அன்பான மேய்ப்பர்களுக்கு மனத்தாழ்மையுடன் பணிந்திருங்கள்
‘உங்களை நடத்துகிறவர்களுக்கு கீழ்ப்படிந்து அடங்குங்கள் [“பணிந்திருங்கள்,” பொது மொழிபெயர்ப்பு].’—எபிரெயர் 13:17.
1, 2. யெகோவாவும் இயேசுவும் அன்பான மேய்ப்பர்கள் என்பதை எந்த வசனங்கள் காட்டுகின்றன?
யெகோவா தேவனும் அவருடைய மகன் இயேசு கிறிஸ்துவும் அன்பான மேய்ப்பர்கள். ஏசாயா பின்வருமாறு தீர்க்கதரிசனம் உரைத்தார்: “இதோ, கர்த்தராகிய ஆண்டவர் பராக்கிரமசாலியாக வருவார்; அவர் தமது புயத்தினால் அரசாளுவார்; . . . மேய்ப்பனைப்போலத் தமது மந்தையை மேய்ப்பார்; ஆட்டுக்குட்டிகளைத் தமது புயத்தினால் சேர்த்து, தமது மடியிலே சுமந்து, கறவலாடுகளை மெதுவாய் நடத்துவார்.”—ஏசாயா 40:10, 11.
2 இந்தத் தீர்க்கதரிசனம், திரும்ப நிலைநாட்டப்படுவதைப் பற்றியது; யூதர்களில் மீதியானோர் பொ.ச.மு. 537-ல் யூதாவுக்குத் திரும்பியபோது இது முதன்முதலில் நிறைவேறியது. (2 நாளாகமம் 36:22, 23) அபிஷேகம் செய்யப்பட்ட மீதியானோர் 1919-ல் மகா கோரேசான இயேசு கிறிஸ்துவால் ‘மகா பாபிலோனிலிருந்து’ விடுதலையானபோது இது மறுபடியுமாக நிறைவேறியது. (வெளிப்படுத்துதல் 18:2; ஏசாயா 44:28) ஆட்சி செய்யவும், ஆடுகளைச் சேர்க்கவும், கனிவான அக்கறையோடு அவற்றை மேய்க்கவும் யெகோவா தம்முடைய ‘புயமாக’ இயேசு கிறிஸ்துவைப் பயன்படுத்துகிறார். இயேசுவே பின்வருமாறு கூறியிருக்கிறார்: “நானே நல்ல மேய்ப்பன்; . . . நான் என்னுடையவைகளை அறிந்தும் என்னுடையவைகளால் அறியப்பட்டுமிருக்கிறேன்.”—யோவான் 10:14, 15.
3. தம் ஆடுகள் நடத்தப்படும் விதத்தில் யெகோவா கனிவான அக்கறை உடையவராக இருப்பதை எவ்வாறு காட்டுகிறார்?
3 ஏசாயா 40:10, 11-ல் உள்ள தீர்க்கதரிசனம், யெகோவா தம் மக்களை எவ்வளவு மென்மையாக மேய்க்கிறார் என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. (சங்கீதம் 23:1-6) இயேசுவும்கூட, இந்தப் பூமியில் இருந்தபோது தம் சீஷர்களிடமும் பொது மக்களிடமும் கனிவான அக்கறையை வெளிக்காட்டினார். (மத்தேயு 11:28-30; மாற்கு 6:34) இஸ்ரவேலில் இருந்த இரக்கமற்ற மேய்ப்பர்கள், அதாவது தலைவர்கள் துணிச்சலுடன் தங்கள் மந்தையை உதாசீனப்படுத்தி, துஷ்பிரயோகம் செய்தார்கள்; இதை யெகோவாவும் இயேசுவும் வெறுத்தார்கள். (எசேக்கியேல் 34:2-10; மத்தேயு 23:3, 4, 15) யெகோவா பின்வருமாறு வாக்குறுதியளித்தார்: “நான் என் ஆடுகளை இனிச் சூறையாகாதபடிக்கு இரட்சித்து, ஆடுகளுக்கும் ஆடுகளுக்கும் நியாயந்தீர்ப்பேன். அவர்களை மேய்க்கும்படி என் தாசனாகிய தாவீது என்னும் ஒரே மேய்ப்பனை நான் அவர்கள்மேல் விசாரிப்பாயிருக்க ஏற்படுத்துவேன்; இவர் அவர்களை மேய்த்து, இவரே அவர்களுக்கு மேய்ப்பனாயிருப்பார்.” (எசேக்கியேல் 34:22, 23) யெகோவா இந்த முடிவு காலத்தில் பூமியிலுள்ள தம்முடைய ஊழியர்களான அபிஷேகம் செய்யப்பட்டோருக்கும் ‘வேறே ஆடுகளுக்கும்’ ‘ஒரே மேய்ப்பனாக’ பெரிய தாவீதாகிய இயேசு கிறிஸ்துவை நியமித்திருக்கிறார்.—யோவான் 10:16.
