யெகோவாவின் வார்த்தை ஜீவனுள்ளது
எசேக்கியேல் புத்தகத்திலிருந்து சிறப்பு குறிப்புகள்—முதல் பகுதி
வ ருடம் பொ.ச.மு. 613. எரேமியா தீர்க்கதரிசி யூதா தேசத்தில் இருக்கிறார். எருசலேமுக்கு வரவிருக்கும் அழிவைப் பற்றியும் யூதா தேசம் பாழாக்கப்படப் போவதைப் பற்றியும் அவர் தைரியமாக அறிவித்து வருகிறார். பாபிலோன் ராஜாவான நேபுகாத்நேச்சார் அநேக யூதர்களை ஏற்கெனவே சிறைபிடித்துச் சென்று விட்டார். இளம் தானியேலும் அவருடைய மூன்று தோழர்களும் அவ்வாறு சிறைபிடித்துச் செல்லப்பட்டவர்கள். கல்தேயரின் அரசவையில் அவர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். சிறைபிடித்துச் செல்லப்பட்டவர்களில் பெரும்பாலோர், “கல்தேயர் தேசத்திலுள்ள” கேபார் நதியண்டையிலே குடியிருக்கிறார்கள். (எசேக்கியேல் 1:1-3) அவர்களுக்குத் தம்முடைய செய்தியை அறிவிக்க யெகோவா ஏற்பாடு செய்கிறார். 30 வயது எசேக்கியேலை தீர்க்கதரிசியாக அவர் நியமிக்கிறார்.
பொ.ச.மு. 591-ல் எழுதி முடிக்கப்பட்ட எசேக்கியேல் புத்தகத்தில் 22 வருட காலப்பகுதியில் நடந்த சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. எசேக்கியேல் இப்புத்தகத்தை மிகுந்த சிரத்தையுடன் எழுதுகிறார். தான் தீர்க்கதரிசனம் சொன்ன நாள், மாதம், வருடம் ஆகியவற்றைக்கூட விட்டுவிடாமல் எழுதுகிறார். எசேக்கியேல் புத்தகத்தின் முதல் பகுதியில், எருசலேமின் வீழ்ச்சியையும் அழிவையும் பற்றிய செய்திகள் உள்ளன. இரண்டாம் பகுதியில், சுற்றிலுமிருந்த தேசங்களுக்கு எதிரான பிரகடனங்கள் உள்ளன. கடைசிப் பகுதியில், யெகோவாவின் வணக்கம் மீண்டும் புதுப்பிக்கப்படுவதைப் பற்றிய விவரங்கள் உள்ளன. எசேக்கியேல் 1:1–24:27-ல் உள்ள சிறப்பு குறிப்புகளை இக்கட்டுரையில் காணலாம். இந்தப் பகுதியில், எருசலேமுக்கு வரவிருக்கும் விபரீதத்தைச் சித்தரிக்கிற தரிசனங்களும் தீர்க்கதரிசனங்களும் நடிப்புகளும் உள்ளன.
‘உன்னைக் காவலாளனாக வைத்தேன்’
தமது சிங்காசனத்தின் மலைக்க வைக்கும் காட்சியை எசேக்கியேலுக்குக் காட்டிய பிறகு, யெகோவா அவருக்கு ஒரு வேலையைக் கொடுக்கிறார். “உன்னை இஸ்ரவேல் வம்சத்தாருக்குக் காவலாளனாக வைத்தேன்; நீ என் வாயினாலே வார்த்தையைக் கேட்டு, என் நாமத்தினாலே அவர்களை எச்சரிப்பாயாக” என்று சொல்கிறார். (எசேக்கியேல் 3:17) எருசலேம் முற்றுகையிடப்படுவதையும் அதனால் வரும் பாதிப்புகளையும்பற்றி தீர்க்கதரிசனம் உரைக்க, இரண்டு நடிப்புகளைச் செய்யும்படி எசேக்கியேலுக்கு யெகோவா கட்டளையிடுகிறார். யூதா தேசத்தைக் குறித்து இவ்வாறு சொல்லும்படி யெகோவா கூறுகிறார்: “இதோ, உங்கள்மேல் நான், நானே பட்டயத்தை வரப்பண்ணி, உங்கள் மேடைகளை அழித்துப்போடுவேன்.” (எசேக்கியேல் 6:3) அந்தத் தேசத்துக் குடிகளைக் குறித்து அவர் இவ்வாறு சொல்கிறார்: “விடியற்காலம் [கேடுகாலம்] வருகிறது.”—எசேக்கியேல் 7:7.
