சோர்ந்துபோகிறவனுக்கு யெகோவா பலம் கொடுக்கிறார்
“யெகோவாவுக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பலம் அடைந்து கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்.”—ஏசாயா 40:31, தி.மொ.
1, 2. தம்மில் நம்பிக்கை வைத்திருப்போருக்கு யெகோவா எதைக் கொடுக்கிறார், இப்போது நாம் எதைக் கவனிக்கப்போகிறோம்?
கழுகுகள் வானங்களில் பறக்கும் மிகப் பலமுள்ள பறவைகளைச் சேர்ந்தவை. அவை தங்கள் செட்டைகளை அடிக்காமலே வெகு தூரங்கள் ஆகாயத்தில் மிதந்து செல்லக்கூடும். இரண்டு மீட்டர் நீளத்துக்கும் மேலாக விரியக்கூடிய இந்தச் செட்டைகளைக் கொண்டு, “பறவைகளின் அரசனாகிய” பொன்னிற கழுகு, “எல்லா கழுகுகளையும் பார்க்கிலும் மிகக் கவர்ச்சியூட்டும் ஒன்றாயுள்ளது; குன்றுகளுக்கும் சமவெளிகளுக்கும் மேலாக உயரச் சென்று, [அது] எதாவது மலைத்தொடரின் உச்சிக்கு மேலாக பல மணிநேரங்கள் சிறகடிக்காமல் வட்டமிடுகிறது, பின்பு வானத்தில் கருப்பு புள்ளியைப்போல் தோன்றும் வரையில் வட்டமிட்டுக் கொண்டே படிப்படியாக மேலெழும்புகிறது.”—வட அமெரிக்க பறவைகளைப் பற்றிய ஆடுபன் சங்க கலைக்களஞ்சியம் (ஆங்கிலம்).
2 கழுகுகளின் பறக்கும் திறமைகளை மனதில் கொண்டு, ஏசாயா இவ்வாறு எழுதினார்: “சோர்ந்துபோகிறவனுக்கு [யெகோவா] பலம் கொடுக்கிறார், சக்தியில்லாதவனுக்கு வல்லமையைப் பெருகப்பண்ணுகிறார், இளைஞர் இளைப்படைந்து சோர்ந்துபோவார்கள், வாலிபரும் விழுவார்களே, யெகோவாவுக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பலம் அடைந்து கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்.” (ஏசாயா 40:29-31, தி.மொ.) சிறகடிக்காமல் வட்டமிடும் கழுகுகளின் சோர்வடையாதவையாகத் தோன்றும் செட்டைகளை அவர்களுக்கு அணிவிப்பதைப்போல், யெகோவா, தம்மில் நம்பிக்கை வைத்திருப்போருக்கு, தளராமல் தொடரும்படியான பலத்தைக் கொடுக்கிறார் என்பதை அறிவது எவ்வளவு ஆறுதலாயுள்ளது! சோர்ந்திருப்பவனுக்குப் பலம் கொடுப்பதற்காக அவர் செய்திருக்கிற ஏற்பாடுகள் சிலவற்றை இப்போது கவனியுங்கள்.
ஜெபத்தின் பலம்
3, 4. (அ) என்ன செய்யும்படி இயேசு தம்முடைய சீஷர்களை ஊக்குவித்தார்? (ஆ) நம்முடைய ஜெபங்களுக்கு விடையாக யெகோவா என்ன செய்யும்படி நாம் எதிர்பார்க்கலாம்?
3 “சோர்ந்துபோகாமல் எப்பொழுதும் ஜெபம்பண்ணவேண்டும்” என்று இயேசு தம்முடைய சீஷர்களை ஊக்குவித்தார். (லூக்கா 18:1) நம்முடைய இருதயத்திலுள்ளதை யெகோவாவிடம் வெளிப்படுத்தி ஊற்றுவது, பலத்தை மீண்டும் பெறும்படியும், வாழ்க்கையின் நெருக்கடிகள் சமாளிக்க முடியாதவையாகத் தோன்றும்போது சோர்ந்துவிடுவதைத் தவிர்க்கவும் உண்மையில் உதவிசெய்யக்கூடுமா? ஆம், கூடும், ஆனால் நாம் மனதில் வைக்க வேண்டிய சில காரியங்கள் உண்டு.
