யாத்திராகமம்
40 பின்பு யெகோவா மோசேயிடம், 2 “முதலாம் மாதம் முதலாம் நாளில் வழிபாட்டுக் கூடாரத்தை, அதாவது சந்திப்புக் கூடாரத்தை, நீ அமைக்க வேண்டும்.+ 3 அதற்கு உள்ளே சாட்சிப் பெட்டியை வைத்து,+ திரைச்சீலை போட்டு அதை மறைத்துவிடு.+ 4 மேஜையை+ உள்ளே கொண்டுவந்து அதன்மேல் வைக்க வேண்டிய பொருள்களை வை. குத்துவிளக்கை+ உள்ளே கொண்டுவந்து வைத்து, அதன் அகல் விளக்குகளை+ ஏற்று. 5 சாட்சிப் பெட்டிக்கு முன்பக்கம் தங்கத்தாலான தூபபீடத்தை+ வைத்து, வழிபாட்டுக் கூடாரத்தின் வாசலில் திரையைத் தொங்கவிடு.+
6 தகன பலிக்கான பலிபீடத்தை+ வழிபாட்டுக் கூடாரத்தின், அதாவது சந்திப்புக் கூடாரத்தின், வாசலுக்கு முன்பக்கம் வை. 7 சந்திப்புக் கூடாரத்துக்கும் பலிபீடத்துக்கும் நடுவில் தொட்டியை வைத்து, அதில் தண்ணீர் ஊற்று.+ 8 பின்பு, சுற்றிலும் பிரகாரம் அமைத்து,+ அதன் நுழைவாசலில் திரையைத் தொங்கவிடு.+ 9 அதன்பின், அபிஷேகத் தைலத்தை+ எடுத்து வழிபாட்டுக் கூடாரத்தையும் அதிலுள்ள எல்லாவற்றையும் அபிஷேகம் செய்து,+ அதையும் அதிலுள்ள பாத்திரங்கள் எல்லாவற்றையும் புனிதப்படுத்து. அப்போது, அது பரிசுத்தமாகும். 10 தகன பலிக்கான பலிபீடத்தையும் அதற்கான பாத்திரங்களையும் அபிஷேகம் செய்து அந்தப் பலிபீடத்தைப் புனிதப்படுத்து. அப்போது, அது மகா பரிசுத்த பலிபீடமாகும்.+ 11 பின்பு, தொட்டியையும் அதை வைப்பதற்கான தாங்கியையும் அபிஷேகம் செய்து புனிதப்படுத்து.
12 பிற்பாடு, ஆரோனையும் அவனுடைய மகன்களையும் சந்திப்புக் கூடாரத்தின் வாசலுக்குப் பக்கத்தில் கூட்டிக்கொண்டு வந்து குளிக்க வை.*+ 13 பரிசுத்த உடைகளை ஆரோனுக்குப் போட்டுவிட்டு,+ அவனை அபிஷேகம் செய்து,+ அவனைப் புனிதப்படுத்து. அவன் எனக்குக் குருத்துவச் சேவை செய்வான். 14 அதன்பின், அவனுடைய மகன்களைக் கூட்டிக்கொண்டு வந்து அவர்களுக்கும் அங்கிகளைப் போட்டுவிடு.+ 15 அவர்களுடைய அப்பாவை அபிஷேகம் செய்ததுபோல் அவர்களையும் அபிஷேகம் செய்.+ அப்போது, அவர்கள் எனக்குக் குருத்துவச் சேவை செய்வார்கள். அவர்கள் அபிஷேகம் செய்யப்படுவதால், தலைமுறை தலைமுறையாக அவர்களே நிரந்தரமாகக் குருத்துவச் சேவை செய்வார்கள்”+ என்றார்.
16 யெகோவா கட்டளை கொடுத்தபடியே மோசே எல்லாவற்றையும் செய்தார்.+ அவர் அப்படியே செய்தார்.
17 இரண்டாம் வருஷம் முதலாம் மாதம் முதலாம் நாளில் வழிபாட்டுக் கூடாரம் அமைக்கப்பட்டது.+ 18 மோசே அதை அமைத்தபோது, அதன் பாதங்களைக் கீழே வைத்து+ அந்தப் பாதங்கள்மேல் சட்டங்களை+ நிறுத்தினார். அவற்றில் கம்புகளைச்+ செருகினார். தூண்களையும் நிறுத்தினார். 19 பின்பு, வழிபாட்டுக் கூடாரத்தின் சட்டங்கள்மேல் விரிப்புகளை+ ஒன்றின்மேல் ஒன்றாகப் போட்டார். யெகோவா கட்டளை கொடுத்தபடியே மோசே செய்தார்.
