ஒளியைத் தந்து யெகோவா தம் மக்களை அலங்கரிக்கிறார்
“எழுந்து ஒளியைப் பிரகாசி, ஏனெனில் உன் ஒளி வந்துவிட்டது, யெகோவாவின் மகிமை உன் மேல் உதித்திருக்கிறது.”—ஏசாயா 60:1.
1, 2. (அ) மனிதவர்க்கத்தின் நிலை என்ன? (ஆ) மனிதவர்க்கத்தின் இருளுக்கு காரணம் யார்?
“ஏசாயாவோ புனித பவுலோ இருந்தால் எவ்வளவு நலமாயிருக்கும்!” முன்னாள் ஐ.மா. ஜனாதிபதி ஹாரி ட்ரூமேன் 1940-களில் இவ்வாறு புலம்பினார். அவர் அவ்வாறு கூற காரணம் என்ன? அவருடைய காலத்தில், மிகவும் திறமை வாய்ந்த தார்மீக தலைவர்கள் தேவை என அவர் உணர்ந்ததே அதற்குக் காரணம். மனிதவர்க்கம், 20-ம் நூற்றாண்டின் மிகவும் இருண்ட சகாப்தமாக விளங்கிய இரண்டாம் உலக யுத்தத்தை அப்போதுதான் கடந்து வந்திருந்தது. அந்த யுத்தம் முடிந்திருந்தாலும் உலகத்திலோ சமாதானமில்லை. இருள் சூழ்ந்திருந்தது. அந்த யுத்தம் முடிந்து 57 வருடங்கள் கடந்திருந்தாலும் இந்த உலகம் இன்னமும் இருளிலே மூழ்கிக் கிடக்கிறது. ஜனாதிபதி ட்ரூமேன் இன்று உயிரோடிருந்தால் ஏசாயா அல்லது அப்போஸ்தலன் பவுல் போன்ற தார்மீக தலைவர்களுக்கான தேவை இன்னமும் இருப்பதைக் காண்பார்.
2 ஜனாதிபதி ட்ரூமேன் அறிந்திருந்தாரோ இல்லையோ மனிதவர்க்கத்தை பாதிக்கும் இருளைப் பற்றி அப்போஸ்தலன் பவுல் பேசினார்; தான் எழுதிய புத்தகங்களில் அதைக் குறித்து எச்சரித்தார். உதாரணமாக, ‘மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு’ என்று உடன் விசுவாசிகளை அவர் எச்சரித்தார். (எபேசியர் 6:12) இந்த உலகை கவ்வியிருக்கும் ஆவிக்குரிய இருளைப் பற்றி அறிந்திருந்ததோடு, ‘லோகாதிபதிகள்’ என அழைக்கப்படும் வல்லமைமிக்க பேய்களே அதன் மெய்யான ஊற்றுமூலம் என்பதை அறிந்திருப்பதையும் பவுல் இந்த வார்த்தைகளில் தெளிவுபடுத்தினார். இவ்வாறு, இந்த உலகின் இருளுக்கு பலம் படைத்த ஆவிகளே காரணமாயிருக்க அதை நீக்க சாதாரண மனிதர்களால் என்ன செய்ய முடியும்?
3. மனிதவர்க்கம் இருண்ட நிலையில் இருந்தாலும் விசுவாசமுள்ளோருக்கு ஏசாயா எதை முன்னறிவித்தார்?
3 அதைப்போலவே, மனிதவர்க்கத்தை துயரப்படுத்தும் இந்த இருளைப் பற்றி ஏசாயாவும் குறிப்பிட்டார். (ஏசாயா 8:22; 59:9) என்றாலும் நம் நாளை மனக்கண்ணில் பார்ப்பவராக, இந்த இருண்ட காலங்களிலும்கூட ஒளியை நேசிப்போரின் நோக்குநிலையை யெகோவா பிரகாசமாக்குவார் என ஆவியால் ஏவப்பட்டு ஏசாயா முன்னுரைத்தார். பவுலோ ஏசாயாவோ இன்று நம்மிடையே இல்லாவிட்டாலும் நம்மை வழிநடத்த ஏவப்பட்டு எழுதப்பட்ட அவர்களுடைய வார்த்தைகள் உள்ளன. யெகோவாவை நேசிப்போருக்கு இது எப்பேர்ப்பட்ட ஓர் ஆசீர்வாதம் என்பதைக் காண ஏசாயா புத்தகத்தின் 60-ம் அதிகாரத்திலுள்ள அவருடைய தீர்க்கதரிசன வார்த்தைகளை சிந்திப்போம்.
