யெகோவாவுக்கான பயத்தில் மகிழ்ச்சி காண கற்றுக்கொள்வது
“மகன்களே, வந்து எனக்குச் செவிகொடுங்கள்; யெகோவாவுக்குப் பயப்படுதலை நான் உங்களுக்குப் போதிப்பேன்.”—சங்கீதம் 34:11, NW.
1. கடவுளுடைய ராஜ்யத்தால் எவ்வாறு பயம் நீக்கப்படும், ஆனால் அது எல்லா பயத்தையும் குறிக்கிறதா?
எல்லா இடங்களிலுமுள்ள மக்கள் பயத்திலிருந்து—குற்றச்செயல், வன்முறை பற்றிய பயம், வேலையின்மை பயம், கடும் நோயின் பயம் ஆகியவற்றிலிருந்து—விடுதலைப் பெற மிகுந்த ஆவலுள்ளவர்களாக இருக்கின்றனர். அந்த விடுதலை கடவுளுடைய ராஜ்யத்தில் மெய்ம்மையாக மாறும்போது, அது என்னே ஒரு மகத்தான நாளாகும்! (ஏசாயா 33:24; 65:21-23; மீகா 4:4) என்றாலும், எல்லா பயமும் அப்போது நீங்கிவிடாது, அல்லது நம்முடைய வாழ்க்கையிலிருந்து எல்லா பயத்தையும் வெளித்தள்ளிவிட இப்போது நாடக்கூடாது. நல்ல பயமும் இருக்கிறது, கெட்ட பயமும் இருக்கிறது.
2. (அ) எவ்வகையான பயம் கெட்டது, எவ்வகையானது விரும்பத்தக்கது? (ஆ) தேவ பயம் என்றாலென்ன, எடுத்தாளப்பட்டிருக்கிற வேதவசனங்கள் அதை எவ்வாறு குறிப்பிட்டுக் காட்டுகின்றன?
2 பயம் மனதுக்கு விஷமாக, ஒரு நபரின் நியாயங்காட்டி சிந்திக்கும் ஆற்றலை முடக்கி விடக்கூடும். அது தைரியத்தைத் தகர்த்து நம்பிக்கையை அழித்துவிடக்கூடும். ஒருவர் இத்தகைய பயத்தை ஒரு விரோதியால் தாக்கப்படுகையில் அனுபவிக்கக்கூடும். (எரேமியா 51:30) சில செல்வாக்குமிக்க மானிடர்களின் அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் ஒருவர் இதை அனுபவிக்கக்கூடும். (நீதிமொழிகள் 29:25) ஆனால் ஆரோக்கியமான பயம் என்ற பயமுங்கூட இருக்கிறது; அந்த வகையான பயம், எந்தவொரு காரியத்தையும் யோசனையின்றி அவசரப்பட்டுச் செய்வதிலிருந்து, நமக்கு நாமே தீங்கு விளைவித்துக் கொள்வதிலிருந்து நம்மைத் தடுத்து நிறுத்தும். தேவ பயம் இதைக் காட்டிலும் அதிகத்தை உட்படுத்துகிறது. அது யெகோவாவிடத்தில் காண்பிக்கப்படும் மரியாதையோடு கூடிய அச்சம், ஆழ்ந்த பயபக்தி, அவரைப் பிரியப்படுத்தாமல் போய்விடுவோமோ என்ற ஆரோக்கியமான பயம் ஆகும். (சங்கீதம் 89:7) கடவுளைப் பிரியப்படுத்தாமல் போய்விடுவோமோ என்ற இப்பயம் அவருடைய அன்புள்ள இரக்கம், நற்குணம் ஆகியவற்றுக்கான போற்றுதலிலிருந்து தோன்றுகிறது. (சங்கீதம் 5:7, NW; ஓசியா 3:5, NW) யெகோவாவே அதி உன்னத நியாயாதிபதி, சர்வவல்லமையுள்ளவர், தமக்குக் கீழ்ப்படியாதவர்கள்பேரில் மரண தண்டனை விதிப்பதற்குங்கூட அதிகாரமுள்ளவர் போன்ற விஷயங்களை அறிந்த நிலையையுங்கூட அது உட்படுத்துகிறது.—ரோமர் 14:10-12.
3. சில பொய்மத தெய்வங்களோடு சம்பந்தப்பட்ட பயத்தோடு எவ்வாறு யெகோவாவுக்கான பயம் வேறுபடுகிறது?
