வெளிச்சத்தில் நடப்பவர்களுக்கு மகிழ்ச்சியே
“யெகோவாவின் வெளிச்சத்திலே நடப்போம் வாருங்கள்.”—ஏசாயா 2:5, தி.மொ.
1, 2. (அ) வெளிச்சம் எந்தளவுக்கு முக்கியம்? (ஆ) உலகத்தை இருள் மூடும் என்ற எச்சரிக்கை ஏன் அவ்வளவு முக்கியமானது?
ஒளியின் ஊற்றுமூலமே யெகோவாதான். ‘பகலில் ஒளி வீசக் கதிரவனை ஏற்படுத்தியுள்ளவர்; இரவில் ஒளி கொடுக்க நிலாவையும் விண்மீன்களையும் நியமித்துள்ளவர்’ என பைபிள் அவரை அழைக்கிறது. (எரேமியா 31:35, பொ.மொ.; சங்கீதம் 8:3) அவரே நம்முடைய சூரியனை படைத்தவர். அந்த சூரியன், மிகப் பெரியதோர் அணுக்கரு உலையாகவே இருப்பதால் பேரளவான சக்தியை வெளியேற்றுகிறது. அந்த சக்தியில் கொஞ்சம் ஒளியாகவும் வெப்பமாகவும் வெளிப்படுகிறது. அதில் மிக சிறிதளவே சூரிய ஒளியாக பூமிக்கு கிடைக்கிறது. இதுவே உயிர் வாழ்வதற்கு போதுமானது. இந்த சூரிய ஒளி கிடைக்காவிட்டால் நாம் இங்கு இருக்கவே முடியாது. முழு பூமியும் உயிரினங்களே இல்லாத வெற்றுக் கோளமாகவே இருந்திருக்கும்.
2 இதை மனதில் கொண்டு, ஏசாயா தீர்க்கதரிசி விவரித்த சூழ்நிலையின் முக்கியத்துவத்தை நாம் புரிந்துகொள்ள முடியும். “இதோ, இருள் பூமியையும், காரிருள் ஜனங்களையும் மூடும்” என்பதாக அவர் சொன்னார். (ஏசாயா 60:2) இங்கு சொல்லப்படும் காரிருள், சொல்லர்த்தமான இருளை அர்த்தப்படுத்தவில்லை என்பது உண்மைதான். என்றோ ஒருநாள் சூரியனும் சந்திரனும் நட்சத்திரங்களும் ஒளிவீசாமல் போய்விடும் என்பதாக ஏசாயா சொல்லவில்லை. (சங்கீதம் 89:36, 37; 136:7-9) மாறாக, அவர் ஆவிக்குரிய இருளைப் பற்றி சொல்லிக் கொண்டிருந்தார். ஆவிக்குரிய இருளோ மரணத்திற்கு ஏதுவானது. நாளாக ஆக, நம்மால் வெளிச்சமின்றி உயிர் வாழ்வது முடியாத காரியம். அதைப் போலவே ஆவிக்குரிய வெளிச்சமின்றி உயிர் வாழ்வதும் முடியவே முடியாத காரியம்.—லூக்கா 1:78, 79.
3. ஏசாயாவின் வார்த்தைகளைக் கருத்தில் கொண்டு கிறிஸ்தவர்கள் என்ன செய்ய வேண்டும்?
3 இதைக் கருத்தில் கொண்டு, ஏசாயாவின் வார்த்தைகள் பூர்வ யூதாவின் மீது நிறைவேற்றம் அடைந்திருந்தாலும் நம் நாளில் மிகப் பெரிய நிறைவேற்றத்தைக் காண்கின்றன என்பதை கவனிப்பது அவசியம். ஆம், இன்று இந்த உலகத்தை ஆவிக்குரிய இருள் போர்வை போல மூடியிருக்கிறது. ஆகவே இத்தகைய ஆபத்தான நிலையில் ஆவிக்குரிய ஒளி எவ்வளவு மதிப்பு வாய்ந்தது என்பதை சற்று யோசித்துப்பாருங்கள். அதன் காரணமாகவே, ‘உங்கள் வெளிச்சம் மனிதர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது’ என்ற இயேசுவின் புத்திமதிக்கு கிறிஸ்தவர்கள் செவிசாய்க்க வேண்டியது அவசியம். (மத்தேயு 5:16) உண்மை கிறிஸ்தவர்கள் தாழ்மையுள்ளவர்களுக்கு ஒளியைப் பிரகாசித்து இருளை நீக்குவதன்மூலம் ஜீவனைப் பெறும் வாய்ப்பை அவர்களுக்கு அளிக்கிறார்கள்.—யோவான் 8:12.
இஸ்ரவேலின் இருண்ட காலங்கள்
4. ஏசாயாவின் தீர்க்கதரிசன வார்த்தைகள் முதலாவதாக எப்போது நிறைவேறின, ஆனால் ஏற்கெனவே என்ன நிலைமை அவருடைய நாட்களில் நிலவி வந்தது?
