அதிகாரம் 11
“நான் உன்னைக் காவல்காரனாக நியமித்திருக்கிறேன்”
முக்கியக் குறிப்பு: யெகோவா ஒரு காவல்காரரை நியமித்து, அவருடைய பொறுப்பைப் பற்றி விளக்குகிறார்
1. யெகோவா நியமித்த காவல்காரர்கள் செய்த வேலையையும் அதைத் தொடர்ந்து நடந்த சம்பவங்களையும் பற்றிச் சொல்லுங்கள்.
காவல்காரர் ஒருவர் எருசலேமின் மதில்கள்மேல் நின்றுகொண்டிருக்கிறார். சூரிய அஸ்தமனத்தின் ஒளி படாதபடி கையால் தன் கண்களை மறைத்துக்கொண்டு, தூரத்தில் யாராவது வருகிறார்களா என்று உன்னிப்பாகப் பார்க்கிறார். திடீரென்று, எக்காளத்தைக் கையில் எடுக்கிறார். மக்களை எச்சரிப்பதற்காகத் தன்னுடைய சக்தியையெல்லாம் ஒன்றுதிரட்டி ஊதுகிறார். அதோ, பாபிலோனியப் படை வருகிறது! ஆனால், இத்தனை காலமாக மெத்தனமாக இருந்த மக்கள், இப்போது என்ன நடவடிக்கை எடுத்தாலும் பிரயோஜனம் இல்லை. காலம் கடந்துவிட்டது! இதைப் பற்றி யெகோவா நியமித்த காவல்காரர்கள், அதாவது தீர்க்கதரிசிகள், பல வருஷங்களாகவே எச்சரித்துக்கொண்டிருந்தார்கள். ஆனால், மக்கள் அதையெல்லாம் காதில்வாங்கவே இல்லை. இப்போது, பாபிலோனியப் படை நகரத்தைச் சுற்றிவளைத்துவிட்டது. பல மாத முற்றுகைக்குப் பிறகு, படைவீரர்கள் நகரத்தின் மதில்களை உடைத்து உள்ளே புகுந்து ஆலயத்தைத் தரைமட்டமாக்குகிறார்கள். சிலை வழிபாட்டில் ஈடுபட்ட விசுவாசம் இல்லாத எருசலேம் குடிமக்கள் நிறைய பேரைக் கொன்றுபோடுகிறார்கள். இன்னும் நிறைய பேரைச் சிறைபிடித்துக் கொண்டுபோகிறார்கள்.
2, 3. (அ) பூமியிலுள்ள எல்லா மக்களுக்கும் எதிராக சீக்கிரத்தில் என்ன நடக்கப்போகிறது? (ஆ) என்னென்ன கேள்விகளுக்கான பதில்களைப் பார்க்கப்போகிறோம்?
2 இன்றும் விசுவாசம் இல்லாத மக்களை எதிர்த்துப் போர் செய்ய யெகோவாவின் பரலோகப் படை வந்துகொண்டிருக்கிறது. (வெளி. 17:12-14) சரித்திரம் காணாத ஒரு மிகுந்த உபத்திரவத்தின் முடிவில் அந்தப் போர் நடக்கும். (மத். 24:21) ஆனால், யெகோவாவினால் நியமிக்கப்பட்டவர்கள் இன்றும் ஒரு காவல்காரரைப் போல எச்சரிப்பு கொடுத்துவருகிறார்கள். அதைக் கேட்டுச் செயல்படுவதற்கு இதுதான் சரியான காலம்.
3 காவல்காரர்களை நியமிக்க யெகோவாவை எது தூண்டியது? எப்படிப்பட்ட செய்தியை ஒரு காவல்காரர் அறிவிக்கிறார்? யாரெல்லாம் காவல்காரராக வேலை செய்திருக்கிறார்கள்? இந்த வேலையில் நமக்கு என்ன பங்கு இருக்கிறது? இந்தக் கேள்விகளுக்கான பதில்களை இப்போது பார்க்கலாம்.
‘என்னிடமிருந்து கேட்ட எச்சரிப்பு செய்தியை அவர்களிடம் சொல்’
4. காவல்காரர்களை யெகோவா ஏன் நியமித்தார்? (ஆரம்பப் படம்.)
4 எசேக்கியேல் 33:7-ஐ வாசியுங்கள். பொதுவாக, மக்களின் பாதுகாப்புக்காக காவல்காரர்கள் நகரத்தின் மதில்கள்மீது நிற்பார்கள். ராஜா, தன்னுடைய குடிமக்கள்மீது அக்கறையாக இருக்கிறார் என்பதற்கு காவல்காரர்கள் கண்கூடான அத்தாட்சியாக இருந்தார்கள். ஒரு காவல்காரருடைய எக்காள சத்தம், தூங்கிக்கொண்டிருக்கும் மக்களைத் திடுக்கிட வைக்கலாம். ஆனால், காதைத் துளைக்கும் அதே சத்தம், அதைக் கேட்டு செயல்படுகிற மக்களைப் பாதுகாக்கும். அழிவின் செய்தியைச் சொல்லி தன்னுடைய மக்களான இஸ்ரவேலர்களைப் பயமுறுத்துவதற்காக காவல்காரர்களை யெகோவா நியமிக்கவில்லை. அவர்கள்மீது அக்கறை இருந்ததாலும் அவர்களுடைய உயிரைப் பாதுகாக்க நினைத்ததாலும்தான் அவர் அப்படிச் செய்தார்.
