யெகோவா ‘தம்மை ஊக்கமாகத் தேடுவோருக்குப் பலன் அளிக்கிறவர்’
‘தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், தம்மை [“ஊக்கமாக,” Nw] தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்க வேண்டும்.’—எபிரெயர் 11:6.
1, 2. யெகோவாவின் ஊழியர்களில் சிலர் வேண்டாத எண்ணங்களுடன் ஏன் போராடிக் கொண்டிருக்கலாம்?
“ஏறக்குறைய 30 வருடங்களாக நான் ஒரு யெகோவாவின் சாட்சியாக இருக்கிறேன், ஆனால் அதற்கு நான் தகுதியற்றவள் என்றே என் மனம் சொல்லிக் கொண்டிருக்கிறது” என்கிறார் பார்பரா.a “நான் பயனியராகச் சேவை செய்திருக்கிறேன், வேறு பல ஊழிய நியமிப்புகளையும் பெற்றிருக்கிறேன், ஆனாலும் ஒரு யெகோவாவின் சாட்சியாக இருக்க எனக்குத் தகுதியில்லை என்ற எண்ணம்தான் சதா என் மனதில் ஓடிக்கொண்டிருக்கிறது” என்று அவர் மேலும் கூறுகிறார். இவரைப் போலத்தான் கீத் என்பவரும் சொல்கிறார்: “யெகோவாவின் ஊழியர்கள் எத்தனையோ காரணங்களுக்காகச் சந்தோஷமாய் இருக்கிறார்கள், ஆனால் நான் அப்படிச் சந்தோஷமாக இல்லாததால் யெகோவாவின் சாட்சியாக இருப்பதற்கே எனக்கு அருகதை இல்லையெனச் சிலசமயம் நினைத்திருக்கிறேன். இதனால், குற்றவுணர்வு வாட்டியெடுக்க, என் நிலைமை இன்னும் மோசமாகத்தான் ஆனது.”
2 அன்றும் சரி, இன்றும் சரி, யெகோவாவின் உண்மையுள்ள ஊழியர்கள் அநேகர் இத்தகைய எண்ணங்களோடு போராடியிருக்கிறார்கள். நீங்களும்கூட சில நேரங்களில் அப்படிப்பட்ட எண்ணங்களோடு போராடியிருக்கிறீர்களா? பிரச்சினைக்கு மேல் பிரச்சினை வரும்போது சமாளிக்க முடியாமல் ஒருவேளை நீங்கள் திணறிக்கொண்டிருக்கலாம், ஆனால் உங்கள் சக வணக்கத்தாரோ எந்தக் கவலையும் இல்லாமல் வாழ்க்கையைச் சந்தோஷமாக அனுபவித்து வருவது போல் உங்களுக்குத் தோன்றலாம். இதனால், யெகோவாவுடைய ஆதரவு இல்லாதது போல் அல்லது அவருடைய கவனத்தைப் பெற தகுதி இல்லாதவர்களைப் போல் ஒருவேளை நீங்கள் உணரலாம். ஆனால் அவசரப்பட்டு அதுவே உண்மை என்று நினைத்துவிடாதீர்கள். பைபிள் இவ்வாறு உறுதியளிக்கிறது: ‘உபத்திரவப்பட்டவனுடைய உபத்திரவத்தை அவர் அற்பமாக எண்ணாமலும் அருவருக்காமலும், தம்முடைய முகத்தை அவனுக்கு மறைக்காமலுமிருந்து, தம்மை நோக்கி அவன் கூப்பிடுகையில் அவனைக் கேட்டருளினார்.’ (சங்கீதம் 22:24) யெகோவா தமக்கு உண்மையாய் இருப்பவர்களின் ஜெபங்களைக் கேட்பது மட்டுமல்லாமல், அவர்களுக்குப் பலனையும் அளிக்கிறார் என்பதை மேசியாவைப் பற்றிய அந்தத் தீர்க்கதரிசன வார்த்தைகள் காண்பிக்கின்றன.
3. இந்தப் பொல்லாத உலகம் தருகிற பிரச்சினைகளிலிருந்து நாம் ஏன் தப்பிக்க முடியாது?
