ஜாதிகளோடு யெகோவாவுக்குள்ள வழக்கு
“ஆரவாரம் பூமியின் கடையாந்தரமட்டும் போய் எட்டும்; ஜாதிகளோடே கர்த்தருக்கு வழக்கு இருக்கிறது.”—எரேமியா 25:31.
1, 2. (அ) யோசியா அரசனின் மரணத்திற்குப்பின் யூதாவில் என்ன நடந்தது? (ஆ) யூதாவின் கடைசி அரசன் யார், அவன் எவ்வாறு தன்னுடைய உண்மையற்றதன்மைக்காக கஷ்டம் அனுபவித்தான்?
யூதா தேசம் கையாளுவதற்குக் கடினமான காலங்களை எதிர்ப்பட்டது. யோசியா என்ற ஒரு நல்ல அரசர் யெகோவாவின் உக்கிரகோபத்தைத் தற்காலிகமாகத் தாமதப்படுத்தியிருந்தார். ஆனால் பொ.ச.மு. 629-ல் யோசியா கொல்லப்பட்டபோது என்ன பின்தொடர்ந்தது? அவரை அடுத்துவந்த அரசர்கள் யெகோவாவை அவமதித்தார்கள்.
2 யோசியாவின் நான்காவது குமாரனும், யூதாவின் கடைசி அரசனுமாகிய சிதேக்கியா தொடர்ந்து, 2 இராஜாக்கள் 24:19-ல் சொல்கிறபடி, “[தன்னுடைய மூத்த சகோதரன்] யோயாக்கீம் செய்தபடியெல்லாம் அவனும் கர்த்தருடைய பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்.” விளைவு? எருசலேமுக்கு விரோதமாக நேபுகாத்நேச்சார் வந்து, சிதேக்கியாவைச் சிறைகொண்டுபோய், அவனுடைய கண்களுக்கு முன்பாக அவனுடைய குமாரர்களைக் கொன்று, அவனைக் குருடாக்கி, பாபிலோனுக்குக் கொண்டுசென்றான். மேலுமாக, பாபிலோனியர்கள் யெகோவாவின் ஆராதனைக்குப் பயன்படுத்தப்பட்ட பாத்திரங்களைக் கொள்ளைப்பொருட்களாகக் கைப்பற்றி, ஆலயத்தையும் பட்டணத்தையும் எரித்துப்போட்டார்கள். தப்பிப்பிழைத்தவர்கள் பாபிலோனில் நாடு கடத்தப்பட்டவர்களானார்கள்.
3. பொ.ச.மு. 607-ல் எருசலேம் அழிக்கப்பட்டதுடன் என்ன காலப்பகுதி ஆரம்பித்தது, அந்தக் காலப்பகுதியின் முடிவில் என்ன சம்பவிக்க இருந்தது?
3 அந்த வருடம், பொ.ச.மு. 607, எருசலேமின் இறுதி பாழ்க்கடிப்பை மட்டும் குறிக்காமல், லூக்கா 21:24-ல் குறிப்பிடப்பட்டுள்ள ‘புறஜாதியாரின் காலங்களின்’ துவக்கத்தையும் குறித்தது. இந்த 2,520-வருட காலப்பகுதி நம்முடைய நூற்றாண்டில் 1914-ம் வருடத்தில் முடிவடைந்தது. அதற்குள் யெகோவா, நேபுகாத்நேச்சாரைவிட பெரியவராயிருக்கிற சிங்காசனத்தில் அமர்த்தப்பட்ட தம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் மூலம், ஊழல்நிறைந்த உலகின்மீது நியாயத்தீர்ப்பை அறிவித்து, அதை நிறைவேற்றுவதற்கானக் காலம் வந்திருந்தது. இந்த நியாயத்தீர்ப்பு யூதாவின் நவீனநாளைய இணையுடன் துவங்குகிறது; இந்த இணையானது பூமியில் கடவுளையும் கிறிஸ்துவையும் பிரதிநிதித்துவம் செய்வதாக உரிமைபாராட்டுகிறது.
4. எரேமியாவின் தீர்க்கதரிசனத்தின் தொடர்பாக என்ன கேள்விகள் இப்போது எழுப்பப்படுகின்றன?
4 யூதாவின் அரசர்களின்கீழ், அவளுடைய இறுதி வருடங்களின்போது இருந்த குழப்பத்துக்கும்—அழிவுக்குரிய சம்பவங்கள் சுற்றுப்புற தேசங்களையும் பாதிப்பதுடன்—இன்று கிறிஸ்தவமண்டலத்தில் உள்ள குழப்பத்துக்கும் இடையே நம்மால் இணைப்பொருத்தத்தைப் பார்க்க முடிகிறதா? நிச்சயமாகவே நாம் பார்க்கிறோம்! அப்படியானால், காரியங்களை இன்று யெகோவா எவ்வாறு கையாளுவார் என்பதைப்பற்றி எரேமியா தீர்க்கதரிசனம் என்ன குறிப்பிடுகிறது? நாம் பார்க்கலாம்.
5, 6. (அ) 1914 முதற்கொண்டு, எவ்வாறு கிறிஸ்தவமண்டலத்திலிருந்து வருகிற நிலைமை, யூதா அழிக்கப்படுவதற்கு சற்று முன்னிருந்த நிலைமையை ஒத்திருக்கிறது? (ஆ) நவீன எரேமியா என்ன செய்தியை கிறிஸ்தவமண்டலத்திற்கு எடுத்துச்சென்றிருக்கிறது?