5, 6. யெகோவா நீதியாக நடந்துகொள்பவர் என்பதை எது தெளிவாகக் காட்டுகிறது?
5 எசேக்கியேலைக் காவல்காரராக நியமித்தபோது யெகோவா சொன்ன வார்த்தைகளிலிருந்து அவருடைய பண்புகளில் சிலவற்றைத் தெரிந்துகொள்ள முடிகிறது. அவை, அவர்மீது நமக்கிருக்கும் நம்பிக்கையைப் பலப்படுத்துகின்றன. அவற்றில் இரண்டு பண்புகளை இப்போது பார்க்கலாம்.
6 நீதி: யெகோவா நம் ஒவ்வொருவரிடமும் பாரபட்சம் இல்லாமல் நடந்துகொள்கிறார். இதிலிருந்து அவர் நீதியாக நடந்துகொள்பவர் என்பது தெளிவாகத் தெரிகிறது. உதாரணத்துக்கு, எசேக்கியேல் சொன்ன செய்தியைக் கேட்டும் நிறைய பேர் அதன்படி நடக்கவில்லை. அதற்காக, இஸ்ரவேலர்கள் எல்லாரையுமே கலகக்காரர்களாக யெகோவா பார்க்கவில்லை. அந்தச் செய்தியைக் கேட்டு, தனி நபர்கள் ஒவ்வொருவரும் என்ன செய்கிறார்கள் என்பதைப் பார்க்கவே அவர் விரும்பினார். அதனால்தான், எசேக்கியேலிடம் பேசும்போது அடிக்கடி, “பொல்லாதவன் ஒருவன்,” “நீதிமான் ஒருவன்” என்று அவர் சொன்னார். இதிலிருந்து, எச்சரிப்பின் செய்தியைக் கேட்டு ஒவ்வொருவரும் என்ன செய்கிறார்கள் என்பதை வைத்தே யெகோவா தீர்ப்பு வழங்குகிறார் என்பதைத் தெரிந்துகொள்கிறோம்.—எசே. 33:8, 18-20.
7. யெகோவா எதன் அடிப்படையில் மக்களை நியாயந்தீர்க்கிறார்?
7 யெகோவா, மக்களை நியாயந்தீர்க்கும் விதத்தைப் பார்க்கும்போதும் அவர் நீதியுள்ளவர் என்பது தெரிகிறது. தனி நபர்கள் ஒவ்வொருவரையும், கடந்த காலத்தில் அவர்கள் செய்த குற்றங்களின் அடிப்படையில் கடவுள் நியாயந்தீர்ப்பதில்லை. தற்போது கொடுக்கப்படும் எச்சரிப்புக்கு அவர்கள் எப்படிப் பிரதிபலிக்கிறார்கள் என்பதன் அடிப்படையில்தான் நியாயந்தீர்க்கிறார். எசேக்கியேலிடம் யெகோவா, “பொல்லாதவன் ஒருவனிடம், ‘நீ கண்டிப்பாகச் சாவாய்’ என்று நான் சொல்லும்போது, அவன் பாவம் செய்வதை விட்டுவிட்டு நியாயமாகவும் நீதியாகவும் நடக்க ஆரம்பிக்கலாம். . . . அப்போது, அவன் கண்டிப்பாக உயிர்வாழ்வான்” என்று சொன்னார். அதன் பிறகு, இந்த முக்கியமான விஷயத்தையும் யெகோவா சொன்னார்: “முன்பு செய்த எந்தப் பாவத்துக்காகவும் அவன் தண்டிக்கப்பட மாட்டான்.” (எசே. 33:14-16) அதேசமயத்தில், முன்பு நீதியாக நடந்தவர்கள், தாங்கள் அப்படிக் கீழ்ப்படிந்து நடந்ததைக் காரணம் காட்டி தற்போது செய்கிற குற்றங்களிலிருந்து தப்பிக்க முடியாது. ஒருவன், ‘தான் செய்த நீதியான காரியங்கள் தன்னைக் காப்பாற்றும் என்று நினைத்து கெட்டது செய்ய ஆரம்பித்தால், அவன் செய்த எந்த நீதியான காரியத்தையும் நான் நினைத்துப் பார்க்க மாட்டேன். அவனுடைய குற்றத்துக்காக அவன் செத்துப்போவான்’ என்று யெகோவா சொன்னார்.—எசே. 33:13.