3 தேவ பயம் ஆரோக்கியமானது, ஆரோக்கியமற்றது அல்ல. அது சரியானதன்பேரில் உறுதியாகப் பற்றிக்கொண்டிருக்க ஒருவரை உந்துவிக்கிறது, தவறானதைச் செய்து சமரசம் செய்வதில்லை. திகிலை ஊட்டிய கொடிய தெய்வமாக விவரிக்கப்பட்ட ஃபாபாஸ் என்ற பழங்கால கிரேக்க கடவுளோடு சம்பந்தப்பட்ட பயத்தைப் போன்று அது இல்லை. பிணங்கள், பாம்புகள், மண்டை ஓடுகள் ஆகியவற்றை ஆபரணங்களாக உபயோகிப்பதாகவும், இரத்த வெறி கொண்ட தேவதையாகவும் சில சமயங்களில் சித்தரிக்கப்பட்டிருக்கும் காளி என்ற இந்து மத தேவதையோடு தொடர்புபடுத்திப் பேசப்படும் பயத்தைப் போன்றும் அது இல்லை. தேவ பயம் நம்மைக் கவர்ந்திழுக்கிறது; வெறுத்து ஒதுக்குவதில்லை. அது அன்போடும் போற்றுதலோடும் பின்னிப் பிணைந்திருக்கிறது. இவ்வாறு, தேவ பயம் யெகோவாவிடமாக நம்மை நெருங்கச் சேர்க்கிறது.—உபாகமம் 10:12, 13; சங்கீதம் 2:11.
ஏன் சிலரிடம் இருக்கிறது, மற்றவர்களிடம் இல்லை
4. அப்போஸ்தலனாகிய பவுல் காட்டியபடி, எந்த நிலைமைக்கு மனிதகுலம் வந்திருக்கிறது, இதற்குக் காரணம் என்ன?
4 மனிதவர்க்கம் மொத்தத்தில் தேவ பயம் என்ற பண்பால் உந்துவிக்கப்படுவதில்லை. ஆதியில் இருந்த பரிபூரணத்திலிருந்து மானிடர்கள் எந்த அளவுக்கு வீழ்ச்சியடைந்திருக்கின்றனர் என்று அப்போஸ்தலனாகிய பவுல் ரோமர் 3:9-18 வரை உள்ள வசனங்களில் விவரிக்கிறார். எல்லாரும் பாவத்தின் கீழ் உள்ளனர் என்று குறிப்பிட்டப் பின், சங்கீதங்களிலிருந்து பவுல் மேற்கோளாக எடுத்துப் பின்வருமாறு சொல்கிறார்: “நீதிமான் ஒருவனாகிலும் இல்லை.” (சங்கீதம் 14:1-ஐக் காண்க.) பின்பு இத்தகைய காரியங்களை எடுத்துக் கூறுவதன் மூலம் அவர் விவரங்களை அளிக்கிறார்: கடவுளைத் தேடுவதில் மனிதவர்க்கத்தின் அலட்சியம், அவர்களிடம் தயவு குறைவுபடுதல், அவர்களுடைய வஞ்சனை நிறைந்த பேச்சு, சபித்தல், இரத்தம் சிந்துதல் ஆகியவை. இன்றைய உலகை அது எவ்வளவு திருத்தமாக விவரிக்கிறது! பெரும்பான்மையான ஜனங்களுக்குக் கடவுளிலும் அவருடைய நோக்கங்களிலும் அக்கறை இல்லை. தயவு காட்டப்படுவதுங்கூட ஏதோவொரு ஆதாயம் கிடைக்கும் என்று எண்ணும் சந்தர்ப்பங்களுக்கென்று வெளித்தோற்றத்துக்காக மாத்திரமே செய்யப்படுகிறது. பொய்யும் ஆபாசமான பேச்சும் சர்வசாதாரணம். இரத்தம் சிந்துதல் செய்திகளில் மாத்திரம் அல்ல, ஆனால் பொழுதுபோக்கிலும் சிறப்பித்துக் காட்டப்படுகிறது. இப்படிப்பட்ட நிலைமைக்குக் காரணம் என்ன? நாம் அனைவரும் பாவியாகிய ஆதாமின் சந்ததியினர் என்பது உண்மைதான், ஆனால் அப்போஸ்தலனாகிய பவுல் இங்கு விவரித்துள்ள காரியங்களை வாழ்க்கை முறையாக மக்கள் ஏற்றுக்கொள்ளும்போது, அதைக்காட்டிலும் அதிகம் உட்பட்டிருக்கிறது. அது என்ன என்பதை வசனம் 18 விளக்கமாகச் சொல்கிறது: “அவர்கள் கண்களுக்கு முன்பாகத் தெய்வபயமில்லை.”—சங்கீதம் 36:1-ஐக் காண்க.
5. ஏன் சிலரிடம் தேவ பயம் இருக்கிறது, மற்றவர்களிடம் இல்லை?
5 ஆனால் ஏன் சிலரிடம் தேவ பயம் இருக்கிறது, மற்றவர்களிடம் இல்லை? எளிதாகச் சொல்ல வேண்டுமென்றால், சில மக்கள் அதை வளர்த்துக்கொள்கின்றனர், ஆனால் மற்றவர்கள் அவ்வாறு செய்வதில்லை. நாம் எவருமே தேவ பயத்தோடு பிறப்பதில்லை, ஆனால் அதைப் பெற்றிருப்பதற்கான ஆற்றலை அனைவருமே கொண்டிருக்கிறோம். தேவ பயம் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு காரியமாயிருக்கிறது. பின்னர், நம்முடைய வாழ்க்கையில் பலமுள்ள உந்துவிக்கும் சக்தியாக இருக்க வேண்டுமென்றால், அதை வளர்த்துக்கொள்வது அவசியம்.