4 யூதா பாழ்ப்பட்டு, அதன் ஜனங்கள் பாபிலோனில் நாடுகடத்தப்பட்ட காலத்தில் பூமியை இருள் மூடுவதைப் பற்றிய ஏசாயாவின் வார்த்தைகள் முதன்முதல் நிறைவேற்றமடைந்தன. எனினும், அதற்கும் முன்பாகவே, ஏசாயாவின் நாட்களில் தேசத்தில் பெரும்பாலானோரை ஆவிக்குரிய இருள் போர்வை போல் மூடியிருந்தது. அதுவே தனது தேசத்தாரை பின்வருமாறு அறிவுறுத்த அவரைத் தூண்டியது: “யாக்கோபின் வம்சத்தாரே, கர்த்தரின் [“யெகோவாவின்,” NW] வெளிச்சத்திலே நடப்போம் வாருங்கள்.”—ஏசாயா 2:5; 5:20.
5, 6. ஏசாயாவின் நாளில் இருந்த இருளுக்கு எவை காரணமாக இருந்தன?
5 “யூதாவின் ராஜாக்களாகிய உசியா, யோதாம், ஆகாஸ், எசேக்கியா என்பவர்களின் நாட்களில்,” ஏசாயா யூதாவில் தீர்க்கதரிசனம் உரைத்தார். (ஏசாயா 1:1) அது, அரசியல் குழப்பமும், மத மாய்மாலமும், நீதித்துறையில் ஊழலும், ஏழைகளின் ஒடுக்குதலும் நிலவிய கொந்தளிப்பான சமயமாக இருந்தது. அதுமட்டுமல்ல, யோதாம் போன்ற உண்மையுள்ள அரசர்கள் ஆண்டுவந்த காலங்களிலும் மலை உச்சிகளில் பொய்க் கடவுட்களுக்கென பலிபீடங்கள் காணப்பட்டன! உண்மையற்ற அரசர்களின் ஆட்சியிலோ நிலைமை இன்னும் மோசமடைந்தது. உதாரணமாக, பொல்லாத அரசனாகிய ஆகாஸ் தனது பிள்ளையையே பொய்க் கடவுளாகிய மோளேக்குக்கு பலிசெலுத்துமளவுக்கு சென்றுவிட்டான். உண்மையிலேயே கும்மிருட்டு காலம்தான் அது!—2 இராஜாக்கள் 15:32-34; 16:2-4.
6 அந்த சமயத்தில் வெளியுறவு நிலைமையும் இருண்டதாகத்தான் இருந்தது. மோவாபியரும் ஏதோமியரும் பெலிஸ்தரும் யூதாவின் எல்லைகளில் அவர்களை பயமுறுத்திக்கொண்டே இருந்தார்கள். உறவினராக இருந்தபோதிலும் வடக்கு ராஜ்யமாகிய இஸ்ரவேல் இவர்களுடைய பகிரங்க எதிரியாக விளங்கியது. இன்னும் வடக்கே, யூதாவின் சமாதானத்தை சீரியா அச்சுறுத்தியது. அதைவிட பொல்லாத அசீரியாவால் அதிக ஆபத்து நேரிடுமோ என பயப்பட நேர்ந்தது. ஏனெனில் இந்தப் பேரரசு தனது எல்லையை விரிவாக்க வெறித்தனமாக துடித்தது. ஏசாயா தீர்க்கதரிசனம் உரைத்து வந்த சமயத்திலேயே அசீரியர்கள் இஸ்ரவேலை கைப்பற்றினர்; யூதாவை முற்றிலும் அழித்துவிட்டனர் என்றே சொல்லலாம். ஒரு சமயத்தில், எருசலேமைத் தவிர யூதாவைச் சேர்ந்த எல்லா அரணான நகரங்களையும் அசீரியர்கள் வளைத்துப் போட்டனர்.—ஏசாயா 1:7, 8; 36:1.
7. இஸ்ரவேலையும் யூதாவையும் சேர்ந்தவர்கள் எந்தப் பாதையைத் தேர்ந்தெடுத்தனர், யெகோவா என்ன செய்தார்?