5 பிரிட்டிஷ் கணித வல்லுநரும் தத்துவ அறிஞருமாயிருந்த பெர்ட்ரன்ட் ரஸல் என்பவர் சுமார் 40 வருடங்களுக்கு முன்பு குறிப்பிட்டார்: “1914 முதற்கொண்டே, உலகிலுள்ள போக்குகளின் பேரில் உணர்வுள்ளவர்களாயிருக்கிற ஒவ்வொருவரும் இன்னும் பெரிய சேதத்தை நோக்கிச்செல்லும் முன்நிர்ணயிக்கப்பட்ட, முன்தீர்மானிக்கப்பட்ட அணிவகுப்பைப் போல தோன்றியிருப்பதால் அதிகமாகக் கலக்கமுற்றிருக்கிறார்கள்.” மேலும் ஜெர்மன் அரசியல் மேதை, காண்ராட் அடினாயர் என்பவர் சொன்னார்: “பாதுகாப்பும் அமைதியும் 1914 முதற்கொண்டு மனிதர்களின் வாழ்விலிருந்து மறைந்துவிட்டிருக்கின்றன.”
6 இன்று, எரேமியாவின் காலத்திலிருந்ததைப்போல, ஒரு காரிய ஒழுங்குமுறையின் முடிவு நெருங்கிவருவது, அப்பாவிகளுடைய இரத்தம் பேரளவில் சிந்தப்படுவதன் மூலம், குறிப்பாக இந்த நூற்றாண்டில் நடைபெற்ற இரண்டு உலகப் போர்களினால் குறிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் போர்கள், பெரும்பாலும், பைபிளின் கடவுளை வணங்குவதாய் உரிமைபாராட்டும் கிறிஸ்தவமண்டல தேசங்களால் தொடுக்கப்பட்டன. என்னே மாய்மாலம்! அவர்களிடத்திற்கு எரேமியா 25:5, 6-ல் உள்ள வார்த்தைகளைச் சொல்லி, யெகோவா தம்முடைய சாட்சிகளை அனுப்பியிருக்கிறார் என்பதில் எவ்வித ஆச்சரியமும் இல்லை: “உங்களில் அவனவன் தன்தன் பொல்லாத வழியையும், உங்கள் கிரியைகளின் பொல்லாப்பையும் விட்டுத் திரும்பி, . . . அந்நிய தேவர்களைப் பின்பற்றாமலும், அவைகளுக்கு ஆராதனைசெய்யாமலும், அவைகளைப் பணியாமலுமிருந்து, நான் உங்களுக்குத் தீமை செய்யாதபடிக்கு உங்கள் கைகளின் செய்கைகளால் எனக்குக் கோபமுண்டாக்காமலும், இருங்கள்.”
7. கிறிஸ்தவமண்டலம் யெகோவாவின் எச்சரிப்புகளை அசட்டை செய்திருக்கிறது என்பதற்கு என்ன அத்தாட்சி இருக்கிறது?
7 என்றாலும், கிறிஸ்தவமண்டல தேசங்கள் திரும்பிவர தவறியிருக்கின்றன. கொரியாவிலும் வியட்நாமிலும் போர் தெய்வத்துக்கு அவர்கள் மேலுமான பலிகளைச் செலுத்துவதிலிருந்து இது காட்டப்பட்டிருக்கிறது. மேலும் அவர்கள் தொடர்ந்து மரண வியாபாரிகளாகிய போர்த்தளவாட உற்பத்தியாளர்களுக்கு வேண்டிய நிதி ஆதரவைக் கொடுத்துவருகிறார்கள். 1980-களில், ஒவ்வொரு வருடமும் போர்த்தளவாடங்களுக்குச் செலவழிக்கப்பட்ட ஏறக்குறைய இலட்சக்கோடி டாலர்களில் பெரும் பங்கை கிறிஸ்தவமண்டல தேசங்கள் அளித்தன. 1951 முதல் 1991 வரை, ஐக்கிய மாகாணங்களின் இராணுவ செலவுகள் மட்டும் எல்லா அமெரிக்க கம்பெனிகளின் ஒன்றுசேர்க்கப்பட்ட நிகர லாபங்களை மீறிவிட்டிருந்தது. மிகவும் அதிகமாக பிரஸ்தாபிக்கப்பட்ட பனிப் போருடைய முடிவு முதற்கொண்டு, பழமையான அணு ஆயுதங்களில் குறைப்புகள் செய்யப்பட்டுள்ளன; ஆனால் மற்ற சாவுக்கேதுவானக் கருவிகளைக் கொண்ட பெரிய படைக்கலச்சாலைகள் நிலைத்திருக்கின்றன, அவை தொடர்ந்து வளர்ச்சியடைகின்றன. என்றோ ஒருநாள் இவை பயன்படுத்தப்படக்கூடும்.
எதையும் அனுமதிக்கும் கிறிஸ்தவமண்டலத்திற்கு எதிராக நியாயத்தீர்ப்பு
8. எரேமியா 25:8, 9-ன் வார்த்தைகள் கிறிஸ்தவமண்டலத்தின்மேல் எப்படி நிறைவேறும்?