3 இந்தப் பொல்லாத உலகம் தருகிற பிரச்சினைகளிலிருந்து யாருமே தப்பிக்க முடியாது, யெகோவாவின் மக்களும்கூட தப்பிக்க முடியாது. இன்றைய உலகம் யெகோவாவின் முக்கிய எதிரியான பிசாசாகிய சாத்தானின் ஆட்சியின் கீழ் இருக்கிறது. (2 கொரிந்தியர் 4:4; 1 யோவான் 5:19) எனவே, யெகோவாவின் ஊழியர்கள் அற்புதகரமாகப் பாதுகாக்கப்படுவதில்லை, மாறாக அவர்கள் சாத்தானின் முக்கிய குறியாகவே இருக்கிறார்கள். (யோபு 1:7-12; வெளிப்படுத்துதல் 2:10) ஆகையால், கடவுள் அனுமதிக்கும்வரை, நாம் ‘உபத்திரவத்திலே சகித்திருக்க’ வேண்டும், அதோடு, ‘ஜெபத்திலே உறுதியாய்த் தரித்திருக்க’ வேண்டும். (ரோமர் 12:12; NW) நம் தேவனாகிய யெகோவாவுக்கு நம்மீது அன்பில்லை என்ற எண்ணமே நம் மனதில் எழக்கூடாது!
சகித்திருந்ததில் பண்டைய கால முன்மாதிரிகள்
4. வேதனைமிக்க சூழ்நிலைகளில் சகித்திருந்த யெகோவாவின் ஊழியர்கள் சிலருடைய உதாரணங்களைச் சொல்லுங்கள்.
4 யெகோவாவின் பண்டைய கால ஊழியர்களில் அநேகர் வேதனைமிக்க சூழ்நிலைகளில் சகித்திருக்க வேண்டியிருந்தது. உதாரணமாக, தனக்குக் குழந்தை பாக்கியம் இல்லையே என்று நினைத்து நினைத்து அன்னாள் “மனங்கசந்து” போயிருந்தாள்; மலடியாக இருப்பதும் கடவுளால் மறக்கப்படுவதும் ஒன்றுதான் என அவள் நினைத்தாள். (1 சாமுவேல் 1:9-11) கொலை வெறிபிடித்த யேசபேல் ராணிக்குப் பயந்து எலியா ஓடியபோது அவர் யெகோவாவிடம், “போதும் கர்த்தாவே, என் ஆத்துமாவை எடுத்துக்கொள்ளும்; நான் என் பிதாக்களைப் பார்க்கிலும் நல்லவன் அல்ல” என்று ஜெபித்தார். (1 இராஜாக்கள் 19:4) அப்போஸ்தலன் பவுலும்கூட தன்னுடைய அபூரணத்தை நினைத்து மிகவும் வேதனைப்பட்டார், அதனால்தான் “நன்மை செய்ய விரும்புகிற என்னிடத்தில் தீமையுண்டென்று . . . காண்கிறேன்” என்று ஒப்புக்கொண்டார், பிறகு, “நிர்ப்பந்தமான மனுஷன் நான்!” என்று தன்னையே நொந்துகொண்டார்.—ரோமர் 7:21-24.
5. (அ) அன்னாள், எலியா, பவுல் ஆகியோர் எவ்வாறு ஆசீர்வதிக்கப்பட்டார்கள்? (ஆ) மனச்சோர்வூட்டும் எண்ணங்கள் நம்மை வாட்டி வதைக்கும்போது, கடவுளுடைய வார்த்தையிலிருந்து நாம் எப்படி ஆறுதலைக் கண்டடையலாம்?
5 அன்னாள், எலியா, பவுல்—இவர்கள் எல்லாருமே யெகோவாவின் சேவையில் தொடர்ந்து சகித்திருந்தார்கள், இதன் காரணமாக, யெகோவா அவர்களுக்கு அபரிமிதமாக பலன் அளித்தார். (1 சாமுவேல் 1:20; 2:21; 1 இராஜாக்கள் 19:5-18; 2 தீமோத்தேயு 4:8) என்றபோதிலும் மனக்கசப்பு, பயம், துயரம் போன்ற பலவிதமான உணர்ச்சிகளோடு அவர்கள் போராடினார்கள். அப்படியானால், மனச்சோர்வூட்டும் எண்ணங்கள் நம்மையும்கூட சில நேரங்களில் வாட்டி வதைத்தால் அதைக் குறித்து நாம் ஆச்சரியப்பட வேண்டியதில்லை. ஆனாலும், கவலைகளில் துவண்டுபோகும் சமயங்களில் யெகோவாவுக்கு உண்மையிலேயே உங்கள்மீது அன்பிருக்கிறதா என்ற சந்தேகம் வரலாம்; அப்போது நீங்கள் என்ன செய்யலாம்? கடவுளுடைய வார்த்தையிலிருந்து நீங்கள் ஆறுதலைக் கண்டடையலாம். உதாரணத்திற்கு, யெகோவா ‘உங்கள் தலையிலுள்ள மயிரையெல்லாம்’ எண்ணி வைத்திருக்கிறார் என இயேசு சொன்னதை முந்தின கட்டுரையில் கலந்தாலோசித்தோம். (மத்தேயு 10:30) தம்முடைய ஊழியர்கள் ஒவ்வொருவர் மீதும் யெகோவா ஆழ்ந்த அக்கறையோடு இருக்கிறார் என்பதை ஊக்கமூட்டும் அந்த வார்த்தைகள் சுட்டிக்காட்டுகின்றன. அடைக்கலான் குருவிகளைப் பற்றிய இயேசுவின் உதாரணத்தையும் சற்று சிந்தித்துப் பாருங்கள். அந்தச் சின்னஞ்சிறு பறவைகளில் ஒன்றே ஒன்று தரையில் விழுவதைக்கூட யெகோவா கவனிக்கிறார் என்றால், உங்களுடைய இக்கட்டான நிலைமையை அவர் கவனிக்காமல் இருந்துவிடுவாரா என்ன?