சபைக்கு யெகோவா அளித்திருக்கும் பரிசுகள்
4, 5. (அ) பூமியிலுள்ள தம் மக்களுக்கு விலையேறப்பெற்ற என்ன பரிசை யெகோவா அளித்திருக்கிறார்? (ஆ) இயேசு தமது சபைக்கு என்ன பரிசை அளித்திருக்கிறார்?
4 யெகோவா, பூமியிலுள்ள தம் ஊழியர்களை வழிநடத்துவதற்கு ‘ஒரே மேய்ப்பனான’ இயேசு கிறிஸ்துவை நியமித்ததன் மூலம், கிறிஸ்தவ சபைக்கு ஒரு விலையேறப்பெற்ற பரிசை அளித்தார். இந்தப் பரலோகத் தலைவரைக் குறித்து ஏசாயா 55:4-ல் பின்வருமாறு முன்னறிவிக்கப்பட்டிருந்தது: “இதோ, அவரை ஜனக்கூட்டங்களுக்குச் சாட்சியாகவும், ஜனங்களுக்குத் தலைவராகவும், அதிபதியாகவும் ஏற்படுத்தினேன்.” அனைத்து தேசங்கள், இனங்கள், ஜனங்கள், மொழிகள் ஆகியவற்றிலிருந்தும் அபிஷேகம் செய்யப்பட்டவர்கள் கூட்டிச் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்; அவ்வாறே ‘வேறே ஆடுகளும்’ கூட்டிச் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். (வெளிப்படுத்துதல் 5:9, 10; 7:9) கிறிஸ்து இயேசு எனும் ‘ஒரே மேய்ப்பனின்’ தலைமையின்கீழ் ‘ஒரே மந்தையாக,’ அதாவது ஒரே சர்வதேச அமைப்பாக அவர்கள் செயல்படுகிறார்கள்.
5 இயேசுவும்கூட பூமியிலுள்ள தமது சபைக்கு விலையேறப்பெற்ற பரிசை வழங்கியிருக்கிறார்; அதாவது, உண்மையுள்ள துணை மேய்ப்பர்களை அளித்திருக்கிறார். யெகோவாவையும் இயேசுவையும் போலவே அவர்களும் கனிவான அக்கறையோடு மந்தையைக் கவனிக்கிறார்கள். எபேசுவில் இருக்கும் கிறிஸ்தவர்களுக்கு எழுதிய கடிதத்தில் அப்போஸ்தலன் பவுல் இந்த அன்பான பரிசைப் பற்றி குறிப்பிட்டார். அவர் பின்வருமாறு எழுதினார்: ‘அவர் உன்னதத்திற்கு ஏறி, சிறைப்பட்டவர்களைச் சிறையாக்கி, மனிதரில் வரங்களை [அதாவது, பரிசுகளை] அளித்தார். . . . பரிசுத்தவான்கள் சீர்பொருந்தும் பொருட்டு, சுவிசேஷ ஊழியத்தின் வேலைக்காகவும், கிறிஸ்துவின் சரீரமாகிய சபையானது பக்திவிருத்தி அடைவதற்காகவும், அவர், சிலரை அப்போஸ்தலராகவும், சிலரைத் தீர்க்கதரிசிகளாகவும், சிலரைச் சுவிசேஷகராகவும், சிலரை மேய்ப்பராகவும் போதகராகவும் ஏற்படுத்தினார்.’—எபேசியர் 4:8, 12,13; NW.