8 எரேமியா 25:8, 9-ல் காணப்படும் யெகோவாவின் மேலுமான வார்த்தைகள், நீதியுள்ள கிறிஸ்தவ தராதரங்களுக்கு இசைவாக வாழத் தவறிய கிறிஸ்தவமண்டலத்துக்கு இப்போது குறிப்பாகப் பொருந்துகின்றன: “நீங்கள் என் வார்த்தைகளைக் கேளாமற்போனபடியினால், இதோ, நான் வடக்கேயிருக்கிற சகல வம்சங்களையும், என் ஊழியக்காரனாகிய நேபுகாத்நேச்சார் என்கிற பாபிலோன் ராஜாவையும் அழைத்தனுப்பி, அவர்களை இந்தத் தேசத்துக்கு விரோதமாகவும், இதின் குடிகளுக்கு விரோதமாகவும், சுற்றிலுமிருக்கிற இந்த எல்லா ஜாதிகளுக்கும் விரோதமாகவும் வரப்பண்ணி, அவைகளைச் சங்காரத்துக்கு ஒப்புக்கொடுத்து, அவைகளைப் பாழாகவும் இகழ்ச்சிக்குறியாகிய ஈசல்போடுதலாகவும், நித்திய வனாந்தரங்களாகவும் செய்வேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.” இவ்வாறு, கடவுளுடைய மக்களாக உரிமைபாராட்டும் கிறிஸ்தவமண்டலத்திலிருந்து மகா உபத்திரவம் ஆரம்பித்து, கடைசியில் ‘சுற்றிலுமிருக்கிற இந்த எல்லா ஜாதிகளிடத்தில்’ பூமி முழுவதும் பரவும்.
9. நம்முடைய நாளில், கிறிஸ்தவமண்டலத்தின் ஆவிக்குரிய நிலை என்ன வழிகளில் மோசமாகி இருக்கிறது?
9 பைபிள் மதிக்கப்பட்டு, விவாகமும் குடும்ப வாழ்க்கையும் சந்தோஷத்திற்கான ஊற்றுமூலமாக பெரும்பாலும் எங்குமே கருதப்பட்டு, மக்கள் சீக்கிரமாக எழுந்து தங்களுடைய அன்றாட வேலையில் திருப்தியைக் கண்டடைந்த ஒரு காலம் கிறிஸ்தவமண்டலத்தில் இருந்தது. சாயங்கால விளக்கொளியின் மூலம் கடவுளுடைய வார்த்தையை வாசித்து, படிப்பதன் மூலம் அநேகர் தங்களுக்குப் புத்துணர்ச்சி அளித்துக்கொண்டனர். ஆனால் இன்று, கலப்பான பாலுறவு, விவாகரத்து, போதைமருந்து துர்ப்பிரயோகம், குடிவெறி, தீச்செயல், பேராசை, சோம்பலான வேலை பழக்கங்கள், டிவி-க்கு அடிமையாதல், மற்ற தீயொழுக்கங்களும் வாழ்க்கையை ஆபத்துண்டாக்கும் அளவுக்குக் களங்கப்படுத்தியிருக்கின்றன. எல்லாவற்றையும் அனுமதிக்கும் கிறிஸ்தவமண்டலத்தின்மீது யெகோவா தேவன் நிறைவேற்றவிருக்கும் பாழ்க்கடிப்புக்கு முன்னதாக இது இருக்கிறது.
10. யெகோவாவின் நியாயத்தீர்ப்புகள் நிறைவேற்றப்பட்டப்பின் கிறிஸ்தவமண்டலத்தின் நிலைமையை விவரிக்கவும்.
10 எரேமியா 25-ம் அதிகாரத்தில் 10, 11 வசனங்களில் நாம் வாசிப்பது போல யெகோவா அறிவிக்கிறார்: “மகிழ்ச்சியின் சத்தத்தையும், சந்தோஷத்தின் சத்தத்தையும், மணவாளனின் சத்தத்தையும், மணவாட்டியின் சத்தத்தையும், ஏந்திரத்தின் சத்தத்தையும் விளக்கின் வெளிச்சத்தையும் அவர்களிலிருந்து நீங்கப்பண்ணுவேன் . . . இந்தத் தேசமெல்லாம் வனாந்தரமும் பாழுமாகும்.” பெரிய ஆலயங்களும் கிறிஸ்தவமண்டலத்தின் டாம்பீக கட்டடங்களும் அழிவுக்கு இடிந்து விழும்போது உண்மையிலேயே திகைப்பூட்டுவதாய் இருக்கும். இந்த அழிவு எந்தளவு விரிவானதாய் இருக்கும்? எரேமியாவின் காலத்தில், யூதா மேலும் சுற்றுப்புற தேசங்களின் பாழ்க்கடிப்பு 70 வருடங்களாக நீடித்தது; சங்கீதம் 90:10 அதை ஒரு முழு வாழ்நாள்காலத்திற்கு ஒத்ததாக விவரிக்கிறது. இன்று யெகோவா நியாயத்தீர்ப்பை நிறைவேற்றுவது முழுமையாகவும் நித்தியமாகவும் இருக்கும்.
மகா பாபிலோனுக்கு எதிராக நியாயத்தீர்ப்பு
11. கிறிஸ்தவமண்டலத்தை அழிப்பதில் கருவியாகப் பயன்படுத்தப்படுவது யார்? ஏன்?