பொ.ச.மு. 612-ல், தான் எருசலேமுக்குக் கொண்டுசெல்லப்படுவதாக எசேக்கியேல் தரிசனம் காண்கிறார். பார்க்கச் சகிக்காத எப்பேர்ப்பட்ட அருவருப்பான காரியங்களெல்லாம் கடவுளுடைய ஆலயத்தில் நடப்பதை அவர் காண்கிறார்! தண்டனைத்தீர்ப்பை நிறைவேற்றும் பரலோகச் சேனைகளை (“ஆறு புருஷர்” எனச் சித்தரிக்கப்பட்டுள்ளவர்களை) அனுப்பி விசுவாசதுரோகிகள் மீதுள்ள தமது கோபத்தை யெகோவா வெளிக்காட்டும் சமயத்தில், தங்கள் ‘நெற்றிகளில் அடையாளம் போடப்பட்டவர்கள்’ மாத்திரம் காப்பாற்றப்படுவார்கள். (எசேக்கியேல் 9:2-6) இருந்தாலும், முதலில் ‘அக்கினித்தழல்’ நகரத்தின்மீது வீசப்பட வேண்டும்; அதாவது அழிவைப் பற்றிய கடவுளுடைய கோபாக்கினையின் செய்தி அறிவிக்கப்பட வேண்டும். (எசேக்கியேல் 10:2) யெகோவா, துன்மார்க்கருடைய வழியின் பலனை அவர்கள் தலைகளின்மேல் சுமரப்பண்ணுவார்; அதே சமயத்தில், இஸ்ரவேலரில் சிதறடிக்கப்பட்டுப் போனவர்களை மீண்டும் கூட்டிச்சேர்ப்பாரென அவர் வாக்குறுதி அளிக்கிறார்.—எசேக்கியேல் 11:17-21.
கடவுளுடைய ஆவி, எசேக்கியேலை மீண்டும் கல்தேயாவுக்குக் கொண்டுவருகிறது. சிதேக்கியா ராஜாவும் ஜனங்களும் எருசலேமிலிருந்து தப்பியோடுவதுபோல் அவர் நடித்துக்காட்டுகிறார். பொய்த் தீர்க்கதரிசிகளும் தீர்க்கதரிசினிகளும் கண்டிக்கப்படுகிறார்கள். விக்கிரகங்களை வழிபடுவோர் நிராகரிக்கப்படுகிறார்கள். யூதா, பயனற்ற ஒரு திராட்சைச் செடியைப்போல் இருக்கிறது. கழுகையும் திராட்சைச் செடியையும் பற்றிய விடுகதை, எகிப்தின் உதவியை நாடுவதால் எருசலேம் சந்திக்கிற பயங்கரமான விபரீதங்களைக் காட்டுகிறது. ‘இளங்கிளையிலுள்ள கொழுந்துகளில் இளசாயிருக்கிற ஒன்றைக் கொய்து, அதை உயரமான ஒரு பர்வதத்தின்மேல் [யெகோவா] நாட்டுவார்’ என்ற வாக்குறுதியோடு அந்த விடுகதை முடிவுறுகிறது. (எசேக்கியேல் 17:22) என்றாலும், யூதாவில் இனி ‘ஆளுவதற்கு செங்கோல் இருக்காது.’—எசேக்கியேல் 19:14.
வேதப்பூர்வ கேள்விகளுக்குப் பதில்கள்:
1:4-28—இந்தப் பரம ரதம் எதற்கு அடையாளமாக இருக்கிறது? இந்த ரதம், உண்மையுள்ள ஆவி சிருஷ்டிகளடங்கிய, யெகோவாவுடைய அமைப்பின் பரலோக பாகத்திற்கு அடையாளமாக இருக்கிறது. யெகோவாவின் பரிசுத்த ஆவியே அதற்குச் சக்தியளிக்கிறது. அதில் சவாரி செய்பவராக அடையாளங்காட்டப்படுகிற யெகோவா மிகவும் மகிமைபொருந்தியவராய்க் காணப்படுகிறார். அழகிய வானவில் அவருடைய அமைதியான மனநிலையைச் சித்தரித்துக் காட்டுகிறது.