8. யெகோவா நீதியாக நடந்துகொள்பவர் என்பதைத் தீர்க்கதரிசிகள் கொடுத்த எச்சரிப்புகள் எப்படிக் காட்டுகின்றன?
8 யெகோவா, ஒரு நடவடிக்கை எடுப்பதாக இருந்தால் முன்கூட்டியே எச்சரிப்பு கொடுக்கிறார். இதுவும் அவர் நீதியாக நடந்துகொள்பவர் என்பதைக் காட்டுகிறது. பாபிலோனியப் படை எருசலேமை அழிப்பதற்குச் சுமார் ஆறு வருஷங்களுக்கு முன்பே எசேக்கியேல் அதைப் பற்றி எச்சரிக்க ஆரம்பித்தார். எசேக்கியேலுக்கு முன்பே பல தீர்க்கதரிசிகள் கடவுளுடைய மக்களை எச்சரித்திருக்கிறார்கள். மக்கள் தங்களுடைய செயல்களுக்காகக் கணக்குக் கொடுக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். எருசலேம் அழிவதற்கு முன் நூறுக்கும் அதிகமான வருஷங்களாகவே ஓசியா, ஏசாயா, மீகா, ஓதேத், எரேமியா ஆகிய தீர்க்கதரிசிகளைக் காவல்காரர்களாக யெகோவா பயன்படுத்தினார். எரேமியா மூலமாக இஸ்ரவேலர்களுக்கு யெகோவா இந்த விஷயத்தை ஞாபகப்படுத்தினார்: “நான் காவல்காரர்களை நியமித்தேன். ஜனங்களிடம் அவர்கள், ‘ஊதுகொம்பின் சத்தத்தைக் கவனித்துக் கேளுங்கள்!’ என்று சொன்னார்கள்.” (எரே. 6:17) அப்படியானால், பாபிலோனியர்கள் யெகோவாவின் நியாயத்தீர்ப்பை நிறைவேற்றியபோது, ஜனங்கள் கொல்லப்பட்டதற்காக யெகோவாவையோ அந்தக் காவல்காரர்களையோ குறை சொல்ல முடியாது.
9. யெகோவா தன்னுடைய மாறாத அன்பை எப்படிக் காட்டினார்?
9 அன்பு: யெகோவா தன்னுடைய காவல்காரர்களை அனுப்பி, நீதிமான்களை மட்டுமல்ல தன்னுடைய மனதைக் காயப்படுத்தி, தன்னுடைய பெயரைக் கெடுத்துப்போட்ட பொல்லாதவர்களையும் எச்சரித்தார். இதன்மூலம், தன்னுடைய மாறாத அன்பைக் காட்டினார். இதைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்: இஸ்ரவேலர்கள், யெகோவாவின் மக்கள் என்று அறியப்பட்டிருந்தார்கள். ஆனால், அவர்கள் மறுபடியும் மறுபடியும் யெகோவாவை விட்டுவிட்டு பொய்க் கடவுள்களின் பின்னால் ஓடினார்கள். அவர்கள் செய்த துரோகம், யெகோவாவின் மனதை ரொம்பவே காயப்படுத்தியதால் அவர்களை நடத்தைகெட்ட மனைவியோடு அவர் ஒப்பிட்டார். (எசே. 16:32) ஆனாலும், அவர்கள் திருந்தவே மாட்டார்கள் என்று யெகோவா முடிவுகட்டிவிடவில்லை. அவர்களைப் பழிவாங்குவதற்குப் பதிலாக, அவர்கள் திருந்தி வருவதற்கு உதவினார். கடைசிவரை, அவர்கள் திருந்தாமல் போனதால்தான் தண்டனைத்தீர்ப்பு என்ற வாளை கையில் எடுத்தார். அவர்களை ஏன் எடுத்த எடுப்பிலேயே தண்டிக்கவில்லை? ஏனென்றால், “பொல்லாதவன் சாக வேண்டும் என்று நான் ஆசைப்படுவதே இல்லை. அவன் கெட்ட வழிகளைவிட்டுத் திருந்தி உயிர்வாழ வேண்டும் என்றுதான் ஆசைப்படுகிறேன்” என்று எசேக்கியேலிடம் அவர் சொன்னார். (எசே. 33:11) யெகோவா அன்று எப்படி உணர்ந்தாரோ அப்படித்தான் இன்றும் உணருகிறார்.—மல். 3:6.
10, 11. யெகோவா தன்னுடைய மக்களிடம் நடந்துகொண்ட விதத்திலிருந்து நாம் என்ன பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்?