ஒரு பிரியமான அழைப்பு
6. சங்கீதம் 34:11-ல் பதிவுசெய்யப்பட்ட அழைப்பை யார் நமக்குக் கொடுக்கிறார், தேவ பயம் கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு காரியமாயிருக்கிறது என்று இந்த வசனம் எவ்வாறு காட்டுகிறது?
6 யெகோவாவுக்கான பயத்தைக் கற்றுக்கொள்ளும்படி ஒரு பிரியமான அழைப்பு சங்கீதம் 34-ல் நமக்குக் கொடுக்கப்படுகிறது. இது தாவீதின் சங்கீதம். மேலும் தாவீது யாருக்கு முன்நிழலாக இருந்தார்? ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை அல்லாமல் வேறு யாருக்குமில்லை. அப்போஸ்தலனாகிய யோவான் குறிப்பாக இயேசுவுக்குப் பொருத்திய ஒரு தீர்க்கதரிசனம் இந்தச் சங்கீதத்தின் 20-ம் வசனத்தில் பதிவாகியுள்ளது. (யோவான் 19:36) வசனம் 11-ல் (NW) உள்ளதைப் போன்ற அழைப்பை, நம்முடைய நாளில் இயேசுவே கொடுக்கிறார்: “மகன்களே, வந்து எனக்குச் செவிகொடுங்கள்; யெகோவாவுக்குப் பயப்படுதலை நான் உங்களுக்குப் போதிப்பேன்.” தேவ பயம் கற்றுக்கொள்ளக்கூடிய ஒரு காரியம் என்பதையும் மேலும் நமக்குப் போதிக்க இயேசு கிறிஸ்து மிகவும் தகுதிவாய்ந்தவர் என்பதையும் இது தெளிவாகக் காட்டுகிறது. ஏன்?
7. விசேஷமாக ஏன் இயேசுவிடமிருந்து தேவ பயத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும்?
7 இயேசு கிறிஸ்து தேவ பயத்தின் முக்கியத்துவத்தை அறிந்திருக்கிறார். அவரைக் குறித்து எபிரெயர் 5:7 இவ்வாறு சொல்கிறது: “அவர் மாம்சத்திலிருந்த நாட்களில், தம்மை மரணத்தினின்று இரட்சிக்க வல்லமையுள்ளவரை நோக்கி, பலத்த சத்தத்தோடும் கண்ணீரோடும் விண்ணப்பம்பண்ணி, வேண்டுதல்செய்து, தமக்கு உண்டான பயபக்தியினிமித்தம் [“தேவ பயத்தினிமித்தம்,” NW] கேட்கப்பட்டார்.” வாதனையின் கழுமரத்தில் மரணத்தை எதிர்ப்படுவதற்கு முன்பாகவே, அத்தகைய தேவ பயம் என்ற பண்பை இயேசு கிறிஸ்து வெளிக்காட்டினார். நீதிமொழிகள் 8-ம் அதிகாரத்தில் கடவுளுடைய குமாரன் ஞானமே உருவானவர் என்று விவரிக்கப்பட்டிருப்பதை நினைவுகூருங்கள். மேலும் நீதிமொழிகள் 9:10-ல், “கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்” என்று நமக்குச் சொல்லப்பட்டுள்ளது. எனவே அவர் பூமிக்கு வருவதற்கு வெகுகாலத்துக்கு முன்பே, இந்தத் தேவ பயம் கடவுளுடைய குமாரனுடைய ஆளுமையின் அடிப்படை பாகமாயிருந்தது.
8. ஏசாயா 11:2, 3-ல் யெகோவாவுக்கான பயத்தைக் குறித்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?
8 கூடுதலாக, மேசியானிய ராஜாவாக, இயேசுவைக் குறித்து ஏசாயா 11:2, 3 பின்வருமாறு கூறுகிறது: “ஞானத்தையும் உணர்வையும் அருளும் ஆவியும், ஆலோசனையையும் பெலனையும் அருளும் ஆவியும், அறிவையும் கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தையும் அருளும் ஆவியுமாகிய கர்த்தருடைய ஆவியானவர் அவர்மேல் தங்கியிருப்பார்; கர்த்தருக்குப் பயப்படுதல் அவருக்கு உகந்த வாசனையாயிருக்கும் [“யெகோவாவுக்கான பயத்தில் அவருக்கு மகிழ்ச்சி இருக்கும்,” NW].” அது எவ்வளவு அழகாகச் சொல்லப்பட்டிருக்கிறது! யெகோவாவுக்கான பயம் விரும்பப்படத்தகாததே அல்ல. அது உடன்பாடானதும் கட்டியெழுப்புவதாயும் உள்ளது. கிறிஸ்து ராஜாவாக ஆட்சி செய்யும் எல்லை முழுவதும் பரவியிருக்கப் போகும் பண்பாக அது இருக்கிறது. அவர் இப்போது ஆட்சி செய்கிறார், அவருடைய குடிமக்களாகச் சேர்க்கப்படும் அனைவருக்கும் யெகோவாவுக்கான பயத்தில் அவர் போதனை அளித்து வருகிறார். எப்படி?