தீர்க்கதரிசன ஸ்திரீ ஒளியை பிரகாசிக்கிறாள்
4, 5. (அ) என்ன செய்யும்படி அந்த ஸ்திரீயிடம் யெகோவா கட்டளையிடுகிறார், என்ன வாக்குறுதி அளிக்கிறார்? (ஆ) ஏசாயா 60-ம் அதிகாரத்தில் என்ன கிளர்ச்சியூட்டும் தகவல் உள்ளது?
4 ஏசாயா 60-ம் அதிகாரத்தின் ஆரம்ப வார்த்தைகள் மிகவும் பரிதாபமான நிலையிலிருக்கும் ஒரு ஸ்திரீயிடம் கூறப்படுகின்றன; அவள் கும்மிருட்டில் தரையில் முகங்குப்புற கிடக்கிறாள். திடீரென்று அந்த இருளை ஒளிப்பிரவாகம் ஊடுருவுகிறது, “ஸ்திரீயே, எழுந்து ஒளியைப் பிரகாசி, ஏனெனில் உன் ஒளி வந்துவிட்டது, யெகோவாவின் மகிமை உன் மேல் உதித்திருக்கிறது” என யெகோவா அவளிடம் சொல்கிறார். (ஏசாயா 60:1, NW) அடையாள அர்த்தமுள்ள இந்த ஸ்திரீ எழுந்து கடவுளுடைய ஒளியை, அவருடைய மகிமையைப் பிரகாசிக்கச் செய்வதற்கான சமயம் வந்துவிட்டது. ஏன்? அதற்கான பதிலை அடுத்த வசனத்தில் பார்க்கிறோம்: “இதோ, இருள் பூமியையும், காரிருள் ஜனங்களையும் மூடும்; ஆனாலும் உன் மேல் கர்த்தர் [“யெகோவா,” NW] உதிப்பார்; அவருடைய மகிமை உன் மேல் காணப்படும்.” (ஏசாயா 60:2) அந்த ஸ்திரீ யெகோவாவின் கட்டளைக்கு கீழ்ப்படிகையில் அருமையான பலன் கிடைக்கும் என அவளுக்கு உறுதியளிக்கப்படுகிறது. “உன் வெளிச்சத்தினிடத்துக்கு ஜாதிகளும் [“தேசங்களும்,” NW] உதிக்கிற உன் ஒளியினிடத்துக்கு ராஜாக்களும் நடந்துவருவார்கள்” என்று யெகோவா கூறுகிறார்.—ஏசாயா 60:3.
5 இந்த மூன்று வசனங்களிலுள்ள கிளர்ச்சியூட்டும் வார்த்தைகள், ஏசாயா 60-ம் அதிகாரத்தில் உள்ள மற்ற வசனங்களுக்கு அறிமுக வார்த்தைகளும் சுருக்கமும் ஆகும். ஒரு தீர்க்கதரிசன ஸ்திரீயின் அனுபவங்களை அது முன்னறிவிக்கிறது, மனிதவர்க்கத்தை ஆட்டிப்படைக்கும் இருளின் மத்தியிலும் நாம் எவ்வாறு யெகோவாவின் ஒளியில் நிலைத்திருக்க முடியும் என்பதையும் அது விவரிக்கிறது. ஆனால், இந்த ஆரம்ப மூன்று வசனங்களிலுள்ள அடையாளங்கள் எதைக் குறிக்கின்றன?
6. ஏசாயா 60-ம் அதிகாரத்திலுள்ள ஸ்திரீ யார், பூமியில் அவளை பிரதிநிதித்துவம் செய்வோர் யார்?
