சாத்தானுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் ஓடிப்போவான்!
“தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான்.”—யாக்கோபு 4:7.
1, 2. (அ) ஏசாயா 14-ம் அதிகாரத்தில் உள்ள பதிவு பிசாசின் என்ன குணத்தை விவரிக்கிறது? (ஆ) என்ன கேள்விகளை நாம் சிந்திப்போம்?
அகந்தையின் உருவே பிசாசு. அவனுடைய செருக்கு, கடவுளுடைய தீர்க்கதரிசியான ஏசாயாவின் பதிவில் விவரிக்கப்பட்டிருப்பதைக் காணலாம். பாபிலோன் உலக வல்லரசாக உருவெடுப்பதற்கு ஒரு நூற்றாண்டுக்கும் முன்னரே, ‘பாபிலோன் ராஜாவுக்கு’ எதிராக யெகோவாவின் ஜனங்கள் பின்வருமாறு உரைத்ததாக அந்தப் பதிவில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது: ‘நான் வானத்துக்கு ஏறுவேன், தேவனுடைய நட்சத்திரங்களுக்கு [அதாவது, தாவீதின் அரச பரம்பரையில் வந்த ராஜாக்களுக்கு] மேலாக என் சிங்காசனத்தை உயர்த்துவேன்; . . . உன்னதமானவருக்கு ஒப்பாவேன் என்று நீ உன் இருதயத்தில் சொன்னாயே.’ (ஏசாயா 14:3, 4, 12-15; எண்ணாகமம் 24:17) ‘பாபிலோன் ராஜாவின்’ செருக்கு ‘இப்பிரபஞ்சத்தின் தேவனான’ சாத்தானுடைய மனப்பான்மையைப் படம்பிடித்துக் காட்டியது. (2 கொரிந்தியர் 4:4) பாபிலோனின் அரச பரம்பரை வெட்கக்கேடான முடிவை சந்தித்ததைப் போல், சாத்தானுடைய செருக்கும் பேரழிவில் முடிவடையும்.
2 என்றாலும், பிசாசு இருக்கும்வரை, இதுபோன்ற கேள்விகளுக்குப் பதில்களை நாம் தெரிந்துகொள்ள விரும்பலாம்: சாத்தானுக்கு நாம் அஞ்சி நடுங்க வேண்டுமா? அவன் ஏன் கிறிஸ்தவர்கள்மீது துன்புறுத்தலை தூண்டிவிடுகிறான்? பிசாசு நம்மை மோசம்போக்காதபடி எப்படிப் பார்த்துக்கொள்ளலாம்?
பிசாசுக்கு நாம் அஞ்சி நடுங்க வேண்டுமா?
3, 4. அபிஷேகம் பண்ணப்பட்ட கிறிஸ்தவர்களும் அவர்களுடைய தோழர்களும் ஏன் பிசாசுக்கு அஞ்சுவதில்லை?
3 இயேசு கிறிஸ்து சொன்ன பின்வரும் வார்த்தைகள் அபிஷேகம் பண்ணப்பட்ட கிறிஸ்தவர்களை மிகவும் பலப்படுத்துவதாக இருக்கின்றன: “நீ படப்போகிற பாடுகளைக் குறித்து எவ்வளவும் பயப்படாதே; இதோ, நீங்கள் சோதிக்கப்படும் பொருட்டாகப் பிசாசானவன் உங்களில் சிலரைக் காவலில் போடுவான்; பத்து நாள் உபத்திரவப்படுவீர்கள். ஆகிலும் நீ மரண பரியந்தம் உண்மையாயிரு, அப்பொழுது ஜீவ கிரீடத்தை உனக்குத் தருவேன்.” (வெளிப்படுத்துதல் 2:10) அபிஷேகம் பண்ணப்பட்டவர்களும் பூமிக்குரிய நம்பிக்கையுடைய அவர்களது தோழர்களும் பிசாசுக்கு அஞ்சுவதில்லை. ஆனால் அப்படிப்பட்ட தைரியம் அவர்களுடைய பிறவி குணம் அல்ல. தேவ பயமும் ‘அவருடைய செட்டைகளின் நிழலிலே அடைக்கலம் புகுவதுமே’ இதற்குக் காரணமாகும்.—சங்கீதம் 34:9; 36:7.
