இயேசு—ஆளுபவர் ‘அவருடைய உற்பத்தி அநாதிநாட்களாகிய பூர்வத்திலிருந்தது’
நெடுங்காலம் காணாத ஓர் உறவினரின் வருகைக்காக நீங்கள் காத்திருக்கையில் உற்சாகம் பொங்குகிறது. கடைசியாக, அவர் வருகையில் அவரை நீங்கள் எதிர்கொண்டு அன்போடு வரவேற்கிறீர்கள். அவர், உங்களைச் சந்திக்கும்படி தன் தகப்பன் தன்னை ஏன் அனுப்பினார் என்று உங்களுக்குச் சொல்கையில் நீங்கள் கவனமாய்ச் செவிகொடுத்துக் கேட்கிறீர்கள். பின்பு, அவர் தன் வீட்டுக்குத் திரும்பிச் செல்வதற்கான நேரம் விரைவில் வருகிறது. வருத்தத்துடன், அவருக்குப் பிரியாவிடை கொடுக்கிறீர்கள். அவர் பத்திரமாய் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்துவிட்டார் என்ற செய்தி வருகையில், அவர் பிரிந்து சென்றபோது உங்களுக்கு உண்டான இழப்பு உணர்ச்சி குறைகிறது.
பிற்பாடு, பழைய கடிதங்கள் சிலவற்றைத் தேடி பார்வையிடுகையில், உங்கள் உறவினர் உங்களைப் பார்க்கும்படி பயணப்பட தொடங்குவதற்கு வெகு காலத்திற்கு முன்பாகவே, அவர் நடப்பிக்கப்போகிற அரும் செயல்களைப்பற்றி சுருக்கமாய்க் குறிப்பிட்ட கடிதங்களைக் காண்கிறீர்கள். அந்தக் கடிதங்கள் உங்களுக்குத் தெரிவிப்பவை, அவருடைய தொடக்க சம்பந்தமானவற்றைப் பற்றியதில் அக்கறையைத் தூண்டும் உட்பார்வையை உங்களுக்கு அளித்து, அவருடைய சந்திப்புக்கும் அவருடைய தற்போதைய சேவைக்கும் உங்களுக்கு இருக்கும் நன்றிமதித்துணர்வை பெருகச் செய்கிறது.
‘அநாதிநாட்களாகிய பூர்வத்திலிருந்து’
முதல் நூற்றாண்டு யூதர்களுக்குக் கிடைக்கக்கூடியவையாக இருந்த அந்தப் பூர்வ ஆவணங்களுக்குள் கடவுளுடைய தீர்க்கதரிசியாகிய மீகா, ஏறக்குறைய எழுநூறு ஆண்டுகளுக்கு முன்பாக எழுதினதும் இருந்தது. இது மேசியாவின் பிறப்பிடத்தை வெகு குறிப்பாக தெரிவிக்கிறது. “பெத்லெகேம் எப்பிராத்தாவே, யூதேயாவின் ஆயிரங்களுள் எண்ணப்படுவதற்கு நீ சிறியதாயிருந்தும் இஸ்ரவேலில் ஆளுகை செய்யப்போகிறவர் எனக்கென உன்னிடத்திலிருந்து புறப்பட்டு வருவார். அவருடைய உற்பத்தி [“ஆரம்பம்,” NW] அநாதிநாட்களாகிய பூர்வத்திலிருந்ததே.” (மீகா 5:2, தி.மொ.) இந்த வார்த்தைகளின்படி உண்மையாக, இயேசு, பொ.ச.மு. 2 என்று இப்போது அழைக்கப்படுகிற ஆண்டில், யூதேய கிராமமாகிய பெத்லகேமில் பிறந்தார். ஆனால் அவருடைய உற்பத்தி எவ்வாறு ‘பூர்வகாலத்திலிருந்து’ இருக்க முடியும்?
இயேசு தம்முடைய மனித வாழ்க்கைக்கு முன்பாகவே வாழ்ந்திருந்தார். அப்போஸ்தலனாகிய பவுல், கொலோசெயில் இருந்த கிறிஸ்தவர்களுக்கு எழுதின நிருபத்தில் இயேசுவை, ‘அவர் அதரிசனமான தேவனுடைய தற்சுரூபமும் சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர்’ என்று விவரித்தார்.—கொலோசெயர் 1:15.