7 கடவுளுடன் உடன்படிக்கை உறவிலிருந்த இஸ்ரவேலையும் யூதாவையும் சேர்ந்தவர்களுக்கு இத்தகைய பரிதாபமான நிலை ஏற்பட காரணம், அவரிடம் உண்மை தவறிவிட்டனர். நீதிமொழிகள் புத்தகத்தில் சொல்லப்பட்டவர்களைப் போல், அவர்கள் “நேர்மையான வழியை விட்டு விலகி, இருளான பாதையில்” நடந்தார்கள். (நீதிமொழிகள் 2:13, பொது மொழிபெயர்ப்பு) எனினும் தம்முடைய ஜனங்களிடம் யெகோவா கோபமாக இருந்தபோதிலும் அவர்களை முற்றிலும் கைவிடவில்லை. மாறாக, தேசத்தில் இன்னும் யெகோவாவை உண்மையாய் சேவிக்க நாடியவர்களுக்கு, ஏசாயா உட்பட அநேக தீர்க்கதரிசிகளை அனுப்பி ஆவிக்குரிய வெளிச்சம் கிடைக்க செய்தார். இந்தத் தீர்க்கதரிசிகள் மூலம் கிடைக்கும்படி செய்த அந்த ஒளி எவ்வளவோ மதிப்புமிக்கது. உண்மையில் அதுவே ஜீவனை அளித்தது.
இன்றைய இருண்ட காலம்
8, 9. இன்று உலகின் இருளுக்கு எந்த அம்சங்கள் பங்களிக்கின்றன?
8 ஏசாயாவின் காலத்தில் இருந்த அதே சூழ்நிலைதான் இன்றும் நிலவுகிறது. இன்று மனித தலைவர்கள் யெகோவாவையும் அவரால் நியமிக்கப்பட்ட ராஜாவாகிய இயேசு கிறிஸ்துவையும் ஏற்றுக்கொள்ளாமல் ஒதுக்கித் தள்ளிவிட்டிருக்கிறார்கள். (சங்கீதம் 2:2, 3) கிறிஸ்தவமண்டலத்தின் மதத் தலைவர்கள் தங்களது மந்தைகளை ஏமாற்றி வந்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட தலைவர்கள் கடவுளுக்கு சேவை செய்வதாக சொல்லிக் கொள்கிறார்கள்; ஆனால் உண்மையில் அவர்களில் பெரும்பாலோர், தேசியம், இராணுவம், செல்வம், பிரபலமான தலைவர்கள் ஆகிய இவ்வுலகின் கடவுட்களை ஆதரித்து வருகிறார்கள். அத்தோடு, அவர்கள் போதிக்கும் பொய் மத கோட்பாடுகளைப் பற்றி சொல்லவே வேண்டாம்.
9 ஒவ்வொரு இடத்திலும் கிறிஸ்தவமண்டல மதங்கள், கொடூர சம்பவங்களும் இனப் படுகொலைகளும் நிகழும் யுத்தங்களிலும் உள்நாட்டு கலகங்களிலும் தலையிட்டிருக்கின்றன. மேலும், பைபிள் அடிப்படையிலான ஒழுக்கத்தை ஆதரிப்பதற்கு பதிலாக அநேக சர்ச்சுகள் விபச்சாரம், ஓரினப்புணர்ச்சி போன்ற ஒழுக்கக்கேடான பழக்கவழக்கங்களை கண்டுகொள்ளாமல் இருக்கின்றன அல்லது தீவிரமாக ஆதரிக்கின்றன. இப்படி பைபிள் தராதரங்களை ஒதுக்கித் தள்ளியதன் காரணமாக, பூர்வ சங்கீதக்காரன் குறிப்பிட்ட ஆட்களைப் போல் கிறிஸ்தவமண்டல மந்தையினரும், “அறியாமலும் உணராமலும் இருக்கிறார்கள், அந்தகாரத்திலே நடக்கிறார்கள்.” (சங்கீதம் 82:5) பூர்வ யூதாவைப் போல் கிறிஸ்தவமண்டலம் காரிருளில் இருப்பது உண்மையே.—வெளிப்படுத்துதல் 8:12.
10. இன்று இருளின் மத்தியில் ஒளி எப்படி பிரகாசிக்கிறது, தாழ்மையுள்ளவர்கள் எப்படி பயனடைகிறார்கள்?
10 இத்தகைய இருளின் மத்தியிலும் தாழ்மையுள்ளவர்களுக்காக யெகோவா ஒளியைப் பிரகாசிக்க பண்ணுகிறார். இதற்காக பூமியிலுள்ள அபிஷேகம் செய்யப்பட்ட ஊழியக்காரர்களை, “உண்மையும் விவேகமுமுள்ள ஊழியக்கார”ர்களை யெகோவா பயன்படுத்துகிறார்; இவர்கள் ‘உலகத்திலே சுடர்களைப்போலப் பிரகாசிக்கிறார்கள்.’ (மத்தேயு 24:45; பிலிப்பியர் 2:14) இந்த அடிமை வகுப்பார், தங்களை ஆதரிக்கும் தோழர்களான லட்சக்கணக்கான ‘வேறே ஆடுகளோடு’ சேர்ந்து கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளின் ஆதாரத்தின்பேரில் ஆவிக்குரிய ஒளியை பிரகாசிக்க செய்கின்றனர். (யோவான் 10:16) காரிருள் சூழ்ந்த இந்த உலகத்தில் அந்த ஒளி தாழ்மையுள்ளவர்களுக்கு நம்பிக்கையை அளிக்கிறது; கடவுளோடு நல்ல உறவுக்குள் வருவதற்கு உதவுகிறது; அதோடு ஆவிக்குரிய படுகுழிகளைத் தவிர்ப்பதற்கும் உதவுகிறது. அது மதிப்புமிக்கதாகவும் ஜீவனை அளிப்பதாகவும் உள்ளது.