4 இயேசு கிறிஸ்துவின் அஞ்சா நெஞ்சம் கொண்ட ஆரம்பகால சீஷர்கள் தாங்கள் பட்ட பாடுகளின் மத்தியிலும் மரணம்வரை உண்மையுடன் நிலைத்திருந்தார்கள். பிசாசாகிய சாத்தான் கொண்டுவரக்கூடிய எதைக் குறித்தும் அவர்கள் பயப்படவில்லை, ஏனென்றால் தமக்கு உண்மைப் பற்றுறுதி காட்டுபவர்களை யெகோவா ஒருபோதும் கைவிட மாட்டார் என்பதை அறிந்திருந்தார்கள். அது போலவே, இன்று தீவிர துன்புறுத்தல் வந்தாலும்கூட, அபிஷேகம் பண்ணப்பட்ட கிறிஸ்தவர்களும் ஒப்புக்கொடுக்கப்பட்ட அவர்களது தோழர்களும் கடவுளுக்குக் காட்டும் உத்தமத்தை முறிக்காதிருப்பதற்கு உறுதிபூண்டிருக்கிறார்கள். என்றாலும், பிசாசு மரணத்தையும் உண்டாக்கக்கூடும் என அப்போஸ்தலன் பவுல் சுட்டிக்காட்டினார். அது நம்மை அஞ்சி நடுங்கச் செய்ய வேண்டாமா?
5. எபிரெயர் 2:14, 15-லிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?
5 ‘மரணத்துக்கு அதிகாரியாகிய [‘மரணத்துக்கு வழிவகுப்பவனாகிய,’ NW] பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழிக்கும்படிக்கும், ஜீவகாலமெல்லாம் மரண பயத்தினாலே அடிமைத்தனத்திற்குள்ளானவர்கள் யாவரையும் விடுதலை பண்ணும்படிக்கும்” ‘இயேசு மாம்சமும் இரத்தமுமுடைய மனிதரானார்’ என்று பவுல் கூறினார். (எபிரெயர் 2:14, 15) சாத்தான் ‘மரணத்துக்கு வழிவகுப்பவனாக’ இருப்பதால், யூதாஸ்காரியோத் மீது அவன் ஆதிக்கம் செலுத்தினான், இயேசுவைக் கொலை செய்ய யூத தலைவர்களையும் ரோமர்களையும் அவன் பயன்படுத்தினான். (லூக்கா 22:3; யோவான் 13:26, 27) என்றாலும், தமது பலிக்குரிய மரணத்தின் மூலம் சாத்தானுடைய கட்டுப்பாட்டிலிருந்து பாவமுள்ள மனிதவர்க்கத்தை விடுவித்து, அவர்கள் நித்திய ஜீவனைப் பெற வழிவகுத்தார்.—யோவான் 3:16.
6, 7. மரணத்தை ஏற்படுத்த சாத்தானுக்கு எந்தளவு வல்லமை இருக்கிறது?
6 மரணத்தை உண்டாக்க பிசாசுக்கு எந்தளவு வல்லமை இருக்கிறது? அவன் துன்மார்க்கத்தில் இறங்கியது முதல், அவனுடைய பொய்களும் வழிநடத்துதல்களும் மனிதர்களுக்கு மரணத்தை விளைவித்திருக்கின்றன. எப்படியெனில், அவனுடைய பேச்சைக்கேட்டு ஆதாம் பாவம் செய்து மனித குடும்பத்திற்கு பாவத்தையும் மரணத்தையும் கடத்திவிட்டான். (ரோமர் 5:12) அதோடு, பூமியிலுள்ள சாத்தானுடைய ஊழியர்கள் யெகோவாவின் வணக்கத்தாரை துன்புறுத்தியிருக்கிறார்கள், இயேசு கிறிஸ்துவின் விஷயத்தில் நடந்ததுபோல், சிலசமயங்களில் கொலையே செய்திருக்கிறார்கள்.