9. இயேசு கிறிஸ்து எவ்வாறு நமக்கு யெகோவாவுக்கான பயத்தைப் போதிக்கிறார், அதைக் குறித்து நாம் என்ன கற்றுக்கொள்ளும்படி அவர் விரும்புகிறார்?
9 இயேசு சபையின் நியமிக்கப்பட்ட தலைவராகவும் மேசியானிய ராஜாவாகவும், நம்முடைய சபைக் கூட்டங்கள் மூலமாகவும் அசெம்பிளிகள் மூலமாகவும் மாநாடுகள் மூலமாகவும் தேவ பயம் என்ன, அது ஏன் அவ்வளவு பயனுள்ளது என்பவற்றைத் தெளிவாகப் புரிந்துகொள்ள நமக்கு உதவி செய்கிறார். இவ்வாறு, தமக்கு இருப்பதைப் போன்று யெகோவாவுக்கான பயத்தில் மகிழ்ச்சி காண கற்றுக்கொள்வதற்கு அதற்கான நம்முடைய போற்றுதலை ஆழமாக்க அவர் முயற்சி செய்கிறார்.
நீங்கள் முயற்சி எடுப்பீர்களா?
10. கிறிஸ்தவ கூட்டங்களில் ஆஜராயிருக்கும்போது, யெகோவாவுக்குப் பயப்படுதல் இன்னதென்று புரிந்துகொள்ள நாம் என்ன செய்ய வேண்டும்?
10 சந்தேகமின்றி, பைபிளை வெறுமனே வாசிப்பதோ ராஜ்ய மன்றத்தில் கூட்டங்களுக்குச் செல்வதோ நமக்குத் தேவ பயம் இருப்பதை உறுதி செய்யப்போவதில்லை. யெகோவாவுக்கான பயத்தை உண்மையிலேயே புரிந்துகொள்ள வேண்டுமென்றால், நாம் என்ன செய்வது அவசியம் என்பதைக் கவனியுங்கள். நீதிமொழிகள் 2:1-5 சொல்கிறது: “என் மகனே, நீ உன் செவியை ஞானத்திற்குச் சாய்த்து, உன் இருதயத்தைப் புத்திக்கு அமையப்பண்ணும்பொருட்டு, நீ என் வார்த்தைகளை ஏற்றுக்கொண்டு, என் கட்டளைகளை உன்னிடத்தில் பத்திரப்படுத்தி, ஞானத்தை வா என்று கூப்பிட்டு, புத்தியைச் சத்தமிட்டு அழைத்து, அதை வெள்ளியைப்போல் நாடி, புதையல்களைத் தேடுகிறதுபோல் தேடுவாயாகில், அப்பொழுது கர்த்தருக்குப் பயப்படுதல் இன்னதென்று நீ உணர்ந்து, தேவனை அறியும் அறிவைக் கண்டடைவாய்.” ஆகையால், கூட்டங்களுக்கு வந்திருக்கையில், சொல்லப்படும் விஷயங்களைக் கவனித்துக் கேட்பவர்களாகவும் முக்கிய கருத்துக்களின்பேரில் மனதை ஒருமுகப்படுத்தி, அவற்றை நினைவில் வைப்பதற்கு ஊக்கமான முயற்சியெடுப்பவர்களாகவும் யெகோவாவைப் பற்றி நாம் உணரும் விதம் எவ்வாறு கொடுக்கப்படும் புத்திமதியினிடமாக நம்முடைய மனநிலையைச் செல்வாக்கு செலுத்தவேண்டும் என்பதைப் பற்றி ஆழமாக யோசிப்பவர்களாகவும் இருக்க வேண்டும்; ஆம், நம்முடைய இருதயங்களை திறக்க வேண்டும். அப்போது யெகோவாவுக்குப் பயப்படுதல் இன்னதென்று புரிந்துகொள்வோம்.
11. தேவ பயத்தை வளர்த்துக்கொள்வதற்கு, ஊக்கமாகவும் அடிக்கடியும் நாம் என்ன செய்ய வேண்டும்?
11 சங்கீதம் 86:11 மற்றொரு முக்கிய அம்சமாகிய ஜெபத்திற்கு நம்முடைய கவனத்தை இழுக்கிறது. “கர்த்தாவே, உமது வழியை எனக்குப் போதியும், நான் உமது சத்தியத்திலே நடப்பேன்; நான் உமது நாமத்திற்குப் பயந்திருக்கும்படி என் இருதயத்தை ஒருமுகப்படுத்தும்,” என்று சங்கீதக்காரன் ஜெபித்தார். யெகோவா அந்த ஜெபத்தை அங்கீகரித்தார்; அதன் காரணமாகவே பைபிளில் அதைப் பதிவாகும்படி செய்தார். தேவ பயத்தை வளரச் செய்வதற்கு, நாமுங்கூட யெகோவாவிடம் அவருடைய உதவிக்காக ஜெபிக்க வேண்டும், ஊக்கமாகவும் அடிக்கடியும் ஜெபித்தால் பயனடைவோம்.—லூக்கா 18:1-8.