6 ஏசாயா 60:1-3-ல் குறிப்பிடப்பட்டுள்ள ஸ்திரீ சீயோன், அதாவது ஆவி சிருஷ்டிகள் அடங்கிய யெகோவாவின் பரலோக அமைப்பு ஆகும். இன்று, ஆவியால் அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களின் சர்வதேச தொகுதியான ‘தேவனுடைய இஸ்ரவேலரில்’ மீதியானவர்களே சீயோனை பூமியில் பிரதிநிதித்துவம் செய்கின்றனர்; இவர்கள் பரலோகத்தில் கிறிஸ்துவுடன் ஆட்சி செய்யும் நம்பிக்கையைப் பெற்றவர்கள். (கலாத்தியர் 6:16) இந்த ஆவிக்குரிய தேசத்தில் மொத்தம் 1,44,000 பேர் உள்ளனர்; இவர்களுள், இந்தக் ‘கடைசி நாட்களில்’ பூமியில் மீதியாய் இருப்போரே ஏசாயா 60-ம் அதிகாரத்தின் நவீன நாளைய நிறைவேற்றத்தில் பங்குகொள்பவர்கள். (2 தீமோத்தேயு 3:1; வெளிப்படுத்துதல் 14:1) அபிஷேகம் செய்யப்பட்ட இந்த கிறிஸ்தவர்களின் கூட்டாளிகளான ‘திரள் கூட்டமாகிய’ ‘வேறே ஆடுகளை’ பற்றியும் இந்தத் தீர்க்கதரிசனம் அதிகத்தைக் கூறுகிறது.—வெளிப்படுத்துதல் 7:9; யோவான் 10:16.
7. சீயோனின் நிலை 1918-ல் எப்படியிருந்தது, இது எவ்வாறு முன்னுரைக்கப்பட்டிருந்தது?
7 அந்தத் தீர்க்கதரிசன ஸ்திரீ சுட்டிக்காட்டியதைப் போலவே தேவனுடைய இஸ்ரவேலர் இருளில் கிடந்த சமயம் இருந்ததா? ஆம், 80-க்கும் அதிகமான வருடங்களுக்கு முன்பு அவ்வாறு நடந்தது. முதல் உலக யுத்தத்தின்போது, சாட்சி கொடுக்கும் வேலையை தொடர அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் பெரும்பாடு பட்டனர். ஆனால், அந்த யுத்தம் முடிவடைந்த வருடமான 1918-ல் ஒழுங்கமைக்கப்பட்ட பிரசங்க வேலை ஏறக்குறைய நின்றே போனது எனலாம். உலகளாவிய பிரசங்க வேலையை மேற்பார்வை செய்து வந்த சகோதரர் ஜோசஃப் எஃப். ரதர்ஃபர்டுக்கும் முக்கியமாயிருந்த மற்ற கிறிஸ்தவர்களுக்கும் பொய் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் நீண்ட கால சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அந்த சமயம் பூமியிலிருந்த அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் வெளிப்படுத்துதல் புத்தகத்தில் தீர்க்கதரிசன ரீதியில் பிரேதங்களாக விவரிக்கப்பட்டுள்ளனர்; அவை, “மகா நகரத்தின் விசாலமான வீதியிலே கிடக்கும். அந்த நகரம் சோதோம் என்றும் எகிப்து என்றும் ஞானார்த்தமாய்ச் சொல்லப்படும்.” (வெளிப்படுத்துதல் 11:8) பூமியிலிருந்த அவளுடைய அபிஷேகம் பண்ணப்பட்ட பிள்ளைகளால் பிரதிநிதித்துவம் செய்யப்பட்ட சீயோனுக்கு அது உண்மையிலேயே இருண்ட காலமாக இருந்தது!
8. என்ன மாபெரும் மாற்றம் 1919-ல் ஏற்பட்டது, விளைவு என்ன?
