வெளிச்சத்தைத் தேர்ந்தெடுப்பவர்களுக்கு இரட்சிப்பு
“கர்த்தர் என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர், யாருக்குப் பயப்படுவேன்?”—சங்கீதம் 27:1.
1. ஜீவனளிக்கும் என்ன ஏற்பாடுகளை யெகோவா செய்திருக்கிறார்?
பூமியிலே வாழ்க்கையை சாத்தியமாக்குகிற சூரிய வெளிச்சத்திற்கு யெகோவாவே ஊற்றுமூலர். (ஆதியாகமம் 1:2, 14) ஆவிக்குரிய வெளிச்சத்தைப் படைத்தவரும் அவரே; இது சாத்தானுடைய உலகின் மரணத்துக்கு ஏதுவான இருளை விரட்டியடிக்கிறது. (ஏசாயா 60:2; 2 கொரிந்தியர் 4:6; எபேசியர் 5:8-11; 6:12) வெளிச்சத்தைத் தேர்ந்தெடுத்தவர்கள் சங்கீதக்காரனுடன் சேர்ந்துகொண்டு, “கர்த்தர் என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர், யாருக்குப் பயப்படுவேன்?” என சொல்லலாம். (சங்கீதம் 27:1அ) எனினும், இயேசுவின் நாட்களில் சம்பவித்தது போலவே, இருளை தேர்ந்தெடுப்பவர்கள் வருத்தகரமான நியாயத்தீர்ப்பை மட்டுமே எதிர்பார்க்கலாம்.—யோவான் 1:9-11; 3:19-21, 36.
2. பூர்வ காலங்களில் யெகோவாவின் வெளிச்சத்தை புறக்கணித்தவர்களுக்கும் அவருடைய வார்த்தைக்குச் செவிசாய்த்தவர்களுக்கும் என்ன சம்பவித்தது?
2 ஏசாயாவின் நாட்களில் யெகோவாவுடன் உடன்படிக்கை உறவில் இருந்த பெரும்பாலோர் வெளிச்சத்தை புறக்கணித்தனர். அதன் காரணமாக, வட ராஜ்யமாகிய இஸ்ரவேல் இனி ஒரு தேசமாக இராமல் அழிந்துபோனதை ஏசாயா கண்டார். பொ.ச.மு. 607-ல் எருசலேமும் அதன் ஆலயமும் அழிக்கப்பட்டது, யூதாவின் குடிகள் நாடுகடத்தப்பட்டனர். எனினும், யெகோவாவின் வார்த்தைக்கு செவிசாய்த்தவர்கள் அந்நாளில் நிலவிய விசுவாச துரோகத்தை எதிர்க்கும்படி பலப்படுத்தப்பட்டனர். பொ.ச.மு. 607-ஐக் குறித்ததிலோ, தமக்குச் செவிசாய்ப்பவர்கள் தப்பிப்பிழைப்பார்கள் என அவர் வாக்குறுதியளித்தார். (எரேமியா 21:8, 9) இன்று வெளிச்சத்தை நேசிக்கும் நாம் அன்று சம்பவித்தவற்றிலிருந்து அநேக பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்.—எபேசியர் 5:5.
வெளிச்சத்தில் இருப்பவர்களுக்கு சந்தோஷம்
3. இன்று, நமக்கு என்ன நம்பிக்கை உள்ளது, எந்த ‘நீதியுள்ள ஜனத்தை’ நாம் நேசிக்கிறோம், அந்த ‘ஜனத்திற்கு’ எந்த “பெலனான நகரம்” உள்ளது?
3 “பெலனான நகரம் நமக்கு உண்டு; இரட்சிப்பையே அதற்கு மதிலும் அரணுமாக [தேவன்] ஏற்படுத்துவார். சத்தியத்தைக் கைக்கொண்டுவருகிற நீதியுள்ள ஜாதி [“ஜனம்,” NW] உள்ளே பிரவேசிப்பதற்காக வாசல்களைத் திறவுங்கள்.” (ஏசாயா 26:1, 2) யெகோவாவை நம்பிய ஜனங்களின் சந்தோஷம் பொங்கும் வார்த்தைகள் இவை. ஏசாயாவின் நாட்களில் இருந்த உண்மையுள்ள யூதர்கள், பாதுகாப்பின் ஒரே உண்மையான ஊற்றுமூலர் யெகோவாவே என நம்பி அவரை சார்ந்திருந்தனர். தங்கள் உடன் தேசத்தாரைப் போல் பொய் கடவுட்களை சார்ந்திருக்கவில்லை. அதே நம்பிக்கைதான் இன்று நமக்கும் உள்ளது. மேலும், நாம் யெகோவாவின் ‘நீதியுள்ள ஜனத்தை,’ அதாவது ‘தேவனுடைய இஸ்ரவேலரை’ நேசிக்கிறோம். (கலாத்தியர் 6:16; மத்தேயு 21:43) அந்த ஜனத்தின் உண்மையுள்ள நடத்தையின் காரணமாக யெகோவாவும் அவர்களை நேசிக்கிறார். அவருடைய ஆசீர்வாதத்தால், தேவனுடைய இஸ்ரவேலருக்கு “பெலனான நகரம்,” உள்ளது. அவர்களை ஆதரித்து பாதுகாத்து வரும் நகரத்தைப் போன்ற ஓர் அமைப்பு அது.