4 நம்முடைய ஜெபங்களுக்கு பதிலளிப்பவராக யெகோவா செய்யும்படி நாம் எதிர்பார்க்கிறவற்றில் நடைமுறைக்குரிய மெய்ம்மையை உணருவோராக இருக்க வேண்டும். கடும் மனச்சோர்வுக்குள் வீழ்ந்தவளாயிருந்த ஒரு கிறிஸ்தவப் பெண் இவ்வாறு பின்பு கூறினாள்: “மற்ற நோய்களைக் குறித்ததில் இருப்பதைப்போலவே, இந்தக் காலத்தில் யெகோவா அற்புதங்களை நடப்பிப்பதில்லை. ஆனால் இந்த ஒழுங்குமுறையில் நம்மால் கூடிய அளவுக்குச் சமாளிக்கவும் சுகமடையவும் அவர் நிச்சயமாகவே நமக்கு உதவிசெய்கிறார்.” தன்னுடைய ஜெபங்கள் ஏன் மாற்றத்தை உண்டுபண்ணினதென்று விளக்கி, அவள் மேலும் இவ்வாறு சொன்னாள்: “யெகோவாவின் பரிசுத்த ஆவியினுடைய உதவி, நாளின் 24 மணிநேரமும் எனக்குக் கிடைக்கக்கூடியதாயிருந்தது.” இவ்வாறு, நம்மைக் கவலையால் அழுத்தும் வாழ்க்கையின் நெருக்கடிகளிலிருந்து யெகோவா நம்மைத் தடுத்து வைப்பதில்லை, ஆனால் “தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியை” அவர் நிச்சயமாகவே கொடுக்கிறார்! (லூக்கா 11:13; சங்கீதம் 88:1-3) அந்த ஆவி, நாம் எதிர்ப்படும் எந்த சோதனை அல்லது துன்ப நெருக்கடியையும் நாம் சமாளிக்கும்படி செய்விக்கும். (1 கொரிந்தியர் 10:13) நெருக்கடியுண்டாக்கும் எல்லா பிரச்சினைகளையும், மிக சமீபத்தில் வரவிருக்கிற புதிய உலகில், கடவுளுடைய ராஜ்யம் நீக்கும் வரையில் சகித்து நிலைத்திருப்பதற்கு, அவசியமானால், ‘இயல்புக்கு மீறிய வல்லமையை’ அது நம்மில் உட்செலுத்த முடியும்.—2 கொரிந்தியர் 4:7, NW.
5. (அ) நம்முடைய ஜெபங்கள் பலன் தருபவையாக இருப்பதற்கு, என்ன இரண்டு காரியங்கள் முக்கியமானவை? (ஆ) மாம்ச பலவீனம் ஒன்றோடு நாம் போராடிக்கொண்டிருந்தால் எவ்வாறு ஜெபிக்கலாம்? (இ) நம்முடைய இடைவிடாத மற்றும் திட்டமான ஜெபங்கள் யெகோவாவுக்கு எதை மெய்ப்பித்துக் காட்டும்?
5 எனினும் நம்முடைய ஜெபங்கள் பலன்தருபவையாக இருப்பதற்கு, ஜெபத்தில் நாம் விடாது தரித்திருக்க வேண்டும், மற்றும் திட்டமாய்க் குறிப்பிடுவோராயும் இருக்க வேண்டும். (ரோமர் 12:12) உதாரணமாக, மாம்சத்தின் பலவீனம் ஒன்றோடு நீங்கள் போராடிக்கொண்டிருப்பதன் காரணமாகச் சில சமயங்களில் நீங்கள் சோர்வடைந்தால், ஒவ்வொரு நாளின் தொடக்கத்திலும், அந்த நாளின்போது அந்தக் குறிப்பிட்ட பலவீனத்திற்கு உட்படுவதைத் தவிர்க்க உங்களுக்கு உதவிசெய்யும்படி யெகோவாவிடம் வேண்டிக்கொள்ளுங்கள். அந்த நாள்முழுவதும் மற்றும் ஒவ்வொரு இரவும் தூங்கப்போவதற்கு முன்னும் அவ்வாறு ஜெபியுங்கள். திரும்பவும் தவறிவிட்டீர்களென்றால், யெகோவா மன்னிக்கும்படி அவரிடம் மன்றாடுங்கள். திரும்பத் தவறும்படி வழிநடத்தினது எது என்பதைப் பற்றியும், எதிர்காலத்தில் அந்தச் சூழ்நிலைகளைத் தவிர்க்க நீங்கள் என்ன செய்யக்கூடும் என்பதைப் பற்றியும் அவரிடம் பேசுங்கள். அத்தகைய இடைவிடாத மற்றும் திட்டமான ஜெபங்கள், போராட்டத்தில் வெற்றிபெறும்படியான உங்கள் ஆவலின் உள்ளப்பூர்வத்தை “ஜெபத்தைக் கேட்கிறவ”ருக்கு மெய்ப்பித்துக் காட்டும்.—சங்கீதம் 65:2; லூக்கா 11:5-13.
6. ஜெபிப்பதற்குத் தகுதியற்றவர்களாக நாம் உணரும்போதும்கூட யெகோவா நம்முடைய ஜெபங்களைக் கேட்பாரென்று நாம் ஏன் சரியாகவே எதிர்பார்க்கலாம்?
6 எனினும், சோர்வுற்றவர்கள், ஜெபிப்பதற்குத் தகுதியற்றவர்களாகச் சில சமயங்களில் உணரக்கூடும். இவ்வாறு உணர்ந்திருந்த ஒரு கிறிஸ்தவப் பெண் பிற்பாடு சொன்னதாவது: “அது மிக ஆபத்தான சிந்தனை, ஏனெனில் நம்மைநாமே நியாயம் தீர்ப்பதை நம்மீது ஏற்றுக்கொண்டோம் என அது குறிக்கிறது, ஆனால் அது நமக்குரியதல்ல.” நிச்சயமாகவே, “தேவனே நியாயாதிபதி.” (சங்கீதம் 50:6) ‘நம்முடைய இருதயமே நம்மைக் குற்றவாளிகளாகத் தீர்த்தாலும்,’ “தேவன் நம்முடைய இருதயத்திலும் பெரியவராயிருந்து சகலத்தையும் அறிந்திருக்கிறார்” என்று பைபிள் நமக்கு உறுதியளிக்கிறது. (1 யோவான் 3:20) ஜெபிப்பதற்குத் தகுதியற்றவர்களென நம்மைநாமே தீர்க்கும்போதும், யெகோவா நம்மிடமாக அவ்வகையில் உணராதிருக்கலாம் என்பதை அறிவது எவ்வளவு ஆறுதலளிப்பதாக இருக்கிறது! அவ்வளவாய்த் தகுதியற்றவர்களென்று நம்மை உணரும்படி செய்திருக்கக்கூடிய நம் வாழ்க்கை சூழ்நிலைகள் உட்பட, நம்மைப்பற்றிய “சகலத்தையும் அறிந்திருக்கிறார்.” (சங்கீதம் 103:10-14) “நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்”திலிருந்து வரும் ஜெபங்களுக்குச் செவிகொடுக்க, அவருடைய இரக்கமும் புரிந்துகொள்ளும் ஆழமும் அவரைச் செய்விக்கின்றன. (சங்கீதம் 51:17) “ஏழையின் கூக்குரலுக்குத் தன் செவியை அடைத்துக்கொள்ளுகிற” எவரையும் அவர்தாமே கண்டனம் செய்கையில், உதவிக்காகக் கேட்கும் நம் மன்றாட்டுகளுக்குச் செவிகொடுக்க அவர் எவ்வாறு மறுக்கக்கூடும்?—நீதிமொழிகள் 21:13.