8 என்றாலும், 1919-ல் மாபெரும் மாற்றம் ஏற்பட்டது. யெகோவா தமது ஒளியை சீயோன் மீது பிரகாசிக்க செய்தார்! அப்போது மீதியாயிருந்த தேவனுடைய இஸ்ரவேலர் மீண்டும் செயல்பட ஆரம்பித்து, கடவுளுடைய ஒளியைப் பிரகாசித்தனர்; நற்செய்தியை மீண்டும் தைரியமாக அறிவித்தனர். (மத்தேயு 5:14-16) இந்தக் கிறிஸ்தவர்களின் புதுப்பிக்கப்பட்ட வைராக்கியத்தால் மற்றவர்களும் யெகோவாவின் ஒளியினிடமாக கவர்ந்திழுக்கப்பட்டனர். ஆரம்பத்தில், புதிதாக வந்தவர்கள் தேவனுடைய இஸ்ரவேலின் பாகமாக அபிஷேகம் செய்யப்பட்டனர். இவர்கள் கடவுளுடைய பரலோக ராஜ்யத்தில் கிறிஸ்துவுடன் அரசாளப் போவதால் ஏசாயா 60:3-ல் ‘ராஜாக்கள்’ என விவரிக்கப்பட்டுள்ளனர். (வெளிப்படுத்துதல் 20:6) பின்னர், வேறே ஆடுகளைச் சேர்ந்த திரள் கூட்டத்தினர் யெகோவாவின் ஒளியினிடமாக கவரப்பட்டனர். தீர்க்கதரிசனத்தில் விவரிக்கப்பட்டுள்ள ‘தேசங்கள்’ இவர்களே.
ஸ்திரீயின் பிள்ளைகள் வீடு திரும்புகின்றனர்!
9, 10. (அ) அந்த ஸ்திரீ என்ன அருமையான காட்சியைப் பார்த்தாள், இது எதற்கு அடையாளமாக உள்ளது? (ஆ) சந்தோஷப்பட சீயோனுக்கு என்ன காரணம் இருந்தது?
9 இப்போது, ஏசாயா 60:1-3-ல் உள்ள தகவலுக்கு யெகோவா கூடுதல் விளக்கத்தை அளிக்கிறார். அந்த ஸ்திரீக்கு மற்றொரு கட்டளையைக் கொடுக்கிறார். அவர் கூறுவதை கவனியுங்கள்: “சுற்றிலும் உன் கண்களை ஏறெடுத்துப் பார்.” இதற்கு அந்த ஸ்திரீ கீழ்ப்படிகையில் இதயத்திற்கு மகிழ்வூட்டும் காட்சியை காண்கிறாள்! அவளுடைய பிள்ளைகள் வீடு திரும்புகின்றனர். “அவர்கள் எல்லாரும் ஏகமாய்க்கூடி உன்னிடம் வருகிறார்கள்; உன் குமாரர் தூரத்திலிருந்து வருகிறார்கள், உன் குமாரத்திகள் இடுப்பிலே தூக்கப்பட்டு வருகிறார்கள்” என அந்த வசனம் தொடர்ந்து சொல்கிறது. (ஏசாயா 60:4, தி.மொ.) 1919-ல் உலகம் முழுவதிலும் துவங்கிய ராஜ்ய பிரசங்கிப்பு வேலை, ஆயிரக்கணக்கான புதியவர்களை யெகோவாவின் சேவையில் கூட்டிச் சேர்த்தது. இவர்களும், சீயோனின் ‘குமாரர்களாகவும் குமாரத்திகளாகவும்,’ தேவனுடைய இஸ்ரவேலின் அபிஷேகம் செய்யப்பட்ட அங்கத்தினர்கள் ஆனார்கள். இவ்வாறு 1,44,000 பேரில் கடைசியானவர்களை ஒளியினிடமாக கூட்டிச் சேர்ப்பதன் மூலம் யெகோவா சீயோனை அலங்கரித்தார்.
