பெலத்தை மீண்டும் பெறுதல், சோர்ந்து போகாதிருத்தல்
“சோர்ந்து போகிறவனுக்கு அவர் பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப் பண்ணுகிறார்.”—ஏசாயா 40:29.
1, 2. ஓட்டப்பந்தயத்தின் ஓட்டக்காரர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் பொதுப்படையாக இருக்கும் காரியத்தை நீங்கள் எவ்விதமாக விளக்குவீர்கள்?
1984-ம் ஆண்டு, அக்டோபர் மாதம், ஒரு நாள் காலையில், நியு யார்க் நகர ஓட்டப்பந்தயத்தின் தொடக்கத்துக்காக, போட்டியிட்ட சுமார் 16,000 பேர் கொண்ட ஒரு மக்கள் கடல் தெருக்களில் அலையென திரண்டன. முடிவு கோடு 26.2 மைல்கள் (42.2 கி.மீ.) தொலைவில் இருந்தது. பருவத்துக்கு மாறாக, வெப்பமாக இருந்த அந்த இலையுதிர்கால நாளின், திணரச் செய்யும் வெப்பமும், உயர்ந்த ஈரப்பதமும் ஓடுகிறவர்களின் சக்தியை உறிஞ்சி அவர்களுடைய பொறுமையை சோதிப்பதாக இருந்தது. மிகச் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கும்கூட இது சோர்வடையச் செய்யும் கடும் போட்டியாக இருந்தது. அநேக ஓட்டக்காரர்கள் சோர்வடைந்து போட்டியிலிருந்து விலகிக்கொண்டார்கள்; ஏறக்குறைய 2000 பேர் கடைசிவரை ஓடவில்லை. கடைசிவரை ஓடியவர்கள் மிகவும் கடினமான நிலைமைகளை மேற்கொண்டு வந்தவர்களாக இருந்தனர்.
2 கிறிஸ்தவர்களும்கூட ஒரு பந்தயத்தில் இருக்கிறார்கள். பரிசு? நித்திய ஜீவன். ஓட்டப்பந்தயத்தில் ஓட்டக்காரனைப் போலவே, அவர்கள் முடிவு வரையாக கடுமையாக முயற்சிசெய்ய வேண்டும். பொறுமை அவசியமாயிருக்கிறது. பெலத்தைக் காத்துக்கொண்டு, சோர்வை தவிர்க்க வேண்டும் ஜீவனுக்கான நம்முடைய பந்தயம் குறுகிய ஒரு ஓட்டம்போல் இல்லாமல், அது நெடுந்தொலைவு ஓட்டமாக இருக்கிறது. கொரிந்துவிலிருந்த தன்னுடைய உடன் கிறிஸ்தவர்களிடம் பவுல் இவ்விதமாகச் சொன்னான்: “பந்தயச் சாலையில் ஓடுகிறவர்களெல்லாரும் ஓடுவார்கள்; ஆகிலும் ஒருவனே பந்தயத்தைப் பெறுவானென்று அறியீர்களா? நீங்கள் பெற்றுக்கொள்ளத்தக்கதாக ஓடுங்கள்.” (1 கொரிந்தியர் 9:24) கிறிஸ்தவன் ஓடும் விதமானது மும்முரமான பிரயாசத்தோடு ஆகும்.—லூக்கா 13:24.
3. பந்தயத்தை முடிக்கும் வரையாக, எவ்விதமாக மட்டுமே கிறிஸ்தவர்கள் சுறுசுறுப்பாக வேகத்தை காத்துவர முடியும்?
3 ஆனால் நீங்கள் இவ்விதமாக யோசிக்கலாம்: “பந்தயத்தை முடிப்பதற்கு யாரால் அந்த வேகத்தை காத்துவர முடியும்? நம்முடைய சொந்த பலத்தில் நம்மில் ஒருவராலும் முடியாது. பரிசைப் பெற்றுக்கொள்வதற்கு, மகா பெலத்தின் ஊற்றுமூலமாக இருக்கும் யெகோவா தேவனிடமிருந்து நாம் பெலத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.—யோபு 36:22; சங்கீதம் 108:13.
யெகோவா—மகா பெலத்தின் ஊற்றுமூலம்
4. ஏசாயா தீர்க்கதரிசியின் பிரகாரம், அவருடைய ஊழியர்களை பேணி பாதுகாப்பதற்கு யெகோவாவின் திறமையில் நாம் ஏன் நம்பிக்கை வைக்கலாம்?
4 யெகோவா தம்முடைய ஊழியர்களை பேணி பாதுகாக்க முடியும் என்பது மறுக்கமுடியாததாகும். தம்முடைய தீர்க்கதரிசியாகிய ஏசாயாவின் மூலமாக, அவர் தம்முடைய திறமைகளுக்கு எல்லையில்லாதிருப்பதைப் பற்றியும், அவருடைய அற்புதமான கிரியைகள் ஒப்பிடப்படமுடியாதவையாக இருப்பதுப்பற்றியும் பேசினார்: “உங்கள் கண்களை ஏறெடுத்துப் பாருங்கள்” என்று அவர் சொன்னார். “அவைகளைச் சிருஷ்டித்தவர் யார்? அவர் அவைகளின் சேனையை இலக்கத்திட்டமாகப் புறப்படப்பண்ணி, அவைகளையெல்லாம் பேர் பேராக அழைக்கிறவராமே; அவருடைய மகா பெலத்தினாலும், அவருடைய மகா வல்லமையினாலும், அவைகளில் ஒன்றும் குறையாமலிருக்கிறது. . . . பூமியின் கடையாந்தரங்களைச் சிருஷ்டித்த யெகோவாவாகிய அநாதி தேவன் சோர்ந்து போவதுமில்லை, இளைப்படைவதுமில்லை; இதை நீ அறியாயோ? இதை நீ கேட்டதில்லையோ? அவருடைய புத்தி ஆராய்ந்து முடியாதது.”—ஏசாயா 40:26-28.