சகோதரத்துவத்தின் அன்பு
7. (அ) நாம் திரும்பவும் பலப்படும்படி நமக்கு உதவிசெய்வதற்காக யெகோவா செய்திருக்கிற மற்றொரு ஏற்பாடு என்ன? (ஆ) நம்முடைய சகோதரத்துவத்தைப்பற்றி எதை அறிவது நமக்குப் பலமூட்டுவதாக இருக்கலாம்?
7 மீண்டும் பலமடைய நமக்கு உதவி செய்வதற்கு யெகோவா செய்திருக்கும் மற்றொரு ஏற்பாடு நம்முடைய கிறிஸ்தவ சகோதரத்துவம் ஆகும். சகோதரரையும் சகோதரிகளையும் கொண்ட உலகளாவிய ஒரு குடும்பத்தின் பாகமாக இருப்பது எத்தகைய ஓர் அரும் சிலாக்கியம்! (1 பேதுரு 2:17, தி.மொ.) வாழ்க்கையின் நெருக்கடிகள் நம்மை மனச்சோர்வடைய செய்கையில், நம் சகோதரத்துவத்தின் அன்பு திரும்பவும் பலப்படும்படி நமக்கு உதவிசெய்ய முடியும். எவ்வாறு? நெருக்கடியான சவால்களை எதிர்ப்படுவதில் நாம் தனிமையாக இல்லை என்று அறிவதுதானேயும் பலமூட்டுவதாக இருக்கலாம். நம்முடையதைப் போன்ற நெருக்கடிகளையும் இக்கட்டுகளையும் எதிர்ப்பட்டு, பெரும்பாலும் நமக்கிருப்பதைப் போன்ற உணர்ச்சிகளை அனுபவித்திருக்கிற சிலர், சந்தேகமில்லாமல் நம் சகோதர சகோதரிகளுக்குள் இருக்கிறார்கள். (1 பேதுரு 5:9) நாம் அனுபவித்துக் கொண்டிருப்பது அசாதாரணமானதல்ல, நம்முடைய உணர்ச்சிகளும் வழக்கத்துக்கு மாறானதல்ல என்றறிவது திரும்பவும் நம்பிக்கையூட்டுவதாக உள்ளது.
8. (அ) மிகுதியாகத் தேவைப்படும் உதவியையும் ஆறுதலையும் நம்முடைய சகோதரத்துவத்தில் நாம் கண்டடையக் கூடுமென்று என்ன உதாரணங்கள் காட்டுகின்றன? (ஆ) ‘உண்மையான தோழர் ஒருவரால்’ நீங்கள்தாமே எவ்வகையில் உதவிசெய்யப்பட்டிருக்கிறீர்கள் அல்லது ஆறுதல்படுத்தப்பட்டிருக்கிறீர்கள்?
8 நாம் வருத்தத்தில் இருக்கும்போது, தேவைப்படும் உதவியையும் ஆறுதலையும் அளிக்கக்கூடிய ‘உண்மையான தோழர்களை’ இந்தச் சகோதரத்துவத்தின் அன்பில் நாம் கண்டடையலாம். (நீதிமொழிகள் 17:17, NW) அன்பான சில வார்த்தைகளே அல்லது சிந்தனையுள்ள செயல்களே பெரும்பாலும் தேவைப்படுகின்றன. தான் தகுதியற்றவளென்ற உணர்ச்சிகளோடு போராடிக்கொண்டிருந்த கிறிஸ்தவப் பெண் இதை நினைவுபடுத்திச் சொன்னாள்: “எனக்கிருந்த எதிர்மறையான எண்ணங்களை மாற்றும்படி எனக்கு உதவிசெய்வதற்கு, என்னைப் பற்றிய நம்பிக்கையூட்டும் காரியங்களை என்னிடம் பேசும் நண்பர்கள் இருந்தனர்.” (நீதிமொழிகள் 15:23) தன் இளைய மகளை மரணத்தில் இழந்தப் பின்பு ஒரு சகோதரி, சபை கூட்டங்களில் ராஜ்ய பாட்டுகளை, முக்கியமாய் உயிர்த்தெழுதலைக் குறிப்பிட்டவற்றைப் பாடுவதை முதலில் கடினமாகக் கண்டார்கள். அவர்கள் நினைவுபடுத்திச் சொல்வதாவது: “ஒரு சமயம், அடுத்தப்புறத்தில் உட்கார்ந்திருந்த ஒரு சகோதரி நான் அழுவதைக் கண்டார்கள். அவர்கள் என் அருகில் வந்து, தன் கரத்தால் என்னை அணைத்துக்கொண்டு, அந்தப் பாட்டின் மீதிபாகத்தை என்னோடு பாடினார்கள். சகோதர சகோதரிகளிடமாகப் பொங்குமளவாய் நான் அன்புணர்ந்து, கூட்டங்களுக்கு வந்ததற்காக மிகவும் சந்தோஷப்பட்டேன். அங்கே, ராஜ்ய மன்றத்தில்தான் நமக்கு உதவியுள்ளதென்று உணர்ந்தேன்.”