10 இஸ்ரவேலர்களிடம் யெகோவா அன்பாகவும் நீதியாகவும் நடந்துகொண்டதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? ஊழியத்தில் நாம் சந்திக்கிற ஒவ்வொரு நபர்மீதும் அக்கறை காட்ட வேண்டும் என்ற பாடத்தைக் கற்றுக்கொள்கிறோம். ஒருவருடைய கடந்த கால வாழ்க்கையையோ அவருடைய கலாச்சாரம், இனம், பண வசதி, மொழி ஆகியவற்றையோ வைத்து, அவர் நம்முடைய செய்தியைக் கேட்கத் தகுதியில்லாதவர் என்று முடிவுகட்டுவது எவ்வளவு பெரிய தவறு! “கடவுள் பாரபட்சம் காட்டாதவர் . . . அவருக்குப் பயந்து சரியானதைச் செய்கிறவன் எந்தத் தேசத்தைச் சேர்ந்தவனாக இருந்தாலும் அவனை அவர் ஏற்றுக்கொள்கிறார்” என்ற பாடத்தை அப்போஸ்தலன் பேதுருவுக்கு யெகோவா கற்றுக்கொடுத்தார். இன்றும்கூட கடவுள் அப்படித்தான் இருக்கிறார்!—அப். 10:34, 35.
11 நம்மீது அதிக கவனம் செலுத்த வேண்டும் என்ற இன்னொரு முக்கியமான பாடத்தையும் நாம் கற்றுக்கொள்கிறோம். கடந்த காலத்தில் செய்த நல்ல செயல்களை வைத்து தற்போது செய்கிற குற்றங்களிலிருந்து நாம் தப்பிக்க முடியாது. ஊழியத்தில் நாம் சந்திக்கிற ஆட்களைப் போலவே நாமும் பாவ இயல்புள்ளவர்கள் என்பதை ஞாபகத்தில் வைக்க வேண்டும். கொரிந்து சபைக்கு அப்போஸ்தலன் பவுல் கொடுத்த ஆலோசனை நமக்கும் பொருந்துகிறது. “தான் நிற்பதாக நினைத்துக்கொண்டிருக்கிறவன் விழுந்துவிடாதபடி ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். மனிதர்களுக்குப் பொதுவாக வருகிற சோதனையைத் தவிர வேறெந்தச் சோதனையும் உங்களுக்கு வரவில்லை” என்று அவர் சொன்னார். (1 கொ. 10:12, 13) ‘தான் செய்கிற நீதியான காரியங்கள் தன்னைக் காப்பாற்றும்’ என்று நம்புகிற ஒருவரைப் போல நாம் இருக்க மாட்டோம்; அதாவது, நாம் நல்ல விஷயங்களையும் செய்வதால், ஏதாவது தவறு செய்தால்கூட தண்டனையிலிருந்து தப்பித்துவிடலாம் என்று நினைக்க மாட்டோம். (எசே. 33:13) நாம் எவ்வளவு காலமாக யெகோவாவுக்குச் சேவை செய்துகொண்டிருந்தாலும் சரி, நாம் தொடர்ந்து மனத்தாழ்மையோடு கீழ்ப்படிந்து நடப்பது முக்கியம்.
12. நாம் முன்பு மோசமான பாவங்களைச் செய்திருந்தால், எதை மனதில் வைக்க வேண்டும்?
12 நாம் முன்பு செய்த மோசமான பாவங்களை நினைத்து மனம் வருந்தினால் என்ன செய்வது? தவறு செய்துவிட்டு மனம் திருந்தாமல் இருப்பவர்களை யெகோவா தண்டிப்பார் என்பதை எசேக்கியேலின் செய்தியிலிருந்து நாம் தெரிந்துகொள்கிறோம். அதோடு, கடவுள் பழிவாங்குபவர் அல்ல, அன்பானவர் என்பதையும் தெரிந்துகொள்கிறோம். (1 யோ. 4:8) மனம் திருந்திவிட்டதைச் செயலில் காட்டிய பிறகு, ‘கடவுள் என்னை மன்னிக்க மாட்டார்’ என்று நாம் ஒருபோதும் நினைக்கக் வேண்டியதில்லை. (யாக். 5:14, 15) மற்ற தெய்வங்களை வணங்கிய இஸ்ரவேலர்களை யெகோவா மன்னிக்கத் தயாராக இருந்தார். அவர் நம்மையும் மன்னிக்கத் தயாராக இருக்கிறார்.—சங். 86:5.
“உன்னுடைய ஜனங்களிடம் இப்படிச் சொல்”
13, 14. (அ) காவல்காரர்கள் என்ன செய்தியை அறிவிக்க வேண்டியிருந்தது? (ஆ) ஏசாயா என்ன செய்தியை அறிவித்தார்?
13 எசேக்கியேல் 33:2, 3-ஐ வாசியுங்கள். யெகோவா நியமித்த காவல்காரர்கள் என்ன செய்தியை அறிவிக்க வேண்டியிருந்தது? அவர்கள் முக்கியமாக எச்சரிப்பு செய்தியை அறிவிக்க வேண்டியிருந்தது. ஆனால், நல்ல செய்தியையும் அவர்கள் அறிவித்தார்கள். அதற்குச் சில உதாரணங்களை இப்போது பார்க்கலாம்.