4. எத்தகைய மனநிலையை நாம் வளர்த்துக்கொள்வது நல்லது?
4 “உம்மை [யெகோவாவை] உறுதியாய்ப் பற்றிக்கொண்ட மனதையுடையவன் உம்மையே [யெகோவாவை] நம்பியிருக்கிறபடியால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர்” என சொல்லப்பட்டிருப்பதை அந்த ‘நகரத்தில்’ இருப்பவர்கள் நன்கு அறிவார்கள். தம்மை நம்பியிருக்கவும், தமது நீதியான நியமங்களை பின்பற்றவும் மனதுள்ளவர்களை யெகோவா ஆதரிக்கிறார். எனவே, யூதாவிலிருந்த உண்மையுள்ளவர்கள் ஏசாயாவின் பின்வரும் புத்திமதிக்கு செவிசாய்த்தார்கள்: “கர்த்தரை என்றென்றைக்கும் நம்புங்கள்; கர்த்தராகிய யேகோவா நித்திய கன்மலையாயிருக்கிறார்.” (ஏசாயா 26:3, 4; சங்கீதம் 9:10; 37:3; நீதிமொழிகள் 3:5) இத்தகைய மனநிலை உள்ளவர்கள், ‘கர்த்தராகிய யெகோவா’ மட்டுமே பாதுகாப்பிற்கான ஒரே கன்மலை என நம்பியிருக்கின்றனர். அவருடன் ‘பூரண சமாதானத்தை’ அனுபவித்து மகிழ்கின்றனர்.—பிலிப்பியர் 1:2; 4:6, 7.
கடவுளுடைய எதிரிகள் அனுபவித்த அவமானம்
5, 6. (அ) பூர்வ பாபிலோன் எப்படி அவமானத்தை அனுபவித்தது? (ஆ) எந்த விதத்தில் ‘மகா பாபிலோன்’ அவமானப்படுத்தப்பட்டது?
5 யெகோவாவை நம்புகிறவர்கள் துன்பங்களை அனுபவிக்கையில் என்ன செய்வது? அவர்கள் பயப்பட வேண்டியதில்லை. அத்தகைய காரியங்களை கொஞ்ச காலத்திற்கு யெகோவா அனுமதிக்கிறார். ஆனால் இறுதியில் அவர் விடுதலை அருளுவார். அத்தகைய துன்பங்களைக் கொடுத்தவர்கள் அவருடைய தண்டனைத்தீர்ப்பை அனுபவிப்பர். (2 தெசலோனிக்கேயர் 1:4-7; 2 தீமோத்தேயு 1:8-10) ஒரு ‘உயர்ந்த நகரத்திற்கு’ சம்பவித்ததை சற்று கவனியுங்கள். “[யெகோவா] உயரத்திலே வாசமாயிருக்கிறவர்களையும் கீழே தள்ளுகிறார், உயர்ந்த நகரத்தையும் தாழ்த்துகிறார்; அவர் தரைமட்டும் தாழ்த்தி அது மண்ணாகுமட்டும் இடியப்பண்ணுவார். கால் அதை மிதிக்கும், சிறுமையானவர்களின் காலும் எளிமையானவர்களின் அடிகளுமே அதை மிதிக்கும்” என ஏசாயா சொல்கிறார். (ஏசாயா 26:5, 6) இங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் உயர்ந்த நகரம் ஒருவேளை பாபிலோனாக இருக்கலாம். அந்த நகரம் கடவுளுடைய ஜனத்தை துன்பப்படுத்தியது உண்மையே. ஆனால் அந்த பாபிலோனுக்கு என்ன சம்பவித்தது? பொ.ச.மு. 539-ல் மேதிய பெர்சியர்களிடம் வீழ்ச்சி அடைந்தது. என்னே அவமானம்!