6. மூப்பர் குழுக்களில் சேவை செய்த அபிஷேகம் செய்யப்பட்ட கண்காணிகள் வெளிப்படுத்துதல் 1:16, 20-ல் எவ்வாறு விவரிக்கப்பட்டிருக்கிறார்கள், வேறே ஆடுகளைச் சேர்ந்த கண்காணிகளைக் குறித்து என்ன சொல்லலாம்?
6 ஆடுகளை மென்மையாக நடத்துவதற்கு யெகோவாவும் அவருடைய மகனும் பரிசுத்த ஆவியின் மூலமாக கண்காணிகளை, அதாவது மூப்பர்களை ஏற்படுத்துகிறார்கள். இவர்களே ‘மனிதரில் வரங்களாக [அதாவது, பரிசுகளாக]’ இருக்கிறார்கள். (அப்போஸ்தலர் 20:28, 29) ஆரம்பத்தில், அபிஷேகம் செய்யப்பட்டவர்களாய் இருந்த கிறிஸ்தவ ஆண்கள் மட்டுமே கண்காணிகளாக இருந்தார்கள். அபிஷேகம் செய்யப்பட்டோரின் சபையில் உள்ள மூப்பர் குழுக்களில் சேவை செய்வோரை, இயேசுவின் வலது கரத்தில் இருக்கிற ‘நட்சத்திரங்கள்’ அல்லது ‘தேவ தூதர்கள்’ என வெளிப்படுத்துதல் 1:16, 20 அடையாளப்படுத்துகிறது; இவர்கள் இயேசுவின் வலது கரத்தில் இருப்பது, அவருடைய அதிகாரத்தின் கீழ் இருப்பதைக் குறிக்கிறது. என்றாலும், இந்த முடிவு காலத்தில், அபிஷேகம் செய்யப்பட்ட கண்காணிகளின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகிறது. ஆகவே, சபைகளில் இருக்கும் பெரும்பாலான கிறிஸ்தவ மூப்பர்கள் வேறே ஆடுகளைச் சேர்ந்தவர்களாகவே இருக்கிறார்கள். இவர்கள் பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலின் பேரில் ஆளும் குழுவின் பிரதிநிதிகளால் நியமிக்கப்படுவதால், இவர்களும்கூட நல்ல மேய்ப்பனான இயேசு கிறிஸ்துவின் வலது கரத்தில் (அல்லது, அவருடைய அதிகாரத்தின் கீழ்) இருப்பதாகச் சொல்லப்படலாம். (ஏசாயா 61:5, 6) நம்முடைய சபைகளில் உள்ள மூப்பர்கள், சபையின் தலைவராகிய இயேசுவுக்குப் பணிந்திருப்பதால், அவர்கள் நம்முடைய முழுமையான ஒத்துழைப்பைப் பெறத் தகுந்தவர்கள்.—கொலோசெயர் 1:18.
கீழ்ப்படிதலும் பணிந்திருத்தலும்
7. கிறிஸ்தவ கண்காணிகளிடம் நாம் காட்ட வேண்டிய மனப்பான்மையைக் குறித்து அப்போஸ்தலன் பவுல் என்ன அறிவுரை கொடுத்தார்?
7 நம்முடைய பரலோக மேய்ப்பர்களான யெகோவா தேவனும் இயேசு கிறிஸ்துவும் சபையில் துணை மேய்ப்பர்களை நியமித்திருக்கிறார்கள். அப்படிப் பொறுப்பளிக்கப்பட்டிருக்கும் மூப்பர்களுக்கு நாம் கீழ்ப்படிந்து பணிந்திருக்க வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். (1 பேதுரு 5:5) பரிசுத்த ஆவியின் தூண்டுதலால் அப்போஸ்தலன் பவுல் பின்வருமாறு எழுதினார்: “தேவவசனத்தை உங்களுக்குப் போதித்து உங்களை நடத்தினவர்களை நீங்கள் நினைத்து, அவர்களுடைய நடக்கையின் முடிவை நன்றாய்ச் சிந்தித்து, அவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள். உங்களை நடத்துகிறவர்கள், உங்கள் ஆத்துமாக்களுக்காக உத்தரவாதம்பண்ணுகிறவர்களாய் [“கணக்கு கொடுப்பவர்களாய்,” NW] விழித்திருக்கிறவர்களானபடியால், அவர்கள் துக்கத்தோடே அல்ல, சந்தோஷத்தோடே அதைச் செய்யும்படி, அவர்களுக்குக் கீழ்ப்படிந்து அடங்குங்கள் [“பணிந்திருங்கள்,” பொ.மொ]; அவர்கள் துக்கத்தோடே அப்படிச் செய்தால் அது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கமாட்டாதே.”—எபிரெயர் 13:7, 17.