6. மனச்சோர்வூட்டும் எண்ணங்களால் வாட்டப்படுபவர்களுக்கு பைபிள் எப்படி ஆறுதலளிக்க முடியும்?
6 சர்வவல்லமையுள்ள சிருஷ்டிகரான யெகோவா தேவனுடைய பார்வையில், அபூரண மனிதர்களான நாம் உண்மையிலேயே அருமையானவர்களாக இருக்க முடியுமா? நிச்சயம் முடியும்! சொல்லப்போனால், இதை உறுதிப்படுத்துகிற ஏராளமான வசனங்கள் பைபிளில் இருக்கின்றன. இந்த வசனங்களை ஆழ்ந்து தியானிப்பதன் மூலம், சங்கீதக்காரன் சொன்னது போலவே நம்மாலும் சொல்ல முடியும். அவர் சொன்னதாவது: “என் உள்ளத்தில் விசாரங்கள் பெருகுகையில், உம்முடைய ஆறுதல்கள் என் ஆத்துமாவைத் தேற்றுகிறது.” (சங்கீதம் 94:19) ஆறுதலளிக்கும் இத்தகைய வசனங்கள் சிலவற்றை இப்போது நாம் சிந்திக்கலாம். கடவுள் நம்மை உயர்வாகக் கருதுகிறார் என்பதையும் நாம் அவருடைய சித்தத்தைத் தொடர்ந்து செய்யும்போது நமக்குப் பலன் அளிப்பார் என்பதையும் நன்றாகப் புரிந்துகொள்வதற்கு இந்த வசனங்கள் நமக்கு உதவும்.
யெகோவாவின் ‘விசேஷித்த சொத்து’
7. ஊழல்மிக்க தேசத்திடம் மல்கியா மூலம் ஊக்கமூட்டுகிற என்ன தீர்க்கதரிசனத்தை யெகோவா உரைத்தார்?
7 பொ.ச.மு. ஐந்தாம் நூற்றாண்டின்போது, யூதர்களிடையே நிலைமை படுமோசமாக இருந்தது. ஆசாரியர்கள் ஊனமுற்ற மிருகங்களைக் காணிக்கையாக ஏற்றுக்கொண்டு, அவற்றை யெகோவாவின் பீடத்தில் பலி செலுத்தி வந்தார்கள். நியாயாதிபதிகள் ஓரவஞ்சனையுடன் நியாயம் விசாரித்து வந்தார்கள். சூனியமும், பொய்யும், பித்தலாட்டமும், விபச்சாரமும் மிகப் பரவலாகக் காணப்பட்டன. (மல்கியா 1:8; 2:9; 3:5) துணிச்சலுடன் ஊழலில் உழன்றுகொண்டிருந்த இந்தத் தேசத்திடம் ஆச்சரியமூட்டும் தீர்க்கதரிசனம் ஒன்றை மல்கியா உரைத்தார். காலப்போக்கில் யெகோவா மறுபடியும் தம்முடைய மக்களை ஏற்றுக்கொள்வார் என முன்னுரைத்தார். அதை இவ்வாறு நாம் வாசிக்கிறோம்: “என் சம்பத்தை [அதாவது, விசேஷித்த சொத்தை] நான் சேர்க்கும் நாளிலே அவர்கள் என்னுடையவர்களாயிருப்பார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; ஒரு மனுஷன் தனக்கு ஊழியஞ்செய்கிற தன்னுடைய குமாரனைக் கடாட்சிக்கிறது போல நான் அவர்களைக் கடாட்சிப்பேன்.”—மல்கியா 3:17.
8. மல்கியா 3:17-ஐ, திரள்கூட்டத்தாருக்கும் ஏன் பொருத்தலாம்?
