இருளைப் போக்கும் தெய்வீக ஒளி!
“யெகோவாவே என் இருளை வெளிச்சமாக்குகிறவர்.” —2 சாமுவேல் 22:29, NW.
1. ஒளி எவ்வாறு வாழ்க்கையுடன் தொடர்புடையதாய் இருக்கிறது?
“‘ஒளி தோன்றுக!’ என்றார், ஒளி தோன்றிற்று.” (தொடக்க நூல் [ஆதியாகமம்] 1:3, பொ.மொ.) ஆதியாகமத்திலுள்ள சிருஷ்டிப்பு விவரம், அதிமுக்கியத்துவம் வாய்ந்த இந்த வார்த்தைகளால் யெகோவாவை ஒளியின் ஊற்றுமூலராக அடையாளம் காட்டுகிறது. ஒளி இல்லாமல் பூமியில் உயிர்வாழ முடியாது. ஆவிக்குரிய ஒளிக்கும் யெகோவாவே ஊற்றுமூலர், வாழ்க்கை பாதையில் நம்மை வழிநடத்த அது இன்றியமையாதது. (சங்கீதம் 43:3) தாவீது ராஜா இவ்வாறு எழுதியபோது, ஆவிக்குரிய ஒளிக்கும் வாழ்க்கைக்கும் உள்ள நெருங்கிய தொடர்பை சுட்டிக் காட்டினார்: “வாழ்வு தரும் ஊற்று உம்மிடமே உள்ளது. உமது ஒளியால் யாமும் ஒளி பெறுகின்றோம்.”—திருப்பாடல்கள் [சங்கீதம்] 36:9, பொ.மொ.
2. பவுல் காட்டியபடி, ஒளி எதோடு நெருங்கிய தொடர்புடையது?
2 தாவீதிற்குப் பின்பு ஏறக்குறைய 1,000 ஆண்டுகள் கழித்து, அப்போஸ்தலன் பவுல் சிருஷ்டிப்பு விவரத்தைக் குறிப்பிட்டு பேசினார். “‘இருளிலிருந்து ஒளி தோன்றுக!’ என்று சொன்ன[வர்] கடவுளே” என கொரிந்துவில் இருந்த கிறிஸ்தவ சபைக்கு அவர் எழுதினார். பின்பு, யெகோவாவிடமிருந்து வரும் அறிவுக்கும் ஆவிக்குரிய ஒளிக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதை இவ்வாறு காட்டினார்: “எங்கள் உள்ளங்களில் அவரது ஒளியை வீசச் செய்தார். அது கிறிஸ்துவின் திருமுகத்தில் வீசும் கடவுளின் மாட்சியாகிய அறிவொளியே.” (2 கொரிந்தியர் 4:6, பொ.மொ.) இந்த ஒளி எவ்வாறு நம்மை வந்தடைகிறது?
பைபிள்—ஒளி பரப்பும் கருவி
3. பைபிளின் மூலம் என்ன ஒளியை யெகோவா அருளுகிறார்?
3 முக்கியமாய் தம்முடைய ஏவப்பட்ட வார்த்தையாகிய பைபிள் மூலமாகவே ஆவிக்குரிய ஒளியை யெகோவா அருளுகிறார். ஆகையால், நாம் பைபிளை படித்து கடவுளிடமிருந்து வரும் அறிவை ஏற்கையில், அவருடைய ஒளி நம்மீது பிரகாசிக்க அனுமதிக்கிறோம். யெகோவா பைபிளின் மூலம் தமது நோக்கங்களின் மீது ஒளியை பிரகாசிக்கச் செய்து, அவருடைய சித்தத்தை நாம் செய்வதற்கு வழிகாட்டுகிறார். இது நம்முடைய வாழ்க்கைக்கு நோக்கத்தை அளித்து, நம்முடைய ஆவிக்குரிய தேவைகளைத் திருப்தி செய்ய உதவுகிறது. (பிரசங்கி 12:1; மத்தேயு 5:3) மோசேயின் நியாயப்பிரமாணத்தை மேற்கோள் காட்டுகையில், நம்முடைய ஆவிக்குரிய தேவைகளுக்கு கவனம் செலுத்த வேண்டுமென்று இயேசு அறிவுறுத்தினார். “மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே” என்று அவர் கூறினார்.—மத்தேயு 4:4; உபாகமம் 8:3.
4. எவ்வகையில் இயேசு ‘உலகத்திற்கு ஒளியாயிருக்கிறார்’?