8. எதைக் குறித்து ‘நன்றாய்ச் சிந்திக்கும்படி’ பவுல் கூறுகிறார், நாம் எவ்வாறு ‘கீழ்ப்படிய’ வேண்டும்?
8 மூப்பர்களின் உண்மையுள்ள நடத்தையின் பலனை “நன்றாய்ச் சிந்தித்து” பார்க்கும்படியும், அதாவது உன்னிப்பாய் கவனிக்கும்படியும், அப்படிப்பட்டவர்களின் முன்மாதிரியைப் பின்பற்றும்படியும் பவுல் நம்மிடம் கேட்டுக்கொள்வதைக் கவனியுங்கள். அவர்களுடைய வழிநடத்துதலுக்குக் கீழ்ப்படிந்து, பணிந்திருக்கும்படியும் அவர் ஆலோசனை கூறுகிறார். “கீழ்ப்படிந்து” என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் வார்த்தை, மூல கிரேக்குவில் “கீழ்ப்படிவதைக் குறிப்பிடுவதற்குப் பொதுவாக பயன்படுத்தப்படும் வார்த்தை அல்ல. மாறாக, இது ‘இணங்குவதை’ அர்த்தப்படுத்துகிறது. அதாவது அவர்களுடைய தலைமையை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்வதைக் குறிக்கிறது” என்று பைபிள் அறிஞர் ஆர். டி. ஃப்ரான்ஸ் விளக்குகிறார். மூப்பர்களுக்குக் கீழ்ப்படியும்படி கடவுளுடைய வார்த்தை சொல்வதால் மட்டுமின்றி, அவர்கள் ராஜ்ய காரியங்களிலும், நம்முடைய நலனிலும் உண்மையான அக்கறை காட்டுகிறார்கள் என்பதை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்வதாலும் நாம் மூப்பர்களுக்குக் கீழ்ப்படிகிறோம். அவர்களுடைய தலைமையை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டால் நாம் நிச்சயம் சந்தோஷமாக இருப்போம்.
9. கீழ்ப்படிவதோடுகூட ‘பணிந்திருப்பதும்’ ஏன் அவசியம்?
9 ஒருவேளை, குறிப்பிட்ட விஷயத்தின் பேரில் மூப்பர் கொடுத்திருக்கும் வழிநடத்துதலே சிறந்ததென்று நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றால் அப்போது என்ன செய்வது? அதுபோன்ற சமயத்தில்தான் பணிந்திருக்க வேண்டியது அவசியம். நமக்குக் கொடுக்கப்படுகிற வழிநடத்துதல் சம்பந்தமாக எல்லா விஷயங்களும் நமக்குத் தெளிவாகப் புரியும்போது, நாமும் அதை ஏற்றுக்கொள்ளும்போது, கீழ்ப்படிவது சுலபமே. ஆனால், நமக்குப் புரியாதபோதிலும் அந்த வழிநடத்துதலுக்குக் கீழ்ப்படிவதன்மூலம் நாம் உண்மையிலேயே பணிந்திருப்பதைக் காட்டுவோம். பிற்பாடு ஓர் அப்போஸ்தலராக ஆன பேதுரு இவ்வாறே பணிந்திருத்தலைக் காட்டினார்.—லூக்கா 5:4, 5.
மனப்பூர்வமாக ஒத்துழைப்பதற்கு நான்கு காரணங்கள்
10, 11. முதல் நூற்றாண்டிலும் இப்போதும் எவ்விதத்தில் கண்காணிகள் தங்கள் சக கிறிஸ்தவர்களுக்கு ‘தேவவசனத்தைப் போதித்திருக்கிறார்கள்?’
