மேசியாவுக்காக அவர்கள் காத்திருந்தார்கள்
“அக்காலத்தில் மக்கள் மீட்பரை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஒருவேளை யோவான் மெசியாவாக இருப்பாரோ என்று எல்லாரும் தங்களுக்குள் எண்ணிக்கொண்டிருந்தார்கள்.”—லூ. 3:15, பொது மொழிபெயர்ப்பு.
1. என்ன மகிழ்ச்சியூட்டும் செய்தியை மேய்ப்பர்களிடம் தேவதூதர் சொன்னார்?
இரவு நேரத்தில் மேய்ப்பர்கள் வயல்வெளியில் தங்கள் மந்தைகளைக் கவனித்துக்கொண்டு இருந்தார்கள். திடீரென்று, ஒரு தேவதூதர் அவர்களிடம் வந்து நின்றார்; கடவுளுடைய மகிமை அவர்களைச் சுற்றிலும் பிரகாசித்தது. அதைக் கண்டு அவர்கள் திடுக்கிட்டார்கள். அப்போது அந்தத் தூதர் அவர்களிடம், “பயப்படாதீர்கள், எல்லா மக்களுக்கும் மிகுந்த சந்தோஷத்தைத் தருகிற நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்; எஜமானராகிய கிறிஸ்து உங்களுடைய மீட்பராக இன்று . . . பிறந்திருக்கிறார்” என்ற மகிழ்ச்சியூட்டும் செய்தியைச் சொன்னார்; அந்தக் குழந்தைதான் பின்னர் மேசியாவாக ஆகவிருந்தார். அருகிலுள்ள ஓர் ஊரில், அந்தக் குழந்தை தீவனத் தொட்டியில் கிடத்தப்பட்டிருப்பதை அவர்கள் காணலாம் என்று தேவதூதர் சொன்னார். அந்நொடியே “திரளான தேவதூதர்கள்” தோன்றி, “உன்னதத்தில் இருக்கிற கடவுளுக்கு மகிமையும், பூமியில் அனுக்கிரகம் பெற்ற மனிதர்களுக்குச் சமாதானமும் உண்டாவதாக” என்று சொல்லி யெகோவாவைப் புகழ்ந்தார்கள்.—லூக். 2:8-14.
2. “மேசியா” என்பதன் அர்த்தமென்ன, அவரை எவ்வாறு அடையாளம் கண்டுகொள்ள முடியும்?
2 “மேசியா” அல்லது “கிறிஸ்து” என்றால் கடவுளால் “அபிஷேகம் செய்யப்பட்டவர்,” அதாவது நியமிக்கப்பட்டவர், என்பதை யூதர்களாயிருந்த அந்த மேய்ப்பர்கள் அறிந்திருந்தது உண்மைதான். (யாத். 29:5-7) ஆனால், தேவதூதர் குறிப்பிட்ட அந்தக் குழந்தைதான் யெகோவாவால் நியமிக்கப்பட்ட மேசியாவாக ஆவார் என்பதை அந்த மேய்ப்பர்களும் மற்றவர்களும் எப்படி உறுதியாகத் தெரிந்துகொள்ள முடியும்? எபிரெய வேதவசனங்களில் உள்ள தீர்க்கதரிசனங்களை ஆராய்ந்து பார்த்து, அவை இந்தக் குழந்தையின் வாழ்க்கையில் நிறைவேறுகின்றனவா என்று ஒத்துப்பார்ப்பதன் மூலம் நிச்சயப்படுத்திக்கொள்ள முடியும்.
மக்கள் ஏன் எதிர்பார்த்துக்கொண்டிருந்தார்கள்?
3, 4. தானியேல் 9:24, 25-ல் உள்ள தீர்க்கதரிசனம் எப்படி நிறைவேறியது?
