அதிகாரம் எட்டு
பரிசுத்த ஆலயத்தில் யெகோவா தேவன்
“உசியா ராஜா மரணமடைந்த வருஷத்தில், ஆண்டவர் உயரமும் உன்னதமுமான சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கக்கண்டேன்; அவருடைய வஸ்திரத்தொங்கலால் தேவாலயம் நிறைந்திருந்தது.” (ஏசாயா 6:1) ஏசாயா புத்தகத்தின் 6-ஆம் அதிகாரம் இந்த வார்த்தைகளோடு ஆரம்பிக்கிறது. அது பொ.ச.மு. 778-ம் ஆண்டு.
2 யூதாவை உசியா 52 வருடங்கள் ஆண்டார். அதில் பெரும்பகுதி வெகு சிறப்புற்று விளங்கியது. அவர் ‘யெகோவாவின் பார்வையில் நேர்மையானதைச் செய்ததால்,’ யுத்தங்கள், கட்டுமான திட்டங்கள், வேளாண்மை திட்டங்கள் ஆகிய எல்லாவற்றிலும் யெகோவா துணைநின்றார். ஆனால் உசியாவின் வெற்றியே அவரது சீரழிவிற்கும் காரணமானது. மனம் கர்வங்கொண்டு, ‘தன் கடவுளாகிய யெகோவாவுக்குத் துரோகம்பண்ணினார்; அவர் தூபபீடத்தின்மேல் தூபங்காட்ட யெகோவாவின் ஆலயத்திற்குள் பிரவேசித்தார்.’ இந்தத் துணிகர செயலை செய்தது மட்டுமல்லாமல் எதிர்த்துக் கேட்ட ஆசாரியர்கள் மீது கடுங்கோபம் கொண்டதால் உசியா குஷ்டரோகத்தால் பீடிக்கப்பட்டு உயிரிழந்தார். (2 நாளாகமம் 26:3-22, தி.மொ.) ஏறக்குறைய இந்தக் காலத்தில்தான் ஏசாயா தீர்க்கதரிசியாக சேவிக்கத் துவங்கினார்.
3 ஏசாயா இந்தத் தரிசனத்தை எங்கிருந்து பார்க்கிறார் என்பது சொல்லப்படவில்லை. ஆனால் அவர் நிச்சயம் தரிசனத்தை மட்டுமே பார்க்கிறார், சர்வவல்லமையுள்ள கடவுளை நேரில் பார்க்கவில்லை. ஏனெனில் “தேவனை ஒருவனும் ஒருக்காலுங் கண்டதில்லை.” (யோவான் 1:18; யாத்திராகமம் 33:20) தரிசனத்தில் என்றாலும்கூட யெகோவாவைப் பார்ப்பது மலைப்பூட்டும் அனுபவமே. சர்வலோகப் பேரரசரும் நீதியுள்ள ஒரே அரசாங்கத்தின் உரிமையாளருமான அவர் உன்னதமான சிங்காசனத்தில் வீற்றிருக்கிறார்! இது அவரை நித்திய ராஜாவாகவும் நியாயாதிபதியாகவும் அடையாளப்படுத்துகிறது. நீண்டு புரளும் அவருடைய வஸ்திரம் ஆலயத்தை நிரப்புகிறது. பேரரசராகிய யெகோவாவின் வல்லமையையும் நீதியையும் மகிமைப்படுத்தும் தீர்க்கதரிசன சேவை செய்ய ஏசாயா அழைக்கப்படுகிறார். அதற்கு அவரை தயாராக்குவதற்கு, கடவுளுடைய பரிசுத்தத்தன்மை பற்றிய தரிசனம் அவருக்கு அளிக்கப்படும்.
4 ஏசாயா தனது தரிசனத்தில் யெகோவாவின் தோற்றத்தைக் குறித்து எந்த விளக்கமும் அளிக்கவில்லை. எசேக்கியேல், தானியேல், யோவான் ஆகியோரோ விளக்கம் அளித்தனர். இம்மூவரும் வெவ்வேறு பரலோக காட்சிகளை பதிவு செய்திருக்கிறார்கள். (எசேக்கியேல் 1:26-28; தானியேல் 7:9, 10; வெளிப்படுத்துதல் 4:2, 3) இருந்தாலும் அந்தத் தரிசனங்கள் எப்படிப்பட்டவை என்பதையும் அவற்றின் நோக்கம் என்னவென்பதையும் மனதில் கொள்வது அவசியம். அவை யெகோவாவின் உருவத்தை சொல்லர்த்தமாக விவரிப்பதில்லை. ஏனெனில் மனித கண்களால் பரலோக உருவங்களைப் பார்க்க முடியாது. வரம்புக்குட்பட்ட மனித மூளையால் பரலோக விஷயங்களை முழுமையாக புரிந்துகொள்ளவும் முடியாது. ஆகவே, இந்தத் தரிசனங்கள், மனிதன் சுலபமாக கிரகிப்பதற்கு ஏதுவாக அவனுக்கு பழக்கப்பட்ட உருவங்களால் தகவலைத் தெரிவிக்கின்றன. (வெளிப்படுத்துதல் 1:1-ஐ ஒப்பிடுக.) ஏசாயாவின் தரிசனத்தைப் பொறுத்தவரை கடவுளுடைய தோற்றத்தைக் குறித்து விவரிப்பதற்கு அவசியம் இல்லை. ஏனெனில் யெகோவா தமது பரிசுத்த ஆலயத்தில் வீற்றிருக்கிறார், அவர் பரிசுத்தர், அவரது நியாயத்தீர்ப்புகள் நீதியுள்ளவை என்ற உண்மைகளை வலியுறுத்துவதே அந்தத் தரிசனத்தின் நோக்கம்.
