அதிகாரம் ஆறு
யெகோவா—“நீதியுள்ளவரும் ரட்சிக்கிறவருமாகிய கடவுள்”
யெகோவாவின் வாக்குறுதிகள் நம்பகமானவை. அவர் நடக்கப்போகிறவற்றை வெளிப்படுத்தும் கடவுள், சிருஷ்டிக்கும் கடவுள். அவர் நீதியுள்ள கடவுள் என்பதையும் எல்லா தேசத்தாரையும் இரட்சிக்கிறவர் என்பதையும் அடிக்கடி நிரூபித்துக் காண்பித்திருக்கிறார். இவையே ஏசாயா 45-ம் அதிகாரத்தில் நாம் காணும் மனதுக்கு இதமளிக்கிற நம்பிக்கையூட்டும் வார்த்தைகளில் சில.
2 அதோடு, தீர்க்கதரிசனம் உரைப்பதில் யெகோவாவின் நிகரற்ற திறமைக்கு முத்தான எடுத்துக்காட்டாக திகழும் சம்பவமும் ஏசாயா 45-ம் அதிகாரத்தில் உள்ளது. தூர தேசங்களை உன்னிப்பாக நோட்டமிடுவதற்கும், நூற்றாண்டுகளுக்குப் பின் நடக்கப்போகும் சம்பவங்களை காண்பதற்கும் கடவுளுடைய ஆவி ஏசாயாவுக்கு உதவுகிறது. மேலும், உண்மை தீர்க்கதரிசனத்தின் கடவுளாகிய யெகோவாவால் மட்டுமே மிகத் திருத்தமாக முன்னறிவிக்க முடிகிற ஒரு சம்பவத்தை விவரிப்பதற்கும் அவரை தூண்டுகிறது. அந்த சம்பவம்தான் என்ன? ஏசாயா காலத்தில் வாழும் கடவுளுடைய ஜனங்களை இச்சம்பவம் எவ்வாறு பாதிக்கிறது? இன்று அது நமக்கு எந்த விதத்தில் முக்கியத்துவம் வாய்ந்தது? இப்பொழுது, இந்தத் தீர்க்கதரிசியின் வார்த்தைகளை நாம் ஆராயலாம்.
பாபிலோனுக்கு விரோதமாக யெகோவாவின் அறிவிப்பு
3 “[“யெகோவா சொல்லுகிறதாவது,” NW] நான் அபிஷேகம் பண்ணின கோரேசுக்கு முன்பாக ஜாதிகளை அடக்கி ராஜாக்களின் இடைக்கட்டுகளை அவிழ்க்கும்படிக்கும், அவனுக்கு முன்பாக வாசல்கள் பூட்டப்படாமல் கதவுகளைத் திறந்து வைக்கும்படிக்கும், நான் அவன் வலது கையைப் பிடித்துக் கொண்டேன் . . . நான் உனக்கு முன்னே போய்க், கரடுமுரடானவைகளைச் செம்மையாக்குவேன். செப்புக் கதவுகளை உடைத்து, இருப்புத் தாழ்ப்பாள்களை முறித்து அந்தகாரத்தில் இருக்கிற பொக்கிஷங்களையும், ஒளிப்பிடத்தில் இருக்கிற புதையல்களையும் உனக்குக் கொடுப்பேன்.”—ஏசாயா 45:1-3அ, தி.மொ.
4 ஏசாயாவின் நாளில் கோரேசு இன்னும் பிறவாத போதிலும், அவர் உயிரோடு இருப்பதுபோல ஏசாயா மூலமாக யெகோவா அவரிடம் பேசுகிறார். (ரோமர் 4:17) ஒரு குறிப்பிட்ட வேலையை செய்து முடிப்பதற்காக கோரேசுவை யெகோவா முன்னதாகவே நியமிப்பதால், கடவுளின் ‘அபிஷேகம் பண்ணப்பட்டவர்’ என அவரை அழைப்பது சரியே. கடவுள் அவரை வழிநடத்துவதால், அவர் தேசங்களைக் கீழ்ப்படுத்தி, எதிர்க்க முடியாதபடி ராஜாக்களின் ஆற்றலை இழக்கச் செய்வார். கோரேசு பாபிலோனை தாக்கும்போது, நகரத்தின் வாசல்கள் திறந்திருக்கும்படியும், உடைக்கப்பட்ட கதவுகளைப் போன்று பயனற்று போகும்படியும் யெகோவா பார்த்துக்கொள்வார். அவர் கோரேசுக்கு முன்சென்று எல்லா தடைகளையும் நீக்கிப் போடுவார். முடிவில், கோரேசுவின் படை நகரத்தை வென்று “புதையல்களை,” அதாவது இருட்டறையில் சேர்த்து வைத்திருக்கும் பொக்கிஷங்களை எடுத்துக் கொள்ளும். இதையே ஏசாயா முன்னறிவிக்கிறார். அவருடைய வார்த்தைகள் நிறைவேறுகின்றனவா?
5 பொ.ச.மு. 539-ல்—ஏசாயா இந்தத் தீர்க்கதரிசனத்தை எழுதி சுமார் 200 வருடங்களுக்குப் பிறகு—கோரேசு உண்மையில் நகரைத் தாக்குவதற்காக பாபிலோனின் மதிற்சுவர்களை வந்து அடைகிறார். (எரேமியா 51:11, 12) இருந்தாலும், பாபிலோனியர்கள் அதைக் குறித்து கவலைப்படவே இல்லை. தங்களுடைய நகரத்தை யாருமே கைப்பற்ற முடியாது என அவர்கள் நினைக்கிறார்கள். பிரமாண்டமாக உயர்ந்து நிற்கும் அதன் மதில்களைச் சுற்றிலுமுள்ள ஆழமான அகழிகளில் ஐப்பிராத்து நதி பாய்ந்தோடுகிறது; நகரின் பாதுகாப்பு அமைப்பில் இதுவும் ஒன்று. நூறு வருஷங்களுக்கும் மேலாகவே எந்த எதிரியாலும் பாபிலோனை கைப்பற்ற முடியவில்லை! சொல்லப்போனால், அப்போது பாபிலோனில் குடியிருந்து ஆட்சி செய்து வந்த பெல்ஷாத்சார் அவ்வளவு பாதுகாப்பாக உணர்ந்ததால் தன்னுடைய மற்ற அரசவை அதிகாரிகளோடு சேர்ந்து விருந்துண்கிறார். (தானியேல் 5:1) ஆனால், அன்று இரவே—அக்டோபர் 5/6-ன் இரவே—ராணுவ திட்டத்தை சூழ்ச்சிநயத்துடன் கோரேசு நிறைவேற்றி முடிக்கிறார்.
