எரேமியாவைப் போல் விழித்திருங்கள்
“என்னுடைய வார்த்தையை நிறைவேற்ற நான் [யெகோவா] விழித்திருக்கிறேன்.” —எரே. 1:12, NW.
1, 2. யெகோவா ‘விழித்திருப்பது’ எப்படி வாதுமை மரத்தோடு சம்பந்தப்பட்டுள்ளது?
லெபனான், இஸ்ரேல் நாடுகளிலுள்ள குன்றுகளில் முதன்முதலில் மலர்விடும் மரங்களில் ஒன்றுதான் வாதுமை மரம். குளிர்காலம் முடிவதற்கு முன்பே, அதாவது ஜனவரி மாதத்தின் இறுதியில் அல்லது பிப்ரவரி மாதத்தின் ஆரம்பத்திலேயே, அழகிய இளஞ்சிவப்பு அல்லது வெள்ளை நிற மலர்கள் அதில் பூத்து நிற்பதைப் பார்க்கலாம். அதன் எபிரெய பெயரின் நேர்ப்பொருள் “எழுப்புபவர்.”
2 எரேமியாவைத் தம்முடைய தீர்க்கதரிசியாக நியமித்தபோது, வாதுமை மரத்தின் இந்தப் பண்பைப் பயன்படுத்தி ஒரு முக்கிய விஷயத்தை யெகோவா விளக்கினார். எரேமியா ஊழியம் செய்ய ஆரம்பித்த சமயத்தில், அந்த மரத்தின் ஒரு கிளையை அவருக்குத் தரிசனத்தில் யெகோவா காட்டினார். அதன் அர்த்தம் என்ன? “என்னுடைய வார்த்தையை நிறைவேற்ற நான் விழித்திருக்கிறேன்” என்று யெகோவா விளக்கினார். (எரே. 1:11, 12, NW) வாதுமை மரம் முந்தி ‘எழுந்தது’ போல யெகோவாவும் கீழ்ப்படியாமல்போன தம்முடைய மக்களுக்கு நேரிடப் போகும் ஆபத்துகளைப் பற்றி எச்சரிப்பதற்குத் தம் தீர்க்கதரிசிகளை அனுப்ப அடையாள அர்த்தத்தில் “முந்தி எழுகிறார்.” (எரே. 7:25, NW) தாம் தீர்க்கதரிசனமாகச் சொன்ன வார்த்தை நிறைவேறும் வரையில் அவர் ஓய்ந்திருக்க மாட்டார், ஆம் அவர் ‘விழித்திருப்பார்.’ கி.மு. 607-ல், யெகோவா குறித்திருந்த சரியான சமயத்தில் விசுவாசதுரோக யூதா மக்கள்மீது அவருடைய நியாயத்தீர்ப்பு வந்தது.
3. யெகோவா என்ன செய்வார் என்பதில் நாம் உறுதியாய் இருக்கலாம்?
3 அது போல, இன்றும் தம்முடைய சித்தத்தை நிறைவேற்ற யெகோவா விழிப்பாய், கவனமாய் இருக்கிறார். அவரால் தமது வார்த்தையை நிறைவேற்றாமல் இருக்கவே முடியாது. யெகோவா கவனமாய் இருப்பது உங்களை எப்படிப் பாதிக்கிறது? இந்த 2011-ஆம் வருடத்தில், அவர் தமது வாக்குறுதிகளை நிறைவேற்ற ‘விழித்திருக்கிறார்’ என்பதை நீங்கள் நம்புகிறீர்களா? யெகோவா கொடுத்திருக்கிற நம்பகமான வாக்குறுதிகளைக் குறித்து நமக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால், ஆன்மீகத் தூக்கத்திலிருந்து விழித்தெழுவதற்கு இதுவே சமயம். (ரோ. 13:11) யெகோவாவின் தீர்க்கதரிசியான எரேமியா எப்போதும் விழிப்புடன் இருந்தார். கடவுள் கொடுத்த வேலையைச் செய்வதில் அவர் எப்படி விழிப்புடன் இருந்தார், ஏன் அப்படி இருந்தார் என்று இப்போது ஆராயலாம்; அப்படிச் செய்வது யெகோவா நமக்குக் கொடுத்துள்ள வேலையைத் தொடர்ந்து செய்ய உதவும்.