14 ஏசாயா சுமார் கி.மு. 778-லிருந்து கி.மு. 732 வரை தீர்க்கதரிசியாகச் சேவை செய்தார். பாபிலோனியர்கள் எருசலேமை கைப்பற்றுவார்கள் என்றும், அதன் குடிமக்களை அவர்கள் சிறைபிடித்து பாபிலோனுக்குக் கொண்டுபோவார்கள் என்றும் எச்சரித்தார். (ஏசா. 39:5-7) அதேசமயத்தில் கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால் இப்படியும் எழுதினார்: “இதோ, உன் காவல்காரர்கள் குரலெழுப்புவதைக் கேள்! அவர்கள் ஒன்றுசேர்ந்து சந்தோஷமாகக் குரலெழுப்புகிறார்கள். சீயோன் ஜனங்களை யெகோவா மறுபடியும் ஒன்றுசேர்ப்பதை அவர்கள் கண்கூடாகப் பார்ப்பார்கள்.” (ஏசா. 52:8) ஆம், உண்மை வணக்கம் திரும்ப நிலைநாட்டப்படும் என்ற மிகச் சிறந்த செய்தியை ஏசாயா சொன்னார்.
15. எரேமியா என்ன செய்தியை அறிவித்தார்?
15 எரேமியா கி.மு. 647-லிருந்து கி.மு. 580 வரை தீர்க்கதரிசியாகச் சேவை செய்தார். ஆனால், “அழிவை அறிவிப்பவன்” என்றுதான் மக்கள் அவருக்கு முத்திரை குத்தினார்கள். யெகோவா கொண்டுவரவிருந்த அழிவைப் பற்றி பொல்லாத இஸ்ரவேலர்களை எச்சரிக்கும் வேலையை அவர் மிகத் திறமையாகச் செய்தார்.a அதேசமயத்தில், கடவுளுடைய மக்கள் தங்களுடைய தாய்நாட்டுக்குத் திரும்பி வந்து தூய வணக்கத்தைத் திரும்பவும் நிலைநாட்டுவார்கள் என்ற நல்ல செய்தியையும் அவர் அறிவித்தார்.—எரே. 29:10-14; 33:10, 11.
16. பாபிலோனில் சிறைபிடிக்கப்பட்டிருந்த யூதர்களுக்கு எசேக்கியேல் சொன்ன செய்தி எப்படி உதவியது?
16 கி.மு. 613-ல் எசேக்கியேல் ஒரு காவல்காரராக நியமிக்கப்பட்டார். கி.மு. 591 வரை அவர் அந்த வேலையைச் செய்தார். இந்தப் புத்தகத்தின் 5, 6 அதிகாரங்களில் நாம் பார்த்தபடி, இஸ்ரவேல் மக்களுக்கு வரவிருந்த அழிவைப் பற்றி அவர் படு தீவிரமாக எச்சரித்தார். இப்படி, தன்மீது எந்த இரத்தப்பழியும் வராமல் பார்த்துக்கொண்டார். அவர் சிறைபிடிக்கப்பட்டிருந்த யூதர்களிடம், எருசலேமிலிருந்த விசுவாசதுரோகிகளை யெகோவா தண்டிப்பார் என்ற எச்சரிப்பின் செய்தியை அறிவித்தார். அதோடு, அந்த யூதர்கள் யெகோவாவோடு நல்ல பந்தத்தை வைத்துக்கொண்டு எதிர்காலத்துக்காகத் தங்களைத் தயார்படுத்திக்கொள்வதற்கும் அவர் உதவினார். அவர்களில் மீதியாக இருப்பவர்களை 70 வருஷ சிறையிருப்பின் முடிவில் இஸ்ரவேலர்களின் புதுப்பிக்கப்பட்ட தேசத்தில் யெகோவா வாழ வைப்பார். (எசே. 36:7-11) இவர்களில் பெரும்பாலும், எசேக்கியேலின் செய்தியைக் கவனமாகக் கேட்டு நடந்தவர்களுடைய பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் இருப்பார்கள். இந்தப் புத்தகத்தின் 3-ஆம் பகுதியிலுள்ள மற்ற அதிகாரங்களில் சொல்லப்பட்டுள்ளபடி, எருசலேமில் தூய வணக்கம் திரும்பவும் நிலைநாட்டப்படுவது பற்றிய நிறைய நல்ல விஷயங்களை எசேக்கியேல் சொல்ல வேண்டியிருந்தது.
17. யெகோவா எப்போதெல்லாம் காவல்காரர்களை நியமித்திருக்கிறார்?
