பைபிள் புத்தக எண் 23—ஏசாயா
எழுத்தாளர்: ஏசாயா
எழுதப்பட்ட இடம்: எருசலேம்
எழுதி முடிக்கப்பட்டது: பொ.ச.மு. 732-க்குப் பின்
காலப்பகுதி: பொ.ச.மு. ஏ. 778-732-க்குப் பின்
கொடூரமான அசீரிய அரசனிடமிருந்து வந்த பெரும் அச்சுறுத்தலால் மத்திய கிழக்கின் மற்ற பேரரசுகளும் சிறிய ராஜ்யங்களும் கதிகலங்கியிருந்தன. அந்த முழு பகுதியும் கூட்டுச்சதி, கூட்டுசேருதல் பற்றிய பேச்சாகவே இருந்தது. (ஏசா. 8:9-13) வடக்கே விசுவாசதுரோக இஸ்ரவேலர் இந்த சர்வதேச சதிக்கு விரைவில் இரையானார்கள்; அதேசமயத்தில் தெற்கிலிருந்த யூதாவின் அரசர்கள் உறுதியற்றவர்களாக ஆண்டனர். (2 இரா., அதி. 15-21) புதிய போர்க் கருவிகள் உற்பத்தி செய்யப்பட்டு உபயோகப்படுத்தப்பட்டன. இதனால் இன்னுமதிக திகில் உண்டாயிற்று. (2 நா. 26:14, 15) பாதுகாப்புக்காகவும் இரட்சிப்பிற்காகவும் ஒருவர் எங்கே நோக்கலாம்? அந்தச் சிறிய யூதா ராஜ்யத்தில் ஜனங்களும் ஆசாரியர்களும் உதட்டளவில் மட்டுமே யெகோவாவை நினைத்தனர். ஆனால் அவர்களுடைய இருதயங்கள் வேறு திசைகளில், முதலாவது அசீரியாவிடமும் பின்பு தென் திசையிலிருந்த எகிப்திடமுமாக திரும்பியிருந்தன. (2 இரா. 16:7; 18:21) யெகோவாவின் வல்லமையில் மக்களின் விசுவாசம் குறைந்தது. நேரடியான விக்கிரக வணக்கம் இல்லாவிட்டாலும், பாசாங்குத்தனமான ஒரு வணக்கமுறை தழைத்தோங்கியிருந்தது. யெகோவாவுக்கு உண்மையாக பயப்படாமல் அவர்களுடைய வணக்கம் சடங்காச்சாரத்திலேயே சார்ந்திருந்தது.
2 அப்படியெனில், யெகோவாவுக்காக பேசுவது யார்? அவருடைய இரட்சிக்கும் வல்லமையை அறிவிப்பது யார்? “இதோ, அடியேன் இருக்கிறேன்; என்னை அனுப்பும்” என்ற பதில் உடனடியாக வந்தது. பதிலளித்தவர் ஏசாயாவே. இவர் ஏற்கெனவே தீர்க்கதரிசனம் உரைத்து வந்தார். இது குஷ்டரோகியான அரசன் உசியா இறந்த ஆண்டாகிய, ஏறக்குறைய பொ.ச.மு. 778 ஆகும். (ஏசா. 6:1, 8) ஏசாயா என்ற பெயரின் அர்த்தம் “யெகோவாவின் இரட்சிப்பு” என்பதாகும். இயேசுவின் பெயருக்கும் இதே அர்த்தம்தான், ஆனால் மாற்றி எழுதப்படுகிறது (“இரட்சிப்பே யெகோவா”). ஏசாயாவின் தீர்க்கதரிசனம், ஆரம்பத்திலிருந்து இறுதி வரையாக, யெகோவா இரட்சிப்பவர் என்ற இந்த உண்மையையே சிறப்பித்துக் காட்டுகிறது.
3 ஆமோத்சின் குமாரன் ஏசாயா (யூதாவிலிருந்து வந்த மற்றொரு தீர்க்கதரிசியான ஆமோஸ் என்பவரோடு இவரை குழப்பிக் கொள்ளாதீர்கள்). (1:1) இவருடைய பிறப்பையும் இறப்பையும் குறித்து வேதவாக்கியங்கள் ஒன்றும் சொல்வதில்லை. ஆனால் பொல்லாத அரசனாகிய மனாசே அவரை வாளால் துண்டித்துப்போட்டான் என்பதாக யூத பாரம்பரியம் கூறுகிறது. (எபிரெயர் 11:37-ஐ ஒப்பிடுக.) தீர்க்கதரிசினியாகிய தன் மனைவியோடும் தீர்க்கதரிசன பெயர்களையுடைய குறைந்தபட்சம் இரண்டு குமாரர்களுடனும் எருசலேமில் தங்கியிருந்ததாக அவருடைய பதிவுகள் காட்டுகின்றன. (ஏசா. 7:3; 8:1, 3) குறைந்தபட்சம் உசியா, யோதாம், ஆகாஸ், எசேக்கியா போன்ற யூதாவின் நான்கு அரசர்களின் காலத்திலாவது அவர் தீர்க்கதரிசியாக இருந்தார். ஏறக்குறைய பொ.ச.மு. 778-ல் (உசியா மரித்தபோது, அல்லது அதற்கு முன்பே) தொடங்கி (எசேக்கியாவின் 14-வது ஆண்டாகிய) சுமார் பொ.ச.மு. 732 (அல்லது அதற்கு பின்பு) வரையாவது, அதாவது 46 ஆண்டுகளுக்குக் குறையாமல், தொடர்ந்து அவர் சேவித்ததாக தெரிகிறது. சந்தேகமில்லாமல் இந்தப் பிற்பட்ட தேதிக்குள்ளாக தன் தீர்க்கதரிசனத்தை அவர் எழுதியும் வைத்தார். (1:1; 6:1; 36:1) யூதாவில் மீகாவும், வடக்கே ஓசியாவும் ஓதேதும் அவருடைய நாளிலிருந்த மற்ற தீர்க்கதரிசிகளாவார்கள்.—மீகா 1:1; ஓசி. 1:1; 2 நா. 28:6-9.
4 தீர்க்கதரிசன நியாயத்தீர்ப்புகளை பதிவு செய்யுமாறு யெகோவா ஏசாயாவுக்குக் கட்டளையிட்டார். இது ஏசாயா 30:8-ல் உறுதிசெய்யப்படுகிறது: “இப்பொழுது நீ போய், இது பிற்காலத்துக்கு என்றென்றைக்கும் இருக்கும்படி, இதை அவர்களுக்கு முன்பாக ஒரு பலகையில் எழுதி, ஒரு புஸ்தகத்தில் வரை.” பூர்வ யூத ரபீக்கள் ஏசாயாவை எழுத்தாளராக ஏற்றுக்கொண்டனர். மேலும் (ஏசாயா, எரேமியா, எசேக்கியேல் ஆகிய) பெரிய தீர்க்கதரிசிகள் பிரிவில் முதல் புத்தகமாக இந்தப் புத்தகத்தைச் சேர்த்தனர்.
5 அதிகாரம் 40 முதற்கொண்டு இந்தப் புத்தகத்தின் எழுத்து நடையிலுள்ள மாற்றத்தைச் சிலர் குறிப்பிட்டு, அது வேறொரு எழுத்தாளரால் அல்லது “இரண்டாம் ஏசாயா”வால் எழுதப்பட்டது என்று சொல்கின்றனர். இருந்தபோதிலும், பதிவு செய்யப்பட்ட பொருளில் மாற்றம் இருப்பது இந்த காரணத்தை விளக்கப் போதுமானதாக இருக்கிறது. தனது பெயரை தாங்கிய இந்த முழு புத்தகத்தையும் ஏசாயாவே எழுதினார் என்பதற்கு ஏராளமான அத்தாட்சிகள் இருக்கின்றன. உதாரணமாக, இந்தப் புத்தகத்தின் ஒருமைப்பாடு, ‘இஸ்ரவேலின் பரிசுத்தர்’ என்ற சொற்றொடரால் தெரிவிக்கப்படுகிறது. இந்த சொற்றொடர் 1-லிருந்து 39 வரையான அதிகாரங்களில் 12 தடவையும் 40-லிருந்து 66 வரையான அதிகாரங்களில் 13 தடவையுமாக மொத்தம் 25 தடவை காணப்படுகிறது; ஆனால் எபிரெய வேதாகமத்தின் மீதி பாகம் முழுவதிலுமே, இந்த சொற்றொடர் 6 தடவை மட்டுமே வருகிறது. அப்போஸ்தலன் பவுலும் இந்தப் புத்தகத்தின் எல்லா பாகங்களிலுமிருந்து மேற்கோள்கள் காட்டி, அதை ஒரே எழுத்தாளரே, அதாவது ஏசாயாவே எழுதினார் என குறிப்பிட்டு, இவ்வாறு இந்தப் புத்தகத்தின் ஒருமைப்பாட்டுக்கு சாட்சி பகருகிறார்.—ரோமர் 10:16, 20; 15:12 ஆகியவற்றை ஏசாயா 53:1; 65:1; 11:1 ஆகியவற்றோடு ஒப்பிடுக.