3 பல வருடங்கள் கழித்து, ஞானஸ்நானம் கொடுப்பவரான யோவான் தன் ஊழியத்தை ஆரம்பித்தார். அவர் சொன்னவற்றையும் செய்தவற்றையும் கண்ட சிலர் அவர்தான் மேசியாவோ என்று நினைக்க ஆரம்பித்தார்கள். (லூக்கா 3:15-ஐ வாசியுங்கள்.) ஆனால், எழுபது வாரங்களைப் பற்றிய ஒரு தீர்க்கதரிசனம், மேசியா எப்போது தோன்றுவார் என்பதை அறிந்துகொள்ள மக்களுக்கு உதவியது. “எழுபது வாரங்கள் செல்லும்படி குறிக்கப்பட்டிருக்கிறது. . . . எருசலேமைத் திரும்ப எடுப்பித்துக் கட்டுகிறதற்கான கட்டளை வெளிப்படுவதுமுதல், பிரபுவாகிய மேசியா வருமட்டும் ஏழு வாரமும், அறுபத்திரண்டு வாரமும் செல்லும்” என்று அந்தத் தீர்க்கதரிசனத்தின் ஒரு பகுதி கூறியது. (தானி. 9:24, 25) இந்த வாரங்கள், வார வருடங்களைக் குறிப்பதாக அநேக வல்லுனர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். உதாரணமாக, “எழுபது வார வருடங்கள் செல்லும்” என்று ரிவைஸ்ட் ஸ்டான்டர்ட் வர்ஷன் கூறுகிறது.
4 தானியேல் 9:25-ல் சொல்லப்பட்டுள்ள 69 வாரங்கள், அதாவது 483 வருடங்கள், கி.மு. 455-ல் ஆரம்பித்ததை இன்று யெகோவாவின் சாட்சிகள் அறிந்திருக்கிறார்கள்; அந்த வருடத்தில்தான், எருசலேமை மீண்டும் புதுப்பித்துக் கட்டும்படி பெர்சிய ராஜாவான அர்த்தசஷ்டா நெகேமியாவுக்கு அதிகாரம் அளித்தார். (நெ. 2:1-8) அந்த 69 வாரங்கள் 483 வருடங்கள் கழித்து முடிவுக்கு வந்தன; அதாவது, கி.பி. 29-ல் நாசரேத் ஊரைச் சேர்ந்த இயேசு ஞானஸ்நானம் பெற்று, கடவுளுடைய சக்தியால் அபிஷேகம் செய்யப்பட்டு, மேசியாவாக ஆனபோது முடிவுக்கு வந்தன.—மத். 3:13-17.a
5. எந்தத் தீர்க்கதரிசனங்களைப் பற்றி இப்போது சிந்திப்போம்?
5 மேசியா பற்றிய மற்ற தீர்க்கதரிசனங்களில் சிலவற்றை இப்போது சிந்திப்போம்; அவை இயேசுவின் பிறப்பு, ஆரம்பகால வாழ்க்கை, ஊழியம் போன்றவற்றில் நிறைவேற்றம் அடைந்தன. அவற்றைச் சிந்திப்பது, கடவுளுடைய தீர்க்கதரிசன வார்த்தை மீதுள்ள நம் விசுவாசத்தை நிச்சயம் பலப்படுத்தும். அதோடு, இயேசுதான் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட மேசியா என்பதற்குத் தெளிவான அத்தாட்சியை அளிக்கும்.
அவருடைய ஆரம்பகால வாழ்க்கை பற்றிய தீர்க்கதரிசனங்கள்
6. ஆதியாகமம் 49:10 எப்படி நிறைவேறியது என்று விளக்குங்கள்.
