படிப்புக் கட்டுரை 49
நாம் என்றென்றும் வாழலாம்
‘கடவுள் தரும் அன்பளிப்பு முடிவில்லாத வாழ்வு.’—ரோ. 6:23.
பாட்டு 147 பூஞ்சோலை வாழ்வு நிச்சயம்!
இந்தக் கட்டுரையில்...a
1. நம்மை என்றென்றும் வாழ வைக்கப்போவதாக யெகோவா வாக்குக் கொடுத்திருப்பதைப் பற்றி ஆழமாக யோசிப்பது ஏன் நல்லது?
யெகோவா தனக்குக் கீழ்ப்படிகிறவர்களுக்கு ‘முடிவில்லாத வாழ்வை’ தரப்போவதாக வாக்குக் கொடுத்திருக்கிறார். (ரோ. 6:23) இதைப் பற்றி நாம் ஆழமாக யோசிக்கும்போது, அவர்மேல் நமக்கு இருக்கும் அன்பு ரொம்ப அதிகமாகும். கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்: நம்முடைய அப்பாவுக்கு நம்மேல் எவ்வளவு அன்பு இருந்திருந்தால் நாம் அவரைவிட்டுப் பிரியவே கூடாது என்பதற்காக இப்படி ஒரு வாக்குறுதியைக் கொடுத்திருப்பார்!
2. முடிவில்லாத வாழ்வு என்ற வாக்குறுதி நமக்கு எப்படி உதவி செய்கிறது?
2 முடிவில்லாத வாழ்க்கையைத் தரப்போவதாகக் கடவுள் கொடுத்திருக்கும் வாக்குறுதி, இப்போது இருக்கும் கஷ்டங்களைச் சகித்துக்கொள்ள நமக்கு உதவி செய்கிறது. நம்முடைய எதிரிகள் நம்மைக் கொன்றுவிடுவதாக மிரட்டினால்கூட நம்முடைய விசுவாசத்தை நாம் விட்டுக்கொடுக்க மாட்டோம். ஏன்? ஒரு காரணம், யெகோவாவுக்கு உண்மையாக இருந்து நாம் இறந்துபோனால்கூட அவர் நம்மை மறுபடியும் உயிரோடு கொண்டுவந்து என்றென்றும் வாழ வைப்பார் என்று நமக்குத் தெரியும். (யோவா. 5:28, 29; 1 கொ. 15:55-58; எபி. 2:15) நாம் என்றென்றும் வாழ்வோம் என்று ஏன் நம்பலாம்? இப்போது சில காரணங்களைப் பார்க்கலாம்.
யெகோவா என்றென்றும் வாழ்கிறார்
3. யெகோவாவால் நம்மை என்றென்றும் வாழ வைக்க முடியும் என்று ஏன் உறுதியாகச் சொல்லலாம்? (சங்கீதம் 102:12, 24, 27)
3 யெகோவாவால் நம்மை என்றென்றும் வாழ வைக்க முடியும் என்று நமக்குத் தெரியும். ஏனென்றால், அவர்தான் நமக்கு உயிர் கொடுத்தவர். அதோடு, அவர் என்றென்றும் வாழ்ந்துகொண்டிருக்கிறார். (சங். 36:9) யெகோவாவுக்கு ஆரம்பமும் இல்லை, முடிவும் இல்லை என்பதைக் காட்டும் சில வசனங்களை இப்போது நாம் பார்க்கலாம். யெகோவா “நித்திய நித்தியமாக” இருக்கிறார் என்று சங்கீதம் 90:2 (அடிக்குறிப்பு) சொல்கிறது. 102-வது சங்கீதமும் இதே விஷயத்தைத்தான் சொல்கிறது. (சங்கீதம் 102:12, 24, 27-ஐ வாசியுங்கள்.) “யெகோவாவே, நீங்கள் என்றென்றும் இருப்பவர். என் கடவுளே, பரிசுத்தமான கடவுளே, உங்களுக்குச் சாவு என்பதே இல்லை” என்று ஆபகூக் தீர்க்கதரிசியும் யெகோவாவைப் பற்றி எழுதியிருக்கிறார்.—ஆப. 1:12.