10 சீயோனின் பிள்ளைகள் அவளோடு இருப்பதால் அவள் பெறும் மனமகிழ்ச்சியை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? இருந்தாலும், சீயோன் மேலும் சந்தோஷப்படுவதற்கான காரணங்களை யெகோவா அளிக்கிறார். “அப்பொழுது, நீ அதைக் கண்டு முகமலர்வாய்; உன் இருதயம் மகிழ்ந்து பூரிக்கும்; சமுத்திரத்தின் ஐஸ்வரியம் உன் வசம் திரும்பும். ஜாதியாரின் செல்வம் உன்னிடம் வரும்” என்று வாசிக்கிறோம். (ஏசாயா 60:5, தி.மொ.) அந்தத் தீர்க்கதரிசன வார்த்தைகளுக்கு இசைவாக, பூமியில் நித்திய காலத்திற்கும் வாழும் நம்பிக்கையுள்ள ஏராளமான கிறிஸ்தவர்கள் 1930-களிலிருந்து சீயோனிடம் வந்துள்ளனர். கடவுளைவிட்டு விலகியிருக்கும் மனிதவர்க்க ‘கடலிலிருந்து’ வெளியே வந்த இவர்கள் தேசங்களின் செல்வங்களை குறிக்கின்றனர். இவர்களே, “சகல தேசங்களிலும் விரும்பப்பட்டவை.” (ஆகாய் 2:7, NW; ஏசாயா 57:20) இந்த ‘விரும்பப்பட்டவற்றில்’ உள்ள ஒவ்வொருவரும் தங்களுக்கு இஷ்டமான வழியில் யெகோவாவை சேவிப்பதில்லை என்பதையும் கவனியுங்கள். அபிஷேகம் செய்யப்பட்ட தங்கள் சகோதரர்களோடு சேர்ந்து வணங்குவதால் சீயோனின் அழகிற்கு அழகு சேர்க்கின்றனர்; அவர்களோடு சேர்ந்து, ‘ஒரே மேய்ப்பன்’ கீழ் ‘ஒரே மந்தையாகின்றனர்.’—யோவான் 10:16.
சீயோனுக்கு வரும் வர்த்தகர்கள், மேய்ப்பர்கள், வணிகர்கள்
11, 12. சீயோனிடம் வரும் கூட்டத்தாரை விவரியுங்கள்.
11 முன்னுரைக்கப்பட்ட இந்தக் கூட்டிச் சேர்த்தலின் விளைவாக யெகோவாவை துதிப்போரின் எண்ணிக்கை பன்மடங்காக அதிகரிக்கிறது. தீர்க்கதரிசனத்தின் பின்வரும் வார்த்தைகளில் இது முன்னுரைக்கப்படுகிறது. அந்தத் தீர்க்கதரிசன ஸ்திரீயோடு நீங்களும் சீயோன் மலையில் நிற்பதாக கற்பனை செய்துகொள்ளுங்கள். கிழக்குப் பக்கம் பார்க்கையில் உங்களுக்கு தென்படுவது என்ன? “ஒட்டகங்களின் திரளும், மீதியான் ஏப்பாத் தேசங்களின் ஒட்டகக் குட்டிகளும் உன் நாட்டை மூடும்; அவர்கள் யாவரும் ஷேபாவிலிருந்து வருகிறார்கள்; பொன்னையும் தூபவர்க்கத்தையும் கொண்டுவருவார்கள்; யெகோவாவின் புகழை நற்செய்தியாகக் கூறுவார்கள்.” (ஏசாயா 60:6, தி.மொ.) பெருந்திரளான வர்த்தகர்கள் தங்கள் ஒட்டக மந்தைகளோடு எருசலேமை நோக்கி செல்லும் பாதையில் பிரயாணம் செய்கின்றனர். தேசத்தை வெள்ளம் மூடுவதுபோல எங்கு பார்த்தாலும் ஒட்டகங்கள் மயம்! அந்த வணிகர்களிடம், ‘பொன், தூபவர்க்கம்’ போன்ற விலையுயர்ந்த காணிக்கைகள் உள்ளன. இந்த வர்த்தகர்கள் எல்லோருக்கும் முன்பாக யெகோவாவை துதிக்கவும், ‘கர்த்தரின் துதிகளைப் பிரசித்தப்படுத்தவும்’ அவருடைய ஒளியினிடமாக வருகின்றனர்.
12 இவ்வாறு வர்த்தகர்கள் மட்டுமல்ல, மேய்ப்பர்களும் சீயோனிடம் கூடிவருகின்றனர். “கேதாரின் ஆடுகளெல்லாம் உன்னிடத்தில் சேர்க்கப்படும்; நெபாயோத்தின் கடாக்கள் உன்னைச் சேவி[க்கும்].” (ஏசாயா 60:7அ) தங்கள் மந்தைகளின் மிகச் சிறந்தவற்றை யெகோவாவிற்கு அளிக்க மேய்ப்பர் கூட்டத்தார் பரிசுத்த நகரத்திற்கு வருகின்றனர். அதுமட்டுமா, சீயோனுக்கு ஊழியம் செய்ய தங்களையே அர்ப்பணிக்கின்றனர்! புறதேசத்தை சேர்ந்த இவர்களை யெகோவா எவ்வாறு ஏற்றுக்கொள்கிறார்? அவை “அங்கீகரிக்கப்பட்டதாய் என் பலிபீடத்தின் மேல் ஏறும்; என் மகிமையின் ஆலயத்தை மகிமைப்படுத்துவேன்” என்று யெகோவாவே பதிலளிக்கிறார். (ஏசாயா 60:7ஆ) இந்தப் புறதேசத்தாரின் பலிகளையும் சேவையையும் யெகோவா மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறார். அவர்கள் அங்கிருப்பது அவருடைய ஆலயத்தை அலங்கரிக்கிறது.