7 என்றாலும், பிசாசு யாரை வேண்டுமென்றாலும் கொலை செய்ய முடியுமென நாம் நினைக்கக் கூடாது. தமக்குச் சொந்தமானவர்களைக் கடவுள் பாதுகாக்கிறார், பூமியிலுள்ள உண்மை வணக்கத்தார் அனைவரையும் துடைத்தழிக்க ஒருபோதும் சாத்தானை அவர் அனுமதிக்க மாட்டார். (ரோமர் 14:8) உண்மைதான், தமது ஜனங்கள் எல்லாருக்கும் துன்புறுத்தலை யெகோவா அனுமதிக்கிறார், சிலசமயங்களில் சாத்தான் அவர்களை கொலை செய்யவும் அனுமதிக்கிறார். என்றாலும், கடவுளுடைய ‘ஞாபக புஸ்தகத்தில்’ உள்ளவர்களுக்கு உயிர்த்தெழுதல் எனும் மகத்தான நம்பிக்கையை பைபிள் தருகிறது—இப்படி மீண்டும் உயிருக்குக் கொண்டுவருவதை பிசாசினால் தடுக்கவே முடியாது!—மல்கியா 3:16; யோவான் 5:28, 29; அப்போஸ்தலர் 24:15.
சாத்தான் ஏன் நம்மைத் துன்புறுத்துகிறான்?
8. கடவுளுடைய ஊழியர்கள்மீது பிசாசு ஏன் துன்புறுத்தலை கொண்டுவருகிறான்?
8 நாம் கடவுளுக்கு உத்தம ஊழியர்களாய் இருப்பதுதானே, பிசாசு நம்மைத் துன்புறுத்துவதற்கான அடிப்படை காரணமாக இருக்கிறது. நம் விசுவாசத்தை மறுதலிக்கச் செய்வதே அவனுடைய நோக்கம். பரலோக பிதாவுடன் நமக்கு அருமையான உறவு இருக்கிறது, அதைக் குலைத்துப்போட சாத்தான் விரும்புகிறான். இது நமக்கு ஆச்சரியமுண்டாக்க வேண்டியதில்லை. ஏனென்றால் அடையாள அர்த்தமுடைய தமது ‘ஸ்திரீக்கும்’ ‘சர்ப்பத்துக்கும்’ அவர்களுடைய ‘வித்துகளுக்கும்’ இடையே பகைமை இருக்கும் என்பதை ஏதேனில் யெகோவா முன்னறிவித்தார். (ஆதியாகமம் 3:14, 15) ‘பழைய பாம்பு’ என பிசாசை பைபிள் அடையாளம் காட்டுகிறது; அதுமட்டுமல்லாமல் அவனுக்கு நேரம் நெருங்கிவிட்டதால் பயங்கர கோபத்துடன் இருக்கிறான் என்பதையும் வெளிப்படுத்துகிறது. (வெளிப்படுத்துதல் 12:9, 12) இந்த இரண்டு ‘வித்துகளுக்கும்’ இடையே தொடர்ந்து பகைமை இருப்பதால், யெகோவாவுக்கு உண்மையுடன் சேவை செய்கிறவர்கள் துன்புறுத்தலை எதிர்பார்க்கலாம். (2 தீமோத்தேயு 3:12) சாத்தான் இவ்வாறு துன்புறுத்துவதற்குரிய உண்மையான காரணத்தை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா?
9, 10. பிசாசு எழுப்பிய விவாதம் என்ன, அது எப்படி மனிதருடைய நடத்தையுடன் சம்பந்தப்பட்டிருக்கிறது?
9 சர்வலோக அரசுரிமையைப் பற்றிய விவாதத்தை பிசாசு கிளப்பியிருக்கிறான். அதோடு, படைப்பாளருக்கு மனிதர் காட்டும் உத்தமத்தைக் குறித்தும் கேள்வி எழுப்பியிருக்கிறான். உத்தமரான யோபுவின் மீது சாத்தான் துன்புறுத்தலைக் கொண்டுவந்தான். ஏன்? யெகோவாவிடம் யோபு காட்டிய உத்தமத்தை முறிப்பதற்காகவே. யோபுவின் மனைவியும் ‘புண்படுத்துகிற’ அவருடைய மூன்று ‘தேற்றரவாளர்களும்’ அந்தச் சமயத்தில் பிசாசின் நோக்கத்திற்கே துணைபோனார்கள். யோபு புத்தகத்தில் காட்டப்பட்டுள்ளபடி, கடவுளை எதிர்த்து பிசாசு சவாலிட்டான்; எல்லாரையும் சோதிக்க தனக்கு அனுமதி கொடுக்கப்பட்டால், யாருமே கடவுளுக்கு உண்மையுள்ளவராக இருக்க மாட்டார் என வாதாடினான். ஆனால் யோபுவோ உத்தமத்தில் உறுதியாக இருந்து, சாத்தானைப் பொய்யனாக நிரூபித்தார். (யோபு 1:8–2:9; 16:2, பொது மொழிபெயர்ப்பு; 27:5; 31:6) யெகோவாவின் சாட்சிகளுடைய உத்தமத்தை முறித்து தன்னுடைய சவாலை உண்மையென நிரூபிக்க பிசாசு இன்று அவர்களைத் துன்புறுத்துகிறான்.