உங்கள் இருதயம் உட்பட்டிருக்கிறது
12. இருதயத்திற்கு ஏன் விசேஷ கவனம் செலுத்த வேண்டும், அது எதை உட்படுத்துகிறது?
12 சங்கீதம் 86:11-ல் உள்ள வசனத்தில் நாம் கவனிக்க வேண்டிய மற்றொரு காரியம் உள்ளது. தேவ பயத்தை வெறுமனே மனதால் புரிந்துகொள்வதைச் சங்கீதக்காரன் கேட்கவில்லை. அவர் தன் இருதயத்தைக் குறிப்பிடுகிறார். தேவ பயத்தை வளர்த்துக்கொள்வதில் அடையாள அர்த்தமுள்ள இருதயம் உட்பட்டிருக்கிறது; நம்முடைய வாழ்க்கையின் எல்லா நடவடிக்கைகளிலும் வெளிப்படையாகக் காண்பிக்கப்படும் உள்ளான மனிதனாக அது இருப்பதால் விசேஷ கவனம் தேவைப்படுகிறது; நம்முடைய எண்ணங்கள், நம்முடைய மனநிலைகள், நம்முடைய விருப்பங்கள், நம்முடைய உள்நோக்கங்கள், நம்முடைய இலக்குகள் ஆகியவற்றையும் அது உட்படுத்துகிறது.
13. (அ) ஒரு நபரின் இருதயம் பிளவுபட்டிருப்பதை எது சுட்டிக்காட்டலாம்? (ஆ) தேவ பயத்தை வளர்த்து வருகையில், எந்த இலக்கையடைய நாம் பிரயாசப்பட வேண்டும்?
13 ஒரு நபரின் இருதயம் பிளவுபட்டிருக்கலாம் என்று பைபிள் நம்மை எச்சரிக்கிறது. அது திருக்குள்ளதாக இருக்கக்கூடும். (சங்கீதம் 12:2; எரேமியா 17:9) சபைக் கூட்டங்களுக்கும் வெளி ஊழியத்துக்கும் செல்வது போன்ற ஆரோக்கியமான நடவடிக்கைகளில் பங்குகொள்ள அது நம்மை ஊக்குவிக்கலாம், ஆனால் அதே சமயம், இவ்வுலக வாழ்க்கை முறையின் சில அம்சங்களை நேசிக்கவுங்கூட செய்யலாம். இராஜ்ய அக்கறைகளை முன்னேற்றுவிப்பதில் உண்மையில் முழு ஆத்துமாவோடு இருப்பதிலிருந்து நம்மை இது தடுத்து நிறுத்தலாம். பின்பு இந்தத் திருக்குள்ள இருதயம் மற்ற அநேகர் எவ்வளவு செய்கிறார்களோ அதையே நாமும் செய்கிறோம் என்று நம்ப வைக்க முயற்சி செய்யும். அல்லது, ஒருவேளை பள்ளியிலோ வேலை செய்யுமிடத்திலோ மனிதருக்குப் பயப்படும் பயம் இருதயத்தில் செல்வாக்கு செலுத்தக்கூடும். இதன் விளைவாக, அப்படிப்பட்ட சூழ்நிலைமைகளில் யெகோவாவின் சாட்சிகள் என்று நம்மை அடையாளம் காட்டிக்கொள்ள தயங்கலாம்; மேலும், கிறிஸ்தவர்களுக்குப் பொருந்தாத காரியங்களைக்கூட நாம் செய்து விடலாம். ஆனால் அதற்குப் பின்பு, நம்முடைய மனசாட்சி தொந்தரவு செய்கிறது. அவ்வகையான நபராக இருக்க நாம் விரும்புவதில்லை. ஆகையால், சங்கீதக்காரனோடு சேர்ந்து யெகோவாவிடம் இவ்வாறு ஜெபிக்க வேண்டும்: “நான் உமது நாமத்திற்குப் பயந்திருக்கும்படி என் இருதயத்தை ஒருமுகப்படுத்தும்.” நம்முடைய வாழ்க்கையின் எல்லா நடவடிக்கைகளிலும் வெளிப்படுத்தப்படும் முழு உள்ளான மனிதனும், நாம் “தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறோம்” என்பதற்கு அத்தாட்சி கொடுக்க விரும்புகிறோம்.—பிரசங்கி 12:13.