5, 6. யெகோவாவின் மகா பெலத்தினுடைய அத்தாட்சிக்கு உதாரணங்களைக் கொடுங்கள்.
5 எல்லையுடையவை முதற்கொண்டு எல்லையற்றவை வரையாக அவற்றில் காணப்படும் யெகோவாவின் படைப்பாற்றல் மலைப்பூட்டுவதாக இருக்கிறது. உதாரணமாக, நம்மையும் உட்பட, எல்லா சடப்பொருட்களையும் கட்டமைப்பதற்கு தேவையான கட்டுமான பொருளாகிய அணுவை எடுத்துக் கொள்ளுங்கள். அவை அத்தனை சிறியதாக இருப்பதன் காரணமாக ஒரு சொட்டு நீரில் கோடாகோடி அணுக்கள் இருக்கின்றன. ஆனால் அணுக்களின் மையக் கரு நிலத்தில், ஒரு சூழ்நிலையில், 32 அடுக்குகள் ஆழமும், கால் மைல் அகலமுமுள்ள ஒரு நிலக்குழியை வெடிக்க வைப்பதற்கு அத்தனை ஆற்றல்மிக்க சக்தியை அவிழ்த்துவிடும் அளவு போதிய சக்தியுடையதாக இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.
6 இந்தத் துலாத்தட்டின் மறுபக்கத்தில் சூரியனை கவனியுங்கள். பலநூறு கோடி டன்கள் எடையுள்ள இந்த மிகப்பெரிய அணு ஆற்றல் சூளை, நம்முடைய சூரியமண்டலத்துக்கு வெப்பமூட்டுகிறது. சின்னஞ்சிறிய அணுக்களிலிருந்து பெற்றுக்கொள்ளும் ஆற்றலால் இது எரிபொருளைப் பெற்றுக்கொள்கின்றது. பூமியின் மீது எல்லா உயிர்களும்—தாவரங்கள் மிருகங்கள் மற்றும் மனிதர்கள்—அந்த மாபெரும் வானக எந்திர ஆற்றல் தொழிற்சாலை வெளியிடும் ஆற்றலின் மீது சார்ந்திருந்தபோதிலும், சூரியனின் ஆற்றலில் ஒரு சிறிதளவு மாத்திரமே, உண்மையில் பூமியை அடைகிறது. என்றபோதிலும், உயிரை பேண அது போதுமானதாக இருக்கிறது. வானூல் என்ற தன்னுடைய புத்தகத்தில் ப்ரெட் ஹாய்லி இவ்விதமாக எழுதுகிறார்: “பூமியின் மீது விழும் சூரியனுடைய ஆற்றலில் மிகச் சிறிய பின்னம்—பத்தாயிரம் கோடி கோடியில் ஐந்தில் ஒரு பாகமாக இருப்பதாக மதிப்பிடப்படுகிறது—உலகிலுள்ள தொழிற்சாலைகள் அனைத்திலும் பயன்படுத்தப்படும் ஆற்றலைவிட 1,00,000 மடங்குகள் அதிகமாக இருக்கின்றன.
7.அவருடைய சிருஷ்டிப்பில் விளங்கும் வல்லமையை கூர்ந்து ஆராய்ந்த பின்பு யெகோவாவைப் பற்றி நாம் எவ்விதமாக உணர வேண்டும்?
7 ஆனாலும்கூட, நம்முடைய வானிலுள்ள பால்வீதி மண்டலத்தை உண்டுபண்ணும் கோடிக்கணக்கான நட்சத்திரங்களில், சூரியன் ஒன்றாகவும், அடு நடுத்தர அளவுள்ள நட்சத்திரமாகவும் இருக்கிறது. மேலுமாக அறியப்பட்டுள்ள பிரபஞ்சத்தில் சுமார் 10,000,00,00,000 பால் மண்டலங்கள் இருப்பதாக வான்கணிப்பாளர்கள் மதிப்பிட்டிருக்கிறார்கள். இதை கூர்ந்து ஆராய்வது வியப்புடன் தடுமாறச் செய்வதாக இருக்கிறதல்லவா? யெகோவா எவ்விதமாக ‘தாம் ஒருவராக வானங்களை விரித்தார்’ என்பதைக் குறித்து சிந்தித்துப் பார்த்த பின்பு, “ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும், எண்ண முடியாத அதிசயங்களையும் அவர் செய்கிறார்” என்பதாக யோபு என்ற மனிதன் சொன்னது ஆச்சரியமாக இல்லை.—யோபு 9:8-10.
யெகோவா உங்களை ஊக்குவிக்கும் சக்தியைக் கொடுப்பார்
8. (எ) யார் மட்டுமே யெகோவாவிடமிருந்து முழுமையாக பெலத்தைப் பெற்றுக்கொள்ள முடியும்? ஏன்? (பி) ஏசாயா 40:29-31-லுள்ள வாக்குறுதி எவ்விதமாக விசுவாசத்தைப் பெலப்படுத்துவதாக இருக்கிறது?