4. யெகோவா என்றென்றும் இருந்திருக்கிறார் என்பதைப் புரிந்துகொள்வது கஷ்டமாக இருந்தால் அதை நினைத்துக் கவலைப்பட வேண்டுமா? விளக்குங்கள்.
4 யெகோவா ‘என்றென்றும் இருந்திருக்கிறார்’ என்பதைப் புரிந்துகொள்வது உங்களுக்குக் கஷ்டமாக இருக்கிறதா? (ஏசா. 40:28) கவலைப்படாதீர்கள், உங்களைப் போலவே நிறைய பேருக்கு அது கஷ்டமாகத்தான் இருக்கிறது. யெகோவா “எவ்வளவு காலம் வாழ்ந்திருக்கிறார் என்பதை நம்மால் கற்பனைகூட செய்ய முடியாது” என்று எலிகூ சொன்னார். (யோபு 36:26) ஆனால், ஒரு விஷயம் நமக்குப் புரியவில்லை என்பதற்காக அது உண்மை இல்லை என்று ஆகிவிடாது. உதாரணத்துக்கு, ஒளி எப்படி வேலை செய்கிறது, அதை நாம் எப்படிப் பார்க்கிறோம் என்பதெல்லாம் நமக்கு முழுமையாகப் புரியாமல் இருக்கலாம். அதற்காக ஒளியே இல்லை என்று நாம் சொல்ல முடியுமா? கண்டிப்பாக முடியாது. அதேபோல், யெகோவா என்றென்றும் இருந்திருக்கிறார்... இனியும் என்றென்றும் இருப்பார்... என்பதை நம்மால் முழுமையாக புரிந்துகொள்ள முடியாமல் இருக்கலாம். அதற்காக அது உண்மையில்லை என்று ஆகிவிடாது. நமக்குப் புரிகிறதோ இல்லையோ அதுதான் உண்மை. (ரோ. 11:33-36) யெகோவா “தன்னுடைய வல்லமையினால் பூமியைப் படைத்தார், . . . வானத்தை விரித்தார்” என்று பைபிள் சொல்கிறது. (எரே. 51:15; அப். 17:24) அப்படியென்றால், சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் என இந்தப் பிரபஞ்சத்தில் இருக்கிற எல்லாமே படைக்கப்படுவதற்கு முன்பே யெகோவா இருந்திருக்கிறார். நம்மால் என்றென்றும் வாழ முடியும் என நம்புவதற்கு வேறென்ன காரணம் இருக்கிறது?
என்றென்றும் வாழ்வதற்காகத்தான் படைக்கப்பட்டிருக்கிறோம்
5. முதல் மனித ஜோடிக்கு என்ன நம்பிக்கை இருந்தது?
5 மனிதர்களைத் தவிர எல்லா உயிரினங்களும் ஒருநாள் சாகிற மாதிரிதான் யெகோவா படைத்திருக்கிறார். மனிதர்களை அவர் என்றென்றும் வாழும் விதமாகப் படைத்திருக்கிறார். ஆனால், ஆதாமைப் படைத்த பிறகு அவனிடம், “நன்மை தீமை அறிவதற்கான மரத்தின் பழத்தை நீ சாப்பிடக் கூடாது. அப்படிச் சாப்பிட்டால், அதே நாளில் கண்டிப்பாகச் செத்துப்போவாய்” என்று யெகோவா சொல்லியிருந்தார். (ஆதி. 2:17) ஆதாமும் ஏவாளும் யெகோவாவின் சொல் பேச்சைக் கேட்டிருந்தால், அவர்கள் செத்துப்போயிருக்க மாட்டார்கள். ‘வாழ்வுக்கான மரத்தின்’ பழத்தை ஒருநாள் யெகோவா அவர்களுக்கு சாப்பிடக் கொடுத்திருப்பார். அப்போது, ‘என்றென்றும் வாழ்வார்கள்’ என்ற உத்தரவாதம் அவர்களுக்குக் கிடைத்திருக்கும்.b—ஆதி. 3:22.