4 ஆவிக்குரிய ஒளிக்கும் இயேசுவுக்கும் நெருங்கிய சம்பந்தமுண்டு. சொல்லப்போனால், “நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன்” என்றும், “என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவ ஒளியை அடைந்திருப்பான்” என்றும் அவரே சொன்னார். (யோவான் 8:12) யெகோவாவைப் பற்றிய சத்தியத்தை மனிதவர்க்கத்திற்கு அருளுவதில் இயேசுவின் முக்கிய பாகத்தைப் புரிந்துகொள்ள இந்தக் கூற்றுகள் நமக்கு உதவுகின்றன. நாம் இருளைத் தவிர்த்து கடவுளுடைய ஒளியில் நடப்பதற்கு, இயேசு சொல்லும் எல்லாவற்றிற்கும் செவிகொடுத்து பைபிளிலுள்ள அவருடைய முன்மாதிரியையும் போதகங்களையும் நெருங்க பின்பற்ற வேண்டும்.
5. இயேசுவின் மரணத்திற்குப் பின், அவரை பின்பற்றினோருக்கு என்ன பொறுப்பு இருந்தது?
5 தமது மரணத்திற்கு சில நாட்களுக்கு முன்பு மறுபடியும் தம்மை ஒளியாக குறிப்பிட்டு சீஷர்களிடம் இயேசு இவ்வாறு கூறினார்: “இன்னும் கொஞ்சக்காலம் ஒளி உங்களிடத்தில் இருக்கும்; இருளில் நீங்கள் அகப்படாதபடிக்கு ஒளி உங்களோடிருக்கையில் நடவுங்கள்; இருளில் நடக்கிறவன் தான் போகிற இடம் இன்னதென்று அறியான். ஒளி உங்களோடிருக்கையில் நீங்கள் ஒளியின் பிள்ளைகளாகும்படிக்கு, ஒளியினிடத்தில் விசுவாசமாயிருங்கள்.” (யோவான் 12:35, 36) ஒளியின் பிள்ளைகள், பைபிளிலுள்ள “ஆரோக்கியமான வசனங்களின் சட்டத்தைக்” கற்றார்கள். (2 தீமோத்தேயு 1:13, 14) பின்பு அவர்கள் நேர்மை இருதயமுள்ள மற்றவர்கள் இருளிலிருந்து கடவுளுடைய ஒளியிடம் வருவதற்கு இந்த ஆரோக்கியமான வார்த்தைகளைப் பயன்படுத்தினார்கள்.
6. ஒளியையும் இருளையும் பற்றிய என்ன அடிப்படை உண்மையை 1 யோவான் 1:5-ல் நாம் காண்கிறோம்?
6 அப்போஸ்தலன் யோவான் இவ்வாறு எழுதினார்: “தேவன் ஒளியாயிருக்கிறார், அவரில் எவ்வளவேனும் இருளில்லை.” (1 யோவான் 1:5) இங்கு இருளுக்கும் ஒளிக்கும் இடையிலான வேறுபாட்டை கவனியுங்கள். ஆவிக்குரிய ஒளி யெகோவாவிடமிருந்து வருகிறது, ஆவிக்குரிய இருளுடன் அவருக்கு துளியும் சம்பந்தமில்லை. அப்படியானால், யார் இந்த இருளின் ஊற்றுமூலம்?
ஆவிக்குரிய இருள்—ஊற்றுமூலம்
7. உலகத்தின் ஆவிக்குரிய இருளுக்குக் காரணமானவன் யார், அவன் என்ன செல்வாக்கு செலுத்துகிறான்?
