தேவ சமாதான தூதுவர்களாக சேவித்தல்
‘சமாதானத்தை . . . அறிவி[க்கிறவ]னுடைய பாதங்கள் மலைகளின்மேல் எவ்வளவு அழகாயிருக்கின்றன.’—ஏசாயா 52:7.
1, 2. (அ) ஏசாயா 52:7-ல் முன்னறிவிக்கப்பட்டுள்ளபடி, அறிவிக்கப்பட வேண்டிய நற்செய்தி என்ன? (ஆ) பூர்வ இஸ்ரவேலருடைய விஷயத்தில் ஏசாயாவின் தீர்க்கதரிசன வார்த்தைகள் எதை அர்த்தப்படுத்தின?
அறிவிக்கப்பட வேண்டிய நற்செய்தி இருக்கிறது! அது சமாதானத்தைப் பற்றிய—உண்மையான சமாதானத்தைப் பற்றிய—செய்தி. அது கடவுளுடைய ராஜ்யத்துடன் தொடர்புடைய இரட்சிப்பின் செய்தி. வெகு காலங்களுக்கு முன்பு தீர்க்கதரிசியாகிய ஏசாயா அதைப் பற்றி எழுதினார்; அவருடைய வார்த்தைகள் ஏசாயா 52:7-ல் நமக்காக பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன; அதில் நாம் இவ்வாறு வாசிக்கிறோம்: “சமாதானத்தைக் கூறி, நற்காரியங்களைச் சுவிசேஷமாய் அறிவித்து, இரட்சிப்பைப் பிரசித்தப்படுத்தி: உன் தேவன் ராஜரிகம் பண்ணுகிறாரென்று [“ராஜாவாகியிருக்கிறாரென்று,” NW] சீயோனுக்குச் சொல்லுகிற சுவிசேஷகனுடைய பாதங்கள் மலைகளின்மேல் எவ்வளவு அழகாயிருக்கின்றன”!
2 யெகோவா, பூர்வ இஸ்ரவேலருடைய நன்மைக்காகவும் இன்று நம்முடைய நன்மைக்காகவும் அதை எழுதிவைக்கும்படி தம்முடைய தீர்க்கதரிசியாகிய ஏசாயாவை ஏவினார். அது எதை அர்த்தப்படுத்துகிறது? அந்த வார்த்தைகளை ஏசாயா எழுதிய சமயத்தில், இஸ்ரவேலின் வடக்கு ராஜ்யத்தினர், ஏற்கெனவே அசீரியர்களால் நாடுகடத்திச் செல்லப்பட்டிருக்கலாம். பின்பு, தெற்கு ராஜ்யமாகிய யூதாவின் குடிகள், பாபிலோனுக்கு நாடுகடத்திக் கொண்டுசெல்லப்படுவார்கள். அந்த நாட்கள், தேசத்தில் இருந்தவர்களுக்கு மனவேதனை உண்டாக்குவதாயும் கலக்கம் உண்டாக்குவதாயும் இருந்தன, ஏனெனில் அந்த மக்கள் யெகோவாவுக்குக் கீழ்ப்படியாதவர்களாய் இருந்தார்கள்; இதனால் கடவுளுடன் சமாதான உறவில் இல்லை. யெகோவா அவர்களுக்குச் சொல்லியிருந்தபடியே, அவர்களுடைய பாவமுள்ள நடத்தை அவர்களுக்கும் கடவுளுக்கும் இடையில் ஒரு பிரிவினையை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. (ஏசாயா 42:24; 59:2-4) எனினும், தகுந்த சமயத்தில் பாபிலோனின் கதவுகள் எவ்வித தடங்கலின்றி திறக்கும் என்பதாக ஏசாயா மூலம் யெகோவா முன்னறிவித்தார். கடவுளுடைய மக்கள் தங்களுடைய தாயகத்திற்குத் திரும்பிச் சென்று, யெகோவாவின் ஆலயத்தை திரும்பவும் கட்டுவதற்கு விடுவிக்கப்படுவார்கள். சீயோன் திரும்ப நிலைநாட்டப்படும், உண்மையான கடவுளுடைய வணக்கம் மீண்டும் எருசலேமில் நடைபெறும்.—ஏசாயா 44:28; 52:1, 2.
3. இஸ்ரவேலருக்கு கொடுக்கப்பட்ட திரும்ப நிலைநாட்டப்படும் வாக்குறுதி, எவ்வாறு சமாதானத்தின் தீர்க்கதரிசனமாகவும் இருந்தது?
3 மீட்பிற்குரிய இந்த வாக்குறுதி, சமாதானத்தின் ஒரு தீர்க்கதரிசனமாகவும் இருந்தது. யெகோவா இஸ்ரவேலருக்குக் கொடுத்திருந்த தேசத்தில் அவர்கள் திரும்ப நிலைநாட்டப்படுவது, கடவுளுடைய இரக்கம் மற்றும் அவர்களுடைய மனந்திரும்புதலுக்கு அத்தாட்சியாக இருக்கும். அவர்கள் கடவுளுடன் சமாதானமாகிவிட்டார்கள் என்பதை அது குறிக்கும்.—ஏசாயா 14:1; 48:17, 18.