நீதிமொழிகள் புத்தகத்தில் அரசனாகிய சாலொமோன் எழுதின, தேவாவியால் ஏவப்பட்ட வார்த்தைகளின்படி சொல்ல வேண்டுமானால், ஞானத்தின் மூலகாரணராகிய யெகோவா, தம்முடைய முதல் குமாரனை “தமது சிருஷ்டிகளில் . . . முதல்முதல் படைத்தார்.” இயேசு, தாம் நிச்சயமாகவே, ‘தேவனுடைய சிருஷ்டிக்கு ஆதியாயிருக்கிறவர்’ என்று, அவர் பூமியில் வாழ்ந்து பரலோகத்திற்குத் திரும்பிச் சென்ற பின்பு சான்றளித்தார். தம் மனித வாழ்க்கைக்கு முன்பாக, ஞானத்தின் ஆளுருவாகக் குறிப்பிடப்படுபவராய் இயேசு: “அவர் [யெகோவா] வானத்தை நிறுத்துகையில் நான் அங்கிருந்தேன்” என்று அறிவித்தார்.—நீதிமொழிகள் 8:22, 23, 27, தி.மொ.; வெளிப்படுத்துதல் 3:14.
தொடக்கத்திலிருந்தே, கடவுளுடைய குமாரன், தம்முடைய பிதாவுக்கருகில் “தேர்ச்சிப்பெற்ற வேலையாளனாக” (NW) இருக்கும் ஈடிணையற்ற வேலை நியமிப்பைப் பெற்றார். யெகோவாவுக்கு இது எத்தகைய மகிழ்ச்சியைத் தந்தது! “நான் அவர் [யெகோவாவுக்கு] அருகே செல்லப்பிள்ளையாயிருந்தேன்; நித்தம் அவருடைய மனமகிழ்ச்சியாயிருந்து, எப்பொழுதும் அவர் சமுகத்தில் களிகூர்ந்தேன்” என்று நீதிமொழிகள் 8:30 குறிப்பிடுகிறது.
பின்னால் யெகோவா, மனிதவர்க்கத்தைப் படைப்பதில் பங்குகொள்ளும்படி தம்முடைய முதற்பேறான குமாரனை அழைத்தார். “நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக” என்றார். (ஆதியாகமம் 1:26) இதன் பலனாக, மற்றொரு வகையில் அன்பு காட்டுதல் ஏற்பட்டது. மனிதனாக வருவதற்கு முன்பான இயேசு, “நான் மிகவும் விரும்பியவை மனித குமாரர்களுடன் இருந்தன” என்று விளக்கினார். (நீதிமொழிகள் 8:31, NW) இயேசு மனிதனாக வருவதற்கு முற்பட்ட வாழ்க்கையின்போது சிருஷ்டிப்பில் அவர் பங்கெடுத்ததை, அப்போஸ்தலன் யோவான் தன்னுடைய சுவிசேஷத்தின் தொடக்கத்தில் குறிப்பிட்டார்: “சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை.”—யோவான் 1:3.
யெகோவாவின் செய்தித் தொடர்பாளர்
யோவானின் வார்த்தைகள், கடவுளுடைய குமாரன் அனுபவித்து மகிழ்ந்த மற்றொரு சிலாக்கியத்தை, அதாவது, ஒரு செய்தித் தொடர்பாளராக இருந்ததைக் கவனத்திற்குக் கொண்டுவருகின்றன. தொடக்கத்திலிருந்தே அவர், வார்த்தையாகச் சேவித்தார். இவ்வாறு, யெகோவா ஆதாமிடம் பேசினபோதும், பின்னால், ஆதாம் ஏவாள் இருவரிடமும் பேசினபோதும், வார்த்தையாகிய அவர் மூலமாகவே பேசியிருப்பார். மனிதனின் சுகநலத்திற்காக கடவுளுடைய கட்டளைகளை அவர்களுக்குச் சொல்வதற்கு, மனிதவர்க்கத்தின்மீது அன்புடையவராக இருந்த அவரைப் பார்க்கிலும் மேம்பட்டவராக வேறு யார் இருக்க முடியும்?—யோவான் 1:1, 2.