10 மேற்குறிப்பிடப்பட்டிருக்கும் எபிரெயர் 13:7, 17-ல், கிறிஸ்தவ கண்காணிகளுக்கு நாம் கீழ்ப்படிந்து, பணிந்திருப்பதற்கான நான்கு காரணங்களை அப்போஸ்தலன் பவுல் குறிப்பிடுகிறார். முதல் காரணம், அவர்கள் ‘தேவவசனத்தை நமக்குப் போதித்திருக்கிறார்கள்.’ இயேசு சபைகளுக்குக் கொடுத்த ‘மனிதரில் வரங்கள் [அதாவது, பரிசுகள்]’ ‘பரிசுத்தவான்கள் சீர்பொருந்த’ உதவுகிறார்கள் என்பதை நினைவில்கொள்ளுங்கள். (எபேசியர் 4:12, 13) முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களின் சிந்தனையையும் நடத்தையையும் உண்மையுள்ள துணை மேய்ப்பர்களைக் கொண்டு அவர் சீர்ப்படுத்தினார். அவர்களில் சிலர் பரிசுத்த ஆவியின் தூண்டுதலால் சபைகளுக்குக் கடிதம் எழுதினார்கள். ஆரம்பகால கிறிஸ்தவர்களை வழிநடத்தவும் பலப்படுத்தவும் பரிசுத்த ஆவியால் நியமிக்கப்பட்ட அந்தக் கண்காணிகளை அவர் பயன்படுத்தினார்.—1 கொரிந்தியர் 16:15-18; 2 தீமோத்தேயு 2:2; தீத்து 1:5.
11 இன்று, ஆளும் குழுவால் பிரதிநிதித்துவம் செய்யப்படும் ‘உண்மையும் விவேகமுமுள்ள அடிமையின்’ மூலமாகவும், நியமிக்கப்பட்ட மூப்பர்கள் மூலமாகவும் இயேசு நம்மை வழிநடத்துகிறார்; (மத்தேயு 24:45, NW) “பிரதான மேய்ப்பர்” இயேசு கிறிஸ்துவின் மீதுள்ள மரியாதையின் காரணமாக நாம் பவுலின் பின்வரும் அறிவுரைக்கு செவிசாய்க்கிறோம்: ‘உங்களுக்குள்ளே பிரயாசப்பட்டு, கர்த்தருக்குள் உங்களை விசாரணை செய்கிறவர்களாயிருந்து, உங்களுக்குப் புத்திசொல்லுகிறவர்களை நீங்கள் மதியுங்கள்.’—1 பேதுரு 5:4; 1 தெசலோனிக்கேயர் 5:12; 1 தீமோத்தேயு 5:17.
12. கண்காணிகள் எவ்வாறு ‘[நம்] ஆத்துமாக்களுக்காக விழித்திருக்கிறார்கள்?’
12 கிறிஸ்தவ கண்காணிகள் ‘[நம்] ஆத்துமாக்களுக்காக . . . விழித்திருக்கிறவர்களானபடியால்’ நாம் அவர்களுடன் ஒத்துழைக்க வேண்டும். நம்முடைய ஆன்மீக நலனுக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய ஏதோவொன்றை நம்முடைய மனப்பான்மையிலோ, நடத்தையிலோ அவர்கள் கண்டால், நம்மைச் சீர்திருத்தும் நோக்கத்தோடு நமக்குத் தேவையான அறிவுரையை உடனடியாக அளிக்கிறார்கள். (கலாத்தியர் 6:1) ‘விழித்திருக்கிறார்கள்’ என மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் கிரேக்க வார்த்தையின் நேரடி அர்த்தம், “தூங்காமல் இருத்தல்” என்பதாகும். அது “ஒரு மேய்ப்பனின் தொடர்ச்சியான விழிப்புணர்வைக் குறிக்கிறது” என்று ஒரு பைபிள் அறிஞர் கூறுகிறார். தங்களுடைய ஆன்மீக நலனுக்காக விழித்திருப்பதோடு, நம்முடைய ஆன்மீக நலனுக்காக அவர்கள் இரவில் தூக்கத்தைக்கூட இழக்க நேரிடலாம். “ஆடுகளுடைய பெரிய மேய்ப்பரான” இயேசு கிறிஸ்து காட்டிய கனிவான அக்கறையைப் பின்பற்றுவதற்கு முடிந்தளவு முயலும் துணை மேய்ப்பர்களாகிய இந்த அன்பான கண்காணிகளோடு நாம் மனப்பூர்வமாக ஒத்துழைக்க வேண்டியது அவசியம், அல்லவா?—எபிரெயர் 13:20.
