எரேமியா
25 யோசியாவின் மகன் யோயாக்கீம் யூதாவை ஆட்சி செய்த நான்காம் வருஷத்தில்,+ அதாவது நேபுகாத்நேச்சார் பாபிலோனை ஆட்சி செய்த முதலாம் வருஷத்தில், யூதா ஜனங்களைப் பற்றி எரேமியாவுக்கு ஒரு செய்தி கிடைத்தது. 2 யூதாவிலும் எருசலேமிலும் இருந்த எல்லா ஜனங்களையும் பற்றி* எரேமியா தீர்க்கதரிசி சொன்னது இதுதான்:
3 “ஆமோனின் மகன் யோசியா யூதாவை ஆட்சி செய்த 13-ஆம் வருஷத்திலிருந்து+ இந்த 23 வருஷங்களாக யெகோவா என்னிடம் பல செய்திகளைச் சொன்னார். அவற்றை நான் உங்களிடம் திரும்பத் திரும்பச் சொன்னேன், ஆனால் நீங்கள் கேட்கவே இல்லை.+ 4 யெகோவா தன்னுடைய ஊழியர்களான தீர்க்கதரிசிகள் எல்லாரையும் உங்களிடம் திரும்பத் திரும்ப அனுப்பினார். ஆனால், அவர்கள் சொன்னதை நீங்கள் காதில் வாங்கவே இல்லை.+ 5 அவர்கள் உங்களிடம், ‘தயவுசெய்து உங்களுடைய கெட்ட வழிகளையும் செயல்களையும் விட்டுத் திருந்துங்கள்.+ அப்போதுதான், உங்களுக்கும் உங்கள் முன்னோர்களுக்கும் யெகோவா கொடுத்த தேசத்தில் நீண்ட காலம் வாழ்வீர்கள். 6 மற்ற தெய்வங்களைத் தேடிப்போய் வணங்காதீர்கள்; உங்கள் கைகளால் செய்த சிலைகளைக் கும்பிட்டு அவருடைய கோபத்தைக் கிளறாதீர்கள். அப்படிச் செய்தால் அவர் உங்களைத் தண்டிப்பார்’ என்று சொன்னார்கள்.
7 இப்போது யெகோவா சொல்வது இதுதான்: ‘நீங்கள் என் பேச்சைக் கேட்காமல் உங்கள் கைகளால் செய்த சிலைகளை வணங்கி என் கோபத்தைக் கிளறினீர்கள். அதனால், உங்களுக்கு நீங்களே அழிவைத் தேடிக்கொண்டீர்கள்.’+
8 பரலோகப் படைகளின் யெகோவா சொல்வது இதுதான்: ‘“நீங்கள் என் பேச்சைக் கேட்காததால், 9 வடக்கிலிருக்கிற எல்லா ஜனங்களையும்+ என் ஊழியனான பாபிலோன் ராஜா நேபுகாத்நேச்சாரையும்+ வர வைத்து, இந்தத் தேசத்தையும் இந்த ஜனங்களையும் சுற்றுப்புற தேசங்களில் இருக்கிறவர்களையும் அழித்துவிடுவேன்.”+ யெகோவா சொல்வது இதுதான்: “நான் அவர்களுக்குக் கோரமான முடிவைக் கொண்டுவருவேன். அதைப் பார்க்கிற எல்லாரும் கேலி செய்வார்கள்.* 10 அங்கே கொண்டாட்டமோ குதூகலமோ இனி இருக்காது.+ மணமகனுடைய குரலும் மணமகளுடைய குரலும் மாவு அரைக்கும் சத்தமும் கேட்காது.+ விளக்கும் எரியாது. 11 இந்தத் தேசம் சின்னாபின்னமாகும். அதற்குக் கோரமான முடிவு வரும். இவர்கள் எல்லாரும் 70 வருஷங்கள் பாபிலோன் ராஜாவுக்குச் சேவை செய்வார்கள்.”’+
12 யெகோவா சொல்வது இதுதான்: ‘அந்த 70 வருஷங்கள் முடிந்த பின்பு,+ பாபிலோன் ராஜாவும் அவனுடைய ஜனங்களும் செய்த குற்றத்துக்குத் தண்டனை கொடுப்பேன்.+ கல்தேயர்களுடைய தேசத்தை அழித்துவிடுவேன். அது என்றென்றைக்கும் பாழாய்க் கிடக்கும்.+ 13 அதற்கு எதிராக நான் சொன்ன எல்லாவற்றையும் நடத்திக் காட்டுவேன். எல்லா தேசத்தாருக்கு எதிராகவும் எரேமியா இந்தப் புத்தகத்தில் எழுதியிருக்கிற ஒவ்வொரு தீர்க்கதரிசனத்தையும் நிறைவேற்றுவேன். 14 பல தேசங்களும் பெரிய பெரிய ராஜாக்களும்+ அவர்களை அடிமைப்படுத்துவார்கள்.+ அவர்களுடைய செயல்களுக்கு ஏற்ற கூலியை நான் கொடுப்பேன்.’”+
15 இஸ்ரவேலின் கடவுளாகிய யெகோவா என்னிடம், “என் கையில் இருக்கிற கோபம் என்கிற திராட்சமதுக் கிண்ணத்தை வாங்கிக்கொள். நான் உன்னை அனுப்பும் தேசங்களில் இருக்கிற ஜனங்களுக்கு அதைக் குடிக்கக் கொடு. 16 அவர்கள் அதைக் குடித்துத் தள்ளாடி, பைத்தியக்காரர்களைப் போல நடந்துகொள்வார்கள். ஏனென்றால், அவர்களை வாளால் தாக்க நான் எதிரியை அனுப்புவேன்”+ என்று சொன்னார்.