1:5-11—அந்த நான்கு ஜீவன்கள் யாரைக் குறிக்கின்றன? ரதத்தைப் பற்றிய தனது இரண்டாவது தரிசனத்தில், அந்த நான்கு ஜீவன்களையும் கேருபீன்களாக எசேக்கியேல் அடையாளம் காட்டுகிறார். (எசேக்கியேல் 10:1-11; 11:22) இந்த இரண்டாவது தரிசனத்தைப்பற்றி விவரிக்கையில், எருதின் முகத்தை ‘கேருபீன் முகம்’ என அவர் அழைக்கிறார். (எசேக்கியேல் 10:14) இவ்வாறு அழைக்கப்படுவது பொருத்தமானதே. ஏனெனில் எருது, சக்திக்கும் பலத்திற்கும் அடையாளமாய் இருக்கிறது; கேருபீன்கள் வல்லமைமிக்க ஆவி சிருஷ்டிகளாவர்.
2:6—எசேக்கியேலை ‘மனுபுத்திரன்’ என திரும்பத் திரும்ப குறிப்பிடுவது ஏன்? எசேக்கியேலை இவ்வாறு குறிப்பிடுவதன்மூலம் அவர் ஒரு மனித தீர்க்கதரிசியே என்பதை யெகோவா அவருக்கு நினைப்பூட்டுகிறார்; இவ்வாறு மனித தூதுவருக்கும் அந்தச் செய்தியின் ஊற்றுமூலரான கடவுளுக்கும் இடையிலான பெரும் வித்தியாசத்தைச் சிறப்பித்துக் காட்டுகிறார். மனுபுத்திரன், அல்லது மனுஷகுமாரன் என்ற சுட்டுப்பெயர் இயேசு கிறிஸ்துவுக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது; சுவிசேஷ புத்தகங்களில் இப்பெயர் சுமார் 80 இடங்களில் காணப்படுகிறது. இது, கடவுளுடைய குமாரன் மனித அவதாரம் எடுக்கவில்லை, மாறாக பூமியில் ஒரு மனிதனாகவே பிறந்தார் என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.
2:9–3:3—புலம்பல்களும் தவிப்பும் அடங்கிய புத்தகச்சுருள் எசேக்கியேலின் வாய்க்கு ஏன் தித்திப்பாய் இருந்தது? அதற்குக் காரணம், தனக்குக் கொடுக்கப்பட்ட வேலையின்மீது அவருக்கிருந்த மனப்பான்மையே. ஒரு தீர்க்கதரிசியாக யெகோவாவுக்குச் சேவை செய்வதை எசேக்கியேல் பெரும் பாக்கியமாய்க் கருதினார்.
4:1-17—எருசலேம் எவ்வாறு முற்றுகையிடப்படும் என்பதை எசேக்கியேல் உண்மையிலேயே நடித்துக்காட்டினாரா? சமைப்பதற்கான எரிபொருளை மாற்றும்படி எசேக்கியேல் கெஞ்சிக்கேட்டதும், அதற்கு யெகோவா அனுமதி அளித்ததும் எசேக்கியேல் அதை உண்மையிலேயே நடித்துக்காட்டினார் என்பதைக் காண்பிக்கிறது. பத்துக்கோத்திர ராஜ்யம் 390 வருடங்களாகச் செய்துவந்த பாவங்களுக்காக அவர் இடதுபக்கமாய்ப் படுக்க வேண்டியிருந்தது; அது பொ.ச.மு. 997-ல் பத்துக்கோத்திர ராஜ்யம் ஆரம்பமானதிலிருந்து பொ.ச.மு. 607-ல் எருசலேம் அழிக்கப்பட்டது வரையான காலப்பகுதியாகும். யூதா ராஜ்யம் 40 வருடங்களாகச் செய்துவந்த பாவங்களுக்காக அவர் வலதுபக்கமாய்ப் படுக்க வேண்டியிருந்தது; அது, பொ.ச.மு. 647-ல் தீர்க்கதரிசியாக எரேமியா நியமிக்கப்பட்டதிலிருந்து பொ.ச.மு. 607 வரையான காலப்பகுதியாகும். மொத்தமாக அந்த 430 நாட்களின்போதும் அவர் உணவையும் தண்ணீரையும் குறைவாக அருந்த வேண்டியிருந்தது; எருசலேம் முற்றுகையிடப்படுகையில் அங்கு பஞ்சம் உண்டாயிருக்கும் என்பதையே இது தீர்க்கதரிசனமாகக் காட்டியது.