17 கி.மு. 607-ல் எருசலேம் அழிக்கப்படுவதற்கு முன்பு கடவுளுடைய மக்களிடம் பேசிய இந்தத் தீர்க்கதரிசிகளை மட்டும்தான் யெகோவா காவல்காரர்களாக பயன்படுத்தினாரா? இல்லை. தன்னுடைய நோக்கம் நிறைவேறுவதோடு சம்பந்தப்பட்ட ஒவ்வொரு முக்கியமான கட்டத்திலும் காவல்காரர்களை யெகோவா நியமித்திருக்கிறார். கெட்டவர்களை எச்சரிப்பதற்கும், நல்ல செய்தியை அறிவிப்பதற்கும் அவர்களைப் பயன்படுத்தினார்.
முதல் நூற்றாண்டில் இருந்த காவல்காரர்கள்
18. யோவான் ஸ்நானகர் என்ன வேலையைச் செய்தார்?
18 முதல் நூற்றாண்டில், யோவான் ஸ்நானகர் காவல்காரரின் வேலையைச் செய்தார். சீக்கிரத்தில் இஸ்ரவேலர்களைக் கடவுள் ஒதுக்கித்தள்ள போகிறார் என்ற எச்சரிப்பு செய்தியை அவர் சொன்னார். (மத். 3:1, 2, 9-11) அதுமட்டுமல்ல, அவர் மேசியாவுக்கு வழியைத் தயார்படுத்துகிற முன்னறிவிக்கப்பட்ட ‘தூதுவராகவும்’ சேவை செய்தார். (மல். 3:1; மத். 11:7-10) ஒரு காவல்காரராக அவர் நல்ல செய்தியையும் அறிவித்தார். அதாவது, ‘கடவுளால் அனுப்பப்பட்ட ஆட்டுக்குட்டியான’ இயேசு வந்துவிட்டார் என்றும் அவர் இந்த ‘உலகத்தின் பாவத்தைப் போக்குவார்’ என்றும் அறிவித்தார்.—யோவா. 1:29, 30.
19, 20. இயேசுவும் அவருடைய சீஷர்களும் எப்படிக் காவல்காரர்களின் வேலையைச் செய்தார்கள்?
19 எல்லாரையும்விட இயேசுதான் மிக முக்கியமான காவல்காரராக இருந்தார். எசேக்கியேலை ‘இஸ்ரவேல் ஜனங்களிடம்’ அனுப்பியது போலவே, இயேசுவையும் இஸ்ரவேல் மக்களிடம் யெகோவா அனுப்பினார். (எசே. 3:17; மத். 15:24) சீக்கிரத்திலேயே இஸ்ரவேல் மக்கள் கடவுளால் ஒதுக்கித்தள்ளப்படுவார்கள் என்றும், எருசலேம் அழிக்கப்படும் என்றும் இயேசு எச்சரித்தார். (மத். 23:37, 38; 24:1, 2; லூக். 21:20-24) ஆனாலும், நல்ல செய்தியை அறிவிக்கிற வேலையைத்தான் அவர் முக்கியமாகச் செய்தார்.—லூக். 4:17-21.
20 பூமியில் இருந்தபோது இயேசு தன்னுடைய சீஷர்களிடம், “விழிப்புடன் இருங்கள்” என்று குறிப்பாகச் சொன்னார். (மத். 24:42) அவருடைய கட்டளைக்குக் கீழ்ப்படிந்து, காவல்காரரின் வேலையை அவர்கள் செய்தார்கள். அதாவது, இஸ்ரவேல் மக்களையும் எருசலேம் நகரத்தையும் யெகோவா ஒதுக்கித்தள்ளிவிட்டார் என்ற எச்சரிப்பு செய்தியைச் சொன்னார்கள். (ரோ. 9:6-8; கலா. 4:25, 26) தங்களுக்கு முன்பு இருந்த காவல்காரர்களைப் போலவே இவர்களும் நல்ல செய்தியை அறிவித்தார்கள். அதில் ஒரு குறிப்பிடத்தக்க விஷயம் அடங்கியிருந்தது. அது என்ன? இனி, மற்ற தேசத்து மக்களும் கடவுளின் இஸ்ரவேலர்களில் ஒருவராக, அதாவது பரலோக நம்பிக்கையுள்ளவர்களில் ஒருவராக, ஆக முடியும்; தூய வணக்கத்தைப் பூமியில் திரும்ப நிலைநாட்ட கிறிஸ்துவுக்கு உதவும் பாக்கியம் அவர்களுக்குக் கிடைக்கும்.—அப். 15:14; கலா. 6:15, 16; வெளி. 5:9, 10.
21. அப்போஸ்தலன் பவுல் எப்படி ஒரு சிறந்த முன்மாதிரியாக இருந்தார்?