11 வெளிப்படுத்துதல் 17:12-17-ல் முன்னுரைத்திருக்கிறபடி, பொய் மத உலகப் பேரரசைப் பாழ்க்கடிப்பதற்கான தம்முடைய ‘யோசனையை நிறைவேற்ற’ யெகோவா அந்தப் “பத்துக் கொம்புக”ளின்—ஐக்கிய நாடுகளின் இராணுவ மயமாக்கப்பட்ட அங்கத்தினர்களின்—இருதயங்களைத் தூண்டிவிடுவதன் மூலம் தம்முடைய அசாதாரணமானச் செயலைத் துவங்கும் காலம் வரும். ஆனால் இது எப்படி நடக்கும்? வெளிப்படுத்துதல் 17-ம் அதிகாரத்தில் சொல்லப்பட்டுள்ள அந்தப் ‘பத்துக் கொம்புகள்’ 16-ம் வசனத்தில் உள்ள வார்த்தைகளின்படி, “அந்த வேசியைப் பகைத்து, . . . அவளை நெருப்பினால் சுட்டெரித்துப்போடு”வதற்கு எண்ணற்ற வழிகள் இருக்கின்றன. அணு ஆயுதங்கள் அபரிமிதமாகப் பெருகியிருப்பதும் பூமியிலுள்ள அநேக ஆபத்தான இடங்களில் இன்னும் பெருகிவருவதும் உண்மைதான். ஆனால் யெகோவா தம்முடைய பழிவாங்குதலை நிறைவேற்ற தூண்டும் எண்ணத்தை எவ்வாறு அரசியல் ஆட்சியாளர்களுடைய இருதயங்களில் வைப்பார் என்பதை நாம் காத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
12. (அ) பாபிலோன் எருசலேமை அழித்தபின் அவளுக்கு என்ன சம்பவித்தது? (ஆ) கிறிஸ்தவமண்டலத்தின் அழிவிற்குப்பின் தேசங்களுக்கு என்ன நடக்கும்?
12 பூர்வ காலங்களில் யெகோவாவின் உக்கிரகோபத்தை அனுபவிப்பதற்கு பாபிலோனின் காலமாக இருந்தது. அதன்படி, எரேமியா 25-ம் அதிகாரம் 12-ம் வசனத்தோடு துவங்கி, அந்தத் தீர்க்கதரிசனம் பிற்காலத்திய, மாற்றமடைந்த ஒரு நோக்குநிலையிலிருந்து காரியங்களை நோக்குகிறது. இனிமேலும் யெகோவாவின் சங்கரிப்பாளருடைய பங்கை வகிக்காத நேபுகாத்நேச்சாரும் பாபிலோனும் இப்போது எல்லா உலக தேசங்களுக்குள் உட்பட்டிருக்கிறார்கள். இது இன்றைய சூழ்நிலைமையோடு ஒத்திருக்கிறது. வெளிப்படுத்துதல் 17-ம் அதிகாரத்தின் ‘அந்த பத்துக் கொம்புகள்’ பொய் மதத்தை அழித்துப்போடும்; ஆனால் வெளிப்படுத்துதல் 19-ம் அதிகாரத்தில் விவரிக்கப்பட்டிருக்கிறபடி அவர்கள்தானே பின்னர் ‘பூமியின்’ மற்ற எல்லா ‘ராஜாக்களோடும்’ சேர்ந்து அழிவை அனுபவிப்பார்கள். எரேமியா 25:13, 14, பாபிலோன் எவ்வாறு யெகோவாவின் மக்களைச் சுரண்டி வாழ்ந்த “சகல ஜாதிக”ளோடுகூட நியாயத்தீர்ப்புக்கு வரும் என்பதை விவரிக்கிறது. யெகோவா யூதாவைத் தண்டிப்பதில் நேபுகாத்நேச்சாரைச் சங்கரிப்பாளனாகப் பயன்படுத்தினார். ஆனாலும் உதாரணமாக, யெகோவாவின் ஆலய பாத்திரங்களை அசுத்தமாக்குவதன் மூலம் மெய்ப்பித்துக் காட்டப்பட்டபடி, அவனும் பின்வந்த பாபிலோனிய அரசர்களும் பெருமையோடு யெகோவாவுக்கே விரோதமாகத் தங்களைத்தாங்களே மேன்மைப்படுத்திக்கொண்டார்கள். (தானியேல் 5:22, 23) மேலும் பாபிலோனியர்கள் எருசலேமை அழித்தபோது யூதாவை அடுத்திருந்த தேசங்கள்—மோவாப், அம்மோன், தீரு, ஏதோம், மேலும் மற்றவை—பூரிப்படைந்து கடவுளுடைய மக்களைப் பரியாசம் செய்தன. அவையும்கூட யெகோவாவிடமிருந்து அவற்றிற்குரிய சரியீடான விளைவை அறுவடை செய்யவேண்டும்.
‘எல்லா ஜாதிகளுக்கும்’ விரோதமாக நியாயத்தீர்ப்பு
13. ‘இந்த உக்கிரமாகிய மதுபானத்தின் பாத்திரம்’ என்பதால் அர்த்தப்படுத்தப்படுவது என்ன, மேலும் அந்தப் பாத்திரத்தில் குடிப்பவர்களுக்கு என்ன நடக்கிறது?
13 ஆதலால், 25-ம் அதிகாரம், 15, 16 வசனங்களில் பதிவுசெய்யப்பட்டபடி எரேமியா அறிவிக்கிறார்: “இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் என்னை நோக்கி: நான் உன்னை அனுப்புகிற ஜாதிகள் குடித்து, நான் தங்களுக்குள் அனுப்பும் பட்டயத்தால் அவர்கள் தள்ளாடி, புத்திகெட்டுப்போகும்படிக்கு, இந்த உக்கிரமாகிய மதுபானத்தின் பாத்திரத்தை நீ என் கையிலிருந்து வாங்கி, அவர்கள் எல்லாருக்கும் அதிலே குடிக்கக்கொடு என்றார்.” ஏன் அது ‘யெகோவாவின் உக்கிரமாகிய மதுபானத்தின் பாத்திரம்’? மத்தேயு 26:39, 42-லும் யோவான் 18:11-லும், இயேசு தமக்கான கடவுளுடைய சித்தத்தை அடையாளப்படுத்தியதாக ஒரு “பாத்திரத்”தைப்பற்றி பேசினார். அதேபோல, அவருடைய தெய்வீக பழிவாங்குதலைக் குடிக்க தேசங்களுக்கான யெகோவாவின் சித்தத்தை அடையாளப்படுத்துவதற்கு ஒரு பாத்திரம் பயன்படுத்தப்படுகிறது. எரேமியா 25:17-26 இன்றுள்ள தேசங்களுக்கு முன்நிழலாக இருக்கும் இந்தத் தேசத் தொகுதிகளைப் பட்டியலிட்டுக் காட்டுகிறது.