10 கடவுளிடம் நாம் காண்பிக்கும் உத்தமத்தை எப்படியாவது முறிக்க விரும்புவதால் பிசாசு நம்மீது துன்புறுத்தலைக் கொண்டுவருகிறான் என்பதை அறிந்திருப்பது நாம் தைரியமாகவும் உறுதியாகவும் இருக்க உதவும். (உபாகமம் 31:6) நம்முடைய கடவுள் சர்வலோக பேரரசர், உத்தமத்தைக் காத்துக்கொள்ள அவர் நமக்கு உதவி செய்வார். பிரதான நிந்தனைக்காரனான பிசாசாகிய சாத்தானுக்கு யெகோவா உத்தரவு கொடுக்கத்தக்கதாக நாம் உத்தமத்தில் உறுதியாக இருந்து அவரது இருதயத்தை மகிழ்விக்க எப்பொழுதும் முயல்வோமாக.—நீதிமொழிகள் 27:11.
‘பொல்லாங்கனிடமிருந்து எங்களை விடுவிப்பீராக’
11. ‘எங்களை சோதனைக்கு உட்படுத்தாமல், பொல்லாங்கனிடமிருந்து விடுவிப்பீராக’ என்று ஜெபிப்பதன் அர்த்தமென்ன?
11 உத்தமராக இருப்பது சாதாரண விஷயமல்ல; இதற்கு ஊக்கமாய் ஜெபிக்க வேண்டும். முக்கியமாக, மாதிரி ஜெபத்திலுள்ள வார்த்தைகள் இதற்கு உதவியாக இருக்கின்றன. அதில் இயேசு இவ்வாறு கூறினார்: ‘எங்களை சோதனைக்கு உட்படுத்தாமல், பொல்லாங்கனிடமிருந்து விடுவிப்பீராக.’ (மத்தேயு 6:13, NW) பாவம் செய்ய யெகோவா நம்மைத் தூண்டுவதில்லை. (யாக்கோபு 1:13) என்றாலும், சில காரியங்களைக் கடவுளே செய்வது போல் அல்லது உண்டாக்குவது போல் வேதவசனங்கள் சிலசமயங்களில் சொல்லும்போது, உண்மையில் அவற்றை அவர் அனுமதிப்பதையே அர்த்தப்படுத்துகின்றன. (ரூத் 1:20, 21) அப்படியானால், இயேசு கூறியபடி ஜெபிக்கும்போது, நம்மை சோதனைக்கு இணங்கிவிட அனுமதிக்காதவாறு யெகோவாவிடம் வேண்டுகிறோம். உண்மையில் அவர் நமக்குச் செவிகொடுக்கிறார், ஏனென்றால் “தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார்; உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார்” என்ற உறுதி நமக்கு இருக்கிறது.—1 கொரிந்தியர் 10:13.
12. ‘பொல்லாங்கனிடமிருந்து எங்களை விடுவிப்பீராக’ என ஏன் ஜெபிக்கிறோம்?