8 யெகோவாவின் மெய் வணக்கத்தார், இந்த பிரபஞ்சத்தை படைத்து, அதை அழியாது காத்துவரும் இந்த மகா பெலத்தின் ஊற்றிலிருந்து தாராளமாகவும் முழுமையாகவும் பெலத்தைப் பெற்றுக்கொள்ளலாம். யெகோவாவின் ஊழியர்கள் வல்லமை குறைபாடு ஏற்படக்கூடிய பயமின்றி, “அவருடைய ஆவியினாலே உள்ளான மனுஷனில் வல்லமையாய் பலப்படுத்தப்”படக்கூடும். (எபேசியர் 3:16; சங்கீதம் 84:4, 5) உண்மையில், ஜீவனுக்கான நம்முடைய பந்தயத்தில் நாம் வெற்றி பெறுவது, கடவுளுடைய வல்லமையான கரம், முடிவு எல்லைக்கோடு வரையாக நம்மை பிடித்து இழுத்துச்சென்று விடக்கூடும் என்று பூரணமாக நம்புவதன் பேரில் சார்ந்திருக்கிறது. அவர் நம்மை திடப்படுத்தக்கூடும். யெகோவாவைப் பற்றி ஏசாயா தீர்க்கதரிசி சொல்லுகிற விதமாகவே: “சோர்ந்து போகிறவனுக்கு அவர் பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப் பண்ணுகிறார். இளைஞர் இளைப்படைந்து சோர்ந்து போவார்கள். வாலிபரும் இடறிவிழுவார்கள். யெகோவாவுக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப் பெலன் அடைந்து கழுகுகளைப் போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்து போகார்கள்.” (ஏசாயா 40:29-31) ஏன், அந்த வார்த்தைகளை வெறுமென வாசிப்பது தானே, நம்மை உற்சாகப்படுத்தக்கூடும்!
9. உங்களுக்கு வரும் மலைப்போன்ற பிரச்னைகளில் யெகோவா உங்களுக்கு எவ்விதமாக உதவக்கூடும்?
9 மெய் வணக்கத்திற்கான உங்களுடைய வைராக்கியத்துக்கு முட்டுக்கட்டையாக இருப்பதாக பயமுறுத்தும், பெரியதாக தோன்றும் பிரச்னைகளை எதிர்படும்போது, நீங்கள் தாழ்ந்தவராகவும், அற்பமாகவும் உணரக்கூடும். நம்பிக்கையை இழந்துவிடாதீர்கள். உங்களுடைய பரலோகத் தகப்பனாகிய கடவுளிடம் திரும்புங்கள். “தமக்கு காத்திருக்கிறவர்களை” அவர் பெலப்படுத்துவார். அணுவின் சிருஷ்டிகரால் அந்த “மலையை” பெயர்ப்பதற்கு போதுமான அளவு ஆற்றல் மிக்கதாக இருக்கும் மகா பெலத்தை தம்முடைய ஜனங்களுக்கு புகட்டமுடியாதா? நிச்சயமாகவே அவரால் முடியும்!—மாற்கு 11:23.
10. (எ) கிறிஸ்தவ ஓட்டக்காரர்களை என்ன காரியங்கள் சோர்வடையச் செய்துவிடக்கூடும்? (பி) சாத்தான் உங்களுக்கு எதைச் செய்ய விரும்புகிறான்?
10 மறுபட்சத்தில் கிறிஸ்தவ நியமங்களை அவமதிக்கும் உலகிலிருந்து வரும் அழுத்தங்களுக்கு எதிராக தினசரி போராடுவதன் காரணமாக, சில கிறிஸ்தவர்கள் அவ்வளவு சோர்வடைந்து, ஜீவனுக்கான பந்தயத்தில் வேகத்தை குறைத்துவிட அல்லது அதிலிருந்து விலகிக்கொள்ளவும்கூட நினைக்கக்கூடும். வியாதிகள், பொருளாதார இழப்புகள், குடும்ப பிரச்னைகள், தனிமை அல்லது மற்ற கஷ்டங்களும்கூட ஒருவரை சோர்வடையச் செய்யக்கூடும். புழுக்கமான ஒருநாள், ஓட்டப்பந்தயத்தில் ஓட்டக்காரனுடைய சக்திகளை வேகமாக இழக்கச் செய்துவிடுவதுபோலவே, அவ்வளவு எளிதாக, சோர்வு ஒரு கிறிஸ்தவனின் பெலத்தை உறிஞ்சிவிடக்கூடும். பெரிய சத்துருவாகிய பிசாசாகிய சாத்தான், யெகோவாவின் ஒரு ஊழியனாக, உங்களுடைய உத்தமத்தை முறித்துப்போடச் செய்யும் முயற்சியில் இவைகளை பயன்படுத்துகிறான். (1 பேதுரு 5:8) பிசாசு அதைச் செய்ய அனுமதியாதீர்கள்! உங்களுடைய ஆவிக்குரிய பெலத்தின் தேவையை நிறைவு செய்வதற்கு அந்த எண்ணற்ற வானக பால்மண்டலங்களின் சிருஷ்டிகரை நோக்கியிருங்கள். யெகோவா உங்களுக்கு உதவி செய்யக்கூடும்.—சங்கீதம் 37:17; 54:4.
