மத்தேயு எழுதியது
8 மலையிலிருந்து அவர் கீழே இறங்கி வந்ததும், மக்கள் கூட்டம் கூட்டமாக அவர் பின்னால் போனார்கள். 2 அப்போது, தொழுநோயாளி ஒருவன் வந்து அவர் முன்னால் தலைவணங்கி, “ஐயா, உங்களுக்கு விருப்பம் இருந்தால், என்னைச் சுத்தமாக்க முடியும்”+ என்று சொன்னான். 3 அப்போது, அவர் தன்னுடைய கையை நீட்டி அவனைத் தொட்டு, “எனக்கு விருப்பம் இருக்கிறது, நீ சுத்தமாகு”+ என்று சொன்னார். உடனே தொழுநோய் நீங்கி அவன் சுத்தமானான்.+ 4 பின்பு இயேசு, “இதைப் பற்றி யாரிடமும் சொல்லாதே;+ ஆனால் குருமாரிடம் போய் உன்னைக் காட்டி,+ மோசே கட்டளையிட்ட காணிக்கையைக் கொடு;+ நீ குணமானதற்கு அத்தாட்சியாக அது அவர்களுக்கு இருக்கும்”+ என்று சொன்னார்.
5 அவர் கப்பர்நகூமுக்குள் போனபோது, படை அதிகாரி ஒருவர் அவரிடம் வந்து, 6 “ஐயா, என் வேலைக்காரன் பக்கவாதத்தால் ரொம்ப அவதிப்படுகிறான், வீட்டில் படுத்த படுக்கையாகக் கிடக்கிறான்” என்று சொல்லிக் கெஞ்சினார்.+ 7 அப்போது இயேசு, “நான் அங்கே வரும்போது அவனைக் குணப்படுத்துகிறேன்” என்று சொன்னார். 8 அதற்கு அந்தப் படை அதிகாரி, “ஐயா, நீங்கள் என் வீட்டுக்குள் அடியெடுத்து வைப்பதற்கு எனக்கு எந்தத் தகுதியும் இல்லை; அதனால், நீங்கள் ஒரு வார்த்தை சொல்லுங்கள், என் வேலைக்காரன் குணமாகிவிடுவான். 9 நான் அதிகாரம் உள்ளவர்களின் கீழ் வேலை செய்தாலும், என் அதிகாரத்துக்குக் கீழும் படைவீரர்கள் இருக்கிறார்கள்; நான் அவர்களில் ஒருவனிடம் ‘போ!’ என்றால் போகிறான், இன்னொருவனிடம் ‘வா!’ என்றால் வருகிறான்; என் அடிமையிடம் ‘இதைச் செய்!’ என்றால் செய்கிறான்” என்றார். 10 அதைக் கேட்டு இயேசு ஆச்சரியப்பட்டு, தன் பின்னால் வந்தவர்களிடம், “உண்மையிலேயே உங்களுக்குச் சொல்கிறேன், இஸ்ரவேலர்களில் ஒருவரிடம்கூட இப்பேர்ப்பட்ட விசுவாசத்தை நான் பார்த்ததில்லை.+ 11 நான் உங்களுக்குச் சொல்கிறேன், கிழக்கிலிருந்தும் மேற்கிலிருந்தும் நிறைய பேர் வந்து, பரலோக அரசாங்கத்தில் ஆபிரகாமுடனும் ஈசாக்குடனும் யாக்கோபுடனும் விருந்து சாப்பிட உட்காருவார்கள்.+ 12 பரலோக அரசாங்கத்தின் பிள்ளைகளோ வெளியே இருட்டில் தள்ளப்படுவார்கள். அங்கே அவர்கள் அழுது அங்கலாய்ப்பார்கள்”+ என்று சொன்னார். 13 பின்பு, இயேசு அந்தப் படை அதிகாரியிடம், “நீ போகலாம். உன் விசுவாசத்தின்படியே நடக்கட்டும்”+ என்று சொன்னார். அந்த நொடியே அவருடைய வேலைக்காரன் குணமானான்.+
14 பேதுருவின் வீட்டுக்கு இயேசு வந்தபோது, பேதுருவின் மாமியார்+ காய்ச்சலில் படுத்திருந்ததைப் பார்த்தார்.+ 15 அவர் அவளுடைய கையைத் தொட்டவுடன்+ காய்ச்சல் போய்விட்டது, அவள் எழுந்து அவருக்குப் பணிவிடை செய்ய ஆரம்பித்தாள். 16 சாயங்கால நேரமானபோது, பேய் பிடித்த நிறைய பேரை மக்கள் அவரிடம் கொண்டுவந்தார்கள்; அவர் ஒரு வார்த்தை சொன்னதும், அந்தப் பேய்கள்* அவர்களைவிட்டு ஓடிவிட்டன; எல்லா நோயாளிகளையும் அவர் குணமாக்கினார். 17 “அவர் நம்முடைய வியாதிகளைத் தாங்கிக்கொண்டு, நம் நோய்களைச் சுமந்தார்”+ என்று ஏசாயா தீர்க்கதரிசி மூலம் சொல்லப்பட்டது நிறைவேறும்படியே அப்படி நடந்தது.