6 இஸ்ரவேலின் யூதா கோத்திரத்திலிருந்து மேசியா தோன்றுவார். யாக்கோபு மரிப்பதற்கு முன்பு தன் மகன்களை ஆசீர்வதித்தார்; அப்போது யூதாவிடம், “ஷைலோ வரும்வரை செங்கோல் யூதாவைவிட்டு நீங்காது, அதிகாரக்கோல் அவர் பாதங்களைவிட்டு ஒழியாது; ஜனங்கள் எல்லாரும் அவருக்குக் கீழ்ப்படிவார்கள்” என்று சொன்னார். (ஆதி. 49:10, NW) யூதாவிடம் யாக்கோபு கூறியது மேசியாவைப் பற்றியதே என்று யூத கல்விமான்கள் நம்பிவந்தார்கள். ஆனால், அவர் கூறியதன் அர்த்தம் என்ன? அவர் ஒரு ராஜாவைப் பற்றித்தான் பேசினார் என்பது தெளிவாக இருக்கிறது; ஏனென்றால், செங்கோலும் அதிகாரக்கோலும் ராஜாவின் கையில்தான் இருந்தன, ஆட்சி செய்வதற்கும் கட்டளை கொடுப்பதற்கும் அவருக்கிருந்த அதிகாரத்தை அவை குறித்துக்காட்டின. ஆகவே, ஆட்சிசெய்வதற்கு அதிகாரம் பெற்றிருந்த ராஜா யூதா கோத்திரத்திலிருந்து தோன்றுவார் என்று இந்தத் தீர்க்கதரிசனம் சுட்டிக்காட்டியது. யூதாவிலிருந்து தோன்றிய முதல் ராஜா தாவீது, கடைசி ராஜா சிதேக்கியா. ஆனால், அவருக்குப் பிறகு தோன்றவிருந்த மற்றொரு ராஜாவைப் பற்றி யாக்கோபின் தீர்க்கதரிசனம் கூறியது. அவர் என்றென்றும் ராஜாவாக ஆட்சி செய்வார் என்று அது குறிப்பிட்டது. அவரை ஷைலோ என்று அழைத்தது, “உரிமையுடையவர்” என்று அதற்கு அர்த்தம். அந்த ராஜாவுக்குத்தான் சட்டப்பூர்வ உரிமை இருந்ததாகக் கடவுள் சிதேக்கியாவிடம் கூறினார். (எசே. 21:26, 27) இயேசு பிறப்பதற்கு முன்பு காபிரியேல் தூதன் மரியாளிடம், “அவருடைய தந்தையான தாவீதின் சிம்மாசனத்தைக் கடவுளாகிய யெகோவா அவருக்குக் கொடுப்பார்; யாக்கோபின் குடும்பத்தின் மீது அவர் என்றென்றும் ராஜாவாக ஆளுவார்; அவருடைய அரசாட்சிக்கு முடிவே இருக்காது” என்று சொன்னார். (லூக். 1:32, 33) இயேசு, யூதா கோத்திரத்தில் தாவீதின் குடும்பத்தில் பிறந்தார். தாவீதின் குடும்பத்தில் ராஜாவாய் இருப்பதற்கான வாக்குறுதியை சிதேக்கியாவுக்குப் பிறகு இயேசுவிடம் மட்டும்தான் யெகோவா கொடுத்திருந்தார். ஆகவே, ஷைலோ என்பது இயேசு கிறிஸ்துவைத்தான் குறிக்க வேண்டும்.—மத். 1:1-3, 6; லூக். 3:23, 31-34.
7. மேசியாவின் பிறப்பு பற்றிய தீர்க்கதரிசனம் எவ்வாறு நிறைவேறியது?
7 மேசியா பெத்லகேமில் பிறப்பார். “எப்பிராத்தா என்னப்பட்ட பெத்லகேமே, நீ யூதேயாவிலுள்ள ஆயிரங்களுக்குள்ளே சிறியதாயிருந்தும், இஸ்ரவேலை ஆளப்போகிறவர் உன்னிடத்திலிருந்து புறப்பட்டு என்னிடத்தில் வருவார்; அவருடைய புறப்படுதல் அநாதிநாட்களாகிய பூர்வத்தினுடையது” என்று தீர்க்கதரிசியான மீகா எழுதினார். (மீ. 5:2) யூதேயாவிலுள்ள பெத்லகேம் என்ற ஊரில் மேசியா பிறக்கவிருந்தார்; அது முன்பு எப்பிராத்தா என்று அழைக்கப்பட்டதாகத் தெரிகிறது. இயேசுவின் தாயாகிய மரியாளும் வளர்ப்புத் தந்தையான யோசேப்பும் நாசரேத்தில் வாழ்ந்தார்கள்; என்றாலும், ரோம அரசனுடைய ஆணையின்படி பெயர்ப்பதிவு செய்வதற்காக அவர்கள் பெத்லகேமுக்குச் சென்றபோது இயேசு பிறந்தார். (மத். 2:1, 5, 6) மீகாவின் தீர்க்கதரிசனம் எவ்வளவு துல்லியமாக நிறைவேறியது!
8, 9. மேசியாவின் பிறப்பைப் பற்றியும் அதன்பின் நடந்த சம்பவங்களைப் பற்றியும் என்ன தீர்க்கதரிசனங்கள் உரைக்கப்பட்டன?