ஓர் அவசரச் செய்தி
4. கடவுள் கொடுத்த வேலையைச் செய்வது எரேமியாவுக்கு ஏன் கஷ்டமாக இருந்தது, அது அவசரமாக அறிவிக்க வேண்டிய செய்தியாக இருந்தது ஏன்?
4 எரேமியாவைக் காவற்காரனாக யெகோவா நியமித்தபோது அவருக்குக் கிட்டத்தட்ட 25 வயது இருந்திருக்கலாம். (எரே. 1:1, 2) ஆனாலும், அவர் தன்னை ஒரு சிறு பையனைப் போலவே நினைத்தார்; தேசத்திலிருந்த வயதில் மூத்த... உயர்ந்த ஸ்தானத்தில் இருந்த... மூப்பர்களிடம் பேச கொஞ்சமும் அருகதையற்றவராக உணர்ந்தார். (எரே. 1:6) அவர் கடுமையான கண்டன செய்திகளையும் பயங்கரமான நியாயத்தீர்ப்பின் செய்திகளையும் அறிவிக்க வேண்டியிருந்தது; முக்கியமாக, ஆசாரியர்கள், பொய்த் தீர்க்கதரிசிகள், ராஜாக்கள் ஆகியோரிடமும் ‘தங்கள் வழியில்’ செல்கிற, ‘பொய்யைப் பற்றிக்கொண்டு நிற்கிற’ ஆட்களிடமும் அதை அறிவிக்க வேண்டியிருந்தது. (எரே. 6:13; 8:5, 6, பொது மொழிபெயர்ப்பு) சாலொமோன் ராஜா கட்டிய மாபெரும் ஆலயம் சுமார் 400 ஆண்டுகளுக்கு உண்மை வழிபாட்டின் மையமாகத் திகழ்ந்தபோதிலும் அது தரைமட்டமாக்கப்படும். எருசலேமும் யூதாவும் பாழாக்கப்படும், அவற்றின் குடிமக்கள் சிறைக் கைதிகளாகக் கொண்டு செல்லப்படுவார்கள். உண்மையில், இதுதான் எரேமியா அவசரமாக அறிவிக்க வேண்டிய செய்தியாக இருந்தது!
5, 6. (அ) இன்று எரேமியா வகுப்பாரை யெகோவா எப்படிப் பயன்படுத்துகிறார்? (ஆ) நாம் எதை ஆராய்வோம்?
5 நம் காலத்தில், பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களின் ஒரு தொகுதியை யெகோவா மனிதருக்கு அன்போடு அளித்திருக்கிறார். இவர்கள் காவற்காரர்களைப் போல இந்த உலகத்திற்கு வரப்போகும் நியாயத்தீர்ப்பைக் குறித்து எச்சரிக்கிறார்கள். பல பத்தாண்டுகளாகவே, இந்த எரேமியா வகுப்பார் நாம் வாழும் காலத்திற்குக் கவனம் செலுத்தும்படி மக்களை எச்சரித்து வருகிறார்கள். (எரே. 6:17) யெகோவா தாமதிக்க மாட்டார் என்று பைபிள் அழுத்தந்திருத்தமாகச் சொல்கிறது. அவருடைய நாள் சரியான சமயத்தில், மனிதர் எதிர்பாராத வேளையில் வரும்.—செப். 3:8; மாற். 13:33; 2 பே. 3:9, 10.
6 யெகோவா விழிப்புடன் இருக்கிறார்... சரியான சமயத்தில் நீதியான புதிய உலகை ஸ்தாபிப்பார்... என்பதை மனதில் வையுங்கள். இதை அறிந்திருப்பது, கடவுளுடைய செய்தியை இன்னும் அவசரமாக அறிவிப்பதில் விழிப்புடன் இருக்க எரேமியா வகுப்பாருக்கும் அவர்களுடைய உண்மைத் தோழர்களுக்கும் உதவும். அப்படியென்றால் நீங்கள் என்ன செய்ய வேண்டும்? எல்லாருமே கடவுளுடைய அரசாங்கத்திற்கு ஆதரவு தர வேண்டுமென இயேசு குறிப்பிட்டார். தன்னுடைய வேலையில் விழிப்புடன் இருக்க எரேமியாவுக்கு உதவிய மூன்று பண்புகளை இப்போது ஆராயலாம்; அவை நமக்கும் உதவும்.
