மேசியாவின் வந்திருத்தலும் அவருடைய ஆட்சியும்
“உங்களிடத்தினின்று வானத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த இயேசுவானவர் எப்படி உங்கள் கண்களுக்கு முன்பாக வானத்துக்கு எழுந்தருளிப்போனாரோ அப்படியே மறுபடியும் வருவார்.”—அப்போஸ்தலர் 1:11.
1, 2. (எ) இயேசு பரத்துக்கு ஏறிச்சென்ற போது இயேசுவின் அப்போஸ்தலர்களுக்கு இரண்டு தேவதூதர்கள் எவ்விதமாக ஆறுதல் கூறினர்? (பி) கிறிஸ்துவின் திரும்பிவருதல் சம்பந்தமாக என்ன கேள்விகள் எழுப்பப்படுகின்றன?
பதினொரு மனிதர்கள் ஒலிவ மலையின் கிழக்கத்திய சரிவில் நின்றுகொண்டு மேகத்திற்குள் உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தனர். ஒரு சில விநாடிகளுக்கு முன்புதானே, இயேசு கிறிஸ்து அவர்கள் மத்தியிலிருந்து எழும்பி போயிருந்தார், மேகம் அவரை மறைத்துக்கொள்ளும் வரையாக அவருடைய உருவம் படிப்படியாக மறைந்தது. இயேசு தங்களோடு இருந்த ஆண்டுகளில், அவரே மேசியாவாக இருந்தார் என்பதற்கு ஏராளமான சான்றுகளை அவர் கொடுப்பதை இந்த மனிதர்கள் பார்த்திருக்கின்றனர்; அவர்கள் அவருடைய மரணத்தில் துயரத்தையும் அவருடைய உயிர்த்தெழுதலில் பரவசத்தையும் அனுபவித்திருக்கின்றனர். இப்போது அவர் போய்விட்டார்.
2 திடீரென்று இரண்டு தேவதூதர்கள் தோன்றி இந்த ஆறுதலான வார்த்தைகளைப் பேசினர்: “கலிலேயராகிய மனுஷரே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்துபார்த்து நிற்கிறீர்கள்? உங்களிடத்தினின்று வானத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த இயேசுவானவர் எப்படி உங்கள் கண்களுக்கு முன்பாக வானத்துக்கு எழுந்தருளிப்போனாரோ, அப்படியே மறுபடியும் வருவார்.” (அப்போஸ்தலர் 1:11) எத்தனை நம்பிக்கையூட்டுவதாய் உள்ளது—இயேசு பரத்துக்கு ஏறிச்சென்றது, பூமியிலும் மனிதவர்க்கத்திலும் இனிமேலும் அக்கறையுள்ளவராக இல்லை என்பதை அர்த்தப்படுத்தவில்லை! மாறாக, இயேசு திரும்பி வருவார். அப்போஸ்தலர்களை இந்த வார்த்தைகள் நம்பிக்கையினால் நிரப்பின என்பதில் சந்தேகமில்லை. இன்றுள்ள லட்சக்கணக்கான ஆட்களும்கூட கிறிஸ்துவின் திரும்பிவருதலின் வாக்குறுதிக்கு அதிகமான முக்கியத்துவத்தை அளிக்கிறார்கள். சிலர் அதைக் குறித்து “இரண்டாம் வருகை” அல்லது “இயேசுநாதர் திருவருகை” என்று பேசுகிறார்கள். ஆனால் பெரும்பாலானவர்கள் கிறிஸ்துவின் திரும்பிவருதல் உண்மையில் எதை அர்த்தப்படுத்துகிறது என்பதைப் பற்றி குழம்பியவர்களாகத் தோன்றுகிறார்கள். கிறிஸ்து எவ்விதமாக திரும்பிவருகிறார்? எப்போது? மேலும், இது இன்று நம்முடைய வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கிறது?
கிறிஸ்து திரும்பிவரும் விதம்
3. கிறிஸ்துவின் திரும்பிவருதலைக் குறித்து அநேக ஆட்கள் நம்புவது என்ன?
3 அன் இவான்ஜலிக்கல் கிறிஸ்டோலஜி என்ற புத்தகத்தின் பிரகாரம், “கிறிஸ்துவின் இரண்டாம் வருகை அல்லது திரும்பிவருதல் (பரோசியா) தேவனுடைய ராஜ்யத்தை முடிவாக, பகிரங்கமாக மற்றும் எல்லா நித்தியத்துக்குமாக ஸ்தாபிக்கிறது.” கிறிஸ்துவின் திரும்பிவருதல் வெளிப்படையாக காணக்கூடியதாக, சொல்லர்த்தமாகவே கிரகத்திலுள்ள அனைவராலும் காணப்படும்படி இருக்கும் என்பது மிகப் பரவலாக இருந்து வரும் ஒரு நம்பிக்கையாகும். இந்தக் கருத்தை ஆதரிக்க, அநேகர் வெளிப்படுத்துதல் 1:7-ஐ சுட்டிக்காட்டுகின்றனர். அது வாசிப்பதாவது: “இதோ, மேகங்களுடனே வருகிறார்; கண்கள் யாவும் அவரைக் காணும், அவரைக் குத்தினவர்களும் அவரைக் காண்பார்கள்.” ஆனால் இந்த வசனம் சொல்லர்த்தமாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டுமா?