7 ‘இப்பிரபஞ்சத்தின் தேவனை’ பற்றி அப்போஸ்தலன் பவுல் பேசினார். பிசாசான சாத்தானையே அவர் அவ்வாறு குறிப்பிட்டார். “தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாயிராதபடிக்கு, இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான்” என்றும் அவர் கூறினார். (2 கொரிந்தியர் 4:4) கடவுளில் நம்பிக்கை இருப்பதாக பலர் சொல்லிக் கொள்கின்றனர்; ஆனால் அவர்களில் பலர் பிசாசு என்ற ஒருவன் இருப்பதை நம்புவதில்லை. ஏன்? ஏதோ தீங்கானதும் மனித வல்லமைக்கு அப்பாற்பட்டதுமான ஒரு சக்தி இருக்கலாம் என்பதையும் அது தங்கள் சிந்தையைப் பாதிக்கலாம் என்பதையும் ஏற்க அவர்களுக்கு மனமில்லை. ஆனால் பவுல் காட்டுகிறபடி, பிசாசானவன் இருக்கிறான், சத்தியத்தின் ஒளியை ஜனங்கள் காணாதபடிக்கு அவர்கள் மீது செல்வாக்கு செலுத்துகிறான். ‘உலகமனைத்தையும் மோசம்போக்குகிறவன்’ என தீர்க்கதரிசனத்தில் அவன் விவரிக்கப்பட்டிருப்பது, மனிதருடைய சிந்தையின் மீது செல்வாக்கு செலுத்த அவனுக்கு எந்தளவுக்கு வல்லமை இருக்கிறது என்பதைக் காட்டுகிறது. (வெளிப்படுத்துதல் 12:9) சாத்தானுடைய நடவடிக்கைகளின் விளைவாக, “இதோ, இருள் பூமியையும், காரிருள் ஜனங்களையும் மூடும்” என்ற ஏசாயாவின் தீர்க்கதரிசனம் இப்போது நிறைவேறுகிறது; யெகோவாவை சேவிப்போர் தவிர, சகல மனிதவர்க்கத்தினருக்கும் அது பொருந்துகிறது.—ஏசாயா 60:2.
8. ஆவிக்குரிய இருளில் இருப்பவர்கள் தாங்கள் குழப்பமடைந்திருப்பதை எந்த வழிகளில் காட்டுகிறார்கள்?
8 காரிருளில் எதையும் காண முடியாது. நாம் எளிதில் வழிதவறிப் போவோம் அல்லது குழம்பிப் போவோம். அதைப் போலவே, ஆவிக்குரிய இருளில் இருப்பவர்கள் உணர்விழந்து, ஆவிக்குரிய கருத்தில் விரைவில் குழப்பமடைகிறார்கள். மெய்யையும் பொய்யையும் நல்லதையும் கெட்டதையும் வேறுபடுத்திக் கண்டறியும் திறமையை அவர்கள் இழக்கலாம். தீர்க்கதரிசியாகிய ஏசாயா பின்வருமாறு எழுதினபோது, அத்தகைய இருளில் இருப்பவர்களைப் பற்றி பேசினார்: “தீமையை நன்மை என்றும், நன்மையைத் தீமை என்றும் சொல்லி, ஒளியை இருளாக்கி, கசப்பை இனிப்பாக்கி, இனிப்பைக் கசப்பாக்குகிறவர்களுக்கு ஐயோ கேடு!” (ஏசாயா 5:20, பொ.மொ.) ஆவிக்குரிய இருளில் இருப்போர் இருளின் கடவுளாகிய பிசாசான சாத்தானால் செல்வாக்கு செலுத்தப்படுகிறார்கள்; அதன் விளைவாக, ஒளிக்கும் உயிருக்கும் ஊற்றுமூலமாக திகழ்பவரிடமிருந்து விலகிச் செல்கிறார்கள்.—எபேசியர் 4:17-19.
இருளிலிருந்து ஒளிக்கு—சவால்
9. தவறு செய்வோருக்கு, சொல்லர்த்தமாயும் ஆவிக்குரிய கருத்திலும் இருளின் மீதுள்ள கவர்ச்சியை விளக்குங்கள்.
9 உண்மையுள்ள யோபு பின்வருமாறு சொன்னபோது, தவறு செய்வோருக்கு சொல்லர்த்தமான இருளின் மீதுள்ள கவர்ச்சியைக் குறிப்பிட்டுக் காட்டினார். “காமுகனின் கண் கருக்கலுக்காய்க் காத்திருக்கும்; கண்ணெதுவும் என்னைக் காணாது என்றெண்ணி; முகத்தை அவனோ மூடிக் கொள்வான்!” (யோபு 24:15, பொ.மொ.) தவறு செய்வோர் ஆவிக்குரிய இருளிலும் இருக்கிறார்கள், அத்தகைய இருள் அவர்களை கட்டுப்படுத்துவதாக இருக்கலாம். பாலுறவு ஒழுக்கக்கேடு, களவு, பேராசை, குடிவெறி, அவதூறான பேச்சு, பலவந்தமாக பணம் பறித்தல் ஆகியவை இத்தகைய இருளில் இருப்பவர்களுக்கு சர்வசாதாரணம் என்று அப்போஸ்தலன் பவுல் சொன்னார். ஆனால், கடவுளுடைய வார்த்தையின் ஒளியிடம் வருகிற எவரும் தன்னை மாற்றிக்கொள்ள முடியும். அத்தகைய மாற்றத்திற்கு சாத்தியம் இருப்பதாக கொரிந்தியருக்கு எழுதிய தன் நிருபத்தில் பவுல் தெளிவாக காட்டுகிறார். கொரிந்திய கிறிஸ்தவர்கள் பலர், முன்பு இருளின் செயல்களில் பழக்கமாய் ஈடுபட்டு வந்திருந்தவர்கள். எனினும் பவுல் அவர்களிடம் இவ்வாறு கூறினார்: “ஆயினும் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலும், நமது தேவனுடைய ஆவியினாலும் கழுவப்பட்டீர்கள், பரிசுத்தமாக்கப்பட்டீர்கள், நீதிமான்களாக்கப்பட்டீர்கள்.”—1 கொரிந்தியர் 6:9-11.