5:1-3—எசேக்கியேல் தான் காற்றில் தூற்றவிருந்த மயிரில் கொஞ்சத்தை எடுத்து தன் வஸ்திரத்தில் முடிந்துவைப்பது எதை அர்த்தப்படுத்துகிறது? 70 வருட பாழ்க்கடிப்புக்குப் பிறகு இஸ்ரவேலில் மீதியானோர் யூதாவுக்குத் திரும்பிவந்து யெகோவாவை உண்மையோடு வணங்க ஆரம்பிப்பார்கள் என்பதை அர்த்தப்படுத்துகிறது.—எசேக்கியேல் 11:17-20.
17:1-24—இரண்டு பெரிய கழுகுகள் யாரைக் குறிக்கின்றன, கேதுரு மரத்தின் கொழுந்துகள் கொய்துசெல்லப்படுவது எப்படி, யெகோவாவால் வேறு இடத்தில் நாட்டப்படுகிற ‘கொழுந்துகளில் இளசாயிருக்கிற ஒன்று’ யார்? பாபிலோன் மற்றும் எகிப்தின் ராஜாக்களையே இந்த இரண்டு கழுகுகளும் குறிக்கின்றன. முதலாம் கழுகு, கேதுரு மரத்தின் உச்சிக்கு, அதாவது தாவீதின் அரச பரம்பரையில் வந்த ராஜாவிடம் வருகிறது. இந்தக் கழுகு, யூதாவின் ராஜாவான யோயாக்கீனை நீக்கி, சிதேக்கியாவை அமர்த்துவதன்மூலம் இளங்கிளையிலுள்ள கொழுந்துகளைக் கொய்து செல்கிறது. பாபிலோனின் ராஜாவுக்கு உண்மைதவறாதவனாய் இருப்பதாக உறுதிமொழி எடுத்தும் சிதேக்கியா அதை மீறி, வேறொரு கழுகாகிய எகிப்தின் ராஜாவுடைய உதவியை நாடுகிறான். ஆனால் அவனுடைய முயற்சி தோல்வியடைகிறது. அவன் சிறைபிடிக்கப்பட்டு பாபிலோனில் மடிந்துபோவான். யெகோவாவும்கூட “கொழுந்துகளில் இளசாயிருக்கிற ஒன்றை,” அதாவது மேசியானிய ராஜாவைக் கொய்கிறார். அவர் ‘உயரமும் உன்னதமுமான ஒரு பர்வதமாகிய’ பரலோக சீயோன் மலையின்மேல் நாட்டப்படுகிறார். அங்கே அவர் ‘மகிமையான கேதுருவாக’ ஆவார்; பூமியின்மீது ஆசீர்வாதங்களைப் பொழிவார்.—வெளிப்படுத்துதல் 14:1.
நமக்குப் பாடம்:
2:6-8; 3:8, 9, 18-21. நாம் பொல்லாதவர்களுக்குப் பயப்படவோ கடவுள் கொடுக்கும் எச்சரிப்புகள் அடங்கிய செய்தியை அறிவிப்பதை நிறுத்திவிடவோ கூடாது. நம்முடைய செய்தியை மக்கள் அலட்சியம் செய்கையில் அல்லது எதிர்க்கையில், நாம் வைரத்தைப்போல் உறுதியாய் இருப்பது அவசியம். அதே சமயத்தில், கல்நெஞ்சக்காரராகவோ உணர்ச்சியற்றவராகவோ ஈவிரக்கமற்றவராகவோ ஆகிவிடாதபடி கவனமாய் இருப்பதும் அவசியம். இயேசு தாம் பிரசங்கித்த மக்களிடம் பரிவு காட்டினார்; அவ்வாறே நாமும் பரிவுடன் மற்றவர்களுக்குப் பிரசங்கிக்க வேண்டும்.—மத்தேயு 9:36.