12 சோதனைக்கு உட்படுவதைப் பற்றி மாதிரி ஜெபத்தில் குறிப்பிட்ட பிறகு, கிரேக்க வாசகத்தின்படி, பொருத்தமாகவே இயேசு இவ்வாறு கூறினார்: ‘பொல்லாங்கனிடமிருந்து எங்களை விடுவிப்பீராக.’ சில பைபிள் மொழிபெயர்ப்புகள் இவ்வாறு வாசிக்கின்றன: “தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும்” (தமிழ் யூனியன் மொழிபெயர்ப்பு) அல்லது “தீமையிலிருந்து எங்களைக் காப்பாற்றும்.” (காண்டெம்ப்ரரி இங்லிஷ் வர்ஷன்) என்றாலும், ‘. . . இரட்சித்துக்கொள்ளும்’ என்ற சொற்றொடர் முக்கியமாக ஒரு நபரிடமிருந்து அல்லது நபர்களிடமிருந்து இரட்சிக்கப்படுவதைக் குறிக்கவே பைபிளில் பயன்படுத்தப்பட்டுள்ளது; மேலும் பிசாசை “சோதனைக்காரன்” என்று ஒரு நபராக மத்தேயு சுவிசேஷம் தெரிவிக்கிறது. (மத்தேயு 4:3, 11) ஆகவே, “பொல்லாங்கனிடமிருந்து,” அதாவது பிசாசான சாத்தானிடமிருந்து விடுவிக்கும்படி ஜெபிப்பது முக்கியம். கடவுளுக்கு விரோதமாக பாவம் செய்ய நம்மைத் தூண்ட அவன் சூழ்ச்சி செய்கிறான். (1 தெசலோனிக்கேயர் 3:5) ‘பொல்லாங்கனிடமிருந்து எங்களை விடுவிப்பீராக’ என்று ஜெபிக்கும்போது, பிசாசு நம்மை மேற்கொள்ளாதவாறு நமது பரம பிதா நம்மை வழிநடத்தும்படியும் நமக்கு உதவி செய்யும்படியும் கேட்கிறோம்.
உங்களைப் பிசாசானவன் மேற்கொள்ள அனுமதித்துவிடாதீர்கள்
13, 14. முன்பு ஒழுக்கயீனமாய் நடந்துகொண்ட ஒருவனை நடத்திய விதத்தை ஏன் கொரிந்திய கிறிஸ்தவர்கள் மாற்ற வேண்டியிருந்தது?
13 ஒருவரையொருவர் மன்னிக்கும்படி கொரிந்துவிலிருந்த கிறிஸ்தவர்களுக்கு பவுல் அறிவுறுத்தியபோது, இவ்வாறு எழுதினார்: “எவனுக்கு நீங்கள் மன்னிக்கிறீர்களோ, அவனுக்கு நானும் மன்னிக்கிறேன்; மேலும் எதை நான் மன்னித்திருக்கிறேனோ, அதை உங்கள் நிமித்தம் கிறிஸ்துவினுடைய சந்நிதானத்திலே மன்னித்திருக்கிறேன். சாத்தானாலே நாம் மோசம்போகாதபடிக்கு அப்படிச் செய்தேன்; அவனுடைய தந்திரங்கள் நமக்குத் தெரியாதவைகள் அல்லவே.” (2 கொரிந்தியர் 2:10, 11) பல்வேறு வழிகளில் பிசாசு நம்மை மோசம்போக்கலாம், ஆனால் மேற்குறிப்பிட்டவாறு பவுல் ஏன் சொன்னார்?
14 கொரிந்தியர்கள் ஒழுக்கயீனமான ஒருவனை சபையில் தொடர்ந்திருக்க அனுமதித்ததால் அவர்களை பவுல் கண்டித்திருந்தார். அவ்வாறு அவர்கள் அனுமதித்தது சாத்தானுக்கு சந்தோஷம் அளித்திருக்க வேண்டும், ஏனென்றால் ‘புறதேசத்தாருக்குள்ளும் சொல்லப்படாத விபசாரத்தை’ கண்டும் காணாமல் விட்டுவிட்டதற்காக சபைக்கு அவப்பெயர் ஏற்பட்டது. கடைசியில், தவறிழைத்தவன் சபைநீக்கம் செய்யப்பட்டான். (1 கொரிந்தியர் 5:1-5, 11-13) அந்த மனிதன் பிற்பாடு மனந்திரும்பினான். ஆனால் அவனை மன்னித்து மறுபடியும் சேர்த்துக்கொள்ள கொரிந்தியர் மறுத்துவிட்டால், மற்றொரு வழியில் அவர்களை சாத்தான் மேற்கொண்டுவிடுவான். எப்படி? எப்படியென்றால் சாத்தானைப் போலவே அவர்கள் கொடூரமானவர்களாகவும் இரக்கமற்றவர்களாகவும் இருப்பார்கள். மனந்திரும்பிய மனிதன் ‘அதிக துக்கத்தில் அமிழ்ந்து,’ கடவுளுடைய வணக்கத்தை முற்றிலும் கைவிட்டுவிட்டால், இரக்கமுள்ள கடவுளான யெகோவாவுக்கு முன் மூப்பர்கள் ஓரளவு உத்தரவாதம் ஏற்க வேண்டியிருக்கும். (2 கொரிந்தியர் 2:7; யாக்கோபு 2:13; 3:1) ஆனால், சாத்தானைப் பின்பற்றி முரடர்களாகவும் கொடூரமானவர்களாகவும் இரக்கமற்றவர்களாகவும் இருக்க உண்மை கிறிஸ்தவர் எவருமே விரும்ப மாட்டார்கள்.