4, 5. (எ) வெளிப்படுத்துதல் 1:7 சொல்லர்த்தமான கருத்துடையதாக இல்லை என்பது நமக்கு எப்படித் தெரியும்? (பி) இயேசுவின் சொந்த வார்த்தைகள் எவ்விதமாக இந்தப் புரிந்துகொள்ளுதலை உறுதிசெய்கின்றன?
4 வெளிப்படுத்துதல் புத்தகம் “அடையாளங்களில்” அளிக்கப்பட்டிருப்பதை நினைவில் வையுங்கள். (வெளிப்படுத்துதல் 1:1, NW) அப்படியென்றால் இந்தப் பகுதி அடையாள அர்த்தமுள்ளதாக இருக்கவேண்டும்; எப்படியும் “அவரைக் குத்தினவர்கள்” எவ்வாறு கிறிஸ்து திரும்பிவருவதைக் காணமுடியும்? அவர்கள் மரித்து 20 நூற்றாண்டுகள் ஆகிவிட்டிருக்கின்றனவே! மேலுமாக கிறிஸ்து அவர் புறப்பட்டுச்சென்ற “அதே விதமாகவே” திரும்பிவருவார் என்பதாக தேவதூதர்கள் சொன்னார்கள். சரி, அவர் எவ்விதமாகச் சென்றார்? இலட்சக்கணக்கானோர் பார்த்துக்கொண்டிருக்கையிலா? இல்லை. வெகு சில உண்மையுள்ளோரே அந்தச் சம்பவத்தைப் பார்த்தனர். தேவதூதர்கள் அவர்களிடம் பேசும்போது, அப்போஸ்தலர்கள் சொல்லர்த்தமாகவே கிறிஸ்து பரலோகம் செல்லும் வரையாக அவருடைய பிரயாணத்தைப் பார்த்துக்கொண்டிருந்தனரா? இல்லை, ஒரு மேகம் இயேசுவை பார்வையிலிருந்து மறைத்துவிட்டது. அதற்கு கொஞ்ச நேரத்துக்குப் பின் ஓர் ஆவி ஆளாக மனித கண்களுக்குப் புலப்படாதவராக அவர் ஆவி பரலோகங்களுக்குள் பிரவேசித்திருக்க வேண்டும். (1 கொரிந்தியர் 15:50) ஆகவே அதிகபட்சமாக, அப்போஸ்தலர்கள் இயேசுவின் பிரயாணத்தின் ஆரம்பத்தை மாத்திரமே பார்த்தனர்; அதன் முடிவை, தம்முடைய தகப்பனாகிய யெகோவாவின் பிரசன்னத்துக்கு அவர் திரும்பிப்போவதை அவர்களால் பார்க்க முடியவில்லை. இதை அவர்கள் தங்கள் விசுவாச கண்களினால் மாத்திரமே பகுத்துணர முடியும்.—யோவான் 20:17.
5 இயேசு அதேவிதமாகவே திரும்பிவருகிறார் என்பதாக பைபிள் போதிக்கிறது. இயேசுதாமே தம்முடைய மரணத்துக்குச் சற்று முன்பாகச் சொன்னார்: “இன்னும் கொஞ்சக்காலத்திலே உலகம் என்னைக் காணாது.” (யோவான் 14:19) “தேவனுடைய ராஜ்யம் பிரத்தியட்சமாய் வராது,” என்பதாகவும்கூட அவர் சொன்னார். (லூக்கா 17:20) அப்படியென்றால் என்ன கருத்தில், ‘கண்கள் யாவும் அவரைக் காணும்’? இதற்கு பதிலளிக்க அவருடைய திரும்பிவருதலின் சம்பந்தமாக இயேசுவும் அவரைப் பின்பற்றியவர்களும் பயன்படுத்திய வார்த்தையை நாம் முதலாவது தெளிவாகப் புரிந்துகொள்வது அவசியம்.
6. (எ) “திரும்பி வருதல்,” “வந்துசேர்தல்,” “இயேசுநாதர் திருவருகை,” மற்றும் “வருகை” போன்ற வார்த்தைகள் பரோசியா என்ற கிரேக்க வார்த்தைக்கு ஏன் தகுதியான மொழிபெயர்ப்பாக இல்லை? (பி) பரோசியா அல்லது வந்திருத்தல் வெறுமனே எந்த ஒரு கணநேர சம்பவத்தைவிட நீண்ட காலம் நீடித்திருக்கிறது என்பதை எது காட்டுகிறது?