சேராபீன்கள்
5 ஏசாயா தொடர்ந்து சொல்வதைக் கேளுங்கள்: “அவருக்கு மேல் சேராபீன்கள் சூழ்ந்து நின்றனர்; ஒவ்வொருவருக்கும் ஆறு இறக்கைகள் இருந்தன; ஒவ்வொருவரும் இரண்டு இறக்கைகளால் தம் முகத்தை மூடிக்கொண்டனர்; இரண்டு இறக்கைகளால் தம் கால்களை மூடி மறைத்தனர்; மற்ற இரண்டால் பறந்தனர்.” (ஏசாயா 6:2, பொ.மொ.) முழு பைபிளிலேயே இந்த ஒரு அதிகாரத்தில்தான், அதாவது ஏசாயா 6-ஆம் அதிகாரத்தில்தான் சேராபீன்கள் பற்றி குறிப்பிடப்பட்டிருக்கிறது. நிச்சயமாகவே இவர்கள் மிக உயர்ந்த ஸ்தானங்களையும் மதிப்புள்ள பொறுப்புகளையும் வகிக்கும் தூதர்கள். ஏனெனில் யெகோவாவின் பரலோக சிங்காசனத்திற்கு அருகிலேயே நிற்கிறார்கள். இருந்தாலும் உசியாவைப் போல் ஆணவங்கொள்ளாமல் மிகுந்த பணிவோடும் தாழ்மையோடும் பொறுப்புகளை நிறைவேற்றுகிறார்கள். பரலோகப் பேரரசரின் சந்நிதானத்தில் நிற்பதால் தங்கள் முகங்களை இரு இறக்கைகளால் மூடிக்கொண்டிருக்கின்றனர். பரிசுத்த ஸ்தலத்தில் நிற்பதால் தங்கள் பாதங்களையும் இரு இறக்கைகளால் மூடியிருக்கின்றனர். சர்வலோகப் பேரரசருக்கு அருகிலேயே நிற்பதால் எத்தனை பணிவு! அவரது மகிமை மட்டுமே பிரகாசிக்க வேண்டும் என்பதற்காக என்னே அடக்கமான தோரணை! “சேராபீன்கள்” என்ற பதம் “தகதகவென எரிகிறவர்கள்” அல்லது “ஒளிர்கிறவர்கள்” என அர்த்தப்படுத்துவதால் அவர்கள் ஒளிவீசிப் பிரகாசிப்பவர்கள் என்பது தெரிகிறது. இருந்தாலும் பலமடங்கு அதிக பிரகாசத்தோடு ஜகஜோதியாக ஜொலிக்கும் யெகோவாவிற்கு முன் தங்கள் முகங்களை மூடிக்கொள்கிறார்கள்.
6 சேராபீன்கள் இன்னும் இரு இறக்கைகளைப் பறப்பதற்காக பயன்படுத்துகின்றனர். அந்தரத்தில் தங்கள் இடங்களில் ‘நிற்கவும்’ இவற்றைப் பயன்படுத்துகிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. (உபாகமம் 31:15-ஐ ஒப்பிடுக.) இதைக் குறித்து பேராசிரியர் ஃப்ரான்ஸ் டெலிட்ஷ் இப்படிச் சொல்கிறார்: “சேராபீன்கள், சிங்காசனத்தில் வீற்றிருப்பவரின் தலைக்கு மேலாக நிச்சயம் நிற்க மாட்டார்கள். ஆலயத்தை நிரப்பிய அவரது வஸ்திரத்திற்கு மேலாகவே அவர்கள் நிற்கிறார்கள்.” (பழைய ஏற்பாட்டின் விளக்கவுரை) அவர் சொல்வதும் நியாயமே. சேராபீன்கள் யெகோவாவைவிட உயர்ந்தவர்களென்ற கருத்தில் அல்ல, ஆனால் அவரது சொல்லுக்குக் கட்டுப்பட்டு உடனடியாக செயல்படக் காத்திருக்கும் கருத்திலேயே ‘அவருக்கு மேலாக நிற்கிறார்கள்.’
7 இப்படி பாக்கியம் பெற்ற சேராபீன்கள் சொல்வதை இப்போது கேளுங்கள்! அவர்கள் “ஒருவரையொருவர் நோக்கி: சேனைகளின் கர்த்தர் [“யெகோவா,” NW] பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், பூமியனைத்தும் அவருடைய மகிமையால் நிறைந்திருக்கிறது என்று கூப்பிட்டுச் சொன்னார்கள்.” (ஏசாயா 6:3) யெகோவாவின் பரிசுத்தத்தன்மையும் மகிமையும் சர்வலோகமெங்கும் யாவரறிய அறிவிக்கப்படும்படி மேற்பார்வை செய்வது அவர்கள் பொறுப்பு. அந்தச் சர்வலோகத்தின் ஒரு பாகமே இந்தப் பூமி. யெகோவாவின் மகிமையை, அவர் சிருஷ்டித்த அனைத்தும் பறைசாற்றுகின்றன. விரைவில் பூமியின் குடிமக்கள் அனைவரும் அம்மகிமையை உணருவார்கள். (எண்ணாகமம் 14:21; சங்கீதம் 19:1-3; ஆபகூக் 2:14) “பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர்” என்று மும்முறை அறிவிக்கப்படுவது எவ்விதத்திலும் திரித்துவத்தை ஆதரிப்பதில்லை. மாறாக, கடவுளுடைய பரிசுத்தத்தன்மையை மும்முறை வலியுறுத்துகிறது. (வெளிப்படுத்துதல் 4:8-ஐ ஒப்பிடுக.) ஆம், யெகோவாவின் பரிசுத்தத்தன்மை உச்சத்தில் இருக்கிறது.