6 அக்கறையைத் தூண்டுவதாக, 1947-ம் ஆண்டில் தொடங்கி, சவக் கடலின் வடமேற்கு கரைக்கருகில், கிர்பெட் கும்ரனுக்குச் சிறிது தூரத்திலுள்ள குகைகளிலிருந்து பூர்வ ஆவணங்கள் சில கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவையே சவக் கடல் சுருள்கள் ஆகும். இவற்றில் ஏசாயாவின் தீர்க்கதரிசன சுருளும் அடங்கியிருந்தது. இது சிறப்பாக பாதுகாக்கப்பட்ட முற்கால மசோரிட்டிக் எபிரெயுவில் அழகாக எழுதப்பட்டுள்ளது. பொ.ச.மு. இரண்டாம் நூற்றாண்டின் இறுதியைச் சேர்ந்த இது ஏறக்குறைய 2,000 ஆண்டுகள் பழமையானது. எபிரெய வேதாகமத்தின் நவீன மொழிபெயர்ப்புகளுக்கு ஆதாரமாக உள்ள மசோரிட்டிக் மூலவாக்கியத்தின் தற்போதுள்ள மிகப் பழைய கையெழுத்துப் பிரதியைப் பார்க்கிலும் ஏறக்குறைய ஆயிரம் ஆண்டுகள் இது பழமையானது. எழுத்துக்கூட்டி எழுதுவதில் சிறிய மாறுபாடுகளும் இலக்கண அமைப்பில் சில வேறுபாடுகளும் உள்ளன. ஆனால் கோட்பாடு சம்பந்தமாக இது மசோரிட்டிக் மூலவாக்கியத்திலிருந்து வேறுபடுவதில்லை. ஆரம்பத்தில் ஏவப்பட்டு எழுதப்பட்ட ஏசாயா புத்தகம் மாறாமல் அப்படியே நம்முடைய பைபிள்களில் இடம்பெற்றிருக்கிறது என்பதற்கு நம்பகமான நிரூபணம் இதுவே. மேலும், இப்புத்தகத்தை இரண்டு “ஏசாயாக்கள்” எழுதினார்கள் என்பதே விமர்சகர்களின் கருத்து. அதை இந்தப் பூர்வ சுருள்கள் தவறென காட்டுகின்றன. ஏனெனில், 39-ம் அதிகாரம் எழுதப்பட்டுள்ள பத்தியின் கடைசி வரியில் 40-ம் அதிகாரம் தொடங்குகிறது. இந்த அதிகாரத்தின் முதல் வாக்கியம் அடுத்த பத்தியில் முடிகிறது. இவ்வாறு, நகல் எடுத்தவர், எழுத்தாளர் வேறுபடுவதையோ புத்தகத்தில் ஏதாவது பிரிவு உண்டாவதையோ அறியவில்லை என்பதாக தெரிகிறது.a
7 ஏசாயா புத்தகத்தின் நம்பகத் தன்மைக்கு ஏராளமான நிரூபணங்கள் இருக்கின்றன. மோசேயைத் தவிர வேறு எந்தத் தீர்க்கதரிசியும் கிறிஸ்தவ பைபிள் எழுத்தாளர்களால் இதைப்போல் அவ்வளவு அதிகமாக மேற்கோள் காட்டப்படவில்லை. அவ்வாறே இதன் உண்மைத் தன்மையை நிரூபிக்கிற சரித்திரப்பூர்வ மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சியின் அத்தாட்சிகளும் ஏராளமாக உள்ளன. இவற்றில், அசீரிய அரசர்களின் சரித்திரப் பதிவுகளும் அடங்கும். உதாரணமாக, சனகெரிபின் ஆறு பக்கங்களுடைய நீளுருளையில் எருசலேமின் முற்றுகையைப் பற்றிய அவரது சொந்த விவரம் உள்ளது.b (ஏசா., அதி. 36, 37) ஒருகாலத்தில் கம்பீரமாக நின்ற பாபிலோன் இன்று வெறும் இடிபாடுகளாக கிடப்பது ஏசாயா 13:17-22-ன் நிறைவேற்றத்துக்கு இன்னும் சாட்சி பகருகிறது.c பாபிலோனிலிருந்து திரும்பிச் சென்ற ஆயிரக்கணக்கான யூதர்கள் ஒவ்வொருவரும் உயிருள்ள சாட்சிகளாக இருந்தனர். இவர்கள் அரசனாகிய கோரேசுவால் விடுதலை செய்யப்பட்டனர். இவரது பெயரை சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பே ஏசாயா எழுதிவிட்டார். இந்தத் தீர்க்கதரிசனம் பின்னால் கோரேசுக்கு காட்டப்பட்டிருக்கலாம். ஏனெனில், யூதர்களின் மீதியானோரை விடுதலை செய்கையில், தான் அவ்வாறு செய்யும்படி யெகோவாவால் கட்டளையிடப்பட்டதாக அவர் சொன்னார்.—ஏசா. 44:28; 45:1; எஸ்றா 1:1-3.
8 ஏசாயா புத்தகத்தின் சிறப்பு அம்சம், அதன் மேசியானிய தீர்க்கதரிசனங்களே. ஏசாயா “சுவிசேஷகத் தீர்க்கதரிசி” என அழைக்கப்பட்டிருக்கிறார். ஏனென்றால் அவ்வளவு ஏராளமான அவரது முன்னறிவிப்புகள் இயேசுவினுடைய வாழ்க்கையில் நிறைவேற்றமடைந்தன. இப்புத்தகத்தின் 53-ம் அதிகாரம், அப்போஸ்தலர் 8-ம் அதிகாரத்தில் குறிப்பிடப்பட்ட அந்த எத்தியோப்பிய அண்ணகனுக்கு மட்டுமே புரியாத ‘புதிர் அதிகாரமாக’ இல்லை. மொத்தத்தில் யூதர்கள் அனைவருக்குமே இது நெடுங்காலமாக புதிராகத்தான் இருந்தது. இது இயேசு நடத்தப்பட்ட விதத்தை அவ்வளவு விளக்கமாக முன்னறிவிப்பதால் கண்கண்ட ஒரு சாட்சியின் விவரத்தைப்போல உள்ளது. பின்வரும் ஒப்புமைகள் காட்டுவதுபோல், ஏசாயாவின் இந்த சிறப்புவாய்ந்த அதிகாரத்தின் தீர்க்கதரிசன நிறைவேற்றங்களை கிறிஸ்தவ கிரேக்க வேதாகமம் பதிவுசெய்கிறது: வச. 1—யோவான் 12:37, 38; வச. 2—யோவான் 19:5-7; வச. 3—மாற்கு 9:12; வச. 4—மத்தேயு 8:16, 17; வச. 5—1 பேதுரு 2:24; வச. 6—1 பேதுரு 2:25; வச. 7—அப்போஸ்தலர் 8:32, 35; வச. 8—அப்போஸ்தலர் 8:33; வச. 9—மத்தேயு 27:57-60; வச. 10—எபிரெயர் 7:27; வச. 11—ரோமர் 5:18; வச. 12—லூக்கா 22:37. இத்தகைய திருத்தமான முன்னறிவிப்புகளுக்கு கடவுளைத் தவிர வேறு யார் மூலகாரணராக இருக்க முடியும்?
ஏசாயாவின் பொருளடக்கம்
9 முதல் ஆறு அதிகாரங்கள் யூதாவிலும் எருசலேமிலும் உள்ள சூழ்நிலையை குறிப்பிட்டு, யெகோவாவுக்கு முன்பாக யூதாவின் குற்றத்தையும் யெகோவா ஏசாயாவுக்கு பொறுப்பளிப்பதையும் விவரிக்கின்றன. 7 முதல் 12 அதிகாரங்கள் எதிரிகளின் படையெடுப்பினால் ஏற்படும் திகிலையும் யெகோவா நியமித்த சமாதானப் பிரபுவால் விடுதலையடையும் வாக்குறுதியையும் கூறுகின்றன. 13-லிருந்து 35 அதிகாரங்களில் பல தேசங்களுக்கு எதிராக ஒன்றன்பின் ஒன்றாக தொடரும் நியாயத்தீர்ப்புகளும் யெகோவா கொடுக்கப்போகும் இரட்சிப்பின் முன்னறிவிப்பும் அடங்கியுள்ளன. எசேக்கியாவுடைய ஆட்சியின் சரித்திரப்பூர்வ சம்பவங்கள் 36-லிருந்து 39 அதிகாரங்களில் விவரிக்கப்படுகின்றன. 40-லிருந்து 66 வரையான மீதமுள்ள அதிகாரங்கள், பாபிலோனிலிருந்து விடுதலை பெறுவதையும், மீதியான யூதர் திரும்பி வருவதையும், சீயோன் திரும்ப நிலைநாட்டப்படுவதையும் மையப்பொருளாக கொண்டுள்ளன.
