அதிகாரம் பதினேழு
‘இந்த அன்பைவிட மேலான அன்பு வேறு இல்லை’
1-4. (அ) மாளிகைக்கு வெளியே கூடியிருந்த கும்பல்முன் இயேசுவை பிலாத்து நிறுத்தியபோது என்ன நடக்கிறது? (ஆ) அவமானத்தையும் வேதனையையும் இயேசு எப்படி எதிர்கொள்கிறார், என்ன முக்கியமான கேள்விகள் எழுகின்றன?
அது கி.பி. 33-ஆம் வருடம், பஸ்கா பண்டிகை அதிகாலை வேளை. “இதோ! இந்த மனுஷன்!” என்று சொல்லி ரோம ஆளுநரான பொந்தியு பிலாத்து தன் மாளிகைக்கு வெளியே கோபத்தில் கொதித்துக் கொண்டிருக்கிற கும்பல் முன் இயேசுவை நிறுத்துகிறார். (யோவான் 19:5) கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட ராஜாவாக சில நாட்களுக்கு முன்புதான் எருசலேமிற்குள் இயேசு பவனி வந்தார்; அப்போது மக்கள் அனைவரும் சந்தோஷத்தில் ஆர்ப்பரித்தார்கள். ஆனால், இப்போது அதே மக்கள் அவரை ஓர் எதிரியைப் போல் பார்க்கிறார்கள்.
2 அரசர் அணிவதைப் போன்ற ஊதா நிற மேலங்கி இயேசுவுக்கு உடுத்தப்பட்டு அவர் தலையில் கிரீடம் சூட்டப்பட்டிருக்கிறது. சாட்டையடியால் இரத்தம் வடிந்து கொண்டிருக்கும் முதுகில் அணிவிக்கப்பட்ட மேலங்கியும் இரத்தம் சொட்டச் சொட்ட தலையில் சூட்டப்பட்ட முள் கிரீடமும் அவரை ராஜாவென கிண்டலடிப்பதற்காக அணிவிக்கப்பட்டிருக்கின்றன. முதன்மை குருமார்கள் உசுப்பேற்றிவிட மக்கள் எல்லாரும் காயப்பட்ட இயேசுவுக்கு எதிராக கோஷம் எழுப்புகிறார்கள். “இவனை மரக் கம்பத்தில் அறைந்து கொல்லுங்கள்! மரக் கம்பத்தில் அறைந்து கொல்லுங்கள்!” என்று ஆலய குருமார்கள் கூச்சலிடுகிறார்கள். “இவன் சாக வேண்டும்“ என கொலைவெறியுடன் மக்கள் அனைவரும் ஆர்ப்பரிக்கிறார்கள்.—யோவான் 19:1-7.
3 இந்த அவமானத்தையும் வேதனையையும் இயேசு அமைதியாக... தைரியமாக... சிறிதும் புலம்பாமல்... எதிர்கொள்கிறார்.a சாவதற்குத் தயாராக இருக்கிறார். பஸ்கா பண்டிகையின் முடிவில், சித்திரவதைக் கம்பத்தில் வேதனைமிக்க மரணத்தை மனப்பூர்வமாய் ஏற்றுக்கொள்கிறார்.—யோவான் 19:17, 18, 30.
4 தம் உயிரையே கொடுத்ததன் மூலம் சீஷர்களின் உண்மையான நண்பன் என்பதை இயேசு நிரூபித்தார். “ஒருவன் தன் நண்பர்களுக்காக உயிரைக் கொடுக்கிற அன்பைவிட மேலான அன்பு வேறு எதுவும் இல்லை” என்று அவர் சொன்னார். (யோவான் 15:13) எனவே, சில முக்கியமான கேள்விகள் எழுகின்றன. இயேசு ஏன் அந்தளவு கடும் வேதனையை அனுபவித்து சாக வேண்டியிருந்தது? அப்படிச் சாக அவர் ஏன் மனமுள்ளவராய் இருந்தார்? அவருடைய ‘நண்பர்களாக,’ சீஷர்களாக இருக்கும் நாம் எப்படி அவரைப் பின்பற்றலாம்?
இயேசு ஏன் கடும் வேதனையை அனுபவித்து சாக வேண்டியிருந்தது?
5. தாம் என்னென்ன சோதனைகளை அனுபவிப்பார் என இயேசுவுக்கு எப்படித் தெரிந்திருந்தது?