11. தாவீது இடையூறுகளை எதிர்பட்ட விதத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
11 இடையூறுகளை எதிர்பட்டபோது, தாவீது எப்பொழுதும் யெகோவா புதிய தெம்பின் ஊற்றுமூலமாக இருப்பதைக் கண்டான். பரிசுத்த ஆவியினால் மீண்டும் உயிர்ப்பூட்டப்பட்டவனாக தாவீதால், எந்த எதிர்ப்பையும் ‘தாண்ட’ முடிந்தது. அவன் சொன்னான்: “உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்ந்து போவேன்; என் தேவனாலே ஒரு மதிலைத் தாண்டுவேன்.” தாவீது மேலுமாகச் சொன்னான்: “தேவனாலே பராக்கிரமம் செய்வோம். அவரே எங்கள் சத்துருக்களை மிதித்துப் போடுவார்.” (சங்கீதம் 18:29; 60:12) யெகோவா உங்களுக்கு அதையேச் செய்யக்கூடும்.
ஆவிக்குரிய சோர்வை எதிர்த்துப் போராடுங்கள்
12 (எ)ஆவிக்குரிய சோர்வு ஏன் உடனடியாக தணித்துக்கொள்ளப்பட வேண்டும்? (பி) ஆவிக்குரிய சோர்வின் அறிகுறிகள் யாவை? (சி) ஆவிக்குரிய வகையில் சோர்வுற்றிருப்பவர்களை உயிர்பெறச்செய்ய யெகோவா என்ன ஏற்பாடுகளைச் செய்திருக்கிறார்?
12 ஆவிக்குரிய சோர்வின் அறிகுறிகளை நாம் உடனடியாகக் கண்டுகொண்டு, அவற்றை சமாளிக்க அதேவிதமாக உடனடியாக செயல்பட வேண்டும். ஏன்? ஏனென்றால் “இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசிக்க மும்முரமாக பிரயாசப்படும்” சிலர் அல்லது முடிவு எல்லைக் கோட்டை தாண்டுகிறவர்கள் மாத்திரமே நித்திய ஜீவனின் பரிசைப் பெற்றுக்கொள்வர். (லூக்கா 13:24; பிலிப்பியர் 3:12, 13) இதோடு சேர்ந்துவரும் “ஆவிக்குரிய சோர்வை எதிர்த்துப் போராடுவதற்கு சில வழிகள் என்ற தலைப்பையுடைய பெட்டியை ஆராய்ந்து வாருங்கள். இந்த அறிகுறிகளில் சிலவற்றை உங்களிலோ அல்லது உங்களுடைய குடும்ப அங்கத்தினரிலோ நீங்கள் காண்கிறீர்களா? அப்படியானால், சரிப்படுத்தல்களைச் செய்ய உடனடியாக நடவடிக்கை எடுங்கள். பட்டியலில் காணப்படும் யெகோவாவின் ஏற்பாடுகளிலிருந்து பெலத்தைப் பெற்றுக்கொள்வதன் மூலம், உங்களுடைய ஆவிக்குரிய தன்மைக்கு உயிரூட்டுங்கள்.
13, 14. (எ) நம்முடைய ஆவிக்குரிய பெலத்தைப் புதுப்பித்துக்கொள்ள என்ன முன்மாதிரிகள் உதவக்கூடும்? (பி) நீண்ட நாட்களாக யெகோவாவின் ஊழியனாக இருந்துவரும் ஒருவருடைய ஆலோசனை, பந்தயத்தில் நிலைத்திருக்க நமக்கு எவ்விதமாக உதவக்கூடும்?
13 பைபிள் பதிவுகளிலுள்ள கடவுளின் வெற்றிகரமான ஊழியர்களின் முன்மாதிரிகளை பின்பற்றுவதன் மூலம் சோர்ந்துபோகும் மனச்சாய்வை நீங்கள் தவிர்க்கலாம். முடிவு பரியந்தம் நிலைநின்ற, இளவயதினரும் முதிர்வயதினருமான ஆண்களும் பெண்களும் அநேகர் இருந்தார்கள் எபிரெயர் 11:4-10 போன்ற வேதவசனங்களில் அவர்களைப்பற்றி வாசியுங்கள். அதே விதமாக நவீன காலங்களில் சோர்ந்து போகாமல் தொடர்ந்து யெகோவாவுக்கு சேவை செய்துவரும் அநேக அருமையான சகோதரர்களும் சகோதரிகளும் இருக்கிறார்கள்.
14 ஐக்கிய மாகாணங்களின் தென் பகுதியில் வாழ்ந்து வரும் ஜார்ஜ், சோர்ந்துப் போகாத கிறிஸ்தவ ஓட்டக்காரனாக ஒரு முன்மாதிரியாக இருக்கிறார். நித்திய ஜீவனுக்கான பந்தயத்தில் 50 வருடங்களுக்கும் மேலாக இருந்துவிட்ட பின்பு இன்னும் பலமுள்ளவராக இருக்கிறார். அவர் நமக்குத் தரும் ஆலோசனை என்ன?