ஏவாளும் பின்பு ஆதாமும் தங்கள் சிருஷ்டிகருக்குக் கீழ்ப்படியாமற்போனதைக் கண்டது வார்த்தையாகிய அவருக்கு எவ்வளவு மனவேதனையைக் கொடுத்திருக்க வேண்டும்! அவர்களுடைய கீழ்ப்படியாமை அவர்களின் சந்ததியின்மீது வருவித்த தீங்குகளை நீக்கி சரிசெய்வதற்கு அவர் எவ்வளவு ஆவலுள்ளவராக இருந்திருக்க வேண்டும்! (ஆதியாகமம் 2:15-17; 3:6, 8; ரோமர் 5:12) கட்டளையை மீறும்படி ஏவாளை ஊக்குவித்திருந்த சாத்தானை நோக்கி பேசுபவராக, யெகோவா இவ்வாறு சொன்னார்: “உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்.” (ஆதியாகமம் 3:15) வார்த்தையாகிய அவர், ஏதேனில் நடந்ததை நேரில் கண்டு, தாம் ஸ்திரீயினுடைய ‘வித்தின்’ முக்கிய பாகமாயிருப்பதால் கொடிய பகைக்குரிய இலக்காவாரென அறிந்திருந்தார். சாத்தான் கொலைபாதகன் என்று அவருக்குத் தெரியும்.—யோவான் 8:44.
பிற்காலத்தில், உண்மையுள்ள யோபின் உத்தமத்தை சாத்தான் சந்தேகித்தபோது, வார்த்தையாகிய அவர் தம்முடைய பிதாவுக்கு எதிராக சாத்தானின் குற்றச்சாட்டுகளின்பேரில் கடுங்கோப உணர்ச்சி அடைந்திருக்க வேண்டும். (யோபு 1:6-10; 2:1-4) “கடவுளைப் போன்றவர் யார்?” என்ற அர்த்தமுள்ள பெயரான மிகாவேல் என்று அறியப்படுகிற பிரதான தூதராக தாம் வகிக்கும் பாகத்தில் வார்த்தையாகிய அவர், கடவுளுடைய அரசதிகாரத்தைப் பறித்துக்கொள்ள நாடும் எல்லாரையும் எதிர்த்து, தாம் நிச்சயமாகவே எவ்வாறு வீரத்துடன் போரிடுவார் என்று காட்டுகிறார்.—தானியேல் 12:1; வெளிப்படுத்துதல் 12:7-10.
இஸ்ரவேலரின் சரித்திரம் தொடருகையில், மனிதரை தூய்மையான வணக்கத்திலிருந்து விலகச் செய்வதற்குச் சாத்தான் செய்த முயற்சிகளை வார்த்தையாகிய அவர் கவனித்தார். எகிப்திலிருந்து புறப்பட்டபோது, கடவுள் மோசேயின் மூலம் இஸ்ரவேல் ஜனத்துக்கு இவ்வாறு சொன்னார்: “வழியில் உன்னைக் காக்கிறதற்கும், நான் ஆயத்தம்பண்ணின ஸ்தானத்துக்கு உன்னைக் கொண்டுபோய்ச் சேர்க்கிறதற்கும், இதோ, நான் ஒரு தூதனை உனக்கு முன்னே அனுப்புகிறேன். அவர் சமுகத்தில் எச்சரிக்கையாயிருந்து, அவர் வாக்குக்குச் செவிகொடு; அவரைக் கோபப்படுத்தாதே; உங்கள் துரோகங்களை அவர் பொறுப்பதில்லை; என் நாமம் அவர் உள்ளத்தில் இருக்கிறது.” (யாத்திராகமம் 23:20, 21) இந்தத் தூதர் யார்? மனிதனாவதற்கு முன்பான இயேசுவாக இருக்கலாமெனவே பெரும்பாலும் தோன்றுகிறது.