9, 10. (அ) எவ்வாறு நாம் நம்முடைய சகோதரத்துவத்தின் அன்பனலுக்கு நம் பங்கைச் செய்யலாம்? (ஆ) உகந்த நல்கூட்டுறவு முக்கியமாய் யாருக்குத் தேவைப்படுகிறது? (இ) ஊக்கமூட்டுதல் தேவைப்படுவோருக்கு உதவி செய்ய நாம் என்ன செய்யலாம்?
9 நிச்சயமாகவே, கிறிஸ்தவ சகோதரத்துவ அன்புக்கு நம் பங்கைச் செய்வதற்கான பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் உள்ளது. இவ்வாறு, நம்முடைய சகோதர சகோதரிகள் அனைவரையும் உள்ளடங்கச் செய்யும்படி நம் இருதயம் ‘விரிவாக’ வேண்டும். (2 கொரிந்தியர் 6:13, NW) சகோதரத்துவத்தின் அன்பு தங்களிடமாக அனலற்றுப் போயிற்றென்று சோர்வடைந்து போயிருப்போர் உணருவது எவ்வளவு விசனகரமானது! எனினும், கிறிஸ்தவர்கள் சிலர், தாங்கள் தனிமையாயும் கைவிடப்பட்டோராயும் உணர்வதாக அறிவிக்கின்றனர். சத்தியத்தை எதிர்க்கும் கணவனையுடைய ஒரு சகோதரி இவ்வாறு மன்றாடினார்கள்: “கட்டியெழுப்பும் நட்புறவுகளையும், ஊக்கமூட்டுதலையும், அன்புள்ள கூட்டுறவையும் விரும்பாமலும் தேவைப்படாமலும் இருப்போர் யார்? எங்களுக்கு அவை தேவை என்று நம் சகோதரரையும் சகோதரிகளையும் தயவுசெய்து நினைப்பூட்டுங்கள்!” ஆம், முக்கியமாய் வாழ்க்கையிலுள்ள சூழ்நிலைகள் தங்களைச் சோர்வுறச் செய்கிறவர்களுக்கு—அவிசுவாசியான துணைவரை உடையவர்கள், பெற்றோர் ஒருவரை மட்டுமே உடையோர், உடல்நலக்கேடுற்ற தீராப் பிரச்சினைகளையுடையோர், வயதானவர்கள், இன்னும் மற்றவர்களுக்கு—உகந்த நல்கூட்டுறவு தேவைப்படுகிறது. இதைக்குறித்து நம்மில் சிலர் நினைப்பூட்டப்பட வேண்டியவர்களாக இருக்கிறோமா?
10 உதவிசெய்வதற்கு நாம் என்ன செய்யலாம்? நம்முடைய அன்பை வெளிப்படுத்திக் காட்டுவதில் நாம் விரிவாகுவோமாக. விருந்தளிக்கையில், ஊக்கமூட்டுதல் தேவைப்படுவோரை மறவாதிருப்போமாக. (லூக்கா 14:12-14; எபிரெயர் 13:2) அழைப்பை ஏற்பதற்கு அவர்களுடைய சூழ்நிலைகள் தடையாயுள்ளனவென்று எண்ணிக்கொள்வதற்குப் பதிலாக, எவ்வாறாயினும் அவர்களுக்கும் அழைப்பு தரலாமல்லவா? பின்பு அவர்களே தீர்மானிக்கும்படி விடுங்கள். அவர்கள் ஏற்க முடியாவிடினும், மற்றவர்கள் தங்களைப் பற்றி நினைத்தார்கள் என்று அறிவதில் ஊக்கமடைந்தவர்களாக சந்தேகமில்லாமல் உணருவார்கள். அவர்கள் மீண்டும் பலம்பெறுவதற்கு அதுவே தேவைப்பட்டிருக்கலாம்.
11. சோர்வுற்றிருப்போருக்கு எந்த வழிகளில் உதவி தேவைப்படலாம்?