8 மல்கியா உரைத்த அந்தத் தீர்க்கதரிசனம், ஆவியால் அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களிடம், அதாவது ஆவிக்குரிய தேசத்தின் பாகமான 1,44,000 பேரிடம், இன்று நிறைவேற்றமடைகிறது. இந்தத் தேசம் உண்மையிலேயே ‘ஒரு விசேஷித்த சொத்தாக,’ அல்லது யெகோவாவுக்குச் ‘சொந்தமான ஜனமாக’ இருக்கிறது. (1 பேதுரு 2:9) மல்கியாவின் அந்தத் தீர்க்கதரிசனம் ‘திரள்கூட்டத்தாருக்கும்’ ஊக்கமளிக்கலாம், இவர்கள் ‘வெள்ளை அங்கிகளைத் தரித்து, . . . சிங்காசனத்திற்கு முன்பாகவும் ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும் நின்று கொண்டிருக்கிறார்கள்.’ (வெளிப்படுத்துதல் 7:4, 9) ஒரே மேய்ப்பனான இயேசு கிறிஸ்துவின் கீழ், அபிஷேகம் செய்யப்பட்டவர்களோடு சேர்ந்து இவர்கள் ஒரே மந்தையாக ஆகிறார்கள்.—யோவான் 10:16.
9. யெகோவாவின் மக்கள் அவருக்கு ஏன் ‘விசேஷித்த சொத்தாக’ இருக்கிறார்கள்?
9 தமக்குச் சேவை செய்ய தெரிவு செய்பவர்களை யெகோவா எவ்வாறு கருதுகிறார்? மல்கியா 3:17-ல் சொல்லப்பட்டுள்ளபடி, ஓர் அன்பான தகப்பன் தன் பிள்ளையைக் கருதுவது போல அவர்களைக் கருதுகிறார். அதுமட்டுமல்ல, தம்முடைய மக்களை எப்பேர்ப்பட்ட கனிவான வார்த்தைகளில் விவரிக்கிறார் என்று கவனியுங்கள்—‘விசேஷித்த சொத்து.’ இந்தச் சொற்றொடரை, “எனக்கே உரியவர்கள்” என்றும், “என் தனிப்பெரும் சொத்து” என்றும், “என்னுடைய ஆபரணங்கள்” என்றும் வேறு சில மொழிபெயர்ப்புகள் மொழிபெயர்த்திருக்கின்றன. தமக்குச் சேவை செய்பவர்களை யெகோவா ஏன் இந்தளவு விசேஷித்தவர்களாய்க் கருதுகிறார்? ஒரு காரணம், அவர் நன்றியுள்ள கடவுள் என்பதுதான். (எபிரெயர் 6:10) ஆம், இருதயப்பூர்வமாகத் தமக்குச் சேவை செய்பவர்களிடம் யெகோவா நெருங்கி வருகிறார், அவர்களை விசேஷித்தவர்களாயும் கருதுகிறார்.
10. யெகோவா தம்முடைய மக்களை எவ்வாறு பாதுகாக்கிறார்?
10 விசேஷித்த சொத்து என நீங்கள் கருதும் ஏதோவொரு பொருள் உங்களிடம் இருக்கிறதா? அப்படியானால், அதைப் பாதுகாக்க நீங்கள் கண்டிப்பாக முயற்சி எடுப்பீர்கள், அல்லவா? அதைத்தான் யெகோவா தம்முடைய ‘விசேஷித்த சொத்தாக’ இருப்பவர்களுக்குச் செய்கிறார். எல்லாச் சோதனைகளிலிருந்தும் துயரங்களிலிருந்தும் அவர் தம்முடைய மக்களைப் பாதுகாப்பதில்லை என்பது வாஸ்தவம்தான். (பிரசங்கி 9:11, NW) ஆனால் ஆன்மீக ரீதியில் தம்முடைய உண்மையுள்ள ஊழியர்களுக்கு அவரால் பாதுகாப்பு அளிக்க முடியும், கட்டாயம் பாதுகாப்பு அளிப்பார். எவ்விதமான சோதனையிலும் சகித்திருப்பதற்குத் தேவைப்படும் பலத்தையும் அவர் தந்தருளுகிறார். (1 கொரிந்தியர் 10:13) அதனால்தான், கடவுளுடைய பூர்வகால ஜனங்களிடம் மோசே இவ்வாறு சொன்னார்: ‘நீங்கள் பலங்கொண்டு திடமனதாயிருங்கள், . . . உங்கள் தேவனாகிய யெகோவா தாமே உங்களோடேகூட வருகிறார்; அவர் உங்களை விட்டு விலகுவதும் இல்லை, உங்களைக் கைவிடுவதும் இல்லை.’ (உபாகமம் 31:6) யெகோவா தம்முடைய மக்களை ஆசீர்வதித்து வழிநடத்துகிறார். அவர்கள் அவருடைய ‘விசேஷித்த சொத்தானவர்கள்.’