8 சேராபீன்களின் எண்ணிக்கை குறிப்பிடப்படவில்லை என்றாலும் அவர்கள் சிங்காசனத்திற்கு அருகே தொகுதி தொகுதியாக நிற்பதாக எடுத்துக்கொள்ளலாம். கடவுளின் பரிசுத்தத்தையும் மகிமையையும் ஒருவர் மாறி ஒருவர் திரும்பத் திரும்ப இனிய பாடலாக பாடுகின்றனர். அதன் விளைவு என்ன? ஏசாயா தொடர்ந்து சொல்வதை மீண்டும் கேளுங்கள்: “கூப்பிடுகிறவர்களின் சத்தத்தால் வாசல்களின் நிலைகள் அசைந்து, ஆலயம் புகையினால் நிறைந்தது.” (ஏசாயா 6:4) பைபிளில், புகையும் மேகமும் கடவுளுடைய பிரசன்னத்திற்கு அடையாளமாக இருக்கின்றன. (யாத்திராகமம் 19:18; 40:34, 35; 1 இராஜாக்கள் 8:10, 11; வெளிப்படுத்துதல் 15:5-8) மனிதர்களாகிய நம்மால் ஒருபோதும் நெருங்க முடியாத மகிமையை அவை குறிக்கின்றன.
தகுதியற்று உணர்கிறார், இருந்தாலும் தகுதி பெறுகிறார்
9 யெகோவாவின் சிங்காசனத்தைக் குறித்த இந்தத் தரிசனம் ஏசாயாவை வெகுவாக பாதிக்கிறது. அவர் எழுதுகிறார்: “அப்பொழுது நான்: ஐயோ! அதமானேன், நான் அசுத்த உதடுகளுள்ள மனுஷன், அசுத்த உதடுகளுள்ள ஜனங்களின் நடுவில் வாசமாயிருக்கிறவன்; சேனைகளின் கர்த்தராகிய [“யெகோவாவாகிய,” NW] ராஜாவை என் கண்கள் கண்டதே என்றேன்.” (ஏசாயா 6:5) ஏசாயாவிற்கும் உசியா ராஜாவிற்கும் என்னே வித்தியாசம்! உசியா ஆசாரிய பதவியை அபகரித்து, பயபக்தியின்றி ஆலயத்தின் பரிசுத்த ஸ்தலத்தில் அத்துமீறி நுழைந்தார். அவர் பசும்பொன் விளக்குத்தண்டுகளையும் பொன் தூபபீடத்தையும் ‘பிரசன்னத்து அப்பத்தின்’ மேஜைகளையும் பார்த்தபோதிலும் யெகோவாவின் அங்கீகாரப் புன்முறுவலை காணவில்லை, அவரிடமிருந்து எந்த விசேஷ நியமிப்பையும் பெறவில்லை. (1 இராஜாக்கள் 7:48-50, NW அடிக்குறிப்பு) மறுபட்சத்தில் ஏசாயாவோ, ஆசாரியத்துவத்தையும் ஆலயத்தையும் மதித்து நடந்துகொள்கிறார். ஆகவே யெகோவா பரிசுத்த ஆலயத்தில் வீற்றிருக்கும் காட்சியை தரிசனத்தில் பார்க்கிறார்; யெகோவாவிடமிருந்தே நியமிப்பையும் பெற்று கெளரவிக்கப்படுகிறார். சிங்காசனத்தில் வீற்றிருக்கும் ஆலயத்தின் ஆண்டவரைப் பார்க்க சேராபீன்களே துணியாதபோது, ஏசாயாவோ ‘சேனைகளின் யெகோவாவாகிய ராஜாவையே’ தரிசனத்தில் காண அனுமதிக்கப்படுகிறார்!
10 கடவுளுடைய பரிசுத்தத்தன்மைக்கும் தனது பாவத்தன்மைக்கும் இடையே இருக்கும் பெரும் வித்தியாசத்தை இப்போது ஏசாயா உணர்கிறார். ஆகவே, தான் அசுத்தத்தின் உச்சத்தில் இருப்பதாக நினைக்கிறார். அச்சத்தால் பீடிக்கப்பட்டு, தான் சாகப்போவதாக எண்ணுகிறார். (யாத்திராகமம் 33:20) சேராபீன்கள் பரிசுத்த உதடுகளால் கடவுளைத் துதிப்பது அவருக்குக் கேட்கிறது, ஆனால் தனது உதடுகளோ அசுத்தமாக இருக்கின்றன. தன்னைச் சுற்றி வசிக்கும் மக்களின் உதடுகளும் அசுத்தமாக இருப்பதால், அவர்களது பேச்சைக் கேட்பது தன்னை இன்னும் அசுத்தமடையச் செய்வதாக அவருக்கு தோன்றுகிறது. யெகோவா பரிசுத்தராக இருப்பதால் அவரது ஊழியர்களும் பரிசுத்தமாக இருக்க வேண்டுமே. (1 பேதுரு 1:15, 16) கடவுளது பேச்சாளராக ஏசாயா ஏற்கெனவே தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார் என்றாலும் இப்போது தனது பாவத்தை உணர்ந்து அதிர்ச்சிக்குள்ளாகிறார். மகிமையும் பரிசுத்தமுமே உருவான ராஜாவின் சார்பாக பேசுவதற்கு பரிசுத்த உதடுகள் தனக்கு இல்லையே என கலக்கமடைகிறார். இப்போது பரலோகத்திலிருந்து என்ன பதில் வரும்?