கடவுளுடைய சர்வாயுதவர்க்கத்தால் பாதுகாக்கப்படுதல்
15. நாம் தொடுக்கும் போர் எது, நாம் எப்படி வெற்றி பெற முடியும்?
15 பிசாசிடமிருந்து நாம் காப்பாற்றபட வேண்டுமாகில், பொல்லாத ஆவி சேனைகளுக்கு எதிராக ஆன்மீக போர் தொடுக்க வேண்டும். “தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தை” தரித்துக்கொண்டால்தான் வலிமைமிக்க இந்த எதிரிகளை நாம் வெல்ல முடியும். (எபேசியர் 6:11-18) நாம் அணிந்துகொள்ளும் இந்த சர்வாயுதவர்க்கத்தில் ‘நீதியென்னும் மார்க்கவசமும்’ ஒன்றாகும். (எபேசியர் 6:14) பூர்வ இஸ்ரவேலைச் சேர்ந்த அரசனான சவுல் கடவுளுக்குக் கீழ்ப்படியவில்லை, அதனால் பரிசுத்த ஆவியை இழந்தான். (1 சாமுவேல் 15:22, 23) ஆனால் நாம் நீதியைக் கடைப்பிடித்து எப்பொழுதும் ஆவிக்குரிய சர்வாயுதவர்க்கத்தைத் தரித்திருந்தால், கடவுளுடைய பரிசுத்த ஆவியைப் பெறுவோம், சாத்தானிடமிருந்தும் அவனுடைய பொல்லாத கூட்டாளிகளான பேய்களிடமிருந்தும் பாதுகாப்பையும் பெறுவோம்.—நீதிமொழிகள் 18:10.
16. பொல்லாத ஆவி சேனைகளிடமிருந்து நம்மை எவ்வாறு தொடர்ந்து பாதுகாத்துக்கொள்ள முடியும்?
16 பொல்லாத ஆவி சேனைகளிடமிருந்து நம்மைத் தொடர்ந்து பாதுகாத்துக்கொள்வதற்கு, மற்ற காரியங்களோடு, கடவுளுடைய வார்த்தையைத் தவறாமல் வாசிப்பதும் ஆராய்வதும் அவசியம்; உண்மையுள்ள விசாரணைக்காரனிடமிருந்து’ வரும் பிரசுரங்களையும் நன்கு பயன்படுத்த வேண்டும். (லூக்கா 12:42) இப்படிச் செய்யும்போது ஆரோக்கியமான ஆன்மீக காரியங்களால் நமது மனதை நிரப்புவோம்; இது பவுல் தரும் பின்வரும் அறிவுரைக்கு இசைவாக இருக்கிறது: “சகோதரரே, உண்மையுள்ளவைகளெவைகளோ, ஒழுக்கமுள்ளவைகளெவைகளோ, நீதியுள்ளவைகளெவைகளோ, கற்புள்ளவைகளெவைகளோ, அன்புள்ளவைகளெவைகளோ, நற்கீர்த்தியுள்ளவைகளெவைகளோ, புண்ணியம் எதுவோ, புகழ் எதுவோ அவைகளையே சிந்தித்துக் கொண்டிருங்கள்.”—பிலிப்பியர் 4:8.