6 கோரேசுவின் பொறியியலாளர்கள் ஐப்பிராத்து நதி பாபிலோனில் நுழைவதற்கு முன்பே அதன் கரையை வெட்டி தண்ணீர் தெற்குப்புறமாக நகரத்தை நோக்கி பாயாதபடி திசைதிருப்பிவிடுகின்றனர். சீக்கிரத்தில், பாபிலோனிலும் அதைச் சுற்றிலுமுள்ள தண்ணீரின் மட்டம் குறைந்துவிடுவதால், கோரேசுவின் படைவீரர்கள் நதிப்படுக்கையில் நடந்து சென்று நகரின் மையப்பகுதியை அடைய முடிகிறது. (ஏசாயா 44:27; எரேமியா 50:38) வியப்பூட்டும் விஷயம் என்னவென்றால், ஏசாயா முன்னுரைத்தபடியே நதியோரத்திலிருக்கிற கதவுகள் பூட்டப்படாமல் திறந்திருக்கின்றன. கோரேசுவின் சேனைகள் பாபிலோனுக்குள் நுழைந்து அரண்மனையைப் பிடித்து ராஜா பெல்ஷாத்சாரை கொன்று போடுகின்றன. (தானியேல் 5:30) ஒரே இரவில் பாபிலோன் கைப்பற்றப்படுகிறது. பாபிலோன் வீழ்ச்சியடைகிறது. தீர்க்கதரிசனமும் அச்சுப்பிசகாமல் அப்படியே நிறைவேறுகிறது.
7 இத்தீர்க்கதரிசனத்தின் துல்லியமான நிறைவேற்றம் இன்றைய கிறிஸ்தவர்களின் விசுவாசத்தை பலப்படுத்துகிறது. இன்னும் நிறைவேறாத பைபிள் தீர்க்கதரிசனங்கள்கூட முற்றிலும் நம்பகமானவையே என்பதற்கு இது பலமான காரணத்தை அளிக்கிறது. (2 பேதுரு 1:20, 21) பொ.ச.மு. 539-ல் பாபிலோனுக்கு ஏற்பட்ட வீழ்ச்சி, 1919-ல் ஏற்கெனவே நிகழ்ந்த ‘மகா பாபிலோனின்’ வீழ்ச்சிக்கு படமாக இருந்ததை யெகோவாவின் வணக்கத்தார் அறிந்திருக்கிறார்கள். நவீன நாளைய மத அமைப்பின் அழிவை மட்டுமல்ல, சாத்தானின் கட்டுப்பாட்டில் இருக்கும் அரசியல் அமைப்பு நீக்கப்படுவது, சாத்தானை அபிஸிற்குள் தள்ளுவது, புதிய வானங்கள் மற்றும் புதிய பூமியின் வருகை போன்ற வாக்குறுதிகளின் நிறைவேற்றத்தையும் காண்பதற்கு அவர்கள் இன்னும் ஆவலோடு எதிர்பார்த்து இருக்கிறார்கள். (வெளிப்படுத்துதல் 18:2, 21; 19:19-21; 20:1-3, 12, 13; 21:1-4) யெகோவாவின் தீர்க்கதரிசனங்கள் வெற்று வாக்குறுதிகள் அல்ல, ஆனால் எதிர்காலத்தில் கண்டிப்பாக நடக்கப்போகும் சம்பவங்களின் விவரிப்புகளே என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள். பாபிலோனின் வீழ்ச்சியைப் பற்றிய ஏசாயா தீர்க்கதரிசனத்தின் எல்லா அம்சங்களும் நிறைவேறியதை உண்மை கிறிஸ்தவர்கள் எண்ணிப் பார்க்கையில் அவர்களுடைய நம்பிக்கை பலப்படுகிறது. யெகோவா எப்பொழுதும் தம்முடைய வார்த்தையை நிறைவேற்றுபவர் என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள்.
கோரேசுக்கு யெகோவா ஏன் தயவு காட்டுவார்
8 பாபிலோனை யார் வெல்வார், அது எப்படி சம்பவிக்கும் என்பவற்றையெல்லாம் குறிப்பிட்ட பின், கோரேசு வெற்றி பெறுவதற்குரிய ஒரு காரணத்தையும் யெகோவா தொடர்ந்து விளக்குகிறார். தீர்க்கதரிசனத்தில் கோரேசுவிடம் பேசுவதுபோல் யெகோவா இவ்வாறு சொல்கிறார்: “உன்னைப் பெயர்சொல்லி அழைக்கிற இஸ்ரவேலின் கடவுளாகிய யெகோவா நானே என்று நீ அறியும்படி இப்படிச் செய்வேன்.” (ஏசாயா 45:3ஆ, தி.மொ.) பைபிள் சரித்திரத்தின் நான்காவது உலக வல்லரசின் ஆட்சியாளர் தன்னுடைய மகத்தான வெற்றிக்குக் காரணம் தன்னைவிட மிகப் பெரியவரின்—சர்வலோக அரசதிகாரியான யெகோவாவின்—ஆதரவே என ஒப்புக்கொள்வது பொருத்தமானதே. தன்னை அழைத்தவர் அல்லது தன்னை நியமித்தவர் இஸ்ரவேலின் கடவுளாகிய யெகோவாவே என்பதை கோரேசு கண்டிப்பாக ஒப்புக்கொள்ள வேண்டும். தன்னுடைய மகத்தான வெற்றிக்குக் காரணம் யெகோவாவே என்பதை கோரேசு உண்மையில் ஒப்புக்கொண்டார் என பைபிள் பதிவு காட்டுகிறது.—எஸ்றா 1:1-3.
9 பாபிலோனைக் கைப்பற்ற கோரேசுவை அழைத்து வருவதற்கு இரண்டாவது காரணத்தை யெகோவா விளக்குகிறார்: “என் தாசனாகிய [“ஊழியராகிய,” NW] யாக்கோபினிமித்தமும் நான் தெரிந்தெடுத்த இஸ்ரவேலினிமித்தமும் நான் உன்னைப் பெயர்சொல்லி அழைத்து, நீ என்னை அறியாதிருந்தும் உனக்குச் சிறப்புப் பெயரொன்றைத் தரித்தேன்.” (ஏசாயா 45:4, தி.மொ.) பாபிலோனின்மீது கோரேசு பெறும் வெற்றி உலகையே அதிர வைக்கிறது. இது ஒரு வல்லரசின் வீழ்ச்சியையும் மற்றொன்றின் எழுச்சியையும் சுட்டிக்காட்டுகிறது, பல நூற்றாண்டிற்கு சரித்திரத்தில் அழியாத முத்திரையையும் பதிக்கிறது. ஆனாலும், இச்சம்பவங்களை எல்லாம் உன்னிப்பாக கவனித்து வரும் அண்டை தேசத்தார், இவையாவும் பாபிலோனுக்கு நாடுகடத்தப்பட்ட “அற்பமான” சில ஆயிரம் பேர் நிமித்தமே—யாக்கோபின் சந்ததியினரான யூதர்கள் நிமித்தமே—நடந்தது என்பதை ஒருவேளை அறிந்து வியப்படைவார்கள். இருந்தாலும், யெகோவாவின் பார்வையில் பூர்வ இஸ்ரவேல் தேசத்தில் மீந்திருப்பவர்கள் அற்பமானவர்கள் அல்லர். அவர்கள் அவருடைய ‘ஊழியர்.’ பூமியின் சகல தேசத்திலிருந்தும் அவரால் ‘தெரிந்தெடுக்கப்பட்டவர்கள்.’ கோரேசு இதற்கு முன் யெகோவாவை அறியாவிடினும், அடிமைகளை விடுவிக்க மறுத்த நகரத்தைக் கவிழ்ப்பதற்காக அவரை தமது அபிஷேகம் செய்யப்பட்டவராக யெகோவா பயன்படுத்துகிறார். தெரிந்தெடுக்கப்பட்ட தம்முடைய ஜனங்கள் அந்நிய நாட்டில் எந்நாளும் அவதியுறுவது கடவுளுடைய நோக்கமல்ல.