‘உன் தேவன் ராஜாவாகியிருக்கிறார்!’
4. (அ) பொ.ச.மு. 537-ல் ‘யெகோவா ராஜாவாகியிருக்கிறார்’ என்று என்ன அர்த்தத்தில் சொல்லப்படலாம்? (ஆ) பிற்பட்ட ஆண்டுகளில் யெகோவா தம்முடைய மக்களின் நன்மைக்காக எவ்வாறு காரியங்களை வழிநடத்தினார்?
4 பொ.ச.மு. 537-ல் யெகோவா இந்த மீட்பைக் கொண்டுவந்தபோது, ‘உன் தேவன் ராஜாவாகியிருக்கிறார்!’ என்ற இந்த அறிவிப்பை சீயோனுக்கு சொல்லுவது பொருத்தமாகவே இருந்திருக்கக்கூடும். யெகோவா “நித்தியத்தின் ராஜா” என்பது உண்மைதான். (வெளிப்படுத்துதல் 15:3, NW) ஆனால் தம்முடைய மக்களுக்குச் செய்த இந்த மீட்பு, அவருடைய அரசதிகாரத்தின் மற்றொரு வெளிக்காட்டாக இருந்தது. அது, உள்ளத்தைக் கொள்ளைகொள்ளும் ஒரு முறையில், அந்த நாள் வரையாக மிகவும் வலிமைமிக்கதாய் இருந்த மனித பேரரசின்மீது அவருடைய வல்லமையின் மிக உன்னதத்தன்மையை வெளிக்காட்டியது. (எரேமியா 51:56, 57) யெகோவாவினுடைய ஆவியின் செயல்பாட்டின் விளைவாக, அவருடைய மக்களுக்கு எதிராக செய்யப்பட்ட வேறு சதிகள் முறியடிக்கப்பட்டன. (எஸ்தர் 9:24, 25) மீண்டும் மீண்டுமாக, யெகோவா தம்முடைய பேரரசருக்குரிய சொந்த சித்தத்தை நிறைவேற்றுவதற்கு மேதிய-பெர்சிய ராஜாக்களை ஒத்துழைக்கும்படி செய்ய பல்வேறு முறைகளில் குறுக்கிட்டார். (சகரியா 4:6) அந்நாட்களில் நிகழ்ந்த அற்புதகரமான சம்பவங்கள், எஸ்றா, நெகெமியா, எஸ்தர், ஆகாய், சகரியா ஆகிய பைபிள் புத்தகங்களில் நமக்காக பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன. அவற்றை மறுபார்வை செய்வது நம்முடைய விசுவாசத்தை எவ்வளவாய் பலப்படுத்துகிறது!
5. ஏசாயா 52:13–53:12-ல் என்ன குறிப்பிடத்தக்க சம்பவங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன?
5 இருந்தபோதிலும், பொ.ச.மு. 537-லும் அதற்குப் பின்பும் சம்பவித்தது வெறும் ஒரு ஆரம்பமாகத்தான் இருந்தது. 52-ம் அதிகாரத்தில் சொல்லப்பட்டுள்ள திரும்பவும் நிலைநாட்டப்படும் தீர்க்கதரிசனத்தை தொடர்ந்தாற்போலவே, மேசியாவின் வருகையைப் பற்றி ஏசாயா எழுதினார். (ஏசாயா 52:13–53:12) பொ.ச.மு. 537-ல் சம்பவித்ததைவிட இன்னும் அதிக முக்கியத்துவமுடைய மீட்பின் செய்தியையும் சமாதானத்தின் செய்தியையும், இயேசு கிறிஸ்துவாக நிரூபித்த மேசியாவின் மூலம் யெகோவா அளிப்பார்.
யெகோவாவின் மிகப் பெரிய சமாதான தூதுவர்
6. யெகோவாவின் மிகப் பெரிய சமாதான தூதுவர் யார், என்ன வேலையை அவர் தமக்குப் பொருத்திக் காண்பித்தார்?
6 இயேசு கிறிஸ்துவே யெகோவாவின் மிகப் பெரிய சமாதான தூதுவர். அவரே கடவுளுடைய வார்த்தை, யெகோவாவினுடைய சொந்த தனிப்பட்ட சார்புப் பேச்சாளர். (யோவான் 1:14) இதற்கு இசைவாக, யோர்தான் நதியில் முழுக்காட்டுதல் பெற்ற சிலகாலங்களுக்குப் பிறகு, இயேசு நாசரேத்திலுள்ள ஜெபாலயத்தில் எழுந்து நின்று, தம்முடைய வேலையைப் பற்றி ஏசாயா 61-ம் அதிகாரத்திலிருந்து சத்தமாய் வாசித்தார். அவர் பிரசங்கிப்பதற்கு அனுப்பப்பட்டிருந்த காரியத்தில் ‘விடுதலையும்,’ ‘குணப்படுத்துதலும்,’ அதோடு யெகோவா அவரை ஏற்றுக்கொள்வதற்கான வாய்ப்பை கண்டடைவதும் உட்பட்டிருந்தது என்பதை அந்த வேலை தெளிவாக்கியது. என்றபோதிலும், சமாதானத்தின் செய்தியை அறிவிப்பதைக் காட்டிலும் இன்னும் அதிகத்தை இயேசு செய்தார். நிரந்தர சமாதானத்திற்கான ஆதாரத்தை அளிப்பதற்கும்கூட கடவுள் அவரை அனுப்பியிருந்தார்.—லூக்கா 4:16-21.