6 நம்முடைய நாட்களில் 1919 முதற்கொண்டு ‘மகா பாபிலோனுக்கு’ சம்பவித்து வருவதை ஏசாயாவின் தீர்க்கதரிசன வார்த்தைகள் நன்கு விவரிக்கின்றன. அந்த வருடத்தில் யெகோவாவின் மக்களை ஆவிக்குரிய அடிமைத்தனத்திலிருந்து விடுதலை செய்யும் கட்டாயத்திற்குள்ளானது அந்த உயர்ந்த நகரம்; அப்போது அது வீழ்ச்சியுற்று தலைகுனிந்தது. (வெளிப்படுத்துதல் 14:8) இதைத் தொடர்ந்து சம்பவித்த விஷயம் அதைவிட அவமானத்தை ஏற்படுத்தியது. சிறிய தொகுதியாக இருந்த இந்த கிறிஸ்தவர்கள் தங்களை முன்பு சிறைபிடித்து சென்றவர்களை ‘மிதித்தார்கள்.’ கிறிஸ்தவமண்டலத்திற்கு வரவிருக்கும் முடிவைக் குறித்து, வெளிப்படுத்துதல் 8:7-12-லுள்ள நான்கு தூதர்களின் எக்காள சத்தங்களின் செய்திகளையும், வெளிப்படுத்துதல் 9:1-11:15-லுள்ள மூன்று ஐயோக்களையும் 1922-ல் அவர்கள் பிரகடனப்படுத்த ஆரம்பித்தார்கள்.
“நீதிமானுடைய பாதை செம்மையாயிருக்கிறது”
7. யெகோவாவின் ஒளியிடத்திற்குத் திரும்புகிறவர்களுக்கு என்ன வழிநடத்துதல் கிடைக்கிறது, அவர்கள் யாரை நம்புகிறார்கள், எதை உயர்வாய் மதிக்கிறார்கள்?
7 தம்முடைய ஒளியினிடம் வருபவர்களுக்கு யெகோவா இரட்சிப்பை அளிக்கிறார். அவர்கள் பாதைக்கு வழிநடத்துதலைக் கொடுக்கிறார். இதை ஏசாயா அடுத்து குறிப்பிடுகிறார்: “நீதிமானுடைய பாதை செம்மையாயிருக்கிறது; மகா நீதிபரராகிய நீர் நீதிமானுடைய பாதையைச் செம்மைப்படுத்துகிறீர். கர்த்தாவே, [“யெகோவாவே,” NW] உம்முடைய நியாயத்தீர்ப்புகளின் வழியிலே உமக்குக் காத்திருக்கிறோம்; உமது நாமமும், உம்மை நினைக்கும் நினைவும் எங்கள் ஆத்தும வாஞ்சையாயிருக்கிறது.” (ஏசாயா 26:7, 8) யெகோவா நீதியுள்ள கடவுள். அவரை வணங்குகிறவர்கள் அவருடைய நீதியுள்ள தராதரங்களைப் பின்பற்ற வேண்டும். அவ்வாறு செய்கையில், சமனான பாதையில் யெகோவா அவர்களை வழிநடத்துகிறார். யெகோவாவுடைய வழிநடத்துதலை ஏற்று நடப்பதன் மூலம் தாழ்மையுள்ள இந்த ஜனங்கள் அவரை நம்புவதையும் அவருடைய பெயரை, அவருடைய ‘பேர்ப்பிரஸ்தாபத்தை’ உயர்வாய் மதிப்பதையும் காட்டுகிறார்கள்.—யாத்திராகமம் 3:15.
8. முன்மாதிரியான என்ன மனநிலையை ஏசாயா வெளிக்காட்டினார்?
8 யெகோவாவின் பெயரை ஏசாயா உயர்வாய் மதித்தார். இது அவர் தொடர்ந்து சொன்ன பின்வரும் வார்த்தைகளில் தெளிவாக தெரிகிறது: “என் ஆத்துமா இரவிலே உம்மை வாஞ்சிக்கிறது; எனக்குள் இருக்கிற என் ஆவியால் அதிகாலையிலும் உம்மைத் தேடுகிறேன்; உம்முடைய நியாயத்தீர்ப்புகள் பூமியிலே நடக்கும்போது பூச்சக்கரத்துக்குடிகள் நீதியைக் கற்றுக்கொள்வார்கள்.” (ஏசாயா 26:9) ஏசாயா தனது ‘முழு ஆத்துமாவுடன்,’ அதாவது முழுமையாய் யெகோவாவை நேசித்தார். இதை சற்று கற்பனை செய்துபாருங்கள்: இந்த தீர்க்கதரிசி யெகோவாவிடம் ஜெபிப்பதற்கு இரவின் அமைதியான நேரத்தை பயன்படுத்தினார். அந்தச் சமயத்தில் தனது இருதயத்தின் ஆழத்திலிருந்து எண்ணங்களை கடவுளிடமாக கொட்டினார், யெகோவாவின் வழிநடத்துதலை ஆர்வத்துடன் தேடினார். எப்பேர்ப்பட்ட அருமையான முன்மாதிரி! மேலும், யெகோவாவின் நியாயத்தீர்ப்புகளிலிருந்து ஏசாயா நீதியைக் கற்றுக்கொண்டார். இதில், தொடர்ந்து விழிப்புடன் இருப்பதற்கும், யெகோவாவின் சித்தத்தை புரிந்துகொள்வதற்கு எப்போதும் கவனமாய் இருப்பதற்குமான தேவையை அவர் நமக்கு நினைப்பூட்டுகிறார்.