மக்கள்மீது அன்பு
7. கஷ்டமான சூழ்நிலைகளிலும் செய்தியை அறிவிக்க எரேமியாவை அன்பு எப்படித் தூண்டியது என விளக்குங்கள்.
7 கஷ்டமான சூழ்நிலைகளிலும் செய்தியை அறிவிக்க எது எரேமியாவைத் தூண்டியது? மக்கள் மீதிருந்த அன்பே. போலி மேய்ப்பர்கள் மக்களுக்குப் பெரும் தொல்லை கொடுத்து வந்ததை எரேமியா அறிந்திருந்தார். (எரே. 23:1, 2) அதனால், அன்போடும் கரிசனையோடும் மக்களுக்குச் செய்தியை அறிவித்தார். அவர்கள் கடவுளுடைய வார்த்தைகளைக் கேட்டு நடந்து உயிர்ப்பிழைக்க வேண்டுமென அவர் விரும்பினார். அவருக்கு அவ்வளவு கரிசனை இருந்ததால்தான் அவர்களுக்கு வரவிருந்த அழிவை நினைத்து புலம்பி அழுதார். (எரேமியா 8:21-ஐயும் 9:1-ஐயும் வாசியுங்கள்.) யெகோவாவுடைய பெயர்மீதும் மக்கள்மீதும் எரேமியாவுக்கு மிகுந்த அன்பும் அக்கறையும் இருந்ததை புலம்பல் புத்தகம் தத்ரூபமாக விவரிக்கிறது. (புல. 4:6, 9) இன்று, “மேய்ப்பன் இல்லாத ஆடுகளைப் போல் . . . கொடுமைப்படுத்தப்பட்டும் புறக்கணிக்கப்பட்டும்” இருக்கிற மக்களைப் பார்க்கும்போது கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய ஆறுதலான செய்தியை அவர்களுக்குச் சொல்ல வேண்டுமென்று நீங்கள் ஆசைப்படுகிறீர்கள், அல்லவா?—மத். 9:36.
8. துன்புறுத்தப்பட்டாலும் எரேமியா வெறுப்புக் காட்டவே இல்லை என நமக்கு எப்படித் தெரியும்?
8 எரேமியா தான் உதவ விரும்பிய மக்களின் கையாலேயே துன்புறுத்தப்பட்டார்; ஆனாலும், அவர் பழிக்குப் பழி வாங்கவோ அவர்கள் மேல் வெறுப்பு காட்டவோ இல்லை. கெட்ட ராஜாவான சிதேக்கியா உட்பட அனைவரிடமும் மிகுந்த பொறுமையோடும் அன்போடும் நடந்துகொண்டார்! தன்னைக் கொலை செய்ய சிதேக்கியா உத்தரவிட்ட பிறகும்கூட, யெகோவா சொல்வதைக் கேட்டு நடக்கும்படி எரேமியா அவரிடம் கெஞ்சிக் கேட்டார். (எரே. 38:4, 5, 19, 20) எரேமியாவைப் போல் நமக்கும் மக்கள்மீது அந்தளவுக்கு அன்பு இருக்கிறதா?
கடவுள் தந்த தைரியம்
9. எரேமியா கடவுளிடமிருந்தே தைரியத்தைப் பெற்றார் என்று நமக்கு எப்படித் தெரியும்?
9 எரேமியாவிடம் யெகோவா முதலில் பேசியபோது அவர் சாக்குப்போக்கு சொல்லி நழுவ முயன்றார். அவர் பிறவியிலேயே தைரியசாலியாக, துணிவுமிக்கவராக இருக்கவில்லை என்பதை இது காட்டுகிறது. அவர் தீர்க்கதரிசியாக சேவை செய்த காலத்தில் காட்டிய அசாதாரண தைரியம் கடவுளிடமிருந்து பெற்றதுதான்; அவர் கடவுளை முழுமையாய்ச் சார்ந்திருந்ததாலேயே அதைப் பெற்றார். உண்மையில், ‘பயங்கரமான பராக்கிரமசாலி’ போல யெகோவா அவரோடு இருந்து அவரை ஆதரித்தார்; அதோடு, அவருடைய வேலையைச் செய்ய பலமளித்தார். (எரே. 20:11) எரேமியா அந்தளவுக்குத் துணிவையும் தைரியத்தையும் காட்டியதால், இயேசு பூமியில் ஊழியம் செய்த காலத்தில் எரேமியாதான் இயேசுவாக வந்திருக்கிறார் என சிலர் சொன்னார்கள்.—மத். 16:13, 14.