6-7. (அ) கொஞ்ச நாட்கள் வாழ்ந்துவிட்டு சாவதற்காக மனிதர்களை கடவுள் படைக்கவில்லை என்று வேறு எதை வைத்து சொல்கிறோம்? (ஆ) பூஞ்சோலை பூமியில் நீங்கள் என்னவெல்லாம் செய்ய ஏங்குகிறீர்கள்? (படங்களைப் பாருங்கள்.)
6 நம் வாழ்நாளில் நம்முடைய மூளை எத்தனையோ தகவல்களைச் சேகரிக்கிறது. ஆனால், ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், அதைவிடப் பல மடங்கு அதிகமான தகவல்களை நம்முடைய மூளையால் சேகரிக்க முடியும். இதற்கான ஆதாரங்களை சில ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். இது சம்பந்தமாக 2010-ல் சயன்டிஃபிக் அமெரிக்கன் மைன்ட் பத்திரிகையில் வந்த கட்டுரையில் ஒரு விஷயம் சொல்லப்பட்டிருந்தது. ஒரு கணக்குப்படி, நம்முடைய மூளையால் 25 லட்சம் கிகாபைட் (gb) அளவுக்குத் தகவல்களைச் சேகரிக்க முடியுமாம்! அதாவது, 300-க்கும் அதிகமான வருஷம் ஒரு டிவியை ஓடவிட்டு அதை ரெக்கார்ட் பண்ணினால்கூட அதை நம்முடைய மூளையில் சேகரிக்க முடியுமாம்! ஆனால், இவர்கள் சொல்கிற கணக்குக்கூட ரொம்பவே குறைவாக இருக்க வாய்ப்பிருக்கிறது. இருந்தாலும், அது ஒரு விஷயத்தைத் தெளிவாகக் காட்டுகிறது. வெறும் 70, 80 வருஷங்களுக்கான தகவல்களை மட்டுமல்ல, இன்னும் எக்கச்சக்கமான தகவல்களைச் சேகரிக்கிற திறனோடுதான் யெகோவா நம்முடைய மூளையைப் படைத்திருக்கிறார் என்பதைக் காட்டுகிறது.—சங். 90:10.
7 அதுமட்டுமல்ல, என்றென்றும் வாழ வேண்டும் என்ற ஆசையோடும்தான் யெகோவா மனிதர்களைப் படைத்திருக்கிறார். “என்றென்றும் வாழும் எண்ணத்தையும் மனுஷர்களின் இதயத்தில் வைத்திருக்கிறார்” என்று பைபிள் சொல்கிறது. (பிர. 3:11) நாம் மரணத்தை ஒரு எதிரியாகப் பார்ப்பதற்கு இதுவும் ஒரு காரணம். (1 கொ. 15:26) நமக்கு ஏதாவது தீராத வியாதி வந்தால், ‘சரி பரவாயில்ல, கொஞ்சநாள் இருந்துட்டு செத்துப் போயிடலாம்’ என்று யோசிப்போமா? கண்டிப்பாக மாட்டோம். உடனே டாக்டரைப் போய்ப் பார்ப்போம். அந்த வியாதியைச் சரிப்படுத்த ஏதாவது மாத்திரை மருந்துகளை எடுத்துக்கொள்வோம். சொல்லப்போனால், சாகாமல் இருப்பதற்கு நம்மால் முடிந்த எல்லாவற்றையும் நாம் செய்வோம். அதே மாதிரி, நமக்குப் பிடித்தவர்கள் யாராவது இறந்துபோனால், அவர்கள் சிறியவர்களோ பெரியவர்களோ, நாம் துடிதுடித்துப் போய்விடுவோம். அந்த வலி நம்மைவிட்டுப் போகவே போகாது. (யோவா. 11:32, 33) மனிதர்கள் என்றென்றும் வாழ வேண்டும் என்பது கடவுளுடைய விருப்பமே இல்லை என்றால், அப்படி வாழ்வதற்கான ஆசையையும் திறனையும் அவர் கொடுத்திருப்பாரா? கண்டிப்பாகக் கொடுத்திருக்க மாட்டார். நாம் என்றென்றும் வாழ்வோம் என்று நம்புவதற்கு இன்னும் சில காரணங்களும் இருக்கின்றன. மனிதர்களை என்ன நோக்கத்தோடு யெகோவா படைத்தாரோ அது மாறவே இல்லை என்பதைக் காட்டுவதற்காக யெகோவா அன்றைக்கும் இன்றைக்கும் சில விஷயங்களைச் செய்திருக்கிறார். அதைப் பற்றி இப்போது பார்க்கலாம்.