யெகோவா—“பலன் அளிக்கிறவர்”
11, 12. யெகோவா நமக்குப் பலன் அளிக்கிறவர் என்பதைப் புரிந்திருப்பது, நம் மனதில் சந்தேகங்கள் எழாதவாறு எப்படிப் பார்த்துக்கொள்ள உதவும்?
11 யெகோவா தம்முடைய ஊழியர்களை உயர்வாகக் கருதுகிறார் என்பதற்கு மற்றொரு அத்தாட்சி, அவர் அவர்களுக்குப் பலன் அளிப்பதாகும். இஸ்ரவேலரிடம் அவர் இவ்வாறு கூறினார்: “நான் வானத்தின் பலகணிகளைத் திறந்து, இடங்கொள்ளாமற் போகுமட்டும் உங்கள்மேல் ஆசீர்வாதத்தை வருஷிக்க மாட்டேனோவென்று அதினால் என்னைச் சோதித்துப் பாருங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.” (மல்கியா 3:10) உண்மைதான், யெகோவா தம்முடைய ஊழியர்களுக்கு கடைசியில் நித்திய ஜீவனைத் தந்து பலன் அளிக்கப்போகிறார். (யோவான் 5:24; வெளிப்படுத்துதல் 21:4) விலைமதிப்புமிக்க இந்தப் பரிசு யெகோவா எந்தளவு அன்பும் தயாள குணமும் உள்ளவர் என்பதைக் காண்பிக்கிறது. தமக்குச் சேவை செய்ய தெரிவு செய்பவர்களை அவர் வெகு உயர்வாகக் கருதுகிறார் என்பதையும் காண்பிக்கிறது. பலன் அளிப்பதில் யெகோவா தாராள குணம் படைத்தவர் என்பதை நாம் கற்றுக்கொள்ளும்போது, அவரோடு நமக்குள்ள நிலைநிற்கையைக் குறித்து எவ்வித சந்தேகமும் எழாதபடி பார்த்துக்கொள்ள முடியும். சொல்லப்போனால், அவரைப் பலன் அளிக்கிறவராகக் கருதும்படி அவரே நம்மை ஊக்குவிக்கிறார்! பவுல் இவ்வாறு எழுதினார்: “தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்க வேண்டும்.”—எபிரெயர் 11:6.
12 நாம் யெகோவாவை நேசிப்பதால்தான் அவருக்குச் சேவை செய்கிறோம்—அவர் நமக்குப் பலன் அளிப்பதாக வாக்குக் கொடுத்திருப்பதால் மட்டுமல்ல. ஆனால், அவர் அளிக்கப்போகும் பலனை எப்போதும் மனதிலேயே வைத்திருப்பது தவறு என்றோ தன்னலம் என்றோ நாம் நினைக்கக் கூடாது. (கொலோசெயர் 3:23, 24) தம்மை ஊக்கமாகத் தேடுவோர்மீது யெகோவாவுக்கு அன்பும் உயர்ந்த மதிப்பும் இருப்பதால்தான் அவர்களுக்குப் பலன் அளிக்க அவரே முன்வருகிறார்.
13. யெகோவா நம்மை நேசிக்கிறார் என்பதற்கு, மீட்கும்பொருள் ஏற்பாடு ஏன் மாபெரும் அத்தாட்சி அளிக்கிறது?
13 யெகோவாவின் கண்களில் மனிதர்கள் மதிப்புமிக்கவர்கள் என்பதற்கான மாபெரும் அத்தாட்சி மீட்கும்பொருள் ஏற்பாடாகும். அப்போஸ்தலன் யோவான் இவ்வாறு எழுதினார்: “தேவன் தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப் போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.” (யோவான் 3:16) இயேசு கிறிஸ்துவின் மீட்கும்பொருள், யெகோவாவின் கண்களில் நாம் தகுதியற்றவர்கள் அல்லது அவரால் நேசிக்கப்படாதவர்கள் என்ற கருத்திற்கு நேர்மாறானது. யெகோவா தம்முடைய ஒரேபேறான குமாரனின் உயிரையே கொடுத்து நம்மை மீட்டிருக்கிறார் என்றால், அவருக்கு நம்மீது கொள்ளை அன்பு இருக்கிறது என்றல்லவா அர்த்தம்!
