ஏன் அந்தப் பண்டைய உலகம் அழிந்தது?
அந்த உலகளாவிய ஜலப்பிரளயம் ஓர் இயற்கை பேரழிவு அல்ல. அது கடவுளிடமிருந்து வந்த நியாயத்தீர்ப்பு. எச்சரிப்பு கொடுக்கப்பட்டது, ஆனால் அது அடியோடு அசட்டை செய்யப்பட்டது. ஏன்? காரணத்தை இயேசு விளக்கினார்: ‘ஜலப்பிரளயத்துக்கு முன்னான காலத்திலே நோவா பேழைக்குள் பிரவேசிக்கும் நாள் வரைக்கும், ஜனங்கள் புசித்தும் குடித்தும், பெண் கொண்டும் பெண் கொடுத்தும், ஜலப்பிரளயம் வந்து அனைவரையும் வாரிக்கொண்டு போகுமட்டும் உணராதிருந்தார்கள்; அப்படியே மனுஷகுமாரன் வருங்காலத்திலும் நடக்கும்.’—மத்தேயு 24:38, 39.
வளர்ச்சியடைந்த நாகரிகம்
இன்று நாம் அனுபவிக்காத வசதிகளை ஜலப்பிரளயத்திற்கு முன்பிருந்த நாகரிகம் சில விதங்களில் அனுபவித்து மகிழ்ந்தது. உதாரணமாக, முழு மனிதகுலத்தவரும் ஒரே மொழி பேசினார்கள். (ஆதியாகமம் 11:1) இது, பல்வகை திறமைகளைக் கொண்ட மக்கள் பலருடைய கூட்டு முயற்சி தேவைப்படும் கலைகளுக்கும் அறிவியல் ஆராய்ச்சிகளுக்கும் மிகவும் கைகொடுத்திருக்கும். அவர்கள் நீண்ட ஆயுசுடன் வாழ்ந்ததால், நூற்றாண்டுகளாக கற்ற விஷயங்கள் மீது தொடர்ந்து அறிவை திரட்டிக்கொண்டே வரமுடிந்தது.
அந்தக் காலத்தில் மனிதருடைய ஆயுசு காலம் ஒன்றும் அவ்வளவு அதிகமாக இருக்கவில்லை, பைபிளில் சொல்லப்பட்டுள்ள ஆண்டுகளெல்லாம் வெறும் மாதங்கள்தான் என சிலர் வாதாடுகின்றனர். அது உண்மையா? பார்க்கலாம், உதாரணத்திற்கு மகலாலேயேல் என்பவரை எடுத்துக்கொள்ளுங்கள். பைபிள் சொல்கிறது: “மகலாலெயேல் அறுபத்தைந்து வயதானபோது, யாரேதைப் பெற்றான். . . . மகலாலெயேலுடைய நாளெல்லாம் எண்ணூற்றுத் தொண்ணூற்று ஐந்து வருஷம்; அவன் மரித்தான்.” (ஆதியாகமம் 5:15-17) ஒரு வருஷம் என்பது ஒரு மாதமாக இருந்தால், மகலாலெயேல் வெறும் ஐந்து வயதிலேயே ஒரு குமாரனுக்குத் தகப்பனாகியிருப்பார்! ஆனால் அப்படியல்ல, அப்பொழுது வாழ்ந்த மக்கள் பரிபூரண ஆற்றலைப் பெற்றிருந்த முதல் மனிதனாகிய ஆதாம் வாழ்ந்த காலத்தை ஒட்டியே வாழ்ந்தனர். அவர்கள் உண்மையில் பல நூற்றாண்டுகள் வாழ்ந்தார்கள். அவர்கள் எதை சாதித்தார்கள்?