11 தாழ்மையான நிலையிலிருந்த ஏசாயாவை யெகோவாவின் சந்நிதானத்திலிருந்து விரட்டிவிடுவதற்கு பதிலாக சேராபீன்கள் அவருக்கு உதவுகின்றனர். பதிவு இப்படிச் சொல்கிறது: “அப்பொழுது சேராபீன்களில் ஒருவர் பீடத்திலிருந்து எரி நெருப்புப் பொறியொன்றைக் குறட்டினால் எடுத்துக்கொண்டு என்னிடம் பறந்து வந்தார். அதனால் என் வாயைத் தொட்டு, ‘இதோ, இந்நெருப்புத் தழல் உன் இதழ்களைத் தொட்டது; ஆதலின் உன் குற்றம் நீக்கப்பட்டது; உன் பாவம் மன்னிக்கப்பட்டது’ என்றார்.” (ஏசாயா 6:6, 7, தமிழ் கத்தோலிக்க பைபிள்) அடையாள அர்த்தத்தில், நெருப்புக்கு சுத்திகரிக்கும் வல்லமை உண்டு. பீடத்தின் பரிசுத்த நெருப்பிலிருந்து ஒரு தழலை எடுத்து ஏசாயாவின் உதடுகளைத் தொட்டு, அவரது பாவம் மன்னிக்கப்பட்டதாக சேராபீன் சொல்கிறார். ஆகவே இப்பொழுது கடவுளுடைய தயவையும் நியமிப்பையும் பெறுவதற்கு போதுமான அளவு தகுதி பெற்றுவிட்டதாக உறுதி அளிக்கிறார். இது நமக்கும் எப்பேர்ப்பட்ட நம்பிக்கை அளிக்கிறது! நாமும் பாவத்தால் கடவுளை அணுக தகுதியற்றவர்களாக இருக்கிறோம். ஆனால் இயேசுவின் பலியின் அடிப்படையில் மீட்கப்பட்டிருக்கிறோம். ஆகவே நம்மால் ஜெபத்தில் கடவுளை அணுகவும் அவரது தயவைப் பெறவும் முடியும்.—2 கொரிந்தியர் 5:18, 21; 1 யோவான் 4:10.
12 ‘பீடம்’ என்ற பதம் உபயோகிக்கப்பட்டிருப்பது, இது ஒரு தரிசனம் என்பதை மீண்டும் ஞாபகப்படுத்துகிறது. (வெளிப்படுத்துதல் 8:3; 9:13-ஐ ஒப்பிடுக.) எருசலேம் ஆலயத்தில் இரண்டு பீடங்கள் இருந்தன. மகா பரிசுத்த ஸ்தலத்தின் திரைக்கு முன்பாக சிறிய தூபபீடம் இருந்தது. மேலும், ஆலயத்தின் நுழைவாசலுக்கு முன்பாக பெரிய பலிபீடம் இருந்தது. இங்கே எப்போதும் நெருப்பு எரிந்துகொண்டிருந்தது. (லேவியராகமம் 6:12, 13; 16:12, 13) ஆனால் இந்தப் பூமிக்குரிய பீடங்கள் இன்னும் மகத்தானவற்றிற்கு அடையாளமாக இருந்தன. (எபிரெயர் 8:5; 9:23; 10:5-10) சாலொமோன் ராஜா ஆலயத்தை பிரதிஷ்டை செய்த சமயத்தில் பலிபீடத்தின்மீது செலுத்தப்பட்ட தகன பலியை வானத்திலிருந்து இறங்கிய அக்கினி பட்சித்தது. (2 நாளாகமம் 7:1-3) இப்போதோ மெய்யான பரலோக பீடத்தின் அக்கினி ஏசாயாவின் உதடுகளை சுத்திகரிக்கிறது.
13 ஏசாயா சொல்கிறார்: “யாரை நான் அனுப்புவேன், யார் நமது காரியமாய்ப் போவான் என்று உரைக்கிற ஆண்டவருடைய சத்தத்தைக் கேட்டேன். அதற்கு நான் இதோ, அடியேன் இருக்கிறேன்; என்னை அனுப்பும் என்றேன்.” (ஏசாயா 6:8) ஏசாயாவிடமிருந்து பதிலை வரவழைப்பதற்காகவே யெகோவா இக்கேள்வியைக் கேட்பது தெளிவாகத் தெரிகிறது, ஏனெனில் தரிசனத்தில் வேறெந்த தீர்க்கதரிசியும் இல்லை. யெகோவாவின் தூதுவராக செயலாற்ற ஏசாயாவிற்கு அழைப்பு விடுக்கப்படுவதில் சந்தேகமில்லை. ஆனால், ‘யார் நமது காரியமாய்ப் போவான்’ என யெகோவா கேட்பது ஏன்? முதலில் “நான்” என ஒருமையிலும், பிறகு “நமது” என பன்மையிலும் குறிப்பிடுகிறார். ஆகவே இப்போது இன்னொருவரையும் தன்னோடு சேர்த்துக் குறிப்பிடுகிறார். யார் அவர்? அவரது ஒரேபேறான குமாரனாகிய இயேசு கிறிஸ்துவாகத்தானே இருக்க முடியும்? இந்தக் குமாரனிடமே “நமது சாயலாக . . . மனுஷனை உண்டாக்குவோமாக” என கடவுள் சொன்னார். (ஆதியாகமம் 1:26; நீதிமொழிகள் 8:30, 31) ஆம், பரலோக நீதிமன்றத்தில் யெகோவாவின் அருகே அவரது ஒரேபேறான குமாரன் இருக்கிறார்.—யோவான் 1:14.