14. மீட்கும்பொருள் ஏற்பாட்டை பவுல் எப்படிக் கருதினார் என்பதை எது காட்டுகிறது?
14 ஆகவே, வேண்டாத எண்ணங்கள் உங்கள் மனதில் எழுந்தால், மீட்கும்பொருள் ஏற்பாட்டைப் பற்றித் தியானியுங்கள். ஆம், யெகோவா உங்களுக்காகவே கொடுத்துள்ள பரிசாக அதைக் கருதுங்கள். அப்போஸ்தலன் பவுல் அப்படித்தான் செய்தார். “நிர்ப்பந்தமான மனுஷன் நான்!” என்று அவர் சொன்னபோதிலும், ‘என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத் தாமே ஒப்புக்கொடுத்த’ “இயேசு கிறிஸ்து மூலமாய் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன்” என்றார். (ரோமர் 7:24, 25; கலாத்தியர் 2:20) பவுல் இப்படிச் சொன்னது, அவர் தற்பெருமை பிடித்தவர் என்பதைக் காட்டுவதில்லை. மாறாக, யெகோவா தன்னை ஒரு தனிநபராக மதிக்கிறார் என்பதில் பவுலுக்கு இருந்த நம்பிக்கையையே வெளிக்காட்டுகிறது. பவுலைப் போலவே, நீங்களும்கூட மீட்கும்பொருள் ஏற்பாட்டை கடவுளிடமிருந்து வந்த தனிப்பட்ட பரிசாகக் கருதுவதற்குக் கற்றுக்கொள்ள வேண்டும். யெகோவா வல்லமைமிக்க இரட்சகர் மட்டுமல்ல, பலன் அளிப்பதில் அவர் அன்புமிக்கவரும்கூட.
சாத்தானின் ‘தந்திரங்கள்’—ஜாக்கிரதை!
15-17. (அ) மனதில் எழும் வேண்டாத எண்ணங்களை, சாத்தான் எவ்வாறு தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறான்? (ஆ) யோபுவின் அனுபவத்திலிருந்து நாம் என்ன ஊக்கத்தைப் பெற்றுக்கொள்ளலாம்?
15 ஆனாலும், கடவுளுடைய வார்த்தையிலுள்ள ஆறுதலான வசனங்கள் உண்மையிலேயே உங்களுக்காக எழுதப்பட்டிருக்கிறது என நம்புவது உங்களுக்குக் கடினமாக இருக்கலாம். கடவுளுடைய புதிய உலகில் நித்திய ஜீவனை மற்றவர்கள் ஆசீர்வாதமாகப் பெற்றுக்கொள்வார்கள் என்றும், ஆனால் அதைப் பெற்றுக்கொள்ள உங்களுக்குக் கொஞ்சம்கூட அருகதை இல்லை என்றும் ஒருவேளை நீங்கள் நினைக்கலாம். அப்படியானால் நீங்கள் என்ன செய்யலாம்?
16 எபேசியருக்கு பவுல் எழுதிய பின்வரும் அறிவுரை நிச்சயமாகவே உங்களுக்குத் தெரிந்திருக்கும்: “நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்து நிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுத வர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள்.” (எபேசியர் 6:11) சாத்தானுடைய தந்திரங்கள் என்றதுமே, பொருளாசை, ஒழுக்கக்கேடு போன்றவை உடனடியாக நம் மனதிற்கு வரலாம், அது சரிதான். ஏனெனில், பூர்வ காலத்திலும் சரி, இன்றும் சரி, அத்தகைய கெட்ட ஆசைகளின் வலையில் கடவுளுடைய மக்களில் பெரும்பாலோர் விழுந்திருக்கிறார்கள். என்றாலும், சாத்தானுடைய மற்றொரு தந்திரத்தை, அதாவது யெகோவா தேவனுக்குத் தங்கள்மீது அன்பில்லை என ஜனங்களை நம்ப வைக்க சாத்தான் எடுக்கும் முயற்சிகளை நாம் கவனியாமல் இருந்துவிடக் கூடாது.