18 மக்கள் கூட்டம் தன்னைச் சூழ்ந்துகொண்டதை இயேசு பார்த்தபோது, படகை அக்கரைக்கு+ ஓட்டச்சொல்லி சீஷர்களுக்குக் கட்டளை கொடுத்தார். 19 அப்போது, வேத அறிஞன் ஒருவன் அவரிடம் வந்து, “போதகரே, நீங்கள் எங்கே போனாலும் நான் உங்கள் பின்னால் வருவேன்”+ என்று சொன்னான். 20 அதற்கு இயேசு அவனிடம், “குள்ளநரிகளுக்குக் குழிகளும் பறவைகளுக்குக் கூடுகளும் இருக்கின்றன, ஆனால் மனிதகுமாரனுக்குத் தலைசாய்க்க இடமில்லை”+ என்று சொன்னார். 21 பின்பு மற்றொரு சீஷன் அவரிடம், “எஜமானே, முதலில் நான் போய் என்னுடைய அப்பாவை அடக்கம் செய்துவிட்டு வருகிறேன், எனக்கு அனுமதி கொடுங்கள்”+ என்று கேட்டான். 22 அதற்கு இயேசு அவனிடம், “இறந்தவர்கள் இறந்தவர்களை அடக்கம் செய்யட்டும்; நீ என்னைத் தொடர்ந்து பின்பற்றி வா”+ என்று சொன்னார்.
23 பின்பு, அவர் ஒரு படகில் ஏறியபோது சீஷர்களும் அவரோடு ஏறினார்கள்.+ 24 அப்போது, கடலில் பயங்கர புயல்காற்று வீசியது; பெரிய அலைகள் அடித்ததால் படகு தண்ணீரால் நிரம்ப ஆரம்பித்தது; அவரோ தூங்கிக்கொண்டிருந்தார்.+ 25 சீஷர்கள் வந்து அவரை எழுப்பி, “எஜமானே, காப்பாற்றுங்கள், நாம் சாகப்போகிறோம்!” என்று சொன்னார்கள். 26 ஆனால் அவர், “விசுவாசத்தில் குறைவுபடுகிறவர்களே, ஏன் இப்படிப் பயப்படுகிறீர்கள்?”+ என்று கேட்டார். பின்பு எழுந்து, காற்றையும் கடலையும் அதட்டினார்; அப்போது, மிகுந்த அமைதி உண்டானது.+ 27 அவர்கள் பிரமித்துப்போய், “இவர் உண்மையில் யார்? காற்றும் கடலும்கூட இவருக்கு அடங்கிவிடுகின்றனவே!” என்று சொன்னார்கள்.
28 அக்கரையில் இருக்கிற கதரேனர்* பகுதிக்கு அவர் வந்தபோது, பேய் பிடித்த இரண்டு பேர் கல்லறைகளின் நடுவிலிருந்து* அவருக்கு எதிரே வந்தார்கள்;+ அவர்கள் பயங்கர வெறித்தனமாக நடந்துகொண்டதால், அந்த வழியில் போவதற்கு யாருக்குமே தைரியம் வரவில்லை. 29 அவர்கள் இரண்டு பேரும் அவரைப் பார்த்து, “கடவுளுடைய மகனே, உங்களுக்கும் எங்களுக்கும் என்ன சம்பந்தம்?+ நேரம் வருவதற்கு முன்பே எங்களைப் பாடுபடுத்த வந்துவிட்டீர்களா?”+ என்று கத்தினார்கள். 30 அங்கிருந்து வெகு தூரத்தில் ஏராளமான பன்றிகள் கூட்டமாக மேய்ந்துகொண்டிருந்தன.+ 31 அதனால் அந்தப் பேய்கள் அவரிடம், “நீங்கள் எங்களை விரட்ட நினைத்தால், அந்தப் பன்றிகளுக்குள் எங்களை அனுப்பிவிடுங்கள்”+ என்று கெஞ்ச ஆரம்பித்தன. 32 அப்போது அவர், “போங்கள்!” என்று சொன்னார். உடனே அவை வெளியேறி அந்தப் பன்றிகளுக்குள் புகுந்துகொண்டன; அப்போது, அந்தப் பன்றிகளெல்லாம் ஓட்டமாக ஓடி செங்குத்தான பாறையிலிருந்து* கடலுக்குள் குதித்துச் செத்துப்போயின. 33 பன்றிகளை மேய்த்துக்கொண்டிருந்த ஆட்கள் நகரத்துக்குள் ஓடிப்போய், பேய் பிடித்த ஆட்களைப் பற்றியும் நடந்த எல்லா விஷயங்களைப் பற்றியும் சொன்னார்கள். 34 அப்போது, நகரத்திலிருந்த எல்லாரும் இயேசுவைச் சந்திக்கப் புறப்பட்டார்கள்; அவரைச் சந்தித்ததும், தங்கள் பகுதியைவிட்டுப் போகச்சொல்லி அவரிடம் கெஞ்சிக் கேட்டார்கள்.+