6 உண்மையென்னவென்றால், கிறிஸ்து வெறுமனே “திரும்பிவருவதைக்” காட்டிலும் அதிகத்தைச் செய்கிறார். அந்த வார்த்தை “வருகை,” “வந்துசேர்தல்,” அல்லது “இயேசுநாதர் திருவருகை,” போன்ற குறுகிய ஒரு கணநேரத்தில் நடைபெறும் தனியொரு சம்பவத்தைக் குறிக்கிறது. ஆனால் இயேசுவும் அவரைப் பின்பற்றியவர்களும் பயன்படுத்திய கிரேக்க வார்த்தை அதிகத்தை அர்த்தப்படுத்துகிறது. பரோசியா என்ற வார்த்தை சொல்லர்த்தமாகவே “அருகே இருப்பதை” அல்லது “வந்திருத்தலை” அர்த்தப்படுத்துகிறது. இந்த வார்த்தை வெறுமனே வருகை மட்டுமல்லாமல் ஆனால் அதைத் தொடர்ந்திருக்கும் வந்திருத்தல்—அரச குடும்பத்தினர் அரசு விருந்தினராக வருகைத் தருவது போல. இந்த வந்திருத்தல் ஒரு கணநேர சம்பவம் அல்ல; இது ஒரு குறிக்கப்பட்ட காலப்பகுதியாக, ஒரு விசேஷ சகாப்தமாக இருக்கிறது. மத்தேயு 24:37-39-ல், “மனுஷகுமாரனின் பிரசன்ன [பரோசியா]” காலம் ஜலப்பிரளயத்தில் உச்சநிலையடைந்த “நோவாவின் காலத்தைப்” போலிருக்கும் என்று இயேசு சொன்னார். ஜலப்பிரளயம் வந்து அந்தக் கறைப்பட்ட உலக அமைப்பை துடைத்தழிப்பதற்கு முன்பாக பல பத்தாண்டுகளாக நோவா பேழையைக் கட்டிக்கொண்டும் பொல்லாதவர்களை எச்சரித்தும் வந்தார். அப்படியென்றால், அதேவிதமாகவே கிறிஸ்துவின் காணக்கூடாத வந்திருத்தலும், அதுவும்கூட பெரிய ஓர் அழிவில் உச்சநிலையை அடைவதற்கு முன்பாக சில பத்தாண்டுகளுடைய ஒரு காலப்பகுதியாக நீடித்திருக்கும்.
7. (எ) பரோசியா மனித கண்களுக்கு புலப்படாதது என்பதை எது நிரூபிக்கிறது? (பி) கிறிஸ்துவின் திரும்பிவருதலை “கண்கள் யாவும்” அவரைக் காணும் என்பதாக விவரிக்கும் வேதவசனங்கள் எவ்விதமாக மற்றும் எப்போது நிறைவேறும்?
7 பரோசியா, மனித கண்களுக்கு சொல்லர்த்தமாக புலப்படாததாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அப்படி இருந்தால், நாம் பார்க்கப்போகிற விதமாக அவரைப் பின்பற்றுகிறவர்கள் அவருடைய வந்திருத்தலைப் பகுத்துணர அவர்களுக்கு உதவக்கூடிய ஓர் அடையாளத்தைக் கொடுப்பதில் இயேசு ஏன் அவ்வளவு நேரத்தை செலவிடப்போகிறார்?a இருப்பினும் கிறிஸ்து சாத்தானிய உலக ஒழுங்கை அழிப்பதற்கு அவர் வரும்போது, அவருடைய வந்திருத்தலின் உண்மை அனைவருக்கும் மிகப் பெரிய அளவில் விளங்கும். அப்பொழுது “கண்கள் யாவும் அவரைக் காணும்.” இயேசுவின் எதிரிகளும்கூட கிறிஸ்துவின் ஆட்சி உண்மை என்பதை உணர்ந்து திகிலடைவர்.—மத்தேயு 24:30; 2 தெசலோனிக்கேயர் 2:8; வெளிப்படுத்துதல் 1:5, 6 பாருங்கள்.
அது எப்போது ஆரம்பமாகிறது?
8. இயேசுவின் வந்திருத்தலின் ஆரம்பத்தை என்ன சம்பவம் குறிக்கிறது, இது எங்கே சம்பவித்தது?
8 மேசியானிய தீர்க்கதரிசனங்களின் திரும்பத் திரும்ப வரும் பொருளை நிறைவேற்றும் ஒரு சம்பவத்தோடு மேசியாவின் வந்திருத்தலும் ஆரம்பமாகிறது. அவர் பரலோகத்தில் ராஜாவாக முடிசூட்டப்படுகிறார். (2 சாமுவேல் 7:12-16; ஏசாயா 9:6, 7; எசேக்கியேல் 21:26, 27) இயேசுதாமே தம்முடைய வந்திருத்தல் தம்முடைய ராஜரீகத்தோடு சம்பந்தப்பட்டிருக்கும் என்பதாகக் காண்பித்தார். அநேக உவமைகளில், அவர் தம் வீட்டையும் அடிமைகளையும் பின்னால் விட்டுவிட்டு “ராஜ்யத்தைப்” பெற்றுவரும்படியாக “தூர தேசத்துக்கு” நீண்ட கால பயணம் மேற்கொள்ளும் ஓர் எஜமானனுக்குத் தம்மை ஒப்பிட்டார். அவருடைய பரோசியா எப்போது ஆரம்பமாகும் என்பதைப் பற்றிய அவருடைய அப்போஸ்தலர்களின் கேள்விக்கு தம்முடைய விடையின் ஒரு பாகமாக இப்படிப்பட்ட ஓர் உவமையை அவர் கொடுத்தார்; மற்றொன்றை “ராஜ்யம் சீக்கிரமாய் வெளிப்படுமென்று அவர்கள் நினைத்தபடியினால்” கொடுத்தார். (லூக்கா 19:11, 12, 15; மத்தேயு 24:3; 25:14, 19) ஆகவே பூமியில் மனிதனாக அவர் இருந்த காலத்தில், அவர் முடிசூடப்படுவது இன்னும் நீண்ட காலத்துக்கு அப்பால், பரலோகத்தின் “தூர தேசத்தில்” நடைபெற வேண்டியதாயிருந்தது. அது எப்போது நடக்கும்?