உண்மையுடன் கீழ்ப்பட்டிருத்தல்
பொ.ச.மு. 1473-ல் மோசே இறந்தார், அவருடைய உடல், “மோவாப் தேசத்திலுள்ள பெத்பேயோருக்கு எதிரான பள்ளத்தாக்கிலே” அடக்கம் செய்யப்பட்டது. (உபாகமம் 34:5, 6) பெரும்பாலும் உருவ வழிபாட்டை முன்னேற்றுவிப்பதற்கு, அந்தப் பிணத்தைப் பயன்படுத்தும்படி சாத்தான் விரும்பினதாகத் தெரிகிறது. மிகாவேல் இதை எதிர்த்தார், ஆனால் தம் பிதாவாகிய யெகோவாவின் அதிகாரத்திற்குக் கீழ்ப்பட்டிருப்பவராக அவரிடமே தீர்ப்பளிக்கும் பொறுப்பை விட்டுவிட்டார். “அவனைத் [சாத்தானைத்] தூஷணமாய்க் குற்றப்படுத்தத் துணியாமல்: கர்த்தர் [யெகோவா] உன்னைக் கடிந்துகொள்வாராக” என்று மிகாவேல் சாத்தானை எச்சரித்தார்.—யூதா 9.
அடுத்தபடியாக இஸ்ரவேலர், வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட கானான் தேசத்தை வென்று கைப்பற்றும் நடவடிக்கையைத் தொடங்கினார்கள். எரிகோ பட்டணத்திற்கு அருகில், அந்த ஜனத்தின்மீது வார்த்தையாகிய அவரின் தொடர்ந்த கண்காணிப்பு இருப்பதன் உறுதியை மறுபடியுமாக யோசுவா பெற்றார். அங்கே உருவின பட்டயத்தைக் கையில் வைத்திருந்த ஒரு மனிதரைக் கண்டார். அறியாத அந்த ஆளிடம் யோசுவா நடந்து சென்று: “நீர் எங்கள் பட்சமோ, எங்கள் சத்துருக்கள் பட்சமோ”? என்று கேட்டார். அந்த அன்னியர் தாம் யாரென வெளிப்படுத்துபவராய்: “அப்படியல்ல, நான் யெகோவாவின் சேனாபதியாக இப்பொழுது வந்தேன்” என்று சொன்னபோது யோசுவாவுக்கு உண்டான ஆச்சரியத்தைக் கற்பனை செய்து பாருங்கள். யெகோவாவின் இந்த உன்னத பிரதிநிதிக்கு முன்பாக யோசுவா முகங்குப்புற விழுந்து பணிந்தது ஆச்சரியமாயில்லை; அவர், பின்னால் “பிரபுவாகிய மேசியா” ஆகப்போகிறவராக இருந்த, மனிதனாவதற்கு முன்பான இயேசுவே என்பதில் சந்தேகமேதுமில்லை.—யோசுவா 5:13-15; தானியேல் 9:25.
கடவுளுடைய தீர்க்கதரிசியாகிய தானியேலின் நாட்களில் சாத்தானை நேருக்குநேராக எதிர்ப்படும் மற்றொரு சந்திப்பு ஏற்பட்டது. இந்தச் சந்தர்ப்பத்தில், பெர்சியாவின் பேய் அதிபதி மூன்று வாரங்களாக ‘எதிர்த்து நின்றபோது’ மிகாவேல் தம்முடைய உடன் தூதனுக்கு பக்கபலமாக இருந்தார். அந்தத் தூதன் இவ்வாறு விளக்கினார்: “பிரதான அதிபதிகளில் ஒருவனாகிய மிகாவேல் எனக்கு உதவியாக வந்தான்; ஆதலால் நான் அங்கே பெர்சியாவின் ராஜாக்களிடத்தில் தரித்திருந்தேன்.”—தானியேல் 10:13, 21.
மனிதனாவதற்கு முன்பும் மனிதனானபோதும் மகிமை
யெகோவா தம்முடைய உன்னத சிங்காசனத்தின்மீது வீற்றிருந்த ஒரு தரிசனத்தை கடவுளுடைய தீர்க்கதரிசியாகிய ஏசாயா, யூதேய அரசன் உசியா இறந்த ஆண்டாகிய பொ.ச.மு. 778-ல் கண்டார். ‘யாரை நான் அனுப்புவேன், யார் நமது காரியமாய்ப் போவான்?’ என்று யெகோவா கேட்டார். ஏசாயா அதைச் செய்ய முன்வந்தார்; ஆனால், அவருடைய உடன்தோழர்களான இஸ்ரவேலர் அவர் அறிவிப்பவற்றை ஏற்று செயல்பட மாட்டார்கள் என்று யெகோவா அவரை எச்சரித்தார். அப்போஸ்தலன் யோவான், முதல் நூற்றாண்டிலிருந்த விசுவாசமற்ற யூதர்களை ஏசாயாவின் நாளைய ஜனங்களுக்கு ஒப்பிட்டு, “ஏசாயா அவருடைய மகிமையைக் கண்டு . . . இவைகளைச் சொன்னான்” என்றார். யாருடைய மகிமையைக் கண்டார்? யெகோவாவின் மகிமையையும், மனிதனாவதற்கு முன்பாக பரலோகப் பிரகாரங்களில் அவரோடுகூட இருந்தவரான இயேசுவின் மகிமையுமே கண்டார்.—ஏசாயா 6:1, 8-10; யோவான் 12:37-41.