8 ஒரு கன்னிகை மேசியாவைப் பெற்றெடுப்பாள். (ஏசாயா 7:14-ஐ வாசியுங்கள்.) ஒரு “கன்னிகை” குமாரனைப் பெறுவாள் என்று இந்த வசனம் முன்னுரைத்தது. இயேசு பிறந்தபோது அது நிறைவேறியதாக கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால் மத்தேயு எழுதினார். கன்னியான மரியாள் கடவுளுடைய சக்தியால் கர்ப்பமானாள் என்று சுவிசேஷங்களை எழுதிய மத்தேயுவும் லூக்காவும் குறிப்பிட்டார்கள்.—மத். 1:18-25; லூக். 1:26-35.
9 மேசியா பிறந்த பிறகு சிறு குழந்தைகள் கொல்லப்படுவார்கள். எபிரெயர்களுக்குப் பிறந்த ஆண் குழந்தைகள் நைல் நதியில் தூக்கி எறியப்பட வேண்டுமென்று எகிப்திய அரசனான பார்வோன் ஒருசமயம் கட்டளையிட்டான். (யாத். 1:22) அதைப்போன்ற ஒன்று மறுபடியும் நடக்குமென எரேமியா 31:15, 16-ல் உள்ள தீர்க்கதரிசனம் சுட்டிக்காட்டியது. ராகேல் தன் பிள்ளைகளைப் பறிகொடுத்துவிட்டதால் புலம்புவதாய் அந்தத் தீர்க்கதரிசனம் குறிப்பிட்டது. எருசலேமிற்கு வடக்கேயிருந்த பென்யமீன் பகுதியைச் சேர்ந்த ராமா என்ற தொலைதூர ஊரிலும்கூட அவளுடைய புலம்பலைக் கேட்க முடிந்ததாகவும் அது குறிப்பிட்டது. பெத்லகேமிலும் அதன் சுற்றுவட்டாரத்திலும் இருந்த ஆண் பிள்ளைகளைக் கொல்லும்படி ஏரோது ராஜா கட்டளையிட்டபோது எரேமியாவின் வார்த்தைகள் நிறைவேற்றமடைந்ததாக மத்தேயு கூறுகிறார். (மத்தேயு 2:16-18-ஐ வாசியுங்கள்.) அந்தப் பகுதி முழுவதும் எந்தளவு துக்கம் வியாபித்திருக்கும்!
10. இயேசுவின் விஷயத்தில் ஓசியா 11:1 எவ்வாறு நிறைவேறியது என்று விளக்குங்கள்.
10 இஸ்ரவேலரைப் போல மேசியாவும் எகிப்திலிருந்து அழைக்கப்படுவார். (ஓசி. 11:1) ஆண் பிள்ளைகளைக் கொல்லும்படி ஏரோது கட்டளையிடுவதற்கு முன்பே, மரியாளையும் இயேசுவையும் கூட்டிக்கொண்டு எகிப்துக்குத் தப்பி ஓடும்படி யோசேப்பிடம் ஒரு தேவதூதர் சொன்னார். அவர்கள் “ஏரோதுவின் மரணம்வரை அங்கேயே” இருந்தார்கள்; “‘எகிப்திலிருந்து என் மகனை வரவழைத்தேன்’ என்று யெகோவா தம்முடைய தீர்க்கதரிசியின் [ஓசியாவின்] மூலம் சொன்னது நிறைவேறும்படியே அப்படி நடந்தது.” (மத். 2:13-15) நிச்சயமாகவே, இயேசு தம்முடைய பிறப்பு, ஆரம்பகால வாழ்க்கை சம்பந்தமாக முன்னறிவிக்கப்பட்ட சம்பவங்கள் எவற்றையும் கட்டுப்படுத்தியிருக்க முடியாது.
மேசியா தம் ஊழியத்தை ஆரம்பிக்கிறார்!
11. மேசியாவுக்காக வழியைத் தயார்படுத்தியது யார்?