10 “யூதாவையும் எருசலேமையும் குறித்து” ஏசாயாவின் செய்தி (1:1–6:13). அவர் இரட்டுடுத்தி, செருப்புகள் அணிந்தவராக எருசலேமில் நின்று பின்வருமாறு சத்தமிட்டுக் கூறுவதை கேளுங்கள்: சர்வாதிகாரிகளே! ஜனங்களே! கேளுங்கள்! உங்கள் ஜனம் உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரையாக நோயுற்றுள்ளது, இரத்தக் கறைபட்ட உங்கள் கைகள் ஜெபத்தில் உயர்த்தப்பட்டிருப்பதால் யெகோவாவுக்கு நீங்கள் சலிப்புண்டாக்கி இருக்கிறீர்கள். வாருங்கள், சிவப்பாக இருக்கும் உங்கள் பாவங்கள் பனியைப்போல் வெண்மையாவதற்கு அவரோடு காரியங்களைச் சரிசெய்யுங்கள். கடைசி நாட்களில், யெகோவாவுடைய ஆலயத்தின் பர்வதம் உயர்த்தப்படும். எல்லா தேசத்தாரும் போதனைக்காக அதனிடம் திரண்டு வருவார்கள். அவர்கள் இனி யுத்தத்தை கற்பதில்லை. யெகோவா உன்னதத்திற்கு உயர்த்தப்பட்டு பரிசுத்தப்படுத்தப்படுவார். ஆனால் தற்போது இஸ்ரவேலும் யூதாவும், பிரியமான திராட்சக் கொடியாக நடப்பட்டபோதிலும் அக்கிரமத்தின் திராட்சப் பழங்களை விளைவிக்கின்றன. அவர்கள் நல்லதைக் கெட்டதாகவும் கெட்டதை நல்லதாகவும் மாற்றுகின்றனர், ஏனெனில் அவர்கள் தங்களை மிஞ்சின ஞானிகளாக எண்ணிக்கொள்கின்றனர்.
11 “எனினும், யெகோவா, உயரமும் உன்னதமுமான சிங்காசனத்தின்மீது வீற்றிருப்பதை நான் கண்டேன்” என்று ஏசாயா சொல்லுகிறார். இந்தத் தரிசனத்தோடு யெகோவா பின்வருமாறு பொறுப்பளிக்கிறார்: “போய், இந்த ஜனங்களிடம் நீ சொல்லவேண்டும், ‘மறுபடியும் மறுபடியும் கேளுங்கள்.’” எவ்வளவு காலத்திற்கு? “நகரங்கள் உண்மையில் நொறுங்கி பாழாகும் வரையில்.”—6:1, 9, 11, NW.
12 எதிரிகளுடைய படையெடுப்புகளின் திகிலும் விடுதலையடையும் வாக்குறுதியும் (7:1–12:6). முதலாவது யூதாவுக்கு எதிராக சீரியாவும் இஸ்ரவேலும் கூட்டுச்சேருவது தோல்வியடையும். ஆனால் காலப்போக்கில் யூதாவும் சிறைபடுத்தப்பட்டு, மீதியானவர்கள் மாத்திரமே திரும்பி வருவார்கள். இதை காட்டுவதற்கு யெகோவா, ஏசாயாவையும் அவருடைய குமாரர்களையும் தீர்க்கதரிசன ‘அடையாளங்களாகவும் அற்புதங்களாகவும்’ பயன்படுத்துகிறார். ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள். அவருடைய பெயர்? இம்மானுவேல் (“தேவன் நம்மோடிருக்கிறார்” என்பது இதன் அர்த்தம்). யூதாவுக்கு எதிராக ஒன்றிணைந்த எதிரிகள் இதைக் கவனத்தில் வைப்பார்களாக! “இடைக்கட்டிக்கொள்ளுங்கள், முறிந்தோடுவீர்கள்”! கடினமான காலங்கள் வரும். எனினும் அப்போது ஒரு பிரகாசமான ஒளி கடவுளுடைய ஜனத்தின்மீது பிரகாசிக்கும். எவ்வாறெனில் நமக்கு ஒரு பாலகன் பிறந்தார், “அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.”—7:14; 8:9, 18; 9:6.
13 “என் கோபத்தின் கோலாகிய அசீரியனுக்கு ஐயோ!” என யெகோவா கூறுகிறார். ‘அவபக்தியான ஒரு ஜனத்துக்கு’ எதிராக அந்தக் கோலைப் பயன்படுத்திய பிறகு, திமிர்பிடித்த அசீரியனையும் கடவுள் அழிப்பார். பின்னால், ‘மீதியாயிருப்பவர்கள் மாத்திரம் திரும்புவார்கள்.’ (10:5, 6, 21) (தாவீதின் தகப்பன்) ஈசாயிலிருந்து ஒரு துளிரை, ஒரு கிளையை இப்போது காணுங்கள்! இந்தக் “கிளை” ஆனவர் நீதியாக அரசாளுவார். அவரால் அனைத்து படைப்புகளும் மகிழ்ச்சியடையும். எவ்விதமான கேடோ அழிவோ இருக்காது. ஏனெனில் “சமுத்திரத்திலே தண்ணீர் நிறைந்திருப்பதுபோல் பூமியிலே யெகோவாவை அறிகிற அறிவு நிறைந்திருக்கும்.” (11:1, 9, தி.மொ.) ஜனங்களுக்கு சின்னமாக இவர் விளங்க, திரும்பிவரும் மீதிபேருக்கு அசீரியாவிலிருந்து ஒரு பெருவழி செல்கிறது. இரட்சிப்பின் ஊற்றுகளிலிருந்து மகிழ்ச்சியோடே தண்ணீர் எடுப்பதிலும் யெகோவாவுக்கு துதி ஏற்படுத்துவதிலும் களிகூருதல் உண்டாயிருக்கும்.
14 பாபிலோனின் ஆக்கினைத்தீர்ப்பை அறிவிப்பது (13:1–14:27). ஏசாயா இப்போது அசீரியனின் நாளிலிருந்து புகழின் உச்சியிலிருந்த பாபிலோனின் காலத்திற்கு கவனம் செலுத்துகிறார். கவனித்துக் கேளுங்கள்! மிகுதியான ஜனக்கூட்டத்தின் இரைச்சல் சத்தம், ராஜ்யங்களும் தேசத்தாரும் ஒன்றாக கூடியிருப்பதன் அமளி! போருக்காக யெகோவா படையை தயார்படுத்துகிறார்! இது பாபிலோனுக்கு இருண்ட நாள். வியப்படைந்த முகங்கள் உணர்ச்சியால் சிவக்கின்றன, இருதயங்கள் உருகுகின்றன. இரக்கமற்ற மேதியர்கள் ‘ராஜ்யங்களுக்கு அலங்காரமான’ பாபிலோனைக் கவிழ்த்துப் போடுவார்கள். அது “தலைமுறைதோறும்” குடியிருப்பற்ற பாழ்நிலமாகி காட்டு மிருகங்கள் தங்குமிடமாக வேண்டும். (13:19, 20) ஷியோலிலுள்ள மரித்தோர் பாபிலோனின் அரசனை வரவேற்பதற்குக் கிளப்பிவிடப்படுகின்றனர். புழுக்களே அவனுடைய படுக்கையும் பூச்சிகளே அவனுடைய போர்வையுமாகின்றன. இந்த ‘அதிகாலையின் மகனாகிய விடிவெள்ளிக்கு’ எப்பேர்ப்பட்ட இழிவான வீழ்ச்சி! (14:12) அவன் தன் சிங்காசனத்தை அதிகமாக உயர்த்துவதற்கு விரும்பினான். ஆனால், முழுமையான அழிவு என்னும் துடைப்பத்தால் யெகோவா பாபிலோனைப் பெருக்குகிறார். அப்போது பிணத்தைப்போல வெளியில் தூக்கியெறியப்படுகிறான். பெயரோ, மீந்தவரோ, சந்ததியோ, தலைமுறையோ எதுவும் மிஞ்சுவதில்லை!
15 சர்வதேச பேரழிவுகள் (14:28–23:18). ஏசாயா இப்போது, மத்தியதரைக் கடலோரத்திலுள்ள பெலிஸ்தியாவையும் பின்பு சவக்கடலுக்குத் தென்கிழக்கிலுள்ள மோவாபையும் குறிப்பிடுகிறார். மேலும், இஸ்ரவேலின் வட எல்லைக்கு அப்பாலுள்ள சீரியாவின் தமஸ்கு, தெற்கிலுள்ள எத்தியோப்பியா, நைல் நதி, எகிப்து ஆகியவற்றைக் குறித்து தீர்க்கதரிசனம் உரைக்கிறார். கடவுளுடைய நியாயத்தீர்ப்புகள் அந்த இடங்களையெல்லாம் முற்றிலுமாக அழித்துவிடும் என்பதாக கூறுகிறார். சனகெரிப்புக்கு முன்னால் பதவியிலிருந்த அசீரிய அரசனுடைய பெயர் சர்கோன். இவன் தனது படைத்தலைவனாகிய தர்த்தானை, எருசலேமுக்கு மேற்கிலிருந்த பெலிஸ்திய பட்டணமாகிய அஸ்தோத்துக்கு எதிராக அனுப்புவதைக் குறித்து சொல்கிறார். இந்தச் சமயத்தில் மூன்று ஆண்டுகளுக்கு ஏசாயா காலணிகளையும் ஆடையையும் களைந்துவிட்டு செல்லும்படி கட்டளையிடப்படுகிறார். இவ்வாறு எகிப்திலும் எத்தியோப்பியாவிலும் நம்பிக்கை வைப்பதன் பயனற்ற தன்மையை தெளிவாக எடுத்துக்காட்டுகிறார். அசீரியன் எகிப்தியரையும் எத்தியோப்பியரையும் சிறைபிடித்து “இருப்பிடம் மூடப்படாதவர்களாய்” கொண்டு செல்வான்.—20:4.