சில நூற்றாண்டுகளுக்கு அப்பால், அந்தச் சமயம் வரையில் மிகப் பெரியதாயிருந்த இயேசுவின் ஊழிய நியமிப்பு வந்தது. யெகோவா, தம்முடைய நேசக் குமாரனின் உயிர்ச்சக்தியை பரலோகத்திலிருந்து மரியாளின் கர்ப்பத்திற்குள் மாற்றினார். ஒன்பது மாதங்களுக்குப் பின், ஆண்குழந்தையாகிய இயேசு மரியாளுக்குப் பிறந்தார். (லூக்கா 2:1-7, 21) அப்போஸ்தலன் பவுலின் வார்த்தைகளில் இவ்வாறுள்ளது: ‘காலம் நிறைவேறினபோது, ஸ்திரீயினிடத்திற் பிறந்த . . . தம்முடைய குமாரனை தேவன் அனுப்பினார்.’ (கலாத்தியர் 4:4) அவ்வாறே, அப்போஸ்தலன் யோவானும் கூறினார்: “அந்த வார்த்தை மாம்சமாகி, நமக்குள் தங்கினது. அவருடைய மகிமையைப் பார்த்துக்கொண்டிருந்தோம்; அது பிதாவுக்கு இருக்கும் ஒரேபேறானவருடைய மகிமையைப் போன்றது; அவர் கிருபையும் சத்தியமும் நிறைந்தவர்.”—யோவான் 1:14, தி.மொ.
மேசியா தோன்றுகிறார்
குறைந்தபட்சம் 12 வயதில், இளைஞரான இயேசு, தம்முடைய பரலோகப் பிதாவின் வேலையை செய்வதில் தாம் சுறுசுறுப்பாய் ஈடுபட வேண்டும் என்பதை மதித்துணரலானார். (லூக்கா 2:48, 49) ஏறக்குறைய 18 ஆண்டுகளுக்குப் பின், இயேசு, யோர்தான் நதியில் முழுக்காட்டுபவரான யோவானிடம் வந்து முழுக்காட்டப்பட்டார். இயேசு ஜெபிக்கையில், வானங்கள் திறந்தன, பரிசுத்த ஆவி அவர்மீது இறங்கினது. தம்முடைய பிதாவினருகில், தேர்ச்சிப்பெற்ற வேலையாளராகவும், செய்தித் தொடர்பாளராகவும், கடவுளுடைய சேனாதிபதியாகவும், பிரதான தூதராகிய மிகாவேலாகவும் தாம் சேவை செய்திருந்த எண்ணற்ற கோடிக்கணக்கான ஆண்டுகளை அவர் நினைவுகூர்ந்தபோது அவருடைய மனதில் மலர்ந்த நினைவுகளைக் கற்பனை செய்து பாருங்கள். பின்பு, முழுக்காட்டுபவரான யோவானிடம் பின்வருமாறு சொல்லும் தம்முடைய பிதாவின் குரலைக் கேட்கும் சிலிர்ப்பூட்டும் மகிழ்ச்சியான அனுபவம் ஏற்பட்டது: “இவர் என் குமாரன், மிகவும் நேசமானவர், இவரை நான் அங்கீகரித்திருக்கிறேன்.”—மத்தேயு 3:16, 17; லூக்கா 3:21, 22.