5 வாக்குப்பண்ணப்பட்ட மேசியாவாக தாம் என்னவெல்லாம் அனுபவிக்க வேண்டியிருக்கும் என்பதை இயேசு அறிந்திருந்தார். மேசியா அனுபவிக்கப்போகும் கஷ்டங்களையும் மரணத்தையும் பற்றிய நுணுக்கமான விவரங்கள் அடங்கிய தீர்க்கதரிசனங்கள் எபிரெய வேதாகமத்தில் ஏராளமாக இருப்பதை அவர் அறிந்திருந்தார். (ஏசாயா 53:3-7, 12; தானியேல் 9:26) தமக்கு சீக்கிரத்தில் வரப்போகும் சோதனைகளைக் குறித்து இயேசு பலமுறை தம் சீஷர்களிடம் சொல்லி அவர்களைத் தயார்படுத்தினார். (மாற்கு 8:31; 9:31) தமது கடைசி பஸ்காவை அனுசரிப்பதற்காக எருசலேமிற்கு இயேசு போய்க்கொண்டிருந்த சமயத்தில், “மனிதகுமாரன் முதன்மை குருமார்களிடமும் வேத அறிஞர்களிடமும் ஒப்படைக்கப்படுவார்; அவர்கள் அவருக்கு மரண தண்டனை விதித்து, மற்ற தேசத்தாரிடம் அவரை ஒப்படைத்துவிடுவார்கள். அவர்கள் அவரைக் கேலி செய்து, அவர்மேல் துப்பி, அவரை முள்சாட்டையால் அடித்து, பின்பு கொலை செய்வார்கள்” என்று அப்போஸ்தலர்களிடம் தெளிவாகச் சொன்னார். (மாற்கு 10:33, 34) இவை வெற்றுப் பேச்சு அல்ல. நாம் ஏற்கெனவே பார்த்தபடி, இயேசு கேலிகிண்டல் செய்யப்பட்டார், முகத்தில் துப்பப்பட்டார், சவுக்கால் அடிக்கப்பட்டார், கடைசியில் கொலை செய்யப்பட்டார்.
6. இயேசு ஏன் பாடுகள் அனுபவித்து சாக வேண்டியிருந்தது?
6 ஆனால், இயேசு ஏன் பல பாடுகள் அனுபவித்து சாக வேண்டியிருந்தது? அதற்கு மிக முக்கியமான காரணங்கள் பல இருந்தன. முதல் காரணம்: கடைசிவரை உண்மையாய் இருப்பதன் மூலம் இயேசு தம்முடைய உத்தமத்தை நிரூபித்து, யெகோவாவின் பெயருக்கு ஏற்பட்ட களங்கத்தை நீக்குவார். மனிதர்கள் சுயநலத்தின் காரணமாகத்தான் கடவுளை வழிபடுகிறார்கள் என சாத்தான் பொய்யாகக் குற்றம்சாட்டியது உங்களுக்கு நினைவிருக்கும். (யோபு 2:1-5) “சித்திரவதைக் கம்பத்தில் சாகும் அளவுக்கு” உண்மையுடன் இருந்ததன் மூலம் சாத்தானின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கு இயேசு முடிவான பதிலை அளித்தார். (பிலிப்பியர் 2:8; நீதிமொழிகள் 27:11) இரண்டாவது காரணம்: மேசியாவின் பாடுகளும் மரணமும் எல்லாருடைய பாவங்களுக்கும் நிவாரணம் அளிக்கும். (ஏசாயா 53:5, 10; தானியேல் 9:24) ‘பலருடைய உயிருக்கு ஈடாகத் தன்னுடைய உயிரை மீட்புவிலையாகக் கொடுத்து’ கடவுளோடு நல்லுறவை அனுபவிக்க நமக்கு வழிசெய்திருக்கிறார். (மத்தேயு 20:28) மூன்றாவது காரணம்: எல்லா விதமான துன்பங்களையும் வேதனைகளையும் அனுபவித்ததன் மூலம் இயேசு ‘நம்மைப் போல் எல்லா விதத்திலும் சோதிக்கப்பட்டார்.’ இந்த விதத்தில், ‘நம் பலவீனங்களைக் குறித்து அனுதாபப்படுகிற’ ஓர் இரக்கமுள்ள தலைமைக் குருவாக இருக்கிறார்.—எபிரெயர் 2:17, 18; 4:15.
இயேசு ஏன் உயிரைக் கொடுக்க மனமுள்ளவராய் இருந்தார்?
7. இயேசு பூமிக்கு வர எந்தளவு தியாகம் செய்தார்?