14 ஏசாயா தயக்கமின்றி பதிலளிக்கிறார்! என்ன செய்தியை அறிவிக்க வேண்டியதாக இருந்தாலும் சரி, “இதோ, அடியேன் இருக்கிறேன்; என்னை அனுப்பும்” என உடனடியாக பதிலளிக்கிறார். அந்த நியமிப்பை நிறைவேற்றினால் தனக்கு என்ன கிடைக்கும் என்றெல்லாம் அவர் கேட்கவில்லை. மனமுவந்து நியமிப்பை ஏற்றுக்கொள்ளும் அவரது மனப்பான்மை இன்று கடவுளுடைய ஊழியர்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டு. ஏனெனில் அவர்களும் ‘ராஜ்யத்தினுடைய சுவிசேஷத்தை பூலோகமெங்கும்’ பிரசங்கிக்க வேண்டிய நியமிப்பைப் பெற்றிருக்கிறார்கள். (மத்தேயு 24:14) ஏசாயாவைப் போல் அவர்கள் தங்கள் நியமிப்பை உண்மையோடு நிறைவேற்றுகிறார்கள். பெரும்பாலானோர் கேட்காவிட்டாலும் நற்செய்தியை ‘சகல தேசத்தாருக்கும் சாட்சியாக பிரசங்கிக்கிறார்கள்.’ (NW) ஏசாயாவைப் போலவே நம்பிக்கையோடு பிரசங்கிக்கிறார்கள். ஏனென்றால் சர்வலோக பேரரசரே தங்களுக்கு அதிகாரம் அளித்திருப்பதை அறிந்திருக்கிறார்கள்.
ஏசாயா பெறும் நியமிப்பு
15 ஏசாயா என்ன சொல்ல வேண்டும், அதற்கு ஜனங்கள் எப்படி பிரதிபலிப்பார்கள் என்பதை யெகோவா அடுத்ததாக சொல்கிறார்: “நீ இந்த மக்களை அணுகி, ‘நீங்கள் உங்கள் காதால் தொடர்ந்து [“மீண்டும் மீண்டும்,” NW] கேட்டும் கருத்தில் கொள்ளாதீர்கள்; உங்கள் கண்களால் பார்த்துக் கொண்டேயிருந்தும் உணராதிருங்கள்’ என்று சொல். அவர்கள் கண்ணால் காணாமலும், காதால் கேளாமலும், உள்ளத்தால் உணராமலும், மனம் மாறிக் குணமாகாமலும் இருக்கும்படி இந்த மக்களின் இதயத்தைக் கொழுப்படையச் செய்; காதுகளை மந்தமாகச் செய்; கண்களை மூடச்செய்.” (ஏசாயா 6:9, 10, பொ.மொ.) அப்படியென்றால் ஏசாயா யூதர்களிடம் சென்று அவர்கள் யெகோவாவை விரோதித்துக் கொள்கிறார்களென சாதுரியமில்லாமல் முகத்தில் அடித்தாற்போல் சொல்லி வெறுப்பேற்ற வேண்டுமா? நிச்சயமாக இல்லை! யூதர்கள் ஏசாயாவின் சொந்த மக்கள், அவர்கள்மீது தனி பாசம் வைத்திருக்கிறார். ஆனால் அவர் எவ்வளவுதான் உண்மையோடு தன் பொறுப்பை நிறைவேற்றினாலும், மக்கள் அவர் கூறும் செய்தியைக் கேட்க மாட்டார்களென யெகோவாவின் வார்த்தைகள் சுட்டிக்காட்டுகின்றன.
16 தவறு மக்கள்பேரிலேயே இருக்கிறது. ஏசாயா அவர்களிடம் “மீண்டும் மீண்டும்” பேசுவார். ஆனாலும் அவர்கள் கேட்கமாட்டார்கள், செய்தியை புரிந்துகொள்ளவும் மாட்டார்கள். பெரும்பாலானோர் பிடிவாதமாக மந்தமாய் இருப்பார்கள்; குருடர்கள் போலவும் செவிடர்கள் போலவும் நடந்துகொள்வார்கள். செய்தியை புரிந்துகொள்ள விருப்பமில்லை என்பதை ‘இந்த மக்களே’ தெளிவாக காட்டும்படி, ஏசாயா மீண்டும் மீண்டும் அவர்களிடம் செல்வார். ஏசாயாவின் செய்தியை, சொல்லப்போனால் கடவுளின் செய்தியைக் கேட்காதபடி மனதையும் இதயத்தையும் மூடிக்கொண்டிருப்பதை இவர்களே நிரூபிப்பார்கள். இன்றைய மக்களுக்கும் இது எவ்வளவு பொருந்துகிறது! கடவுளுடைய ராஜ்யத்தின் நற்செய்தியைப் பிரசங்கிக்கும் யெகோவாவின் சாட்சிகளுக்கு செவிகொடுக்க அநேகமநேகம் பேர் மறுக்கிறார்கள்.
17 ஏசாயா கவலைகொள்கிறார்: “அப்பொழுது நான்: ஆண்டவரே, எதுவரைக்கும் என்று கேட்டேன். அதற்கு அவர்: பட்டணங்கள் குடியில்லாமலும், வீடுகள் மனுஷ சஞ்சாரமில்லாமலும் பாழாகி, பூமி [“நிலம்,” NW] அவாந்தரவெளியாகி, கர்த்தர் மனுஷரைத் தூரமாக விலக்குவதினால், தேசத்தின் நடுமையம் முற்றிலும் வெறுமையாக்கப்படும் வரைக்குமே” என்றார். (ஏசாயா 6:11, 12) கேட்க பிரியப்படாத மக்களுக்கு இன்னும் எவ்வளவு காலம்தான் பிரசங்கிக்க வேண்டும் என்ற அர்த்தத்தில் “எதுவரைக்கும்” என ஏசாயா கேட்கவில்லை. மாறாக, அவர் மக்கள் மீதுள்ள கரிசனையால், இன்னும் எவ்வளவு காலம்தான் அவர்கள் ஆன்மீக ரீதியில் சீரழிந்திருப்பார்கள் என கேட்கிறார். பூமியில் இன்னும் எவ்வளவு காலம்தான் யெகோவாவின் பெயர் அவமதிக்கப்படும் என்றும் கேட்கிறார். (சங்கீதம் 74:9-11-ஐக் காண்க.) ஆக, இந்த மதியீன சூழல் இன்னும் எவ்வளவு காலம்தான் நீடிக்கும்?