14. எரேமியாவின் தீர்க்கதரிசனத்தின்படி, யெகோவாவின் உக்கிரமாகிய மதுபானத்தின் பாத்திரத்திலிருந்து குடிப்பவர்கள் யார், இது நம் நாளுக்கு எதை அர்த்தப்படுத்துகிறது?
14 யூதாவைப்போல, கிறிஸ்தவமண்டலம் “வனாந்தரமும் பாழும் இகழ்ச்சிக்குறியாகிய ஈசல்போடுதலும் சாபமு”மாக ஆக்கப்பட்டப் பிறகு, பொய் மத உலகப் பேரரசின் மீதிபகுதிக்கு அழிவு காத்திருக்கிறது. அடுத்து, எகிப்தால் அடையாளப்படுத்தப்பட்ட முழு உலகமும் யெகோவாவின் உக்கிரமாகிய மதுபானத்தின் பாத்திரத்திலிருந்து குடிக்கவேண்டும்! ஆம், ‘வடக்கேயிருக்கிற எல்லா ராஜாக்களும், சமீபமானவர்களும் தூரமானவர்களுமாகிய அவரவர்களும், பூமியின்மீதுள்ள சகல தேசத்து ராஜ்யங்களும்’ குடிக்கவேண்டும். கடைசியாக, “சேசாக்கு என்கிற ராஜாவும் அவர்களுக்குப் பிற்பாடு குடிப்பான்.” மேலும் இந்த “சேசாக்கு என்கிற ராஜா” யார்? சேசாக்குப் பாபிலோனுக்கு ஓர் அடையாளப் பெயர், மறைமுகமான பெயர், அல்லது இரகசியப் பெயராகும். சாத்தான் எவ்வாறு பாபிலோனின்மீது ஒரு காணக்கூடாத அரசனாக இருந்தானோ, அதேபோல இயேசுவால் குறிப்பிடப்பட்டபடி அவன் இந்த நாள் வரையாக “உலகத்தின் அதிபதி”யாக இருக்கிறான். (யோவான் 14:30) இப்படியாக யெகோவாவின் உக்கிரமாகிய பாத்திரம் கடத்தப்படுகையில் நடக்கும் நிகழ்ச்சிகளின் வரிசையைத் தெளிவாக்குவதில் எரேமியா 25:17-26, வெளிப்படுத்துதல் 18 முதல் 20 அதிகாரங்களுக்கு இணையாக இருக்கிறது. முதலில், பொய் மத உலகப் பேரரசு அழிக்கப்படவேண்டும், அடுத்ததாக அரசியல் அதிகாரங்கள், அதற்குப் பின்னர் சாத்தான்தானே அபிஸ்ஸுக்குள்ளாக்கப்பட வேண்டும்.—வெளிப்படுத்துதல் 18:8; 19:19-21; 20:1-3.
15. ‘சமாதானமும் பாதுகாப்பும்’ என்ற அறைகூவல் கேட்கப்படும்போது என்ன நடக்கும்?
15 ஒரே ஒரு வல்லரசு மட்டும் மீந்திருக்கையில், பனிப் போர் முற்றுப்பெற்றதாக எண்ணப்பட்டது முதற்கொண்டு சமாதானம், பாதுகாப்புச் சம்பந்தமாக அதிகப் பேச்சு இருந்துவருகிறது. வெளிப்படுத்துதல் 17:10-ல் சொல்லப்பட்டதுபோல மூர்க்க மிருகத்தின் ஏழாவது தலையாயிருக்கும் அந்த வல்லரசு, “கொஞ்சக்காலம் தரித்திருக்கவேண்டும்.” ஆனால் அந்த “கொஞ்சக்காலம்” அதன் முடிவை நெருங்குகிறது. சீக்கிரத்தில், ‘சமாதானத்துக்கும் பாதுகாப்புக்குமான’ எல்லா அரசியல் அறைகூவல்களும் ‘சடிதியாய் அவர்கள் மேல் வரும் அழிவுக்கு’ வழிவகுக்கும். அப்படியாக அப்போஸ்தலன் பவுல் சொல்லுகிறார்.—1 தெசலோனிக்கேயர் 5:2, 3.
16, 17. (அ) யெகோவாவின் நியாயத்தீர்ப்பைத் தப்பிக்க எவராவது முயற்சி செய்தால், என்ன விளைவடையும்? (ஆ) என்ன அழிவுக்குரிய வழியில் யெகோவாவின் சித்தம் விரைவில் பூமியில் நடக்கும்?