“அமைப்போடு ஒன்றிருங்கள் என்று நான் அழுத்தமாகச் சொல்லுவேன். யெகோவாவால் நியமிக்கப்பட்டவராக, இயேசு கிறிஸ்துவே அமைப்பை நடத்தி வருகிறார் என்பதை நினைவில் வையுங்கள். ஆகவே உங்களுக்கு வெகு நெருக்கமான ஒருவர் உண்மையற்றவராகிவிட்டால், சோர்வடைந்து விடாதீர்க்ள. உங்களால் முழுமையாக புரிந்துகொள்ள முடியாத ஏதோ ஒன்றோ அல்லது ஏற்றுக்கொள்ள கடினமாக இருக்கும் ஏதோ ஒன்றோ இருக்குமானால், சிறிது காலத்துக்குப் பின்பு அவை தெளிவாக்கப்படும் என்று நம்பியிருங்கள். யெகோவாவின் அமைப்பு நம்மை இதுவரையாக கொண்டு வந்திருக்கிறது. புதிய ஒழுங்கினுள் நம்மை வழிநடத்திச்செல்ல அதை நம்பியிருங்கள்.—யோவான் 6:66-68.
15. சிறந்த முன்மாதிரிகள் நமக்கு புத்துயிரளிக்க வேண்டுமானால், நாம் என்ன செய்ய வேண்டும்?
15 அருமையான இவர்களில் சிலர் உங்களுடைய சபையில் இருக்கலாம். அல்லது வட்டார மாநாடுகளில் நீங்கள் அவர்களை சந்திக்கலாம். அவர்களோடு பேசுங்கள். அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள். மேலுமாக, உண்மையுள்ள மற்றவர்களைப் பற்றிய முன்மாதிரிகளை வருடாந்தர புத்தகத்திலும், காவற்கோபுரம் மற்றும் மற்ற காவற்கோபுர பிரசுரங்களிலும் நாம் காணலாம். இந்த பதிவுகளை வாசியுங்கள். அந்த அனுபவங்களிலிருந்து எவ்விதமாக பெலத்தைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று பாருங்கள்.
மூப்பர்களே—பலப்படுத்தும் ஏதுக்களாயிருங்கள்
16. (எ) மூப்பர்கள் எவ்விதமாக உடன் கிறிஸ்தவர்கள் பெலத்தை மீண்டும் பெற உதவி செய்யலாம்? (பி) ஊக்குவிப்பையும் புத்திமதியையும் கொடுக்கையில் மூப்பர்கள் என்ன எச்சரிப்போடு நடந்துகொள்வது அவசியமாயிருக்கிறது?
16 பின்வாங்கும் அறிகுறிகளை காண்பிக்கும் அங்கத்தினர்களுக்கு உதவி செய்ய சபை மூப்பர்கள் விசேஷமாக விழிப்புள்ளவர்களாக இருக்க வேண்டும். ஏசாயா பின்வருமாறு சொல்லும்போது, சிறந்த புத்திமதியைக் கொடுக்கிறது: “தளர்ந்த கைகளைத் திடப்படுத்தி தள்ளாடுகிற முழங்கால்களைப் பலப்படுத்துங்கள்.” ஆனால் அதில் மூப்பர்களாக நீங்கள் உங்களுடைய பங்கை எவ்விதமாகச் செய்வீர்கள்? ஒரு காரியமானது, விழிப்புணர்ச்சியோடிருங்கள். வெளிப்படையாகத் தெரியும் சோர்வுக்கான உண்மையான காரணத்தை கண்டுபிடியுங்கள். நடைமுறைக்கு உதவுகின்ற, அந்த நபருக்கு பொருத்தமான வேதப்பூர்வமான ஆலோசனைகளைக் கொடுங்கள். ஆனால் கவனமுள்ளவர்களாயிருங்கள். நீங்கள் உங்களுடைய சகோதரரை உற்சாகமிழக்கும்படிச் செய்ய அல்ல, ஆனால் உற்சாகப்படுத்தவே விரும்புகிறீர்கள்.a ஆகவே உங்களுடைய மனசாட்சியை மற்றொருவர் மீது திணிக்காதீர்கள் அல்லது உங்களுடைய முடிவை பின்பற்றும்படியாக அவரை வற்புறுத்தாதீர்கள் அல்லது உங்களுடைய தனிப்பட்ட கருத்தை அவர் ஏற்றுக்கொள்ள தயங்கினால் அவரை முதிர்ச்சியில்லாத கிறிஸ்தவன் என்று முத்திரைப் போட்டுவிடாதீர்கள். மூப்பர்களின் புத்திமதியும், ஊக்குவிக்கும் பைபிள் ஆதாரமுள்ளதாக இருக்க வேண்டும். அனாவசியமாக சபை சம்பந்தமான விதிகளை அடுக்கிக்கொண்டே போவதன் மூலம் அவர்கள் தங்களுடைய உடன் ஓட்டக்காரர்களை சோர்வடையச் செய்ய விரும்ப மாட்டார்கள்.—மத்தேயு 11:28, 29, மத்தேயு 23:2-4 இவற்றை வேறுபடுத்திப் பாருங்கள்.
17. உடன் கிறிஸ்தவர்களை சோர்வுறச் செய்வதற்காக திட்டமிடப்பட்ட சாத்தானின் தந்திரங்களை மூப்பர்கள் எவ்விதமாக எதிர்க்கலாம்?