13. கண்காணிகளும் கிறிஸ்தவர்கள் அனைவரும் யாருக்கு, எவ்விதத்தில் கணக்கு கொடுக்க வேண்டும்?
13 கண்காணிகளோடு ஒத்துழைப்பதற்கான மூன்றாவது காரணம்: அவர்கள் நம்மைக் கண்காணிக்கும் விஷயத்தில் ‘கணக்கு கொடுக்க வேண்டியவர்களாக’ இருக்கிறார்கள். பரலோக மேய்ப்பர்களான யெகோவா தேவன் மற்றும் இயேசு கிறிஸ்துவின் வழிநடத்துதலின் கீழ், துணை மேய்ப்பர்களாக தாங்கள் சேவை செய்வதை கண்காணிகள் நினைவில் வைக்கிறார்கள். (எசேக்கியேல் 34:22-24) யெகோவாவே ஆடுகளுக்குச் சொந்தக்காரர். அவற்றைத் ‘தம்முடைய சொந்த குமாரனுடைய ரத்தத்தினாலே சம்பாதித்துக்கொண்டார்.’ அந்த மந்தையை ‘கனிவோடு’ நடத்தும்படி கண்காணிகள் எதிர்பார்க்கப்படுகிறார்கள். மந்தையை நடத்தும் விதத்திற்காக அவர்கள் யெகோவாவுக்கு கணக்கு கொடுக்க வேண்டும். (அப்போஸ்தலர் 20:28, 29, NW) அவ்வாறே, யெகோவா அளிக்கும் வழிநடத்துதலுக்கு நாம் பிரதிபலிக்கும் விதத்திற்காக நாம் அனைவரும்கூட அவருக்கு கணக்கு கொடுக்க வேண்டும். (ரோமர் 14:10-12) நியமிக்கப்பட்ட மூப்பர்களுக்கு நாம் கீழ்ப்படியும்போது, சபையின் தலைவராகிய கிறிஸ்துவுக்குப் பணிந்திருப்பதையும் வெளிக்காட்டுகிறோம்.—கொலோசெயர் 2:18.
14. கிறிஸ்தவ கண்காணிகள் ‘துக்கத்தோடு’ சேவை செய்யும் சூழ்நிலை எப்போது ஏற்படலாம், என்ன விளைவுகளோடு?
14 கிறிஸ்தவ கண்காணிகளுக்கு நாம் ஏன் மனத்தாழ்மையுடன் பணிந்திருக்க வேண்டும் என்பதற்கான நான்காவது காரணத்தை பவுல் கொடுத்தார். ‘அவர்கள் துக்கத்தோடே அல்லாமல் சந்தோஷத்தோடே அதைச் செய்யும்படி அவர்களுக்குப் பணிந்திருக்க’ வேண்டும்; “அவர்கள் துக்கத்தோடே அப்படிச் செய்தால் அது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கமாட்டாதே” என்று அவர் எழுதினார். (எபிரெயர் 13:17) போதிப்பது, மேய்ப்பு வேலை செய்வது, பிரசங்க ஊழியத்தில் முன்னின்று நடத்துவது, தங்கள் குடும்பத்தைக் கட்டிக்காப்பது, சபையிலுள்ள பிரச்சினைகளைக் கையாளுவது போன்ற முக்கியப் பொறுப்புகள் கிறிஸ்தவ மூப்பர்களுக்கு இருக்கின்றன. இப்படியாக அவர்கள் கடினமான சுமையைச் சுமக்கிறார்கள். (2 கொரிந்தியர் 11:28, 29) எனவே, நாம் அவர்களோடு ஒத்துழைக்க மறுக்கும்போது அவர்களுடைய சுமையைக் கூட்டுகிறோம். இது அவர்களைத் ‘துக்கப்படுத்தும்.’ நாம் ஒத்துழைக்காமல் இருந்தால் அது யெகோவாவுக்கு வெறுப்பூட்டும்; நமக்கும் தீங்கு விளைவிக்கும். மாறாக, நாம் தகுந்த மரியாதையையும் ஒத்துழைப்பையும் காட்டும்போது, மூப்பர்கள் தங்களது பொறுப்புகளைச் சந்தோஷமாகச் செய்யமுடியும். இது சபையில் ஐக்கியத்தை வளர்ப்பதுடன், ராஜ்ய பிரசங்கிப்பு வேலையிலும் மகிழ்ச்சி காணச் செய்யும்.—ரோமர் 15:5, 6.