17. நற்செய்தியைத் திறம்பட அறிவிக்க எது நமக்கு உதவும்?
17 ‘சமாதானத்தின் சுவிசேஷத்திற்குரிய ஆயத்தம் என்னும் பாதரட்சையைக் கால்களிலே தொடுத்திருப்பதற்கு’ யெகோவா நமக்கு உதவுகிறார். (எபேசியர் 6:15) கிறிஸ்தவ கூட்டங்களில் தவறாமல் கலந்துகொள்வது கடவுளுடைய ராஜ்ய நற்செய்தியை அறிவிக்க நம்மைத் தயாராக்குகிறது. கடவுளைப் பற்றிய சத்தியத்தைப் பிறருக்குக் கற்றுக்கொடுத்து அவர்கள் ஆன்மீக விடுதலையை அனுபவிக்க உதவி செய்வது எப்பேர்ப்பட்ட மகிழ்ச்சி! (யோவான் 8:32) பொய்ப் போதனைகளிலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்வதற்கும் ‘உறுதியாக வேரூன்றியிருப்பவற்றை அகற்றுவதற்கும்’ ‘தேவவசனமாகிய ஆவியின் பட்டயம்’ மிகவும் இன்றியமையாதது. (எபேசியர் 6:17; 2 கொரிந்தியர் 10:4, 5, NW) கடவுளுடைய வார்த்தையான பைபிளைத் திறம்பட பயன்படுத்துவது சத்தியத்தைக் கற்பிக்க உதவுகிறது, பிசாசின் தந்திரங்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது.
18. நாம் எவ்வாறு ‘பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்து உறுதியுடன் நிற்க’ முடியும்?
18 பின்வருமாறு சொல்லி, ஆவிக்குரிய சர்வாயுதவர்க்கத்தைப் பற்றிய தனது விவாதத்தை பவுல் ஆரம்பித்தார்: “கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பலப்படுங்கள். நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்து நிற்கத் [“பிசாசின் தந்திரங்களை எதிர்த்து உறுதியுடன் நிற்கத்,” NW] திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள்.” (எபேசியர் 6:10, 11) “உறுதியுடன் நிற்க” என மொழிபெயர்க்கப்பட்டுள்ள கிரேக்க வார்த்தை ஒரு போர்வீரன் தனது இடத்தில் தரித்திருப்பதைக் குறிக்கிறது. நம் ஒற்றுமையைக் குலைப்பதற்கும், நம் போதனைகளைக் கெடுப்பதற்கும், கடவுள் மீதுள்ள நம் உத்தமத்தை முறிப்பதற்கும் பல்வேறு தந்திரமான வழிகளை சாத்தான் பயன்படுத்துகிறபோதிலும், ஆன்மீக போரில் நாம் உறுதியாக நிலைத்திருக்கிறோம். ஆகவே பிசாசின் தாக்குதல்கள் இதுவரை வெற்றி பெறவில்லை, சொல்லப்போனால் என்றுமே வெற்றிபெறாது!a
பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் ஓடிப்போவான்
19. பிசாசை எதிர்த்து நிற்க ஒரு வழி என்ன?
19 பிசாசுக்கும் அவனுடைய கட்டுப்பாட்டிலுள்ள பொல்லாத ஆவி சேனைகளுக்கும் எதிரான ஆன்மீக போரில் நாம் வெற்றிபெற முடியும். சாத்தானைக் குறித்து அஞ்சி நடுங்க வேண்டியதில்லை, ஏனென்றால் “தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான்” என்று சீஷனான யாக்கோபு எழுதினார். (யாக்கோபு 4:7) சாத்தானையும் அவனுக்குத் துணைபுரியும் பொல்லாத ஆவி சிருஷ்டிகளையும் எதிர்த்து உறுதியான நடவடிக்கை எடுப்பதற்கு ஒரு வழி, மாயமந்திர பழக்கங்களில் ஈடுபடாதிருப்பதும் அவற்றில் ஈடுபடுகிறவர்களுடன் கூட்டுறவு கொள்ளாதிருப்பதுமே. சகுனம் பார்ப்பதையும், சோதிடம், குறிசொல்லுதல், ஆவியுலகத் தொடர்பு போன்றவற்றில் ஈடுபடுவதையும் யெகோவாவின் ஊழியர்கள் அறவே தவிர்க்க வேண்டுமென பைபிள் தெளிவாகக் கூறுகிறது. ஆன்மீக ரீதியில் சுறுசுறுப்பாகவும் பலமாகவும் இருந்தால், மற்றவர்கள் நமக்கு செய்வினை வைத்துவிடுவார்கள் அல்லது சூனியம் வைத்துவிடுவார்கள் என பயப்பட வேண்டியதில்லை.—எண்ணாகமம் 23:23; உபாகமம் 18:10-12; ஏசாயா 47:12-15; அப்போஸ்தலர் 19:18-20.