17 கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்களாக, மூப்பர்கள் தாமதமின்றி சபையிலுள்ள அங்கத்தினர்களை பாராட்டுவதன் மூலம் நல்ல முன்மாதிரிகளாக இருக்கலாம். உண்மையில் அவர்களை விரும்பப்படுகிறவர்களாயும் தேவைப்படுகிறவர்களாயும் உணரச் செய்யுங்கள்! சாத்தானுடைய ஒழுங்கானது, கிறிஸ்தவனை விரும்பத்தகாதவர்களாக உணரச் செய்வதற்கு எப்பொழுதும் தயாராக இருக்கிறது. ஜீவனுக்கான அவர்களுடைய பந்தயத்தின் இந்தக் கட்டத்தில், நம்முடைய சகோதரர்களுக்குத் தேவை குறை கண்டுபிடிப்பவர்கள் அல்ல, ஆனால் வெற்றி பெறும்படி அவர்களை ஊக்குவிக்கும் நண்பர்களே தேவையாக இருக்கிறார்கள். உதாரணமாக நடுத்தர வயதிலுள்ள ஒரு சகோதரி முழு நேர ஊழியத்திலிருந்து விலகிக்கொள்ள நிர்பந்தம் ஏற்பட்டபோது, மறுபடியுமாக முழு நேர ஊழியத்துக்குள் வர அவளுடைய இருதயத்தில் ஆசை கொழுந்து விட்டெறிந்து கொண்டிருந்தது. ஆனால் பொருளாதார சூழ்நிலைமைகளின் காரணமாக அவளால் அதைச் செய்ய முடியவில்லை. நல்லெண்ணத்தோடிருந்த போதிலும் ஒரு மூப்பர், சற்று குறைகாணும் விதத்தில் அவளிடம்: “மறுபடியுமாக நீங்கள் எப்பொழுது பயனியர் ஊழியம் செய்யப் போகிறீர்கள்?“ என்பதாக கேட்டார். அவளுடைய சுருக்கமான பதில் அவருக்கு ஆச்சரியத்தைத் தந்தது: “என்னுடைய கணவரால் வீட்டு வாடகையை கொடுக்க முடியும்போது.” மூப்பர் உணரத் தவறியதும் பின்னால் தெரிந்து கொண்டதும் என்னவென்றால், முக்கியமாக அவளுடைய கணவனின் சம்பாத்தியத்தின் மூலமாகவே அவளால் முழு நேர ஊழியத்தை செய்ய முடிந்தது என்பதே. ஆனால் அவனுடைய முதலாளி, ஒரு கிறிஸ்தவனுக்கு நேர்மையாக இல்லாத அதிகமதிகமான வேலைகளை எடுத்துக்கொண்டபோது, அவளுடைய கணவனின் மனசாட்சி வேறு வேலையை தேடிக்கொள்ள அவனை தூண்டியிருக்கிறது. அவனுடைய வயதில் வேலை தேடிக்கொள்வது எளிதாக இருக்கவில்லை. ஆகவே அவன் மிகவும் குறைவான வருவாயுள்ள வேலையில் சேர்ந்துவிட்டிருந்தான். இதன் காரணமாக அவனுடைய மனைவி முழுநேர உத்தியோகத்தை செய்வது அவசியமாக ஆனது.
18. என்ன விதத்தில் மூப்பர்கள், “ஆறுதல் செய்கிறவர்களாக” இருக்க முடியும்?
18 மேல் சொல்லப்பட்ட அனுபவத்திலிருந்து மூப்பர்கள் உடன் கிறிஸ்தவர்களுக்கு ஆலோசனைச் சொல்ல தயங்க வேண்டும் என்பதை அர்த்தப்படுத்துமா? இல்லை. மாறாக, ஆலோசனையோ ஆறுதலோ தேவையாக இருக்கையில் மூப்பர்கள் மேலீடாக அவர்களுடைய தோற்றங்களை மாத்திரம் பார்க்காமல், அவர்களுடைய சகோதரர்களின் உண்மையான சூழ்நிலைமைகளை பகுத்துணர வேண்டும். (யாக்கோபு 2:15, 16) இந்த விதத்தில் மூப்பர்கள், தங்களுடைய சபையில் “ஆறுதல் செய்கிறவர்களாக” இருக்கக்கூடும்.—கொலோசெயர் 4:11
19. பயனியர்கள் சோர்ந்து போகாதிருப்பதற்கு உதவி செய்ய நீங்கள் என்ன செய்யக்கூடும்?
19 எண்ணிக்கையில் வளர்ந்துவரும் ராஜ்ய பிரஸ்தாபிகள், இழந்துவிட்ட வேகத்தை சரி செய்துகொண்டு இப்பொழுது ஒழுங்கான பயனியர்களாக இருக்கிறார்கள். ஜனக்கூட்டத்தின் முழுக்கம், ஓட்டப்பந்தய ஒட்டக்காரர்களை சக்தியை மீண்டும் பெற்றுக்கொள்ள ஊக்குவிக்கக்கூடும். ஆகவே உங்களுடைய சபையிலுள்ள பயனியர்கள் வெற்றிபெற, ஊக்குவிக்கும் ஒலியை எழுப்ப நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? டாக்கும் ஜோயனும் முழு நேர ஊழியத்தையே தங்களுடைய வாழ்க்கைப் பணியாக மேற்கொண்டிருக்கிறார்கள். மற்றவர்கள் அவர்களிடம், “எப்பொழுது நீங்கள் பிள்ளைகளை கொண்டிருக்கப் போகிறீர்கள்?” என்றோ “எப்பொழுது நிலையாக ஓரிடத்தில் குடியிருக்கப் போகிறீர்கள்?” என்றோ கேட்கும்போது, அது அவர்களை உற்சாகமிழக்கும்படியாகச் செய்துவிடக்கூடும். ஆனால் உடன்விசுவாசிகள், “நீங்கள் செய்யும் சிறப்பான வேலையை தொடர்ந்து செய்து கொண்டிருங்கள். எங்களுடைய சபையில், பயனியர்களாக உங்களைக் கொண்டிருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்” என்று சொல்வதன் மூலம் நல்லெண்ணம்கொண்ட நேர்மையான ஆதரவைக் கொடுக்கும்போது என்ன நடக்கிறது? ஏன் அவர்கள் ஆவிக்குரிய சோர்வை தவிர்ப்பது மட்டுமல்லாமல் தங்களுடைய பயனியர் சேவையில், கழுகுகளைப்போல எழும்புவதற்கு அவர்கள் உதவப்படுகிறார்கள்!—ஏசாயா 40:31 ஒப்பிடவும்.