பணிந்திருப்பதைக் காட்டுதல்
15. நாம் கீழ்ப்படிந்திருப்பதையும் பணிந்திருப்பதையும் எப்படிக் காட்டலாம்?
15 நியமிக்கப்பட்ட கண்காணிகளோடு நாம் நடைமுறையான பல வழிகளில் ஒத்துழைக்கலாம். பிராந்தியத்தில் மாறிவரும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப வெளி ஊழியக் கூட்டத்தின் நேரத்தையும் நாளையும் மூப்பர்கள் தேர்ந்தெடுத்திருக்கிறார்களா? அப்படியானால், அதில் கலந்துகொள்வதற்காக சில சமயங்களில் நம்முடைய வேலைகளை கொஞ்சம் மாற்றியமைக்க வேண்டியிருக்குமா? இதுபோன்ற புதிய ஏற்பாடுகளுக்கு ஆதரவு காட்ட நாம் முயற்சி செய்வோமாக. இதனால் எதிர்பாராத ஆசீர்வாதங்கள் நமக்குக் கிடைக்கலாம். ஊழியக் கண்காணி நம்முடைய புத்தகப் படிப்புத் தொகுதியைச் சந்திக்க வருகிறாரா? அந்த வாரத்தில் நம்மால் முடிந்தளவு பிரசங்க ஊழியத்தில் பங்குகொள்வோமாக. தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் நமக்கு நியமிப்பு கிடைத்திருக்கிறதா? அன்றைய தினம் தவறாமல் ஆஜராயிருந்து, அதைச் செய்ய நாம் தீர்மானமாயிருக்க வேண்டும். நம்முடைய புத்தகப் படிப்புத் தொகுதி ராஜ்ய மன்றத்தைச் சுத்தம் செய்ய வேண்டும் என்பதாக சபை புத்தகப் படிப்புக் கண்காணி அறிவித்திருக்கிறாரா? நம்முடைய ஆரோக்கியமும் பலமும் எந்தளவு அனுமதிக்கிறதோ அந்தளவு நாம் முழு ஆதரவை அளிப்போமாக. இவ்வழிகளிலும் பிற வழிகளிலும், யெகோவாவும் அவருடைய மகனும் மந்தையைக் கவனிப்பதற்காக நியமித்திருக்கும் நபர்களுக்கு நாம் பணிந்திருப்பதைக் காட்டுவோம்.
16. கொடுக்கப்படுகிற வழிநடத்துதலுக்கு ஏற்றபடி ஒரு மூப்பர் செயல்படாவிட்டாலும், நாம் ஏன் கலகப்போக்கைப் பின்தொடரக் கூடாது?
16 சில சமயங்களில், உண்மையுள்ள அடிமை வகுப்பும் அதன் ஆளும் குழுவும் கொடுக்கிற வழிநடத்துதலை ஒரு மூப்பர் பின்பற்றாதிருக்கலாம். அவர் தொடர்ந்து அவ்விதமாகவே செயல்பட்டு வந்தால், அவர் ‘[நம்] ஆத்துமாக்களுக்கு மேய்ப்பரும் கண்காணியுமானவரான’ யெகோவாவுக்கு கணக்கு ஒப்புவிக்க வேண்டியிருக்கும். (1 பேதுரு 2:25) சில மூப்பர்கள் செய்கிற தவறுகள் காரணமாக நாம் கீழ்ப்படியாமல் போவது நியாயமல்ல. ஏனெனில், கீழ்ப்படியாமையையும் கலகப்போக்கையும் யெகோவா ஆதரிக்கவே மாட்டார்.—எண்ணாகமம் 12:1, 2, 9-11.