21 முதல் நூற்றாண்டில், காவல்காரர்களாக செயல்பட்டவர்களில் அப்போஸ்தலன் பவுல் ஒரு சிறந்த முன்மாதிரியாக இருந்தார். இந்த வேலையை அவர் ரொம்ப முக்கியமானதாக நினைத்தார். இதைச் செய்யாமல் போனால் பலருடைய சாவுக்குத் தான் பொறுப்பேற்க வேண்டியிருக்கும் என எசேக்கியேலைப் போலவே அவரும் நினைத்தார். (அப். 20:26, 27) பவுல், தனக்கு முன் வாழ்ந்த காவல்காரர்களைப் போலவே எச்சரிப்பு செய்தியைச் சொன்னதோடு நல்ல செய்தியையும் அறிவித்தார். (அப். 15:35; ரோ. 1:1-4) கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால் ஏசாயா தீர்க்கதரிசியின் இந்த வார்த்தைகளை பவுலும் குறிப்பிட்டார்: “நல்ல செய்தி சொல்ல மலைகள்மேல் ஏறி வருகிறவருடைய பாதங்கள் எவ்வளவு அழகாக இருக்கின்றன!” கிறிஸ்துவின் சீஷர்கள் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிப் பிரசங்கிக்கும் வேலைக்கு இந்த வார்த்தைகளை பவுல் பொருத்தினார்.—ஏசா. 52:7, 8; ரோ. 10:13-15.
22. அப்போஸ்தலர்களுடைய மரணத்துக்குப் பிறகு என்ன நடந்தது?
22 முன்னறிவிக்கப்பட்டபடியே, அப்போஸ்தலர்களுடைய மரணத்துக்குப் பிறகு விசுவாசதுரோகம் கிறிஸ்தவ சபையில் அதிகமாகப் பரவியது. (அப். 20:29, 30; 2 தெ. 2:3-8) பல நூற்றாண்டுகளுக்கு நீடித்த ஒரு காலப்பகுதியில், களைகளைப் போல இருந்த விசுவாசதுரோக கிறிஸ்தவர்கள், கோதுமைப் பயிர்களைப் போல இருந்த உண்மைக் கிறிஸ்தவர்களைவிட எண்ணிக்கையில் அதிகமாக ஆனார்கள். அதனால், கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய செய்தி பொய் போதனைகளால் மறைந்துபோனது. (மத். 13:36-43) ஆனால், இந்த விஷயத்தில் யெகோவா தலையிடும் நேரம் வந்தபோது, அவர் மறுபடியும் காவல்காரர்களை நியமிப்பதன் மூலம் அவருடைய அன்பையும் நீதியையும் காட்டினார். தெளிவான எச்சரிப்பு செய்தியைக் கொடுப்பதற்கும், நல்ல செய்தியை அறிவிப்பதற்கும் அவர்களை யெகோவா பயன்படுத்தினார். அவர் நியமித்த அந்தக் காவல்காரர்கள் யார்?
கெட்டவர்களை எச்சரிக்க யெகோவா மறுபடியும் காவல்காரர்களை நியமிக்கிறார்
23. சார்ல்ஸ் டேஸ் ரஸலும் அவருடைய நண்பர்களும் என்ன செய்தார்கள்?
23 1914-க்கு முன்பிருந்த வருஷங்களில், சார்ல்ஸ் டேஸ் ரஸலும் அவருடைய நண்பர்களும் மேசியானிய அரசாங்கம் நிறுவப்படுவதற்கு முன், ‘வழியைத் தயார்படுத்திய’ ‘தூதுவர்களாக’ இருந்தார்கள்.b (மல். 3:1) காவல்காரர்களைப் போலவும் அவர்கள் செயல்பட்டார்கள். கடவுளின் நியாயத்தீர்ப்பைப் பற்றி எச்சரிப்பதற்கும், கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியை அறிவிப்பதற்கும் சீயோனின் காவற்கோபுரமும் கிறிஸ்துவின் பிரசன்னத்துடைய அறிவிப்பும் என்ற பத்திரிகையைப் பயன்படுத்தினார்கள்.
24. (அ) ‘உண்மையும் விவேகமும் உள்ள அடிமையாக’ இருப்பவர்கள் எப்படி காவல்காரருடைய வேலையைச் செய்து வந்திருக்கிறார்கள்? (ஆ) கடந்த காலத்தில் முன்மாதிரியாக இருந்த காவல்காரர்களிடமிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொண்டீர்கள்? (“முன்மாதிரியாக இருந்த சில காவல்காரர்கள்” என்ற பட்டியலைப் பாருங்கள்.)
24 கடவுளுடைய அரசாங்கம் பரலோகத்தில் நிறுவப்பட்ட பிறகு, ஒரு சிறு தொகுதியான ஆண்களை ‘உண்மையும் விவேகமும் உள்ள அடிமையாக’ இயேசு நியமித்தார். (மத். 24:45-47) ஆளும் குழு என்று இப்போது அழைக்கப்படும் இந்த அடிமை, அப்போதிலிருந்து, காவல்காரருடைய வேலையைச் செய்து வருகிறது. “கடவுள் பழிவாங்கப்போகிற நாளை” பற்றி எச்சரிப்பதோடு “யெகோவாவின் அனுக்கிரக வருஷத்தை” பற்றி அறிவிப்பதிலும் முன்நின்று செயல்படுகிறது.—ஏசா. 61:2; 2 கொரிந்தியர் 6:1, 2-ஐயும் பாருங்கள்.