10, 11. (அ) இயேசு ஒருவனை பார்வையடையச் செய்கையில் அவனுக்கு எவ்வாறு கரிசனை காட்டினார்? (ஆ) ஏன் பலர் ஒளியைத் தேர்ந்தெடுப்பதில்லை?
10 ஒருவர் காரிருளிலிருந்து வெளியேறி ஒளியிடம் வருகையில் அவருடைய கண்கள் உடனடியாக அந்த ஒளியின் பிரகாசத்திற்குப் பழக்கப்படுவதில்லை; அதற்கு ஏற்றவாறு சரிப்படுத்திக்கொள்ள சிறிது நேரம் தேவைப்படலாம். பெத்சாயிதாவில் ஒரு குருடனை இயேசு சுகப்படுத்தினார், ஆனால் அதை அவர் கரிசனையுடன் படிப்படியாக செய்தார். “அவர் குருடனுடைய கையைப் பிடித்து, அவனைக் கிராமத்துக்கு வெளியே அழைத்துக் கொண்டுபோய், அவன் கண்களில் உமிழ்ந்து, அவன்மேல் கைகளை வைத்து: எதையாகிலும் காண்கிறாயா என்று கேட்டார். அவன் ஏறிட்டுப் பார்த்து: நடக்கிற மனுஷரை மரங்களைப்போலக் காண்கிறேன் என்றான். பின்பு அவர் மறுபடியும் அவன் கண்களின்மேல் கைகளை வைத்து, அவனை ஏறிட்டுப் பார்க்கும்படி செய்தார்; அப்பொழுது அவன் சொஸ்தமடைந்து, யாவரையும் தெளிவாய்க் கண்டான்.” (மாற்கு 8:23-25) பிரகாசமான ஒளிக்கு ஏற்றவாறு அந்த மனிதன் தன்னை சரிப்படுத்திக்கொள்ள இயேசு படிப்படியாய் பார்வை அளித்திருக்கலாம். தன்னால் பார்க்க முடிந்தபோது அந்த மனிதன் அடைந்த மகிழ்ச்சியை கற்பனைசெய்து பாருங்கள்.
11 என்றாலும், ஆவிக்குரிய இருளிலிருந்து வெளியேறி சத்திய ஒளியை படிப்படியாய் காண்பதற்கு உதவி பெற்றவர்களுடைய மகிழ்ச்சியோ அந்த மனிதன் பெற்ற மகிழ்ச்சியைப் பார்க்கிலும் பன்மடங்கு அதிகமாகும். அவர்களுடைய மகிழ்ச்சியை நாம் காண்கையில், ஏன் இன்னும் அநேகர் அந்த ஒளியிடம் வசீகரிக்கப்படாமல் இருக்கிறார்கள் என்று ஆச்சரியப்படலாம். இயேசு அதற்குரிய காரணத்தைச் சொல்கிறார்: “ஒளியானது உலகத்திலே வந்திருந்தும் மனுஷருடைய கிரியைகள் பொல்லாதவைகளாயிருக்கிறபடியினால் அவர்கள் ஒளியைப் பார்க்கிலும் இருளை விரும்புகிறதே அந்த ஆக்கினைத் தீர்ப்புக்குக் காரணமாயிருக்கிறது. பொல்லாங்கு செய்கிற எவனும் ஒளியைப் பகைக்கிறான், தன் கிரியைகள் கண்டிக்கப்படாதபடிக்கு, ஒளியினிடத்தில் வராதிருக்கிறான்.” (யோவான் 3:19, 20) ஆம், பாலுறவு ஒழுக்கக்கேடு, ஒடுக்குதல், பொய் சொல்லுதல், வஞ்சித்தல், திருடுதல் போன்ற ‘பொல்லாங்குகளை’ பலர் ஆவலோடு செய்துவருகிறார்கள்; சாத்தானின் ஆவிக்குரிய இருளே, அவர்கள் விருப்பம்போல் செய்வதற்கு ஏற்ற சூழலாக இருக்கிறது.