9, 10. கிறிஸ்து இப்போது பரலோகத்தில் ஆட்சிசெய்து கொண்டிருக்கிறார் என்பதற்கு என்ன அத்தாட்சி இருக்கிறது, அவர் எப்போது தம் ஆட்சியை ஆரம்பித்தார்?
9 இயேசுவின் சீஷர்கள் அவரிடம், “உம்முடைய பிரசன்னத்துக்கும் [வந்திருத்தலுக்கும், NW], காரிய ஒழுங்கு முறையின் முடிவுக்கும் அடையாளம் என்ன,” என்பதாகக் கேட்டபோது அந்த எதிர்கால சமயத்தைக் குறித்து விளக்கமான ஒரு வருணனையை அவர்களுக்குக் கொடுப்பதன் மூலம் பதிலளித்தார். (மத்தேயு, அதிகாரம் 24; மாற்கு, அதிகாரம் 13; லூக்கா, அதிகாரம் 21; 2 தீமோத்தேயு 3:1-5-ஐயும் பாருங்கள்; வெளிப்படுத்துதல், அதிகாரம் 6.) இந்த அடையாளம் ஒரு தொல்லைகள் நிறைந்த சகாப்தம் பற்றிய விளக்கமான வருணனைக்குச் சமமாக இருக்கிறது. அது சர்வதேச யுத்தங்கள், அதிகரிக்கும் குற்றச்செயல், சீர்குலைந்த குடும்ப வாழ்க்கை, கொள்ளை நோய்கள், பஞ்சங்கள் மற்றும் நிலநடுக்கங்களால் குறிக்கப்படும் ஒரு காலமாக இருக்கிறது—உள்ளூர் பிரச்னைகளாக இல்லாமல் கோளத்தையே தழுவும் நெருக்கடியாக இருக்கிறது. இது பழக்கப்பட்டதாக தொனிக்கிறதா? கடந்துபோகும் ஒவ்வொரு நாளும், 20-ம் நூற்றாண்டுக்கு இயேசு கொடுத்த வருணனைக்கு துல்லியமாகப் பொருந்துகிறது என்பதை உறுதிசெய்கிறது.
10 சரித்திராசிரியர்கள் 1914 மனித சரித்திரத்தில் ஒரு திரும்புக் கட்டமாக, மைய ஆண்டாக இருந்தது என்பதை ஒப்புக்கொள்கிறார்கள். இதற்குப்பின் இந்தப் பிரச்னைகளில் அநேகம் கட்டுக்கடங்காமல் போக ஆரம்பித்து பூகோள அளவில் வேகமாக அதிகரித்திருக்கிறது. ஆம், பைபிள் தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றமாக உள்ள காணக்கூடிய உலக சம்பவங்கள் அனைத்தும் இயேசு பரலோகத்தில் ராஜாவாக ஆளத்தொடங்கின ஆண்டு 1914 என்பதாக சுட்டிக்காட்டுகிறது. மேலுமாக, தானியேல் அதிகாரம் 4-லுள்ள ஒரு தீர்க்கதரிசனம் யெகோவாவின் நியமிக்கப்பட்ட ராஜா தன் ஆட்சியை ஆரம்பிக்கும் அதே ஆண்டான 1914-க்கு நம்மை வழிநடத்துகின்ற கால கிரம அட்டவணை அத்தாட்சியை அளிக்கிறது.b
ஏன் தொந்தரவுகள் நிறைந்த காலம்?
11, 12. (எ) கிறிஸ்து இப்பொழுதே பரலோகத்தில் ஆட்சிசெய்து கொண்டிருக்கிறார் என்பதை நம்புவது சிலருக்கு ஏன் கடினமாயுள்ளது? (பி) இயேசு ராஜாவாக முடிசூட்டப்பட்ட பின்னர் என்ன சம்பவித்தது என்பதை நாம் எப்படி விளக்கலாம்?