10. பரலோக நம்பிக்கையுள்ளவர்களில் மீதியானோர் ‘தேசங்களின்மேலும் ராஜ்யங்களின்மேலும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறார்கள்’ என்று ஏன் சொல்லலாம்?
10 ‘ஜாதிகளின் [அதாவது, தேசங்களின்] ராஜாவாய்’ இருக்கிற யெகோவா, தேசங்களிடமும் ராஜ்யங்களிடமும் நியாயத்தீர்ப்பின் செய்தியை அறிவிக்க எரேமியாவுக்குக் கட்டளையிட்டார். (எரே. 10:6, 7) பரலோக நம்பிக்கையுள்ளவர்களில் மீதியானோர் என்ன கருத்தில் ‘ஜாதிகளின்மேலும் [அதாவது, தேசங்களின்மேலும்] ராஜ்யங்களின்மேலும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறார்கள்’? (எரே. 1:10) அந்தத் தீர்க்கதரிசியைப் போலவே, இந்த எரேமியா வகுப்பாரும் இப்பிரபஞ்சத்தின் பேரரசரிடமிருந்து ஒரு நியமிப்பைப் பெற்றிருக்கிறார்கள். ஆகவே, தேசங்களுக்கும் அரசாங்கங்களுக்கும் எதிராக நியாயத்தீர்ப்பின் செய்தியை அறிவிக்க அவர்கள் அதிகாரம் பெற்றிருக்கிறார்கள். உன்னத கடவுளிடமிருந்து பெற்ற இந்த அதிகாரத்தோடும் அவருடைய சக்தியால் அருளப்பட்ட வார்த்தையிலுள்ள தெளிவான சத்தியத்தைப் பயன்படுத்தியும் இந்தச் செய்தியை அவர்கள் அறிவிக்கிறார்கள்; இன்றைய தேசங்களும் அரசாங்கங்களும் கடவுள் குறித்திருக்கிற சமயத்தில், அவர் தீர்மானித்திருக்கிறபடி வேரோடு பிடுங்கப்பட்டு அழிக்கப்படும் என்று அறிவிக்கிறார்கள். (எரே. 18:7-10; வெளி. 11:18) நியாயத்தீர்ப்பு செய்திகளை உலகெங்கும் அறிவிக்கும்படி யெகோவா கொடுத்த வேலையை விட்டுவிடாதிருக்க எரேமியா வகுப்பார் தீர்மானமாய் இருக்கிறார்கள்.
11. கஷ்டமான சூழ்நிலைகளில் விடாமல் பிரசங்கிக்க எது நமக்கு உதவும்?
11 சில சமயங்களில், மக்கள் நம்மை எதிர்க்கையிலோ அலட்சியம் செய்கையிலோ, அல்லது கஷ்டமான சூழ்நிலைகளிலோ நாம் சோர்ந்துபோவது இயல்பே. (2 கொ. 1:8) ஆனாலும், எரேமியாவைப் போல தொடர்ந்து யெகோவாவுக்குச் சேவை செய்வோமாக. ஒருபோதும் மனந்தளர்ந்து விடாதீர்கள். நாம் ஒவ்வொருவரும் தொடர்ந்து கடவுளிடம் மன்றாடி, அவரைச் சார்ந்திருப்போமாக; ‘தைரியத்தை வரவழைத்துக்கொள்ள’ அவருடைய உதவியை நாடுவோமாக. (1 தெ. 2:2) நாம் கடவுளை உண்மையோடு வழிபடுவதால் அவருடைய வேலையைச் செய்வதில் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும். விசுவாசதுரோக எருசலேமைப் போல் இருக்கிற கிறிஸ்தவமண்டலத்திற்கு வரவிருக்கும் அழிவைப் பற்றி விடாமல் பிரசங்கிக்க நாம் தீர்மானமாய் இருக்க வேண்டும். எரேமியா வகுப்பார், ‘யெகோவாவுடைய அநுக்கிரக வருஷத்தை’ பற்றி மட்டுமல்ல, “நம்முடைய தேவன் நீதியைச் சரிக்கட்டும் நாளை” பற்றியும் அறிவிப்பார்கள்.—ஏசா. 61:1, 2; 2 கொ. 6:2.