18 யெகோவா உடன்படிக்கை செய்தபோது, கீழ்ப்படியாமையின் விளைவுகள் என்ன என்பதை தெளிவாக சொல்லியிருந்தார். ஆகவே அந்த விளைவுகள் அனைத்தும் நிறைவேறும் வரைக்கும் மக்களது ஆன்மீக நிலைமை மோசமாகத்தான் இருக்கும் என்பதை யெகோவாவின் பதில் காண்பிக்கிறது. (லேவியராகமம் 26:21-33; உபாகமம் 28:49-68) நாடு சீரழியும், மக்கள் நாடுகடத்தப்படுவார்கள், தேசம் பாழாக்கப்படும். உசியா ராஜாவின் கொள்ளுப்பேரன் எசேக்கியாவின் ஆட்சி காலம் வரை 40 வருடங்களுக்கும் அதிகமாக ஏசாயா தீர்க்கதரிசனம் உரைப்பார். ஆனால், பொ.ச.மு. 607-ல் பாபிலோன் எருசலேமையும் அதன் ஆலயத்தையும் அழிப்பதைப் பார்க்க உயிருடன் இருக்கமாட்டார். அவர் தேசம் அழிவதற்கு 100-க்கும் அதிகமான ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிடுவார். இருந்தாலும் இறக்கும்வரை தன் நியமிப்பை உண்மையோடு நிறைவேற்றுவார்.
19 யூதாவை ‘அவாந்தரவெளியாக்கும்’ அழிவு வரவிருக்கிறது, ஆனால் முற்றிலும் நம்பிக்கை இழக்க வேண்டியதில்லை. (2 இராஜாக்கள் 25:1-26) ஏசாயாவிற்கு யெகோவா நம்பிக்கை அளிக்கிறார்: “ஆகிலும் அதில் இன்னும் பத்தில் ஒரு பங்கிருக்கும், அதுவும் திரும்ப நிர்மூலமாக்கப்படும்; கர்வாலிமரமும் அரசமரமும் இலையற்றுப்போன பின்பு, அவைகளின் அடிமரம் இருப்பதுபோல, அதின் அடிமரமும் பரிசுத்த வித்தாயிருக்கும்.” (ஏசாயா 6:13) ஆம், வெட்டி வீழ்த்தப்படும் பெரிய மரத்தின் அடிபாகத்தைப் போல, ‘பத்தில் ஒரு பங்காகிய . . . பரிசுத்த வித்து’ மீந்திருக்கும். தம் மக்களில் பரிசுத்தமானவர்கள் தப்பிப்பிழைப்பார்கள் என்ற இந்த உறுதி ஏசாயாவுக்கு நிச்சயம் ஆறுதல் அளித்திருக்கும். ஒரு பெரிய மரம் மீண்டும் மீண்டும் வெட்டப்பட்டு விறகாக எரிக்கப்படுவதுபோல், தேசம் தொடர்ந்து நெருப்புக்கு இரையானாலும், இஸ்ரவேல் என்ற அடையாளப்பூர்வ மரத்தின் அடிமரம் மீந்திருக்கும். அது யெகோவாவிற்கு பரிசுத்தமான ஒரு வித்தாக அல்லது சந்ததியாக இருக்கும். ஏற்ற காலத்தில் அது மீண்டும் துளிர்விட்டு வளரும்.—ஒப்பிடுக: யோபு 14:7-9; தானியேல் 4:26.
20 இந்த தீர்க்கதரிசனம் உண்மையில் நிறைவேறியதா? ஆம் நிறைவேறியது. யூதா தேசம் பாழாக்கப்பட்டு எழுபது ஆண்டுகளுக்குப் பிறகு, தேவபக்தியுள்ள மீதியானோர் பாபிலோனிய சிறையிருப்பிலிருந்து விடுபட்டு மீண்டும் தாயகம் திரும்பினார்கள். அவர்கள் ஆலயத்தையும் நகரத்தையும் திரும்ப எடுத்துக் கட்டி உண்மை வணக்கத்தை மீண்டும் நிலைநாட்டினார்கள். இவ்வாறு யூதர்கள் தாயகம் திரும்பியது, ஏசாயாவிற்கு யெகோவா கொடுத்த தீர்க்கதரிசனத்தின் இரண்டாம் நிறைவேற்றத்திற்கு வழிவகுத்தது. அது என்ன நிறைவேற்றம்?—எஸ்றா 1:1-4.
மற்ற நிறைவேற்றங்கள்
21 தீர்க்கதரிசியாக ஏசாயா நிறைவேற்றிய பணி, சுமார் 800 ஆண்டுகளுக்குப் பிறகு மேசியாவாகிய இயேசு கிறிஸ்து செய்யவிருந்த பணிக்கு முன்நிழலாக இருந்தது. (ஏசாயா 8:18; 61:1, 2; லூக்கா 4:16-21; எபிரெயர் 2:13, 14) ஏசாயாவைக் காட்டிலும் இயேசு மிக உயர்ந்தவர் என்றாலும், தமது பரலோக தகப்பனின் நியமிப்பைப் பெற அதேபோன்ற விருப்பத்தைக் காட்டினார். “தேவனே, உம்முடைய சித்தத்தின்படி செய்ய, இதோ, வருகிறேன்” என மனமுவந்து சொன்னார்.—எபிரெயர் 10:5-9; சங்கீதம் 40:6-8.