10 பாபிலோனைத் தோற்கடிப்பதற்கு யெகோவா ஏன் கோரேசுவை பயன்படுத்துகிறார் என்பதற்கு அதிமுக்கியமான மூன்றாவது காரணம் ஒன்றுண்டு. அதை யெகோவா இவ்வாறு கூறுகிறார்: “நானே யெகோவா, வேறொருவருமில்லை; என்னைத் தவிர வேறே தெய்வம் இல்லை. என்னைத் தவிர ஒருவரும் இல்லையென்று சூரியன் உதிக்கிற திசையிலும் அது அஸ்தமிக்கிற திசையிலும் அறியப்படும்படிக்கு நீ என்னை அறியாதிருந்தும் நான் உனக்கு இடைக்கட்டு கட்டினேன்; நானே யெகோவா, வேறொருவருமில்லை.” (ஏசாயா 45:5, 6, தி.மொ.) பாபிலோனிய உலக வல்லரசின் வீழ்ச்சி உண்மையில், யெகோவாவின் தேவத்துவத்திற்கு நிரூபணமாகவும், அவர் மட்டுமே வணக்கத்திற்கு பாத்திரர் என்பதை அனைவரும் அறிந்து கொள்வதற்கு ஆதாரமாகவும் இருக்கிறது. கடவுளுடைய ஜனங்கள் விடுவிக்கப்படுவதால், பல தேசத்தினரும்—கிழக்கு முதல் மேற்கு வரை உள்ளவர்கள்—யெகோவா மட்டுமே மெய்க் கடவுள் என்பதை ஏற்றுக் கொள்வார்கள்.—மல்கியா 1:11.
11 இச்சம்பவம் நடப்பதற்கு சுமார் 200 வருடங்களுக்கு முன்பே ஏசாயாவின் இந்தத் தீர்க்கதரிசனம் பதிவு செய்யப்பட்டது நினைவிருக்கட்டும். தீர்க்கதரிசனத்தைக் கேட்ட சிலர், ‘இதை நிறைவேற்றுவதற்கு உண்மையிலேயே யெகோவாவுக்கு வல்லமை இருக்கிறதா?’ என யோசித்திருக்கலாம். சரித்திர ஆதாரப்படி, ஆம் என்பதே இதற்கு பதில். தாம் சொல்வதை நிறைவேற்ற முடியும் என்பதை நம்புவது நியாயமானது என்பதற்கு யெகோவா காரணத்தை விளக்குகிறார்: “ஒளியைப் படைத்து, இருளையும் உண்டாக்கினேன், சமாதானத்தைப் படைத்து தீங்கையும் உண்டாக்குகிறவர் நானே; கர்த்தராகிய நானே இவைகளையெல்லாம் செய்கிறவர்.” (ஏசாயா 45:7) படைப்பிலுள்ள யாவும்—ஒளியிலிருந்து இருள்வரை—சரித்திரத்திலுள்ள அனைத்தும்—சமாதான காலம் முதல் தீங்கு காலம் வரை அனைத்தும்—யெகோவாவின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது. பகலின் ஒளியையும் இரவின் இருளையும் படைக்கிற விதமாகவே, இஸ்ரவேலுக்கு சமாதானத்தையும் பாபிலோனுக்கு தீங்கையும் வரப்பண்ணுவார். யெகோவாவுக்கு இந்த அண்டத்தைப் படைக்கும் வல்லமை இருக்கிறது, தம்முடைய தீர்க்கதரிசனங்களை நிறைவேற்றும் வல்லமையும் இருக்கிறது. அவருடைய தீர்க்கதரிசன வார்த்தையை ஊக்கமாக படிக்கும் இன்றைய கிறிஸ்தவர்களுக்கு இது நம்பிக்கையூட்டுகிறது.
12 நாடுகடத்தப்பட்ட யூதர்களுக்கு என்ன எதிர்காலம் காத்திருக்கிறது என்பதை விளக்குவதற்கு படைப்புகளில் தவறாமல் நடந்துவரும் காரியங்களை யெகோவா உதாரணமாக பயன்படுத்துவது பொருத்தமாக இருக்கிறது. “வானங்களே, உயர இருந்து சொரியுங்கள்; ஆகாய மண்டலங்கள் நீதியைப் பொழியக்கடவது; பூமி திறவுண்டு, இரட்சிப்பின் கனியைத் தந்து, நீதியுங்கூட விளைவதாக; கர்த்தராகிய நான் இவைகளை உண்டாக்குகிறேன்.” (ஏசாயா 45:8) சொல்லர்த்தமான வானங்கள் உயிர் வாழ்வதற்குத் தேவையான மழையை பொழியச் செய்வது போல், அடையாள அர்த்தமுடைய வானங்கள் தம்முடைய ஜனங்கள்மீது நீதியான ஆசீர்வாதங்களை பொழியும்படி யெகோவா செய்வார். சொல்லர்த்தமான பூமி ஏராளமான விளைச்சலை உண்டாக்குவதுபோல், அடையாள அர்த்தமுள்ள பூமியும் யெகோவாவின் நீதியுள்ள நோக்கத்திற்கு இசைவாக சம்பவங்களை உண்டாக்கும்படி—குறிப்பாக பாபிலோனில் அடிமைகளாக இருக்கும் தம்முடைய ஜனங்களுக்கு இரட்சிப்பு அளிக்கும்படி—அவர் கட்டளையிடுவார். 1919-ல் தம்முடைய ஜனங்களை விடுவிப்பதற்கு ‘வானமும்,’ ‘பூமியும்’ இதேவிதமாக சம்பவங்களை உண்டாக்கும்படி யெகோவா செய்தார். இப்படிப்பட்ட சம்பவங்கள் நடப்பதைக் காண்பது இன்றைய கிறிஸ்தவர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. ஏன்? ஏனென்றால் அந்தச் சம்பவங்களெல்லாம் அவர்களுடைய விசுவாசத்தை பலப்படுத்துகின்றன. அடையாள அர்த்தமுடைய வானங்கள்—கடவுளுடைய ராஜ்யம்—நீதியுள்ள பூமியின்மீது ஆசீர்வாதங்களை பொழியும் காலத்தை அவர்கள் எதிர்நோக்கி இருக்கின்றனர். அந்தச் சமயத்தில் அடையாள அர்த்தமுள்ள வானங்களிலிருந்தும் பூமியிலிருந்தும் கிடைக்கும் நீதியும் இரட்சிப்பும் பூர்வ பாபிலோன் வீழ்ச்சியடைந்த சமயத்தில் இருந்ததைக் காட்டிலும் மிகப் பெரிய அளவில் இருக்கும். அது ஏசாயாவுடைய வார்த்தைகளின் எப்பேர்ப்பட்ட மகத்தான கடைசி நிறைவேற்றமாக இருக்கும்!—2 பேதுரு 3:13; வெளிப்படுத்துதல் 21:1.