14, 15. (அ) பாபிலோனில் அடிமைத்தனத்திலிருந்து இஸ்ரவேலை திரும்ப நிலைநாட்டுவதைக் குறித்து முன்னறிவிக்கையில், தம்முடைய ஜனங்களுக்கு எதைக் கொடுப்பதாக யெகோவா வாக்களித்தார்? (ஆ) தம்முடைய ஜனங்களின் இருதயங்களில் தேவ பயத்தைப் பதிய வைக்க யெகோவா என்ன செய்தார்? (இ) இஸ்ரவேல் யெகோவாவின் வழிகளை விட்டு ஏன் விலகியது?
14 அத்தகைய தேவ பயமுள்ள இருதயத்தைத் தம்முடைய ஜனங்களுக்குக் கொடுப்பதாக யெகோவா வாக்களித்தார். எரேமியா 32:37-39-ல் வாசிப்பதுபோல, இஸ்ரவேல் திரும்ப நிலைநாட்டப்படும் என்பதை அவர் இங்கே முன்னறிவித்துச் சொன்னார்: “அவர்களை இந்த ஸ்தலத்துக்குத் திரும்பிவரவும் இதிலே சுகமாய்த் தங்கியிருக்கவும் பண்ணுவேன். அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள், நான் அவர்கள் தேவனாயிருப்பேன். அவர்கள் தங்களுக்கும், தங்கள் பின்னடியாருக்கும், தங்கள் பிள்ளைகளுக்கும் நன்மையுண்டாகும்படி சகல நாட்களிலும் எனக்குப் பயப்படும்படிக்கு, நான் அவர்களுக்கு ஒரே இருதயத்தையும் ஒரே வழியையும் கட்டளையிடுவேன்.” கடவுள் தம்முடைய வாக்கை வசனம் 40-ல் மீண்டும் உறுதிப்படுத்தி சொல்கிறார்: “அவர்கள் என்னை விட்டு அகன்று போகாதபடிக்கு, எனக்குப் பயப்படும் பயத்தை அவர்கள் இருதயத்திலே வைப்பேன்.” யெகோவா தாம் வாக்களித்தபடியே பொ.ச.மு. 537-ல் அவர்களைத் திரும்பவும் எருசலேமுக்குக் கொண்டு வந்தார். ஆனால், ‘சகல நாட்களிலும் அவருக்குப் பயப்படும்படியான ஒரே இருதயத்தை’ அவர்களுக்குக் கட்டளையிடுவதாகச் சொன்ன அந்த வாக்கின் எஞ்சிய பகுதியைப் பற்றியென்ன? பாபிலோனிலிருந்து அவர்களைத் திரும்பவும் கொண்டுவந்த பின்பும், பண்டைய இஸ்ரவேல் தேசம் யெகோவாவை விட்டு ஏன் விலகி, அதன் விளைவாக, அவர்களுடைய ஆலயம் பொ.ச. 70-ல் அழிக்கப்பட்டு, திரும்பவும் ஒருபோதும் கட்டப்படாமல் போனது?
15 இது யெகோவாவின் பங்கில் தவறு எதுவும் இருந்ததன் காரணமாக அல்ல. தம்முடைய ஜனங்களின் இருதயங்களில் தேவ பயத்தை வைப்பதற்கு யெகோவா உண்மையில் படிகள் எடுத்தார். அவர்களைப் பாபிலோனிலிருந்து விடுதலை செய்து, சொந்த நாட்டிற்குத் திரும்பக் கொண்டுவந்து சேர்த்ததில் அவர் இரக்கத்தைக் காண்பித்தார்; இதன் மூலம் அவரை ஆழ்ந்த பயபக்தியோடு நோக்குவதற்குப் போதிய காரணங்களை அவர்களுக்குக் கொடுத்தார். தீர்க்கதரிசிகளாகிய ஆகாய், சகரியா, மல்கியா; அவர்களுக்குப் போதகராக அனுப்பப்பட்ட எஸ்றா; ஆளுநர் நெகேமியா; தம்முடைய சொந்த குமாரன் ஆகியோர் மூலம் கொடுத்த நினைப்பூட்டுதல்கள், புத்திமதி, சிட்சை போன்றவற்றோடு அதைக் கடவுள் மீண்டும் உறுதிப்படுத்தினார். சில சமயங்களில் அந்த ஜனங்கள் செவிசாய்த்தனர். ஆகாய், சகரியா கொடுத்த ஊக்கத்தின் காரணமாக யெகோவாவின் ஆலயத்தைத் திரும்பவும் கட்டும்போதும் எஸ்றாவின் நாட்களில் புறஜாதி மனைவிகளை அனுப்பிவிட்டபோதும் அவர்கள் அப்படிச் செய்தனர். (எஸ்றா 5:1, 2; 10:1-4) ஆனால் பெரும்பாலான சமயங்களில் அவர்கள் கீழ்ப்படியவில்லை. கவனத்தோடு செவிகொடுத்துக் கேட்பதில் அவர்கள் ஒரே சீராக இல்லை; புத்திமதியை ஏற்றுக்கொள்வதில் இடைவிடாமல் தொடர்ந்திருக்கவில்லை; தங்கள் இருதயங்களைத் திறந்து வைக்கவில்லை. இஸ்ரவேலர்கள் தேவ பயத்தை வளர்த்துக்கொள்ளவில்லை, இதன் காரணமாக அவர்களுடைய வாழ்க்கையில் அது வல்லமை வாய்ந்த உந்துவிக்கும் சக்தியாக இல்லை.—மல்கியா 1:6; மத்தேயு 15:7, 8.