11 சோர்வடைந்திருப்போருக்கு வேறு வழிகளிலும் உதவி தேவைப்படலாம். உதாரணமாக, கணவரில்லாமல் தனிமையாக விடப்பட்ட தாய்க்கு, தகப்பனில்லாத தன் பையனில் முதிர்ச்சியடைந்த சகோதரர் ஒருவர் அக்கறை காட்டும்படி தேவைப்படலாம். (யாக்கோபு 1:27) மோசமான உடல்நலப் பிரச்சினையையுடைய ஒரு சகோதரன் அல்லது சகோதரிக்கு கடையிலிருந்து பொருட்கள் வாங்குவதற்கு அல்லது அன்றாட வீட்டு வேலைகளைச் செய்வதற்கு ஏதாவது உதவி தேவைப்படலாம். வயதான ஒருவர் சிறிது தோழமையை ஆவலோடு விரும்பலாம் அல்லது ஊழியத்தில் செல்ல அவருக்கு உதவி தேவைப்படலாம். இத்தகைய உதவி தொடர்ந்து தேவைப்படுகிறபோது, மெய்யாகவே ‘நம்முடைய அன்பின் உண்மையைப் பரீட்சிப்பதாக’ இருக்கிறது. (2 கொரிந்தியர் 8:8, தி.மொ.) இவற்றிற்கு நேரமும் முயற்சியும் வேண்டியதாக இருப்பதால், தேவையிலிருப்போரிடமிருந்து விலகிக்கொள்வதற்குப் பதிலாக, மற்றவர்களின் தேவைகளுக்கு உணர்வுள்ளோராயும் அவற்றைத் தீர்க்க உதவிசெய்வோராயும் இருப்பதன்மூலம் கிறிஸ்தவ அன்புக்குரிய பரீட்சையில் தேறுவோமாக.
கடவுளுடைய வார்த்தையின் பலம்
12. நாம் மீண்டும் பலம் பெறுவதற்கு கடவுளுடைய வார்த்தை நமக்கு எவ்வாறு உதவி செய்கிறது?
12 சாப்பிடுவதை நிறுத்திவிடுகிற ஒருவர் தன் பலத்தை, அல்லது வல்லமையைச் சீக்கிரத்தில் இழந்துவிடுவார். அவ்வாறே, நாம் விடாது தொடரும்படி யெகோவா நமக்கு பலம் அளிக்கிற மற்றொரு வழியானது, ஆவிக்குரியப்பிரகாரம் நாம் நன்றாய் உணவூட்டப்படும்படி பார்த்துக்கொள்வதாகும். (ஏசாயா 65:13, 14) என்ன ஆவிக்குரிய உணவை அவர் அளித்திருக்கிறார்? எல்லாவற்றிற்கும் மேலாக, அவருடைய வார்த்தையாகிய பைபிளை அளித்திருக்கிறார். (மத்தேயு 4:4; ஒப்பிடுக: எபிரெயர் 4:12.) மீண்டும் பலம் பெறுவதற்கு இது நமக்கு எவ்வாறு உதவி செய்யலாம்? நாம் எதிர்ப்படும் நெருக்கடிகளும் பிரச்சினைகளும் நம்முடைய பலத்தை உறிஞ்சிவிடத் தொடங்குகையில், பைபிள் காலங்களிலிருந்த உண்மையுள்ள ஆண்களும் பெண்களுமானவர்களின் உணர்ச்சிகளையும் உண்மையான வாழ்க்கைப் போராட்டங்களையும் பற்றி வாசிப்பதிலிருந்து நாம் பலம் பெறலாம். உத்தமத்தின் முனைப்பான முன்மாதிரிகளாக இருந்தபோதிலும், அவர்கள் “நம்மைப்போன்ற தன்மையுள்ள” மனிதரே. (யாக்கோபு 5:17, தி.மொ.; அப்போஸ்தலர் 14:15) நம்முடையவற்றைப் போன்ற பரீட்சைகளையும் நெருக்கடிகளையும் அவர்கள் எதிர்ப்பட்டார்கள். சில உதாரணங்களைக் கவனியுங்கள்.
13. பைபிள் காலங்களிலிருந்த உண்மையுள்ள ஆண்களும் பெண்களும் பெரும்பாலும் நம்முடையவற்றைப் போன்ற உணர்ச்சிகளையும் அனுபவங்களையும் உடையோராக இருந்தனரென்று, வேதப்பூர்வ என்ன உதாரணங்கள் காட்டுகின்றன?
13 கோத்திரப் பிதாவாகிய ஆபிரகாமுக்கு உயிர்த்தெழுதலில் விசுவாசம் இருந்தபோதிலும்கூட தன் மனைவி இறந்ததன்பேரில் ஆழ்ந்த துக்கத்தை வெளிப்படுத்தினார். (ஆதியாகமம் 23:2; ஒப்பிடுக: எபிரெயர் 11:8-10, 17-19.) மனந்திரும்பின தாவீது, தன் பாவங்கள், யெகோவாவைச் சேவிப்பதற்குத் தன்னைத் தகுதியற்றவனாக்கிவிட்டன என்று உணர்ந்தார். (சங்கீதம் 51:11) மோசே குறைபாடு உணர்ச்சிகளை உடையவராக இருந்தார். (யாத்திராகமம் 4:10) கடுமையான நோய் ‘கிறிஸ்துவின் ஊழியத்தில்’ தன்னுடைய சேவையை மட்டுப்படுத்தினதைப் பற்றியது தெரியவந்தபோது எப்பாப்பிரோதீத்து வியாகுலப்பட்டார். (பிலிப்பியர் 2:25-30) பாவ மாம்சத்துக்கு எதிராகப் பவுல் போராட வேண்டியிருந்தது. (ரோமர் 7:21-25) பிலிப்பி சபையிலிருந்த அபிஷேகம் செய்யப்பட்ட இரண்டு சகோதரிகளான எயோதியாளுக்கும் சிந்திகேயாளுக்கும், ஒருவருக்கொருவர் ஒத்துப்போவதில் ஏதோ சங்கடம் இருந்ததாகத் தோன்றினது. (பிலிப்பியர் 1:1; 4:2, 3) உண்மையுள்ளவர்களாயிருந்த இவர்களுக்கு நமக்கு இருப்பவற்றைப் போன்ற உணர்ச்சிகளும் அனுபவங்களும் இருந்தபோதிலும், அவர்கள் சோர்ந்துவிடவில்லை என்பதை அறிவது எவ்வளவு ஊக்கமூட்டுவதாக இருக்கிறது! யெகோவாவும் அவர்களைக் கைவிடவில்லை.