7 இயேசு என்ன தியாகம் செய்ய மனமுள்ளவராய் இருந்தார் என்பதை நன்கு புரிந்துகொள்ள இந்த உதாரணத்தைக் கவனியுங்கள்: யாராவது தன் குடும்பத்தையும் வீட்டையும் விட்டுவிட்டு வெளிநாட்டுக்குச் செல்வதற்கு, அதுவும் அந்த நாட்டில் இருக்கும் அநேகர் தன்னை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்... தன்னைக் கேவலமாகவும் கொடூரமாகவும் நடத்துவார்கள்... கடைசியில் கொலையே செய்வார்கள்... என்றெல்லாம் அறிந்த பின்பும் அந்த நாட்டிற்குச் செல்ல தயாராய் இருப்பாரா? இயேசு என்ன செய்தார் என்று இப்போது கவனியுங்கள். பூமிக்கு வருவதற்கு முன் அவர் தம் தகப்பனின் அருகில் ஓர் முக்கியமான பதவியில் இருந்தார். என்றாலும், தம் பரலோக குடியிருப்பை மனப்பூர்வமாய் விட்டுவிட்டு ஒரு மனிதனாக பூமிக்கு வந்தார். பெரும்பாலான மக்கள் தம்மை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்... இழிவுபடுத்துவார்கள்... கொடூரமாக நடத்துவார்கள்... கடைசியில் கொலையே செய்வார்கள்... என்றெல்லாம் அறிந்த பின்பும் அவர் பூமிக்கு வந்தார். (பிலிப்பியர் 2:5-7) இந்தளவு தியாகம் செய்ய இயேசுவை எது தூண்டியது?
8, 9. உயிரையே கொடுக்க இயேசுவை எது உந்துவித்தது?
8 மிக முக்கியமாக, இயேசுவுக்குத் தம் தகப்பன்மீது இருந்த ஆழ்ந்த அன்புதான் தியாகம் செய்ய அவரைத் தூண்டியது; எல்லாவற்றையும் சகிக்க அவருக்கு உதவியது; தம் தகப்பனுடைய நற்பெயருக்கு எந்தப் பங்கமும் வந்துவிடக்கூடாது என்பதில் அக்கறையாய் இருக்க அவரை உந்துவித்தது. (மத்தேயு 6:9; யோவான் 17:1-6, 26) எல்லாவற்றையும்விட, தம் தகப்பனுடைய பெயர்மீது குவிக்கப்பட்ட எல்லா களங்கத்தையும் துடைத்தழிக்க இயேசு விரும்பினார். நீதிக்காக துன்பப்படுவதை இயேசு மிகப் பெரிய கௌவுரவமாகவும் பாக்கியமாகவும் கருதினார்; ஏனென்றால், தாம் உத்தமமாய் இருப்பது தம் தகப்பனின் மகத்தான பெயரைப் பரிசுத்தப்படுத்தும் என்று அவர் அறிந்திருந்தார்.—1 நாளாகமம் 29:13.
9 தம் உயிரையே அர்ப்பணிக்க இயேசுவுக்கு மற்றொரு காரணமும் இருந்தது—மனிதர்கள்மீது அவர் வைத்திருந்த அன்பே அது. இன்றல்ல நேற்றல்ல, மனிதர்கள் படைக்கப்பட்ட காலத்திலிருந்தே இந்த அன்பு அவருக்குள் வேர்விட்டிருந்தது. பூமிக்கு வருவதற்கு வெகு காலத்திற்கு முன்பே “நான் மனுஷர்கள்மேல் கொள்ளைப் பிரியம் வைத்திருந்தேன்” என்று அவரைக் குறித்து பைபிள் சொல்கிறது. (நீதிமொழிகள் 8:30, 31) மக்களை இயேசு நேசித்தார் என்பது அவர் பூமியில் இருந்தபோது தெளிவாகத் தெரிந்தது. முந்திய மூன்று அதிகாரங்களில் பார்த்தபடி எல்லா மனிதர்கள்மீது, குறிப்பாக தம் சீஷர்கள்மீது, பல வழிகளில் அவர் அன்பு காட்டினார். கி.பி. 33-ஆம் வருடம் நிசான் 14-ஆம் தேதியன்று நமக்காக தம் உயிரையே மனமுவந்து கொடுத்தார். (யோவான் 10:11) அவர் நம்மீது வைத்திருக்கும் அன்பை வெளிப்படுத்த இதைவிட சிறந்த வழி வேறு இருக்கவே முடியாது. இயேசு காட்டிய இத்தகைய அன்பை நாமும் பிரதிபலிக்க வேண்டுமா? ஆம். சொல்லப்போனால், இத்தகைய அன்பைக் காட்டும்படி நமக்கு கட்டளையிடப்பட்டிருக்கிறது.