22 ஏசாயாவைப் போல் இயேசுவும் தம் நியமிப்பை உண்மையோடு நிறைவேற்றினார். ஏசாயா காலத்து யூதர்களைப் போலவே இயேசு காலத்து யூதர்களும் செய்தியைக் கேட்க விரும்பவில்லை. (ஏசாயா 1:4) இயேசு தம் ஊழியத்தில் அதிக உவமைகளைப் பயன்படுத்தினார். ஆகவே அவரது சீஷர்கள், “ஏன் அவர்களோடே உவமைகளாகப் பேசுகிறீர் என்று கேட்டார்கள்.” அதற்கு இயேசு, “பரலோக ராஜ்யத்தின் ரகசியங்களை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டது, அவர்களுக்கோ அருளப்படவில்லை. அவர்கள் கண்டும் காணாதவர்களாயும், கேட்டும் கேளாதவர்களாயும், உணர்ந்துகொள்ளாதவர்களாயும் இருக்கிறபடியினால், நான் உவமைகளாக அவர்களோடே பேசுகிறேன். ஏசாயாவின் தீர்க்கதரிசனம் அவர்களிடத்தில் நிறைவேறுகிறது; அதாவது: காதாரக்கேட்டும் உணராதிருப்பீர்கள்; கண்ணாரக்கண்டும் அறியாதிருப்பீர்கள். இந்த ஜனங்கள் கண்களினால் காணாமலும், காதுகளினால் கேளாமலும், இருதயத்தினால் உணர்ந்து மனந்திரும்பாமலும், நான் அவர்களை ஆரோக்கியமாக்காமலும் இருக்கும்படியாக, அவர்கள் இருதயம் கொழுத்திருக்கிறது; காதால் மந்தமாய்க் கேட்டு, தங்கள் கண்களை மூடிக்கொண்டார்கள் என்பதே.”—மத்தேயு 13:10, 11, 13-15; மாற்கு 4:10-12; லூக்கா 8:9, 10.
23 ஏசாயா தீர்க்கதரிசனத்தை மேற்கோள் காட்டுவதன் மூலம் இயேசு, தம் நாளிலும் அது நிறைவேறியதைக் காட்டினார். இயேசுவின் காலத்து யூதர்களின் இருதய நிலை ஏசாயா காலத்து யூதர்களின் இருதய நிலையைப் போலவே இருந்தது. அவரது செய்திக்கு குருடர்கள் போலவும் செவிடர்கள் போலவும் பிரதிபலித்தார்கள். ஆகவே அழிவையும் சந்தித்தார்கள். (மத்தேயு 23:35-38; 24:1, 2) பொ.ச. 70-ல் தளபதி டைட்டஸின் தலைமையின்கீழ் ரோம சேனைகள் எருசலேமுக்கு எதிராக வந்து நகரத்தையும் ஆலயத்தையும் அழித்தபோது இது நிறைவேறியது. இருந்தாலும் சிலர் இயேசுவிற்கு செவிகொடுத்து அவரது சீஷராகியிருந்தார்கள். அப்படிப்பட்டவர்கள் “சந்தோஷமுள்ளவர்கள்” (NW) என இயேசு சொன்னார். (மத்தேயு 13:16-23, 51) “எருசலேம் சேனைகளால் சூழப்பட்டிருப்பதை” காணும்போது ‘மலைகளுக்கு ஓடிப்போக’ வேண்டும் என அவர்களிடம் சொல்லியிருந்தார். (லூக்கா 21:20-22) ஆகவே ‘தேவனுடைய இஸ்ரவேல்’ என்ற ஆவிக்குரிய தேசமாக உருவாகியிருந்த விசுவாசமுள்ள ‘பரிசுத்த வித்து’ காப்பாற்றப்பட்டது.a—கலாத்தியர் 6:16.
24 சுமார் பொ.ச. 60-ல் அப்போஸ்தலன் பவுல் ரோமில் வீட்டுக் காவலில் இருந்தார். அங்கு அவர் “யூதர்களில் முதன்மையானவர்களை” வரவழைத்து “தேவனுடைய ராஜ்யத்தைப் பற்றி விவரமான சாட்சி கொடுத்தார்.” அவர் சொன்னதை அநேகர் ஏற்றுக்கொள்ளாதபோது, அது ஏசாயா தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றமென விளக்கினார். (அப்போஸ்தலர் 28:17-27, NW; ஏசாயா 6:9, 10) ஆகவே இயேசுவின் சீஷர்கள் ஏசாயாவின் நியமிப்பிற்கு ஒத்த ஒன்றை நிறைவேற்றினார்கள்.
25 யெகோவா தேவன் தமது பரிசுத்த ஆலயத்தில் வீற்றிருக்கிறார் என்பதை இன்றும் யெகோவாவின் சாட்சிகள் அறிந்திருக்கிறார்கள். (மல்கியா 3:1) ஏசாயாவைப் போலவே, “இதோ, அடியேன் இருக்கிறேன்; என்னை அனுப்பும்” என்கிறார்கள். இந்தப் பொல்லாத உலகிற்கு வரவிருக்கும் அழிவைக் குறித்து எச்சரிப்பதில் முழுமூச்சோடு செயல்படுகிறார்கள். ஆனால் இயேசு சுட்டிக்காட்டியபடி, வெகு சிலரே தங்கள் கண்களையும் காதுகளையும் அடைத்துக்கொள்ளாமல் எச்சரிப்புக்கு செவிசாய்த்து ஜீவனுக்கு செல்லும் பாதையை தேர்ந்தெடுக்கிறார்கள். (மத்தேயு 7:13, 14) செவிகொடுத்துக் கேட்டு மனம் மாறி ‘குணமாகிறவர்கள்’ (பொ.மொ.) உண்மையில் சந்தோஷமுள்ளவர்கள்!—ஏசாயா 6:8, 10.
