என்பதை எப்படிக் காட்டலாம்?
18 எப்போது பேச வேண்டும், எப்படிப் பேச வேண்டும் என்ற விஷயத்தில் பைபிள் அறிவுரைகளின்படி நடக்கும்போது, பேச்சு என்ற வரத்தை நாம் மதிக்கிறோம் என்பதைக் காட்டுகிறோம். “சரியான சமயத்தில் சொல்லும் வார்த்தை வெள்ளித் தட்டில் வைக்கப்பட்ட தங்க ஆப்பிள் பழங்களுக்குச் சமம்” என்று எழுதும்படி ஞானியான சாலொமோன் ராஜாவை யெகோவா தூண்டினார். (நீதி. 25:11) மற்றவர்கள் சொல்வதைக் கவனமாகக் கேட்கும்போதும், நன்றாக யோசித்துப் பேசும்போதும் நம்முடைய வார்த்தைகள் தங்க ஆப்பிள் பழங்களைப் போல இருக்கும். அதாவது, மதிப்புள்ளவையாகவும் அழகானவையாகவும் இருக்கும். அப்போது, நாம் கொஞ்சம் பேசினாலும் சரி, நிறைய பேசினாலும் சரி, நம்முடைய பேச்சு மற்றவர்களைப் பலப்படுத்தும். யெகோவாவும் நம்மைப் பார்த்து பெருமைப்படுவார். (நீதி. 23:15; எபே. 4:29) யெகோவா கொடுத்திருக்கும் பேச்சுத் திறன் என்ற வரத்துக்கு நன்றி காட்ட இதைவிட சிறந்த வழி வேறெதாவது இருக்க முடியுமா?
-