11 ஆனால், ‘மேசியா பரலோகத்தில் ஆட்சி செய்துகொண்டிருக்கிறார் என்றால், ஏன் உலகம் இத்தனை தொல்லைகள் நிறைந்ததாக இருக்கிறது? அவருடைய ஆட்சி திறமையற்றதா?’ என்பதாக சிலர் யோசிக்கலாம். ஓர் உதாரணம் உதவி செய்யக்கூடும். ஒரு தேசத்தைப் பொல்லாத ஒரு ஜனாதிபதி ஆட்சி செய்து வருகிறார். தேசத்தின் ஒவ்வொரு மூலையையும் கட்டுப்படுத்தும் செல்வாக்குள்ள ஊழல் நிறைந்த ஓர் அமைப்பை அவர் நிறுவியிருக்கிறார். ஆனால் ஒரு தேர்தல் நடத்தப்படுகிறது; ஒரு நல்ல மனிதர் வெற்றிபெறுகிறார். இப்பொழுது என்ன நடக்கும்? ஒரு சில குடியாட்சி தேசங்களில் இருப்பது போல, புதிய ஜனாதிபதி பணியில் அமர்த்தப்படுவதற்கு முன்பாக ஒரு சில மாதங்கள் கொண்ட ஓர் இடைமாறுபாட்டுக் காலப்பகுதி தொடருகிறது. இப்படிப்பட்ட ஒரு காலப்பகுதியில் இந்த இரண்டு மனிதர்களும் எவ்வாறு செயல்படுவர்? நல்ல மனிதர் உடனடியாக பதவியில் அவருக்கு முன்னிருந்தவர் தேசம் முழுவதிலும் உருவாக்கியிருந்த எல்லா பொல்லாப்பையும் தாக்கி இடித்து வீழ்த்திவிடுவாரா? மாறாக, அவர் முன்னாள் ஜனாதிபதியின் நேர்மையற்ற நெருங்கிய பழைய நண்பர் மற்றும் அரசியல் ஆதரவாளர்கள் தொடர்பை துண்டித்துக்கொண்டு ஒரு புதிய அமைச்சரவைக் குழுவை ஏற்படுத்தி தன் தலைநகரின் மீது முதலில் கவனத்தை அவர் ஒருமுகப்படுத்துவார் அல்லவா? அவ்வகையில் அவர் முழு அதிகாரத்துக்கும் வரும்போது, அவர் ஒரு தூய்மையான திறமையுள்ள அதிகார இருக்கையிலிருந்துகொண்டு இயங்க முடியும். மோசமான ஜனாதிபதியைப் பொருத்த வரையில், தன்னுடைய எல்லா அதிகாரத்தையும் இழந்துவிடுவதற்கு முன்பாக நாட்டிலிருந்து எல்லா தீயவழியில் பெறப்படும் செல்வங்களையும் உறிஞ்சிக்கொள்ள தனக்கு மிஞ்சியிருக்கும் குறுகிய காலத்தை அனுகூலப்படுத்திக்கொள்வான் இல்லையா?
12 உண்மையில், கிறிஸ்துவின் பரோசியாவும் இவ்விதமாகவே இருக்கிறது. கிறிஸ்து பரலோகத்தில் ராஜாவாக்கப்பட்ட போது அவர் முதலில் சாத்தானையும் பேய்களையும் பரலோகத்திலிருந்து கீழே தள்ளி, இவ்விதமாக தம்முடைய அரசாங்கம் அமையப் பெற்ற இடத்தை துப்புரவாக்கினார் என்பதை வெளிப்படுத்துதல் 12:7-12 காண்பிக்கிறது. நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்த இந்தத் தோல்வியை அனுபவித்தப் பிறகு, இங்கே பூமியின் மீது கிறிஸ்து தம்முடைய முழு அதிகாரத்தையும் செலுத்துவதற்கு முன்பாக உள்ள “கொஞ்சக் காலத்தின்” போது சாத்தான் எவ்விதமாக நடந்துகொள்கிறான்? அந்த மோசமான ஜனாதிபதியைப் போலவே அவன் இந்தப் பழைய ஒழுங்கிலிருந்து தான் பெற்றுக்கொள்ள முடிகிற அனைத்தையும் பெற்றுக்கொள்ள முயற்சிசெய்கிறான். அவன் பணத்தை விரும்புவதில்லை; அவன் தன்னைப் பின்பற்றி வருபவர்களை விரும்புகிறான். எவ்வளவு பேரை முடியுமோ அவ்வளவு பேரையும் யெகோவாவிடமிருந்தும் அவருடைய ஆளும் அரசரிடமிருந்தும் பிரித்துக்கொண்டு செல்ல அவன் விரும்புகிறான்.
13. கிறிஸ்துவினுடைய ஆட்சியின் ஆரம்பம், இங்கே பூமியில் தொந்தரவான காலமாக இருக்கும் என்பதை வேதவசனங்கள் எவ்வாறு காண்பிக்கின்றன?
13 அப்படியென்றால், மேசியாவின் ஆட்சியின் ஆரம்பம் “பூமிக்கு ஐயோ”வாக இருக்கும் ஒரு காலத்தை அர்த்தப்படுத்துவது குறித்து ஆச்சரியப்படுவதற்கில்லை. (வெளிப்படுத்துதல் 12:12) அதேவிதமாகவே, சங்கீதம் 110:1, 2, 6 மேசியா தம்முடைய ஆட்சியை ‘சத்துருக்களின் நடுவே’ துவங்குகிறார் என்பதைக் காட்டுகிறது. பின்னால்தானே, அவர் “தேசங்களின்” சாத்தானின் ஊழல்மிக்க அமைப்பின் ஒவ்வொரு பகுதியும் இல்லாமற் போகும்படி முழுமையாக அழித்துவிடுகிறார்!
மேசியா பூமியை ஆளும்போது
14. மேசியா சாத்தானுடைய பொல்லாத காரிய ஒழுங்கு முறையை அழித்த பிற்பாடு அவர் என்ன செய்யக்கூடியவராக இருப்பார்?
14 சாத்தானுடைய அமைப்பையும் அதை ஆதரிக்கும் அனைவரையும் அவர் அழித்த பிற்பாடு மேசியானிய ராஜா, இயேசு கிறிஸ்து, கடைசியாக அவருடைய ஆயிர வருட ஆட்சியை விவரிக்கும் மகத்தான பைபிள் தீர்க்கதரிசனங்களை நிறைவேற்றும் நிலையில் இருப்பார். ஏசாயா 11:1-10, மேசியா எத்தகைய ஓர் அரசராக இருப்பார் என்பதைக் காண உதவிசெய்கிறது. வசனம் 2 அவருக்கு “கர்த்தருடைய ஆவியும் . . . ஞானமும் உணர்வும் அருளும் ஆவியும், ஆலோசனையும் பெலனும் அருளும் ஆவியும்,” இருக்கும் என்பதாக நமக்குச் சொல்கிறது.