யெகோவாவின் அரசதிகாரத்தை ஏற்பதால் வரும் ஆசீர்வாதங்கள்
13 மகிழ்ச்சியான வருங்கால சம்பவங்களையெல்லாம் விவரித்த பின்பு இத்தீர்க்கதரிசனத்தின் எழுத்துநடை சட்டென மாறுகிறது; ஏசாயா இப்போது இரண்டு ஐயோக்களைப் பற்றி கூறுகிறார்: “மண்ணோடுகளுக்கொத்த ஓடாயிருந்தும், தன்னை உருவாக்கினவரோடே வழக்காடுகிறவனுக்கு ஐயோ! களிமண் தன்னை உருவாக்கினவனை நோக்கி: என்ன செய்கிறாயென்று சொல்லத்தகுமோ? உன் கிரியையானது: அவருக்குக் கைகள் இல்லையென்று சொல்லலாமோ? தகப்பனை நோக்கி: ஏன் ஜநிப்பித்தாய் என்றும், தாயை நோக்கி: ஏன் பெற்றாய் என்றும் சொல்லுகிறவனுக்கு ஐயோ!” (ஏசாயா 45:9, 10) உண்மையில், இஸ்ரவேல் புத்திரர் யெகோவா முன்னறிவிப்பதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். யெகோவா தம்முடைய ஜனங்களை சிறைபிடித்துச் செல்ல அனுமதிப்பார் என்பதை ஒருவேளை அவர்கள் நம்பாதிருக்கலாம். அல்லது தாவீதின் வம்சத்தில் வரும் ராஜாவுக்குப் பதிலாக புறமத அரசனால் இஸ்ரவேலர் விடுவிக்கப்படுவதைப் பற்றிய விஷயத்தில் அவர்கள் குற்றம் கண்டுபிடிக்கிறவர்களாக இருக்கலாம். இப்படி எதிர்ப்பவர்களின் முட்டாள்தனத்தை சித்தரித்துக் காட்டுவதற்காக, உருவாக்கியவருடைய ஞானத்தைக் குறித்து கேள்விகேட்கும் உபயோகமற்ற களிமண் கட்டிகளுக்கும் உடைந்த ஓடுகளுக்கும் எதிர்ப்பவர்களை ஏசாயா ஒப்பிடுகிறார். இப்பொழுது, குயவன் உருவாக்கிய பொருளே குயவனுக்கு கைகள் இல்லை அல்லது வடிவமைப்பதற்கு சக்தி இல்லை என்று கூறுகிறது. எவ்வளவு முட்டாள்தனம்! எதிர்ப்பவர்கள் பெற்றோரின் உரிமையைக் குறைகூறும் பிள்ளைகளுக்கு ஒப்பாக இருக்கிறார்கள்.
14 எதிர்ப்பவர்களுக்கு யெகோவாவின் பதிலை ஏசாயா கொடுக்கிறார்: “இஸ்ரவேலின் பரிசுத்தரும் அவனை உருவாக்கினவருமாகிய கர்த்தர் [“யெகோவா,” NW] சொல்லுகிறதாவது: வருங்காரியங்களை என்னிடத்தில் கேளுங்கள்; என் பிள்ளைகளைக் குறித்தும், என் கரங்களின் கிரியைகளைக் குறித்தும் எனக்குக் கட்டளையிடுங்கள். நான் பூமியை உண்டுபண்ணி, நானே அதின்மேல் இருக்கிற மனுஷனைச் சிருஷ்டித்தேன்; என் கரங்கள் வானங்களை விரித்தன; அவைகளின் சர்வசேனையையும் நான் கட்டளையிட்டேன். நான் நீதியின்படி அவனை எழுப்பினேன்; அவன் வழிகளையெல்லாம் செவ்வைப்படுத்துவேன்; அவன் என் நகரத்தைக் கட்டி, சிறைப்பட்டுப்போன என்னுடையவர்களைக் கிரயமில்லாமலும் பரிதானமில்லாமலும் விடுதலையாக்குவான் என்று சேனைகளின் கர்த்தர் [“யெகோவா,” NW] சொல்லுகிறார்.”—ஏசாயா 45:11-13.
15 யெகோவாவை ‘பரிசுத்தர்’ என குறிப்பிடுவது அவருடைய புனிதத்தன்மையை வலியுறுத்திக் காட்டுகிறது. ‘உருவாக்கினவர்’ என அழைப்பது, காரியங்கள் எப்படி நடக்க வேண்டுமென தீர்மானிப்பதற்கான உரிமை படைப்பாளராகிய அவருக்கே இருக்கிறது என்பதை அழுத்திக் காட்டுகிறது. இஸ்ரவேல் புத்திரரிடம் வருங்காரியங்களை அறிவிக்க யெகோவாவால் முடியும். தம்முடைய கரத்தின் கிரியையை, அதாவது தம்முடைய ஜனங்களை பாதுகாக்கவும் முடியும். சிருஷ்டிப்பு, வெளிப்படுத்துதல் என்ற இந்த இரு நியமங்களும் ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டவை என மறுபடியும் இங்கு காட்டப்படுகிறது. யெகோவா இந்த முழு அண்டத்திற்கும் சிருஷ்டிகராக இருப்பதால், அவர் தீர்மானிக்கும் விதமாக சம்பவங்களை வழிநடத்துகிற உரிமை அவருக்கு இருக்கிறது. (1 நாளாகமம் 29:11, 12) நாம் இப்போது சிந்திக்கும் விஷயத்தைப் பொறுத்தவரை, இஸ்ரவேலரை விடுவிப்பதற்கு புறமதத்தைச் சேர்ந்த கோரேசுவை எழுப்ப சர்வலோக ஆட்சியாளர் தீர்மானித்திருக்கிறார். வானமும் பூமியும் இருப்பது எந்தளவுக்கு உறுதியோ அந்தளவுக்கு கோரேசு வரப்போவதும்—எதிர்காலத்தில் என்றாலும்—உறுதி. அப்போது, ‘சேனைகளின் யெகோவாவாகிய’ தகப்பனை குற்றம்சாட்ட எந்த இஸ்ரவேல் புத்திரனுக்குத்தான் துணிச்சல் வரும்?
16 கடவுளுடைய ஊழியர்கள் ஏன் அவருக்குத் தங்களை கீழ்ப்படுத்த வேண்டும் என்பதற்கு மற்றொரு காரணமும் இதே வசனங்களில் உள்ளது. அவருடைய தீர்மானங்கள் எப்போதுமே அவருடைய ஊழியர்களின் நன்மைக்கானவை. (யோபு 36:3) தம்முடைய ஜனங்களின் நலனுக்கென்றே அவர் சட்டங்களை உருவாக்கினார். (ஏசாயா 48:17) கோரேசுவின் காலத்தில் வாழ்ந்த, யெகோவாவின் அரசதிகாரத்தை ஏற்றுக்கொண்ட யூதர்களுக்கு இது உண்மையென நிரூபணமாகிறது. கோரேசு யெகோவாவின் நீதிக்கு இசைவாக செயல்பட்டு, ஆலயத்தைத் திரும்பவும் கட்டுவதற்காக அவர்களை பாபிலோனிலிருந்து தாயகத்திற்கு அனுப்புகிறார். (எஸ்றா 6:3-5) அவ்வாறே இன்றும் கடவுளுடைய சட்டங்களை தங்களுடைய அன்றாட வாழ்க்கையில் கடைப்பிடித்து அவருடைய அரசதிகாரத்திற்கு கீழ்ப்படிகிறவர்கள் ஆசீர்வாதங்களை அனுபவிக்கிறார்கள்.—சங்கீதம் 1:1-3; 19:7; 119:105; யோவான் 8:31, 32.