17 சாத்தான் அத்தகைய எண்ணங்களைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு, கடவுளிடமிருந்து ஜனங்களைப் பிரிப்பதில் ரொம்பவே கெட்டிக்காரன். யோபுவிடம் பில்தாத் சொன்ன வார்த்தைகளை நினைவுப்படுத்திப் பாருங்கள்: “மனுஷன் தேவனுக்கு முன்பாக நீதிமானாயிருப்பது எப்படி? ஸ்திரீயினிடத்தில் பிறந்தவன் சுத்தமாயிருப்பது எப்படி? சந்திரனை அண்ணாந்து பாரும், அதுவும் பிரகாசியாமலிருக்கிறது; நட்சத்திரங்களும் அவர் பார்வைக்குச் சுத்தமானவைகள் அல்ல. புழுவாயிருக்கிற மனிதனும், பூச்சியாயிருக்கிற மனுபுத்திரனும் எம்மாத்திரம்!” (யோபு 25:4-6; யோவான் 8:44) இவ்வார்த்தைகள் யோபுவுக்கு எந்தளவு சோர்வூட்டியிருக்கும் என்பதை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? அப்படியானால், சாத்தான் ஒருபோதும் உங்களை சோர்வடைய செய்ய அனுமதிக்காதீர்கள். மறுபட்சத்தில், சாத்தானுடைய தந்திரங்களைக் குறித்து விழிப்புள்ளவர்களாய் இருங்கள், அப்போதுதான் சரியானதைச் செய்வதற்கு இன்னுமதிகம் போராட தைரியத்தையும் பலத்தையும் பெற்றுக்கொள்வீர்கள். (2 கொரிந்தியர் 2:11) யோபுவின் விஷயத்தில், அவருடைய எண்ணங்களை யெகோவா சீர்படுத்தினார்; என்றாலும் சோதனைகளில் சகித்திருந்ததால், அவர் இழந்ததையெல்லாம்விட இரண்டு மடங்கு அதிகமாகக் கொடுத்து அவருக்குப் பலன் அளித்தார்.—யோபு 42:10.
யெகோவா ‘நம்முடைய இருதயத்திலும் பெரியவர்’
18, 19. தேவன் எவ்வாறு ‘நம்முடைய இருதயத்திலும் பெரியவர்,’ எந்த விதத்தில் அவர் “சகலத்தையும் அறிந்திருக்கிறார்”?
18 சோர்வூட்டும் எண்ணங்கள் நம் மனதில் ஆழமாகப் பதிந்திருந்தால், அவற்றை அகற்றுவது கடினம்தான். ஆனாலும், “தேவனை அறிகிற அறிவுக்கு விரோதமாய் எழும்புகிற எல்லா மேட்டிமையையும்” தகர்த்தெறிவதற்கு யெகோவாவின் ஆவி உங்களுக்குப் படிப்படியாக உதவும். (2 கொரிந்தியர் 10:4, 5) வேண்டாத எண்ணங்கள் உங்களைத் துயரக்கடலில் மூழ்கடிக்க முயலும்போது, அப்போஸ்தலன் யோவானுடைய பின்வரும் வார்த்தைகளைத் தியானியுங்கள்: “இதினாலே நாம் நம்மைச் சத்தியத்திற்குரியவர்களென்று அறிந்து, நம்முடைய இருதயத்தை அவருக்கு முன்பாக நிச்சயப்படுத்திக்கொள்ளலாம். நம்முடைய இருதயமே நம்மைக் குற்றவாளிகளாகத் தீர்க்குமானால், தேவன் நம்முடைய இருதயத்திலும் பெரியவராயிருந்து சகலத்தையும் அறிந்திருக்கிறார்.”—1 யோவான் 3:19, 20.
19 ‘தேவன் நம்முடைய இருதயத்திலும் பெரியவர்’ என்ற சொற்றொடர் எதை அர்த்தப்படுத்துகிறது? சில சமயங்களில், குறிப்பாக நம்முடைய பலவீனங்களையும் குற்றங்களையும் நினைத்து கூனிக்குறுகுகையில், நம்முடைய இருதயமே நம்மை குற்றவாளி எனத் தீர்க்கலாம். அல்லது நாம் வளர்ந்துவந்த சூழலின் காரணமாக, எதைச் செய்தாலும் யெகோவா நம்மை ஏற்றுக்கொள்ள மாட்டார் என்று நம்மைப் பற்றி நாமே மிகத் தாழ்வாகக் கருதும் மனப்பாங்கு நமக்கு இருக்கலாம். ஆனால், யெகோவா அதைவிடப் பெரியவர் என யோவானின் வார்த்தைகள் நமக்கு உறுதியளிக்கின்றன. நாம் செய்யும் தவறுகளையே அவர் சதா நினைத்துக் கொண்டிருப்பதில்லை, மாறாக, நமக்குள் புதைந்து கிடைக்கும் திறன்களைக் கூர்ந்து கவனிக்கிறார். நம்முடைய உள்நோக்கங்களையும் எண்ணங்களையும் அறிந்திருக்கிறார். “நம்முடைய உருவம் இன்னதென்று அவர் அறிவார்; நாம் மண்ணென்று நினைவுகூருகிறார்” என தாவீது எழுதினார். (சங்கீதம் 103:14) ஆம், நம்மைப் பற்றி நம்மைவிடவும் அவர் நன்கு அறிந்து வைத்திருக்கிறார்!