16. யாருடைய இருதயங்களில் யெகோவா தேவ பயத்தை வைத்திருக்கிறார்?
16 என்றபோதிலும், தம்முடைய ஜனங்களின் இருதயங்களில் தேவ பயத்தை வைப்பது பற்றிய யெகோவாவின் வாக்கு தோல்வியடையவில்லை. ஆவிக்குரிய இஸ்ரவேலரோடு அவர் ஒரு புதிய உடன்படிக்கை செய்தார்; இக்கிறிஸ்தவர்களுக்கே அவர் பரலோக நம்பிக்கை அளித்தார். (எரேமியா 31:33; கலாத்தியர் 6:16) 1919-ல், பொய் மத உலகப் பேரரசாகிய மகா பாபிலோனின் அடிமைத்தனத்திலிருந்து கடவுள் அவர்களை மீட்டார். அவருக்கான பயத்தை அவர்களுடைய இருதயங்களில் உறுதியாக நன்கு பதிய வைத்திருக்கிறார். இது அவர்களுக்கும், ராஜ்யத்தின் பூமிக்குரிய பிரஜைகளாக ஜீவனை அடையும் நம்பிக்கையுடைய ‘திரள் கூட்டத்தாருக்கும்’ நிறைவான நன்மைகளைக் கொண்டு வந்திருக்கிறது. (எரேமியா 32:39; வெளிப்படுத்துதல் 7:9) யெகோவாவுக்கான பயம் அவர்களுடைய இருதயங்களிலுங்கூட வந்திருக்கிறது.
தேவ பயம் எவ்வாறு நம்முடைய இருதயங்களில் பதிய வைக்கப்படுகிறது
17. நம்முடைய இருதயங்களில் யெகோவா எவ்வாறு தேவ பயத்தைப் பதிய வைத்திருக்கிறார்?
17 நம்முடைய இருதயங்களில் யெகோவா எவ்வாறு இத்தேவ பயத்தைப் பதிய வைத்திருக்கிறார்? தம்முடைய ஆவியைக் கொண்டு கிரியை செய்வதன் மூலம். மேலும் பரிசுத்த ஆவி விளைவித்த எது நம்மிடம் இருக்கிறது? கடவுளுடைய ஏவப்பட்டெழுதப்பட்ட வார்த்தையாகிய பைபிள் ஆகும். (2 தீமோத்தேயு 3:16, 17) பண்டைய காலங்களில் அவர் செய்த காரியங்கள் மூலமும், தம்முடைய வார்த்தையின் நிறைவேற்றமாக இன்று தம்முடைய ஊழியர்களோடு கொண்டுள்ள தொடர்புகளின் மூலமும், வரப் போகும் காரியங்களைப் பற்றிய தீர்க்கதரிசனங்கள் மூலமும் நாம் அனைவரும் தேவ பயத்தை விருத்தி செய்வதற்கு யெகோவா நல்ல திடமான அடிப்படையை அளிக்கிறார்.—யோசுவா 24:2-15; எபிரெயர் 10:30, 31.
18, 19. மாநாடுகளும் அசெம்பிளிகளும் சபைக் கூட்டங்களும் தேவ பயத்தைப் பெற எவ்வாறு உதவுகின்றன?
18 உபாகமம் 4:9-ல் அறிவிக்கப்பட்டபடி, யெகோவா மோசேயிடம் இவ்வாறு கூறியது குறிப்பிடத்தக்கது: “ஜனங்களை என்னிடத்தில் கூடிவரச்செய்து, என் வார்த்தைகளை அவர்கள் கேட்கும்படி பண்ணுவேன்; அவர்கள் பூமியில் உயிரோடிருக்கும் நாளெல்லாம் எனக்குப் பயந்திருக்கும்படி அவைகளைக் கற்றுக்கொண்டு, தங்கள் பிள்ளைகளுக்கும் போதிக்கக்கடவர்கள்.” அதேபோல் இன்று தம்முடைய ஜனங்கள் அவருக்குப் பயந்திருக்க கற்றுக்கொள்வதற்கு உதவ யெகோவா ஏராளமான ஏற்பாடுகளைச் செய்திருக்கிறார். யெகோவாவின் அன்புள்ள இரக்கம், நற்குணம் ஆகியவற்றுக்கான அத்தாட்சியை நம்முடைய மாநாடுகளிலும், அசெம்பிளிகளிலும் சபைக் கூட்டங்களிலும் நாம் எண்ணிப் பார்க்கிறோம். எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய மனிதர் என்ற புத்தகத்தைப் படிக்கையில் அதைத்தான் நாம் செய்து கொண்டிருந்தோம். அப்படிப்பு உங்களையும் யெகோவாவிடம் கொண்டிருந்த உங்கள் மனநிலையையும் எவ்வாறு பாதித்தது? நம்முடைய பரம தகப்பனின் மகத்தான ஆளுமையின் பல்வேறு அம்சங்கள் அவருடைய குமாரனில் பிரதிபலிக்கப்பட்டதை நீங்கள் கண்டபோது, கடவுளின் மனதுக்குப் பிடிக்காததை ஒருபோதும் செய்யக்கூடாது என்ற உங்களுடைய விருப்பத்தை இது பலப்படுத்தவில்லையா?—கொலோசெயர் 1:15.