3:15. தனக்குக் கொடுக்கப்பட்ட வேலையை ஏற்றுக்கொண்ட பிறகு, எசேக்கியேல் தெலாபீப் என்ற இடத்திலே குடியிருந்தார்; ‘ஏழுநாள் பிரமித்தவராய்’ தான் அறிவிக்கவிருந்த செய்தியைக் குறித்துச் சிந்தித்தார். ஆழமான ஆன்மீகச் சத்தியங்களைப் புரிந்துகொள்ள நாமும்கூட நேரமெடுத்து ஊக்கமாய்ப் படித்து அவற்றைத் தியானிக்க வேண்டும், அல்லவா?
4:1–5:4. இரண்டு தீர்க்கதரிசன சம்பவங்களையும் நடித்துக்காட்ட எசேக்கியேலுக்கு மனத்தாழ்மையும் தைரியமும் தேவைப்பட்டது. கடவுள் கொடுக்கும் எந்த நியமிப்பையும் செய்யும்போது நாமும்கூட மனத்தாழ்மையுள்ளவர்களாயும் தைரியமுள்ளவர்களாயும் இருப்பது அவசியம்.
7:4, 9; 8:18; 9:5, 10. கடவுளுடைய கொடிய தண்டனைக்கு ஆளாவோரைப் பார்த்து நாம் பரிதாபப்படவோ இரக்கப்படவோ வேண்டியதில்லை.
7:19. இந்தப் பொல்லாத உலகத்தை யெகோவா நியாயந்தீர்க்கையில் பணத்திற்கு எந்த மதிப்பும் இருக்காது.
8:5-18. விசுவாசதுரோகம், கடவுளோடு ஒருவர் வைத்திருக்கும் பந்தத்தை முறித்துவிடுகிறது. “மாயக்காரன் [அதாவது, விசுவாசதுரோகி] தனக்கு அடுத்தவனை வாயினால் கெடுக்கிறான்.” (நீதிமொழிகள் 11:9) விசுவாசதுரோகிகளுக்குச் செவிகொடுப்பதைப்பற்றி நாம் நினைத்துக்கூடப் பார்க்காதிருப்பது ஞானமான செயலாகும்.
9:3-6. அடையாளத்தைப் பெறுவது, அதாவது கடவுளுக்கு ஒப்புக்கொடுத்து அவருடைய முழுக்காட்டப்பட்ட ஊழியர்களாக ஆவதும், கிறிஸ்தவ சுபாவத்தை வெளிக்காட்டுவதும், ‘மிகுந்த உபத்திரவத்தை’ தப்பிப்பிழைப்பதற்கு அத்தியாவசியமானவை. (மத்தேயு 24:21) கணக்கனுடைய மைக்கூட்டை வைத்திருக்கிறவரால் பிரதிநிதித்துவம் செய்யப்படுகிற அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள், இந்த அடையாளம் போடும் வேலையில், அதாவது ராஜ்ய பிரசங்க வேலையிலும் சீஷராக்கும் வேலையிலும் முன்நின்று வழிநடத்துகிறார்கள். நாம் பெற்றிருக்கும் அடையாளத்தை அழியாமல் பார்த்துக்கொள்ள வேண்டுமென்றால், அவர்களோடு சேர்ந்து இந்த வேலையில் நாமும் பக்திவைராக்கியத்துடன் ஈடுபட வேண்டும்.
12:26-28. தன்னுடைய செய்தியைக் கேலி செய்தவர்களிடத்தில்கூட எசேக்கியேல் இவ்வாறு சொல்ல வேண்டியிருந்தது: ‘[யெகோவாவின்] வார்த்தைகளில் ஒன்றாகிலும் இனித் தாமதிப்பதில்லை.’ அவ்வாறே, யெகோவா இந்தப் பொல்லாத உலகிற்கு முடிவுகட்டுவதற்கு முன்பாக ஜனங்கள் அவர்மீது நம்பிக்கை வைப்பதற்கு நம்மாலான அனைத்தையும் செய்ய வேண்டும்.
14:12-23. நம்முடைய இரட்சிப்புக்கு நாம்தான் பொறுப்பு. அதை நமக்காக வேறு யாரும் ஏற்க முடியாது.—ரோமர் 14:12.
18:1-29. நம்முடைய செயலின் பின்விளைவுகளுக்கு நாமே பொறுப்பு.