13, 14. மேற்கிலிருந்து வருவதாக என்ன தென்படுகிறது?
13 இப்போது மேற்கு திசையிலுள்ள தொடுவானத்தை திரும்பி பாருங்கள். உங்கள் கண்களுக்கு தெரிவது என்ன? தொலைதூரத்தில், கடல் பரப்பின்மீது பரவியிருக்கும் வெண்மேகம் போல ஏதோ தெரிகிறது. உங்கள் மனதிலிருக்கும் கேள்வியையே யெகோவா கேட்கிறார்: “மேகம் போலவும், தங்கள் கூடுகளுக்கு விரையும் புறாக்கள் போலவும் பறந்துவருகிற இவர்கள் யார்?” (ஏசாயா 60:8, தி.மொ.) தம் கேள்விக்கு யெகோவாவே பதிலளிக்கிறார்: “எனக்குக் காத்திருக்கிற தீவுகளிலுள்ளவர்கள் தூரத்திலிருந்து உன் பிள்ளைகளையும் அவர்களோடேகூட அவர்கள் வெள்ளியையும் அவர்கள் பொன்னையும் தர்ஷீஸ் கப்பல்களிலே முதல் முதல் ஏற்றி உன் கடவுளாகிய யெகோவாவின் நாமத்துக்கென்றும் இஸ்ரவேலின் பரிசுத்தருக்கென்றும் கொண்டுவருகிறார்கள்; அவர் உன்னை மகிமைப்படுத்தினாரே.”—ஏசாயா 60:9, தி.மொ.
14 இந்தக் காட்சியை உங்கள் மனக்கண்களால் பார்க்க முடிகிறதா? அந்த வெண்மேகம் நெருங்கிவிட்டது, இப்போது மேற்கிலிருக்கும் ஒரு தொகுதியான புள்ளிகள்போல தெரிகிறது. அது, அலைகள் மேல் நீந்தி வரும் பறவை கூட்டம்போல் காட்சியளிக்கிறது. ஆனால் பக்கத்தில் வரும்போதோ அது, காற்றால் உந்தித் தள்ளப்படுவதற்காக பாய்மரங்கள் விரிக்கப்பட்ட கப்பல்களே என தெரிந்துகொள்கிறீர்கள். எருசலேமை நோக்கி வரும் இந்த ஏராளமான கப்பல்கள் புறா கூட்டத்தைப்போல் காட்சியளிக்கின்றன. அவை, யெகோவாவை வணங்குவதற்காக எருசலேமுக்கு வரும் விசுவாசிகளை தொலைதூர துறைமுகங்களிலிருந்து சுமந்துகொண்டு படுவேகமாக விரைகின்றன.
யெகோவாவின் அமைப்பு விரிவடைகிறது
15. (அ) ஏசாயா 60:4-9 வசனங்கள் என்ன அதிகரிப்பைப் பற்றி கூறுகின்றன? (ஆ) உண்மை கிறிஸ்தவர்கள் எப்படிப்பட்ட மனநிலையை காண்பிக்கின்றனர்?