மனிதனாவதற்கு முந்தின இயேசுவின் வாழ்க்கையை, முழுக்காட்டுபவரான யோவான் நிச்சயமாகவே சந்தேகிக்கவில்லை. இயேசு அவரிடம் அணுகி வந்தபோது, யோவான் இவ்வாறு சொன்னார்: “இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி”! அவர் மேலும் தொடர்ந்து: ‘எனக்குப்பின் ஒருவர் வருகிறார், அவர் எனக்கு முன்னிருந்தபடியால் என்னிலும் மேன்மையுள்ளவரென்று நான் சொன்னேனே, அவர் இவர்தான்’ என்றார். (யோவான் 1:15, 29, 30) அப்போஸ்தலன் யோவானும் இயேசு முன்னிருந்ததை அறிந்திருந்தார். அவர் இவ்வாறு எழுதினார்: “உன்னதத்திலிருந்து வருகிறவர் எல்லாரிலும் மேலானவர்.” மேலும்: ‘பரலோகத்திலிருந்து வருகிறவர் எல்லாரிலும் மேலானவர். தாம் கண்டதையும் கேட்டதையும் சாட்சியாகச் சொல்லுகிறார்.’—யோவான் 3:31, 32.
மேசியா பூமியில் வந்ததையும் பிரதான ஆசாரியராக அவருடைய ஊழியத்தையும் பற்றிய முழு முக்கியத்துவத்தை மதித்துணரும்படி, ஏறக்குறைய பொ.ச. 61-ம் ஆண்டில், அப்போஸ்தலன் பவுல், எபிரெய கிறிஸ்தவர்களை தூண்டுவித்தார். செய்தித் தொடர்பாளராக இயேசு வகிக்கும் பாகத்திற்குக் கவனம் செலுத்த வைப்பவராய், பவுல் எழுதினார்: “கடவுள் . . . இந்நாட்களின் முடிவில் ஒரு குமாரன் மூலமாய் நம்மிடம் பேசினார் . . . அவர்மூலமாய் காரியங்களின் ஒழுங்குமுறைகளை உண்டாக்கினார்.” இது, “தேர்ச்சிப்பெற்ற வேலையாளனாக” சிருஷ்டிப்பின்போது இயேசு வகித்த பாகத்தைக் குறிப்பிட்டாலும் அல்லது மனிதனின் ஒப்புரவாகுதலுக்காக கடவுளுடைய படிப்படியான ஏற்பாடுகளில் அவர் உட்படுவதைக் குறிப்பிட்டாலும், எவ்வாறாயினும் பவுல் இங்கே இயேசுவின் மனிதவாழ்க்கைக்கு முந்தின வாழ்க்கையானதற்குத் தன் சாட்சியத்தைக் கூட்டுகிறார்.—எபிரெயர் 1:1-6; 2:9, NW.
‘பூர்வத்திலிருந்து’ உண்மைப்பற்றுறுதி
பிலிப்பியிலிருந்த முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களுக்கு பவுல், இந்த அறிவுரையைக் கூறினார்: “கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது; அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார். அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் [“வாதனைக் கழுமரத்தின்,” NW] மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்.” (பிலிப்பியர் 2:5-8) இயேசுவின் உண்மைப்பற்றுறுதியான போக்குக்கு அன்புடன் பிரதிபதில் அளிப்பவராய் யெகோவா அவரை உயிர்த்தெழுப்பி, பின்பு பரலோக வீட்டுக்கு அவரைத் திரும்ப அழைத்துக் கொண்டார். உத்தமத்தைக் காக்கும் எத்தகைய மதிப்புமிகுந்த முன்மாதிரியை இயேசு, எக்காலங்களுக்குமாக நமக்கு விட்டுச் சென்றிருக்கிறார்!—1 பேதுரு 2:21.
மனிதனாவதற்கு முன்னான இயேசுவின் வாழ்க்கையைப் பற்றிய கண்ணோட்டத்தை பைபிள் அளிப்பதற்காக நாம் எவ்வளவு நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்! அவருடைய உண்மைத்தவறாத சேவையின் முன்மாதிரியைப் பின்பற்றும்படியான நம்முடைய தீர்மானத்தை அவை நிச்சயமாகவே பலப்படுத்துகின்றன; முக்கியமாய் இப்போது அவர், கடவுளுடைய மேசியானிய ராஜ்யத்தின் அரசராக ஆளுகையில் அவ்வாறு செய்கின்றன. ‘அவருடைய உற்பத்தி அநாதிநாட்களாகிய பூர்வத்திலிருந்த’ நம்முடைய தலைவரும் ஆளுபவருமாகிய “சமாதானப்பிரபு” கிறிஸ்து இயேசுவை நாம் வாழ்த்தி வரவேற்போமாக!—ஏசாயா 9:6; மீகா 5:2.