“அதைக் கவிழ்ப்பேன், கவிழ்ப்பேன், கவிழ்ப்பேன்”
நாடுகடத்தப்பட்ட ஏழாம் வருடமாகிய பொ.ச.மு. 611-ல் இஸ்ரவேலின் மூப்பர்கள் “கர்த்தரிடத்தில் விசாரிக்கும்படி” எசேக்கியேலிடம் வருகிறார்கள். இஸ்ரவேலர்கள் இதுவரை எப்படியெல்லாம் கலகம் செய்தார்கள் என்பதை எசேக்கியேல் சொல்லக் கேட்கிறார்கள்; அவர்களுக்கு விரோதமாக ‘யெகோவா தம் பட்டயத்தை உருவுவார்’ என்ற எச்சரிப்பையும் கேட்கிறார்கள். (எசேக்கியேல் 20:1; 21:3) இஸ்ரவேலின் அதிபதியிடம் (சிதேக்கியாவிடம்) யெகோவா இவ்வாறு கூறுகிறார்: “பாகையைக் கழற்று, கிரீடத்தை எடுத்துப்போடு; அது இனி முன்போலிராது; தாழ்ந்தவனை உயர்த்தி, உயர்ந்தவனைத் தாழ்த்துவேன். அதைக் கவிழ்ப்பேன், கவிழ்ப்பேன், கவிழ்ப்பேன்; உரிமைக்காரனானவர் [இயேசு கிறிஸ்து] வருமட்டும் அது இல்லாதிருக்கும்; அவருக்கே அதைக் கொடுப்பேன்.”—எசேக்கியேல் 21:26, 27.
எருசலேம் செய்த தவறுக்காக அது குற்றம்சாட்டப்படுகிறது. அகோலாளும் (இஸ்ரவேல்) அகோலிபாளும் (யூதா) செய்த தவறுகள் அம்பலப்படுத்தப்படுகின்றன. அகோலாள் ஏற்கெனவே “அவளுடைய சிநேகிதரின் கையிலே, அவள் மோகித்திருந்த அசீரிய புத்திரரின் கையிலே” ஒப்புக்கொடுக்கப்பட்டிருந்தாள். (எசேக்கியேல் 23:9) அகோலிபாளோ சீக்கிரத்திலே பாழாக்கப்படும் நிலையில் இருந்தாள். பொ.ச.மு. 609-ல் எருசலேம் மீதான 18 மாத முற்றுகை ஆரம்பமாகிறது. கடைசியில் அந்த நகரம் வீழ்ச்சியடைகையில், யூதர்கள் தங்களுடைய மன வருத்தத்தைத் தெரிவிக்க முடியாதளவுக்கு அதிர்ச்சியில் உறைந்துபோய் இருப்பார்கள். ‘தப்பிவந்த ஒருவனிடமிருந்து’ எருசலேம் நகரம் அழிக்கப்பட்ட விவரத்தைக் கேட்டறியும் வரையில் கடவுளின் செய்தியை நாடுகடத்தப்பட்டவர்களுக்கு எசேக்கியேல் சொல்லக்கூடாது.—எசேக்கியேல் 24:26, 27.
வேதப்பூர்வ கேள்விகளுக்குப் பதில்கள்:
21:3—யெகோவா தம் உறையிலிருந்து உருவும் ‘பட்டயம்’ என்ன? பாபிலோனின் ராஜாவான நேபுகாத்நேச்சாரும் அவருடைய படையும்தான் எருசலேமையும் யூதாவையும் நியாயந்தீர்ப்பதற்கு யெகோவா பயன்படுத்தும் ‘பட்டயமாக’ இருந்தன. பலம்மிக்க ஆவி சிருஷ்டிகள் அடங்கிய கடவுளுடைய அமைப்பின் பரலோக பாகமும் இதில் உட்பட்டிருக்கலாம்.
24:6-14—நுரை [“துரு,” NW] ஒட்டிக்கொண்டிருக்கிற கொப்பரை எதை அர்த்தப்படுத்துகிறது? முற்றுகையிடப்பட்டிருக்கிற எருசலேம் அகன்ற வாயையுடைய ஒரு கொப்பரையைப்போல் இருக்கிறது. அதிலுள்ள துரு, அந்நகரத்தின் ஒழுக்கக்கேட்டைக் குறிக்கிறது; அசுத்தமான செயல்கள், மோசமான நடத்தை, இரத்தம் சிந்துதல் ஆகியவற்றிற்கு அதுவே பொறுப்புடையதாய் இருக்கிறது. அது அசுத்தமான காரியங்களுக்கு அந்தளவு துணைபோனதால், வெறுங் கொப்பரையைத் தழலின்மேல் வைத்து எவ்வளவுதான் சூடாக்கினாலும் அதன் துரு நீங்கினபாடில்லை.