மற்ற தேசத்தாருக்கு ஆசீர்வாதங்கள்
17 பாபிலோனின் வீழ்ச்சியால் நன்மையடையப் போகிறவர்கள் இஸ்ரவேலர் மட்டுமல்ல. ஏசாயா சொல்கிறார்: “யெகோவா சொல்லுகிறதாவது: ‘கூலி வாங்காத வேலையாட்களாகிய எகிப்தியரும் எத்தியோப்பியாவின் வணிகரும் உயரமான ஆட்களாகிய சபேரியரும் தாங்களாகவே உன்னிடத்திற்கு வந்து, உன்னுடையவர்களாவார்கள். அவர்கள் உன் பின்னே நடந்து வருவார்கள்; விலங்கிடப்பட்டு வந்து உன்னை பணிந்து கொள்வார்கள். உன்னை நோக்கி விண்ணப்பம் செய்து, “உண்மையிலேயே கடவுள் உன்னோடு இருக்கிறார், அவரையல்லாமல் வேறே கடவுள் இல்லை” என்று சொல்வார்கள்.’” (ஏசாயா 45:14, NW) மோசேயின் நாளில் இஸ்ரவேலர் எகிப்திலிருந்து புறப்பட்டபோது அவர்களோடு இஸ்ரவேல் அல்லாத “பல ஜாதியான ஜனங்கள்” சேர்ந்துகொண்டார்கள். (யாத்திராகமம் 12:37, 38) இதேவிதமாக, சிறைபிடிக்கப்பட்ட யூதர்கள் பாபிலோனிலிருந்து தாயகம் திரும்புகையில் மற்ற தேசத்தினரும் அவர்களோடு வருவார்கள். யூதரல்லாத இவர்கள் கட்டாயத்தினால் அல்ல, ஆனால் ‘தாங்களாகவே வருவார்கள்.’ அவர்கள் “உன்னை பணிந்து கொள்வார்கள்,” “உன்னை நோக்கி விண்ணப்பம் செய்”வார்கள் என யெகோவா கூறும்போது, இஸ்ரவேலரிடம் இந்த அந்நிய தேசத்தார் மனப்பூர்வமாக கீழ்ப்படிதலையும் விசுவாசத்தையும் காண்பிப்பதையே குறிப்பிடுகிறார். அவர்கள் விலங்கிட்டுக்கொள்வது மனமுவந்த செயலாகவே இருக்கும்; கடவுளுடைய உடன்படிக்கையின் ஜனங்களோடு சேவை செய்ய விருப்பமுள்ளவர்களாக இருப்பதையே அது அர்த்தப்படுத்தும். கடவுளுடைய உடன்படிக்கையின் ஜனங்களிடம், ‘உங்களோடு கடவுள் இருக்கிறார்’ என்றும் அவர்கள் சொல்வார்கள். இஸ்ரவேலரோடு யெகோவா செய்த உடன்படிக்கை ஏற்பாடுகளின்படியே, மதம்மாறிய இந்தப் புறஜாதியார் அவரை வழிபடுவார்கள்.—ஏசாயா 56:6.
18 ‘தேவனுடைய இஸ்ரவேலர்’ 1919-ல் ஆவிக்குரிய அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்பட்டது முதற்கொண்டு ஏசாயாவின் வார்த்தைகள் கோரேசுவின் நாளில் நிறைவேறியதைப் பார்க்கிலும் மிகப் பெரிய அளவில் நிறைவேறி வருகின்றன. பூமி முழுவதிலும் லட்சக்கணக்கானோர் யெகோவாவை சேவிக்க மனமுள்ளவர்களாக இருப்பதைக் காட்டுகிறார்கள். (கலாத்தியர் 6:16; சகரியா 8:23) ஏசாயா குறிப்பிட்ட அந்த ‘வேலையாட்களையும்’ ‘வணிகர்களையும்’ போலவே இவர்களும் மெய் வணக்கத்தை ஆதரிப்பதற்கு தங்கள் சரீர பலத்தையும் பொருளாதார வளங்களையும் மகிழ்ச்சியுடன் அர்ப்பணிக்கிறார்கள். (மத்தேயு 25:34-40; மாற்கு 12:30) இவர்கள் கடவுளுக்கு தங்களை ஒப்புக்கொடுத்து அவருடைய வழியில் நடந்து, மகிழ்ச்சியுடன் அவருக்கு ஊழியராகிறார்கள். (லூக்கா 9:23) இவர்கள் யெகோவாவை மட்டுமே வணங்குகிறார்கள், யெகோவாவுடன் விசேஷ உடன்படிக்கை உறவுக்குள் இருக்கிற “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை”யோடு கூட்டுறவு கொள்வதன் நன்மைகளையும் இவர்கள் அனுபவித்து மகிழுகிறார்கள். (மத்தேயு 24:45-47, NW; 26:28; எபிரெயர் 8:8-13) அந்த ‘வேலையாட்களுக்கும்’ ‘வணிகர்களுக்கும்’ உடன்படிக்கையில் பங்கு இல்லை என்றாலும் அதிலிருந்து நன்மை அடைகிறார்கள், அதோடு சம்பந்தப்பட்ட சட்டங்களுக்குக் கீழ்ப்படிந்து, “அவரையல்லாமல் வேறே கடவுள் இல்லை” என்று தைரியமாக அறிவிக்கிறார்கள். உண்மை வணக்கத்தை மனமுவந்து ஆதரிப்பவர்களின் எண்ணிக்கை இன்று பெருமளவில் அதிகரித்து வருவதை கண்ணாரக் காண்பது எவ்வளவாய் பூரிப்பளிக்கிறது!—ஏசாயா 60:22.
19 யெகோவாவை வணங்குவதில் வேற்று நாட்டவரும் சேர்ந்து கொள்வார்கள் என அறிவித்த பின், தீர்க்கதரிசி இவ்வாறு வியந்துரைக்கிறார்: “இஸ்ரவேலின் தேவனும் இரட்சகருமாகிய நீர் மெய்யாகவே உம்மை மறைத்துக்கொண்டிருக்கிற தேவனாயிருக்கிறீர்”! (ஏசாயா 45:15) யெகோவா இப்போது தம்முடைய வல்லமையை வெளிக்காட்டுவதில்லை என்றாலும் வருங்காலத்தில் தம்மை மறைத்துக்கொள்ள மாட்டார். இஸ்ரவேலின் தேவனும் தம்முடைய ஜனங்களை இரட்சிப்பவரும் அவரே என்பதை நிரூபித்துக் காட்டுவார். இருந்தாலும், விக்கிரகங்களை நம்புவோருக்கு யெகோவா இரட்சகராக இருக்கமாட்டார். அப்படிப்பட்டவர்களைக் குறித்து ஏசாயா இவ்வாறு கூறுகிறார்: “விக்கிரகங்களை உண்டுபண்ணுகிற அனைவரும் வெட்கப்பட்டு இலச்சையடைந்து, ஏகமாய்க் கலங்கிப்போவார்கள்.” (ஏசாயா 45:16) அவர்களுடைய இலச்சை, கொஞ்சகால அவமானத்தையும் இகழ்ச்சியையும் மட்டுமே குறிப்பதில்லை. அது மரணத்தை அர்த்தப்படுத்தும்—இஸ்ரவேலருக்கு யெகோவா அடுத்ததாக தரும் வாக்குறுதிக்கு நேர்மாறானது.