17 அதனால், நான் யெகோவாவின் கையிலிருந்து கிண்ணத்தை வாங்கி, யெகோவா என்னை அனுப்பிய எல்லா தேசங்களுக்கும் அதைக் குடிக்கக் கொடுத்தேன்.+ 18 முதலில் எருசலேமுக்கும் யூதா நகரங்களுக்கும்+ அவற்றின் ராஜாக்களுக்கும் அதிகாரிகளுக்கும் அதைக் குடிக்கக் கொடுத்தேன். பார்க்கிறவர்கள் பழித்தும் சபித்தும் பேசுமளவுக்கு அவர்களுக்கும் அவர்களுடைய நகரங்களுக்கும் கோரமான அழிவு வருவதற்காக அப்படிச் செய்தேன்.+ இன்று அப்படிப்பட்ட அழிவுதான் வந்திருக்கிறது. 19 பின்பு எகிப்தின் ராஜாவான பார்வோனுக்கும், அவனுடைய ஊழியர்களுக்கும், அதிகாரிகளுக்கும், எல்லா ஜனங்களுக்கும்,+ 20 எகிப்தில் இருக்கிற மற்ற தேசத்தாருக்கும் அதைக் குடிக்கக் கொடுத்தேன். ஊத்ஸ் தேசத்தின் ராஜாக்கள் எல்லாருக்கும், பெலிஸ்திய தேசத்தின் ராஜாக்கள் எல்லாருக்கும்,+ அதாவது அஸ்கலோனின் ராஜாவுக்கும்,+ காசாவின் ராஜாவுக்கும், எக்ரோனின் ராஜாவுக்கும், அஸ்தோத்தில் மீதியாக இருக்கிறவர்களின் ராஜாவுக்கும், 21 பின்பு ஏதோமுக்கும்,+ மோவாபுக்கும்,+ அம்மோனியர்களுக்கும்,+ 22 தீருவின் ராஜாக்கள் எல்லாருக்கும், சீதோனின் ராஜாக்கள் எல்லாருக்கும்,+ கடலிலுள்ள தீவின் ராஜாக்களுக்கும், 23 தேதானுக்கும்,+ தீமாவுக்கும், பூசுக்கும், நெற்றி ஓரங்களில் முடியை வெட்டிக் கொண்டவர்களுக்கும்,+ 24 அரேபியர்களின் ராஜாக்கள் எல்லாருக்கும்,+ வனாந்தரத்தில் குடியிருக்கிற பலதரப்பட்ட ஜனங்களின் ராஜாக்களுக்கும், 25 சிம்ரியின் ராஜாக்கள் எல்லாருக்கும், ஏலாமின் ராஜாக்கள் எல்லாருக்கும்,+ மேதியர்களின் ராஜாக்கள் எல்லாருக்கும்,+ 26 வடக்கே பக்கத்திலும் தூரத்திலும் இருக்கிற ராஜாக்கள் எல்லாருக்கும் அடுத்தடுத்து அதைக் குடிக்கக் கொடுத்தேன். உலகத்தில் இருக்கிற மற்ற எல்லா ராஜ்யங்களுக்கும் கொடுத்தேன். அவர்கள் குடித்த பின்பு சேசாக்கு* ராஜா+ அதைக் குடிப்பான்.