‘என்னைப் போலவே நீங்களும் ஒருவர்மீது ஒருவர் அன்பு காட்டுங்கள்’
10, 11. இயேசு தம் சீஷர்களுக்குக் கொடுத்த புதிய கட்டளை என்ன, அதில் என்ன உட்பட்டிருக்கிறது, அதற்குக் கீழ்ப்படிவது ஏன் முக்கியம்?
10 சாவதற்கு முந்தின இரவன்று இயேசு தமது நெருங்கிய சீஷர்களிடம் இவ்வாறு கூறினார்: “நீங்கள் ஒருவர்மேல் ஒருவர் அன்பு காட்டுங்கள். நான் உங்கள்மேல் அன்பு காட்டியது போலவே நீங்களும் ஒருவர்மேல் ஒருவர் அன்பு காட்ட வேண்டுமென்ற புதிய கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன். நீங்கள் ஒருவர்மேல் ஒருவர் அன்பு காட்டினால், நீங்கள் என்னுடைய சீஷர்கள் என்று எல்லாரும் தெரிந்துகொள்வார்கள்.” (யோவான் 13:34, 35) “ஒருவர்மேல் ஒருவர் அன்பு காட்டுங்கள்”—இது ஏன் “புதிய கட்டளை”? “உங்கள்மேல் நீங்கள் அன்பு காட்டுவது போல மற்றவர்கள்மேலும் அன்பு காட்ட வேண்டும்” என்று திருச்சட்டம்தான் ஏற்கெனவே கட்டளையிட்டிருந்ததே. (லேவியராகமம் 19:18) ஆனால், புதிய கட்டளை இதைவிட மகத்தான அன்பை காட்டும்படி நமக்குச் சொல்கிறது, அதாவது பிறருக்காக நம்முடைய உயிரையே கொடுக்கும்படி உந்துவிக்கிறது. இதை இயேசு இன்னும் தெளிவாகச் சொல்கிறார்: “நான் உங்கள்மேல் அன்பு காட்டியதுபோல் நீங்களும் ஒருவர்மேல் ஒருவர் அன்பு காட்ட வேண்டும் என்பதுதான் என் கட்டளை. ஒருவன் தன் நண்பர்களுக்காக உயிரைக் கொடுக்கிற அன்பைவிட மேலான அன்பு வேறு எதுவும் இல்லை.” (யோவான் 15:12, 13) இந்தப் புதிய கட்டளையை இப்படிச் சொல்லலாம்: “உங்கள்மேல் நீங்கள் அன்பு காட்டுவது போல் மட்டுமல்ல, உங்களைவிட அதிகமாகவே மற்றவர்கள்மேல் அன்பு காட்ட வேண்டும்.” தம் வாழ்விலும் சாவிலும் இயேசு இத்தகைய அன்பைக் காட்டினார்.
11 இந்தப் புதிய கட்டளைக்கு நாம் கீழ்ப்படிவது ஏன் முக்கியம்? ‘நீங்கள் அப்படிப்பட்ட அன்பை [சுயதியாக அன்பை] . . . காட்டினால், நீங்கள் என்னுடைய சீஷர்கள் என்று எல்லாரும் தெரிந்துகொள்வார்கள்’ என இயேசு சொன்னதை நினைவுபடுத்தி பாருங்கள். ஆம், சுயதியாக அன்பே நம்மை உண்மைக் கிறிஸ்தவர்கள் என அடையாளம் காட்டுகிறது. இந்த அன்பை ஓர் அடையாள அட்டைக்கு ஒப்பிடலாம். யெகோவாவின் சாட்சிகளுடைய மண்டல மாநாட்டில் கலந்துகொள்பவர்கள் அடையாள அட்டையை அணிந்திருப்பார்கள். ஒருவரை அடையாளம் காண, அதாவது அவருடைய பெயரையும் சபையின் பெயரையும் தெரிந்துகொள்ள, அந்த அட்டை உதவுகிறது. அதுபோலவே ஒருவர்மீது ஒருவர் காட்டும் சுயதியாக அன்பு உண்மைக் கிறிஸ்தவர்களைக் கண்டுகொள்ள உதவும் “அடையாள அட்டையாக” இருக்கிறது. வேறு வார்த்தைகளில் சொன்னால், ஒருவர் அணிந்திருக்கும் அடையாள அட்டையைப் பார்த்து அவர் யாரென தெரிந்துகொள்வது போல் பிறர்மீது நாம் காட்டும் அன்பைப் பார்த்து நம்மை உண்மைக் கிறிஸ்தவர்கள் என மற்றவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும். எனவே, நம்மை நாமே இவ்வாறு கேட்டுக்கொள்ள வேண்டும்: ‘சுயதியாக அன்பெனும் “அடையாள அட்டையை” நான் அணிந்திருப்பதை எல்லாராலும் பார்க்க முடிகிறதா?’