இருளைத் தேர்ந்தெடுத்த சிலர்
9, 10. தம்முடைய உண்மையற்ற ஜனத்திடம் என்ன இரக்கமுள்ள செயல்களை யெகோவா நடப்பித்தார், ஆனால் அவர்கள் அதற்கு எப்படி பிரதிபலித்தனர்?
9 யூதாவிடம் யெகோவா அன்பான இரக்கத்தை பெருமளவு காட்டினார்; ஆனால் வருத்தகரமாக அதை அனைவருமே போற்றவில்லை. அடிக்கடி, யெகோவாவினுடைய சத்தியத்தின் ஒளியை நாடாமல் பெரும்பாலானோர் கலகம் செய்தனர், விசுவாச துரோகிகளின் பாதையை நாடினர். “துன்மார்க்கனுக்குத் தயைசெய்தாலும் நீதியைக் கற்றுக்கொள்ளான்; நீதியுள்ள தேசத்திலும் அவன் அநியாயஞ்செய்து கர்த்தருடைய மகத்துவத்தைக் கவனியாதே போகிறான்” என ஏசாயா சொன்னார்.—ஏசாயா 26:10.
10 ஏசாயாவின் நாட்களில் யூதாவிலிருந்தவர்களை அவர்களுடைய எதிரிகளிடமிருந்து யெகோவா பாதுகாத்தபோது அவர்களில் பெரும்பாலானோர் அதை ஒப்புக்கொள்ள மறுத்துவிட்டனர். அவர்களை சமாதானத்தால் அவர் ஆசீர்வதித்தபோது அந்த ஜனத்தார் அதற்கு துளியும் நன்றியுடன் இருக்கவில்லை. அதனால், “வேறே ஆண்டவன்மார்”களை சேவிக்கும்படி யெகோவா அவர்களைக் கைவிட்டார்; இறுதியில் பொ.ச.மு. 607-ல் அந்த யூதர்களை சிறைபிடித்து செல்ல அனுமதித்தார். (ஏசாயா 26:11-13) இருந்தபோதிலும், இறுதியில் சிட்சை பெற்ற பிறகு, அந்த ஜனத்தாரில் மீதியானவர்கள் தங்கள் தாயகம் திரும்பினர்.
11, 12. (அ) யூதாவை சிறைப்படுத்தியவர்களின் எதிர்காலம் என்னவாக இருந்தது? (ஆ) 1919-ல் யெகோவாவின் அபிஷேகம் செய்யப்பட்ட ஊழியர்களை சிறைப்படுத்தியவர்களின் எதிர்காலம் என்னவாக இருந்தது?
11 யூதாவை சிறைப்படுத்தியவர்களைப் பற்றி என்ன? தீர்க்கதரிசனத்தில் ஏசாயா அதற்கு பதிலளிக்கிறார்: “அவர்கள் செத்தவர்கள், ஜீவிக்கமாட்டார்கள்; மாண்ட ராட்சதர் திரும்ப எழுந்திரார்கள்; நீர் அவர்களை விசாரித்துச் சங்கரித்து, அவர்கள் பேரையும் அழியப்பண்ணினீர்.” (ஏசாயா 26:14) திரும்பவும் தலைதூக்க முடியாதபடி பொ.ச.மு. 539-ல் பாபிலோன் படுதோல்வி கண்டது. காலப்போக்கில், அந்த நகரமே இல்லாமல் போனது. அது, ‘மாண்டது.’ அந்த மாபெரும் சாம்ராஜ்யம் சரித்திர புத்தகங்களில் மட்டுமே இடம்பெற்றது. இன்றைய உலகின் பிரபலமானவர்களை நம்புகிறவர்களுக்கு என்னே ஓர் எச்சரிக்கை!
12 யெகோவா தம்முடைய அபிஷேகம் செய்யப்பட்ட ஊழியக்காரர்களை 1918-ல் ஆவிக்குரிய சிறையிருப்பிற்குள் அனுமதித்து, பிறகு 1919-ல் விடுதலை செய்தபோது இந்த தீர்க்கதரிசனத்தின் சில அம்சங்கள் நிறைவேற்றமடைந்தன. அப்போது முதற்கொண்டு, அவர்களை சிறைப்படுத்தியவர்களின், அதிலும் முக்கியமாய் கிறிஸ்தவமண்டலத்தின் எதிர்காலம் இருண்டுவிட்டது. ஆனால் யெகோவாவின் மக்களுக்கு காத்திருந்த ஆசீர்வாதங்களோ ஏராளமானவை.
‘இந்த ஜனத்தைப் பெருகப்பண்ணினீர்’
13, 14. யெகோவாவின் அபிஷேகம் செய்யப்பட்ட ஊழியர்கள் 1919 முதற்கொண்டு என்ன ஏராளமான ஆசீர்வாதங்களை அனுபவித்து வருகின்றனர்?