7. இயேசு கிறிஸ்துவின் மூலம் சாத்தியமாக்கப்பட்டிருக்கிற, கடவுளுடன் கொள்ளும் சமாதான உறவிலிருந்து வரும் பலன்கள் யாவை?
7 இயேசுவினுடைய பிறப்பின் சமயத்தில், தேவதூதர்கள் பெத்லகேமுக்கு அருகில் இருந்த மேய்ப்பர்களுக்குத் தோன்றி, கடவுளைத் துதித்து சொன்னதாவது: “உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே நற்பிரியமுள்ள மனுஷர் மத்தியில் சமாதானமும் உண்டாவதாக.” (லூக்கா 2:8, 13, 14, NW) ஆம், நற்பிரியத்தை கடவுள் யாருக்கு காண்பித்தாரோ அவர்கள்மீது சமாதானம் இருக்கும், ஏனெனில் தம்முடைய குமாரனின் மூலம் அவர் செய்துகொண்டிருந்த ஏற்பாட்டில் அவர்கள் விசுவாசம் வைத்தார்கள். அது எதை அர்த்தப்படுத்தும்? மனிதர்கள் பாவத்தில் பிறந்தவர்களாக இருந்தபோதிலும், கடவுளுடன் ஒரு சுத்தமான நிலைநிற்கையை, அவருடன் அங்கீகரிக்கப்பட்ட ஒரு உறவை அடைய முடியும். (ரோமர் 5:1) வேறு எந்த வழியிலும் சாத்தியமாகாத மன அமைதியை, சமாதானத்தை அவர்கள் அனுபவித்து மகிழ முடியும். கடவுளுடைய குறிக்கப்பட்ட காலத்தில், வியாதியும் மரணமும் உட்பட, ஆதாமிலிருந்து சுதந்தரிக்கப்பட்ட பாவத்தின் எல்லா விளைவுகளிலிருந்தும் ஒரு விடுதலை இருக்கும். மக்கள் இனிமேலும் குருடராகவோ செவிடராகவோ முடவராகவோ இருக்கமாட்டார்கள். சஞ்சலப்படுத்தும் பலவீனங்களும் மனமுறிவடையச் செய்யும் மனக்கோளாறுகளும் நிரந்தரமாக நீக்கப்படும். பரிபூரணத்துடன் வாழ்க்கையை என்றென்றும் அனுபவித்து மகிழ்வது சாத்தியமாய் இருக்கும்.—ஏசாயா 33:24; மத்தேயு 9:35; யோவான் 3:16.
8. யாருக்கு தேவ சமாதானம் அருளப்படுகிறது?
8 யாருக்கு தேவ சமாதானம் அருளப்படுகிறது? இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் வைக்கும் அனைவருக்கும் அருளப்படுகிறது. ‘இயேசு சிலுவையில் சிந்தின இரத்தத்தினாலே சமாதானத்தை உண்டாக்கி, யாவையும் கிறிஸ்துவின் மூலம் தமக்கு ஒப்புரவாக்கிக்கொள்ளவும் தேவனுக்கு பிரியமாயிற்று,’ என்று அப்போஸ்தலன் பவுல் எழுதினார். இந்த ஒப்புரவாகுதல் ‘பரலோகத்திலுள்ளவைகளையும்’—அதாவது, பரலோகத்தில் கிறிஸ்துவுடன் உடன் சுதந்திரவாளிகளாக இருப்பவர்களையும்கூட—உட்படுத்தும் என்று அப்போஸ்தலன் சொன்னார். ‘பூலோகத்திலுள்ளவைகளையும்’—அதாவது, இந்தப் பூமி முழு பரதீஸிய நிலைமைக்குக் கொண்டுவரப்படும்போது அதில் என்றென்றும் வாழ்வதற்கான வாய்ப்பினால் தயவுகூரப்படுகிறவர்களையும்கூட—இது உட்படுத்தும். (கொலோசெயர் 1:19, 20) இயேசுவினுடைய பலியின் மதிப்பைத் தங்களுக்குப் பயன்படுத்திக்கொள்வதன் காரணமாகவும் இருதயப்பூர்வமாக கடவுளுக்குத் தங்களுடைய கீழ்ப்படிதலைக் காண்பிப்பதன் காரணமாகவும், அவர்கள் அனைவரும் கடவுளுடன் கனிவான உறவை அனுபவித்து மகிழ முடியும்.—யாக்கோபு 2:22, 23-ஐ ஒப்பிடுக.
9. (அ) கடவுளுடன் கொள்ளும் சமாதான உறவு வேறு என்ன உறவுகளின் பேரில் செல்வாக்கு செலுத்துகிறது? (ஆ) எங்கும் நிரந்தர சமாதானத்தைக் கொண்டுவரும் நோக்கத்துடன், யெகோவா தம்முடைய மகனுக்கு என்ன அதிகாரத்தைக் கொடுத்தார்?