20 “இஸ்ரவேலோ, யெகோவாவோடு ஐக்கியமாக, நிச்சயமாகவே நித்திய இரட்சிப்பினால் இரட்சிக்கப்படுவான். நீங்கள் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் வெட்கப்படாமலும் இகழ்ச்சியடையாமலும் இருப்பீர்கள்.” (ஏசாயா 45:17, NW) இஸ்ரவேலருக்கு யெகோவா நித்திய இரட்சிப்பை வாக்குக் கொடுக்கிறார். ஆனால் அது நிபந்தனைக்குட்பட்டது. இஸ்ரவேலர் “யெகோவாவோடு ஐக்கியமாக” நிலைத்திருக்க வேண்டும். இயேசுவை மேசியா என ஏற்றுக்கொள்ள மறுப்பதன் மூலம் இஸ்ரவேலர் அந்த ஐக்கியத்தை முறிக்கையில், ‘நித்திய இரட்சிப்பு’ என்ற எதிர்பார்ப்பை இழந்துவிடுவார்கள். இருந்தாலும், இஸ்ரவேலரில் சிலர் இயேசுவில் விசுவாசத்தைக் காட்டுவார்கள். இவர்கள் தேவனுடைய இஸ்ரவேலரில் மையக்கருவாக ஆவார்கள், மாம்சப்பிரகாரமான இஸ்ரவேலரின் ஸ்தானத்தை எடுத்துக்கொள்வார்கள். (மத்தேயு 21:43; கலாத்தியர் 3:28, 29; 1 பேதுரு 2:9) ஆவிக்குரிய இஸ்ரவேலர் ஒருபோதும் இகழ்ச்சியடைய மாட்டார்கள். இவர்கள் “நித்திய உடன்படிக்கை”யின் பாகமாக ஆவார்கள்.—எபிரெயர் 13:20.
சிருஷ்டிப்பதிலும் வெளிப்படுத்துவதிலும் யெகோவா நம்பகமானவர்
21 இஸ்ரவேலருக்கு யெகோவா கொடுத்த நித்திய இரட்சிப்பின் வாக்குறுதியில் யூதர்கள் நம்பிக்கை வைக்க முடியுமா? ஏசாயா பதிலளிக்கிறார்: “வானங்களைச் சிருஷ்டித்துப் பூமியையும் வெறுமையாயிருக்கச் [“உபயோகமற்றதாயிருக்க,” NW] சிருஷ்டியாமல் அதைக் குடியிருப்புக்காகச் செய்து படைத்து, அதை உருவேற்படுத்தின தேவனாகிய கர்த்தர் [“யெகோவா,” NW] சொல்லுகிறதாவது: நானே கர்த்தர், வேறொருவர் இல்லை. நான் அந்தரங்கத்திலும், பூமியின் அந்தகாரமான இடத்திலும் பேசினதில்லை; விருதாவாக என்னைத் தேடுங்களென்று நான் யாக்கோபின் சந்ததிக்குச் சொன்னதுமில்லை; நான் நீதியைப்பேசி, யதார்த்தமானவைகளை அறிவிக்கிற கர்த்தர்.” (ஏசாயா 45:18, 19) இந்த அதிகாரத்தில் ஒரு முக்கியமான தீர்க்கதரிசனத்தை ஆரம்பிக்கையில் நான்காவதும் கடைசியுமாக “யெகோவா சொல்லுகிறதாவது” என்ற சொற்றொடரோடு ஏசாயா ஆரம்பிக்கிறார். (ஏசாயா 45:1, 11, 14, NW) யெகோவா என்ன சொல்கிறார்? சிருஷ்டிப்பதிலும் வெளிப்படுத்துவதிலும் அவர் நம்பகமானவர் என்றே சொல்கிறார். அவர் பூமியை “உபயோகமற்றதாயிருக்க” சிருஷ்டிக்கவில்லை. அவ்வாறே, தம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலரும் தம்மை “விருதாவாக” தேடும்படி அவர் சொல்வதில்லை. பூமியைக் குறித்த கடவுளுடைய நோக்கம் நிறைவேறுவது எப்படியோ அப்படியே அவருடைய தெரிந்தெடுக்கப்பட்ட ஜனங்களைக் குறித்த நோக்கமும் நிறைவேறும். பொய்க் கடவுட்களை சேவிப்பவர்களுடைய தெளிவற்ற வார்த்தைகளுக்கு நேர்மாறாக, யெகோவாவுடைய வார்த்தைகள் வெளிப்படையாக பேசப்படுகின்றன. அவருடைய வார்த்தைகள் நீதியானவை, அவை நிச்சயமாக நிறைவேறும். அவரை சேவிப்பவர்கள், விருதாவாக அவரை சேவிக்க மாட்டார்கள்.
22 பாபிலோனுக்கு நாடுகடத்தப்பட்ட கடவுளுடைய ஜனங்களைப் பொறுத்தவரை, வாக்குப்பண்ணப்பட்ட தேசம் பாழான நிலையிலேயே விடப்படாது என்பதற்கு அவ்வார்த்தைகள் உத்தரவாதம் அளிக்கின்றன. அதில் மீண்டும் ஜனங்கள் வாழ்வர். அவர்களுக்கு யெகோவா கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேறுகின்றன. அதோடு, ஏசாயாவின் வார்த்தைகள் இன்றும் கடவுளுடைய ஜனங்களுக்கு உறுதியளிக்கின்றன. அதாவது, சிலர் நம்புவதுபோல் அக்கினியாலோ அல்லது வேறு சிலர் பயப்படுவதுபோல் அணுகுண்டுகள் மூலமாகவோ இந்த பூமி அழிக்கப்படாது என அவை உறுதியளிக்கின்றன. பூமியை பரதீஸிய அழகால் அலங்கரித்து, நீதியுள்ள ஜனங்களால் நிரப்பி அதை என்றென்றைக்கும் நிலைத்திருக்கச் செய்வதே கடவுளுடைய நோக்கம். (சங்கீதம் 37:11, 29; 115:16; மத்தேயு 6:9, 10; வெளிப்படுத்துதல் 21:3, 4) இஸ்ரவேலருடைய விஷயத்தில் நடந்தது போலவே, யெகோவாவின் வார்த்தைகள் நம்பகமானவை என நிரூபிக்கப்படும்.
யெகோவா இரக்கம் காட்டுகிறார்
23 யெகோவா அடுத்ததாக சொல்லும் வார்த்தைகளில் இஸ்ரவேலின் இரட்சிப்பைக் குறித்த விஷயங்கள் வலியுறுத்திக் காட்டப்படுகின்றன: “ஜாதிகளில் தப்பினவர்களே, கூட்டங்கூடி வாருங்கள்; ஏகமாய்ச் சேருங்கள்; தங்கள் விக்கிரகமாகிய மரத்தைச் சுமந்து திரிந்து இரட்சிக்கமாட்டாத தெய்வத்தைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் அறிவீனர். நீங்கள் சேர்ந்து, ஏகமாய் யோசனைபண்ணிப் பதிற்சொல்லுங்கள், இதைப் பூர்வ காலத்திலேயே தெரிவித்து முன்னமே அறிவித்தவர் யார்? யெகோவாவாகிய நான் அல்லவா? என்னைத் தவிர வேறே தெய்வம் இல்லை. என்னையன்றி, நீதியுள்ளவரும் ரட்சிக்கிறவருமாகிய கடவுள் இல்லையே.” (ஏசாயா 45:20, 21, தி.மொ.) விக்கிரகங்களை வழிபட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதோடு தங்களுடைய இரட்சிப்பை ஒப்பிட்டுப் பார்க்கும்படி ‘தப்பினவர்களிடம்’ யெகோவா சொல்கிறார். (உபாகமம் 30:3; எரேமியா 29:14; 50:28) ஏனென்றால் விக்கிரகங்களை வழிபடுபவர்கள் இரட்சிக்கமாட்டாத சக்தியற்ற கடவுட்களிடம் வேண்டுதல் செய்து அவற்றை சேவிப்பதால் அவர்கள் “அறிவீனர்.” அவர்களுடைய வணக்கம் வீணானது—விருதாவாக வணங்குகிறார்கள். மறுபட்சத்தில், யெகோவாவை வணங்குகிறவர்களோ, “பூர்வ காலத்திலேயே” முன்னறிவித்த சம்பவங்களை—பாபிலோனுக்கு நாடுகடத்தப்பட்ட ஜனங்களின் இரட்சிப்பு உட்பட்ட சம்பவங்களை—நிறைவேற்ற அவருக்கு சக்தி இருக்கிறது என்பதை கண்டுகொள்கிறார்கள். அப்படிப்பட்ட வல்லமையும், முன்னறியும் திறனும் யெகோவாவை மற்ற எல்லா கடவுட்களிலிருந்தும் நிகரற்றவராக்குகிறது. உண்மையில், அவர் “நீதியுள்ளவரும் ரட்சிக்கிறவருமாகிய கடவுள்.”