13 அபிஷேகம் செய்யப்பட்ட தமது மக்கள் மனந்திரும்பினதற்காக யெகோவா அவர்களை 1919-ல் ஆசீர்வதித்து, அவர்கள் பெருகும்படி செய்தார். முதலாவதாக, தேவனுடைய இஸ்ரவேலரில் மீதமுள்ளவர்கள் கூட்டிச் சேர்க்கப்படுவதற்கு கவனம் செலுத்தப்பட்டது. பின்னர், ‘வேறே ஆடுகள்’ அடங்கிய ‘திரள் கூட்டத்தார்’ கூட்டிச் சேர்க்கப்படுதல் ஆரம்பமானது. (வெளிப்படுத்துதல் 7:9; யோவான் 10:16) இந்த ஆசீர்வாதங்கள் ஏசாயாவின் தீர்க்கதரிசனத்தில் முன்னுரைக்கப்பட்டன: “இந்த ஜாதியைப் [“ஜனத்தைப்,” NW] பெருகப்பண்ணினீர்; கர்த்தாவே, இந்த ஜாதியைப் பெருகப்பண்ணினீர்; நீர் மகிமைப்பட்டீர், தேசத்தின் எல்லை எல்லாவற்றையும் நெடுந்தூரத்தில் தள்ளிவைத்தீர். கர்த்தாவே, நெருக்கத்தில் உம்மைத் தேடினார்கள்; உம்முடைய தண்டனை அவர்கள் மேலிருக்கையில் அந்தரங்க வேண்டுதல் செய்தார்கள்.”—ஏசாயா 26:15, 16.
14 இன்று கடவுளுடைய இஸ்ரவேலரின் எல்லைகள் பூமியெங்கும் விரிவடைந்துள்ளன. இந்த ஆவிக்குரிய தேசத்தாரோடு கிட்டத்தட்ட அறுபது லட்சம் பேர் அடங்கிய திரள் கூட்டமும் சேர்ந்துகொண்டுள்ளது. நற்செய்தியை பிரசங்கிக்கும் அதனுடைய வேலையிலும் இந்தத் திரள் கூட்டம் ஊக்கமாய் பங்கெடுக்கிறது. (மத்தேயு 24:14) யெகோவாவிடமிருந்து என்னே ஆசீர்வாதம்! மேலும், அவருடைய பெயருக்கு இது எந்தளவுக்கு மகிமையை சேர்க்கிறது! இந்தப் பெயர் இன்று 235 நாடுகளில் ஒலிக்கிறது. இது, கடவுளுடைய வாக்குறுதியின் அருமையான நிறைவேற்றமல்லவா!
15. என்ன அடையாள உயிர்த்தெழுதல் 1919-ல் நிகழ்ந்தது?
15 பாபிலோனின் சிறையிருப்பிலிருந்து தப்பிப்பதற்கு யெகோவாவின் உதவி யூதாவுக்குத் தேவைப்பட்டது. எந்த உதவியுமின்றி தானாகவே யூதாவால் விடுதலை பெற்றிருக்க முடிந்திருக்காது. (ஏசாயா 26:17, 18) அதேவிதமாக, 1919-ல் கடவுளுடைய இஸ்ரவேலர் விடுதலை செய்யப்பட்டது அவர்களுக்கு யெகோவாவின் ஆதரவு இருந்ததற்கு நிரூபணம். அவரின்றி அது நிகழ்ந்திருக்காது. அவர்களுடைய நிலையில் ஏற்பட்ட மாற்றம் வெகு ஆச்சரியத்தை அளித்தது; ஆதலால் ஏசாயா அதை உயிர்த்தெழுதலுக்கு ஒப்பிட்டார்: “மரித்த உம்முடையவர்கள் பிரேதமான என்னுடையவர்களோடே கூட எழுந்திருப்பார்கள்; மண்ணிலே தங்கியிருக்கிறவர்களே, விழித்துக் கெம்பீரியுங்கள்; உம்முடைய பனி பூண்டுகளின்மேல் பெய்யும் பனிபோல் இருக்கும்; மரித்தோரைப் பூமி புறப்படப்பண்ணும்.” (ஏசாயா 26:19; வெளிப்படுத்துதல் 11:7-11) ஆம், சொல்லப்போனால், மரணத்தில் செயலிழந்தவர்கள், மீண்டும் செயல்படும்படி மறுபடியும் பிறப்பிக்கப்பட்டதுபோல் ஆவர்!
ஆபத்தான காலத்தில் பாதுகாப்பு
16, 17. (அ) பாபிலோனின் வீழ்ச்சியிலிருந்து தப்பிப்பிழைக்க பொ.ச.மு. 539-ல் யூதர்கள் என்ன செய்ய வேண்டியிருந்தது? (ஆ) “அறைகளுக்குள்ளே” என்பது இன்று பெரும்பாலும் எவற்றைக் குறிக்கிறது, அவை நமக்கு எப்படி பயனளிக்கின்றன?