‘அலங்காரமான கிரீடமும் ராஜமுடியும்’
20. இஸ்ரவேலர் தாயகத்திற்கே திரும்புவார்கள் என்ற ஏசாயாவின் தீர்க்கதரிசனம், யெகோவா தம்முடைய ஊழியர்களைக் கருதும் விதத்தை எப்படி வெளிப்படுத்துகிறது?
20 தம்முடைய பூர்வ ஜனங்கள் பாபிலோன் சிறையிருப்பிலிருந்து விடுதலையாகி, தாயகத்திற்குத் திரும்புவார்கள் என்று ஏசாயா தீர்க்கதரிசி மூலம் யெகோவா உறுதியளித்தார். பாபிலோனில் நாடுகடத்தப்பட்டு மனமொடிந்து போயிருந்த அவர்களுக்கு இந்த ஆறுதலும் உறுதியும்தான் ரொம்பவே தேவைப்பட்டன! அவர்கள் தங்களுடைய தாயகத்திற்கே திரும்பப்போகிற சமயத்தைக் குறித்து யெகோவா இவ்வாறு கூறினார்: “நீ கர்த்தருடைய கையில் அலங்காரமான கிரீடமும், உன் தேவனுடைய கரத்தில் ராஜமுடியுமாயிருப்பாய்.” (ஏசாயா 62:3) இப்படிச் சொல்வதன் மூலம், யெகோவா தம்முடைய மக்களைக் கெளரவித்து, மேன்மைப்படுத்தினார். இதையே இன்றுள்ள தம்முடைய ஆவிக்குரிய இஸ்ரவேல் தேசத்தாருக்கும் செய்திருக்கிறார். எல்லாரும் பார்த்து வியந்துபோகும் விதத்தில், அவர்களை மேலே உயர்த்திப் பிடித்திருப்பது போல் இது இருக்கிறது.
21. உண்மையுடன் சகித்திருப்பதற்காக, யெகோவா நிச்சயம் உங்களுக்குப் பலன் அளிப்பார் என்பதில் நீங்கள் எவ்வாறு உறுதியோடிருக்கலாம்?
21 இந்தத் தீர்க்கதரிசனம், அபிஷேகம் செய்யப்பட்டவர்களிலேயே முக்கியமாக நிறைவேறினாலும், தமக்குச் சேவை செய்யும் எல்லாரையுமே யெகோவா எப்படிக் கெளரவிக்கிறார் என்பதை இது காட்டுகிறது. எனவே, சந்தேகங்கள் அலை அலையாய் எழும்பி நம் மனதைத் தாக்கும்போது, நாம் இவ்வாறு நினைத்துக்கொள்ள வேண்டும்: ‘நான் அபூரணமாக இருந்தாலும், யெகோவாவுக்கு நான் “அலங்காரமான கிரீடமும் ராஜமுடியும்” போல அந்தளவு மதிப்புமிக்கவனா(ளா)க இருக்கிறேன்.’ எனவே, அவருடைய சித்தத்தை ஊக்கமாகச் செய்ய முயலுவதன் மூலம் அவருடைய இருதயத்தை எப்போதும் சந்தோஷப்படுத்துங்கள். (நீதிமொழிகள் 27:11) அவ்வாறு செய்யும்போது, உண்மையுடன் சகித்திருப்பதற்காக யெகோவா உங்களுக்குப் பலன் அளிப்பார் என்பதில் நீங்கள் உறுதியோடிருக்கலாம்!
[அடிக்குறிப்பு]
a சில பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
• யெகோவாவுக்கு நாம் எவ்வாறு ‘விசேஷித்த சொத்தாக’ இருக்கிறோம்?
• யெகோவாவை பலன் அளிக்கிறவராகக் கருதுவது ஏன் முக்கியம்?
• சாத்தானுடைய எந்தத் ‘தந்திரங்களைக்’ குறித்து நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்?
• எந்த விதத்தில் தேவன் ‘நம்முடைய இருதயத்திலும் பெரியவராய்’ இருக்கிறார்?
[பக்கம் 26-ன் படம்]
பவுல்
[பக்கம் 26-ன் படம்]
எலியா
[பக்கம் 26-ன் படம்]
அன்னாள்
[பக்கம் 28-ன் படம்]
கடவுளுடைய வார்த்தையில் ஆறுதலளிக்கும் கருத்துகள் ஏராளம் உள்ளன