9 கடவுளுடன் வைத்துக்கொள்ளும் இத்தகைய சமாதானம் எவ்வளவு இன்றியமையாதது! கடவுளுடன் சமாதான உறவில்லையென்றால், வேறு எந்த உறவிலும் நிரந்தரமான அல்லது அர்த்தமுள்ள சமாதானம் இருக்க முடியாது. யெகோவாவுடன் வைத்துக்கொள்ளும் சமாதானமே பூமியில் உண்மையான சமாதானத்திற்கான அஸ்திவாரம். (ஏசாயா 57:19-21) பொருத்தமாகவே, இயேசு கிறிஸ்து சமாதான பிரபுவாக இருக்கிறார். (ஏசாயா 9:6) இவர்மூலம் மானிடர்கள் கடவுளிடம் ஒப்புரவாக முடியும், ஆட்சிசெய்யும் அதிகாரத்தையும்கூட யெகோவா அவருக்கு ஒப்படைத்திருக்கிறார். (தானியேல் 7:13, 14) மனிதவர்க்கத்தின்மீது இயேசு பிரபுவாக ஆட்சி செய்யும்போது கிடைக்கும் பலன்கள் சம்பந்தமாக, யெகோவா இவ்வாறு வாக்குறுதி அளிக்கிறார்: “சமாதானத்திற்கு முடிவிராது.”—ஏசாயா 9:7; சங்கீதம் 72:7.
10. கடவுளுடைய சமாதானத்தின் செய்தியை பிரஸ்தாபப்படுத்துவதில் இயேசு எவ்வாறு முன்மாதிரி வைத்தார்?
10 கடவுளுடைய சமாதானத்தின் செய்தி மனிதவர்க்கத்தினர் அனைவருக்கும் தேவை. அதைப் பிரசங்கிப்பதில் இயேசுதாமே வைராக்கியமான ஒரு முன்மாதிரியை வைத்தார். அவர் எருசலேமிலுள்ள தேவாலய பகுதியில், மலைப்பகுதியில், சாலையோரங்களில், கிணற்றருகே ஒரு சமாரியப் பெண்ணிடம், மக்களுடைய வீடுகளில் பிரசங்கம் செய்தார். எங்கெல்லாம் மக்கள் இருந்தார்களோ அங்கெல்லாம் சமாதானத்தைப் பற்றியும் கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றியும் பிரசங்கிப்பதற்கான வாய்ப்பை இயேசு ஏற்படுத்திக்கொண்டார்.—மத்தேயு 4:18, 19; 5:1, 2; 9:9; 26:55; மாற்கு 6:34; லூக்கா 19:1-10; யோவான் 4:5-26.
கிறிஸ்துவின் அடிச்சுவடுகளில் நடப்பதற்கு பயிற்றுவிக்கப்படுதல்
11. என்ன வேலைக்காக இயேசு தம்முடைய சீஷர்களைப் பயிற்றுவித்தார்?
11 கடவுளுடைய சமாதானத்தின் செய்தியைப் பிரசங்கிக்கும்படி இயேசு தம்முடைய சீஷர்களுக்குப் போதித்தார். இயேசு, யெகோவாவின் “உண்மையும் சத்தியமுமுள்ள சாட்சி”யாய் இருந்ததுபோலவே, சாட்சிகொடுப்பதற்கான உத்தரவாதம் தங்களுக்கும் இருந்தது என்பதை அவர்கள் உணர்ந்திருந்தார்கள். (வெளிப்படுத்துதல் 3:14; ஏசாயா 43:10-12) கிறிஸ்துவை தங்களுடைய தலைவராக அவர்கள் நோக்கியிருந்தார்கள்.
12. பிரசங்க வேலையின் முக்கியத்துவத்தை பவுல் எவ்வாறு காண்பித்தார்?
12 இந்த ஊழியத்தின் முக்கியத்துவத்தை அப்போஸ்தலன் பவுல் நியாயங்காட்டி சொன்னதாவது: “அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் வெட்கப்படுவதில்லையென்று வேதம் சொல்லுகிறது.” அதாவது, இரட்சிப்பிற்கான யெகோவாவின் தலைமை பிரதிநிதியாகிய இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் வைக்கிற எவரும் ஏமாற்றப்படமாட்டார். எவருடைய இனப் பின்னணியும் அவர்களைத் தகுதியற்றவர்களாக்கும் காரணியாக இல்லை, ஏனெனில் பவுல் இவ்வாறு சொன்னார்: “யூதனென்றும் கிரேக்கனென்றும் வித்தியாசமே இல்லை; எல்லாருக்குங் கர்த்தரானவர் தம்மைத் தொழுதுகொள்ளுகிற யாவருக்கும் ஐசுவரியசம்பன்னராயிருக்கிறார். ஆதலால் கர்த்தருடைய [“யெகோவாவினுடைய,” NW] நாமத்தைத் தொழுதுகொள்ளுகிற எவனும் இரட்சிக்கப்படுவான்.” (ரோமர் 10:11-13) ஆனால் அந்த வாய்ப்பைக் குறித்து மக்கள் எவ்வாறு கற்றுக்கொள்ள இருந்தார்கள்?