16 தன் காவற்கோபுரத்திலிருந்து வெளி நோட்டமிடுகிறார். பாபிலோனும் அதன் தெய்வங்களும் வீழ்ச்சியடைவதைக் காண்கிறார். மேலும், ஏதோமுக்கு வரவிருக்கும் துன்பங்களையும் காண்கிறார். “புசிப்போம் குடிப்போம், நாளைக்குச் சாவோம்” என்பதாக சொல்லும் எருசலேமின் கீழ்ப்படியாத ஜனங்களை நோக்கி, ‘மெய்யாகவே சாவீர்கள்’ என்று யெகோவா கூறுகிறார். (22:13, 14) தர்ஷீஸின் கப்பல்கள் அலற வேண்டும், சீதோன் வெட்கப்பட வேண்டும். ஏனெனில் “பூமியிலே மதிப்புள்ள யாவருக்கும் அவமதிப்பு உண்டாக்க” தீருக்கு எதிராக யெகோவா ஆலோசனை கொடுத்திருக்கிறார்.—23:9, தி.மொ.
17 யெகோவாவின் நியாயத்தீர்ப்பும் இரட்சிப்பும் (24:1–27:13). ஆனால் இப்போது யூதாவைப் பாருங்கள்! யெகோவா அந்த தேசத்தை வெறுமையாக்குகிறார். ஜனங்களும் ஆசாரியரும், வேலைக்காரரும் எஜமானரும், விற்கிறவரும் வாங்குகிறவரும்—எல்லாரும் போய்விட வேண்டும். ஏனெனில் அவர்கள் கடவுளுடைய சட்டங்களை பின்பற்றவில்லை. என்றென்றும் நிலைத்திருக்கும் உடன்படிக்கையையும் மீறினார்கள். ஆனால் ஏற்ற காலத்தில் அவர் தம்முடைய கவனத்தை சிறைப்பட்ட மக்களிடமாக திருப்பி அவர்களைக் கூட்டிச் சேர்ப்பார். அவர் பலத்த கோட்டையும் அடைக்கலமுமாக இருக்கிறார். அவர் தம்முடைய மலைமீது ஒரு விருந்தை ஏற்பாடு செய்து மரணத்தை என்றுமாக முடிவுக்கு கொண்டுவருவார். மேலும் எல்லா முகங்களிலுமிருந்தும் கண்ணீரை துடைப்பார். “இவரே நமது கடவுள்” என்று சொல்லப்படும். “இவரே யெகோவா.” (25:9, தி.மொ.) யூதா இரட்சிப்பை மதில்களாக கொண்டுள்ள ஒரு நகரம். யெகோவாவில் நம்பிக்கை வைப்போருக்குத் தொடர்ந்து சமாதானம் உண்டு. ஏனெனில் “ஆண்டவராகிய யெகோவாவிலே நித்திய கன்மலையுண்டு.” ஆனால் பொல்லாதவன் “நீதியைக் கற்றுக்கொள்ளான்.” (26:4, 10, தி.மொ.) யெகோவா தமது எதிரிகளை அழிப்பார். ஆனால் யாக்கோபை அவர் திரும்ப நிலைநாட்டுவார்.
18 யெகோவாவின் கோபமும் ஆசீர்வாதங்களும் (28:1–35:10). எப்பிராயீமின் குடிவெறியருக்கு ஐயோ, அவர்களுடைய “அலங்கார ஜோடிப்பு” வாடிப்போக வேண்டும்! ஆனால் யெகோவா தம்முடைய ஜனத்தின் மீதிபேருக்கு “மகிமையான கிரீடமாகவும், அலங்காரமான முடியாகவும்” ஆகப்போகிறார். (28:1, 5) எனினும், எருசலேமிலுள்ள அகந்தையுள்ளவர்கள், சீயோனில் பரீட்சிக்கப்பட்டதும் விலையேறப் பெற்றதுமான அஸ்திவார கல்லை விட்டுவிட்டு பொய்யிடம் அடைக்கலம் தேடுகின்றனர். ஜலப்பிரவாகம் அவர்கள் எல்லாரையும் அடித்துச்செல்லும். எருசலேமின் தீர்க்கதரிசிகள் தூங்குகிறார்கள். கடவுளுடைய புத்தகம் அவர்களுக்கு முத்திரையிடப்பட்டிருக்கிறது. உதட்டளவில்தான் நெருக்கம், இருதயங்களோ வெகுதூரமாயுள்ளன. ஆனால் அந்த நாள் வரும், அப்போது செவிடர் இந்தப் புத்தகத்தின் வார்த்தைகளைக் கேட்பார்கள். குருடர் காண்பார்கள், மனத்தாழ்மையுள்ளோர் மகிழ்ச்சியடைவார்கள்.
19 அடைக்கலத்திற்காக எகிப்துக்குச் செல்வோருக்கு ஐயோ! பிடிவாதமுள்ள இந்த ஜனங்கள் இதமான, வஞ்சகமான தரிசனங்களையே விரும்புகின்றனர். அவர்கள் அழிக்கப்படுவார்கள், ஆனால் மீதியானோரை யெகோவா நிலைநாட்டுவார். இவர்கள் தங்கள் மகத்தான போதகரைக் காண்பார்கள். தங்கள் விக்கிரகங்களைத் “தீட்டென” அழைத்து அவற்றை எறிந்துவிடுவார்கள்! (30:22) எருசலேமை உண்மையில் பாதுகாக்கிறவர் யெகோவாவே. ஓர் அரசர், தம்முடைய பிரபுக்களுடன் நீதியாக அரசாளுவார். அவர் சமாதானத்தையும் அமைதியையும் பாதுகாப்பையும் என்றென்றும் நிரந்தரமாக கொண்டுவருவார். சமாதான செய்தி கொண்டுவருவோரை நம்பிக்கைத்துரோகம் மனக்கசப்புடன் அழும்படி செய்யும். ஆனால் தம்முடைய சொந்த ஜனத்துக்கு மாண்புமிக்கவரான யெகோவா, நியாயாதிபதியும் நியாயப்பிரமாணிகரும் அரசருமாக இருக்கிறார். அவர்தாமே அவர்களைக் காப்பாற்றுவார். அப்போது, “வியாதிப்பட்டிருக்கிறேன்” என்று நகரவாசிகள் ஒருவரும் சொல்ல மாட்டார்கள்.—33:24.
20 யெகோவாவின் கடுங்கோபம் தேசங்களுக்கு எதிராக வெளிப்படுத்தப்பட வேண்டும். பிணங்கள் நாற்றமெடுக்கும், இரத்தத்தோடு மலைகளும் உருகும். ஏதோம் பாழாக்கப்பட வேண்டும். ஆனால் யெகோவாவால் திரும்பவும் மீட்டுக் கொள்ளப்பட்டவர்களுக்கோ, பாலைவனம் பூத்துக்குலுங்கும், ‘யெகோவாவின் மகிமையும் நமது கடவுளின் அழகும்’ தோன்றும். (35:2, தி.மொ.) குருடரும், செவிடரும், ஊமையரும் சுகமடைவர். யெகோவாவால் மீட்கப்பட்டோர் மகிழ்ச்சியுடன் சீயோனுக்குத் திரும்புகையில் பரிசுத்த வழி அவர்களுக்குத் திறக்கப்படும்.
21 எசேக்கியாவின் நாளில் யெகோவா அசீரியாவைத் திரும்பிச் செல்ல வைக்கிறார் (36:1–39:8). யெகோவாவின்மீது நம்பிக்கை வைக்கும்படி ஏசாயா கொடுத்த அறிவுரை நடைமுறையானதா? அது சோதனையில் நிலைநிற்குமா? எசேக்கியாவினுடைய ஆட்சியின் 14-ம் ஆண்டில், அசீரியாவின் அரசன் சனகெரிப் பலஸ்தீனாவின் வழியாக படையெடுத்து பல பட்டணங்களைக் கைப்பற்றுகிறான். எருசலேமை பயமுறுத்தும்படி தன்னுடைய படையின் ஒரு பகுதியை அனுப்புகிறான். எபிரெய மொழி பேசும் அவனுடைய பேச்சாளனான ரப்சாக்கே, அந்த நகரத்தின் மதில்களில் இருக்கும் ஜனங்களிடம் நிந்தனையான கேள்விக் கணைகளை எய்கிறான். ‘உன் நம்பிக்கை என்ன? நெரிந்த நாணலாகிய எகிப்தா? யெகோவாவா? அசீரியாவின் அரசனிடமிருந்து விடுவிக்கக்கூடிய கடவுள் இல்லை!’ (36:4, 6, 18, 20, தி.மொ.) அரசனுக்குக் கீழ்ப்படிந்து ஜனங்கள் எந்த பதிலும் கொடுப்பதில்லை.
22 யெகோவா தமது பெயரின் காரணமாக இரட்சிப்பை அருளும்படி எசேக்கியா ஜெபிக்கிறார். யெகோவா ஏசாயாவின் மூலம் பதிலளிக்கிறார். அசீரியனின் மூக்கில் தம்முடைய துறட்டைப் போட்டு அவன் வந்த வழியே திரும்ப இழுத்துச் செல்வதாக கூறுகிறார். ஒரு தேவதூதன் 1,85,000 அசீரியர்களை தீர்த்துக்கட்டுகிறார். சனகெரிப் தன் வீட்டுக்கு விரைந்தோடுகிறான். பிறகு சனகெரிப்புடைய புறமத ஆலயத்தில் அவனுடைய சொந்த குமாரர்களே அவனைக் கொலை செய்கின்றனர்.