ஜலப்பிரளயத்திற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, பூமியின் ஜனத்தொகை கிடுகிடுவென அதிகமானதால் ஆதாமின் குமாரனாகிய காயீன் ஒரு பட்டணத்தைக் கட்ட முடிந்தது, அதற்கு ஏனோக்கு என அவன் பெயரிட்டான். (ஆதியாகமம் 4:17) ஜலப்பிரளயத்திற்கு முன்னான காலங்களில், பல்வகை தொழிற்சாலைகள் பெருகின. “வெண்கலத்தாலும், இரும்பாலும் எல்லாவிதமான கருவிகள் செய்யும்” உலைக்களங்கள் இருந்தன. (தொடக்க நூல் [ஆதியாகமம்] 4:22, பொது மொழிபெயர்ப்பு) இந்தக் கருவிகள் கட்டுமான பணிக்கும், தச்சு வேலைக்கும், தையல் வேலைக்கும், விவசாயத்திற்கும் பயன்படுத்தப்பட்டன என்பதில் சந்தேகமில்லை. இந்தத் தொழில்கள் அனைத்தும் பூமியில் வாழ்ந்த ஆரம்ப கால மனிதர்களைப் பற்றிய விவரப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளன.
ஒன்றுதிரட்டிய அவர்களுடைய அறிவு, உலோக வேலைகள், விவசாயம், கால்நடை வளர்ப்பு, எழுத்துக்கள், கலைகள் ஆகியவற்றில் அடுத்தடுத்து வந்த சந்ததியார் முன்னேறுவதை சாத்தியமாக்கியிருக்கும். உதாரணமாக யூபால், “கின்னரக்காரர் நாகசுரக்காரர் யாவருக்கும் தகப்பனானான்.” (ஆதியாகமம் 4:21) நாகரிகம் பரந்த அளவில் வளர்ச்சியுற்றது. ஆனால் அனைத்தும் திடீரென முடிவுக்கு வந்தது. என்ன சம்பவித்தது?
என்ன பிரச்சினை?
எல்லா வசதி வாய்ப்புகளும் இருந்தபோதிலும், ஜலப்பிரளயத்திற்கு முன்பிருந்த சமுதாயத்தின் ஆரம்பமே கோணலாக இருந்தது. அதன் ஸ்தாபகராகிய ஆதாம் கடவுளுக்கு எதிராக கலகம் செய்தான். முதன்முதல் நகரத்தை கட்டிய காயீன் தன்னுடைய உடன் பிறப்பையே கொலை செய்தான். தீமை படுவேகமாக பெருக ஆரம்பித்ததில் ஆச்சரியமே இல்லை! தனது சந்ததியாருக்கு ஆதாம் விட்டுச் சென்ற குறைபாடுள்ள ஆஸ்தியால் வந்த விளைவுகள் வானளாவ பெருகின.—ரோமர் 5:12.
இந்தச் சூழ்நிலை இன்னும் 120 வருடங்களுக்குத் தொடர யெகோவா அனுமதிக்கத் தீர்மானித்தபோது காரியங்கள் உச்சக்கட்டத்தை எட்டிக் கொண்டிருந்தன. (ஆதியாகமம் 6:3) பைபிள் சொல்கிறது: ‘மனுஷனுடைய அக்கிரமம் பூமியிலே பெருகினது, அவன் இருதயத்து நினைவுகளின் தோற்றமெல்லாம் நித்தமும் பொல்லாததாகவே இருந்தது. . . . பூமி கொடுமையினால் நிறைந்திருந்தது.’—ஆதியாகமம் 6:5, 11.
கடைசியில், உயிருள்ள யாவற்றையும் ஜலப்பிரளயத்தில் அழிக்கப் போவதாக நோவாவிடம் கடவுள் திட்டவட்டமாக தெரிவித்தார். (ஆதியாகமம் 6:13, 17) நோவா ‘நீதியை பிரசங்கித்தார்’ என்றாலும், பூமியிலுள்ள அனைத்தும் முடிவுக்கு வரப்போகிறது என்பதை நம்புவது மக்களுக்கு கடினமாய் இருந்ததாக தெரிகிறது. (2 பேதுரு 2:5) எட்டு பேர் மாத்திரமே எச்சரிப்பிற்கு செவிசாய்த்தார்கள், அதனால் அவர்கள் காப்பாற்றப்பட்டார்கள். (1 பேதுரு 3:20) இது இன்றைக்கு நமக்கு ஏன் முக்கியமானதாக இருக்கிறது?