ஒளியில் முன்னேறுதல்
12. ஒளியிடம் வருவதன் மூலம் என்ன வழிகளில் நாம் நன்மை அடைந்திருக்கிறோம்?
12 ஒளியின் அறிவை நாம் பெற்றது முதற்கொண்டு, நம்மில் என்ன மாற்றங்களைப் பார்க்கிறோம்? சில சமயங்களில், நாம் செய்திருக்கிற ஆவிக்குரிய முன்னேற்றத்தை நினைத்துப் பார்ப்பது நல்லது. என்ன கெட்ட பழக்கங்களை நாம் விட்டொழித்திருக்கிறோம்? நம் வாழ்க்கையில் என்ன பிரச்சினைகளை நம்மால் சரிசெய்ய முடிந்திருக்கிறது? எதிர்காலத்திற்கான நம் திட்டங்கள் எவ்வாறு மாற்றப்பட்டிருக்கின்றன? யெகோவா தரும் பலம் மற்றும் பரிசுத்த ஆவியின் உதவியால், நம்முடைய தனித்தன்மையிலும் சிந்திக்கும் விதத்திலும் நாம் தொடர்ந்து மாற்றங்களை செய்து வரலாம். அது ஒளிக்கு சாதகமாக நாம் செயல்படுவதைக் காட்டும். (எபேசியர் 4:23, 24) பவுல் இதை இவ்வாறு குறிப்பிடுகிறார்: “ஒருகாலத்தில் இருளாய் இருந்த நீங்கள் இப்போது ஆண்டவரோடு இணைந்து ஒளியாய் இருக்கிறீர்கள். ஆகவே ஒளி பெற்ற மக்களாக வாழுங்கள். ஏனெனில், ஒளியே எல்லா நன்மையையும் நீதியையும் உண்மையையும் விளைவிக்கிறது.” (எபேசியர் 5:8, 9, பொ.மொ.) யெகோவாவின் ஒளி நம்மை வழிநடத்தும்படி அனுமதிப்பது, நமக்கு நம்பிக்கையையும் நோக்கத்தையும் அளிக்கிறது, அதோடு நம்மை சுற்றியுள்ளோரின் வாழ்க்கையில் இன்பத்தைக் கூட்டுகிறது. மேலும், அத்தகைய மாற்றங்களை நாம் செய்வது யெகோவாவின் இருதயத்திற்கு எத்தகைய மகிழ்ச்சியைத் தருகிறது!—நீதிமொழிகள் 27:11.
13. யெகோவாவின் ஒளிக்காக நம்முடைய நன்றியை நாம் எவ்வாறு தெரிவிக்கலாம், அதை செய்ய எது தேவைப்படுகிறது?
13 யெகோவாவின் ஒளியை பிரகாசிப்பதன் மூலம், அதாவது பைபிளிலிருந்து நாம் கற்றிருப்பதை நம்முடைய குடும்பத்தாருடனும் நண்பர்களுடனும் அயலகத்தாருடனும் பகிர்ந்துகொள்கையில், நாம் அனுபவிக்கும் சந்தோஷமான வாழ்க்கைக்கு நன்றி தெரிவிக்கிறோம். (மத்தேயு 5:12-16; 24:14) நாம் பிரசங்கிப்பதும் நம்முடைய சிறந்த வாழ்க்கை போக்கும், செவிகொடுக்க மறுப்போருக்கு கடிந்துகொள்ளுதலாக இருக்கும். பவுல் இவ்வாறு விளக்குகிறார்: “கர்த்தருக்குப் பிரியமானது இன்னதென்று நீங்கள் சோதித்துப் பாருங்கள். கனியற்ற அந்தகாரக் கிரியைகளுக்கு உடன்படாமல், அவைகளைக் கடிந்துகொள்ளுங்கள்.” (எபேசியர் 5:10, 11) இருளை விட்டு வெளியேறி ஒளியிடம் வரும்படி மற்றவர்களுக்கு உதவிசெய்வதற்கு, நம்முடைய பங்கில் தைரியம் தேவைப்படலாம். அதிமுக்கியமாக, மற்றவர்களிடம் இரக்கமும் அக்கறையும் அவர்களுடைய நித்திய நன்மைக்காக சத்தியத்தின் ஒளியை அவர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டுமென்ற இருதயப்பூர்வமான ஆவலும் தேவைப்படுகிறது.—மத்தேயு 28:19, 20.