23 எசேக்கியா மரணப்படுக்கையில் இருக்கிறார். எனினும், அவர் சுகமடைவார் என்பதற்கு அடையாளமாக, சூரிய கடிகாரத்தின் பாகை அற்புதமாக பின்செல்லும்படி யெகோவா செய்கிறார். மேலும் 15 ஆண்டுகள் எசேக்கியாவின் ஆயுட்காலத்தோடு கூட்டப்படுகின்றன. இதற்கு நன்றியாக அவர் யெகோவாவைத் துதித்து அழகிய சங்கீதம் ஒன்றை இயற்றுகிறார். பாபிலோனின் அரசன் தூதுவர்களை அனுப்பி, எசேக்கியா சுகமடைந்ததற்காக போலியான மகிழ்ச்சியை தெரிவிக்கிறான். எசேக்கியா முன்யோசனையின்றி அரசாங்க பொக்கிஷங்களையெல்லாம் அவர்களுக்குக் காட்டுகிறார். இதன் விளைவாக, எசேக்கியாவின் வீட்டிலுள்ள எல்லாம் ஒரு நாள் பாபிலோனுக்குக் கொண்டுசெல்லப்படும் என்று ஏசாயா தீர்க்கதரிசனம் உரைக்கிறார்.
24 யெகோவா தம்முடைய சாட்சிகளை ஆறுதல்படுத்துகிறார் (40:1–44:28). 40-ம் அதிகாரத்தின் தொடக்கச் சொல் “தேற்றுங்கள்” என்பது. இது, ஏசாயாவின் மீதிபாகத்தை நன்றாக விவரிக்கிறது. பாலைவனத்தில் ஒரு குரல் இவ்வாறு கேட்கிறது: “யெகோவாவின் வழியை ஆயத்தப்படுத்துங்கள்.” (40:1, 3, தி.மொ.) சீயோனுக்கு நற்செய்தி. யெகோவா தமது மந்தையை மேய்க்கிறார், இளம் ஆட்டுக்குட்டிகளைத் தம் மார்பில் சுமந்துசெல்கிறார். உயர்ந்த வானங்களிலிருந்து கீழே பூமியை அவர் பார்க்கிறார். மகத்துவத்தில் அவரை எதற்கு ஒப்பிட முடியும்? தம்மை நம்பியிருப்போர் சோர்வடைந்து களைப்புற்றிருக்கையில் அவர் முழு பலத்தையும் சக்தியையும் அளிக்கிறார். தேசத்தாரின் வார்ப்பிக்கப்பட்ட விக்கிரகங்கள் காற்றாகவும் ஒன்றுமில்லாமையாகவும் இருப்பதாக அறிவிக்கிறார். தாம் தெரிந்துகொண்டவர் ஜனங்களுக்கு உடன்படிக்கையாகவும் குருடருடைய கண்களைத் திறக்கும்படி தேசத்தாருக்கு ஒளியாகவும் இருப்பார். “என்னால் நேசிக்கப்பட்டவன்” என்று யெகோவா யாக்கோபிடம் கூறுகிறார். மேலும் கிழக்கையும் மேற்கையும், வடக்கையும் தெற்கையும் நோக்கி, ‘கொடுத்துவிடு. என் குமாரரையும் குமாரத்திகளையும் கொண்டுவா’ என்று கட்டளையிடுகிறார். (43:4, 6, தி.மொ.) நீதிமன்றம் விசாரணைக்கு தயாராக இருக்க, தேசத்தாரின் தெய்வங்கள் தங்களுடைய தெய்வத்துவத்தை நிரூபிப்பதற்குச் சாட்சிகளைக் கொண்டுவரும்படி அவர் சவால்விடுகிறார். இஸ்ரவேல் ஜனங்கள் கடவுளுடைய ஊழியர்கள், யெகோவாவின் சாட்சிகள். இவரே கடவுள் என்றும் இரட்சிப்பவர் என்றும் சாட்சிபகருகின்றனர். யெஷூரனுக்கு (‘நேர்மையானவன்,’ இஸ்ரவேல்) அவர் தம்முடைய ஆவியை அருளுவதாக வாக்குறுதியளிக்கிறார். ஒன்றையும் காணாத, அறியாத சிலைகளை உண்டுபண்ணுவோரை அவமானப்படுத்துகிறார். யெகோவா தம்முடைய ஜனத்தை மீட்பவர்; எருசலேம் மறுபடியும் குடியிருக்கப்படும், அதன் ஆலயம் திரும்ப கட்டப்படும்.
25 பாபிலோனை பழிவாங்குதல் (45:1–48:22). இஸ்ரவேலர்களுக்காக, பாபிலோனை முறியடிக்கப் போகும் கோரேசின் பெயரை யெகோவா குறிப்பிடுகிறார். யெகோவா ஒருவரே கடவுள். வானங்களையும், பூமியையும் அதன்மீது மனிதனையும் படைத்தவர் என்று மனிதர்கள் அறியும்படி செய்யப்படுவார்கள். பாபிலோனின் கடவுட்களாகிய பேல்லையும் நேபோவையும் அவர் ஏளனம் செய்கிறார், ஏனெனில் ஆரம்பம் முதல் முடிவு வரை அனைத்தையும் அவர் மாத்திரமே சொல்ல முடியும். பாபிலோன் குமாரத்தியாகிய கன்னிகை சிங்காசனத்திலிருந்து அகற்றப்பட்டு நிர்வாணமாக மண்ணில் உட்காரப் போகிறாள். அவளுடைய ஏராளமான ஆலோசனைக்காரர்கள் வைக்கோலைப்போல் எரிக்கப்படுவார்கள். தமக்குச் செவிகொடுத்தால் சமாதானத்தையும் நீதியையும் செழுமையையும் அனுபவிக்க முடியும். ஆனால் ‘துன்மார்க்கருக்கோ சமாதானம் இல்லை’ என்று, ‘இரும்பு பிடரியையும் வெண்கல நெற்றியையும்’ உடைய இஸ்ரவேலிலுள்ள விக்கிரக வணக்கத்தாரிடம் யெகோவா சொல்கிறார்.—48:4, 22.
26 சீயோனுக்கு ஆறுதல் (49:1–59:21). யெகோவா தம்முடைய ஊழியனை தேசத்தாருக்கு ஒளியாக அளித்து, இருளில் இருப்போரிடம்: “வெளியே வாருங்கள்” என்று சத்தமிட்டு அழைக்கிறார். (49:9, தி.மொ.) சீயோன் ஆறுதல்படுத்தப்படும். அதன் பாலைவனம் யெகோவாவின் தோட்டமாகிய ஏதோனைப் போலாகும். மகிழ்ச்சியும் களிகூருதலும் நன்றிசெலுத்துதலும் கீதங்களும் நிறைந்திருக்கும். யெகோவா வானங்களைப் புகைபோல் ஒழியச் செய்வார்; பூமியை ஆடையைப்போல பழங்கந்தையாக்குவார். அதில் குடியிருப்பவர்களை சாதாரண பூச்சிகளைப்போல சாக செய்வார். ஆகவே இறக்கப் போகும் மனிதர்களின் நிந்தனைக்கு ஏன் பயப்பட வேண்டும்? எருசலேம் குடித்த கசப்பான பாத்திரம், அதை மிதித்த தேசத்தாரிடம் இப்போது கடத்தப்பட வேண்டும்.
27 ‘எழும்பு, சீயோனே, தூசியை உதறிவிட்டு எழுந்திரு!’ “உன் கடவுள் அரசாளுகிறார்” என்று சீயோனுக்குச் சொல்லிக்கொண்டு நற்செய்தியுடன் மலைகளின்மீது துள்ளிவரும் தூதனை பார்! (52:1, 2, 7, தி.மொ.) யெகோவாவை சேவிப்போரே, நீங்கள் அந்த அசுத்தமான இடத்தைவிட்டு வெளியேறி, உங்களைச் சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள். இப்போது ‘யெகோவாவின் தாசரைப்’ பற்றி தீர்க்கதரிசி விவரிக்கிறார். (53:11, தி.மொ.) அவர் அசட்டை பண்ணப்பட்டவரும், புறக்கணிக்கப்பட்டவரும், நம்முடைய வேதனைகளைச் சுமப்பவருமான ஒரு மனிதர். எனினும் கடவுளால் அடிக்கப்பட்டவராக எண்ணப்படுகிறார். நம்முடைய மீறுதல்களின் காரணமாக அவர் ஊடுருவக் குத்தப்பட்டார், ஆனால் தம்முடைய காயங்களால் நம்மைச் சுகப்படுத்தினார். கொல்லப்படுவதற்குக் கொண்டுவரப்பட்ட செம்மறியாட்டைப்போல் அவர் எந்த வன்முறையிலும் ஈடுபடவில்லை, ஒரு வஞ்சனையும் பேசவில்லை. பலருடைய குற்றங்களைச் சுமப்பதற்காக அவர் தம்முடைய ஆத்துமாவைக் குற்றநிவாரண பலியாக செலுத்தினார்.