சுயதியாக அன்பு என்றால் என்ன?
12, 13. (அ) மற்றவர்கள்மீது நமக்கு அன்பு இருப்பதைக் காட்ட நாம் எந்தளவுக்குத் தியாகம் செய்ய தயாராய் இருக்க வேண்டும்? (ஆ) சுயதியாகம் என்றால் என்ன?
12 இயேசுவைப் பின்பற்றுகிற நாம், அவர் நம்மை நேசித்ததைப் போலவே நாமும் ஒருவரை ஒருவர் நேசிக்க வேண்டும். அப்படியென்றால், சக விசுவாசிகளுக்காகத் தியாகம் செய்ய நாம் மனமுள்ளவர்களாய் இருக்க வேண்டும். எந்தளவு தியாகம் செய்ய மனமுள்ளவர்களாய் இருக்க வேண்டும்? “அவர் நமக்காகத் தன்னுடைய உயிரைக் கொடுத்ததால் அன்பு என்றால் என்ன என்பதை நாம் தெரிந்துகொண்டோம்; நாமும் நம் சகோதரர்களுக்காக நம்முடைய உயிரைக் கொடுக்கக் கடமைப்பட்டிருக்கிறோம்” என்று பைபிள் சொல்கிறது. (1 யோவான் 3:16) இயேசுவைப் போலவே நாமும் ஒருவருக்காக ஒருவர் உயிரையே கொடுக்க மனமுள்ளவர்களாய் இருக்க வேண்டும். துன்புறுத்தலின்போது நம்முடைய சகோதரர்களைக் காட்டிக்கொடுத்து அவர்களுடைய உயிருக்கு ஆபத்து விளைவிப்பதற்குப் பதிலாக நம்முடைய உயிரையே தியாகம் செய்வோம். இனக் கலவரத்தால் அல்லது இனப் பாகுபாட்டால் பிளவுபட்டிருக்கும் நாடுகளில், நம்முடைய சகோதரர்களைப் பாதுகாக்க—அவர்கள் எந்த இனத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி—அவர்களுக்காக நம்முடைய உயிரையே பணயம் வைப்போம். தேசங்கள் போர்களில் ஈடுபடும்போது, நம்முடைய சகோதரர்களுக்கு எதிராகவோ வேறு எவருக்கும் எதிராகவோ சண்டை போடுவதற்குப் பதிலாக சிறைச்சாலைக்குச் செல்லவும், ஏன், சாகவும்கூட தயாராய் இருப்போம்.—யோவான் 17:14, 16; 1 யோவான் 3:10-12.
13 நம் சகோதரர்களுக்காக உயிரைக் கொடுப்பதுதான் சுயதியாக அன்பைக் காட்டுவதற்கு ஒரே வழி அல்ல. சொல்லப்போனால், நம்மில் சிலருக்குத்தான் அப்படிப்பட்ட தியாகத்தைச் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. ஆனால், நம்முடைய சகோதரர்களுக்காக உயிரையே கொடுக்குமளவுக்கு அவர்கள்மீது நமக்கு அன்பு இருந்தால், இப்போதே சின்ன சின்ன தியாகங்களைச் செய்ய, நம்மால் முடிந்ததைவிட ஒருபடி மேலே சென்று உதவி செய்ய நாம் மனமுள்ளவர்களாய் இருப்போம் அல்லவா? சுயதியாக அன்பைக் காட்டுவதென்றால் மற்றவர்களுடைய நன்மைக்காக நம்முடைய சவுகரியங்களை விட்டுக்கொடுப்பதாகும். அப்படிச் செய்வது நமக்குக் கஷ்டமாக இருந்தாலும் நம்முடைய நலனைவிட அவர்களுடைய நலனுக்கு நாம் முதலிடம் கொடுப்போம். (1 கொரிந்தியர் 10:24) சுயதியாக அன்பை நாம் எந்தெந்த வழிகளில் காட்டலாம்?