யெகோவாவின் விருப்பம் மாறவே இல்லை
8. யெகோவாவின் விருப்பத்தைப் பற்றி ஏசாயா 55:11-லிருந்து நாம் என்ன தெரிந்துகொள்கிறோம்?
8 ஆதாமும் ஏவாளும் பாவம் செய்ததால் அவர்களுடைய பிள்ளைகள் எல்லாருக்கும் சாவு வந்தது. ஆனால், அதற்காக யெகோவா தன்னுடைய விருப்பத்தை மாற்றிக்கொள்ளவில்லை. (ஏசாயா 55:11-ஐ வாசியுங்கள்.) தனக்கு உண்மையாக இருப்பவர்களுக்கு முடிவில்லாத வாழ்க்கையைக் கொடுக்க வேண்டும் என்பதுதான் இப்போதும் அவருடைய ஆசை. இதை நாம் எப்படிச் சொல்கிறோம்? யெகோவா தன்னுடைய விருப்பத்தை நிறைவேற்ற நிறைய விஷயங்களைச் சொல்லியிருக்கிறார், செய்திருக்கிறார். அதைத் தெரிந்துகொள்ளும்போது நமக்கே அது புரியும்.
9. யெகோவா என்ன வாக்குக் கொடுத்திருக்கிறார்? (தானியேல் 12:2, 13)
9 இறந்துபோனவர்களை மறுபடியும் உயிரோடு கொண்டுவந்து என்றென்றைக்கும் வாழும் வாய்ப்பை அவர்களுக்குக் கொடுக்கப்போவதாக யெகோவா வாக்குக் கொடுத்திருக்கிறார். (அப். 24:15; தீத். 1:1, 2) இறந்துபோனவர்களை மறுபடியும் உயிரோடு எழுப்ப யெகோவா ஏக்கமாக இருப்பதாக யோபுவும் நம்பினார். (யோபு 14:14, 15) உயிரோடு எழுப்பப்படுகிறவர்களுக்கு முடிவில்லாமல் வாழ்கிற வாய்ப்பு கிடைக்கும் என்று தானியேல் தீர்க்கதரிசி தெரிந்துவைத்திருந்தார். (சங். 37:29; தானியேல் 12:2, 13-ஐ வாசியுங்கள்.) யெகோவா தன்னுடைய உண்மையுள்ள ஊழியர்களுக்கு “முடிவில்லாத வாழ்வை” கொடுக்கப்போவதாக வாக்குக் கொடுத்திருக்கிறார் என்பது இயேசுவின் நாட்களிலிருந்த யூதர்களுக்கும்கூட தெரிந்திருந்தது. (லூக். 10:25; 18:18) அந்த வாக்குறுதியைப் பற்றி இயேசுவும் அடிக்கடி பேசினார். சொல்லப்போனால், அந்த வாக்குறுதி அவருடைய விஷயத்திலேயே நிறைவேறியது. அவர் இறந்தபோது யெகோவா அவரை உயிரோடு எழுப்பினார்.—மத். 19:29; 22:31, 32; லூக். 18:30; யோவா. 11:25.
10. ஏற்கெனவே நடந்த உயிர்த்தெழுதல்கள் எதைக் காட்டுகின்றன? (படத்தைப் பாருங்கள்.)