பயனியர்கள் எவ்விதமாக பெலத்தை மீண்டும் பெறலாம்
20, 21. முழுநேர ஊழியத்திலுள்ள சிலர் எவ்விதமாக பெலத்தை மீண்டும் பெற்றுக்கொண்டிருக்கிறார்கள்?
20 விவாகமான தம்பதியான ப்ரெட்ரிக் மற்றும் மேரி ஆன் சொல்வதைக் கேளுங்கள். பெலத்தை எவ்விதமாக மீண்டும் பெறுவது என்பதை அவர்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள். இருவரும் ஒரு மத்திய அமெரிக்க தேசத்தில் மிஷனரிகளாக சேவை செய்து வருகிறார்கள். இருவரும் அவர்களுடைய 70 வயதுகளில் இருக்கிறார்கள். அவர் 1946-லும் அவள் 1950-லும் மிஷினரி சேவையை ஆரம்பித்தார்கள். யெகோவாவின் ஊழியத்தில் தொடர்ந்து நிலைத்திருக்க அவர்களுக்கு உதவியிருப்பது என்ன? ப்ரெட்டிரிக் பதிலளிக்கிறார்: யெகோவாவை நேசிப்பதும், மற்ற ஆட்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற ஆசையோடும்கூட, நித்திய ஜீவன் என்ற பரிசை மனதில் வைத்திருப்பதாகும்.” “கடவுளுடைய வாக்குத்தத்தங்கள், தொடர்ந்து சேவை செய்ய எங்களுக்கு உதவியிருக்கிறது என்பதாக அவருடைய மனைவி பதிலளிக்கிறார். அவர்கள் எவ்விதமாக சோர்ந்து போகாதிருக்கிறார்கள்? “உங்களுக்குக் கொடுக்கப்படும் வேலை என்னவாக இருந்தாலும் நீங்கள் அதில் சுறுசுறுப்பாக ஈடுபடுங்கள்” என்று அவர் ஆலோசனை கூறுகிறார். “தேவராஜ்ய வேலையில் உறுதியை” அவள் சிபாரிசு செய்கிறார். மேலுமாக, “உங்களுக்கு வயதாகிவிடும்போது நீங்கள் விரும்பும் அனைத்தையும் செய்ய முடியாது. அது எனக்கு வருத்தமாக இருக்கும். ஆனால் அதைக் குறித்து நான் யெகோவாவிடம் ஜெபத்தில் பேசுவேன்” என்று அவள் சொல்லுகிறாள். ப்ரெட்டிரிக் நேர்த்தியான ஒரு சிறிய ஆலோசனையை முடிவாக தருகிறார்: “நாங்கள் ஒவ்வொரு இரவும் ஜெபம் செய்து யெகோவாவிடம் எங்களுக்கு உதவி செய்யுமாறு கேட்கிறோம்.”—1 பேதுரு 4:7.
21 லவோனியாவுக்கு வயது 67. அவள் கடந்த 20 ஆண்டுகளாக ஒழுங்கான பயனியராக இருந்து வருகிறாள். கடந்த ஒரு வருடத்தில் அவள் 15 நாட்களை மருத்துவ மனையில் செலவழித்திருக்கிறாள். தற்சமயம் அவள் இருதயத்துக்காக சிகிச்சைப் பெற்று வருகிறாள். அவளுடைய கணவனின் மரணம் உட்பட, குடும்பத்திலுள்ள அங்கத்தினர் பலரின் மரணம் உணர்ச்சிப் பூர்வமாக அவளுடைய ஆற்றலை இழக்கும்படியாகச் செய்திருக்கிறது. ஆனால் இன்னும் அவள் மும்முரமாகப் பிரயாசப்பட்டு வருகிறாள். அவள் எவ்விதமாக பெலத்தை மீண்டும் பெற்றுக் கொண்டாள்? “பிரசங்க வேலையல் அதிக முழுமையாக பங்கு கொள்ளக்கூடியவளாக இருப்பதே உண்மையில் உதவியாக இருந்திருக்கிறது” என்று அவள் சொல்லுகிறாள். ஏனென்றால் நான் யெகோவாவைப் பற்றி மற்றவர்களிடம் பேசும்போது, என்னுடைய பிரச்னைகளை நான் மறந்துவிடுகிறேன். அது எனக்கு மனசமாதானத்தையும் வாழ்க்கையை மதிப்புள்ளதாகச் செய்யும் சந்தோஷத்தையும் தருகிறது.” அவள் பயனியர் சேவையை விட்டுவிட திட்டமிட்டுக் கொண்டில்லை. ஆனால் இவ்விதமாகச் சொல்லுகிறாள்: “யெகோவாவைப் பற்றியும் அவருடைய மகத்தான நோக்கங்களைப் பற்றியும் மற்றவர்கள் கற்றுக்கொள்வதைப் பார்க்கும்போது, அது எனக்கு அவ்வளவு பெரும் மகிழ்ச்சியைத் தருவதால் பயனியர் ஊழியத்தை விட்டுவிடுவதைப் பற்றி நான் மனதில் நினைத்தும்கூட பார்க்க மாட்டேன்.”—அப்போஸ்தலர் 20:35.