வஞ்சக ஒளி—ஜாக்கிரதை!
14. ஒளியைக் குறித்ததில், என்ன எச்சரிக்கைக்கு நாம் கவனம் செலுத்த வேண்டும்?
14 இருட்டில் கடற்பயணம் செய்வோருக்கு எந்த ஒளியும் இனிய காட்சியாக இருக்கிறது. முற்காலங்களில், புயலிலிருந்து தப்புவோருக்கு அடைக்கலம் தரும் இடங்களை அடையாளம் காட்ட இங்கிலாந்தில் செங்குத்தான பாறைகளில் நெருப்பு மூட்டப்பட்டது. இந்த ஒளிக்கிரணங்கள் பாதுகாப்பான துறைமுகங்களுக்கு வழிகாட்டியதற்காக மாலுமிகள் நன்றியுடன் இருந்தார்கள். என்றாலும், வஞ்சிப்பதற்காகவே சில இடங்களில் நெருப்பு மூட்டப்பட்டன. துறைமுகத்தை வந்தடையாதபடிக்கு பல கப்பல்கள் தவறாக வழிநடத்தப்பட்டு கற்பாறை மிகுந்த கரையோரங்களில் போய் மோதி சேதமடைந்தன. அங்கு அவற்றின் சரக்குகள் களவாடப்பட்டன. இந்த வஞ்சக உலகில், ஆவிக்குரிய கப்பற்சேதத்திற்கு வழிநடத்தும் ஒளிகளிடம் வசீகரிக்கப்படாதபடி நாம் கவனமாக இருக்க வேண்டும். “சாத்தானும் ஒளியின் தூதனுடைய வேஷத்தைத் தரித்துக்கொள்வானே” என்று நமக்குச் சொல்லப்பட்டிருக்கிறது. அவ்வாறே, விசுவாசதுரோகிகள் உட்பட, அவனுடைய ஊழியர்கள் “கபடமுள்ள வேலையாட்கள்”; இவர்களும் ‘நீதியின் ஊழியக்காரருடைய வேஷத்தைத் தரித்துக்கொள்கிறார்கள்.’ இப்படிப்பட்டவர்களுடைய தவறான விவாதங்களை நாம் ஏற்போமானால், யெகோவாவின் சத்திய வார்த்தையாகிய பைபிளில் நம் நம்பிக்கை குறைந்து, விசுவாசத்தை இழந்துவிடுவோம்.—2 கொரிந்தியர் 11:13-15; 1 தீமோத்தேயு 1:19.
15. ஜீவனுக்குப் போகும் பாதையில் தொடர்ந்து நடப்பதற்கு எது நமக்கு உதவும்?
15 சங்கீதக்காரன் இவ்வாறு எழுதினார்: “என் காலடிக்கு உம் வாக்கே விளக்கு! என் பாதைக்கு ஒளியும் அதுவே.” (திருப்பாடல்கள் [சங்கீதம்] 119:105, பொ.மொ.) ஆம், ‘ஜீவனுக்குப் போகிற இடுக்கமான வழியை’ நம்முடைய அன்புள்ள கடவுளாகிய யெகோவா ஒளிரும்படி செய்திருக்கிறார். “எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும் அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார்.” (மத்தேயு 7:14; 1 தீமோத்தேயு 2:4) பைபிள் கட்டளைகளைப் பொருத்திப் பயன்படுத்துவது, அந்த இடுக்கமான வழியை விட்டு விலகி இருண்ட பாதைகளில் அலைந்து திரிவதிலிருந்து நம்மை பாதுகாக்கும். பவுல் இவ்வாறு எழுதினார்: “வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; . . . அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது.” (2 தீமோத்தேயு 3:16, 17) நாம் ஆவிக்குரிய விதமாக முன்னேறுகையில், கடவுளுடைய வார்த்தையால் கற்பிக்கப்படுகிறோம். கடவுளுடைய வார்த்தை எனும் ஒளியில், நம்மை நாமே சரிப்படுத்திக் கொள்ளலாம், அல்லது தேவைப்பட்டால், சபையிலிருக்கும் அன்புள்ள மேய்ப்பர்கள் புத்திமதி அளிக்கலாம். அவ்வாறே, ஜீவனுக்குப் போகும் பாதையில் தொடர்ந்து நடப்பதற்கு நம்மை சரிப்படுத்திக் கொண்டு நீதியின் அடிப்படையில் அளிக்கப்படும் சிட்சையை மனத்தாழ்மையுடன் ஏற்றுக்கொள்ளலாம்.