10 நமக்கு உயிர் கொடுத்தவரே யெகோவாதான். இறந்தவர்களுக்கு மறுபடியும் உயிர் கொடுக்கிற சக்தி அவருக்கு இருக்கிறது. சாறிபாத் ஊரைச் சேர்ந்த விதவையின் மகனை உயிரோடு எழுப்புவதற்கு அவர் எலியா தீர்க்கதரிசிக்கு சக்தி கொடுத்தார். (1 ரா. 17:21-23) அதற்குப் பிறகு, சூனேமியப் பெண்ணுடைய மகனை உயிரோடு எழுப்புவதற்கு எலிசா தீர்க்கதரிசிக்கு அவர் உதவி செய்தார். (2 ரா. 4:18-20, 34-37) அந்த உயிர்த்தெழுதல்களும் சரி, மற்ற உயிர்த்தெழுதல்களும் சரி, என்ன காட்டுகின்றன? இறந்தவர்களை மறுபடியும் உயிரோடு கொண்டுவரும் சக்தி யெகோவாவுக்கு இருக்கிறது என்பதைக் காட்டுகின்றன. இயேசு பூமியில் இருந்தபோது இறந்தவர்களை உயிரோடு எழுப்புவதற்கான அதிகாரத்தையும் சக்தியையும் யெகோவா தனக்குக் கொடுத்திருப்பதைக் காட்டினார். (யோவா. 11:23-25, 43, 44) இப்போது இயேசு பரலோகத்தில் இருக்கிறார். அவருக்குப் ‘பரலோகத்திலும் பூமியிலும் எல்லா அதிகாரமும் கொடுக்கப்பட்டிருக்கிறது.’ அதனால், “நினைவுக் கல்லறைகளில் இருக்கிற எல்லாரும்” உயிரோடு வருவார்கள் என்ற வாக்குறுதியை அவரால் நிறைவேற்ற முடியும். அப்படி உயிரோடு வருகிறவர்களுக்கு என்றென்றைக்கும் வாழ்கிற வாய்ப்பை அவர் கொடுப்பார்.—மத். 28:18; யோவா. 5:25-29.
11. நாம் என்றென்றைக்கும் வாழ்வதற்கு மீட்புவிலை எப்படி உதவி செய்திருக்கிறது?
11 யெகோவா தன்னுடைய அன்பான மகன் துடிதுடித்து சாவதற்கு ஏன் விட்டார்? அதைப் பற்றி இயேசு சொல்லும்போது, “கடவுள் தன்னுடைய ஒரே மகன்மேல் விசுவாசம் வைக்கிற யாரும் அழிந்துபோகாமல் முடிவில்லாத வாழ்வைப் பெற வேண்டும் என்பதற்காக அவரைத் தந்து, இந்தளவுக்கு உலகத்தின் மேல் அன்பு காட்டினார்” என்று சொன்னார். (யோவா. 3:16) கடவுள் நம்முடைய பாவங்களைப் போக்குவதற்காகத் தன்னுடைய மகனையே மீட்புவிலையாகக் கொடுத்திருக்கிறார். அதனால் என்றென்றைக்கும் வாழ்கிற வாய்ப்பு நமக்குக் கிடைத்திருக்கிறது. (மத். 20:28) கடவுள் செய்திருக்கிற இந்த முக்கியமான ஏற்பாட்டைப் பற்றி அப்போஸ்தலன் பவுல் இப்படி எழுதினார்: “ஒரே மனிதனால் மரணம் வந்தது, அதேபோல் ஒரே மனிதனால் உயிர்த்தெழுதலும் வருகிறது. ஆதாமினால் எல்லாரும் சாகிறதுபோல், கிறிஸ்துவினால் எல்லாரும் உயிரோடு எழுப்பப்படுவார்கள்.”—1 கொ. 15:21, 22.
12. யெகோவாவுடைய அரசாங்கம் எப்படி அவருடைய விருப்பத்தை நிறைவேற்றும்?
12 கடவுளுடைய அரசாங்கம் வர வேண்டும் என்றும், அவருடைய விருப்பம் இந்தப் பூமியில் நடக்க வேண்டும் என்றும் ஜெபம் செய்யச் சொல்லி இயேசு தன்னுடைய சீஷர்களுக்கு சொல்லிக்கொடுத்தார். (மத். 6:9, 10) கடவுளுடைய விருப்பத்தில் ஒன்று என்னவென்றால், மனிதர்கள் இந்தப் பூமியில் என்றென்றைக்கும் வாழ வேண்டும் என்பதுதான். அதை நிறைவேற்றுவதற்காக, யெகோவா அவருடைய மகனைத் தன்னுடைய அரசாங்கத்தின் ராஜாவாக நியமித்திருக்கிறார். அதுமட்டுமல்ல, இந்தப் பூமியிலிருந்து 1,44,000 பேரை அவர் தேர்ந்தெடுத்திருக்கிறார். அவர்கள் இயேசுவோடு சேர்ந்து கடவுளுடைய விருப்பத்தை நிறைவேற்றுவார்கள்.—வெளி. 5:9, 10.