11 மேசியாவுக்காக வழி தயார்படுத்தப்படும். “எலியா தீர்க்கதரிசி” மேசியாவின் வருகைக்காக மக்களின் இருதயங்களைத் தயார்படுத்துவார் என்று மல்கியா முன்னறிவித்தார். (மல்கியா 4:5, 6-ஐ வாசியுங்கள்.) யோவான் ஸ்நானகர்தான் இந்த “எலியா” என்று இயேசுவே அடையாளம் காட்டினார். (மத். 11:12-14) யோவான் வழியைத் தயார்படுத்தினார் என்று மாற்கு சுட்டிக்காட்டினார். அதைத்தான் ஏசாயாவும் முன்னறிவித்திருந்தார். (ஏசா. 40:3; மாற். 1:1-4) தமக்காக வழியைத் தயார்படுத்தும்படி இயேசு யோவானிடம் சொல்லவில்லை. மக்கள் மேசியாவை அடையாளம் கண்டுகொள்ள வேண்டுமென்று கடவுள் விரும்பினார். ஆகவே, எலியா போன்ற வேலையைச் செய்து, மேசியாவை வரவேற்க மக்களைத் தயார்படுத்தும்படி யோவானைக் கடவுளே நியமித்தார்.
12. மேசியாவுக்கு என்ன விசேஷித்த வேலையைக் கடவுள் கொடுத்தார்?
12 மேசியாவுக்குக் கடவுள் ஒரு விசேஷித்த வேலையைக் கொடுப்பார். இயேசு, தாம் வளர்ந்த ஊராகிய நாசரேத்திலிருந்த ஜெபக்கூடத்திற்குச் சென்றபோது ஏசாயாவின் சுருளிலிருந்து பின்வரும் வார்த்தைகளை வாசித்தார்: “யெகோவாவின் சக்தி என்மேல் இருக்கிறது, ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்க அவர் என்னை நியமித்தார்; சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையும் பார்வையற்றவர்களுக்குப் பார்வையும் கிடைக்குமென்று பிரசங்கிப்பதற்காகவும், ஒடுக்கப்பட்டவர்களுக்கு விடுதலை அளிப்பதற்காகவும், யெகோவாவின் அனுக்கிரக காலத்தைப் பிரசங்கிப்பதற்காகவும் அவர் என்னை அனுப்பினார்.” இவற்றை வாசித்த பிறகு இவை தமக்குப் பொருந்துவதாகக் கூறினார். அவரே உண்மையான மேசியாவாக இருந்ததால், “இப்போது நீங்கள் கேட்ட இந்த வேதவசனம் இன்று நிறைவேறியிருக்கிறது” என்று சொன்னார்.—லூக். 4:16-21.
13. இயேசு கலிலேயாவில் ஊழியம் செய்வார் என்பது எவ்வாறு முன்னுரைக்கப்பட்டது?
13 மேசியா கலிலேயாவில் ஊழியம் செய்வார் என்று முன்னுரைக்கப்பட்டது. “புறஜாதியாருடைய கலிலேயாவாகிய” “செபுலோன் நாட்டையும், நப்தலி நாட்டையும்” குறித்து ஏசாயா தீர்க்கதரிசி இவ்வாறு எழுதினார்: “இருளில் நடக்கிற ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் தேசத்தில் குடியிருக்கிறவர்களின்மேல் வெளிச்சம் பிரகாசித்தது.” (ஏசா. 9:1, 2) கலிலேயா பகுதியிலிருந்த கப்பர்நகூம் என்ற ஊரில் இயேசு தமது ஊழியத்தை ஆரம்பித்தார். செபுலோன், நப்தலி ஆகிய இடங்களிலும் அவர் ஊழியம் செய்தார். பெரிய வெளிச்சம்போல் பிரகாசித்த சத்தியங்களைக் கற்றுக்கொடுப்பதன் மூலம் இந்தப் பகுதியிலிருந்த மக்களுக்கு இயேசு உதவினார். (மத். 4:12-16) கலிலேயாவில் இருக்கையில்தான் இயேசு மலைப் பிரசங்கத்தைக் கொடுத்தார், தமது சீடர்களைத் தேர்ந்தெடுத்தார், முதல் அற்புதத்தைச் செய்தார், உயிர்த்தெழுப்பப்பட்ட பிறகு 500-க்கும் அதிகமான சீடர்களுக்குக் காட்சியளித்தார். (மத். 5:1–7:27; 28:16-20; மாற். 3:13, 14; யோவா. 2:8-11; 1 கொ. 15:6) ஆகவே, ‘செபுலோன் நாட்டிலும், நப்தலி நாட்டிலும்’ இயேசு பிரசங்கித்தபோது ஏசாயா உரைத்த தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றினார். அதற்குப் பிறகு, இஸ்ரவேலின் மற்ற பகுதிகளில்கூட தம் ஊழியத்தைச் செய்தார்.