இதயப்பூர்வமான மகிழ்ச்சி
12. எரேமியா சந்தோஷத்தைக் காத்துக்கொண்டார் என்று எப்படிச் சொல்லலாம், அதற்கு எது முக்கியமாக உதவியது?
12 எரேமியா தன்னுடைய வேலையில் மகிழ்ச்சி கண்டார். “உம்முடைய வார்த்தைகள் கிடைத்தவுடனே அவைகளை உட்கொண்டேன்; உம்முடைய வார்த்தைகள் எனக்குச் சந்தோஷமும், என் இருதயத்துக்கு மகிழ்ச்சியுமாயிருந்தது; சேனைகளின் தேவனாகிய கர்த்தாவே, உம்முடைய நாமம் எனக்குத் தரிக்கப்பட்டிருக்கிறது” என்று அவர் யெகோவாவிடம் சொன்னார். (எரே. 15:16) உண்மைக் கடவுளுக்குப் பிரதிநிதியாக இருப்பதை, அவருடைய வார்த்தையைப் பிரசங்கிப்பதை அவர் பாக்கியமாகக் கருதினார். ஆனாலும் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால், மக்கள் செய்த கேலி கிண்டலுக்கு அவர் கவனம் செலுத்தியபோது சந்தோஷத்தை இழந்தார். தான் சொல்கிற செய்தி எவ்வளவு அருமையானது, முக்கியமானது என்பதற்குக் கவனம் செலுத்தியபோதோ இழந்த சந்தோஷத்தை அவர் மீண்டும் பெற்றார்.—எரே. 20:8, 9.
13. எப்போதும் சந்தோஷமாய் இருக்க ஆழமான ஆன்மீக சத்தியங்களை உட்கொள்வது ஏன் முக்கியம்?
13 இன்றும் ஊழியத்தில் சந்தோஷத்தை இழக்காதிருக்க, ‘திட உணவை,’ அதாவது பைபிளிலுள்ள ஆழமான சத்தியங்களை உட்கொள்ள வேண்டும். (எபி. 5:14) பைபிளை ஆழமாக ஆராய்ந்து படிப்பது நம் விசுவாசத்தைப் பலப்படுத்துகிறது. (கொலோ. 2:6, 7) அதோடு, நம்முடைய செயல்கள் எவ்வாறு யெகோவாவின் இருதயத்தைக் குளிர்விக்கின்றன என்பதை நம் மனதில் பதிய வைக்கிறது. பைபிளை வாசிக்கவும் படிக்கவும் நேரம் கிடைப்பது கஷ்டமாக இருந்தால், நம்முடைய அட்டவணையில் மாற்றங்கள் செய்ய வேண்டும். படிப்பதற்கும் தியானிப்பதற்கும் ஒரு நாளில் சில நிமிடங்கள் செலவிட்டாலே, நாம் யெகோவாவிடம் இன்னும் நெருங்கி வருவோம்; அதோடு, எரேமியாவைப் போல் ‘சந்தோஷத்தையும் இருதயத்தில் மகிழ்ச்சியையும்’ காண்போம்.
14, 15. (அ) தனக்குக் கொடுக்கப்பட்ட வேலையை எரேமியா உண்மையோடு செய்ததால் என்ன பலனைக் கண்டார்? (ஆ) பிரசங்க வேலையைப் பற்றி கடவுளுடைய மக்கள் எதை அறிந்திருக்கிறார்கள்?