28 சீயோனுக்கு வரவிருக்கும் பிள்ளைகளுடைய பெருக்கத்தின் காரணமாக ஆனந்தமாக சத்தமிடும்படி, கணவரைப் போன்ற உரிமையாளராக யெகோவா சீயோனுக்கு கூறுகிறார். துன்பமெனும் பெரும்காற்றில் அடிபட்டபோதிலும் அது நீலமணிக் கற்களாலான அஸ்திவாரங்களையும், மாணிக்க அலங்கங்களையும், பிரகாசிக்கும் பளிங்கு கற்களாலாகிய வாசல்களையும் உடைய ஒரு நகரமாகும். யெகோவாவால் கற்பிக்கப்பட்ட அதன் குமாரர்கள் மிகுதியான சமாதானத்தை அனுபவித்து மகிழ்வார்கள். அவர்களுக்கு எதிராக உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வெற்றி பெறாது. “ஓ தாகமாயிருக்கிறவர்களே” என்று யெகோவா சத்தமாக அழைக்கிறார். அவர்கள் வந்தால், ‘தாவீதுக்கு அருளின அன்புள்ள தயவுகளுக்குரிய தம்முடைய உடன்படிக்கையை’ அவர்களோடு செய்வார். தேசியத் தொகுதிகளுக்கு சாட்சியாக ஒரு தலைவரையும் அதிபதியையும் அவர் கொடுப்பார். (55:1-4) கடவுளுடைய நினைவுகள் மனிதனுடைய நினைவுகளைப் பார்க்கிலும் எல்லையற்ற அளவுக்கு உயர்வானவை. அவருடைய வார்த்தை நிச்சயமாகவே நிறைவேறும். அவருடைய சட்டத்தைக் கைக்கொள்ளும் அண்ணகர்கள் எந்த ஜனத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும், குமாரர்களையும் குமாரத்திகளையும் பார்க்கிலும் மேம்பட்ட ஒரு பெயரை அடைவார்கள். யெகோவாவின் வீடு எல்லா ஜனங்களுக்கும் ஜெபவீடு எனப்படும்.
29 உயர்ந்தவரும் உன்னதமானவருமாக, பரிசுத்தர் என்ற பெயரையுடைய யெகோவா, இஸ்ரவேலோடு என்றென்றும் போராடப் போவதில்லை என்று, காமவெறியர்களான விக்கிரங்களை வணங்குவோரிடம் சொல்கிறார். அவர்களுடைய வெளி வேஷமான உபவாசங்கள் அக்கிரமத்தை மறைப்பதற்காக திட்டமிடப்பட்டவை. இரட்சிக்க முடியாதபடி யெகோவாவின் கரம் மிகக் குறுகியதாகவும் இல்லை, அவருடைய செவி மந்தமாகவும் இல்லை. “உங்கள் அக்கிரமங்களே உங்களுக்கும் உங்கள் தேவனுக்கும் நடுவாகப் பிரிவினை உண்டாக்குகிறது” என்று ஏசாயா சொல்கிறார். (59:2) அதன் காரணமாகவே அவர்கள் ஒளிக்குக் காத்திருக்கிறார்கள்; ஆனால் காரிருளில் தட்டுத்தடுமாறுகிறார்கள். மறுபட்சத்தில், அவருடைய ஆவியை பெற்று, உடன்படிக்கையின் கீழிருக்கும் உண்மையுள்ள ஜனத்தை பற்றியென்ன? இவர்கள் வாயிலும் இவர்களுடைய எதிர்கால சந்ததிகளுடைய வாயிலும் கடவுளுடைய வார்த்தை நிரந்தரமாக இருக்கும் என்பதாக யெகோவாவின் ஆவி உத்தரவாதமளிக்கிறது.
30 யெகோவா சீயோனை அழகுபடுத்துகிறார் (60:1–64:12). பெண்ணே “எழும்பி ஒளிவீசு, உன் ஒளி வந்தது, யெகோவாவின் மகிமை உன்மேல் உதித்தது.” இதற்கு நேர்மாறாக, காரிருள் பூமியை மூடுகிறது. (60:1, 2, தி.மொ.) அந்தச் சமயத்தில் சீயோன் தன் கண்களை ஏறெடுத்து, தேசங்களின் செல்வங்கள் திரளான ஒட்டகங்கள்மீது தன்னிடம் வருவதை பார்த்து முகம் மலர்வாள். அவளுடைய இருதயம் மகிழ்ந்து பூரிக்கும். மேகங்களைப்போன்று கூட்டமாய்ப் பறந்துவரும் புறாக்களைப்போல் அவர்கள் அவளிடம் கூடுவார்கள். அன்னியர்கள் அவளுடைய மதில்களைக் கட்டுவார்கள். அரசர்கள் அவளுக்கு ஊழியம் செய்வார்கள். அவளுடைய வாசல்கள் எப்பொழுதும் திறந்தேயிருக்கும். கடவுளே அவளுடைய அழகாக வேண்டும். அவர் ஒருவனை ஆயிரமாகவும் சிறியவனை பலத்த ஜனமாகவும் விரைவில் பெருகச் செய்வார். யெகோவாவின் ஆவி தன்மீது இருப்பதாகவும் இந்த நற்செய்தியைச் சொல்லும்படி தன்னை அபிஷேகம் செய்ததாகவும் கடவுளுடைய தாசர் கூறுகிறார். எனக்குப் பிரியமானவள் (எப்சிபா) என்ற ஒரு புதிய பெயரை சீயோன் பெறுகிறது. மேலும் அவளுடைய தேசம், மனைவியாக்கப்பட்டது (பியூலா) என்பதாக அழைக்கப்படுகிறது. (62:4, NW அடிக்குறிப்பு) பாபிலோனிலிருந்து திரும்பிவரும் நெடுஞ்சாலையை செம்மையாக்கும்படியும் சீயோனில் அடையாளத்தை உண்டுபண்ணும்படியும் கட்டளை பிறப்பிக்கப்படுகிறது.
31 ஏதோமில் பொஸ்ராவிலிருந்து இரத்தச் சிவப்பு நிற ஆடையணிந்த ஒருவர் வருகிறார். கோபத்தில் அவர் ஜனங்களை திராட்சமது ஆலையில் மிதித்து, அவர்களுடைய இரத்தம் பீறித்தெறிக்கச் செய்திருக்கிறார். யெகோவாவின் ஜனங்கள் தங்கள் அசுத்தமான நிலைமையை மனதார உணர்ந்து, ‘யெகோவாவே, நீர் எங்கள் பிதா, நாங்கள் களிமண், நீர் எங்களை உருவாக்குகிறவர். யெகோவாவே, அதிகமாய்க் கடுங்கோபங்கொள்ளாதிரும், நாங்கள் அனைவரும் உமது ஜனமே’ என்று சொல்லி, உருக்கமாக ஜெபிக்கின்றனர்.—64:8, 9, தி.மொ.
32 ‘புதிய வானங்களும் புதிய பூமியும்’! (65:1–66:24). யெகோவாவைவிட்டு விலகி “அதிஷ்டம்,” “விதி” ஆகிய தேவர்களை நாடிச்சென்ற ஜனங்கள் பட்டினியால் வெட்கமடைவார்கள். (65:11, தி.மொ.) கடவுளுடைய சொந்த ஊழியர்களோ மிகுதியால் களிகூருவார்கள். இதோ! புதிய வானங்களையும் புதிய பூமியையும் யெகோவா சிருஷ்டிக்கிறார். எருசலேமிலும் அதன் ஜனத்திலும் எத்தகைய மகிழ்ச்சியும் களிகூருதலும் கரைபுரண்டு ஓடும்! வீடுகள் கட்டப்படும். திராட்சை தோட்டங்கள் நாட்டப்படும். ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒன்றாக மேயும். தீங்கோ அழிவோ இராது.
33 வானங்கள் யெகோவாவின் சிங்காசனம், பூமி அவருடைய பாதபடி. ஆகவே, மனிதர் அவருக்கு எவ்வாறு வீடு கட்டமுடியும்? ஒரே நாளில் ஒரு தேசம் பிறக்கப் போகிறது, நதியைப்போன்ற சமாதானத்தை யெகோவா எருசலேமுக்குப் பெருகச் செய்கிறார். அப்போது எருசலேமை நேசிப்போர் யாவரும் களிகூரும்படி அழைக்கப்படுகின்றனர். அவர் தம்முடைய எதிரிகளுக்கு முன்பாக அக்கினியைப்போலவே வருவார்—கீழ்ப்படியாத மாம்சமானோர் யாவருக்கும் எதிராக பெருங்காற்று இரதங்கள் கடுமையான சீற்றத்துடனும் அக்கினி சுடர்களுடனும் அவருடைய கோபத்தை கொப்பளிக்கும். அவருடைய மகிமையை சொல்வதற்கு தூதுவர்கள் எல்லா தேசங்களுக்கும், நெடுந்தொலைவிலுள்ள தீவுகளுக்கும் செல்வார்கள். அவருடைய புதிய வானங்களும் பூமியும் நிரந்தரமாக இருக்கும். அதைப் போலவே அவரைச் சேவிப்பவர்களும் அவர்களுடைய சந்ததியாரும் நிலைத்திருப்பார்கள். ஒன்று இப்படிப்பட்ட நித்திய வாழ்வு அல்லது நித்திய மரணம்.