16 கிறிஸ்தவமண்டலம் துவங்கி சாத்தானுடைய முழு உலக ஒழுங்குமுறையும் யெகோவாவுடைய உக்கிரமாகிய பாத்திரத்திலிருந்து குடித்தாகவேண்டும். 25-ம் அதிகாரம், 27 முதல் 29 வசனங்களில் பதிவுசெய்யப்பட்டுள்ள எரேமியாவுக்கான அவருடைய மேலுமான கட்டளை இதை உறுதிசெய்கிறது: “நீங்கள் குடித்து, வெறித்து, வாந்திபண்ணி, நான் உங்களுக்குள் அனுப்பும் பட்டயத்தாலே எழுந்திராதபடிக்கு விழுங்கள் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் உரைக்கிறார் என்று நீ அவர்களுக்குச் சொல்லு. அவர்கள் குடிக்கிறதற்கு அந்தப் பாத்திரத்தை உன் கையில் வாங்கமாட்டோம் என்று சொல்வார்களானால், நீ அவர்களை நோக்கி: நீங்கள் குடித்துத் தீரவேண்டும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல்லு. இதோ, தீங்கைக் கட்டளையிட நான் என் நாமம் தரிக்கப்பட்ட நகரத்திலே துவக்கும்போது, நீங்கள் தண்டனைக்குத் தப்புவீர்களோ? நீங்கள் தப்புவதில்லை; நான் பூமியின் எல்லாக் குடிகளின்மேலும் பட்டயத்தை வரவழைக்கிறேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.”
17 அவை கடுமையான சொற்கள்—உண்மையிலேயே, அச்சுறுத்தக்கூடிய சொற்கள், ஏனென்றால், சர்வலோகம் முழுவதற்கும் கர்த்தரும் பேரரசருமான யெகோவா தேவனால் அவை பேசப்பட்டிருக்கின்றன. ஆயிரக்கணக்கான வருட காலமாக, அவர் தம்முடைய பரிசுத்தப் பெயரின்மீது குவிக்கப்பட்டுள்ள தூஷணங்களையும் நிந்தைகளையும் விரோதத்தையும் பொறுமையாகச் சகித்துவந்திருக்கிறார். என்றாலும், இங்கே பூமியிலிருக்கையில் தம்முடைய அருமையானக் குமாரனாகிய இயேசு கிறிஸ்து கற்றுக்கொடுத்த இந்த ஜெபத்திற்கு பதிலளிக்கக் கடைசியாகக் காலம் வந்துவிட்டது: “நீங்கள் ஜெபம்பண்ணவேண்டிய விதமாவது: பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக. உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோலப் பூமியிலேயும் செய்யப்படுவதாக.” (மத்தேயு 6:9, 10) பழிவாங்குதலை நிறைவேற்றுவதில் இயேசு தம்முடைய பட்டயமாகச் செயல்புரியவேண்டும் என்பது யெகோவாவின் சித்தமாக இருக்கிறது.
18, 19. (அ) யெகோவாவின் பேரில் ஜெயிப்பவராகச் சவாரி செய்பவர் யார், தம்முடைய முற்றுகையை முடிப்பதற்குமுன் அவர் எதற்காகக் காத்திருக்கிறார்? (ஆ) யெகோவாவின் உக்கிரகோபமாகிய புயல்காற்றை அந்தத் தூதர்கள் அவிழ்த்துவிடும்போது, என்ன அச்சுறுத்தும் சம்பவங்கள் பூமியில் நடக்கும்?
18 வெளிப்படுத்துதல் 6-ம் அதிகாரத்தில் இயேசு ஒரு வெள்ளைக் குதிரையின்மேல் ‘ஜெயிக்கிறவராகவும் ஜெயிப்பவராகவும்’ சவாரி செய்வதைப்பற்றி முதலில் நாம் வாசிக்கிறோம். (வசனம் 2) இது 1914-ல் பரலோக அரசராக அவர் சிங்காசனத்தில் அமர்த்தப்பட்டதோடு துவங்கியது. மற்ற குதிரைகளும் சவாரியாளர்களும் அவரைப் பின்தொடர்கிறார்கள்; அப்போதிருந்து நம்முடைய பூமியை வாதித்திருக்கும் முழுமையானப் போரையும், பஞ்சத்தையும், கொள்ளைநோயையும் அவை படமாகக் குறித்தன. ஆனால் இந்த எல்லா குழப்பமும் எப்போது முடிவடையும்? ஆவிக்குரிய இஸ்ரவேலும் எல்லா தேசங்களிலுமிருந்து வரும் திரள் கூட்டத்தாரும் இரட்சிப்புக்காகச் கூட்டிச்சேர்க்கப்படும் வரை “பூமியின் நான்கு காற்றுகளையும்” நான்கு தூதர்கள் இறுக்கமாகப் பிடித்துவைத்திருப்பதாக வெளிப்படுத்துதல் 7-ம் அதிகாரம் நமக்குத் தெரிவிக்கிறது. (வசனம் 1) பின்னர் என்ன?