[பக்கம் 24-ன் பெட்டி]
மனிதனாவதற்கு முன்பிருந்த வாழ்க்கைக்குச் சாட்சியம்
கீழே குறிப்பிடப்படுகிற இயேசுவின் வார்த்தைகள்தாமே அவருடைய மனித வாழ்க்கைக்கு முந்தின வாழ்க்கைக்குப் பெருமளவில் சாட்சி பகருகின்றன:
◻ “பரலோகத்திலிருந்திறங்கினவரும் பரலோகத்திலிருக்கிறவருமான மனுஷகுமாரனேயல்லாமல் பரலோகத்துக்கு ஏறினவன் ஒருவனுமில்லை.”—யோவான் 3:13.
◻ “வானத்திலிருந்து வந்த அப்பத்தை மோசே உங்களுக்குக் கொடுக்கவில்லை; என் பிதாவோ வானத்திலிருந்து வந்த மெய்யான அப்பத்தை உங்களுக்குக் கொடுக்கிறார் . . . வானத்திலிருந்திறங்கி, உலகத்துக்கு ஜீவனைக் கொடுக்கிற அப்பமே தேவன் அருளிய அப்பம் . . . என் சித்தத்தின்படியல்ல, என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்யவே நான் வானத்திலிருந்திறங்கிவந்தேன்.”—யோவான் 6:32, 33, 38.
◻ “இதிலே புசிக்கிறவன் மரியாமலிருக்கும்படி வானத்திலிருந்திறங்கின அப்பம் இதுவே. நானே வானத்திலிருந்திறங்கின ஜீவ அப்பம்; இந்த அப்பத்தைப் புசிக்கிறவன் என்றென்றைக்கும் பிழைப்பான்.”—யோவான் 6:50, 51.
◻ “மனுஷகுமாரன் தாம் முன்னிருந்த இடத்திற்கு ஏறிப்போகிறதை நீங்கள் காண்பீர்களானால் எப்படியிருக்கும்?”—யோவான் 6:62.
◻ “என் சாட்சி உண்மையாயிருக்கிறது; ஏனெனில் நான் எங்கேயிருந்து வந்தேனென்றும், எங்கே போகிறேனென்றும் அறிந்திருக்கிறேன்; . . . நீங்கள் தாழ்விலிருந்துண்டானவர்கள், நான் உயர்விலிருந்துண்டானவன்; நீங்கள் இந்த உலகத்திலிருந்துண்டானவர்கள், நான் இந்த உலகத்திலிருந்துண்டானவனல்ல.”—யோவான் 8:14, 23.
◻ “தேவன் உங்கள் பிதாவாயிருந்தால் என்னிடத்தில் அன்பாயிருப்பீர்கள். ஏனெனில் நான் தேவனிடத்திலிருந்து வந்திருக்கிறேன்; நான் சுயமாய் வரவில்லை, அவரே என்னை அனுப்பினார்.”—யோவான் 8:42.
◻ “ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.”—யோவான் 8:58.
◻ “பிதாவே, உலகம் உண்டாகிறதற்கு முன்னே உம்மிடத்தில் எனக்கு உண்டாயிருந்த மகிமையினாலே இப்பொழுது நீர் என்னை உம்மிடத்திலே மகிமைப்படுத்தும். பிதாவே, உலகத்தோற்றத்துக்குமுன் நீர் என்னில் அன்பாயிருந்தபடியினால், நீர் எனக்குத் தந்த என்னுடைய மகிமையை நீர் எனக்குத் தந்தவர்கள் காணும்படியாக, நான் எங்கே இருக்கிறேனோ அங்கே அவர்களும் என்னுடனேகூட இருக்க விரும்புகிறேன்.”—யோவான் 17:5, 24.
[பக்கம் 23-ன் படம்]
யெகோவாவின் சேனாபதியை யோசுவா சந்திக்கிறார்