15. மேசியானிய ஆட்சியில் ‘பெலனை அருளும் ஆவி’ எதை அர்த்தப்படுத்தும்?
15 ‘பெலனை அருளும் ஆவி’ இயேசுவின் ஆட்சியில் எதை அர்த்தப்படுத்தும் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். அவர் பூமியின் மீது இருக்கையில், அற்புதங்களை நடப்பிப்பதற்கு அவருக்கு உதவிய யெகோவாவின் வல்லமை ஓரளவு அவருக்கிருந்தது. மேலும் “எனக்கு சித்தமுண்டு,” என்று சொல்லி மக்களுக்கு உதவ தமக்கிருக்கும் இருதயப்பூர்வமான ஆசையை அவர் காண்பித்தார். (மத்தேயு 8:3) ஆனால் அந்நாட்களில் அவர் செய்த அற்புதங்கள், பரலோகத்திலிருந்து ஆளும்போது தாம் என்ன செய்வார் என்பதற்கு வெறுமனே ஒரு முன்காட்சியாக மட்டுமே இருந்தது. இயேசு உலகளாவிய அளவில் அற்புதங்களை நடப்பிப்பார்! வியாதியஸ்தர், குருடர், செவிடர், முடவர், சப்பாணிகள் நிரந்தரமாக சுகப்படுத்தப்படுவர். (ஏசாயா 35:5, 6) நியாயமாக விநியோகிக்கப்படும் ஏராளமான உணவு என்றென்றைக்கும் பசிக்கு முடிவைக் கொண்டுவரும். (சங்கீதம் 72:16) கடவுள் நினைவுகூரப் பிரியப்படும் கல்லறைகளிலுள்ள அந்த எண்ணற்ற கோடிக்கணக்கானோரைப் பற்றி என்ன? அவர்களை உயிர்த்தெழுப்பி, பரதீஸில் என்றுமாக வாழ்வதற்கு ஒவ்வொருவருக்கும் வாய்ப்பைக் கொடுக்கும் அதிகாரத்தை இயேசுவின் “வல்லமை” உட்படுத்தும்! (யோவான் 5:28, 29) என்றபோதிலும், இந்த எல்லா வல்லமையோடும்கூட மேசியானிய ராஜா எப்போதும் மிகவும் மனத்தாழ்மையுள்ளவராகவே இருப்பார். அவர் ‘கர்த்தருக்குப் பயப்படுவதில் மகிழ்ச்சியைக்’ காண்பார்.—ஏசாயா 11:3.
16. மேசியானிய அரசர் என்னவிதமான நியாயாதிபதியாக இருப்பார்? மனித நியாயாதிபதிகளைப் பற்றிய பதிவிலிருந்து அது எவ்வாறு மாறுபட்டதாக இருக்கும்?
16 இந்த ராஜா ஒரு பரிபூரண நியாயாதிபதியாகவும்கூட இருப்பார். அவர், “தமது கண்கண்டபடி நியாயந்தீர்க்காமலும் தமது காது கேட்டபடி தீர்ப்புச் செய்யாமலும்,” இருப்பார். கடந்தக் காலத்தில் அல்லது தற்காலத்திலுள்ள எந்த மனித நியாயாதிபதியை இவ்வாறு வருணிக்க முடியும்? கூர்ந்த அறிவுள்ள ஒரு மனிதனும்கூட தன்னிடமுள்ள ஞானம் அல்லது பகுத்துணர்வைப் பயன்படுத்தி கண் கண்டபடி அல்லது காது கேட்டபடி மாத்திரமே தீர்ப்பு செய்யமுடியும். இதன் காரணமாக இந்தப் பழைய உலகின் நியாயாதிபதிகளும் சட்ட இயலர்களும் சாமர்த்தியமான போலிவாத நுணுக்கம், வழக்குமன்ற அறையின் ஏமாற்றுச் செயல்கள் அல்லது முரண்படுகின்ற அத்தாட்சியினால் தடுமாறியோ அல்லது குழம்பியோ விடக்கூடும். செல்வந்தர்களும் அதிகாரமுள்ளவர்களும் மாத்திரமே திறம்பட்ட எதிர்வாதத்தைக் கொண்டிருக்க முடியும், உண்மையில் நீதியை வாங்கமுடியும். மேசியானிய நியாயாதிபதியின்கீழ் அவ்வாறு இராது! அவர் இருதயங்களைப் பார்த்து அறிகிறார். எதுவும் அவருடைய கவனத்தைத் தப்பமுடியாது. அன்பினாலும் இரக்கத்தினாலும் பக்குவப்படுத்தப்பட்ட நீதி விற்பனைக்கு இருக்காது. அது எப்போதும் மேலோங்கியிருக்கும்.—ஏசாயா 11:3-5.
அவருடைய ஆட்சி உங்களை எவ்வாறு பாதிக்கிறது
17, 18. (எ) ஏசாயா 11:6-9-ல் மனிதவர்க்கத்தின் என்ன பிரகாசமான எதிர்காலம் வருணிக்கப்பட்டிருக்கிறது? (பி) இந்தத் தீர்க்கதரிசனம் முக்கியமாக யாருக்குப் பொருந்துகிறது, ஏன்? (சி) இந்தத் தீர்க்கதரிசனம் முக்கியமாக எவ்விதமாக சொல்லர்த்தமான நிறைவேற்றத்தைக் கொண்டிருக்கும்?