15 உலகமுழுவதிலும் 1919 முதல் ஏற்பட்டுள்ள அதிகரிப்பை 4 முதல் 9 வசனங்கள் எவ்வளவு தத்ரூபமான, தீர்க்கதரிசன படமாக சித்தரிக்கின்றன! யெகோவா சீயோனுக்கு ஏன் அப்பேர்ப்பட்ட அதிகரிப்பை அளித்து ஆசீர்வதித்தார்? ஏனெனில், 1919 முதல் தேவனுடைய இஸ்ரவேல் யெகோவாவின் ஒளியை கீழ்ப்படிதலோடு, தொடர்ந்து பிரகாசித்து வந்திருக்கிறது. ஆனால் 7-ம் வசனத்தின்படி, புதிதாக வருபவர்கள் ‘[கடவுளுடைய] பலிபீடத்தின்மேல் ஏறுவர்’ என்பதை கவனித்தீர்களா? பலிபீடத்திலேயே பலிகள் செலுத்தப்படும்; தீர்க்கதரிசனத்தின் இந்த அம்சம், யெகோவாவின் சேவையிலும் பலிகள் உட்பட்டுள்ளதை நமக்கு நினைப்பூட்டுகிறது. அப்போஸ்தலன் பவுல் பின்வருமாறு எழுதினார்: “நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்க வேண்டுமென்று, . . . உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்.” (ரோமர் 12:1) பவுலின் வார்த்தைகளுக்கு இசைவாக, வெறுமனே வாரத்திற்கு ஒரு முறை மத கூட்டங்களுக்கு செல்வதோடு உண்மை கிறிஸ்தவர்கள் திருப்தி அடைந்துவிடுவதில்லை. அவர்கள் தங்கள் நேரம், சக்தி, பொருள் வளம் அனைத்தையுமே மெய் வணக்கத்தை முன்னேற்றுவிப்பதற்காக செலவழிக்கின்றனர். இப்படிப்பட்ட பக்தியுள்ள வணக்கத்தார் இருப்பது யெகோவாவின் வீட்டை அலங்கரிக்கவில்லையா? அலங்கரித்ததாகவே ஏசாயாவின் தீர்க்கதரிசனம் கூறியது. அப்படிப்பட்ட வைராக்கியமுள்ள வணக்கத்தாரும்கூட யெகோவாவின் கண்களில் அழகாக இருக்கின்றனர் என நிச்சயமாக இருக்கலாம்.
16. பூர்வ காலங்களில் திரும்ப கட்டுவதில் யார் உதவினர், நவீன காலங்களில் யார் உதவுகின்றனர்?
16 புதிதாக வருவோர் உழைக்க விரும்புகின்றனர். அந்தத் தீர்க்கதரிசனம் தொடர்ந்து கூறுவதாவது: “அந்நியரின் புத்திரர் உன் மதில்களைக் கட்டி, அவர்களுடைய ராஜாக்கள் உன்னைச் சேவிப்பார்கள்.” (ஏசாயா 60:10) இந்த வசனத்தின் முதல் நிறைவேற்றத்தில், அதாவது பாபிலோனிய சிறையிருப்பிலிருந்து வெளி வந்த காலத்தில், ஆலயத்தையும் எருசலேம் நகரத்தையும் திரும்ப கட்டுவதில் தேசங்களைச் சேர்ந்த ராஜாக்களும் மற்றவர்களும் உண்மையிலேயே உதவினர். (எஸ்றா 3:7; நெகேமியா 3:26) நவீன கால நிறைவேற்றத்தில், உண்மை வணக்கத்தைக் கட்டுவதில் திரள் கூட்டத்தினர் அபிஷேகம் செய்யப்பட்ட மீதியானோரை ஆதரித்திருக்கின்றனர். கிறிஸ்தவ சபைகளை கட்ட அவர்கள் உதவுகின்றனர்; இவ்வாறு நகரம் போன்ற யெகோவாவுடைய அமைப்பின் ‘மதில்களை’ பலப்படுத்தியிருக்கின்றனர். அதோடு, ராஜ்ய மன்றங்கள், மாநாட்டு மன்றங்கள், பெத்தேல் வளாகங்கள் போன்றவற்றை சொல்லர்த்தமாக கட்டுவதிலும் பங்குகொள்கின்றனர். விரிவடைந்து வரும் யெகோவாவுடைய அமைப்பின் தேவைகளை கவனித்துக்கொள்ள அபிஷேகம் செய்யப்பட்ட தங்களுடைய சகோதரர்கள் எடுக்கும் முயற்சிகளை இந்த எல்லா வழிகளிலும் அவர்கள் ஆதரிக்கின்றனர்!
17. யெகோவா தம் மக்களை எந்த விதத்தில் அலங்கரிக்கிறார்?