13. நற்செய்தியை மக்கள் கேட்க வேண்டுமானால் என்ன தேவைப்பட்டது, அந்தத் தேவைக்கு முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் எவ்வாறு பிரதிபலித்தனர்?
13 ஒவ்வொரு கிறிஸ்தவ ஊழியரும் சிந்திக்க வேண்டிய கேள்விகளைக் கேட்பதன் மூலம் அதன் தேவையை பவுல் விவாதித்தார். அந்த அப்போஸ்தலன் கேட்டார்: “அவரை விசுவாசியாதவர்கள் எப்படி அவரைத் தொழுதுகொள்ளுவார்கள்? அவரைக் குறித்துக் கேள்விப்படாதவர்கள் எப்படி விசுவாசிப்பார்கள்? பிரசங்கிக்கிறவன் இல்லாவிட்டால் எப்படிக் கேள்விப்படுவார்கள்? அனுப்பப்படாவிட்டால் எப்படிப் பிரசங்கிப்பார்கள்.” (ரோமர் 10:14, 15) ஆண்கள், பெண்கள், இளைஞர், முதியோர் ஆகியோர், கிறிஸ்துவும் அவருடைய அப்போஸ்தலரும் வைத்த முன்மாதிரியைப் பார்த்து பின்பற்றினார்கள் என்பதற்கு பூர்வகால கிறிஸ்தவத்தைப் பற்றிய பதிவு வலிமைமிக்க அத்தாட்சி அளிக்கிறது. அவர்கள் நற்செய்தியை வைராக்கியமாக அறிவிப்போராக ஆனார்கள். இயேசுவைப் பின்பற்றுகிறவர்களாய், எங்கெல்லாம் மக்களைக் கண்டார்களோ அங்கெல்லாம் அவர்களிடம் பிரசங்கம் செய்தார்கள். ஒருவரையும் தவறவிட விருப்பமில்லாததால், அவர்கள் தங்களுடைய ஊழியத்தை பொது இடங்கள், வீட்டுக்கு வீடு ஆகிய இரண்டிலும் செய்து வந்தார்கள்.—அப்போஸ்தலர் 17:17; 20:20.
14. நற்செய்தியை அறிவிப்போருடைய “பாதங்கள்,” ‘அழகானவையாய்’ இருந்தன என்பது எவ்வாறு உண்மையென நிரூபிக்கப்பட்டது?
14 நிச்சயமாகவே, எல்லாரும் கிறிஸ்தவ பிரசங்கிப்பாளர்களை அன்புடன் ஏற்றுக்கொள்ளவில்லை. என்றபோதிலும், ஏசாயா 52:7-லிருந்து எடுக்கப்பட்ட பவுலுடைய மேற்கோள் உண்மையாக ஆனது. “அனுப்பப்படாவிட்டால் எப்படிப் பிரசங்கிப்பார்கள்,” என்ற கேள்வியைக் கேட்டுவிட்டு, அவர் சொன்னார்: “சமாதானத்தைக் கூறி, நற்காரியங்களைச் சுவிசேஷமாய் அறிவிக்கிறவர்களுடைய பாதங்கள் எவ்வளவு அழகானவைகள்”! நம்மில் பெரும்பாலானோர் நம்முடைய பாதங்கள் அழகானவையாக, அல்லது நேர்த்தியானவையாக இருப்பதாக நினைப்பதில்லை. அப்படியானால், இது எதை அர்த்தப்படுத்துகிறது? மற்றவர்களுக்குப் பிரசங்கம் செய்வதற்கு ஒரு நபர் வெளியில் செல்கையில் பாதங்களே பொதுவாக அவரை இங்குமங்கும் நடமாட செய்கின்றன. இப்படிப்பட்ட பாதங்கள் உண்மையில் அந்த நபரையே பிரதிநிதித்துவம் செய்கின்றன. இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலரிடமிருந்தும் முதல் நூற்றாண்டு சீஷர்களிடமிருந்தும் நற்செய்தியைக் கேட்ட பெரும்பாலானோருக்கு, இந்தப் பூர்வகால கிறிஸ்தவர்கள் உண்மையிலேயே அழகான காட்சியாக இருந்தார்கள் என்பதில் நாம் நிச்சயமுள்ளவர்களாய் இருக்கலாம். (அப்போஸ்தலர் 16:13-15) அதைக்காட்டிலும், அவர்கள் கடவுளுடைய பார்வையில் அருமையானவர்களாக இருந்தார்கள்.
15, 16. (அ) உண்மையிலேயே தாங்கள் சமாதான தூதுவர்கள் என்பதை பூர்வ கிறிஸ்தவர்கள் எவ்வாறு மெய்ப்பித்துக் காண்பித்தனர்? (ஆ) முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் செய்த அதே முறையில் நம்முடைய ஊழியத்தைச் செய்துமுடிக்க நமக்கு எது உதவி செய்யக்கூடும்?