நமக்கு என்ன முக்கியத்துவம் வாய்ந்தது?
நாமும் நோவா வாழ்ந்ததைப் போன்ற ஒரு காலத்தில் வாழ்கிறோம். பயங்கரவாத செயல்கள், இனப் படுகொலை பற்றிய திட்டங்கள், துப்பாக்கி ஏந்திய மனிதர்களால் காரணமின்றி மக்கள் படுகொலை செய்யப்படுதல், அதிர்ச்சியூட்டும் அளவில் வீடுகளில் வன்முறை ஆகியவற்றை பற்றிய செய்திகளே அன்றாடம் நம் காதில் விழுகின்றன. இந்தப் பூமி மீண்டும் வன்முறையால் நிறைந்திருக்கிறது, முன்பு செய்யப்பட்டது போலவே வரப்போகிற நியாயத்தீர்ப்பைப் பற்றி இப்போதும் உலகிற்கு அறிவிக்கப்படுகிறது. செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் மேய்ப்பன் பிரிக்கிறதுபோல மக்களை பிரிக்கப் போவதாக கடவுளால் நியமிக்கப்பட்ட நியாயாதிபதியாகிய இயேசுவே கூறினார். லாயக்கற்றவர்கள் “நித்திய ஆக்கினையை அடை”வார்கள் என அவர் சொன்னார். (மத்தேயு 25:31-33, 46) ஆனால் இப்பொழுதோ, லட்சக்கணக்கானோர்—ஒரே மெய் தேவனையே வணங்குகிற திரள் கூட்டத்தார்—தப்பிப்பிழைப்பார்கள் என பைபிள் சொல்கிறது. வரப்போகும் உலகில், என்றுமே இராத அளவில் சமாதானமும் பாதுகாப்பும் நிறைந்த வாழ்வை சதா காலமும் இவர்கள் அனுபவித்து மகிழ்வார்கள்.—மீகா 4:3, 4; வெளிப்படுத்துதல் 7:9-17.
உண்மையானவை என காட்டப்போகும் பைபிள் அறிக்கைகளையும் நியாயத்தீர்ப்பு நடவடிக்கை பற்றிய எச்சரிக்கைகளையும் அநேகர் ஏளனம் செய்கிறார்கள். ஆனால் இப்படிப்பட்ட சந்தேகவாதிகள் உண்மைகளுக்கு கண்களை மூடிக்கொள்கிறார்கள் என அப்போஸ்தலன் பேதுரு விளக்கினார். அவர் இவ்வாறு எழுதினார்: “கடைசி நாட்களில் பரியாசக்காரர் வந்து, . . . அவர் வருவார் என்று சொல்லுகிற வாக்குத்தத்தம் எங்கே? . . . பூர்வ காலத்தில் தேவனுடைய வார்த்தையினாலே வானங்களும், ஜலத்தினின்று தோன்றி ஜலத்தினாலே நிலைகொண்டிருக்கிற பூமியும் உண்டாயினவென்பதையும், அப்பொழுது இருந்த உலகம் ஜலப்பிரளயத்தினாலே அழிந்ததென்பதையும் மனதார அறியாமலிருக்கிறார்கள். இப்பொழுது இருக்கிற வானங்களும் பூமியும் அந்த வார்த்தையினாலேயே அக்கினிக்கு இரையாக வைக்கப்பட்டு, தேவபக்தியில்லாதவர்கள் நியாயந்தீர்க்கப்பட்டு அழிந்துபோகும் நாள் வரைக்கும் காக்கப்பட்டிருக்கிறது.”—2 பேதுரு 3:3-7.