22. நித்திய ஜீவனுக்காக, பந்தயத்தில் வெற்றி பெற நாம் தொடர்ந்து என்ன செய்ய வேண்டும்?
22 வாழ்க்கையின் இந்த கட்டத்தில் பயனியர்களாக நாம் மும்முரமாக பிரயாசப்பட முடிந்தாலும்சரி, முடியாவிட்டாலும்சரி, நாம் அனைவருமே, மகா பெலத்தின் ஊற்று மூலமாகிய யெகோவாவோடும் அவருடைய அமைப்போடும் நெருங்கி இருக்க முடியும். நம்முடைய தேவனை உண்மையுடன் சேவிப்பதன் மூலம் தொடர்ந்து பெலத்தை நாம் பெற்றுக் கொண்டிருப்போமாக. பின்பு ஆபகூக்கைப் போல நாம் இவ்விதமாகச் சொல்லலாம்: “ஆண்டவராகிய யெகோவா என் பெலன்; அவர் என் கால்களை மான்கால்களைப் போலாக்குவார்.” (ஆபகூக் 3:19) இவ்விதமாக நாம் சோர்ந்து போகாமலும் சலிப்படைந்துவிடாமலும் இருப்போம். பந்தயம் ஏறக்குறைய முடிந்தாகிவிட்டது என்பதை மனதில் வைத்திருங்கள். நாம் இலக்குக்கு அருகில் இருக்கிறோம்! (w86 1/15)
[அடிக்குறிப்புகள்]
a பிலிப்பியர் 2:11 மற்றும் எபிரெயர் 6:18-ல் காணப்படும் “உற்சாகப்படுத்துதல்” (தி.மொ.) என்ற வார்த்தை “வார்த்தைகளின் மூலமாக ஒரு கனிவான செல்வாக்கைச் செலுத்துவது” அல்லது “யாரோ ஒருவரிடம் நம்பிக்கையுடன் இரக்கமாகப் பேசுவது என்று பொருள்படும் கிரேக்க வினைச் சொல்லிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டிருப்பது அக்கறையூட்டுவதாக இருக்கிறது.
விமர்சன கேள்விகள்
◻ யெகோவாவின் பெலத்தை யார் மட்டுமே அவரிடமிருந்து தாராளமாக பெற்றுக்கொள்ள முடியும்?
◻ ஆவிக்குரிய சோர்வின் சில அறிகுறிகள் யாவை?
◻ யெகோவாவின் என்ன ஏற்பாடு பெலத்தை மீண்டும் பெற்றுக்கொள்ள நமக்கு உதவக்கூடும்?
◻ சபையிலுள்ள மூப்பர்களும் மற்றவர்களும் “பந்தயத்திலிருந்து” விலகிவிடாதிருக்க பயனியர்களுக்கு எவ்விதமாக உதவி செய்யலாம்?
சர்வலோகத்தின் சிருஷ்டிகராகிய யெகோவா தம்முடைய சாட்சிகள் பெலத்தை மீண்டும் பெற உதவி செய்கிறார்
[பக்கம் 19-ன் பெட்டி]
ஆவிக்குரிய சோர்வை எதிர்த்து போராடுவதற்கு சில வழிகள்
சோர்வின் அறிகுறிகள்
◻ புசித்தல், குடித்தல், சிற்றின்ப நாட்டம் ஆகியவற்றில் தன்னடக்கம் இல்லாமை
◻ சத்தியத்தில் ஆர்வத்தை இழத்தல், இந்நிலையில் திருப்தியாயிருந்துவிடும் ஆவி
◻ மிகவும் வினைமையான மற்றும் நீடித்த சந்தேகங்களுக்கு இடங்கொடுப்பது
◻ சபை கூட்டங்களில் கூட்டுறவை அசட்டைச் செய்வது
◻ வெளி ஊழியத்தில் ஆர்வமும் சந்தோஷமும் குறைவுபடுதல்
◻ மூப்பர்களிலும் அமைப்பிலும் மட்டுக்கு மீறி குறைகளை காணுதல்
சகித்து நிலைத்திருக்க உதவிகள்
◻ பரிசுத்த ஆவியின் உதவிக்காக ஜெபம்—லூக்கா 11:13; கலாத்தியர் 5:22, 23; 1 பேதுரு 4:7
◻ தனிப்பட்ட படிப்பு—சங்கீதம் 1:1, 2
◻ வேதப்பூர்வமான விஷயங்களில் தியானம்—சங்கீதம் 77:12
◻ கூட்டங்களிலும் அசெம்பிளிலும் ஒழுங்காக ஆஜராயிருத்தல்—நெகேமியா 8:1-3, 8, 10; எபிரெயர் 10:23-25.
◻ வெளி ஊழியத்தில் ஒழுங்காக பங்குகொள்ளுதல்—அப்போஸ்தலர் 20:18-21.
◻ சபை மூப்பர்களிடமிருந்தும் பிரயாண கண்காணிகளிடமிருந்தும் ஆவிக்குரிய உதவியை பெற்றுக்கொள்ளுதல்—ரோமர் 1:11, 12; எபிரெயர் 13:17.