16 யெகோவாவின் ஊழியர்களுக்கு அவருடைய பாதுகாப்பு என்றும் தேவை. சீக்கிரத்தில் அவர் இறுதியாக சாத்தானிய உலகுக்கு எதிராக தம்முடைய கையை நீட்டவிருக்கிறார்; எனவே என்றுமில்லாத அளவுக்கு அவருடைய வணக்கத்தாருக்கு அவருடைய உதவி தேவைப்படும். (1 யோவான் 5:19) அந்த ஆபத்தான காலத்தைக் குறித்து யெகோவா நம்மை எச்சரிக்கிறதாவது: “என் ஜனமே, நீ போய் உன் அறைகளுக்குள்ளே பிரவேசித்து, உன் கதவுகளைப் பூட்டிக்கொண்டு, சினம் கடந்துபோகுமட்டும் கொஞ்சநேரம் ஒளித்துக்கொள். இதோ, பூமியினுடைய குடிகளின் அக்கிரமத்தினிமித்தம் அவர்களை விசாரிக்கும்படி கர்த்தர் தம்முடைய ஸ்தானத்திலிருந்து புறப்பட்டு வருவார்; பூமி தன் இரத்தப்பழிகளை வெளிப்படுத்தி, தன்னிடத்தில் கொலை செய்யப்பட்டவர்களை இனி மூடாதிருக்கும்.” (ஏசாயா 26:20, 21; செப்பனியா 1:14) பொ.ச.மு. 539-ல், பாபிலோனின் வீழ்ச்சியிலிருந்து தப்பிப்பிழைக்க என்ன செய்ய வேண்டுமென்பதை யூதர்களுக்கு இந்த எச்சரிக்கை சுட்டிக்காட்டியது. அதற்குச் செவிசாய்த்து தங்கள் வீடுகளிலேயே அடைந்து கிடந்தவர்கள், தெருக்களில் வெற்றி நடைபோட்டு முன்னேறி வந்த வீரர்களின் கைகளிலிருந்து உயிர் தப்பினர்.
17 “அறைகளுக்குள்ளே” என தீர்க்கதரிசனத்தில் சொல்லப்பட்டது உலகெங்குமுள்ள யெகோவாவின் ஜனங்களுடைய பத்தாயிரக்கணக்கான சபைகளை இன்று குறித்துக்காட்டலாம். அத்தகைய சபைகள் இன்றும்கூட பாதுகாப்பை அளிக்கின்றன. இங்கு, மூப்பர்கள் காட்டும் அன்பான கவனிப்பில் தங்கள் சகோதரர்களின் மத்தியில் கிறிஸ்தவர்கள் பாதுகாப்பை அனுபவிக்கின்றனர். (ஏசாயா 32:1, 2; எபிரெயர் 10:24, 25) கீழ்ப்படிதலை சார்ந்தே தப்பிப்பிழைத்தல் சாத்தியமாகும் இந்த உலகின் முடிவு சமீபித்து வருவதை கருத்தில் கொள்கையில், சபைகள் பாதுகாப்பளிப்பது இன்னும் அதிக உண்மையாய் உள்ளது.—செப்பனியா 2:3.
18. யெகோவா எப்படி “சமுத்திரத்தில் இருக்கிற வலுசர்ப்பத்தைக் கொன்றுபோடுவார்”?
18 அந்தக் காலத்தைப் பற்றி ஏசாயா தீர்க்கதரிசனம் உரைப்பதாவது: “அக்காலத்திலே கர்த்தர் லிவியாதான் என்னும் நீண்ட பாம்பை, லிவியாதான் என்னும் கோணலான சர்ப்பத்தையே, கடிதும் பெரிதும் பலத்ததுமான தமது பட்டயத்தால் தண்டிப்பார்; சமுத்திரத்தில் இருக்கிற வலுசர்ப்பத்தைக் கொன்றுபோடுவார்.” (ஏசாயா 27:1) இன்றைய “லிவியாதான்” எது? அது, “பழைய பாம்பாகிய” சாத்தானையும் அவனுடைய பொல்லாத உலகத்தையுமே சுட்டிக்காட்டுவதாக இருக்கலாம்; இந்த உலகை பயன்படுத்தியே கடவுளுடைய இஸ்ரவேலர்களின்மீது அவன் போர் தொடுக்கிறான். (வெளிப்படுத்துதல் 12:9, 10, 17; 13:14, 16, 17) 1919-ல் கடவுளுடைய ஜனங்களின் மீதிருந்த லிவியாதானின் பிடி தளர்ந்தது. காலப்போக்கில் அவன் இருந்த இடம் சுவடு தெரியாமல் மறையும். (வெளிப்படுத்துதல் 19:19-21; 20:1-3, 10) இவ்வாறு யெகோவா “சமுத்திரத்தில் இருக்கிற வலுசர்ப்பத்தைக் கொன்றுபோடுவார்.” அதற்கிடையில், யெகோவாவின் ஜனங்களுக்கு விரோதமாக லிவியாதான் எடுக்கும் எந்த முயற்சியும் படுதோல்வியடையும். (ஏசாயா 54:17) இத்தகைய உறுதியை பெறுவது எத்தனை ஆறுதலளிக்கிறது!