சபையிலும் குடும்பத்திலும்
14. (அ) மூப்பர்கள் என்னென்ன தியாகங்களைச் செய்ய வேண்டியிருக்கிறது? (ஆ) உங்கள் சபையில் கடினமாக உழைக்கும் மூப்பர்களைக் குறித்து நீங்கள் எப்படி உணருகிறீர்கள்?
14 ‘மந்தையை மேய்ப்பதற்காக’ மூப்பர்கள் பல தியாகங்களைச் செய்கிறார்கள். (1 பேதுரு 5:2, 3) மூப்பர்கள் தங்கள் குடும்பத்தைக் கவனிப்பதோடு சபை காரியங்களைக் கவனிப்பதற்கு, அதாவது கூட்டங்களுக்குத் தயார் செய்வதற்கு, மேய்ப்பு சந்திப்பு செய்வதற்கு, நீதி விசாரணை நடத்துவதற்கு மாலை வேளைகளில் அல்லது வார இறுதி நாட்களில் நேரம் செலவழிக்க வேண்டியிருக்கலாம். அநேக மூப்பர்கள் இன்னும் பல தியாகங்களைச் செய்கிறார்கள். உதாரணத்திற்கு, மாநாடுகளை ஏற்பாடு செய்ய கடினமாக உழைக்கிறார்கள்; மருத்துவமனை தொடர்பு ஆலோசனைக் குழு, நோயாளி சந்திப்பு குழு போன்ற குழுக்களில் சேவை செய்கிறார்கள். வேறு சிலர், உள்ளூர் வடிவமைப்பு/கட்டுமான வாலண்டியர்களாக சேவை செய்கிறார்கள். மூப்பர்களே, மந்தையைக் கவனிப்பதற்காக உங்களுடைய நேரத்தை, சக்தியை, வளத்தை எல்லாம் மனப்பூர்வமாய் செலவு செய்யும்போது நீங்கள் சுயதியாக அன்பைக் காட்டுகிறீர்கள் என்பதை மறந்துவிடாதீர்கள். (2 கொரிந்தியர் 12:15) உங்களுடைய சுயநலமற்ற முயற்சிகளை யெகோவா மட்டுமல்ல உங்கள் சபையாரும் மனதார பாராட்டுகிறார்கள்.—பிலிப்பியர் 2:29; எபிரெயர் 6:10.
15. (அ) மூப்பர்களின் மனைவிகள் செய்யும் தியாகங்களில் சில யாவை? (ஆ) உங்கள் சபையில் மூப்பர்களுக்குப் பக்கபலமாக இருக்கும் அவர்களுடைய மனைவிகளைக் குறித்து நீங்கள் எப்படி உணருகிறீர்கள்?
15 மூப்பர்களின் மனைவிகளைப் பற்றி என்ன சொல்லலாம்? தங்கள் கணவர்களுக்குப் பக்கபலமாக இருக்கும் இந்தச் சகோதரிகளும் தியாகங்களைச் செய்வதனால்தானே மூப்பர்களால் மந்தையைக் கவனித்துக்கொள்ள முடிகிறது! குடும்பத்தோடு செலவிடக்கூடிய நேரத்தைச் சபை காரியங்களுக்காக கணவர்கள் செலவிடும்போது, உண்மையில் மனைவிகள் தியாகம் செய்கிறார்கள். வட்டாரக் கண்காணிகளின் மனைவிகளும் தங்கள் கணவர்களோடு சேர்ந்து சபை சபையாக... வட்டாரம் வட்டாரமாக... பயணிக்கையில் அவர்கள் செய்யும் தியாகங்களையும் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். அவர்களுக்கென்று வீடு கிடையாது, ஒவ்வொரு வாரமும் அவர்கள் வெவ்வேறு இடங்களில் தூங்க வேண்டியிருக்கிறது. சபையாரின் நலனுக்காக தங்கள் சொந்த சவுகரியங்களை விட்டுக்கொடுக்கும் அந்த மனைவிகளின் சுயதியாக அன்பு பாராட்டுக்குரியது.—பிலிப்பியர் 2:3, 4.
16. கிறிஸ்தவ பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்காக என்ன தியாகங்களைச் செய்கிறார்கள்?