ஏன் பயனுள்ளது
34 எந்த கோணத்திலிருந்து பார்த்தாலும், ஏசாயாவின் இந்தத் தீர்க்கதரிசன புத்தகம் யெகோவா தேவனின் அதிக பயனுள்ள அன்பளிப்பாகும். கடவுளுடைய உன்னத நினைவுகளின் ஒளியை இது வீசுகிறது. (ஏசா. 55:8-11) பைபிள் சத்தியங்களை எடுத்துப் பேசுபவர்கள், இயேசுவின் உவமைகளைப்போல் இருதயத்தில் ஆழமாய்ப் பதியும் தெளிவான எடுத்துக்காட்டுகளின் களஞ்சியமாக ஏசாயா புத்தகத்தை பயன்படுத்தலாம். எரிப்பதற்கும், வணங்குவதற்கு விக்கிரகம் செய்வதற்கும் ஒரே மரத்தைப் பயன்படுத்தும் மனிதனின் மடத்தனத்தை ஏசாயா வல்லமைவாய்ந்த முறையில் நம் மனதில் பதிய வைக்கிறார். மிகச் சிறிய கட்டிலில் சிறிய போர்வையோடு படுத்திருக்கும் மனிதனின் அசெளகரியத்தை நாம் உணரும்படி செய்கிறார். மேலும், குலைப்பதற்கும் அதிக சோம்பேறியாக இருக்கும் ஊமை நாய்களைப்போல், தீர்க்கதரிசிகளின் அயர்ந்த தூக்கத்தின் குறட்டை சத்தத்தை நாம் கேட்கும்படி செய்கிறார். ஏசாயா அறிவுரை கூறுகிறபடி, நாம்தாமே ‘யெகோவாவின் புஸ்தகத்திலே தேடி சத்தமாய் வாசித்தால்,’ இந்நாளுக்கான ஏசாயாவின் வல்லமைவாய்ந்த செய்தியை மதித்துணரலாம்.—44:14-20; 28:20; 56:10-12; 34:16, தி.மொ.
35 இந்தத் தீர்க்கதரிசனம், மேசியாவால் ஆளப்படும் கடவுளுடைய ராஜ்யத்திடம் கவனத்தை ஒருமுகப்படுத்துகிறது. யெகோவாதாமே ஈடற்ற உன்னத அரசர், அவரே நம்மை இரட்சிக்கிறார். (33:22) ஆனால் மேசியாவைப் பற்றியது என்ன? பிறக்கப் போகிற பிள்ளையைப் பற்றி மரியாளுக்கு தேவதூதன் அறிவித்தார். அவர் தாவீதின் சிங்காசனத்தைப் பெறும்போது, ஏசாயா 9:6, 7 நிறைவேறப் போவதை அந்த அறிவிப்பு சுட்டிக்காட்டியது; “அவர் யாக்கோபின் குடும்பத்தாரை என்றென்றைக்கும் அரசாளுவார்; அவருடைய ராஜ்யத்துக்கு முடிவிராது.” (லூக். 1:32, 33) ஒரு கன்னி பெண்ணுக்கு இயேசு பிறந்தது ஏசாயா 7:14-ன் நிறைவேற்றமென மத்தேயு 1:22, 23 குறிப்பிட்டு, அவரை “இம்மானுவேல்” என அடையாளம் காட்டுகிறது. ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்குப் பின், முழுக்காட்டுபவராகிய யோவான், “பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது” என்று பிரசங்கித்தார். இந்த யோவானே ‘வனாந்தரத்தில் கூப்பிடுகிறவன்’ என்று காட்டுவதற்கு, நான்கு சுவிசேஷ எழுத்தாளர்களும் ஏசாயா 40:3-ஐ மேற்கோளாக குறிப்பிடுகின்றனர். (மத். 3:1-3; மாற். 1:2-4; லூக். 3:3-6; யோவா. 1:23) தேசங்களை ஆளும்படி இயேசு, தம்முடைய முழுக்காட்டுதலின்போது மேசியாவாக, அதாவது யெகோவாவால் அபிஷேகம் பண்ணப்பட்டவராக ஆனார். இப்படியாக, ஈசாயின் வேர் அல்லது கிளையாக ஆனார். ஏசாயா 11:1, 10-ன் நிறைவேற்றமாக அவரையே தேசங்கள் நம்ப வேண்டும்.—ரோ. 15:8, 12.
36 அரசராகிய மேசியாவை ஏசாயா எவ்வாறு தொடர்ந்து அடையாளம் காட்டுகிறார் என்பதைப் பாருங்கள்! தாம் யெகோவாவால் அபிஷேகம் செய்யப்பட்டவர் என்பதை காட்டுவதற்கு, இயேசு ஏசாயாவின் சுருளிலிருந்து தமது நியமிப்பை வாசித்தார். பின்பு ‘கடவுளின் ராஜ்ய நற்செய்தியைப் பிரசங்கிப்பதில்’ ஈடுபட்டார். ஏனெனில் “இதற்காகவே அனுப்பப்பட்டேன்” என்றார் அவர். (லூக். 4:17-19, 43, தி.மொ.; ஏசா. 61:1, 2) இந்த நான்கு சுவிசேஷ பதிவுகளும் இயேசுவின் பூமிக்குரிய ஊழியத்தையும் ஏசாயா 53-ம் அதிகாரத்தில் முன்னறிவித்தபடி அவருடைய மரணத்தையும் பற்றிய நுட்பவிவரங்கள் நிரம்பியவையாக இருக்கின்றன. ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியை யூதர்கள் கேட்டு, இயேசுவின் அற்புதமான செயல்களைக் கண்டனர். என்றபோதிலும், ஏசாயா 6:9, 10; 29:13; 53:1 ஆகியவற்றின் நிறைவேற்றமாக, அவர்கள் தங்கள் அவிசுவாச இருதயங்களின் காரணமாக அவற்றின் சரியான அர்த்தத்தைப் புரிந்துகொள்ளவில்லை. (மத். 13:14, 15; யோவா. 12:38-40; அப். 28:24-27; ரோ. 10:16; மத். 15:7-9; மாற். 7:6, 7) இயேசு அவர்களுக்கு இடறல் கல்லாக இருந்தார். ஆனால், அவர் சீயோனில் யெகோவா வைத்த அஸ்திவார மூலைக்கல்லானார். அதன் மீதே அவர், ஏசாயா 8:14, 28:16 ஆகியவற்றின் நிறைவேற்றமாக தம்முடைய ஆவிக்குரிய வீட்டைக் கட்டுகிறார்.—லூக். 20:17; ரோ. 9:32, 33; 10:11; 1 பே. 2:4-10.
37 இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலர்கள் ஏசாயாவின் தீர்க்கதரிசனத்தை தொடர்ந்து ஊழியத்துக்குப் பொருத்தி, நன்றாக பயன்படுத்தினர். உதாரணமாக, விசுவாசத்தை பலப்படுத்துவதற்கு பிரசங்கிப்பவர்கள் தேவை என்று காட்ட, பவுல் பின்வருமாறு ஏசாயாவிலிருந்து மேற்கோள் காட்டுகிறார்: “நற்காரியங்களைச் சுவிசேஷமாய் அறிவிக்கிறவர்களுடைய பாதங்கள் எவ்வளவு அழகானவைகள்”! (ரோ. 10:15; ஏசா. 52:7; இதையும் பாருங்கள்: ரோமர் 10:11, 16, 20, 21.) நற்செய்தியின் நிலையான தன்மையைக் காட்டுவதில் பேதுருவும் ஏசாயாவை மேற்கோளாக குறிப்பிடுகிறார்: “ஏனெனில், ‘மாம்சமெல்லாம் புல்லைப்போலுள்ளது; அதன் மகிமையெல்லாம் புல்லின் பூவைப்போலுள்ளது; புல் உலர்ந்துவிடுகிறது, பூவும் உதிர்ந்துவிடுகிறது, யெகோவாவின் வசனமோ என்றென்றும் நிலைத்திருக்கிறது.’ இதுவே அந்த ‘வசனம்,’ நற்செய்தியாக உங்களுக்கு அறிவிக்கப்படுகிறதும் இதுவே.”—1 பே. 1:24, 25, NW; ஏசா. 40:6-8.
38 எதிர்காலத்துக்கான ராஜ்ய நம்பிக்கையை ஏசாயா அருமையாக வருணிக்கிறார்! இதோ! “புதிய வானங்களும் புதிய பூமியும்.” இதில் ஒரு ராஜா ‘நீதியாக அரசாளுவார்.’ அதிபதிகளும் நியாயமாக அதிகாரம் செலுத்துவார்கள். மகிழ்வதற்கும் களிகூருவதற்கும் எப்பேர்ப்பட்ட காரணம் இது! (65:17, 18, NW; 32:1, 2, தி.மொ.) மறுபடியுமாக, பேதுரு ஏசாயாவின் மகிழ்ச்சியளிக்கும் இந்த செய்தியை குறிப்பிடுகிறார்: “அவருடைய [கடவுளுடைய] வாக்குத்தத்தத்தின்படியே நீதி வாசமாயிருக்கும் புதிய வானங்களும் புதிய பூமியும் உண்டாகுமென்று காத்திருக்கிறோம்.” (2 பே. 3:13) ராஜ்யத்தைக் குறித்த இந்த அருமையான மையப்பொருள் வெளிப்படுத்துதலின் முடிவான அதிகாரங்களில் முழுமையான மகிமையை அடைகிறது.—ஏசா. 66:22, 23; 25:8; வெளி. 21:1-5.
39 இவ்வாறு, யெகோவாவின் எதிரிகளுக்கும் அவருடைய ஊழியர்களாக பாசாங்குத்தனம் செய்பவர்களுக்கும் கடுமையான கண்டன தீர்ப்புகளை ஏசாயாவின் புத்தகம் அறிவிக்கிறது. இருந்தபோதும், யெகோவாவின் மகா பெயரை பரிசுத்தப்படுத்தப்போகும் மேசியானிய ராஜ்யத்தைப் பற்றிய மேன்மையான நம்பிக்கையை உயர்வானதாக குறிப்பிடுகிறது. யெகோவாவுடைய ராஜ்யத்தின் அருமையான சத்தியங்களை விளக்குகிறது. மேலும், ‘அவரால் வரும் இரட்சிப்பின்’ மகிழ்ச்சியுள்ள எதிர்பார்ப்பினால் நம்முடைய இருதயத்திற்கு இதமளிப்பதில் இப்புத்தகம் பெரும் பங்காற்றுகிறது.—ஏசா. 25:9; 40:28-31.