27 “நீ அவர்களிடம், ‘இஸ்ரவேலின் கடவுளும் பரலோகப் படைகளின் கடவுளுமான யெகோவா சொல்வது இதுதான்: “போதை ஏறுமளவுக்குக் குடியுங்கள், வாந்தியெடுங்கள், கீழே விழுங்கள், எழுந்திருக்க முடியாதபடி கிடங்கள்.+ ஏனென்றால், உங்களை வாளால் தாக்க நான் எதிரியை அனுப்புவேன்”’ என்று சொல். 28 அவர்கள் உன்னிடமிருந்து கிண்ணத்தை வாங்கிக் குடிக்க மறுத்தால் நீ அவர்களிடம் இப்படிச் சொல்ல வேண்டும்: ‘பரலோகப் படைகளின் யெகோவா சொல்வது இதுதான்: “நீங்கள் குடித்தே தீர வேண்டும்! 29 என் பெயர் தாங்கிய நகரத்தையே நான் முதலில் தண்டிக்கப்போகிறேன்+ என்றால் உங்களைத் தண்டிக்காமல் விடுவேனா?”’+
‘நான் உங்களைத் தண்டிக்காமல் விட மாட்டேன். உலகத்தில் இருக்கிற எல்லா ஜனங்களுக்கும் எதிராக நான் ஒரு வாளை அனுப்புவேன்’ என்று பரலோகப் படைகளின் யெகோவா சொல்கிறார்.
30 நீ அவர்களிடம் இந்த எல்லா தீர்க்கதரிசனங்களையும் தெரிவித்துவிட்டு இப்படிச் சொல்:
‘யெகோவா பரலோகத்திலிருந்து சிங்கம்போல் கர்ஜிப்பார்.
அவருடைய பரிசுத்தமான இடத்திலிருந்து முழங்குவார்.
பூமியில் அவர் தங்குகிற இடத்துக்கு எதிராகச் சத்தமாகக் கர்ஜிப்பார்.
திராட்சரச ஆலையில் மிதிக்கிறவர்களைப் போலச் சத்தமிடுவார்.
உலகத்தில் இருக்கிற எல்லா ஜனங்களையும் வீழ்த்திவிட்டு வெற்றிப் பாடலைப் பாடுவார்.’
31 யெகோவா சொல்வது இதுதான்:
‘ஒரு சத்தம் பூமியெங்கும் எதிரொலிக்கும்.
தேசங்களோடு யெகோவாவுக்கு ஒரு வழக்கு இருக்கிறது.
எல்லா மனுஷர்களுக்கும் அவரே தீர்ப்பு சொல்வார்.+
கெட்டவர்களை வாளுக்குப் பலியாக்குவார்.’
32 பரலோகப் படைகளின் யெகோவா சொல்வது இதுதான்:
‘இதோ, தேசங்கள் ஒன்றன்பின் ஒன்றாக அழியும்.+
பூமியின் தொலைதூரத்திலிருந்து ஒரு பெரிய புயல்காற்று புறப்பட்டு வரும்.+
33 அன்று யெகோவாவினால் வெட்டி வீழ்த்தப்பட்டவர்கள் பூமியின் ஒரு முனையிலிருந்து இன்னொரு முனைவரை கிடப்பார்கள். அவர்களுக்காக யாரும் அழுது புலம்ப மாட்டார்கள். அவர்கள் அள்ளப்படாமலும், அடக்கம் செய்யப்படாமலும், அப்படியே நிலத்தில் எருவாகிப்போவார்கள்.’
34 மேய்ப்பர்களே, ஓலமிட்டு அழுங்கள்!
மந்தையிலுள்ள பிரபலமானவர்களே, மண்ணில் புரளுங்கள்!
நீங்கள் வெட்டிச் சாய்க்கப்படுவதற்கும் சிதறிப்போவதற்கும் நேரம் வந்துவிட்டது!
கீழே விழுந்து நொறுங்கும் விலைமதிப்புள்ள ஜாடியைப் போல நீங்கள் ஆகிவிடுவீர்கள்!
35 ஓடி ஒளிய மேய்ப்பர்களுக்கு இடமே இருக்காது.
மந்தையிலுள்ள பிரபலமானவர்களால் தப்பிக்கவே முடியாது.
36 மேய்ப்பர்களின் அலறலைக் கேளுங்கள்.
மந்தையிலுள்ள பிரபலமானவர்களின் கதறலைக் கேளுங்கள்.
யெகோவா அவர்களுடைய மேய்ச்சல் நிலங்களைப் பாழாக்குகிறார்.
37 அவர்கள் நிம்மதியாக வாழ்ந்த இடங்கள் வெறிச்சோடிக் கிடக்கின்றன.
ஏனென்றால், யெகோவாவின் கோபம் அவர்கள்மேல் பற்றியெரிந்தது.