20. நாம் எவ்வாறு பிசாசை எதிர்த்து நிற்க முடியும்?
20 பைபிள் தராதரங்களையும் சத்தியங்களையும் உறுதியாகப் பின்பற்றுவதன் மூலமும் பிசாசுக்கு எதிராக உறுதியுடன் நிலைநிற்கை எடுப்பதன் மூலமும் நாம் ‘அவனை எதிர்த்து நிற்கிறோம்.’ சாத்தான் இவ்வுலகத்தின் தேவனாக இருப்பதால் உலகம் அவனுடைய வழியில் செல்கிறது. (2 கொரிந்தியர் 4:4) ஆகவே, தற்பெருமை, சுயநலம், ஒழுக்கயீனம், வன்முறை, பொருளாசை போன்ற இந்த உலகத்தின் குணங்களை ஒதுக்கித்தள்ள வேண்டும். வனாந்தரத்தில் இயேசு சோதிக்கப்பட்ட சமயத்தில் வேதவசனங்களைப் பயன்படுத்தி பிசாசுக்குப் பதிலளித்தபோது அவரைவிட்டு ஓடிப்போனான் என்பதை நாம் அறிந்திருக்கிறோம். (மத்தேயு 4:4, 7, 10, 11) அதைப்போல், யெகோவாவுக்கு முழுமையாகக் கீழ்ப்படிந்து ஜெபத்தில் அவர்மீது சார்ந்திருந்தால், சாத்தான் தோல்வியடைந்து நம்மைவிட்டு “ஓடிப்போவான்.” (எபேசியர் 6:18) யெகோவா தேவனுடைய ஆதரவும் அவரது குமாரனுடைய ஆதரவும் இருந்தால், வேறெவருமே—ஏன், பிசாசும்கூட—நமக்கு நிரந்தர தீங்கிழைக்க முடியாது!—சங்கீதம் 91:9-11.
[அடிக்குறிப்பு]
a கடவுளுடைய சர்வாயுதவர்க்கத்தைப் பற்றிய கூடுதலான தகவலுக்கு, காவற்கோபுரம், ஆகஸ்ட் 15, 1992, பக்கங்கள் 21-3-ஐக் காண்க.
உங்கள் பதில் என்ன?
• பிசாசாகிய சாத்தானுக்கு நாம் அஞ்சி நடுங்க வேண்டுமா?
• கிறிஸ்தவர்கள்மீது சாத்தான் ஏன் துன்புறுத்தலைக் கொண்டுவருகிறான்?
• ‘பொல்லாங்கனிடமிருந்து’ பாதுகாக்கப்படுவதற்கு ஏன் நாம் ஜெபிக்கிறோம்?
• ஆன்மீக போரில் நாம் எவ்வாறு வெற்றிபெற முடியும்?
[பக்கம் 26-ன் படம்]
பயமின்றி கிறிஸ்துவைப் பின்பற்றிய ஆரம்பகால சீஷர்கள் மரணம்வரை உண்மையுடன் நிலைத்திருந்தனர்
[பக்கம் 27-ன் படம்]
யெகோவாவின் நினைவில் இருப்போர் உயிர்த்தெழுப்பப்படுவதை பிசாசு தடுக்க முடியாது
[பக்கம் 28-ன் படம்]
‘பொல்லாங்கனிடமிருந்து’ பாதுகாக்கப்படுவதற்கு நீங்கள் ஜெபிக்கிறீர்களா?
[பக்கம் 29-ன் படம்]
‘தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தை’ நீங்கள் தரித்திருக்கிறீர்களா?