14. (அ) தம்முடைய வார்த்தையிலிருந்து பலம் பெற நமக்கு உதவிசெய்வதற்கு எதை யெகோவா கருவியாகப் பயன்படுத்தியிருக்கிறார்? (ஆ) காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! பத்திரிகைகள், சமுதாய, குடும்ப, மற்றும் உணர்ச்சி சம்பந்த கட்டுரைகளை வெளியிட்டிருப்பதேன்?
14 தம்முடைய வார்த்தையிலிருந்து நாம் பலத்தைப் பெற்றுக்கொண்டிருக்கும்படி நமக்கு உதவிசெய்வதற்கு, ‘ஏற்றவேளையிலே போஜனம்’ விடாது தொடர்ந்து நமக்கு அளித்துவரும்படி, உண்மையும் விவேகமுமுள்ள அடிமை வகுப்பை யெகோவா பயன்படுத்துகிறார். (மத்தேயு 24:45, NW) இந்த உண்மையுள்ள அடிமை, பைபிள் சத்தியத்தின் சார்பாகப் போராடவும், கடவுளுடைய ராஜ்யமே மனிதனின் ஒரே நம்பிக்கை என்று யாவரறிய அறிவிக்கவும் காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! பத்திரிகைகளை வெகு காலமாய்ப் பயன்படுத்தி வந்திருக்கிறது. முக்கியமாக, கடந்த சில பத்தாண்டுகளில் இந்தப் பத்திரிகைகள், கடவுளுடைய ஜனங்களில் சிலரும்கூட எதிர்ப்படுகிற, சமுதாய, குடும்ப, மற்றும் உணர்ச்சி சம்பந்த சவால்கள் போன்றவற்றின்பேரில் சமயத்திற்கேற்ற வேதப்பூர்வக் கட்டுரைகளைக் கொண்டு சென்றிருக்கின்றன. இத்தகைய தகவல் என்ன நோக்கத்திற்காகப் பிரசுரிக்கப்பட்டு வந்திருக்கிறது? இத்தகைய சவால்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறவர்கள் நிச்சயமாகவே, கடவுளுடைய வார்த்தையிலிருந்து பலத்தையும் ஊக்கமூட்டுதலையும் பெறும்படி உதவிசெய்வதற்கே பிரசுரிக்கப்படுகின்றன. ஆனால் நம்முடைய சகோதரரும் சகோதரிகளுமான சிலர் அனுபவித்துக் கொண்டிருக்கக் கூடியவற்றைப் பற்றி தெளிவாகப் புரிந்துகொண்டிருக்கவும் இத்தகைய கட்டுரைகள் நம்மெல்லாருக்கும் உதவிசெய்கின்றன. இவ்வாறு பவுலின் இவ்வார்த்தைகளுக்குச் செவிகொடுக்க நாம் மேலும் நன்றாய்த் தகுதிபெறச் செய்யப்படுகிறோம்: “மனந்தளர்ந்தவர்களை உற்சாகப்படுத்துங்கள், பலவீனரைத் தாங்குங்கள், எல்லாரிடத்திலும் நீடியசாந்தமாயிருங்கள்.”—1 தெசலோனிக்கேயர் 5:14, தி.மொ.
“காற்றுக்கு ஒதுக்கை”யாக இருக்கிற மூப்பர்கள்
15. மூப்பர்களாகச் சேவிப்போரைப்பற்றி ஏசாயா என்ன தீர்க்கதரிசனம் உரைத்தார், இது அவர்கள்மீது என்ன பொறுப்பை வைக்கிறது?
15 நாம் சோர்வுறும்போது நமக்கு உதவிசெய்வதற்கு யெகோவா வேறு ஒன்றையும் ஏற்பாடு செய்திருக்கிறார்—சபை மூப்பர்கள். இவர்களைக் குறித்து தீர்க்கதரிசியாகிய ஏசாயா இவ்வாறு எழுதினார்: “அவர்களில் ஒவ்வொருவரும் காற்றுக்கு ஒதுக்கைப்போலவும், பெருமழைக்கு ஒதுங்குமிடம்போலவும், வறண்ட நிலத்துக்கு நீரோடைபோலவும், விடாய்த்த பூமியில் பெருங் கன்மலையின் நிழல்போலவும் இருப்பார்.” (ஏசாயா 32:1, 2, தி.மொ.) அவ்வாறெனில், மூப்பர்கள், தங்களைப்பற்றி யெகோவா முன்னறிவித்திருக்கிற தகுதிகளைப் பெற்றவர்களாக இருக்க வேண்டிய பொறுப்புடையோராக இருக்கின்றனர். மற்றவர்களுக்கு ஆறுதலின் மற்றும் புத்துணர்ச்சியூட்டுவதன் மூலகாரணராக அவர்கள் ‘இருந்து,’ ‘ஒருவர் மற்றொருவருடைய பாரங்களை [அல்லது “தொல்லை தருகிற காரியங்களை”; சொல்லர்த்தமாய், “பாரமான காரியங்களை”] தொடர்ந்து சுமக்க’ மனமுள்ளோராக இருக்க வேண்டும். (கலாத்தியர் 6:2, NW, அடிக்குறிப்பு) இதை அவர்கள் எவ்வாறு செய்யக்கூடும்?