17 மேசியாவின் ஆட்சி அதன் குடிமக்களின் மீது ஆழமான செல்வாக்குள்ளதாக இருப்பது புரிந்துகொள்ளப்படத்தக்கதே. அது மக்களை மாற்றுகிறது. ஏசாயா 11:6-9 இப்படிப்பட்ட மாற்றங்கள் உண்மையில் எவ்வளவு விரிவாக இருக்கிறது என்பதைக் காண்பிக்கிறது. இந்தத் தீர்க்கதரிசனம் ஆபத்தான, பிற விலங்குகளைக் கொன்று வாழும் விலங்குகள்—கரடிகள், ஓநாய்கள், சிறுத்தைப்புலிகள், சிங்கங்கள், விரியன்பாம்புகள்—வீட்டு விலங்குகளோடும், பிள்ளைகளோடும்கூட இருக்கும் நெகிழவைக்கும் ஒரு காட்சியைத் தருகிறது. ஆனால் பிற விலங்குகளைக் கொன்று வாழும் விலங்குகள் ஆபத்தானவையாக இல்லை! ஏன்? வசனம் 9 பதிலளிக்கிறது: “என் பரிசுத்த பர்வதமெங்கும் தீங்குசெய்வாருமில்லை; கேடு செய்வாருமில்லை; சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறது போல, பூமி கர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்.”
18 “கர்த்தரை அறிகிற அறிவு” சொல்லர்த்தமான விலங்குகளின் மீது எந்தப் பாதிப்புமுடையதாக இருக்க முடியாது; இதன் காரணமாக இந்த வசனங்கள் முக்கியமாக மக்களுக்குப் பொருந்த வேண்டும். மேசியாவின் ஆட்சி உலகளாவிய கல்வி திட்டமொன்றை ஏற்பாடு செய்து மக்களுக்கு யெகோவாவையும் அவருடைய வழிகளையும் பற்றி போதித்து, தங்கள் உடன்மானிடரை அன்போடும் மரியாதையோடும் கண்ணியத்தோடும் நடத்துமாறு அனைவருக்கும் போதிக்கிறது. வரப்போகும் பரதீஸில், மேசியா அற்புதமாக மனிதவர்க்கத்தை சரீர மற்றும் ஒழுக்க பரிபூரணத்துக்கு உயர்த்துவார். அபூரண மனித இயல்பை பாழாக்கும் கொடிய, மிருகத்தனமான குணங்கள் மறைந்துவிடும். சொல்லர்த்தமான ஒரு கருத்திலும்கூட, மனிதவர்க்கம் மிருகங்களோடு சமாதானமாக இருக்கும்—கடைசியாக!—ஆதியாகமம் 1:28 ஒப்பிடவும்.
19. மேசியாவின் ஆட்சி எவ்விதமாக இந்தக் கடைசி நாட்களில் வாழ்ந்துகொண்டிருக்கும் ஆட்களின் வாழ்க்கையை பாதிக்கிறது?
19 ஆனால் மேசியா இப்போதே ஆட்சிசெய்கிறார் என்பதை மனதில் வையுங்கள். இப்பொழுதேகூட, அவருடைய ராஜ்யத்தின் குடிமக்கள் ஏசாயா 11:6-9-ஐ ஒரு கருத்தில் நிறைவேற்றுகிறவர்களாக சமாதானத்தோடே ஒன்றாகச் சேர்ந்து வாழ கற்றுக்கொண்டுவருகிறார்கள். மேலுமாக, கிட்டத்தட்ட 80 ஆண்டுகளாக ஏசாயா 11:10-ஐ இயேசு நிறைவேற்றி வந்திருக்கிறார்: “அக்காலத்திலே, ஜனங்களுக்குக் கொடியாக நிற்கும் ஈசாயின் வேருக்காக ஜாதிகள் விசாரித்துக் கேட்பார்கள்; அவருடைய தாபரஸ்தலம் மகிமையாயிருக்கும்.” ஒவ்வொரு ஜாதியிலுமுள்ள ஆட்கள் மேசியாவிடமாக திரும்புகிறார்கள். ஏன்? ஏனென்றால் அவர் ஆட்சி செய்ய ஆரம்பித்தது முதற்கொண்டு “கொடியாக நிற்”கிறார். மேலே வருணிக்கப்பட்டிருக்கும் மாபெரும் கல்வித் திட்டத்தின் மூலமாக அவர் உலகம் முழுவதிலும் தம்முடைய வந்திருத்தலை அறியும்படிச் செய்துவருகிறார். உண்மையில், இந்தப் பழைய ஒழுங்கின் முடிவுக்கு முன்பாக உலகளாவிய ஒரு பிரசங்க வேலை அவருடைய வந்திருத்தலுக்குக் குறிப்பிடத்தக்க ஓர் அடையாளமாக இருக்கும் என்பதாக இயேசு முன்னுரைத்தார்.—மத்தேயு 24:14.
20. மேசியானிய ஆட்சியின் குடிமக்கள் அனைவரும் என்ன மனநிலையை தவிர்க்க வேண்டும், ஏன்?