25, 26. (அ) கிறிஸ்துவைப் பின்பற்றுகிற எல்லாரும் என்ன வேலையைச் செய்ய வேண்டும்? அது எப்படிச் செய்யப்படுகிறது? (ஆ) அடுத்த அதிகாரத்தில் நாம் எதைப் பற்றிப் பார்ப்போம்?
25 நவீன கால காவல்காரராக இருக்கிற உண்மையும் விவேகமும் உள்ள அடிமை விழிப்புடன் இருப்பது போல, தன்னைப் பின்பற்றுகிற ‘எல்லாருமே’ ‘விழிப்புடன் இருக்க வேண்டும்’ என்று இயேசு கட்டளை கொடுத்தார். (மாற். 13:33-37) ஆன்மீக விஷயங்களில் நாம் சுறுசுறுப்பாக இருப்பதன் மூலமும், நம் காலத்தில் இருக்கும் இந்தக் காவல்காரரை உண்மையோடு ஆதரிப்பதன் மூலமும் இந்தக் கட்டளைக்குக் கீழ்ப்படிகிறோம். பிரசங்க வேலையை முழுமையாகச் செய்வதன் மூலம் விழிப்புடன் இருப்பதை நிரூபிக்கிறோம். (2 தீ. 4:2) இந்த வேலையைச் செய்ய எது நம்மைத் தூண்டுகிறது? ஒருவிதத்தில் பார்த்தால், உயிர்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற ஆசைதான் நம்மைத் தூண்டுகிறது. (1 தீ. 4:16) இன்று காவல்காரராக நியமிக்கப்பட்டிருப்பவர்கள் கொடுக்கும் எச்சரிப்பை அசட்டை செய்கிற நிறைய பேர் சீக்கிரத்தில் தங்களுடைய உயிரை இழந்துவிடுவார்கள். (எசே. 3:19) இந்தப் பிரசங்க வேலையில் நாம் ஈடுபடுவதற்கான முக்கிய நோக்கமே, தூய வணக்கம் திரும்பவும் நிலைநாட்டப்பட்டுவிட்டது என்ற செய்தியை அறிவிப்பதற்காகத்தான். இப்போதே, அதாவது ‘யெகோவாவின் அனுக்கிரக வருஷம்’ நீடிக்கும்போதே, நீதியும் அன்பும் உள்ள நம் கடவுளான யெகோவாவை நம்மோடு சேர்ந்து வணங்கும் வாய்ப்பு இன்னும் நிறைய பேருக்கு இருக்கிறது. சீக்கிரத்தில், இந்தப் பொல்லாத உலகம் அழிக்கப்படும். அந்த அழிவிலிருந்து தப்பிப்பிழைக்கும் எல்லாரையும், கிறிஸ்து இயேசு இரக்கத்தோடு ஆட்சி செய்யும்போது அருமையான ஆசீர்வாதங்களை அவர்கள் அனுபவிப்பார்கள். அதனால், இந்த நல்ல செய்தியை அறிவிக்கும் விஷயத்தில் நவீன கால காவல்காரர்களுக்கு நாம் முழு ஆதரவு கொடுக்க வேண்டும்!—மத். 24:14.
26 இந்தப் பொல்லாத உலகம் அழிவதற்கு முன்பே, யெகோவா தன்னுடைய மக்களை அற்புதமான விதத்தில் ஒன்றுசேர்த்திருக்கிறார். இதை அவர் எப்படிச் செய்திருக்கிறார் என்பதை இரண்டு கோல்களைப் பற்றிய தீர்க்கதரிசனத்தின் மூலம் விளக்கியிருக்கிறார். இதைப் பற்றி அடுத்த அதிகாரத்திலிருந்து தெரிந்துகொள்வோம்.
a எரேமியா புத்தகத்தில், ‘அழிவு,’ ‘ஆபத்து,’ ‘பேரழிவு’ ஆகிய வார்த்தைகள் பல முறை வருகின்றன.
b இந்தத் தீர்க்கதரிசனத்தையும் அதன் நிறைவேற்றத்தையும் பற்றிக் கூடுதலாகத் தெரிந்துகொள்ள கடவுளுடைய அரசாங்கம் ஆட்சி செய்கிறது! புத்தகத்தில், “கடவுளுடைய அரசாங்கம் பரலோகத்தில் நிறுவப்படுகிறது” என்ற 2-ஆம் அதிகாரத்தைப் பாருங்கள்.