நன்றியோடு ஒளியில் நடவுங்கள்
16. அற்புத பரிசாகிய ஒளியை யெகோவா அருளியிருப்பதற்காக நாம் எவ்வாறு நன்றியை காட்டலாம்?
16 அற்புத பரிசாகிய ஒளியை யெகோவா அருளியிருப்பதற்கு நாம் எவ்வாறு நன்றியை காட்டலாம்? பிறவிக் குருடனாக இருந்த ஒருவனை இயேசு சுகப்படுத்தினபோது அவன் நன்றியுணர்வைக் காட்டும்படி உந்துவிக்கப்பட்டான் என்று யோவான் 9-ஆம் அதிகாரம் நமக்கு சொல்கிறது. எவ்வாறு? இயேசுவை கடவுளுடைய குமாரனாக விசுவாசித்து, அவரை “தீர்க்கதரிசி” என்று யாவர் முன்னும் அடையாளம் காட்டினான். மேலும், இயேசுவின் அற்புதத்தை மதிப்புக் குறைவாக பேச முயன்றவர்களுக்கு எதிராக தைரியமாய் பேசினான். (யோவான் 9:17, 30-34) கிறிஸ்தவ சபையின் அபிஷேகம் செய்யப்பட்ட உறுப்பினரை, ‘அவருக்குச் சொந்தமான விசேஷித்த ஜனம்’ என அப்போஸ்தலன் பேதுரு அழைத்தார். ஏன்? ஏனென்றால் பிறவிக் குருடனாக இருந்து சுகப்படுத்தப்பட்ட அந்த மனிதனுக்கிருந்த அதே நன்றி மனப்பான்மை அவர்களுக்கு இருக்கிறது. ‘அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை எங்கும் அறிவிப்பதன் மூலம்’ தங்கள் கொடையாளராகிய யெகோவாவுக்குத் நன்றியை வெளிக்காட்டுகிறார்கள். (1 பேதுரு 2:9; கொலோசெயர் 1:13) பூமிக்குரிய நம்பிக்கையுடையவர்கள் அதே போன்று நன்றியுள்ளவர்களாக இருக்கிறார்கள். யெகோவாவின் ‘புண்ணியங்களை’ யாவரறிய அறிவிப்பதில், அபிஷேகம் செய்யப்பட்ட தங்கள் சகோதரருக்கு உறுதுணையாக இருக்கிறார்கள். எப்பேர்ப்பட்ட ஒப்பற்ற சிலாக்கியத்தை அபூரண மனிதருக்கு கடவுள் அருளுகிறார்!
17, 18. (அ) எது ஒவ்வொருவரின் பொறுப்பாக இருக்கிறது? (அ) தீமோத்தேயுவைப் போல், எதில் ஈடுபடுவதைத் தவிர்க்கும்படி கிறிஸ்தவர்கள் ஒவ்வொருவரும் ஊக்குவிக்கப்படுகிறார்கள்?
17 சத்திய ஒளிக்கான இருதயப்பூர்வ நன்றியுணர்வு முக்கியமானது. நம்மில் யாரும் சத்தியத்தை அறிந்தவர்களாகவே பிறக்கவில்லை என்பதை நினைவில் வையுங்கள். சிலர் பெரியவர்களான பிறகு அதைக் கற்று, இருளைவிட ஒளி மேம்பட்டிருப்பதை விரைவில் புரிந்துகொள்கிறார்கள். வேறு சிலரோ கடவுள் பயமுள்ள பெற்றோரால் வளர்க்கப்படும் பெரும் பாக்கியத்தைப் பெற்றிருக்கிறார்கள். ஆனால் அத்தகையோர் ஒளியை எளிதில் அற்பமானதாக கருதலாம். ஒரு சாட்சியின் பெற்றோர், அவள் பிறப்பதற்கு முன்பிருந்தே யெகோவாவைச் சேவித்து வந்தவர்கள்; சிறு வயதிலிருந்தே தனக்குக் கற்பிக்கப்பட்ட சத்தியங்களின் முழுமையான உட்கருத்தையும் முக்கியத்துவத்தையும் சரிவர புரிந்துகொள்ள தனக்கு அதிக காலமும் முயற்சியும் எடுத்ததென்று அவள் ஒப்புக்கொள்கிறாள். (2 தீமோத்தேயு 3:15) இளைஞராயினும் முதியோராயினும் நாம் ஒவ்வொருவரும் யெகோவா வெளிப்படுத்தியிருக்கிற சத்தியத்திற்காக ஆழ்ந்த நன்றியுணர்வை நம்மில் வளர்த்து வரவேண்டும்.