17 ஏசாயா 60:10-ன் முடிவான வார்த்தைகள் எவ்வளவு உற்சாகமூட்டுகின்றன! “என் கடுங்கோபத்தினால் உன்னை அடித்தேன்; ஆனாலும் என் கிருபையினால் உனக்கு இரங்கினேன்” என்று யெகோவா கூறுகிறார். ஆம், 1918/19-ல் யெகோவா தம் மக்களை சிட்சித்தார். ஆனால் அது கடந்த காலம். இப்பொழுதோ, அபிஷேகம் செய்யப்பட்ட தமது ஊழியர்களுக்கும் அவர்களுடைய தோழர்களான வேறே ஆடுகளுக்கும் யெகோவா இரக்கம் காட்டுவதற்கான சமயமாகும். அளவுக்கு அதிகமான அதிகரிப்பினால் அவர்களை ஆசீர்வதித்திருப்பதே இதற்கு அத்தாட்சியாகும்; இவ்வாறு அவர்களை ‘அலங்கரித்திருக்கிறார்.’
18, 19. (அ) தமது அமைப்பிற்குள் வரும் புதியவர்கள் சம்பந்தமாக யெகோவா என்ன வாக்குறுதி அளிக்கிறார்? (ஆ) ஏசாயா 60-ம் அதிகாரத்தின் மீதமிருக்கும் வசனங்கள் நமக்கு எதை வெளிப்படுத்துகின்றன?
18 ஒவ்வொரு வருடமும் லட்சக்கணக்கான புதிய ‘அந்நியர்கள்’ யெகோவாவின் அமைப்போடு கூட்டுறவு கொள்கின்றனர், இன்னும் அநேகர் வருவதற்கு வழி திறந்தே இருக்கும். “உன்னிடத்துக்கு ஜாதிகளின் [“தேசங்களின்,” NW] பலத்த சேனையைக் [“ஐசுவரியத்தைக்,” தி.மொ.] கொண்டுவரும்படிக்கும், அவர்களுடைய ராஜாக்களை அழைத்துவரும்படிக்கும், உன் வாசல்கள் இரவும் பகலும் பூட்டப்படாமல் எப்பொழுதும் திறந்திருக்கும்” என யெகோவா சீயோனிடம் கூறுகிறார். (ஏசாயா 60:11) எதிராளிகள் சிலர் இந்த ‘வாசல்களை’ மூட முயலுகின்றனர், ஆனால் அவர்களால் வெற்றி பெற முடியாது என்பதை நாம் அறிவோம். ஏதாவது ஒரு விதத்தில் கதவுகள் திறந்தேயிருக்கும் என யெகோவாவே சொல்லியிருக்கிறார். அதிகரிப்பு தொடரும்.
19 இந்தக் கடைசி நாட்களில், யெகோவா தம் மக்களை மற்ற வழிகளிலும் ஆசீர்வதித்து அலங்கரித்திருக்கிறார். அவற்றை ஏசாயா 60-ம் அதிகாரத்தின் மீதமிருக்கும் வசனங்கள் தீர்க்கதரிசன ரீதியில் வெளிப்படுத்துகின்றன.
உங்களால் விளக்க முடியுமா?
• கடவுளுடைய “ஸ்திரீ” யார், பூமியில் அவளை பிரதிநிதித்துவம் செய்வது யார்?
• சீயோனின் பிள்ளைகள் எப்போது முகங்குப்புற கிடந்தனர், எப்போது, எப்படி ‘எழுந்தனர்’?
• பல்வேறு அடையாளங்களில் இன்றைய ராஜ்ய பிரசங்கிகளின் அதிகரிப்பை யெகோவா எவ்வாறு முன்னறிவித்தார்?
• யெகோவா தமது ஒளியை என்ன வழிகளில் தம் மக்கள்மீது பிரகாசிக்க செய்திருக்கிறார்?
[பக்கம் 10-ன் படம்]
யெகோவாவின் “ஸ்திரீ” எழும்பும்படி கட்டளை பெறுகிறாள்
[பக்கம் 12-ன் படம்]
தொடுவானத்தில் தெரியும் கப்பல் கூட்டம் புறாக்களைப் போல காட்சியளிக்கிறது