“நல்ல திராட்சரசத்தைத் தரும் திராட்சத்தோட்டம்”
19. மீதியானவர்களின் இன்றைய நிலை என்ன?
19 யெகோவாவிடமிருந்து கிடைத்திருக்கும் இந்த அனைத்து ஒளியையும் கருத்தில் கொள்கையில், மகிழ்ச்சியில் திளைக்க நமக்கு காரணமிருக்கிறது அல்லவா? நிச்சயம் இருக்கிறது! யெகோவாவின் ஜனங்களுடைய மகிழ்ச்சியை ஏசாயா வெகு அழகாக விவரிக்கிறார்: “அக்காலத்திலே நல்ல திராட்சரசத்தைத் தரும் திராட்சத்தோட்டம் உண்டாயிருக்கும்; அதைக் குறித்துப்பாடுங்கள். கர்த்தராகிய நான் அதைக் காப்பாற்றி, அடிக்கடி அதற்குத் தண்ணீர்ப்பாய்ச்சி, ஒருவரும் அதைச் சேதப்படுத்தாதபடிக்கு அதை இரவும்பகலும் காத்துக்கொள்வேன்.” (ஏசாயா 27:2, 3) கடவுளுடைய இஸ்ரவேலரில் மீதியானோருக்காகவும் கடுமையாய் உழைக்கும் அவர்களுடைய கூட்டாளிகளுக்காகவும் யெகோவா தம்முடைய ‘திராட்சத்தோட்டத்தை’ பராமரித்திருக்கிறார். (யோவான் 15:1-8) அவருடைய பெயருக்கு மகிமையையும் பூமியிலுள்ள அவருடைய ஊழியர்களின் மத்தியில் பெரும் மகிழ்ச்சியையும் பலனாக அது பெற்றுத் தந்திருக்கிறது.
20. கிறிஸ்தவ சபையை யெகோவா எப்படி பாதுகாக்கிறார்?
20 1918-ல் யெகோவா தம் கோபத்தால் அபிஷேகம் செய்யப்பட்ட ஊழியர்கள் ஆவிக்குரிய சிறையிருப்புக்கு செல்ல யெகோவா அனுமதித்தார்; அவருடைய அந்தக் கோபம் தணிந்துவிட்டதைக் கண்டு நாம் குதூகலமடையலாம். “உக்கிரம் என்னிடத்தில் இல்லை; முட்செடியையும் நெரிஞ்சிலையும் எனக்கு விரோதமாய் யுத்தத்தில் கொண்டுவருகிறவன் யார்? நான் அவைகள்மேல் வந்து, அவைகளை ஏகமாய்க் கொளுத்திவிடுவேன்; இல்லாவிட்டால் அவன் என் பெலனைப் பற்றிக்கொண்டு என்னோடே ஒப்புரவாகட்டும்; அவன் என்னோடே ஒப்புரவாவான்” என யெகோவாவே சொல்கிறார். (ஏசாயா 27:4, 5) அவருடைய திராட்சச்செடிகள் “நல்ல திராட்சரசத்தை” தொடர்ந்து பெருமளவில் அளித்து வரும்படி பார்த்துக் கொள்வதற்காக அவற்றை பாதிக்கும் நெரிஞ்சில் போன்ற எந்த செல்வாக்கையும் யெகோவா நசுக்கி எரித்துப்போடுகிறார். எனவே, கிறிஸ்தவ சபையின் நலனை யாரும் ஆபத்துக்குள்ளாக்காமல் இருப்பார்களாக! எல்லாரும் ‘யெகோவாவின் பெலனைப் பற்றிக்கொண்டு’ அவருடைய தயவையும் பாதுகாப்பையும் நாடுவார்களாக. இவ்வாறு செய்கையில், கடவுளுடன் நாம் ஒப்புரவாகிறோம். இது அவ்வளவு முக்கியமானதாக உள்ளதால் ஏசாயா இதை இருமுறை குறிப்பிடுகிறார்.—சங்கீதம் 85:1, 2, 8; ரோமர் 5:1.
21. எந்த விதத்தில் உலகம் “பலனால்” நிறைந்திருக்கிறது?