மேசியா பற்றிய மற்ற தீர்க்கதரிசனங்கள்
14. சங்கீதம் 78:2 எவ்வாறு நிறைவேறியது?
14 உவமைகள் அல்லது கதைகள் மூலம் மேசியா மக்களுக்குக் கற்பிப்பார். “என் வாயை உவமைகளால் திறப்பேன்” என்று சங்கீதக்காரனாகிய ஆசாப் பாடினார். (சங். 78:2) அவர் இயேசுவைக் குறித்து தீர்க்கதரிசனம் சொன்னார் என்று நமக்கு எப்படித் தெரியும்? மத்தேயு அதை உறுதிசெய்தார். கடவுளுடைய அரசாங்கத்தைக் கடுகு விதைக்கும் புளித்த மாவுக்கும் ஒப்பிட்டு இயேசு சொன்ன உவமைகளைக் குறிப்பிட்ட பிறகு மத்தேயு இவ்வாறு சொன்னார்: “உவமைகள் இல்லாமல் அவர்களிடம் அவர் [இயேசு] பேசியதே இல்லை; ‘உவமைகளாலேயே நான் பேசுவேன்; உலகம் உண்டானதுமுதல் மறைத்து வைக்கப்பட்டுள்ள விஷயங்களை நான் வெளிப்படுத்துவேன்’ என்று தீர்க்கதரிசியின் மூலம் சொல்லப்பட்டது நிறைவேறும்படியே அப்படி நடந்தது.” (மத். 13:31-35) இயேசு உபயோகித்த உவமைகளும் கதைகளும், யெகோவாவைப் பற்றிய சத்தியத்தை அறிந்துகொள்ள அநேகருக்கு உதவின.
15. ஏசாயா 53:4-ல் உள்ள தீர்க்கதரிசனம் எவ்வாறு நிறைவேறியது?
15 மனிதருடைய நோய்களை மேசியா சுமப்பார். “மெய்யாகவே, அவர் ஏற்றுக்கொண்டது நமது நோய்கள், அவர் சுமந்தது நமது வேதனைகள்” என்று ஏசாயா முன்னுரைத்தார். (ஏசா. 53:4, திருத்திய மொழிபெயர்ப்பு) பேதுருவின் மாமியாரைக் குணப்படுத்திய பிறகு இயேசு மற்ற நோயாளிகளைக் குணப்படுத்தியதை மத்தேயு சுட்டிக்காட்டி, “‘அவர்தாமே நம்முடைய நோய்களையும் வேதனைகளையும் நீக்கினார்’ என்று ஏசாயா தீர்க்கதரிசியால் சொல்லப்பட்டது நிறைவேறும்படியே அப்படி நடந்தது” எனக் கூறினார். (மத். 8:14-17) இன்னும் பல சந்தர்ப்பங்களிலும் இயேசு மக்களைக் குணப்படுத்தியதாக பைபிள் சொல்கிறது.
16. ஏசாயா 53:1-ஐ இயேசு நிறைவேற்றினார் என்று அப்போஸ்தலன் யோவான் எவ்வாறு சுட்டிக்காட்டினார்?
16 மேசியா பல நன்மைகள் செய்தாலும் அநேகர் அவர்மீது நம்பிக்கை வைக்க மாட்டார்கள். (ஏசாயா 53:1-ஐ வாசியுங்கள்.) இந்தத் தீர்க்கதரிசனம் நிறைவேறியதைச் சுட்டிக்காட்டி அப்போஸ்தலன் யோவான் இவ்வாறு எழுதினார்: “அவர்களுக்குமுன் அவர் [இயேசு] ஏராளமான அடையாளங்களைச் செய்திருந்தும் அவர்மீது அவர்கள் விசுவாசம் வைக்கவில்லை. ஏசாயா தீர்க்கதரிசி சொன்ன இவ்வார்த்தைகள் நிறைவேறுவதற்கே அப்படி நடந்தது: ‘யெகோவாவே, நாம் கேட்ட செய்தியில் யார் விசுவாசம் வைத்திருக்கிறார்கள்? யெகோவாவின் கரம் யாருக்கு வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது?’” (யோவா. 12:37, 38) பல வருடங்கள் கழித்து, அப்போஸ்தலன் பவுல் நற்செய்தியைப் பிரசங்கித்த சமயத்திலும் இயேசுதான் மேசியா என்று அநேகர் நம்பவில்லை.—ரோ. 10:16, 17.