16 குடும்பத்தில் நாம் எப்படிச் சுயதியாக அன்பைக் காட்டலாம்? பெற்றோரே, உங்கள் பிள்ளைகளைக் கவனித்துக்கொள்ளவும் ‘யெகோவா சொல்கிற விதத்தில் அவர்களைக் கண்டித்து, அவர் தருகிற புத்திமதியின்படி வளர்க்கவும்’ நீங்கள் நிறைய தியாகங்கள் செய்கிறீர்கள். (எபேசியர் 6:4) அவர்களுக்கு உணவு, உடை, உறைவிடம் அளிக்கவே நீங்கள் நீண்ட நேரம் உடலை வருத்தி உழைக்க வேண்டியிருக்கலாம். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்ய உங்களுடைய தேவைகளைக்கூட தியாகம் செய்கிறீர்கள். பிள்ளைகளோடு சேர்ந்து படிப்பதற்காகவும், அவர்களைக் கூட்டங்களுக்கு அழைத்துச் செல்வதற்காகவும், அவர்களோடு சேர்ந்து ஊழியம் செய்வதற்காகவும் நீங்கள் பெரும் முயற்சி செய்கிறீர்கள். (உபாகமம் 6:6, 7) உங்கள் சுயதியாகம் குடும்ப ஏற்பாட்டை உருவாக்கிய யெகோவா தேவனை சந்தோஷப்படுத்துகிறது; அதுமட்டுமல்ல, உங்கள் பிள்ளைகளை முடிவில்லா வாழ்வுக்கும் வழிநடத்துகிறது.—நீதிமொழிகள் 22:6; எபேசியர் 3:14, 15.
17. கிறிஸ்தவ கணவர்கள் எப்படி இயேசுவைப் போல் சுயநலமின்றி நடந்துகொள்ளலாம்?
17 கணவர்களே, சுயதியாக அன்பைக் காட்டுவதில் நீங்கள் எப்படி இயேசுவின் முன்மாதிரியைப் பின்பற்றலாம்? இதற்கு பைபிள் இவ்வாறு பதிலளிக்கிறது: “கணவர்களே, சபைக்காகக் கிறிஸ்து தன்னையே கொடுத்து அதன்மீது அன்பு காட்டியதுபோல் நீங்களும் உங்கள் மனைவிமீது தொடர்ந்து அன்பு காட்டுங்கள்.” (எபேசியர் 5:25) நாம் ஏற்கெனவே பார்த்தபடி, இயேசு தம் சீஷர்களை நெஞ்சார நேசித்ததால் அவர்களுக்காக உயிரையே கொடுத்தார். ‘தனக்குப் பிரியமாக நடந்துகொள்ளாத’ இயேசுவைப் பின்பற்றுகிற ஒரு கிறிஸ்தவ கணவர் சுயநலமின்றி நடந்துகொள்கிறார். (ரோமர் 15:3) அவர் தன்னுடைய தேவைகளையும் விருப்பங்களையும்விட தன் மனைவியுடைய தேவைகளுக்கும் விருப்பங்களுக்குமே முதலிடம் கொடுக்கிறார். ‘நான் வைத்ததுதான் சட்டம்’ என்று அதிகாரம் செய்யமாட்டார்; ஆனால், பைபிளுக்கு விரோதமாக இல்லாதவரை தன் மனைவியின் விருப்பத்திற்கு இடங்கொடுக்கிறார். சுயதியாக அன்பைக் காட்டும் கணவர் யெகோவாவின் அங்கீகாரத்தைப் பெறுகிறார்; மனைவி மக்களின் அன்பையும் மரியாதையையும் சம்பாதிக்கிறார்.
நீங்கள் என்ன செய்வீர்கள்?
18. ஒருவர்மீது ஒருவர் அன்பு காட்ட வேண்டும் என்ற புதிய கட்டளைக்குக் கீழ்ப்படிய எது நம்மை உந்துவிக்கிறது?