13. யெகோவா இப்போது என்ன செய்கிறார், நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
13 யெகோவா இன்றைக்கு “திரள் கூட்டமான” மக்களைக் கூட்டிச் சேர்த்துக்கொண்டு வருகிறார். அவருடைய அரசாங்கத்தின் கீழ் வாழ்வதற்கு அவர்களுக்குத் தேவையான பயிற்சியைக் கொடுத்துக்கொண்டு வருகிறார். (வெளி. 7:9, 10; யாக். 2:8) இந்த உலகம் போராலும் பகையாலும் ரொம்பவே பிளவுபட்டிருக்கிறது. ஆனாலும், இந்தத் திரள் கூட்டமான மக்கள் எல்லா விதமான பகையையும் விட்டுவிட்டு சமாதானமாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். பைபிள் சொல்கிறபடி, அவர்கள் ஏற்கெனவே தங்களுடைய வாள்களை மண்வெட்டிகளாக மாற்றியிருக்கிறார்கள் என்று சொல்லலாம். (மீ. 4:3) ஆயிரக்கணக்கானவர்களைக் கொன்று குவிக்கிற போர்களில் அவர்கள் கலந்துகொள்வதில்லை. அதற்குப் பதிலாக, “உண்மையான வாழ்வை” கண்டுபிடிக்க மக்களுக்கு உதவி செய்கிறார்கள். (1 தீ. 6:19) அதற்காக யெகோவாவைப் பற்றியும் அவருடைய நோக்கங்களைப் பற்றியும் அவர்களுக்கு சொல்லிக் கொடுக்கிறார்கள். கடவுளுடைய அரசாங்கத்தை ஆதரிப்பதால் அவர்களுடைய குடும்பத்தில் இருக்கிறவர்கள் அவர்களை எதிர்க்கலாம், இல்லையென்றால் அவர்களுக்குப் பணக் கஷ்டம் வரலாம். ஆனாலும், அவர்களுக்குத் தேவையானதெல்லாம் கிடைக்கிற மாதிரி யெகோவா பார்த்துக்கொள்கிறார். (மத். 6:25, 30-33; லூக். 18:29, 30) இந்த உண்மையெல்லாம் எதைக் காட்டுகின்றன? கடவுளுடைய அரசாங்கம் நிஜம் என்பதையும் யெகோவாவின் விருப்பத்தை அது தொடர்ந்து நிறைவேற்றும் என்பதையும் காட்டுகின்றன.
அருமையான எதிர்காலம் அருகில்!
14-15. மரணத்தை ஒழிக்கப்போவதாக கடவுள் கொடுத்திருக்கிற வாக்குறுதி எப்படி நிறைவேறும்?
14 இயேசு கிறிஸ்து இப்போது பரலோகத்தில் ராஜாவாக இருக்கிறார். யெகோவா கொடுத்த வாக்குறுதிகள் எல்லாவற்றையும் சீக்கிரத்தில் நிறைவேற்றுவார். (2 கொ. 1:20) 1914-ல் இருந்து இயேசு கிறிஸ்து தன்னுடைய எதிரிகளுக்கு நடுவில் ஆட்சி செய்துகொண்டிருக்கிறார். (சங். 110:1, 2) சீக்கிரத்தில் இயேசுவும் 1,44,000 பேரும் ஜெயித்து முடிப்பார்கள், கெட்டவர்களை அழிப்பார்கள்.—வெளி. 6:2.