“உமது நாமத்தைத் துதிப்பேன்”
11. ஏசாயாவின் நாட்களில் என்ன தகவல்கள் கிடைப்பதற்கு யெகோவா வழிசெய்திருந்தார்?
11 ஏசாயா வாழ்ந்த இருண்ட காலத்திலும் யெகோவாவின் ஜனங்களை பாபிலோனியர்கள் சிறைபிடித்து சென்ற காரிருள் சூழ்ந்த காலத்திலும் எந்த விதமான வழிநடத்துதலை யெகோவா அளித்தார்? ஒழுக்க சம்பந்தமான வழிநடத்துதலைக் கொடுத்ததோடு நிறுத்திக் கொள்ளாமல் தம்முடைய ஜனத்திற்குக் கொடுத்த வாக்குறுதிகளை தாம் எப்படி நிறைவேற்றப் போகிறார் என்பதையும் தெளிவாக வெளிப்படுத்தினார். உதாரணமாக, ஏசாயா 25 முதல் 27 அதிகாரங்களிலுள்ள அருமையான தீர்க்கதரிசனங்களுக்கு சற்று கவனம் செலுத்துங்கள். அன்று யெகோவா எவ்வாறு காரியங்களை கையாண்டார், இன்று அவர் எவ்வாறு கையாளுகிறார் என்பதை இந்த அதிகாரங்களிலுள்ள வார்த்தைகள் சுட்டிக்காட்டுகின்றன.
12. இருதயப்பூர்வமான என்ன வார்த்தைகளை ஏசாயா சொன்னார்?
12 “கர்த்தாவே, [“யெகோவாவே,” NW] நீரே என் தேவன்; உம்மை உயர்த்தி, உமது நாமத்தைத் துதிப்பேன்” என ஏசாயா முதலாவதாக அறிவிக்கிறார். என்னே இருதயப்பூர்வமான துதி! இப்பேர்ப்பட்ட ஜெபத்தை அந்த தீர்க்கதரிசி ஏறெடுப்பதற்கு காரணம் என்ன? அந்த வசனத்தின் மீதிபாகத்தில் அதற்கான முக்கிய காரணம் வெளிப்படுத்தப்படுகிறது. “[யெகோவாவே] நீர் அதிசயமானவைகளைச் செய்தீர்; உமது பூர்வ ஆலோசனைகள் சத்தியமும் உறுதியுமானவைகள்.”—ஏசாயா 25:1.
13. (அ) எந்த அறிவு யெகோவாவுக்குப் போற்றுதல் காட்டும்படி ஏசாயாவைப் பலப்படுத்தியது? (ஆ) எப்படி நாம் ஏசாயாவின் உதாரணத்திலிருந்து கற்றுக்கொள்ளலாம்?
13 ஏசாயாவின் காலத்துக்குள்ளாக, யெகோவா அநேக அற்புதமான காரியங்களை இஸ்ரவேலருக்காக செய்திருந்தார். அவை பதிவு செய்து வைக்கப்பட்டிருந்தன. ஏற்கெனவே இந்தப் பதிவுகளைப் பற்றி ஏசாயா நன்கு அறிந்திருந்தார். உதாரணமாக, எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து தம்முடைய ஜனங்களை யெகோவா கொண்டு வந்ததை, செங்கடலில் பார்வோனின் கோபத்திற்குள்ளாகாமல் அவர்களைக் காப்பாற்றினதை அவர் அறிந்திருந்தார். தம்முடைய ஜனங்களை யெகோவா வனாந்தரத்தின் வழியாக வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குள் அழைத்து வந்ததை அவர் அறிந்திருந்தார். (சங்கீதம் 136:1, 10-26) யெகோவா உண்மையானவர், நம்பகமானவர் என்பதை இது போன்ற வரலாற்றுப் பதிவுகள் காண்பித்தன. அவருடைய “ஆலோசனைகள்,” அதாவது அவருடைய நோக்கங்கள் அனைத்தும் முழுமையாக நிறைவேறுகின்றன. கடவுள் அளித்த திருத்தமான அறிவு, வெளிச்சத்தில் தொடர்ந்து நடப்பதற்கு ஏசாயாவை பலப்படுத்தியது. இவ்வாறு அவர் நமக்கு மிகச் சிறந்த முன்மாதிரி. எழுதப்பட்ட கடவுளுடைய வார்த்தையை கவனமாக படித்து, அதை நம்முடைய வாழ்க்கையில் கடைப்பிடிக்கும்போது, நாமும் அந்த ஒளியில் நிலைத்திருப்போம்.—சங்கீதம் 119:105; 2 கொரிந்தியர் 4:6.