‘இரட்சிப்பின் மகிமை எங்கள் தேவனுக்கே’
24 யெகோவாவின் இரக்கம் இந்த அழைப்பை விடுக்கும்படி அவரை உந்துவிக்கிறது: “பூமியின் எல்லையெங்குமுள்ளவர்களே, என்னை நோக்கிப் பாருங்கள்; அப்பொழுது இரட்சிக்கப்படுவீர்கள்; நானே தேவன், வேறொருவரும் இல்லை. முழங்கால் யாவும் எனக்கு முன்பாக முடங்கும், நாவு யாவும் என்னை முன்னிட்டு ஆணையிடும் என்று நான் என்னைக்கொண்டே ஆணையிட்டிருக்கிறேன்; இந்த நீதியான வார்த்தை என் வாயிலிருந்து புறப்பட்டது; இது மாறுவது இல்லையென்கிறார். கர்த்தரிடத்தில் மாத்திரம் [“முழுமையான,” NW] நீதியும் வல்லமையுமுண்டென்று அவனவன் சொல்லி அவரிடத்தில் வந்து சேருவான்; அவருக்கு விரோதமாய் எரிச்சல் கொண்டிருக்கிற யாவரும் வெட்கப்படுவார்கள். இஸ்ரவேலின் சந்ததியாகிய யாவரும் கர்த்தருக்குள் நீதிமான்களாக்கப்பட்டு மேன்மை பாராட்டுவார்கள்.”—ஏசாயா 45:22-25.
25 பாபிலோனில் இருக்கிறவர்களில் தம்மிடம் திரும்புகிறவர்களை இரட்சிப்பதாக யெகோவா இஸ்ரவேலரிடம் வாக்குக் கொடுக்கிறார். தீர்க்கதரிசனம் நிறைவேறாமல் போவதற்கு வாய்ப்பே இல்லை, ஏனென்றால் யெகோவாவுக்கு தம்முடைய ஜனங்களை இரட்சிப்பதற்கு விருப்பமும் இருக்கிறது, திறமையும் இருக்கிறது. (ஏசாயா 55:11) யெகோவாவின் வார்த்தைகள் நம்பகமானவை, அதேசமயத்தில் அவற்றை மேலும் உறுதிப்படுத்துவதற்கு அதன்பேரில் ஆணையுமிடுகிறார். (எபிரெயர் 6:13) அவருடைய தயவைப் பெற விரும்புகிற யாவரிடமும் கீழ்ப்படிதலையும் (‘முழங்கால் யாவும் முடங்கும்’) உறுதிமொழியையும் (‘நாவு யாவும் ஆணையிடும்’) கேட்பது நியாயமானதே. யெகோவாவை வழிபடுவதில் உறுதியாக நிலைத்திருக்கும் இஸ்ரவேலர் இரட்சிக்கப்படுவார்கள். யெகோவா தங்களுக்குச் செய்யும் காரியங்களுக்காக அவர்கள் பெருமிதங்கொள்ள முடியும்.—2 கொரிந்தியர் 10:17.
26 இருந்தாலும், தம்மிடம் திரும்புவதற்கு கடவுள் விடுக்கும் அழைப்பு பூர்வ பாபிலோனில் இருந்த நாடுகடத்தப்பட்டவர்களுக்கு மட்டுமே உரியதல்ல. (அப்போஸ்தலர் 14:14, 15; 15:19; 1 தீமோத்தேயு 2:3, 4) இந்த அழைப்பு இப்போதும் அறிவிக்கப்பட்டு வருகிறது. ‘சகல ஜாதிகளிலுமிருந்து வந்த . . . திரளான கூட்டமாகிய ஜனங்கள்’ இதற்குச் செவிகொடுத்து இவ்வாறு அறிவிக்கிறார்கள்: “இரட்சிப்பின் மகிமை . . . எங்கள் தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் [இயேசுவுக்கும்] உண்டாவதாக.” (வெளிப்படுத்துதல் 7:9, 10; 15:4) ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான புதியவர்கள் கடவுளிடம் திரும்புவதால் திரள் கூட்டத்தினரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அவர்கள் அவருடைய அரசதிகாரத்தை ஏற்று அவர் மீது தாங்கள் வைத்திருக்கும் பற்றுறுதியை யாவரறிய அறிவிக்கிறார்கள். அதோடு, ‘ஆபிரகாமின் சந்ததியாரான’ ஆவிக்குரிய இஸ்ரவேலரை அவர்கள் உண்மையோடு ஆதரிக்கிறார்கள். (கலாத்தியர் 3:29) யெகோவாவின் நீதியுள்ள ஆட்சியை அவர்கள் எந்தளவுக்கு நேசிக்கிறார்கள் என்பதை உலகமுழுவதிலும் பின்வருமாறு அறிவிப்பதன் மூலம் காட்டுகிறார்கள்: ‘யெகோவாவிடத்தில் மாத்திரம் முழுமையான நீதியும் வல்லமையும் உண்டு.’a முடிவாக, உயிரோடிருக்கும் யாவரும் கடவுளுடைய அரசதிகாரத்தை ஏற்று அவருடைய நாமத்தைத் தொடர்ந்து துதிப்பார்கள் என்பதைக் காட்டுவதற்கு அப்போஸ்தலனாகிய பவுல் ரோமர்களுக்கு எழுதும்போது ஏசாயா 45:23-ன் செப்டுவஜின்ட் மொழிபெயர்ப்பை மேற்கோள் காட்டினார்.—ரோமர் 14:11; பிலிப்பியர் 2:9-11; வெளிப்படுத்துதல் 21:22-27.