15 இயேசுவை பின்பற்றுபவர்கள் சமாதானத்தின் செய்தியை வைத்திருந்தார்கள்; அதை அவர்கள் அமைதலான முறையில் அளித்தார்கள். இயேசு தம்முடைய சீஷர்களுக்கு இந்த அறிவுரைகளைக் கொடுத்தார்: “ஒரு வீட்டில் பிரவேசிக்கிறபோது: இந்த வீட்டுக்குச் சமாதானம் உண்டாவதாகவென்று முதலாவது சொல்லுங்கள். சமாதான பாத்திரன் அங்கே இருந்தால் நீங்கள் கூறின சமாதானம் அவனிடத்தில் தங்கும், இல்லாதிருந்தால் அது உங்களிடத்திற்குத் திரும்பிவரும்.” (லூக்கா 10:5, 6) சாலோம், அல்லது “சமாதானம்” என்பது பாரம்பரியமாக யூதர்கள் சொல்லும் வாழ்த்துதல். என்றபோதிலும், இயேசுவினுடைய அறிவுரைகள் இதைக் காட்டிலும் அதிகத்தை உட்படுத்தின. “கிறிஸ்துவுக்கான உடன் ஸ்தானாபதிகளாக,” அவருடைய அபிஷேகம் செய்யப்பட்ட சீஷர்கள் மக்களை இவ்வாறு துரிதப்படுத்தினார்கள்: “தேவனோடே ஒப்புரவாகுங்கள்.” (2 கொரிந்தியர் 5:20) இயேசு கொடுத்த அறிவுரைகளுக்கு இசைவாக, கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றியும் தனிப்பட்டவர்களாக அது அவர்களுக்கு எதை அர்த்தப்படுத்துகிறது என்பதைப் பற்றியும் மக்களிடம் அவர்கள் பேசினார்கள். செவிகொடுத்துக் கேட்டவர்கள் ஆசீர்வாதத்தைப் பெற்றார்கள்; அந்தச் செய்தியை புறக்கணித்தவர்களோ ஆசீர்வாதத்தை இழந்துபோனார்கள்.
16 யெகோவாவின் சாட்சிகள் இன்று அதே முறையிலேயே தங்களுடைய ஊழியத்தை செய்கிறார்கள். மக்களிடம் அவர்கள் கொண்டுசெல்லுகிற நற்செய்தி அவர்களுடையதல்ல; அது, அவர்களை அனுப்பினவருடைய செய்தி. அதை அறிவிப்பதே அவர்களுடைய வேலை. மக்கள் அதை ஏற்றுக்கொண்டால், மிகச் சிறந்த ஆசீர்வாதங்களுக்கான பாதையில் தங்களை வைத்துக்கொள்கிறார்கள். அவர்கள் அதைப் புறக்கணித்தால், யெகோவா தேவனுடனும் அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவுடனும் கொண்டுள்ள சமாதானத்தைப் புறக்கணிக்கிறார்கள்.—லூக்கா 10:16.
கொந்தளிப்பான ஓர் உலகில் சமாதானமாயிருத்தல்
17. தூஷணமாய் பேசும் மக்களை எதிர்ப்படும் சமயத்திலும்கூட, நாம் எவ்வாறு நம்மை நடத்திக்கொள்ள வேண்டும், ஏன்?
17 மக்களுடைய பிரதிபலிப்பு என்னவாக இருந்தாலும்சரி, நாம் தேவ சமாதான தூதுவர்கள் என்பதை மனதிற்கொள்வது யெகோவாவின் ஊழியர்களுக்கு முக்கியம். உலக மக்கள் காரசாரமான வாக்குவாதங்களில் ஈடுபட்டு, தங்களை எரிச்சலூட்டுகிறவர்களிடம் புண்படுத்தும் விதமாக பேசுவதன் மூலம் அல்லது கூச்சல்போட்டு திட்டுவதன்மூலம் தங்களுடைய கோபத்தை வெளிப்படுத்துகிறார்கள். கடந்த காலங்களில் நம்மில் சிலர் ஒருவேளை அதைச் செய்திருக்கலாம். இருந்தபோதிலும், நாம் புதிய ஆளுமையைத் தரித்துக்கொண்டு இந்த உலகத்தின் பாகமாய் இல்லாமல் இருந்தால், நாம் அவர்களுடைய வழிகளைப் பின்பற்ற மாட்டோம். (எபேசியர் 4:23, 24, 31; யாக்கோபு 1:19, 20) மற்றவர்கள் எப்படி நடந்துகொண்டாலும்சரி, பின்வரும் அறிவுரையை நாம் பொருத்திப் பிரயோகிப்போம்: “கூடுமானால் உங்களாலானமட்டும் எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருங்கள்.”—ரோமர் 12:18.
18. அரசாங்க அதிகாரி ஒருவர் நம்மிடம் கடுமையாக நடந்துகொண்டாலும் நாம் எவ்வாறு பிரதிபலிக்க வேண்டும், ஏன்?