அழிவுறும் ஒரு நகரம்
14. ஒரு நகரத்தைக் குறித்து என்ன தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டது, அது எந்த நகரமாக இருக்கலாம்?
14 கடவுளுடைய ஆலோசனைக்கு ஓர் உதாரணம் ஏசாயா 25:2-ல் காணப்படுகிறது. “நீர் நகரத்தை மண்மேடும், அரணான பட்டணத்தைப் பாழுமாக்கினீர்; அந்நியரின் ராஜதானியை ஊராயிராதபடிக்கும், என்றைக்கும் கட்டப்படாதபடிக்கும் செய்தீர்” என அங்கு நாம் வாசிக்கிறோம். எந்த நகரம் அது? பாபிலோனைப் பற்றி ஏசாயா தீர்க்கதரிசனமாக சொல்லியிருக்கலாம். அந்த பாபிலோன் வெறும் மண்மேடாக மாறிய சமயம் உண்மையில் வந்தது.
15. இன்று எந்த ‘மகா நகரம்’ உள்ளது, அதற்கு என்ன சம்பவிக்கப் போகிறது?
15 ஏசாயா குறிப்பிட்ட அந்த நகரத்திற்கு இணையான ஒன்று இன்று இருக்கிறதா? ஆம், இருக்கிறது. ‘பூமியின் ராஜாக்கள்மேல் ராஜ்யபாரம் பண்ணுகிற மகா நகரத்தைப்’ பற்றி வெளிப்படுத்துதல் புத்தகம் பேசுகிறது. (வெளிப்படுத்துதல் 17:18) அந்த மகா நகரமே பொய்மத உலகப் பேரரசான “மகா பாபிலோன்.” (வெளிப்படுத்துதல் 17:5) கிறிஸ்தவமண்டலமே இன்று இந்த மகா பாபிலோனின் பிரதானமான பாகமாகும். யெகோவாவின் ஜனங்களுடைய ராஜ்ய பிரசங்கிப்பு வேலையை எதிர்ப்பதில் இதன் குருவர்க்கத்தினரே முன்னணியில் இருக்கின்றனர். (மத்தேயு 24:14) எனினும், பூர்வ பாபிலோனைப் போலவே மகா பாபிலோனும் சீக்கிரத்தில் அழிக்கப்படும். அது இனிமேல் ஒருபோதும் தலைதூக்கவே முடியாது.
16, 17. பூர்வ காலத்திலும் தற்காலத்திலும் யெகோவாவின் எதிரிகள் எப்படி அவரை மகிமைப்படுத்தியிருக்கிறார்கள்?
16 “அரணான பட்டணத்தைப்” பற்றி ஏசாயா வேறு எதையும் தீர்க்கதரிசனமாக உரைக்கிறார்? யெகோவாவிடம் ஏசாயா சொல்கிறார்: “பலத்த ஜனங்கள் உம்மை மகிமைப்படுத்துவார்கள்; கொடூரமான ஜாதிகளின் நகரம் உமக்குப் பயப்படும்.” (ஏசாயா 25:3) எதிரிகளின் நகரமாகிய இந்த “கொடூரமான ஜாதிகளின் நகரம்” எவ்வாறு யெகோவாவை மகிமைப்படுத்தும்? பலம்பொருந்திய பாபிலோனிய அரசனாகிய நேபுகாத்நேச்சாருக்கு என்ன சம்பவித்தது என்பதை சற்று யோசித்துப் பாருங்கள். தன்னுடைய இயலாமையை சிந்திக்க வைத்த அனுபவத்திற்குப் பின்பு யெகோவாவின் உன்னத நிலையையும் அவருடைய சர்வ வல்லமையையும் ஒத்துக்கொள்வதற்கு அவன் கட்டாயப்படுத்தப்பட்டான். (தானியேல் 4:34, 35) யெகோவா தம்முடைய வல்லமையை வெளிக்காட்டுகையில், அவருடைய எதிரிகள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவருடைய வல்லமையான செயல்களை ஒத்துக்கொள்ளும்படி கட்டாயப்படுத்தப்படுவார்கள்.