20 அதன்பின், சாட்சிப் பலகைகளை+ எடுத்து பெட்டிக்குள்+ வைத்து, அதில் கம்புகளைச்+ செருகி, மூடியால் மூடினார்.+ 21 பின்பு, சாட்சிப் பெட்டியை வழிபாட்டுக் கூடாரத்துக்குள் கொண்டுவந்து, திரைச்சீலை+ போட்டு அதை மறைத்தார்.+ யெகோவா கட்டளை கொடுத்தபடியே மோசே செய்தார்.
22 அடுத்ததாக, வழிபாட்டுக் கூடாரத்தின், அதாவது சந்திப்புக் கூடாரத்தின், வடக்குப் பக்கத்தில் திரைச்சீலைக்கு வெளியே மேஜையை+ வைத்தார். 23 பின்பு, ரொட்டிகளை+ மேஜைமேல் அடுக்கி யெகோவாவின் முன்னிலையில் வைத்தார். யெகோவா கட்டளை கொடுத்தபடியே மோசே செய்தார்.
24 பின்பு வழிபாட்டுக் கூடாரத்தின், அதாவது சந்திப்புக் கூடாரத்தின், தெற்குப் பக்கத்தில் மேஜைக்கு முன்னால் குத்துவிளக்கை+ வைத்தார். 25 யெகோவாவின் முன்னிலையில் விளக்குகளை+ ஏற்றினார். யெகோவா கட்டளை கொடுத்தபடியே மோசே செய்தார்.
26 அடுத்ததாக, தங்கத்தாலான தூபபீடத்தை+ சந்திப்புக் கூடாரத்தில் திரைச்சீலைக்கு முன்னால் வைத்தார். 27 தூபப்பொருளை+ எரிப்பதற்காக+ அதை வைத்தார். யெகோவா கட்டளை கொடுத்தபடியே மோசே செய்தார்.
28 அதன்பின், வழிபாட்டுக் கூடாரத்தின் வாசலில் திரையைத்+ தொங்கவிட்டார்.
29 பின்பு, தகன பலிக்கான பலிபீடத்தை+ வழிபாட்டுக் கூடாரத்தின் வாசலாகிய சந்திப்புக் கூடாரத்தின் வாசலில் வைத்தார். தகன பலிகளையும்+ உணவுக் காணிக்கைகளையும் செலுத்துவதற்காக அதை வைத்தார். யெகோவா கட்டளை கொடுத்தபடியே மோசே செய்தார்.
30 அதன்பின், சந்திப்புக் கூடாரத்துக்கும் பலிபீடத்துக்கும் நடுவில் தொட்டியை வைத்து, கைகால் கழுவுவதற்காக அதில் தண்ணீர் ஊற்றி வைத்தார்.+ 31 மோசேயும் ஆரோனும் அவருடைய மகன்களும் அந்தத் தண்ணீரை எடுத்துத் தங்கள் கைகால்களைக் கழுவினார்கள். 32 சந்திப்புக் கூடாரத்துக்கோ பலிபீடத்துக்கோ போகும்போதெல்லாம் அவர்கள் கைகால் கழுவினார்கள்.+ மோசேக்கு யெகோவா கட்டளை கொடுத்தபடியே செய்துவந்தார்கள்.
33 கடைசியாக, வழிபாட்டுக் கூடாரத்தையும் பலிபீடத்தையும் சுற்றி பிரகாரம்+ அமைத்து அதன் நுழைவாசலில் திரை+ போட்டார்.
இப்படி, எல்லா வேலைகளையும் மோசே செய்து முடித்தார். 34 அப்போது, சந்திப்புக் கூடாரத்தை மேகம் மூடியது. வழிபாட்டுக் கூடாரம் யெகோவாவின் மகிமையால் நிறைந்தது.+ 35 சந்திப்புக் கூடாரத்தை மேகம் மூடியிருந்ததாலும், வழிபாட்டுக் கூடாரத்தில் யெகோவாவின் மகிமை நிறைந்திருந்ததாலும் மோசேயால் அதற்குள் நுழைய முடியவில்லை.+
36 இஸ்ரவேலர்கள் வனாந்தரத்தில் பயணம் செய்த காலமெல்லாம், வழிபாட்டுக் கூடாரத்தைவிட்டு மேகம் எழும்பிய சமயங்களில் மட்டுமே தங்கள் இடத்தைவிட்டுப் புறப்பட்டார்கள்.+ 37 ஆனால், மேகம் கூடாரத்தின் மேல் தங்கியிருந்த சமயங்களில், அது மேலே எழும்பும் நாள்வரை புறப்படாமல் காத்திருந்தார்கள்.+ 38 பகலில் யெகோவாவின் மேகமும் ராத்திரியில் நெருப்பும் வழிபாட்டுக் கூடாரத்தின் மேல் இருப்பதை இஸ்ரவேல் ஜனங்கள் எல்லாரும் வனாந்தரத்தில் பயணம் செய்த காலமெல்லாம் பார்த்தார்கள்.+