18 குழந்தைப் பருவத்திலிருந்தே இளம் தீமோத்தேயுவுக்கு “வேத எழுத்துக்களை” பற்றி கற்பிக்கப்பட்டு வந்தது. ஆனால் ஊழியத்தில் மும்முரமாக ஈடுபடுவதன் மூலமாகவே அவர் கிறிஸ்தவ முதிர்ச்சியை அடைந்தார். (2 தீமோத்தேயு 3:15) அதன் பிறகுதான் அவர் அப்போஸ்தலனாகிய பவுலுக்கு உதவி செய்ய தகுதிபெற்றார். அவருக்கு பவுல் இவ்வாறு அறிவுரை கூறினார்: “நீ வெட்கப்படாத ஊழியக்காரனாயும் சத்திய வசனத்தை நிதானமாய்ப் பகுத்துப் போதிக்கிறவனாயும் உன்னை தேவனுக்கு முன்பாக உத்தமனாக நிறுத்தும்படி ஜாக்கிரதையாயிரு.” தீமோத்தேயுவைப் போல், நாம் எல்லாருமே நமக்கு வெட்கத்தை ஏற்படுத்தும் செயலிலோ அல்லது யெகோவா நம்மைக் குறித்து வெட்கப்படும்படியான செயலிலோ ஈடுபடுவதைத் தவிர்ப்போமாக!—2 தீமோத்தேயு 2:15.
19. (அ) தாவீதைப் போல் என்ன சொல்ல நம் எல்லாருக்கும் காரணம் உள்ளது? (ஆ) அடுத்த கட்டுரையில் எது ஆராயப்படும்?
19 தமது சத்திய ஒளியை அருளியிருக்கிற யெகோவாவை துதிப்பதற்கு நமக்கு நியாயமான காரணம் உள்ளது. தாவீது ராஜாவைப்போல் நாம் இவ்வாறு சொல்கிறோம்: “யெகோவாவே, தேவரீர் என் விளக்கு, யெகோவா என் இருளில் வெளிச்சம் தருவார்.” (2 சாமுவேல் 22:29, திருத்திய மொழிபெயர்ப்பு) இருப்பினும் இதோடு நாம் திருப்தியடைந்து விடாதிருக்க வேண்டும்; ஏனெனில் நாம் விடுவிக்கப்பட்ட அந்த இருளுக்குள் திரும்பவும் சிக்கிக்கொள்ள இது வழிநடத்தலாம். ஆகையால் நம் வாழ்க்கையில் பைபிள் சத்தியத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை மதிப்பிட அடுத்த கட்டுரை நமக்கு உதவும்.
என்ன கற்றுக்கொண்டீர்கள்?
• ஆவிக்குரிய ஒளியை யெகோவா எவ்வாறு அருளுகிறார்?
• ஆவிக்குரிய இருள் என்ன சவாலை முன்வைக்கிறது?
• என்ன ஆபத்துகளை நாம் தவிர்க்க வேண்டும்?
• சத்திய ஒளிக்காக நாம் எவ்வாறு நன்றியுணர்வை காட்டலாம்?
[பக்கம் 8-ன் படம்]
சொல்லர்த்தமான ஒளிக்கும் ஆவிக்குரிய ஒளிக்கும் யெகோவாவே ஊற்றுமூலர்
[பக்கம் 10-ன் படம்]
பார்வையிழந்த ஒருவனை இயேசு படிப்படியாக குணப்படுத்தியது போல, ஆவிக்குரிய இருளிலிருந்து வெளிவர அவர் நமக்கும் உதவுகிறார்
[பக்கம் 11-ன் படம்]
சாத்தானின் வஞ்சக ஒளிகளால் தவறாக வழிநடத்தப்படுவது ஆவிக்குரிய கப்பற்சேதத்தில் போய் முடியும்