மனப்பூர்வமான ஒத்துழைப்பை யெகோவா ஆசீர்வதிக்கிறார்
17. கண்காணிகளிடம் நம் மனப்பான்மை என்னவாக இருக்க வேண்டும்?
17 கண்காணிகளாக தாம் நியமித்திருக்கும் ஆட்கள் அபூரணர்கள் என்பதை யெகோவா தேவன் அறிந்திருக்கிறார். இருப்பினும், அவர்களை அவர் பயன்படுத்துகிறார். தம் ஆவியின் மூலமாக பூமியிலுள்ள தமது மக்களை மேய்க்கிறார். ‘இயல்புக்கு அப்பாற்பட்ட இந்த வல்லமை நம்மால் உண்டாயிராமல், தேவனால் உண்டாயிருக்கிறது.’ (2 கொரிந்தியர் 4:7; NW) மூப்பர்களின் விஷயத்தில் மட்டுமல்ல நம் எல்லாருடைய விஷயத்திலும் இதுவே உண்மையாக இருக்கிறது. எனவே, நம்முடைய உண்மையுள்ள கண்காணிகள் மூலமாக யெகோவா தேவன் செய்துவருகிற காரியங்களுக்காக நாம் அவருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். அதோடு, அவர்களுக்கு மனப்பூர்வமாக ஒத்துழைக்கவும் வேண்டும்.
18. கண்காணிகளுக்குப் பணிந்திருப்பதன் மூலம் நாம் உண்மையில் என்ன செய்வோம்?
18 கடைசி நாட்களில் தம் மந்தையைக் கவனித்துக்கொள்வதற்காக நியமிக்கப்படும் மேய்ப்பர்களைக் குறித்து எரேமியா 3:15-ல் யெகோவா பின்வருமாறு விவரித்திருக்கிறார்: “உங்களுக்கு என் இருதயத்துக்கு ஏற்ற மேய்ப்பர்களைக் கொடுப்பேன், அவர்கள் உங்களை அறிவோடும் புத்தியோடும் மேய்ப்பார்கள்.” இதற்கு ஏற்றபடி வாழ கண்காணிகள் தங்களால் முடிந்ததை எல்லாம் செய்கிறார்கள். நிச்சயமாகவே, நம் மத்தியிலுள்ள மூப்பர்கள் யெகோவாவின் ஆடுகளுக்குப் போதித்து, அவற்றைப் பாதுகாக்கும் வேலையை திறம்பட்ட விதத்தில் செய்கிறார்கள். அவர்களுடைய கடின உழைப்பிற்கு நாம் நன்றியுள்ளவர்களாய் இருப்பதை நம்முடைய மனப்பூர்வமான ஒத்துழைப்பு, கீழ்ப்படிதல், பணிந்திருத்தல் ஆகியவற்றின் மூலமாகக் காட்டுவோமாக. அப்படிச் செய்கையில், நம்முடைய பரலோக மேய்ப்பர்களான யெகோவா தேவனுக்கும் இயேசு கிறிஸ்துவுக்கும் நம்முடைய நன்றியை வெளிக்காட்டுவோம்.
மறுபார்வைக்கு
• தாங்கள் அன்பான மேய்ப்பர்கள் என்பதை யெகோவாவும் இயேசு கிறிஸ்துவும் எவ்வாறு காட்டியிருக்கிறார்கள்?
• கீழ்ப்படிதலோடு, பணிந்திருப்பதும் ஏன் அவசியம்?
• பணிந்திருப்பதை நடைமுறையான என்ன வழிகளில் வெளிக்காட்டலாம்?
[பக்கம் 27-ன் படம்]
கிறிஸ்துவின் தலைமைக்கு கிறிஸ்தவ மூப்பர்கள் பணிந்திருக்கிறார்கள்
[பக்கம் 29-ன் படங்கள்]
யெகோவாவால் நியமிக்கப்பட்ட மேய்ப்பர்களுக்கு நாம் பணிந்திருப்பதை பல வழிகளில் காட்டலாம்