17. சங்கீதம் 69:4-ல் உள்ள தீர்க்கதரிசனம் எப்படி நிறைவேற்றம் அடைந்தது?
17 மேசியா காரணமின்றி பகைக்கப்படுவார். (சங். 69:4) “வேறு யாருமே செய்யாத செயல்களை நான் அவர்கள் [மக்கள்] மத்தியில் செய்யாமல் இருந்திருந்தால், அவர்களுக்குப் பாவம் இருந்திருக்காது; ஆனால் இப்போது அவற்றைப் பார்த்தும்கூட என்னையும் என் தகப்பனையும் வெறுத்திருக்கிறார்கள். ‘காரணமில்லாமல் என்னை வெறுத்தார்கள்’ என்று அவர்களுடைய திருச்சட்டத்தில் எழுதப்பட்ட வார்த்தை நிறைவேறுவதற்காகவே இப்படி நடந்திருக்கிறது” என்று இயேசு சொன்னதாக அப்போஸ்தலன் யோவான் கூறினார். (யோவா. 15:24, 25) இங்கே ‘திருச்சட்டம்’ என குறிப்பிடப்பட்டிருப்பது அன்றிருந்த ‘வேதவசனங்கள்’ அனைத்தையும் குறிக்கிறது. (யோவா. 10:34; 12:34) சுவிசேஷங்களை வாசிக்கும்போது இயேசுவை அநேகர் வெறுத்தார்கள் என்பதை அறிகிறோம்; அதிலும் முக்கியமாக யூத மதத் தலைவர்கள் அவரை வெறுத்தார்கள். எனவேதான், “இந்த உலகம் எந்தக் காரணத்திற்காகவும் உங்களை வெறுப்பதில்லை; அதன் செயல்கள் பொல்லாதவை என்று நான் சாட்சி கொடுப்பதால் அது என்னைத்தான் வெறுக்கிறது” என்று இயேசு கூறினார்.—யோவா. 7:7.
18. அடுத்த கட்டுரையில் எதைப் பற்றிச் சிந்திப்போம்?
18 இயேசுதான் மேசியா என்று முதல் நூற்றாண்டில் வாழ்ந்த அவருடைய சீடர்கள் உறுதியாக நம்பினார்கள்; ஏனெனில், மேசியா பற்றி எபிரெய வேதவசனங்களில் இருந்த தீர்க்கதரிசனங்களை அவர் முழுமையாக நிறைவேற்றினார். (மத். 16:16) அவற்றில் சில அவரது ஆரம்பகால வாழ்க்கையிலும் ஊழியத்திலும் நிறைவேற்றம் அடைந்ததைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்த்தோம். மேசியா சம்பந்தப்பட்ட மற்ற தீர்க்கதரிசனங்களை அடுத்த கட்டுரையில் சிந்திப்போம். அவற்றைப் பற்றி ஜெபத்தோடு தியானித்தால், இயேசு கிறிஸ்துதான் நம் பரம தகப்பனாகிய யெகோவா நியமித்த மேசியா என்பதில் நம் விசுவாசம் நிச்சயமாகப் பலப்படும்.
[அடிக்குறிப்பு]
a “எழுபது வாரங்கள்” பற்றிய முழுமையான விளக்கத்திற்கு தானியேல் தீர்க்கதரிசனத்திற்கு செவிசாயுங்கள்! புத்தகத்தில் அதிகாரம் 11-ஐக் காண்க.
உங்கள் பதில் என்ன?
• இயேசுவின் பிறப்போடு சம்பந்தப்பட்ட சில தீர்க்கதரிசனங்கள் யாவை?
• மேசியாவுக்காக வழியைத் தயார்படுத்தியது யார்?
• ஏசாயா 53-ஆம் அதிகாரத்திலுள்ள தீர்க்கதரிசனங்கள் எவ்வாறு நிறைவேறின?