[அடிக்குறிப்புகள்]
a வேதாகமத்தின்பேரில் உட்பார்வை, தொ. 1, பக்கங்கள் 1221-3.
b வேதாகமத்தின்பேரில் உட்பார்வை, தொ. 1, பக்கம் 957; தொ. 2, பக்கங்கள் 894-5.
c வேதாகமத்தின்பேரில் உட்பார்வை, தொ. 2, பக்கம் 324.
[கேள்விகள்]
1. பொ.ச.மு. எட்டாம் நூற்றாண்டில், மத்திய கிழக்கில், முக்கியமாக இஸ்ரவேலிலும் யூதாவிலும் எப்படிப்பட்ட நிலைமை இருந்தது?
2. (அ) யெகோவாவின் சார்பாக பேசுவதற்கான அழைப்புக்கு பதிலளித்தது யார், எப்போது? (ஆ) இந்தத் தீர்க்கதரிசியுடைய பெயரின் முக்கியத்துவம் என்ன?
3. (அ) ஏசாயாவை குறித்து என்ன அறியப்பட்டிருக்கிறது? (ஆ) எந்தக் காலப்பகுதியில் அவர் தீர்க்கதரிசனம் உரைத்தார், அவருடைய நாளிலிருந்த மற்ற தீர்க்கதரிசிகள் யாவர்?
4. ஏசாயாவே இந்தப் புத்தகத்தின் எழுத்தாளர் என்பதை எது காட்டுகிறது?
5. ஏசாயா புத்தகத்தின் ஒருமைப்பாட்டுக்கு எது சாட்சி பகருகிறது?
6. ஏசாயாவின் சவக் கடல் சுருள் எவ்வாறு இவற்றிற்கு நம்பகமான நிரூபணத்தை அளிக்கிறது (அ) ஆரம்பத்தில் ஏவப்பட்டு எழுதப்பட்டவையே இன்று நம்முடைய பைபிள்களிலும் உள்ளன, (ஆ) அந்த முழு புத்தகமும் ஏசாயாவால் எழுதப்பட்டது?
7. ஏசாயா புத்தகத்தின் நம்பகத் தன்மைக்கு என்ன ஏராளமான நிரூபணங்கள் உள்ளன?
8. தேவாவியால் ஏவப்பட்டது என்பது, மேசியாவைப் பற்றிய தீர்க்கதரிசனங்களின் நிறைவேற்றத்தால் எவ்வாறு நிரூபிக்கப்படுகிறது?
9. ஏசாயா புத்தகத்தில் உள்ளவற்றை எவ்வாறு பிரிக்கலாம்?
10. (அ) காரியங்களைச் சரிசெய்யும்படி ஏசாயா ஏன் அந்த ஜனங்களை அழைக்கிறார்? (ஆ) கடைசி நாட்களைப் பற்றி அவர் என்ன தீர்க்கதரிசனம் உரைக்கிறார்?
11. எந்த தரிசனத்தோடு ஏசாயா தனது பொறுப்பை பெறுகிறார்?
12. (அ) ஏசாயாவும் அவருடைய குமாரரும் எவ்வாறு தீர்க்கதரிசன அடையாளங்களாக பயன்படுத்தப்படுகின்றனர்? (ஆ) ஏசாயா 9-ம் அதிகாரத்தில் முக்கியமான என்ன வாக்குறுதி கொடுக்கப்படுகிறது?
13. (அ) திமிர்பிடித்த அசீரியனுக்கு என்ன முடிவு காத்திருக்கிறது? (ஆ) ஈசாயிலிருந்து தோன்றிய அந்தக் ‘கிளையின்’ ஆட்சியிலிருந்து என்ன பயன் ஏற்படும்?
14. பாபிலோனுக்கு என்ன வீழ்ச்சி முன்னறிவிக்கப்படுகிறது?
15. சர்வதேச பேரழிவுகளைக் குறித்து ஏசாயா என்ன தீர்க்கதரிசனம் உரைக்கிறார்?
16. பாபிலோனுக்கும் ஏதோமுக்கும் எருசலேமின் கீழ்ப்படியாத ஜனங்களுக்கும், சீதோனுக்கும் தீருவுக்கும் என்ன துன்பங்கள் வரவிருக்கின்றன?
17. யூதா ஆக்கினைத்தீர்ப்பை பெறுவது குறித்தும், திரும்ப நிலைநாட்டப்படுவதைக் குறித்தும் என்ன முன்னறிவிக்கப்படுகின்றன?
18, 19. (அ) எப்படிப்பட்ட துன்பங்களும் மகிழ்ச்சிகளும் எப்பிராயீமுக்கும் சீயோனுக்கும் அறிவிக்கப்படுகின்றன? (ஆ) என்ன ஸ்தானங்களில் யெகோவா தம்முடைய ஜனத்தை இரட்சித்து, ஆளுவார்?
20. தேசங்களுக்கு எதிராக என்ன கடுங்கோபம் வெளிப்படுத்தப்படும், ஆனால் நிலைநாட்டப்பட்ட மீதியானோருக்கு என்ன ஆசீர்வாதம் காத்திருக்கிறது?
21. அசீரியன் எருசலேமை எவ்வாறு நிந்திக்கிறான்?
22. எசேக்கியாவின் ஜெபத்திற்கு யெகோவா எவ்வாறு பதிலளிக்கிறார், மேலும் ஏசாயாவின் தீர்க்கதரிசனத்தை அவர் எவ்வாறு நிறைவேற்றுகிறார்?
23. (அ) யெகோவாவுக்கு சங்கீதத்தை எசேக்கியா எந்தச் சந்தர்ப்பத்தில் இயற்றுகிறார்? (ஆ) அவர் யோசனையில்லாமல் என்ன தவறுசெய்கிறார், இதனால் ஏசாயா என்ன தீர்க்கதரிசனம் சொல்கிறார்?
24. (அ) ஆறுதலான என்ன செய்தியை யெகோவா அறிவிக்கிறார்? (ஆ) தேசத்தாரின் தெய்வங்கள் மகத்துவத்தில் யெகோவாவுக்கு ஒப்பாகுமா, என்ன சாட்சியைக் கொண்டுவரும்படி அவர் சவால்விடுகிறார்?
25. பாபிலோனின்மீதும் அதன் பொய்த் தெய்வங்கள்மீதும் நிறைவேற்றப்படும் யெகோவாவின் நியாயத்தீர்ப்புகளால் மனிதர்கள் என்ன அறிந்துகொள்வார்கள்?
26. சீயோன் எவ்வாறு ஆறுதல்படுத்தப்படும்?
27. என்ன நற்செய்தி சீயோனுக்கு அறிவிக்கப்படுகிறது, ‘யெகோவாவின் தாசரைக்’ குறித்து என்ன தீர்க்கதரிசனம் உரைக்கப்படுகிறது?
28. சீயோனுக்கு வரவிருக்கும் ஆசீர்வாதமான நிலை எவ்வாறு விவரிக்கப்படுகிறது, எந்த உடன்படிக்கை சம்பந்தமாக?
29. விக்கிரகங்களை வணங்குவோரிடம் யெகோவா என்ன சொல்கிறார், ஆனால் தம்முடைய ஜனத்துக்கு என்ன உறுதியளிக்கிறார்?
30. புதிய பெயர்களால் காட்டப்பட்டுள்ளபடி, யெகோவா எவ்வாறு சீயோனை அழகுபடுத்துகிறார்?
31. ஏதோமிலிருந்து வருவது யார், கடவுளுடைய ஜனங்கள் எவ்வாறு ஜெபிக்கின்றனர்?
32. யெகோவாவைவிட்டு விலகிப்போனவர்களைப்போல அல்லாமல், யெகோவாவின் சொந்த ஜனங்கள் எதன் காரணமாக மகிழ்ச்சியடையலாம்?
33. எருசலேமை நேசிப்போருக்கு என்ன களிகூருதலும் மகிமையும் நிலையான வாழ்வும் முன்னறிவிக்கப்படுகின்றன?
34. ஏசாயாவின் செய்திக்கு வல்லமையைக் கூட்டும் தத்ரூபமான உவமைகள் சில யாவை?
35. மேசியாவின் ராஜ்யத்திடமும், முன்னோடியான முழுக்காட்டுபவராகிய யோவானிடமும் ஏசாயா எவ்வாறு கவனத்தை ஒருமுகப்படுத்துகிறார்?
36. எந்த முக்கியமான தீர்க்கதரிசன நிறைவேற்றங்கள் மேசியாவாகிய அரசரைத் தெளிவாக அடையாளம் காட்டுகின்றன?
37. இயேசுவின் அப்போஸ்தலர்கள் எவ்வாறு ஏசாயாவிலிருந்து மேற்கோள் காட்டினர், பொருத்திப் பயன்படுத்தினர்?
38. மற்ற பைபிள் எழுத்தாளர்கள் பின்னர் குறிப்பிட்ட எந்த மகிமையான ராஜ்ய மையப் பொருள் ஏசாயா புத்தகத்தில் வருணிக்கப்படுகிறது?
39. எந்த மேன்மையான நம்பிக்கையை ஏசாயா குறிப்பிடுகிறது?