16. ஜெபிப்பதற்குத் தகுதியற்றவராக உணரும் ஒருவருக்கு உதவி செய்ய மூப்பர்கள் என்ன செய்யலாம்?
16 முன்பு குறிப்பிட்டபடி, சோர்வுற்றிருக்கிற ஒருவர் ஜெபிப்பதற்குத் தகுதியற்றவராகச் சில சமயங்களில் உணரக்கூடும். மூப்பர்கள் என்ன செய்யலாம்? அவர்கள் அந்த நபரோடும் அவருக்காகவும் ஜெபிக்கலாம். (யாக்கோபு 5:14) அவர் அல்லது அவள் யெகோவாவாலும் மற்றவர்களாலும் எவ்வளவாய் நேசிக்கப்படுகிறார் என்று அந்த நபர் புரிந்துகொள்ள உதவிசெய்யும்படி, சோர்வுற்றவர் செவிகேட்க யெகோவாவிடம் கேட்பதுதானே நிச்சயமாக ஆறுதலாயிருக்கும். ஒரு மூப்பரின் ஊக்கமான, இருதயப்பூர்வ ஜெபத்தை செவியில் கேட்பது, மனத்துயருற்ற ஒருவரின் நம்பிக்கையைப் பலப்படுத்துவதற்கு உதவிசெய்யலாம். தனக்காகச் செய்யும் ஜெபங்களுக்கு யெகோவா செவிகொடுப்பாரென்று மூப்பர்களுக்கு நம்பிக்கை இருந்தால், தானும் அந்த நம்பிக்கையில் பங்குகொள்ளலாமென்று சிந்தனை செய்ய அவருக்கு அல்லது அவளுக்கு உதவிசெய்யக்கூடும்.
17. மூப்பர்கள் ஏன் பேசுபவர் நிலையில் தங்களை வைத்து செவிகொடுப்போராக இருக்க வேண்டும்?
17 “எந்த மனுஷனும் கேட்கிறதற்குத் தீவிரமாயும் பேசுகிறதற்குத் தாமதமாயும் . . . இருக்கக்கடவன்,” என்று யாக்கோபு 1:19-ல் (தி.மொ.) சொல்லியிருக்கிறது. சோர்வுற்றோர் மீண்டும் பலம் பெற அவர்களுக்கு உதவிசெய்ய, மூப்பர்கள், தங்களிடம் பேசுபவரின் நிலையில் தங்களை வைத்து செவிகொடுப்போராகவும் இருக்க வேண்டும். சில காரியங்களில், இந்தக் காரிய ஒழுங்குமுறையில் தீர்க்கப்பட முடியாத பிரச்சினைகளுடன் அல்லது நெருக்கடிகளுடன் சபை உறுப்பினர் போராடிக்கொண்டிருக்கலாம். அவ்வாறெனில், அவர்களுக்குத் தேவைப்படுவது தங்கள் பிரச்சினைகளைத் “தீர்ப்பது” அல்ல, ஆனால் நன்கு செவிகொடுத்துக் கேட்கும் ஒருவரிடம்—அவர்கள் எவ்வாறு உணர வேண்டும் என்று அவர்களுக்குச் சொல்பவராய் நியாயந்தீர்ப்பவராக இராமல் செவிகொடுத்துக் கேட்கும் ஒருவரிடம்—வெறுமனே பேசுவதேயாகும்.—லூக்கா 6:37; ரோமர் 14:13.
18, 19. (அ) செவிகொடுத்துக் கேட்பதற்கு ஆயத்தமாயிருப்பதானது, சோர்வுற்றவரின் சுமையை மேலும் அதிகரிப்பதைத் தவிர்க்க ஒரு மூப்பருக்கு எவ்வாறு உதவி செய்யலாம்? (ஆ) மூப்பர்கள் ‘அனுதாபம்’ காட்டும்போது என்ன பலன் உண்டாகிறது?
18 மூப்பர்களே, செவிகொடுப்பதற்குத் தீவிரமாக இருப்பதானது, சோர்வுற்றோரின் சுமையை நீங்கள் கவனக்குறைவாக இன்னும் பாரமாக்குவதைத் தவிர்க்க உங்களுக்கு உதவி செய்யும். உதாரணமாக, ஒரு சகோதரனோ சகோதரியோ கூட்டங்கள் சிலவற்றிற்கு வரத் தவறியிருந்தால் அல்லது வெளி ஊழியத்தில் பின்வாங்கியிருந்தால், ஊழியத்தில் அதிகம் செய்வதைப்பற்றி அல்லது கூட்டங்களுக்கு மேலும் தவறாதிருப்பதைப் பற்றி அறிவுரை அவருக்கு அல்லது அவளுக்கு உண்மையில் தேவைப்படுகிறதா? இருக்கலாம். ஆனால் அவர்கள் சந்தர்ப்பநிலை முழுவதையும் அறிந்திருக்கிறீர்களா? உடல்நலப் பிரச்சினைகள் அதிகரித்துள்ளனவா? குடும்பப் பொறுப்புகள் சமீபத்தில் மாறியிருக்கின்றனவா? அவரை அல்லது அவளைக் கவலையால் ஆழ்த்தும் மற்ற சூழ்நிலைகள் அல்லது நெருக்கடிகள் எவையேனும் உண்டா? தான் அதிகம் செய்ய முடியாதிருப்பதைப் பற்றி அந்த நபர் ஏற்கெனவே அதிக குற்ற உணர்ச்சியுடையவராக இருக்கலாம் என்பதை நினைவில் வையுங்கள்.