வரப்போகும் இந்த நியாயத்தீர்ப்பு நாளைப் பற்றிய எச்சரிப்பும் அதைத் தொடர்ந்து வரப்போகும் சமாதானத்தைப் பற்றிய நற்செய்தியும், இயேசுவின் தீர்க்கதரிசன கட்டளைக்கு இசைவாக இன்று முழுமூச்சுடன் உலகெங்கும் பிரசங்கிக்கப்பட்டு வருகிறது. (மத்தேயு 24:14) இந்த எச்சரிப்பை ஏனோதானோவென எடுத்துக்கொள்ளக் கூடாது. சர்வ வல்லமை படைத்த கடவுள் தமது வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறவர்.
வரப்போகும் உலகம்
வரப்போகும் பெரிய மாற்றத்தை கருத்தில்கொள்கையில், மனிதகுலத்தின் எதிர்காலம் என்ன? இயேசு தமது பிரபல மலைப் பிரசங்கத்தின் முகவுரையில் இவ்வாறு வாக்குறுதி அளித்தார்: “சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்.” பின்பு கடவுளிடம் இவ்வாறு ஜெபிக்கும்படி தமது சீஷர்களுக்கு அவர் கற்றுக் கொடுத்தார்: “உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக.” (மத்தேயு 5:5; 6:10) ஆம், இதே பூமியில் உண்மையுள்ள மனிதருக்கு அற்புதமான எதிர்காலம் காத்திருக்கிறது என இயேசுவே போதித்தார். அதை அவர் ‘புது படைப்பு’ என குறிப்பிட்டார்.—மத்தேயு 19:28, பொ.மொ.
ஆகவே, எதிர்காலத்தைப் பற்றி நீங்கள் சிந்திக்கையில், பரிகாசக்காரர்களின் பேச்சைக் கேட்டு கடவுளுடைய எச்சரிப்பை சந்தேக கண்ணோடு பார்க்காதீர்கள். நம்மை சுற்றியுள்ள சூழ்நிலைகள் நிலையானவை போலவும், தற்போதைய இந்த உலகம் காலங்காலமாக இருந்துவருவது போலவும் தோன்றலாம். என்றபோதிலும், நாம் அதில் நம்பிக்கை வைக்கக் கூடாது. மனிதவர்க்க உலகம் கண்டனம் செய்யப்பட்டுள்ளது. ஆகவே, அப்போஸ்தலன் பேதுரு எழுதிய கடிதத்தின் முடிவுரையிலிருந்து உற்சாகம் பெறுங்கள்:
“இப்படி இவைகளெல்லாம் அழிந்து போகிறதாயிருக்கிறபடியால் நீங்கள் எப்படிப்பட்ட பரிசுத்த நடக்கையும் தேவபக்தியும் உள்ளவர்களாயிருக்க வேண்டும்! தேவனுடைய நாள் சீக்கிரமாய் வரும்படிக்கு மிகுந்த ஆவலோடே காத்திருங்கள்; . . . இவைகள் வரக் காத்திருக்கிற நீங்கள் கறையற்றவர்களும் பிழையில்லாதவர்களுமாய்ச் சமாதானத்தோடே அவர் சந்நிதியில் காணப்படும்படி ஜாக்கிரதையாயிருங்கள். நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் கிருபையிலும் அவரை அறிகிற அறிவிலும் வளருங்கள்.” (2 பேதுரு 3:11, 12, 14, 18) ஆகவே, நோவாவின் நாளில் என்ன சம்பவித்ததோ அதிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளுங்கள். கடவுளிடம் நெருங்கி வாருங்கள். இயேசு கிறிஸ்துவைப் பற்றிய அறிவில் பெருகுங்கள். தேவபக்தியை வளர்த்துக் கொள்ளுங்கள்; இந்த உலகத்தின் முடிவை தப்பிப்பிழைக்கவும் வரப்போகும் சமாதானமான உலகில் வாழவும் விரும்புகிற லட்சக்கணக்கானோர் மத்தியில் இருங்கள்.
[பக்கம் 5-ன் படம்]
ஜலப்பிரளயத்திற்கு முன்பே உலோக வேலைகள் செய்யப்பட்டன
[பக்கம் 7-ன் படம்]
மகத்தான எதிர்காலம் காத்திருக்கிறது