17 யெகோவாவின் வல்லமையான செயல்களை ஒத்துக்கொள்ளும்படி மகா பாபிலோன் எப்போதாவது கட்டாயப்படுத்தப்பட்டதா? ஆம், கட்டாயப்படுத்தப்பட்டது. முதல் உலக யுத்தத்தின் போது யெகோவாவின் அபிஷேகம் செய்யப்பட்ட ஊழியர்கள் துன்பத்தின் மத்தியில் பிரசங்கித்தனர். 1918-ல் உவாட்ச் டவர் சொஸைட்டியின் முக்கிய அதிகாரிகளை சிறையிலிட்ட போது அந்த ஊழியர்கள் ஆவிக்குரிய சிறையிருப்பை அனுபவித்தனர். அப்போது, ஒழுங்கமைக்கப்பட்ட பிரசங்க வேலை ஏறக்குறைய நின்றுவிட்டதென்றே சொல்லலாம். பின்னர் 1919-ம் வருடத்தில் யெகோவா தமது ஊழியர்களை திரும்பவும் நிலைநாட்டி தம்முடைய ஆவியால் மீண்டும் ஊக்கமளித்தார். அப்போது குடியிருக்கப்பட்ட பூமி முழுவதிலும் நற்செய்தியைப் பிரசங்கிக்கும்படியான கட்டளையை நிறைவேற்ற அவர்கள் புறப்பட்டனர். (மாற்கு 13:10) இவை அனைத்தும், இவர்களுடைய எதிரிகள் எப்படி பாதிக்கப்படுவார்கள் என்பதும் வெளிப்படுத்துதல் புத்தகத்தில் தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டன. அந்த எதிரிகள், “பயமடைந்து பரலோகத்தின் தேவனை மகிமைப்படுத்தினார்கள்.” (வெளிப்படுத்துதல் 11:3, 7, 11-13) இது அவர்கள் அனைவருமே மதம் மாறினார்கள் என அர்த்தப்படுத்தவில்லை, ஆனால், இந்த சமயத்தில் ஏசாயா முன்னுரைத்திருந்த விதமாகவே, யெகோவாவின் வல்லமையான செயல்களை ஒத்துக்கொள்ளும்படி அவர்கள் கட்டாயப்படுத்தப்பட்டார்கள்.
‘எளியவனுக்குத் திடன்’
18, 19. (அ) எதிரிகளால் ஏன் யெகோவாவின் மக்களுடைய உத்தமத்தைத் தகர்த்துப்போட முடியவில்லை? (ஆ) எப்படி ‘பெலவந்தரின் ஆரவாரம் தணியும்’?
18 வெளிச்சத்தில் நடப்பவர்களிடம் யெகோவா காட்டும் இரக்கத்திற்கு கவனம் செலுத்துபவராக ஏசாயா யெகோவாவிடம் இவ்வாறு சொல்கிறார்: “கொடூரமானவர்களின் சீறல் மதிலை மோதியடிக்கிற பெரு வெள்ளத்தைப்போல் இருக்கையில், நீர் ஏழைக்குப் பெலனும், நெருக்கப்படுகிற எளியவனுக்குத் திடனும், பெருவெள்ளத்துக்குத் தப்பும் அடைக்கலமும், வெயிலுக்கு ஒதுங்கும் நிழலுமானீர். வறட்சியான இடத்தின் காங்கை மேகத்தினால் தணிவதுபோல், அந்நியரின் மும்முரத்தைத் தணியப்பண்ணுவீர்; மேகத்தின் நிழலினால் வெயில் தணிகிறதுபோல் பெலவந்தரின் ஆரவாரம் தணியும்.”—ஏசாயா 25:4, 5.
19 உண்மை வணக்கத்தாரின் உத்தமத்தை தகர்த்துப்போட 1919 முதற்கொண்டு கொடுங்கோலானவர்கள் எல்லா விதங்களிலும் முயற்சி செய்திருக்கின்றனர். இறுதியில் அவர்கள் தோல்வியைத்தான் தழுவியிருக்கின்றனர். ஏன்? தமது மக்களுக்கு யெகோவாவே பலத்த கோட்டையாகவும் அடைக்கலமாகவும் இருக்கிறார். சுள்ளென அடிக்கும் வெயிலாக துன்புறுத்துதல் தாக்குகையில் குளுமையான நிழலைப்போல அவர் விடுதலை தருகிறார். மேலுமாக துன்புறுத்துதல் பெருவெள்ளம்போல கரைபுரண்டு வருகையில் உறுதியான மதிலைப்போல பாதுகாக்கிறார். கடவுளுடைய வெளிச்சத்தில் வீறுநடைபோடும் நாம், ‘பெலவந்தரின் ஆரவாரம் தணிவதை’ நம்பிக்கையோடு எதிர்பார்க்கலாம். யெகோவாவின் எதிரிகள் பூண்டோடு அழிக்கப்படும் அந்த நாளுக்காக நிஜமாகவே நாம் ஆவலோடு காத்திருக்கிறோம்.
20, 21. என்ன விருந்தை யெகோவா அளிக்கிறார், புதிய உலகில் அந்த விருந்தில் எதுவும் சேர்க்கப்பட்டிருக்கும்?