19 அவ்வாறெனில், அந்தச் சகோதரனுக்கு அல்லது சகோதரிக்கு நீங்கள் எவ்வாறு உதவி செய்யலாம்? நீங்கள் முடிவுகளுக்கு வந்து அறிவுரை அளிப்பதற்கு முன்பாக, செவிகொடுத்துக் கேளுங்கள்! (நீதிமொழிகள் 18:13) பகுத்தறியும் கேள்விகளைக் கொண்டு அந்த நபரின் இருதய உணர்ச்சிகளை ‘வெளிப்படுத்தச்’ செய்யுங்கள். (நீதிமொழிகள் 20:5) இந்த உணர்ச்சிகளைக் கவனியாது விடாதீர்கள்—அவற்றை ஒப்புக்கொள்ளுங்கள். யெகோவா நம்மீது அக்கறையுடையவராக இருக்கிறார், நம்முடைய சூழ்நிலைகள் நம்மைச் சில சமயங்களில் மட்டுப்படுத்தலாம் என்பதை அவர் புரிந்துகொள்கிறார் என்று உறுதிசெய்வது, சோர்வுற்ற அவருக்குத் தேவைப்படலாம். (1 பேதுரு 5:7) மூப்பர்கள் இத்தகைய ‘அனுதாபம்’ காட்டும்போது, சோர்வுற்றவர்கள் ‘தங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கண்டடைவார்கள்.’ (1 பேதுரு 3:8, தி.மொ.; மத்தேயு 11:28-30, தி.மொ.) இத்தகைய இளைப்பாறுதலை அவர்கள் கண்டடையும்போது, அதிகம் செய்யும்படி சொல்வது அவர்களுக்குத் தேவையில்லை; யெகோவாவைச் சேவிப்பதில் நேர்மையாய்த் தங்களால் கூடிய எல்லாவற்றையும் செய்யும்படி அவர்களுடைய இருதயம் அவர்களைத் தூண்டியியக்கும்.—ஒப்பிடுக: 2 கொரிந்தியர் 8:12; 9:7.
20. இந்தப் பொல்லாத சந்ததியின் முடிவு அவ்வளவு மிகச் சமீபமாய் இருக்கையில், நாம் என்ன செய்ய தீர்மானித்திருக்க வேண்டும்?
20 மெய்யாகவே, மனித சரித்திரம் முழுவதிலுமே மிக இக்கட்டான காலத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். முடிவு காலத்துக்குள் நாம் இன்னும் நெருங்கிக்கொண்டிருக்கையில் சாத்தானின் உலகத்தில் வாழ்வதன் நெருக்கடிகள் அதிகரிக்கின்றன. இரை தேடும் சிங்கத்தைப்போல், பிசாசானவன், நம்மை எளிதான இரையாக்கிக் கொள்வதற்கு ஏதுவாக, நாம் சோர்வடைந்து விட்டுவிடுவதற்காகக் காத்துக்கொண்டிருக்கிறான் என்பதை நினைவில் வையுங்கள். சோர்ந்துபோகிறவனுக்கு யெகோவா பலம் கொடுக்கிறார் என்பதற்காக நாம் எவ்வளவு நன்றியுள்ளவர்களாக இருக்கலாம்! ஆகாயத்தில் சிறகடிக்காமல் மிதக்கும் கழுகின் பலத்த செட்டைகளை நமக்கு அளிப்பதைப் போல், நாம் விடாது தொடர்ந்து சென்றுகொண்டிருக்க நமக்குப் பலத்தைக் கொடுப்பதற்கு அவர் செய்திருக்கிற ஏற்பாடுகளை நாம் முழுமையாய்ப் பயன்படுத்திக்கொள்வோமாக. இந்தப் பொல்லாத சந்ததியின் முடிவு அவ்வளவு மிகச் சமீபமாய் இருக்கையில், பரிசை—நித்தியஜீவனை—பெறுவதற்கான நம்முடைய பந்தய ஓட்டத்தில் ஓடுவதை நிறுத்துவதற்கு இது சமயமல்ல.—எபிரெயர் 12:1.
உங்கள் விடை என்ன?
◻ நம்முடைய ஜெபங்களுக்கு விடை தருபவராக யெகோவா என்ன செய்யும்படி நாம் எதிர்பார்க்கலாம்?
◻ நம்முடைய கிறிஸ்தவ சகோதரத்துவத்திலிருந்து என்ன வழிகளில் நாம் பலம் பெறலாம்?
◻ மீண்டும் பலம் பெறுவதற்கு கடவுளுடைய வார்த்தை எவ்வாறு நமக்கு உதவி செய்கிறது?
◻ சோர்வுற்றிருப்போர் மீண்டும் பலம் பெறுவதற்கு மூப்பர்கள் என்ன செய்யலாம்?
[பக்கம் 17-ன் படம்]
விருந்தளிக்கையில், ஊக்கமூட்டுதல் தேவைப்படுவோரை நாம் மறவாதிருப்போமாக
[பக்கம் 18-ன் படம்]
தாங்கள் எவ்வளவு அதிகமாக நேசிக்கப்படுகிறார்கள் என்பதைச் சோர்வுற்றோர் புரிந்துகொள்ள உதவி செய்யும்படி, மூப்பர்கள் யெகோவாவிடம் கேட்கலாம்