18 நாம் செய்கிற ஊழியம் நம்மை சிலசமயங்களில் அதிகாரிகளுக்கு முன்பாக கொண்டு செல்லலாம். தங்களுடைய அதிகாரத்தை ஒப்புக்கொள்ளும்படி பலவந்தப்படுத்துகிறவர்களாய், நாம் ஏன் குறிப்பிட்ட சில காரியங்களைச் செய்கிறோம் அல்லது நாம் ஏன் குறிப்பிட்ட சில நடவடிக்கைகளில் ஈடுபடுவதிலிருந்து விலகியிருக்கிறோம் என்பதைக் குறித்த விளக்கங்களை அவர்கள் ‘நம்மிடம் உரிமையுடன் கேட்கலாம்.’ நாம் சொல்கிற அந்தச் செய்தியை—பொய் மதத்தை அம்பலப்படுத்துகிற செய்தியை, இந்தத் தற்போதைய காரிய ஒழுங்குமுறையின் முடிவைப் பற்றிய செய்தியை—ஏன் பிரசங்கிக்கிறோம் என்பதை அவர்கள் தெரிந்துகொள்ள விரும்பலாம். கிறிஸ்து நமக்காக வைத்துள்ள முன்மாதிரிக்கான நம்முடைய மரியாதை சாந்த குணத்தையும் ஆழ்ந்த மரியாதையையும் காண்பிப்பதற்கு நம்மை உந்துவிக்கும். (1 பேதுரு 2:23; 3:15) அடிக்கடி, இப்படிப்பட்ட அதிகாரிகள், பாதிரிமாரிடமிருந்தோ ஒருவேளை தங்களுடைய சொந்த உயர் அதிகாரிகளிடமிருந்தோ வருகிற அழுத்தத்தில் இருக்கிறார்கள். நம்முடைய ஊழியம் அவர்களுக்கோ அல்லது சமுதாயத்தினரின் அமைதிக்கோ எந்தத் தீங்கையும் விளைவிக்காது என்பதை அவர்கள் மதித்துணருவதற்கு நாம் சொல்கிற சாந்தமான பதில் உதவிசெய்யலாம். அப்படிப்பட்ட பதில், அதை ஏற்றுக்கொள்கிறவர்களில் மரியாதைக்குரிய, ஒத்துழைக்கிற மற்றும் சமாதான மனப்பான்மையை உண்டுபண்ணுகிறது.—தீத்து 3:1, 2.
19. என்ன நடவடிக்கைகளில் யெகோவாவின் சாட்சிகள் ஒருபோதும் ஈடுபடுவதில்லை?
19 யெகோவாவின் சாட்சிகள் இந்த உலகத்தில் ஏற்படும் சண்டைகளில் எந்தப் பங்கும் வகிக்காத மக்களாக உலக முழுவதும் அறியப்பட்டிருக்கிறார்கள். இனம், மதம், அல்லது அரசியல் போன்ற உலகின் சண்டை சச்சரவுகளில் அவர்கள் ஈடுபடுவதில்லை. (யோவான் 17:14) ‘மேலான அதிகாரமுள்ளவர்களுக்குக் கீழ்ப்படியும்படி’ கடவுளுடைய வார்த்தை நமக்கு கட்டளையிடுவதால், அரசாங்க கொள்கைகளுக்கு எதிராக மக்கள் செய்யும் வன்முறையற்ற செயல்களில் பங்குகொள்வதைப் பற்றிகூட நாம் சிந்தித்துப்பார்க்க மாட்டோம். (ரோமர் 13:1) ஒரு அரசாங்கத்தைக் கவிழ்ப்பதில் குறியாயிருக்கிற எந்த இயக்கத்துடனும் யெகோவாவின் சாட்சிகள் ஒருபோதும் சேர்ந்துகொண்டதில்லை. யெகோவா தம்முடைய கிறிஸ்தவ ஊழியர்களுக்காக ஏற்படுத்தி வைத்திருக்கிற தராதரங்களின் காரணமாக, இரத்தம் சிந்துதலிலோ அல்லது எந்தவித வன்முறையிலோ பங்குகொள்வது நினைத்துக்கூடப் பார்க்கமுடியாததாய் இருக்கிறது! உண்மை கிறிஸ்தவர்கள் சமாதானத்தைப் பற்றி பேசுவது மாத்திரம் அல்ல; அவர்கள் என்ன பிரசங்கிக்கிறார்களோ அதற்கு இசைவாக வாழவும் செய்கிறார்கள்.
20. சமாதானத்தைக் குறித்ததில், மகா பாபிலோன் என்ன விதமான பதிவை ஏற்படுத்தியிருக்கிறது?
20 உண்மை கிறிஸ்தவர்களுக்கு நேர்மாறாக, கிறிஸ்தவமண்டலத்தின் மத அமைப்புகளைப் பிரதிநிதித்துவம் செய்கிறவர்கள் சமாதானத்தின் தூதுவர்களாக நிரூபிக்கவில்லை. மகா பாபிலோனிய மதங்கள்—கிறிஸ்தவமண்டல சர்ச்சுகளும் கிறிஸ்தவமல்லாத மதங்களும் ஒன்றுபோலவே—தேசங்களில் நடைபெற்ற போர்களைக் கண்டும்காணாமல் விட்டிருக்கின்றன, அவற்றை ஆதரித்திருக்கின்றன, அவற்றில் உண்மையில் பங்கெடுத்தும் இருக்கின்றன. அவை யெகோவாவின் உண்மையுள்ள ஊழியர்களைத் துன்புறுத்துவதை, கொலைசெய்வதையும்கூட தூண்டியிருக்கின்றன. எனவே, மகா பாபிலோனைப் பற்றி வெளிப்படுத்துதல் 18:24 இவ்வாறு அறிவிக்கிறது: “தீர்க்கதரிசிகளுடைய இரத்தமும் பரிசுத்தவான்களுடைய இரத்தமும் பூமியில் கொல்லப்பட்ட அனைவருடைய இரத்தமும் அவளிடத்தில் காணப்பட்டது.”