19 எரேமியா 25-ம் அதிகாரம் 30, 31 வசனங்கள் தொடர்ந்து சொல்கின்றன: “கர்த்தர் உயரத்திலிருந்து கெர்ச்சித்து, தமது பரிசுத்த வாசஸ்தலத்திலிருந்து தம்முடைய சத்தத்தைக் காட்டி, தம்முடைய தாபரத்துக்கு விரோதமாய்க் கெர்ச்சிக்கவே கெர்ச்சித்து, ஆலையை மிதிக்கிறவர்கள் ஆர்ப்பரிப்பதுபோல் பூமியினுடைய எல்லாக் குடிகளுக்கும் விரோதமாக ஆர்ப்பரிப்பார் . . . ஆரவாரம் பூமியின் கடையாந்தரமட்டும் போய் எட்டும்; ஜாதிகளோடே கர்த்தருக்கு வழக்கு இருக்கிறது; மாம்சமான யாவரோடும் அவர் நியாயத்துக்குள் பிரவேசிப்பார்; துன்மார்க்கரைப் பட்டயத்துக்கு ஒப்புக்கொடுப்பார் என்று கர்த்தர் சொல்லுகிறார்.” இப்படி யெகோவாவின் உக்கிரமாகிய பாத்திரத்தில் குடிப்பதிலிருந்து எந்தத் தேசத்தாரும் தப்பிக்கப்போவதில்லை. ஆகையால், யெகோவாவின் உக்கிரமாகிய கடுமையானப் புயல்காற்றை அந்த நான்கு தூதர்களும் அவிழ்த்துவிடுவதற்கு முன்பாக ஜாதிகளின் துன்மார்க்கத்திலிருந்து எல்லா நேர்மை இருதயமுள்ள மக்களும் தங்களையே பிரித்துவைத்துக்கொள்வது மிகவும் அவசரமாயிருக்கிறது. உண்மையிலேயே கடுமையானது, ஏனென்றால், எரேமியாவின் தீர்க்கதரிசனம் 32, 33 வசனங்களில் தொடர்ந்து சொல்லுகிறது:
20. யெகோவாவின் நியாயத்தீர்ப்பின் கடுமையை என்ன காட்சி அழுத்திக்காண்பிக்கிறது, ஆனால் ஏன் இந்தச் செயல் தேவைப்படுகிறது?
20 ‘இதோ, ஜாதிஜாதிக்குத் தீமை பரம்பும், பூமியின் எல்லைகளிலிருந்து மகா புசல் எழும்பும். அக்காலத்திலே பூமியின் ஒருமுனை துவக்கிப் பூமியின் மறுமுனைமட்டும் கர்த்தரால் கொலையுண்டவர்கள் கிடப்பார்கள்; அவர்கள் புலம்பப்படாமலும், சேர்க்கப்படாமலும், அடக்கம்பண்ணப்படாமலும் பூமியின்மேல் எருவாவார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.’ நிச்சயமாகவே, ஓர் அச்சமூட்டுகிற காட்சி; ஆனால் கடவுளுடைய வாக்களிக்கப்பட்ட பரதீஸைக் கொண்டுவருவதற்கு முன்பு எல்லா துன்மார்க்கத்தையும் பூமியை விட்டுச் சுத்திகரிப்பதற்கு இந்தச் செயல் அவசியமாயிருக்கிறது.
மேய்ப்பர்கள் அலறவும் கதறவும் வேண்டும்
21, 22. (அ) எரேமியா 25:34-36-ல், இஸ்ரவேலின் “மேய்ப்பர்கள்” யார், அவர்கள் ஏன் அலறும்படி வற்புறுத்தப்பட்டனர்? (ஆ) எந்த நவீன மேய்ப்பர்கள் யெகோவாவின் கோபத்தைப்பெற தகுதியுள்ளவர்களாய் இருக்கிறார்கள், ஏன் அவ்வாறு முழுமையாக தகுதிபெற்றிருக்கின்றனர்?
21 யெகோவாவின் நியாயத்தீர்ப்பைப்பற்றி மேலுமாக 34 முதல் 36 வசனங்கள் இவ்வாறு சொல்கின்றன: “மேய்ப்பர்களே, அலறுங்கள்; மந்தையில் பிரஸ்தாபமானவர்களே, சாம்பலில் புரண்டு கதறுங்கள்; நீங்கள் வெட்டப்படவும் சிதறடிக்கப்படவும், உங்கள் நாட்கள் நிறைவேறின; உச்சிதமான பாத்திரம்போல் விழுந்து நொறுங்குவீர்கள். மேய்ப்பர்கள் ஓடிப்போகிறதற்கும், மந்தையில் பிரஸ்தாபமானவர்கள் தப்பித்துக்கொள்ளுகிறதற்கும் இடமிராது. தங்கள் மேய்ச்சலைக் கர்த்தர் பாழாக்கினதினிமித்தம் மேய்ப்பர்கள் கூப்பிடுகிறதும், மந்தையில் பிரஸ்தாபமானவர்கள் அலறுகிறதுமான சத்தமுண்டாகும்.”
22 இந்த மேய்ப்பர்கள் யார்? இவர்கள் யெகோவாவின் கோபாக்கினையை முன்பே குடித்துவிட்ட மதத் தலைவர்கள் அல்ல. இவர்கள் இராணுவ மேய்ப்பர்கள், யெகோவாவுக்கு எதிராக தங்கள் படைகளை மந்தைகளாகக் கூட்டிச்சேர்ப்பவர்களாக எரேமியா 6:3-லும்கூட விவரிக்கப்படுகிறார்கள். ஆளப்படுபவர்களுக்கு கெடுதலை வருவிக்கும்வகையில், செல்வச்செழிப்பாய் வளர்ந்திருக்கும் அரசியல் ஆட்சியாளர்கள். இவர்களில் அநேகர் தில்லுமுல்லு செய்பவர்கள், ஊழல் நிபுணர்கள் ஆவர். வசதியற்ற நாடுகளிலுள்ள எல்லா மக்களையும் பேரளவில் பாதித்திருக்கிற பஞ்சங்களைக் குறைப்பதில் அவர்கள் தாமதமாகச் செயல்பட்டிருக்கிறார்கள். அவர்கள் பெரும் போர்த்தளவாட வியாபாரிகள், பேராசையுள்ள சுற்றுச்சூழலைக் கெடுப்பவர்கள் போன்ற “மந்தையில் பிரஸ்தாபமான” ஆட்களை வளம்பெற வைக்கிறார்கள்; அதேசமயத்தில் கோடிக்கணக்கான சாகும் பிள்ளைகளை வெகு குறைவான செலவில் காப்பாற்றுவதற்கு வேண்டிய மருத்துவ உதவியையும் ஊட்டச்சத்துள்ள உணவையும் அளிக்க மறுக்கிறார்கள்.