20 தமது மக்களை வெறுமனே காப்பாற்றுவதோடு யெகோவா நிறுத்திக்கொள்வதில்லை. அன்பான தகப்பனைப் போல அவர்களுக்கு தேவையானவற்றை அள்ளி வழங்குகிறார். தமது மக்களை 1919-ல் மகா பாபிலோனிலிருந்து விடுதலை செய்த பிறகு யெகோவா ஒரு வெற்றிப் பெருவிருந்தை, ஏராளமான ஆவிக்குரிய உணவை ஏற்பாடு செய்தார். இது ஏசாயா 25:6-ல் முன்னறிவிக்கப்பட்டது. “சேனைகளின் கர்த்தர் [“யெகோவா,” NW] இந்த மலையிலே சகல ஜனங்களுக்கும் ஒரு விருந்தை ஆயத்தப்படுத்துவார்; அது கொழுமையான பதார்த்தங்களும், பழமையான திராட்சரசமும், ஊனும் நிணமுமுள்ள பதார்த்தங்களும், தெளிந்த பழமையான திராட்சரசமும் நிறைந்த விருந்தாயிருக்கும்” என்பதாக நாம் அங்கு வாசிக்கிறோம். அந்த விருந்தில் பங்குகொள்வதற்கு நாம் உண்மையிலேயே பாக்கியம் பெற்றவர்கள் அல்லவா! (மத்தேயு 4:4) “கர்த்தருடைய போஜனபந்தி”யில் சாப்பிடுவதற்கு எக்கச்சக்கமான உணவு வகைகள் நிரம்பி வழிகின்றன. (1 கொரிந்தியர் 10:21) ஆவிக்குரிய விதத்தில் நமக்குத் தேவையான அனைத்தும் ‘உண்மையும் விவேகமுமுள்ள அடிமை’ மூலம் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
21 தேவனால் வழங்கப்படும் இந்த விருந்து இத்தோடு முடிவதில்லை. இன்று நாம் அனுபவிக்கும் ஆவிக்குரிய விருந்து, கடவுளால் வாக்குப்பண்ணப்பட்ட புதிய உலகில் ஏராளமான சரீரப்பிரகாரமான உணவு கிடைக்கும் என்பதை நமக்கு ஞாபகப்படுத்துகிறது. அப்போது, ‘கொழுமையான பதார்த்தங்கள் நிறைந்த விருந்தில்’ சரீரத்திற்குத் தேவையான ஏராளமான உணவும் சேர்க்கப்பட்டிருக்கும். சரீரப் பிரகாரமாக அல்லது ஆவிக்குரிய பிரகாரமாக யாருமே பசி பட்டினியால் வாட மாட்டார்கள். இயேசுவினுடைய பிரசன்னத்தின் ‘அடையாளமாக’ முன்னறிவிக்கப்பட்ட ‘பஞ்சத்தால்’ இப்பொழுது வாடிப்போயிருக்கும் அன்பான விசுவாசிகள் அந்தச் சமயத்தில் நிம்மதிப் பெருமூச்சு விடுவார்கள்! (மத்தேயு 24:3, 7) அவர்களுக்கு சங்கீதக்காரனின் வார்த்தைகள் உண்மையிலேயே ஆறுதலளிப்பவையாய் இருக்கும். ‘பூமியிலே மலைகளின் உச்சிகளில் ஒரு பிடி தானியம் விதைக்கப்பட்டிருக்கும்; அதின் விளைவு மிகுதியாக இருக்கும்’ என அவர் சொன்னார்.—சங்கீதம் 72:16.
22, 23. (அ) என்ன ‘மூடல்’ அல்லது ‘முக்காடு’ நீக்கப்படும், எப்படி? (ஆ) ‘யெகோவாவுடைய ஜனத்தின் நிந்தை’ எப்படி நீக்கப்படும்?
22 இதைக் காட்டிலும் ஆச்சரியமான வாக்குறுதிக்கு இப்போது செவிசாயுங்கள். பாவத்தையும் மரணத்தையும் ஒரு ‘மூடலுக்கு’ அல்லது ‘முக்காட்டிற்கு’ ஒப்பிட்டு ஏசாயா சொல்கிறதாவது: “சகல ஜனங்கள் மேலுமுள்ள முக்காட்டையும், சகல ஜாதிகளையும் மூடியிருக்கிற மூடலையும், [யெகோவா] இந்த மலையிலே அகற்றிப்போடுவார்.” (ஏசாயா 25:7) சற்று யோசித்துப்பாருங்கள்! மூச்சுத் திணறடிக்கும், அதிக கனமான போர்வையைப்போல மனிதவர்க்கத்தை பாரமாய் அழுத்துகிற பாவமும் மரணமும் இனிமேலும் இருக்காது. கீழ்ப்படிதலும் உண்மையுமுள்ள மனிதகுலத்திற்கு இயேசுவுடைய மீட்கும் பலியின் நன்மைகள் முழுமையாக பயன்படுத்தப்படும் அந்த நாளைக் காண நாம் எவ்வளவு ஆவலாக இருக்கிறோம்!—வெளிப்படுத்துதல் 21:3, 4.