14 யெகோவா கொடுத்த எச்சரிப்பின் செய்தியையும் நியாயத்தீர்ப்பின் செய்தியையும் எரேமியா விடாமல் அறிவித்தார்; அதே சமயத்தில் ‘கட்டவும், நாட்டவும்கூட’ அவர் மறந்துவிடவில்லை. (எரே. 1:10) அந்தக் கட்டும் வேலையிலும் நாட்டும் வேலையிலும் அவர் பலனைக் கண்டார். எப்படியெனில், கி.மு. 607-ல் எருசலேம் அழிக்கப்பட்டபோது யூதர்களிலும், இஸ்ரவேலர் அல்லாதவர்களிலும் சிலர் உயிர்தப்பினார்கள். உண்மையுள்ள, கடவுள் பயமுள்ள ரேகாபியரையும் எபெத்மெலேக்கையும் பாருக்கையும் பற்றி நமக்குத் தெரியும். (எரே. 35:18, 19; 39:15-18; 43:5-7) எரேமியாவின் இந்த நண்பர்கள், இன்று எரேமியா வகுப்பாருக்கு நண்பர்களாக இருக்கிற... பூமியில் வாழும் நம்பிக்கையுள்ள... மக்களுக்குப் படமாக இருக்கிறார்கள். “திரள் கூட்டமான” இந்த மக்களை ஆன்மீக ரீதியில் கட்டுவதில் எரேமியா வகுப்பார் மிகுந்த இன்பம் காண்கிறார்கள். (வெளி. 7:9) அதைப் போலவே, எரேமியா வகுப்பாரின் உண்மைத் தோழர்களான இவர்களும் சத்தியத்தை அறிய நல்மனமுள்ளவர்களுக்கு உதவுவதில் அளவில்லா ஆனந்தம் அடைகிறார்கள்.
15 நற்செய்தியை அறிவிப்பது அதைக் கேட்க மனமுள்ளவர்களுக்குச் செய்யும் ஒரு பொது சேவை மட்டுமல்ல, தங்களுடைய வழிபாட்டின் பாகம் என்பதையும் கடவுளுடைய மக்கள் அறிந்திருக்கிறார்கள். நாம் சொல்வதை மக்கள் கேட்டாலும் சரி கேட்காவிட்டாலும் சரி, பிரசங்க வேலை மூலம் யெகோவாவுக்குப் பரிசுத்த சேவை செய்வது நமக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.—சங். 71:23; ரோமர் 1:9-ஐ வாசியுங்கள்.
உங்கள் வேலையில் ‘விழித்திருங்கள்’
16, 17. வெளிப்படுத்துதல் 17:10-ம் ஆபகூக் 2:3-ம் நம் காலத்தின் அவசரத்தன்மையை எப்படி உணர்த்துகின்றன?
16 வெளிப்படுத்துதல் 17:10-ல் உள்ள தீர்க்கதரிசனம், நாம் வாழும் காலத்தின் அவசரத்தன்மையை அடிக்கோடிட்டு காட்டுகிறது. ஏழாவது ராஜாவான ஆங்கிலோ-அமெரிக்க உலக வல்லரசு தோன்றியிருக்கிறது. அதைப் பற்றி பைபிள் இவ்வாறு சொல்கிறது: “அவன் [ஏழாவது உலக வல்லரசு] வரும்போது சிறிது காலம் இருப்பான்.” இப்போது அந்த “சிறிது காலம்” முடிவடையும் தறுவாயில் இருக்கிறது. இந்தப் பொல்லாத உலகின் முடிவைக் குறித்து ஆபகூக் தீர்க்கதரிசி பின்வரும் உறுதியை நமக்கு அளிக்கிறார்: “குறித்த காலத்துக்குத் தரிசனம் இன்னும் வைக்கப்பட்டிருக்கிறது; . . . அதற்குக் காத்திரு; அது நிச்சயமாய் வரும், அது தாமதிப்பதில்லை.”—ஆப. 2:3.
17 ஆகவே, உங்களையே இவ்வாறு கேட்டுக்கொள்ளுங்கள்: ‘நான் உண்மையிலேயே காலத்தின் அவரசத்தன்மையை உணர்ந்து வாழ்கிறேனா? முடிவு சீக்கிரத்தில் வருமென நான் எதிர்பார்ப்பதை என்னுடைய வாழ்க்கை முறை காட்டுகிறதா? அல்லது என்னுடைய தீர்மானங்களும் நான் முதலிடம் கொடுக்கிற காரியங்களும் முடிவு இப்போதைக்கு வராது என்றோ வரவே வராது என்றோ நான் நினைப்பதைக் காட்டுகின்றனவா?’
18, 19. இது ஏன் ஊழியத்தில் மந்தமாகிவிடுவதற்கான காலம் அல்ல?