15 ஆயிர வருஷ ஆட்சியில் இயேசு இறந்துபோனவர்களை உயிரோடு கொண்டுவருவார். யெகோவாவுக்குக் கீழ்ப்படிகிறவர்கள் பரிபூரணம் ஆவதற்கு உதவி செய்வார். கடைசி சோதனைக்குப் பிறகு யெகோவா யாரையெல்லாம் நீதிமான்கள் என்று சொல்கிறாரோ அவர்கள் எல்லாரும், “இந்தப் பூமியைச் சொந்தமாக்கிக்கொள்வார்கள்,” “என்றென்றும் அதில் வாழ்வார்கள்.” (சங். 37:10, 11, 29) அதற்குப் பிறகு, ‘கடைசி எதிரியான மரணம் ஒழிக்கப்படும்.’—1 கொ. 15:26.
16. என்ன முக்கியமான காரணத்துக்காக நாம் யெகோவாவுக்கு சேவை செய்ய வேண்டும்?
16 நாம் என்றென்றைக்கும் வாழப்போகிறோம் என்பதில் நமக்கு சந்தேகமே இல்லை. இதுவரை பார்த்தபடி, அந்த நம்பிக்கையைக் கொடுப்பதே கடவுளுடைய வார்த்தைதான். இந்தக் கடைசி நாட்களில் நமக்கு என்ன கஷ்டம் வந்தாலும் அதைத் தாங்கிக்கொண்டு யெகோவாவுக்கு உண்மையாக இருப்பதற்கு இந்த நம்பிக்கை நமக்கு உதவி செய்யும். ஆனால், நாம் என்ன காரணத்துக்காக உண்மையாக இருக்க வேண்டும்? என்றென்றைக்கும் வாழ வேண்டும் என்ற ஆசையால் மட்டுமல்ல, யெகோவாமேலும் இயேசுமேலும் நாம் வைத்திருக்கிற ஆழமான அன்பினால் நாம் அவர்களுக்கு உண்மையாக இருக்க வேண்டும். அப்போதுதான், யெகோவா சந்தோஷப்படுவார். (2 கொ. 5:14, 15) யெகோவாமேலும் இயேசுமேலும் அன்பு இருக்கும்போது நாம் அவர்களைப் போலவே நடந்துகொள்வோம். நம்முடைய நம்பிக்கையைப் பற்றி மற்றவர்களிடம் சொல்வோம். (ரோ. 10:13-15) இப்படி, நாம் சுயநலம் இல்லாமல் நடந்துகொள்ளும்போதும், தாராள மனதோடு மற்றவர்களுக்கு உதவி செய்யும்போதும் யெகோவா என்றென்றைக்கும் நம்முடைய நண்பராக இருக்க ஆசைப்படுவார்.—எபி. 13:16.
17. நம் ஒவ்வொருவருக்கும் என்ன பொறுப்பு இருக்கிறது? (மத்தேயு 7:13, 14)
17 முடிவில்லாத வாழ்க்கையை அனுபவிக்கப்போகிறவர்களில் நாமும் ஒருவராக இருப்போமா? யெகோவா அதற்கான வழியைத் திறந்து வைத்துவிட்டார். ஆனால், நாம் அந்த வழியில் போகிறோமா என்பது நம்முடைய கையில்தான் இருக்கிறது. (மத்தேயு 7:13, 14-ஐ வாசியுங்கள்.) என்றென்றைக்கும் வாழ்வது எப்படி இருக்கும்? இந்தக் கேள்விக்கான பதிலை அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.
பாட்டு 141 உயிர் ஓர் அற்புதமே
a நீங்கள் என்றென்றும் வாழ ஆசைப்படுகிறீர்களா? நாம் சாவே இல்லாமல் வாழப்போகும் காலம் ஒருநாள் வரும் என்று யெகோவா வாக்குக் கொடுத்திருக்கிறார். அந்த வாக்கை அவர் நிறைவேற்றுவார் என்று நாம் முழுமையாக நம்பலாம். ஏன் நம்பலாம் என்பதற்குச் சில காரணங்களை இந்தக் கட்டுரையில் நாம் பார்ப்போம்.
b “‘என்றென்றும்’ பைபிளில்” என்ற பெட்டியைப் பாருங்கள்.
c பட விளக்கம்: என்றென்றைக்கும் வாழும்போது என்னவெல்லாம் செய்யலாம் என்று வயதான ஒரு சகோதரர் கற்பனை செய்து பார்க்கிறார்.