23 அருமையான அந்த நாளைக் குறித்து ஏவப்பட்ட தீர்க்கதரிசி நமக்கு இவ்வாறு உறுதியளிக்கிறார்: “[கடவுள்] மரணத்தை ஜெயமாக விழுங்குவார்; கர்த்தராகிய தேவன் எல்லா முகங்களிலுமிருந்து கண்ணீரைத் துடைத்து, தமது ஜனத்தின் நிந்தையை பூமியிலிராதபடிக்கு முற்றிலும் நீக்கிவிடுவார்; கர்த்தரே [“யெகோவாவே,” NW] இதைச் சொன்னார்.” (ஏசாயா 25:8) இயற்கையாக யாரும் மரணமடைய மாட்டார்கள். அன்பானவர்களின் மரணத்தால் கேட்கும் அழுகை சத்தமும் நிரந்தரமாக ஓய்ந்துவிடும். எப்பேர்ப்பட்ட ஆசீர்வாதமான ஒரு நிலை! நெடுங்காலமாக தங்களுக்கு எதிராக அவதூறுகளும் பொய்ப் பிரச்சாரங்களும் செய்யப்பட்டு வந்ததை கடவுளும் அவருடைய ஊழியர்களும் பொறுமையோடு சகித்திருக்கின்றனர். இவை இனிமேலும் பூமியின் எந்த ஒரு இடத்திலும் தலைதூக்க அனுமதிக்கப்படாது. நாம் ஏன் அப்படி சொல்கிறோம்? இவற்றிற்கு மூலகாரணமாக இருக்கும் பொய்க்குப் பிதாவாகிய பிசாசாகிய சாத்தானையே யெகோவா அழித்துவிடுவார். அவனுடைய வித்திற்கும் இதே கதிதான் நேரிடப் போகிறது.—யோவான் 8:44.
24. தங்கள் சார்பாக செய்யப்படும் யெகோவாவின் வல்லமையான செயல்களுக்கு வெளிச்சத்தில் நடப்பவர்கள் எப்படி பிரதிபலிப்பார்கள்?
24 யெகோவாவின் வல்லமையின் இத்தகைய வெளிக்காட்டுகளை எல்லாம் மனதில் வைத்து வெளிச்சத்தில் நடப்பவர்கள், “இதோ, இவரே நம்முடைய தேவன்; இவருக்காகக் காத்திருந்தோம், இவர் நம்மை இரட்சிப்பார்; இவரே கர்த்தர் [“யெகோவா,” NW], இவருக்காகக் காத்திருந்தோம்; இவருடைய இரட்சிப்பினால் களிகூர்ந்து மகிழுவோம்” என ஆனந்த கூக்குரல் எழுப்ப தூண்டப்படுகிறார்கள். (ஏசாயா 25:9) சீக்கிரத்தில், நீதியான மனிதவர்க்கம் உண்மையிலேயே சந்தோஷத்தில் பூரித்துப்போகும். இருள் முழுமையாய் சுவடு தெரியாமல் அகற்றப்படும், உண்மையுள்ளவர்கள் நித்தியத்திற்குமாக யெகோவாவின் வெளிச்சத்தில் திளைப்பார்கள். இதைவிடவும் மகத்தான நம்பிக்கை வேறு ஏதும் இருக்க முடியுமா? நிச்சயம் இருக்க முடியாது!
உங்களால் விளக்க முடியுமா?
• வெளிச்சத்தில் நடப்பது இன்று ஏன் அதிக முக்கியம்?
• ஏசாயா ஏன் யெகோவாவின் பெயரைத் துதித்தார்?
• கடவுளுடைய மக்களின் உத்தமத்தை எதிரிகளால் ஏன் ஒருபோதும் தகர்த்துப்போட முடியாது?
• வெளிச்சத்தில் நடப்பவர்களுக்கு என்ன அபரிமிதமான ஆசீர்வாதங்கள் காத்திருக்கின்றன?
[பக்கம் 12, 13-ன் படம்]
யூதாவின் குடிகள் மோளேக்குக்கு பிள்ளைகளை பலிகொடுத்தனர்
[பக்கம் 15-ன் படங்கள்]
யெகோவாவின் பலத்த செயல்களைப் பற்றி அறிந்திருந்தது அவரது பெயரைத் துதிக்க ஏசாயாவைத் தூண்டியது
[பக்கம் 16-ன் படம்]
உண்மையுள்ளவர்கள் நித்தியத்திற்கும் யெகோவாவின் வெளிச்சத்தில் திளைப்பார்கள்