20 ஆகவே ராஜ்ய வல்லமையில் கிறிஸ்துவின் வந்திருத்தல் நெடுந்தொலைவிலுள்ள கோட்பாட்டளவிலான விவகாரமாக வெறுமனே இறையியலர்களின் மத்தியில் அறிவுப்பூர்வமான சொற்போரின் ஒரு தலைப்பாக இல்லை. அவருடைய ஆட்சி ஏசாயா முன்னறிவித்த வண்ணமாகவே இங்கே பூமியிலுள்ளவர்களைப் பாதித்து வாழ்க்கையை மாற்றுகிறது. இயேசு தம்முடைய ராஜ்யத்தின் குடிமக்களாக இருக்க இந்த ஊழல்மிக்க உலக அமைப்பிலிருந்து லட்சக்கணக்கான ஆட்களை வழிநடத்தியிருக்கிறார். நீங்கள் இத்தகைய ஒரு குடிமகனா? அப்படியென்றால் நம்முடைய அரசருக்குத் தகுதியாக இருக்கும் எல்லா உற்சாகத்தோடும் சந்தோஷத்தோடும் சேவியுங்கள்! களைப்படைந்து போய் “அவர் வருவார் என்று சொல்லுகிற வாக்குத்தத்தம் எங்கே?” என்ற உலகின் நம்பிக்கையற்ற கூக்குரலோடு சேர்ந்துகொள்வது மிகவும் எளிதே என்பது ஒப்புக்கொள்ளப்படுகிறது. (2 பேதுரு 3:4) ஆனால் இயேசு சொன்னவிதமாகவே, “முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான்.”—மத்தேயு 24:13.
21. மேசியானிய நம்பிக்கைக்கான நம்முடைய போற்றுதலை நாம் அனைவரும் எவ்விதமாக மேம்படுத்தலாம்?
21 கடந்துசெல்லும் ஒவ்வொரு நாளும் யெகோவா முழு உலகத்துக்கும் அவருடைய வந்திருத்தலை வெளிப்படுத்தும்படியாக தம்முடைய குமாரனுக்கு கட்டளையிடப் போகும் அந்த மகா நாளுக்கு அருகாமையில் நம்மை கொண்டுவருகிறது. அந்த நாளில் உங்களுடைய நம்பிக்கை மங்கலாகிவிட ஒருபோதும் அனுமதியாதீர்கள். இயேசுவின் மேசியானிய அந்தஸ்து மற்றும் ஆளும் ராஜாவாக அவருடைய பண்புகளின் மீதும் தியானம் செய்யுங்கள். பைபிளில் விவரித்துக்கூறப்பட்டிருக்கும் மகா மேசியானிய நம்பிக்கையை உருவாக்கியவரும் புத்திக்கூர்மை படைத்தவருமான யெகோவா தேவனைப் பற்றியும்கூட ஆழ்ந்து யோசியுங்கள். நீங்கள் அவ்விதமாக செய்யும்போது, அப்போஸ்தலனாகிய பவுல் பின்வருமாறு எழுதியபோது உணர்ந்தவிதமாகவே நீங்கள் அதிகமதிகமாக உணருவீர்கள்: “ஆ! தேவனுடைய ஐசுவரியம், ஞானம், அறிவு என்பவைகளின் ஆழம் எவ்வளவாயிருக்கிறது.”—ரோமர் 11:33.
[அடிக்குறிப்புகள்]
a இறையியலர் R. கோவட் 1864-ல் இவ்விதமாகச் சொன்னார்: “இது மிகவும் இறுதியானதாக எனக்குத் தோன்றுகிறது. வந்திருத்தலுக்கு அடையாளத்தைக் கொடுப்பது அது இரகசியமானது என்பதைக் காண்பிக்கிறது. நாம் பார்க்கின்ற ஒன்றின் வந்திருத்தலை நமக்கு தெரியப்படுத்துவதற்கு நமக்கு எந்த அடையாளமும் தேவையில்லை.”
b விவரங்களுக்கு, “உம்முடைய ராஜ்யம் வருக,” புத்தகத்தில் பக்கங்கள் 133-9 பார்க்கவும்.
நீங்கள் எவ்வாறு பதிலளிப்பீர்கள்?
◻ என்ன விதமாக கிறிஸ்து திரும்பிவருகிறார்?
◻ கிறிஸ்துவின் வந்திருத்தல் காணக்கூடாதது என்பதும் அது கணிசமான ஒரு காலப்பகுதி வரையாக நீடித்திருக்கும் என்பதும் நமக்கு எப்படித் தெரியும்?
◻ கிறிஸ்துவின் வந்திருத்தல் எப்போது ஆரம்பமாகிறது, இது நமக்கு எப்படித் தெரியும்?
◻ மேசியா எத்தகைய ஒரு பரலோக அரசராக இருக்கிறார்?
◻ என்ன விதங்களில் கிறிஸ்துவின் ஆட்சி அதன் குடிமக்களைப் பாதிக்கிறது?
[பக்கம் 15-ன் படம்]
இயேசு திரும்பிவருவார் என்ற நம்பிக்கை அவருடைய உண்மையுள்ள அப்போஸ்தலர்களுக்கு அதிகத்தை அர்த்தப்படுத்தியது
[பக்கம் 17-ன் படம்]
பரலோகத்திலிருந்து ஆட்சி செய்கிறவராக இயேசு பூகோள அளவில் அற்புதங்களை நடப்பிப்பார்
[படத்திற்கான நன்றி]
Earth: Based on NASA photo