23. யெகோவாவுடைய அழிவுக்குரிய செயல்களுக்குப்பின் சாத்தானின் ஆட்சிப்பரப்பின் நிலைமையை விவரிக்கவும்.
23 சுயநலத்தின் காரணமாக தங்களுக்கு மட்டும் சமாதானத்தைத் தேடிக்கொண்டவர்களைக் குறித்து எரேமியா 25-ம் அதிகாரம் 37, 38 வசனங்களில் இவ்வாறு சொல்லி முடிப்பதில் எவ்வித ஆச்சரியமுமில்லை: “அவர்கள் சுகித்திருந்த தாபரங்கள் கர்த்தருடைய கோபத்தின் எரிச்சலாலே சங்காரமாயின. அவர் பதிவிருந்து புறப்படும் சிங்கத்தைப்போலிருப்பார்; ஒடுக்குகிறவனுடைய [பட்டயத்தினாலும், NW] அவனுடைய உக்கிரகோபத்தினாலும் அவர்கள் தேசம் [திகைப்பூட்டும் ஒன்றாக ஆயிற்று, NW].” உண்மையிலேயே திகைப்பூட்டுவதே! எனினும், யெகோவாவின் உக்கிரகோபம் உறுதியாக, இருப்புக்கோலால் ஜாதிகளை மேய்க்கும் “ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தா” என்று வெளிப்படுத்துதல் 19:15, 16-ல் விவரிக்கப்பட்டுள்ள ஒருவரின் மூலமாக வெளிக்காட்டப்படும். மேலும் என்ன பின்தொடரும்?
24. பொய் மதம் மற்றும் சாத்தானுடைய உலகின் மீதிபகுதியின் அழிவு, நீதியுள்ள மனிதவர்க்கத்துக்கு என்ன ஆசீர்வாதங்களைக் கொண்டுவரும்?
24 நீங்கள் எப்போதாவது ஒரு சூறாவளிக்காற்றினூடேயோ கடும்புயலினூடேயோ தப்பிப்பிழைத்திருக்கிறீர்களா? அது பயமுறுத்தும் அனுபவமாக இருக்கலாம். ஆனால் அடுத்த நாள் காலையில், நீங்கள் சுற்றிலும் சேதத்தைப் பார்த்தாலும்கூட, ஓர் அசாதாரணமான, அருமையான நாளைக் கொடுத்ததற்காக நீங்கள் யெகோவாவுக்கு நன்றி சொல்லக்கூடிய விதத்தில், வழக்கமாக காற்று அவ்வளவு சுத்தமாகவும் அப்போது நிலவும் அந்த அமைதி அவ்வளவு புத்துயிரூட்டுவதாகவும் இருக்கும். அதேபோலவே, மகா உபத்திரவ புயல்காற்றுகள் தணியும்போது, நீங்கள் உயிரோடிருந்து, ஒரு சுத்தமாக்கப்பட்ட பூமியை ஒரு மகிமையானப் பரதீஸாக உருவாக்கும்படியான யெகோவாவுடைய கூடுதலான வேலையில் பங்குகொள்ள ஆயத்தமாக இருப்பதற்கு, பூமியை நன்றியுணர்வுடன் நோக்கலாம். ஜாதிகளோடு யெகோவாவுக்குள்ள வழக்கு அதன் மகத்தான முடிவுக்குக் கொண்டுவரப்பட்டிருக்கும்; அவருடைய பெயரைப் பரிசுத்தப்படுத்தி, மேசியானிய ராஜ்யத்தின் ஆயிரவருட ஆட்சியின்கீழ் பூமியில் அவருடைய சித்தம் நடக்க வழியை ஆயத்தமாக்கியிருக்கும். அந்த ராஜ்யம் சீக்கிரம் வருவதாக!
இந்தக் கட்டுரையின் 5-24 பாராக்களை மறுபார்வையிடுதல்
◻ கிறிஸ்தவமண்டலத்தின் என்ன மாய்மாலமான வழிகள் இப்போது நியாயத்தீர்ப்பிற்குள் வந்திருக்கின்றன?
◻ எரேமியா 25:12-38-ல், நியாயத்தீர்ப்பின் என்ன விரிவான நோக்குநிலை காணப்படுகிறது?
◻ என்ன பழிவாங்குதலின் பாத்திரம் எல்லா ஜாதிகளுக்கும் கடத்தப்படுகிறது?
◻ அலறி, கதறும் மேய்ப்பர்கள் யார், அவர்கள் ஏன் கலக்கமடைந்திருக்கின்றனர்?
[பக்கம் 18-ன் படம்]
கிறிஸ்தவமண்டலத்தின் அழிவிற்கான ஏதுவை யெகோவா தெரிந்தெடுத்துவிட்டார்
[பக்கம் 23-ன் படம்]
மகா உபத்திரவத்தின் புயல்காற்றுகளுக்குப்பின், ஒரு சுத்தமாக்கப்பட்ட பூமி தோன்றும்