நமக்குப் பாடம்:
20:1, 49. எசேக்கியேல் சொன்னதை இஸ்ரவேலின் மூப்பர்கள் நம்பவில்லை என்பது, அவர்கள் பேசினதிலிருந்தே தெரிகிறது. கடவுள் கொடுக்கும் எச்சரிப்புகளைக் குறித்து நாம் ஒருபோதும் சந்தேகிக்கக் கூடாது.
21:18-22. நேபுகாத்நேச்சார் என்னதான் நிமித்தம் பார்த்தாலும்கூட, அதாவது குறிகேட்டாலும்கூட, அந்தப் புறமத ராஜாவை எருசலேமுக்கு எதிராக வரச்செய்தது யெகோவாவே. இது, நியாயத்தீர்ப்பு வழங்க யெகோவா பயன்படுத்துவோரைத் தடுக்க பேய்களாலும் முடியாது என்பதையே காட்டுகிறது.
22:6-16. பழித்துப்பேசுதல், மோசமான நடத்தை, அதிகார துர்ப்பிரயோகம், லஞ்சம் வாங்குதல் ஆகியவற்றை யெகோவா வெறுக்கிறார். இப்படிப்பட்ட பாவச் செயல்களில் ஈடுபடாதவாறு நாம் திடத்தீர்மானமாய் இருக்க வேண்டும்.
23:5-49. இஸ்ரவேலும் யூதாவும் பிற தேசத்தாருடன் கூட்டுச்சேர்ந்ததால், அத்தேசத்தாரின் பொய் வணக்கத்தைத் தழுவ ஆரம்பித்தன. உலகப்பிரகாரமான ஆட்களுடன் கூட்டுச்சேராமல் பார்த்துக்கொள்வோமாக; அது நம் விசுவாசத்தைக் குலைத்துப்போடும்.—யாக்கோபு 4:4.
ஜீவனும் வல்லமையுமுள்ள ஒரு செய்தி
பைபிளிலுள்ள எசேக்கியேல் புத்தகத்தின் முதல் 24 அதிகாரங்களிலிருந்து எத்தனை அருமையான பாடங்களைக் கற்றுக்கொண்டோம்! அவற்றிலுள்ள நியமங்கள், எது கடவுளுக்கு வெறுப்பேற்றுகிறது, கடவுளுடைய இரக்கத்தை நாம் எப்படிப் பெற்றுக்கொள்ளலாம், துன்மார்க்கரை நாம் ஏன் எச்சரிக்க வேண்டும் என்பதையெல்லாம் காட்டுகின்றன. கடவுளாகிய யெகோவா தம் மக்களுக்கு ‘புதியவைகளை, அவைகள் தோன்றாததற்கு முன்னே அறிவிக்கிறார்’ என்பதை எருசலேமின் அழிவைக் குறித்த தீர்க்கதரிசனம் தெளிவாகச் சித்தரிக்கிறது.—ஏசாயா 42:9.
எசேக்கியேல் 17:22-24; 21:26, 27 போன்ற வசனங்களில் காணப்படுகிற தீர்க்கதரிசனங்கள், பரலோகத்தில் மேசியானிய ராஜ்யம் ஸ்தாபிக்கப்படுவதைச் சுட்டிக்காட்டுகின்றன. சீக்கிரத்திலேயே, அந்த அரசாங்கத்தின்மூலம் கடவுளுடைய சித்தம் பூமியில் செய்யப்படும். (மத்தேயு 6:9, 10) அந்த அரசாங்கத்தின் ஆசீர்வாதங்களுக்காக நாம் பலமான விசுவாசத்தோடும் உறுதியான நம்பிக்கையோடும் காத்திருக்கலாம். ஆம், ‘தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளது.’—எபிரெயர் 4:12.
[பக்கம் 12-ன் படம்]
பரம ரதம் எதற்கு அடையாளமாக இருக்கிறது?
[பக்கம் 14-ன் படம்]
பிரசங்க வேலையில் பக்திவைராக்கியத்துடன் ஈடுபடுவது நம் ‘அடையாளத்தை’ அழியாமல் பார்த்துக்கொள்ள உதவும்