27 கடவுளிடம் திரும்பினால் மட்டுமே இரட்சிப்பு சாத்தியம் என திரள்கூட்டத்தினர் நம்புவதேன்? ஏனென்றால், ஏசாயா 45-ம் அதிகாரத்திலுள்ள தீர்க்கதரிசன வார்த்தைகள் தெளிவாக காட்டுகிறபடி, யெகோவாவின் வாக்குறுதிகள் யாவும் நம்பகமானவை. வானங்களையும் பூமியையும் சிருஷ்டிக்க யெகோவாவுக்கு வல்லமையும் ஞானமும் இருந்ததுபோல, தம்முடைய தீர்க்கதரிசனங்களை நிறைவேற்றுவதற்கும் அவருக்கு வல்லமையும் ஞானமும் உண்டு. கோரேசுவைப் பற்றி சொன்ன தீர்க்கதரிசனம் நிறைவேறும்படி அவர் பார்த்துக்கொண்ட விதமாகவே, இன்னும் நிறைவேறாத மற்ற தீர்க்கதரிசனங்களையும் அவர் நிறைவேற்றுவார். ஆகவே, யெகோவா விரைவில் மீண்டும் ஒருமுறை “நீதியுள்ளவரும் ரட்சிக்கிறவருமாகிய கடவுள்” என நிரூபிப்பார் என்பதில் அவரை வணங்குபவர்கள் நம்பிக்கை வைக்க முடியும்.
[அடிக்குறிப்பு]
a புதிய உலக மொழிபெயர்ப்பு ஆங்கில பைபிள் “முழுமையான நீதி” என்ற வார்த்தையை பயன்படுத்துகிறது. ஏனென்றால், எபிரெய மூலவாக்கியத்தில் இது “நீதிகள்” என பன்மை வடிவில் காணப்படுகிறது. யெகோவாவுடைய நீதி எந்தளவுக்கு மிகுதியானது என்பதை தெரிவிப்பதற்காகவே இங்கு பன்மை வடிவில் இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது.
[கேள்விகள்]
1, 2. ஏசாயா 45-ம் அதிகாரத்தில் என்ன நம்பிக்கையூட்டும் வார்த்தைகள் கொடுக்கப்பட்டுள்ளன, என்ன கேள்விகள் சிந்திக்கப்படும்?
3. கோரேசுவின் வெற்றியை ஏசாயா 45:1-3அ என்ன தத்ரூபமான வார்த்தைகளோடு விவரிக்கிறது?
4. (அ) கோரேசுவை யெகோவா ஏன் தம்முடைய ‘அபிஷேகம் பண்ணப்பட்டவர்’ என அழைக்கிறார்? (ஆ) கோரேசுவிற்கு வெற்றி நிச்சயம் கிடைக்கும்படி யெகோவா எப்படி பார்த்துக்கொள்வார்?
5, 6. பாபிலோனின் வீழ்ச்சியைப் பற்றிய தீர்க்கதரிசனம் எப்பொழுது, எவ்வாறு நிறைவேறுகிறது?
7. கோரேசுவைப் பற்றிய ஏசாயா தீர்க்கதரிசனத்தின் குறிப்பிடத்தக்க நிறைவேற்றத்தால் கிறிஸ்தவர்கள் எவ்வாறு பலப்படுத்தப்படுகிறார்கள்?
8. பாபிலோனின் மீது கோரேசு வெற்றி பெறுவதற்கு யெகோவா தரும் ஒரு காரணம் என்ன?
9. பாபிலோனைக் கைப்பற்ற கோரேசுவை யெகோவா அழைத்து வருவதற்கு இரண்டாவது காரணம் என்ன?
10. பாபிலோனிய உலக வல்லரசை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக கோரேசுவை யெகோவா பயன்படுத்துவதற்கு அதிமுக்கியமான காரணம் என்ன?
11. பாபிலோன் சம்பந்தமாக தம் நோக்கத்தை நிறைவேற்ற வல்லமை இருக்கிறது என்பதை யெகோவா எவ்வாறு உதாரணத்தின் மூலமாக விளக்குகிறார்?
12. (அ) அடையாள அர்த்தமுடைய வானங்களும் பூமியும் எதை உண்டுபண்ணும்படி யெகோவா செய்கிறார்? (ஆ) இன்று கிறிஸ்தவர்களுக்கு ஆறுதலளிக்கும் என்ன வாக்குறுதி ஏசாயா 45:8-ல் இருக்கிறது?
13. யெகோவாவின் நோக்கங்களுக்கு மனிதர் எதிர்ப்பு தெரிவிப்பது ஏன் அபத்தமானது?
14, 15. ‘பரிசுத்தர்’ மற்றும் ‘உருவாக்கினவர்’ என்ற பதங்கள் யெகோவாவைப் பற்றி எதை தெரியப்படுத்துகின்றன?
16. யெகோவாவின் ஊழியர்கள் ஏன் அவருக்குத் தங்களை கீழ்ப்படுத்த வேண்டும்?
17. இஸ்ரவேலரோடு வேறு யாரும் யெகோவாவின் மீட்கும் செயல்களிலிருந்து நன்மை அடைவர், எப்படி?
18. ‘தேவனுடைய இஸ்ரவேலரை’ யெகோவா விடுவித்ததால் இன்று யார் நன்மையடைந்துள்ளனர், எவ்வழிகளில்?
19. வேண்டுமென்றே விக்கிரகங்களை வழிபடுபவர்களுக்கு என்ன நேரிடும்?
20. இஸ்ரவேலர் எவ்வழியில் ‘நித்திய இரட்சிப்பை’ அடைவர்?
21. சிருஷ்டிப்பதிலும் நடக்கப் போகிறவற்றை வெளிப்படுத்துவதிலும் தாம் முற்றிலும் நம்பகமானவர் என்பதை யெகோவா எவ்வாறு காண்பிக்கிறார்?
22. (அ) பாபிலோனுக்கு நாடுகடத்தப்பட்ட யூதர்கள் எதைப் பற்றி உறுதியாக இருக்கலாம்? (ஆ) இன்றைய கிறிஸ்தவர்களுக்கு என்ன உறுதியளிக்கும் வார்த்தைகள் இருக்கின்றன?
23. விக்கிரகங்களை வழிபடுவர்களின் முடிவு என்ன, யெகோவாவை வணங்குபவர்கள் எப்படி பலனளிக்கப்படுவர்?
24, 25. (அ) யெகோவா என்ன அழைப்பை விடுக்கிறார், அவருடைய வாக்கு நிறைவேறும் என்பதில் ஏன் நிச்சயமாக இருக்கலாம்? (ஆ) எதை யெகோவா நியாயமாகவே கேட்கிறார்?
26. தம்மிடம் திரும்பும்படி யெகோவா விடுக்கும் அழைப்பிற்கு எல்லா தேசத்திலுமிருந்து வரும் ‘திரள் கூட்டத்தினர்’ எவ்வாறு பிரதிபலிக்கிறார்கள்?
27. இன்று கிறிஸ்தவர்கள் யெகோவாவின் வாக்குறுதிகளில் ஏன் முற்றிலும் நம்பிக்கை வைக்கலாம்?
[பக்கம் 80, 81-ன் படங்கள்]
ஒளியைப் படைத்து, இருளை உண்டாக்குகிற யெகோவாவால் சமாதானத்தைப் படைத்து தீங்கை உண்டாக்கவும் முடியும்
[பக்கம் 83-ன் படம்]
‘வானங்கள்’ ஆசீர்வாதங்களை பொழியும்படியும் “பூமி” இரட்சிப்பை அருளும்படியும் யெகோவா செய்வார்
[பக்கம் 84-ன் படம்]
தூக்கியெறியப்பட்ட ஓடுகள் அவற்றை உருவாக்கியவரின் ஞானத்தைக் குறித்து கேள்வி கேட்கலாமா?
[பக்கம் 89-ன் படம்]
யெகோவா பூமியை விருதாவாயிருக்க படைக்கவில்லை