19 கடந்த காலங்களில் யெகோவா தம்முடைய ஜனங்களை விடுவித்ததைப் பற்றிய பதிவுகளையுங்கூட நம்முடைய கூட்டங்களில் படிக்கிறோம். (2 சாமுவேல் 7:23) வெளிப்படுத்துதல்—அதன் மகத்தான உச்சக்கட்டம் சமீபித்துவிட்டது! என்ற ஆங்கில புத்தகத்தின் உதவியைக் கொண்டு பைபிள் புத்தகமாகிய வெளிப்படுத்துதலைப் படிக்கையில், இந்த 20-ம் நூற்றாண்டில் ஏற்கெனவே நிறைவேறிவிட்ட தீர்க்கதரிசன தரிசனங்களைப் பற்றியும் இன்னும் வரவிருக்கிற பயத்தைத் தோற்றுவிக்கும் சம்பவங்களைப் பற்றியும் கற்றுக்கொள்கிறோம். கடவுளின் அப்படிப்பட்ட செயல்கள் எல்லாவற்றையும் குறித்துச் சங்கீதம் 66:5 இவ்வாறு சொல்கிறது: “தேவனுடைய செய்கைகளை வந்து பாருங்கள்; அவர் மனுபுத்திரரிடத்தில் நடப்பிக்குங் கிரியையில் பயங்கரமானவர் [“கிரியை பயத்தைத் தோற்றுவிக்கும்,” NW].” ஆம், சரியானபடி நோக்கினால், கடவுளின் இப்படிப்பட்ட செயல்கள், நம்முடைய இருதயங்களில் யெகோவாவுக்கான பயத்தை, ஆழ்ந்த பயபக்தியைப் பதிய வைக்கின்றன. இவ்வாறாக, “அவர்கள் என்னை விட்டு அகன்று போகாதபடிக்கு, எனக்குப் பயப்படும் பயத்தை அவர்கள் இருதயத்திலே வைப்பேன்” என்ற தம்முடைய வாக்கை யெகோவா தேவன் எவ்வாறு நிறைவேற்றுகிறார் என்பதை நாம் அறிந்துகொள்ளலாம்.—எரேமியா 32:40.
20. நம் இருதயங்களில் தேவ பயம் ஆழமாகப் பதிவதற்கு, நம்முடைய பங்கில் என்ன தேவைப்படுகிறது?
20 என்றபோதிலும், நம் பங்கில் முயற்சியின்றி தேவ பயம் நம்முடைய இருதயங்களில் தோன்றுவதில்லை என்பது தெளிவாயிருக்கிறது. விளைவுகள் தானாகவே வந்துவிடுவதில்லை. யெகோவா தம்முடைய பங்கைச் செய்கிறார். தேவ பயத்தை வளர்த்துக்கொள்வதன் மூலம் நம்முடைய பங்கைச் செய்ய வேண்டும். (உபாகமம் 5:29) மாம்சப்பிரகாரமான இஸ்ரவேல் அதைச் செய்யத் தவறியது. ஆனால் யெகோவாவின்பேரில் சார்ந்தவர்களாய், ஆவிக்குரிய இஸ்ரவேலரும் அவர்களுடைய தோழர்களும், தேவ பயத்தோடிருப்பவர்களுக்கு வரும் நன்மைகளில் பலவற்றை ஏற்கெனவே அனுபவிக்கின்றனர். அப்படிப்பட்ட நன்மைகளில் சிலவற்றை நாம் அடுத்தக் கட்டுரையில் சிந்திப்போம்.
நீங்கள் எவ்வாறு பதிலளிப்பீர்கள்?
◻ தேவ பயம் என்றாலென்ன?
◻ யெகோவாவுக்கான பயத்தில் மகிழ்ச்சி காண நாம் எவ்வாறு போதிக்கப்பட்டு வருகிறோம்?
◻ தேவ பயத்தைக் கொண்டிருப்பதற்கு, நம்முடைய பங்கில் என்ன முயற்சி தேவைப்படுகிறது?
◻ தேவ பயத்தைப் பெறுவது ஏன் நம்முடைய அடையாள அர்த்தமுள்ள இருதயத்தின் எல்லா அம்சங்களையும் உட்படுத்துகிறது?
[பக்கம் 12, 13-ன் படங்கள்]
யெகோவாவுக்கான பயத்தை அறிந்துகொள்வதற்கு ஊக்கமான படிப்புத் தேவைப்படுகிறது