18 காவற்கார வகுப்பாரின் வேலை இன்னும் முடிவடையவில்லை. (எரேமியா 1:17-19-ஐ வாசியுங்கள்.) பரலோக நம்பிக்கையுள்ளவர்களில் மீதியானோர் ‘அரணிப்பான பட்டணத்தையும் இருப்புத் தூணையும்’ போல உறுதியாய் நிற்பது எப்பேர்ப்பட்ட மகிழ்ச்சியைத் தருகிறது! அவர்கள் ‘சத்தியத்தை இடைக்கச்சையாகக் கட்டியிருப்பதால்’ தங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலை முடிவடையும் வரையில் கடவுளுடைய வார்த்தையைக் கொண்டு தங்களைப் பலப்படுத்திக்கொள்கிறார்கள். (எபே. 6:14) அதே தீர்மானத்தோடு திரள் கூட்டத்தாரைச் சேர்ந்தவர்களும் கடவுள் கொடுத்த வேலையைச் செய்ய எரேமியா வகுப்பாருக்கு முழு ஆதரவு தருகிறார்கள்.
19 இது, ஊழியத்தில் மந்தமாகிவிடுவதற்கான காலம் அல்ல, ஆனால் எரேமியா 12:5-ன் (வாசியுங்கள்.) கருத்தைச் சிந்தித்துப் பார்ப்பதற்கான காலம். நாம் எல்லாருமே பல கஷ்டங்களைச் சகிக்க வேண்டியிருக்கிறது. நம் விசுவாசத்திற்குச் சோதனையாக வருகிற இந்தக் கஷ்டங்கள், ‘காலாட்களுக்கு’ ஒப்பிடப்படுகின்றன; இவற்றோடு நாம் போட்டி போட்டுக்கொண்டு ஓட வேண்டியிருக்கிறது. என்றாலும், “மிகுந்த உபத்திரம்” நெருங்கி வர வர, நாம் இன்னும் பல நெருக்கடிகளை எதிர்பார்க்கலாம். (மத். 24:21) நாம் சந்திக்கப்போகிற இன்னும் மோசமான பிரச்சினைகளைச் சமாளிப்பதைப் போட்டி போட்டுக் கொண்டு ‘குதிரைகளோடு சேர்ந்து ஓடுவதற்கு’ ஒப்பிடலாம். பாய்ந்தோடும் குதிரைகளோடு போட்டி போட்டு ஓட ஒருவருக்கு அசாத்திய சக்தியும் பொறுமையும் தேவைப்படலாம். ஆகவே, நாம் இப்போது எதிர்ப்படுகிற கஷ்டங்களைச் சகிப்பது நல்லது; அப்படிச் செய்யும்போது வரவிருக்கிற கஷ்டங்களைச் சகிக்க நம்மைத் தயார்படுத்திக்கொள்ள முடியும்.
20. நீங்கள் என்ன செய்யத் தீர்மானமாய் இருக்கிறீர்கள்?
20 நாம் எல்லாருமே எரேமியாவைப் பின்பற்றி நமக்குக் கொடுக்கப்பட்ட பிரசங்க வேலையை வெற்றிகரமாகச் செய்து முடிக்க முடியும்! 67 வருடங்களுக்கு உண்மையோடு ஊழியம் செய்ய அன்பு, தைரியம், மகிழ்ச்சி போன்ற குணங்கள் எரேமியாவைத் தூண்டின. யெகோவா தம்முடைய வார்த்தையை நிறைவேற்ற ‘விழித்திருப்பார்’ என்பதை வாதுமை மரத்தின் அழகிய மலர்கள் நமக்கு நினைப்பூட்டுகின்றன. அப்படியானால், நாமும் விழித்திருக்க நியாயமான காரணம் இருக்கிறது. எரேமியா ‘விழித்திருந்தார்,’ நாமும் அவ்வாறு இருக்க முடியும்.
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
• தன்னுடைய வேலையில் ‘விழித்திருக்க’ எரேமியாவுக்கு அன்பு எப்படி உதவியது?
• கடவுள் தரும் தைரியம் நமக்கு ஏன் தேவைப்படுகிறது?
• எப்போதும் மகிழ்ச்சியோடிருக்க எது எரேமியாவுக்கு உதவியது?
• நீங்கள் ‘விழித்திருக்க’ விரும்புவது ஏன்?
[பக்கம் 31-ன் படங்கள்]
எதிர்ப்பு வந்தாலும், நீங்கள் தொடர்ந்து பிரசங்க வேலை செய்வீர்களா?