18 ஒருவர்மீது ஒருவர் அன்பு காட்ட வேண்டும் என்ற புதிய கட்டளைக்குக் கீழ்ப்படிவது எளிதல்ல, என்றாலும் அதற்குக் கீழ்ப்படிய நமக்கு பலமான தூண்டுதல் இருக்கிறது. “கிறிஸ்துவின் அன்பு எங்களைத் தூண்டியெழுப்புகிறது. ஏனென்றால், எல்லாருக்காகவும் அவர் ஒருவரே இறந்தார். சொல்லப்போனால், எல்லாரும் இறந்த நிலையில் இருந்தார்கள். அவர் எல்லாருக்காகவும் இறந்திருப்பதால், வாழ்கிறவர்கள் இனி தங்களுக்காக வாழாமல் தங்களுக்காக இறந்து உயிரோடு எழுப்பப்பட்டவருக்காகவே வாழ வேண்டும் என்பதை உணர்ந்திருக்கிறோம்” என்று பவுல் எழுதினார். (2 கொரிந்தியர் 5:14, 15) இயேசு நமக்காக இறந்திருப்பதால், நாமும் அவருக்காக வாழ வேண்டுமென்ற உந்துதல் நமக்கு இருக்க வேண்டுமல்லவா? அவரைப் போலவே சுயதியாக அன்பைக் காட்டுவதன் மூலம் நாம் அவருக்காக வாழ முடியும்.
19, 20. யெகோவா நமக்குக் கொடுத்திருக்கும் விலைமதிக்க முடியாத பரிசு என்ன, அதை நாம் ஏற்றுக்கொள்கிறோம் என்பதை எப்படிக் காட்டலாம்?
19 “ஒருவன் தன் நண்பர்களுக்காக உயிரைக் கொடுக்கிற அன்பைவிட மேலான அன்பு வேறு எதுவும் இல்லை” என்று இயேசு சொன்னபோது அவர் எதையும் மிகைப்படுத்திக் கூறவில்லை. (யோவான் 15:13) நமக்காக தம்முடைய உயிரையே கொடுக்க முன்வந்தது அவர் நம்மீது வைத்திருக்கும் அன்புக்குப் பலமான அத்தாட்சி. என்றாலும், அதைவிட மேலான அன்பை ஒருவர் காட்டியிருக்கிறார். “கடவுள் தன்னுடைய ஒரே மகன்மேல் விசுவாசம் வைக்கிற யாரும் அழிந்துபோகாமல் முடிவில்லாத வாழ்வைப் பெற வேண்டும் என்பதற்காக அவரைத் தந்து, இந்தளவுக்கு உலகத்தின் மேல் அன்பு காட்டினார்” என்று இயேசு சொன்னார். (யோவான் 3:16) கடவுள் நம்மீது அளவுகடந்த அன்பு வைத்திருப்பதால் தம்முடைய மகனையே நமக்காக மீட்புவிலையாய் கொடுத்திருக்கிறார்; இதன் மூலமாக நாம் பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் விடுபட வாய்ப்பளித்திருக்கிறார். (எபேசியர் 1:7) மீட்புவிலை யெகோவா நமக்கு அளித்திருக்கிற விலைமதிக்க முடியாத பரிசு, ஆனால் அதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் நம்மை கட்டாயப்படுத்துவதில்லை.
20 யெகோவா அளிக்கும் பரிசை ஏற்றுக்கொள்வதும் மறுப்பதும் நம் சொந்த தீர்மானம். ஆனால், அதை ஏற்றுக்கொள்ள விரும்பினால் அதற்காக நாம் என்ன செய்ய வேண்டும்? கடவுளுடைய மகன்மீது ‘விசுவாசம் வைக்க’ வேண்டும். நமக்கு விசுவாசம் இருக்கிறதென்று சொன்னால் மட்டும் போதாது; நம் செயல்களில், நாம் வாழும் விதத்தில், அதைக் காட்ட வேண்டும். (யாக்கோபு 2:26) ஒவ்வொரு நாளும் இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுவதன் மூலம் நமக்கு அவர்மீது விசுவாசம் இருப்பதை நிரூபிக்கிறோம். இப்படிச் செய்வது இன்றும் என்றும் அளவில்லா ஆசீர்வாதங்களை அள்ளித்தரும். இதையே இப்புத்தகத்தின் கடைசி அதிகாரத்தில் நாம் பார்ப்போம்.
a முதலில் மதத் தலைவர்களும் பின்பு ரோம படை வீரர்களும், அன்று இருமுறை இயேசுமீது துப்பினார்கள். (மத்தேயு 26:59-68; 27:27-30) அவர்கள் இந்தளவு கேவலமாக நடத்தியபோதிலும் இயேசு கொஞ்சமும் முணுமுணுக்கவில்லை; “என்னைக் கேவலப்படுத்தி என்மேல் காறித் துப்பியவர்களுக்கு என் முகத்தை மறைக்கவில்லை” என அவரைப் பற்றி சொல்லப்பட்ட தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றினார்.—ஏசாயா 50:6.