21. யெகோவாவின் மக்களுடைய நடத்தைக்கும் பொய் மதத்தைக் கடைப்பிடிக்கிறவர்களுடைய நடத்தைக்கும் இடையே வித்தியாசத்தை காண்கையில் நேர்மை இருதயமுள்ள அநேகர் எவ்வாறு பிரதிபலிக்கின்றனர்?
21 கிறிஸ்தவமண்டலத்தின் மதங்களைப் போலும் மகா பாபிலோனின் ஏனைய பகுதிகளைப் போலும் அல்லாமல், உண்மை மதம் நன்மைக்கேதுவான ஐக்கியப்படுத்தும் சக்தியாக இருக்கிறது. இயேசு கிறிஸ்து தம்முடைய உண்மையுள்ள சீஷர்களிடம் இவ்வாறு சொன்னார்: “நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதனால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள்.” (யோவான் 13:35) அது, இப்பொழுது எஞ்சியிருக்கும் மனிதவர்க்கத்தினரைப் பிரிக்கிற தேசிய, சமுதாய, பொருளாதார, இன சம்பந்தமான தடைகள் ஆகியவற்றை மேம்பட்டு நிற்கிற ஒரு அன்பு. இதை கவனித்திருக்கிற உலகமுழுவதிலுமுள்ள இலட்சக்கணக்கான மக்கள் யெகோவாவின் அபிஷேகம் செய்யப்பட்ட ஊழியர்களிடம் சொல்வதாவது: “தேவன் உங்களோடே இருக்கிறார் என்று கேள்விப்பட்டோம்; ஆகையால் உங்களோடேகூடப் போவோம்.”—சகரியா 8:23.
22. இன்னும் செய்யப்பட வேண்டிய சாட்சிகொடுக்கும் வேலையை நாம் எவ்வாறு கருதுகிறோம்?
22 யெகோவாவின் மக்களாக, சாதிக்கப்பட்டிருக்கிறவற்றில் நாம் பேரளவாக களிகூருகிறோம், ஆனால் அந்த வேலை இன்னும் முடிவடைந்துவிடவில்லை. விதை விதைத்து, நிலத்தில் பயிர்செய்த பிறகு, ஒரு விவசாயி அத்துடன் விட்டுவிடுவதில்லை. அவன் தொடர்ந்து வேலை செய்கிறான், முக்கியமாக அறுவடையின் உச்சக்கட்டத்தில் அவ்வாறு செய்கிறான். அறுவடை சமயம் தளர்ந்துவிடாத, தீவிர முயற்சியை தேவைப்படுத்துகிறது. முன்னொருபோதும் இருந்திராத அளவில் உண்மை கடவுளை வணங்குகிறவர்களுடைய பெரிய அறுவடை இப்பொழுதே செய்யப்பட்டு வருகிறது. இது களிகூருவதற்கான காலம். (ஏசாயா 9:3) உண்மைதான், நாம் எதிர்ப்பையும் அக்கறையின்மையையும் எதிர்ப்படுகிறோம். தனிப்பட்டவர்களாக, மோசமான வியாதி, கடினமான குடும்ப சூழ்நிலைகள், அல்லது பொருளாதார கஷ்டம் ஆகியவற்றை கையாளுவதற்கு நாமும்கூட கடின முயற்சி செய்துகொண்டிருக்கலாம். ஆனால் யெகோவாவுக்கான அன்பு விடாமுயற்சியடன் தொடர்ந்து செய்யும்படி நம்மை உந்துவிக்கிறது. கடவுளால் நம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள அந்தச் செய்தி, மக்கள் கேட்கவேண்டிய ஒன்று. அது சமாதானத்தின் செய்தி. அது இயேசுதாமே பிரசங்கித்த செய்தி—கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தி.
உங்களுடைய பதில் என்ன?
◻ ஏசாயா 52:7 பூர்வ இஸ்ரவேலரின்மீது என்ன நிறைவேற்றத்தைக் கொண்டிருந்தது?
◻ சமாதானத்தின் மிகப் பெரிய தூதுவராக இயேசு எவ்வாறு நிரூபித்தார்?
◻ ஏசாயா 52:7-ஐ கிறிஸ்தவர்கள் பங்குகொள்ளுகிற வேலையுடன் அப்போஸ்தலன் பவுல் எவ்வாறு தொடர்புபடுத்தினார்?
◻ நம்முடைய நாளில் சமாதானத்தின் தூதுவர்களாய் இருப்பதில் எது உட்பட்டிருக்கிறது?
[பக்கம் 13-ன் படங்கள்]
ராஜ்ய செய்திக்கு மக்கள் எப்படி பிரதிபலித்தாலும்சரி, யெகோவாவின் சாட்சிகள் சமாதானமுள்ளவர்களாக நடந்துகொள்ளுகிறார்கள்
[பக்கம் 15-ன் படங்கள்]
இயேசுவைப் போல, யெகோவாவின் சாட்சிகள் தேவ சமாதான தூதுவர்கள்