21 அந்த ஆசீர்வாதங்கள் தொடருகின்றன: “யாக்கோபு வேர்பற்றி, இஸ்ரவேல் பூத்துக்காய்த்து உலகத்தைப் பலனால் நிரப்பும் நாட்கள் வரும்.” (ஏசாயா 27:6) 1919 முதற்கொண்டு இந்த வசனம் நிறைவேறி வருகிறது; இது யெகோவாவின் வல்லமைக்கு அற்புதமான ஆதாரத்தை அளிக்கிறது. அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் ஊட்டச்சத்துமிக்க ஆவிக்குரிய உணவு எனும் “பலனால்” பூமியை நிரப்பியிருக்கின்றனர். ஊழல் நிறைந்த உலகில் கடவுளுடைய உயர்ந்த தராதரங்களைக் காத்துக்கொள்வதில் சந்தோஷப்படுகின்றனர். அவர்களை பெருக செய்வதன் மூலம் யெகோவா தொடர்ந்து ஆசீர்வாதத்தைப் பொழிந்து வருகிறார். இதன் விளைவாக, அவர்களுடைய லட்சக்கணக்கான தோழர்களாகிய வேறே ஆடுகள் ‘இரவும் பகலும் [கடவுளுக்கு] பரிசுத்த சேவை செய்து வருகின்றனர்.’ (வெளிப்படுத்துதல் 7:15, NW) அந்தப் ‘பலனை’ அனுபவிப்பதிலும் மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வதிலும் கிடைக்கும் மாபெரும் சிலாக்கியத்தை ஒருபோதும் தவறவிடாதிருப்போமாக!
22. வெளிச்சத்தை ஏற்றுக்கொள்பவர்களுக்கு என்ன ஆசீர்வாதங்கள் காத்திருக்கின்றன?
22 இருள் பூமியையும் காரிருள் ஜனங்களையும் மூடியிருக்கும் இந்தக் கடினமான காலத்தில், யெகோவா தம்முடைய ஜனத்தின்மீது ஆவிக்குரிய வெளிச்சத்தை பிரகாசிக்க செய்வதற்கு நாம் நன்றியுள்ளவர்களாய் இருக்க வேண்டாமா? (ஏசாயா 60:2; ரோமர் 2:19; 13:12) அதை ஏற்றுக்கொள்கிறவர்கள் அனைவருக்கும் இன்று அந்த வெளிச்சம் மன சமாதானத்தையும் சந்தோஷத்தையும் அளிக்கிறது; எதிர்காலத்தில் நித்திய ஜீவனையே அளிக்கும். எனவே நல்ல காரணத்துடன், வெளிச்சத்தை நேசிக்கும் நாம் யெகோவாவுக்கு இதயப்பூர்வமான துதியை ஏறெடுத்து, சங்கீதக்காரனுடன் சேர்ந்து, “கர்த்தர் என் ஜீவனின் பெலனானவர், யாருக்கு அஞ்சுவேன்? கர்த்தருக்குக் காத்திரு; அவர் உன் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார்; திடமனதாயிருந்து, கர்த்தருக்கே காத்திரு” என சொல்வோமாக.—சங்கீதம் 27:1ஆ, 14.
உங்களால் நினைவுகூர முடியுமா?
• யெகோவாவின் ஜனங்களை எதிர்ப்போருக்கு என்ன எதிர்காலம் உள்ளது?
• என்ன அதிகரிப்பு ஏசாயாவால் தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டிருக்கிறது?
• நாம் எந்த “அறைகளுக்குள்ளே” தொடர்ந்திருக்க வேண்டும், ஏன்?
• யெகோவாவின் ஜனங்களுடைய நிலைமை ஏன் அவருக்குத் துதியை ஏறெடுக்கிறது?
[பக்கம் 22-ன் பெட்டி]
புதிய பிரசுரம்
இந்த இரண்டு படிப்பு கட்டுரைகளிலும் கலந்தாலோசிக்கப்பட்ட பெரும்பாலான தகவல்கள் 2000/2001-ம் ஆண்டுக்கான மாவட்ட மாநாட்டில் பேச்சாக அளிக்கப்பட்டன. அப்பேச்சின் முடிவில் ஏசாயா தீர்க்கதரிசனம்—மனிதகுலத்திற்கு ஒளிவிளக்கு I என்ற தலைப்புடைய புதிய புத்தகம் வெளியிடப்பட்டது. 416 பக்கங்களைக் கொண்ட இந்தப் புத்தகத்தில் ஏசாயா புத்தகத்தின் முதல் 40 அதிகாரங்கள் வசனம் வசனமாக கலந்தாலோசிக்கப்பட்டுள்ளது.
[பக்கம் 18-ன் படம்]
யெகோவாவின் ‘பெலனான நகரமாகிய’ அவருடைய அமைப்பில் நீதிமான்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்
[பக்கம் 19-ன் படம்]
“இரவிலே” ஏசாயா யெகோவாவை தேடினார்
[பக்கம் 21-ன் படம்]
யெகோவா தம்முடைய ‘திராட்சத்தோட்டத்தை’ பாதுகாத்து, பலனளிக்கிறார்