[அடிக்குறிப்பு]
a யூதர்கள் கலகம் செய்ததால், பொ.ச. 66-ல் செஸ்டியஸ் கேலஸின் தலைமையின்கீழ் ரோம சேனைகள் எருசலேமை சூழ்ந்து ஆலயத்தின் மதிற்சுவர் வரை உள்ளே நுழைந்தன. அதன்பின் திடீரென்று பின்வாங்கின. இதனால் இயேசுவின் சீஷர்கள் பெரேயா மலைகளுக்கு ஓடிச்செல்ல முடிந்தது. இவ்வாறு, பொ.ச. 70-ல் திரும்பிய ரோமர்களின் கையில் சிக்காமல் தப்ப முடிந்தது.
[கேள்விகள்]
1, 2. (அ) ஏசாயா தீர்க்கதரிசி ஆலயத்தைப் பற்றிய தரிசனத்தை எப்போது பெறுகிறார்? (ஆ) உசியா ராஜா ஏன் யெகோவாவின் தயவை இழந்தார்?
3. (அ) ஏசாயா உண்மையில் யெகோவாவைப் பார்க்கிறாரா? விளக்குக. (ஆ) ஏசாயா என்ன காட்சியைக் காண்கிறார், என்ன காரணத்திற்காக?
4. (அ) யெகோவாவின் தோற்றத்தைப் பற்றிய காட்சிகளும் விவரிப்புகளும் ஏன் அடையாள அர்த்தமுடையவை? (ஆ) ஏசாயாவின் தரிசனத்திலிருந்து யெகோவாவைப் பற்றி என்ன கற்றுக்கொள்ளலாம்?
5. (அ) சேராபீன்கள் யார், இப்பெயரின் அர்த்தம் என்ன? (ஆ) சேராபீன்கள் ஏன் தங்கள் முகங்களையும் பாதங்களையும் மூடிக்கொள்கின்றனர்?
6. யெகோவாவின் சந்நிதானத்தில் சேராபீன்கள் நிற்கும் இடம் எது?
7. (அ) சேராபீன்கள் என்ன பொறுப்பை நிறைவேற்றுகிறார்கள்? (ஆ) கடவுளின் பரிசுத்தத்தன்மையை சேராபீன்கள் ஏன் மும்முறை அறிவிக்கின்றனர்?
8. சேராபீன்களின் அறிவிப்புகளால் ஏற்படும் விளைவு என்ன?
9. (அ) தரிசனம் ஏசாயாவை எவ்வாறு பாதிக்கிறது? (ஆ) ஏசாயாவிற்கும் உசியா ராஜாவிற்கும் என்ன வித்தியாசத்தைப் பார்க்கிறோம்?
10. தரிசனத்தைக் கண்டு ஏசாயா ஏன் அச்சங்கொள்கிறார்?
11. (அ) சேராபீன்களில் ஒருவர் என்ன செய்கிறார், அது எதை அர்த்தப்படுத்துகிறது? (ஆ) கடவுளுடைய ஊழியர்களாக இருப்பதற்கு தகுதியற்றவர்களாக உணரும்போது, சேராபீன் ஏசாயாவிடம் சொன்னதை நினைவுபடுத்திக்கொள்வது எவ்வாறு உதவும்?
12. ஏசாயா என்ன பீடத்தைப் பார்க்கிறார், அக்கினியினால் உண்டாகும் விளைவு என்ன?
13. என்ன கேள்வியை யெகோவா கேட்கிறார், “நமது” என சொல்லும்போது யாரையும் சேர்த்துக் குறிப்பிடுகிறார்?
14. யெகோவாவின் அழைப்பை ஏசாயா எவ்வாறு ஏற்கிறார், நமக்கு அவர் எவ்வாறு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறார்?
15, 16. (அ) ஏசாயா ‘இந்த மக்களுக்கு’ என்ன சொல்ல வேண்டும், அவர்கள் எப்படிப் பிரதிபலிப்பார்கள்? (ஆ) மக்கள் செவிகொடாதிருப்பதற்கு ஏசாயா எந்த விதத்திலாவது காரணமா? விளக்குக.
17. “எதுவரைக்கும்” என ஏசாயா எந்த அர்த்தத்தில் கேட்கிறார்?
18. எதுவரைக்கும் மக்களின் ஆன்மீக நிலை மோசமாக இருக்கும், தீர்க்கதரிசனம் முழுமையாக நிறைவேறும் காலம்வரை ஏசாயா உயிரோடு இருப்பாரா?
19. தேசம் மரத்தைப் போல வெட்டி வீழ்த்தப்படும் என்றாலும் என்ன உறுதியை கடவுள் ஏசாயாவிற்கு அளிக்கிறார்?
20. மேற்கண்ட ஏசாயா தீர்க்கதரிசனத்தின் இறுதி பாகம் முதலாவதாக எவ்வாறு நிறைவேறியது?
21-23. (அ) ஏசாயாவின் தீர்க்கதரிசனம் முதல் நூற்றாண்டில் யாரிடம், எப்படி நிறைவேறியது? (ஆ) முதல் நூற்றாண்டில் ‘பரிசுத்த வித்தாக’ இருந்தது யார், அது எவ்வாறு காக்கப்பட்டது?
24. ஏசாயா தீர்க்கதரிசனம் எவ்வாறு நிறைவேறியதாக பவுல் குறிப்பிட்டார், இது எதைக் காட்டுகிறது?
25. நவீன நாளைய யெகோவாவின் சாட்சிகள் எதை அறிந்திருக்கிறார்கள், அதனால் என்ன செய்கிறார்கள்?
[பக்கம் 94-ன் படம்]
“இதோ, அடியேன் இருக்கிறேன்; என்னை அனுப்பும்.”
[பக்கம் 97-ன் படம்]
‘பட்டணங்கள் குடியில்லாமல் பாழாகும் வரை’