நம் ‘தேசத்தின்மீது’ யெகோவாவின் ஆசீர்வாதம்
“இந்த நதி போகுமிடமெங்குமுள்ள யாவும் . . . பிழைக்கும்.”—எசேக்கியேல் 47:9.
1, 2. (அ) தண்ணீர் எவ்வளவு முக்கியம்? (ஆ) எசேக்கியேல் தரிசனத்தில் வரும் தண்ணீர் எதைக் குறிக்கிறது?
தண்ணீர் விசேஷித்த ஒரு திரவம். எல்லா உயிர்களும் அதையே சார்ந்திருக்கின்றன. அது இல்லாமல் நம்மில் எவரும் அதிக காலம் வாழமுடியாது. தண்ணீரால் எந்த அழுக்கையும் நீக்கிவிட முடியுமாதலால் சுத்திகரிப்பிற்கும் நாம் அதையே நம்பியிருக்கிறோம். ஆகவே, நம்முடைய உடல், உடை, ஏன் உணவுப் பொருட்களையும்கூட அதில் கழுவுகிறோம். அவ்வாறு செய்வதால் நம் உயிர் பாதுகாக்கப்படுகிறது.
2 உயிரை பாதுகாப்பதற்காக யெகோவா செய்திருக்கும் ஆவிக்குரிய ஏற்பாடுகளைக் குறிப்பதற்கு தண்ணீரை பைபிள் பயன்படுத்துகிறது. (எரேமியா 2:13; யோவான் 4:7-15) அவரைப் பற்றி கடவுளுடைய வார்த்தையில் காணப்படுகிற அறிவும், கிறிஸ்துவின் கிரய பலியின் அடிப்படையில் அவருடைய மக்கள் சுத்திகரிக்கப்படுவதும் இந்த ஏற்பாடுகளில் அடங்கும். (எபேசியர் 5:25-27) எசேக்கியேலின் ஆலய தரிசனத்தில், ஆலயத்திலிருந்து புறப்பட்டுவரும் அற்புதகரமான நதி அப்படிப்பட்ட உயிரளிக்கும் ஆசீர்வாதங்களை அடையாளப்படுத்துகிறது. ஆனால் அந்த நதி எப்போது ஓட ஆரம்பிக்கிறது, மேலும் இன்று அது நமக்கு எதை அர்த்தப்படுத்துகிறது?
திரும்ப நிலைநாட்டப்பட்ட தேசத்தில் ஒரு நதி பாய்கிறது
3. எசேக்கியேல் 47:2-12-ல் அறிவிக்கப்பட்டுள்ளபடி, எசேக்கியேலின் அனுபவம் என்ன?
3 பாபிலோனில் கைதிகளாக இருந்த எசேக்கியேலின் மக்களுக்கு யெகோவாவின் ஏற்பாடுகள் மிகவும் தேவைப்பட்டன. அப்படியானால், தரிசனத்தில் ஆலய பிரகாரத்திலிருந்து மெல்லிய நீரோடை புறப்பட்டு வருவதைப் பார்ப்பது எசேக்கியேலுக்கு எவ்வளவு உற்சாகமூட்டுவதாக இருந்திருக்கும்! 1,000 முழ இடைவெளிகளில் அந்த நதியை ஒரு தேவதூதன் அளக்கிறார். (எசேக்கியேல் 47:2-11) கணுக்கால் அளவு, முழங்கால் அளவு, இடுப்பளவு, நீச்சலடிக்க வேண்டிய அளவு என கடக்கமுடியாத காட்டாறாக பெருகும்வரை அதன் ஆழம் அதிகரிக்கிறது. அந்த நதி உயிர்ப்பிப்பதாகவும் செழுமைப்படுத்துவதாகவும் இருக்கிறது. எசேக்கியேலிடம் இவ்வாறு சொல்லப்படுகிறது: “நதியோரமாய் அதின் இக்கரையிலும் அக்கரையிலும் புசிப்புக்கான சகலவித விருட்சங்களும் வளரும்.” (எசேக்கியேல் 47:12அ) உயிரற்ற தண்ணீர் தேக்கமாகிய சவக்கடலில் அந்த நதி கலக்கும்போது ஜீவராசிகள் செழித்தோங்குகின்றன! மீன்கள் ஏராளம். மீன்பிடி தொழில் செழித்தோங்குகிறது.
4, 5. நதியின் சம்பந்தமாக யோவேல் தீர்க்கதரிசனம் எவ்வாறு எசேக்கியேல் தீர்க்கதரிசனத்தை ஒத்திருக்கிறது, இது ஏன் முக்கியத்துவமுடையது?
4 இந்த அருமையான தீர்க்கதரிசனம், இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன் பதிவுசெய்திருந்த மற்றொரு தீர்க்கதரிசனத்தை யூத சிறைக் கைதிகளுக்கு நினைப்பூட்டி இருக்கலாம்: “ஒரு ஊற்று கர்த்தருடைய ஆலயத்திலிருந்து புறப்பட்டுச் சித்தீம் என்னும் பள்ளத்தாக்கை நீர்ப்பாய்ச்சலாக்கும்.”a (யோவேல் 3:18) கடவுளுடைய வீடாகிய ஆலயத்திலிருந்து ஒரு நதி புறப்பட்டு, வறண்ட ஒரு நிலத்தை செழிப்பாக்கும் என்ற எசேக்கியேல் தீர்க்கதரிசனத்தைப் போலவே யோவேல் தீர்க்கதரிசனமும் முன்னறிவிக்கிறது.
5 யோவேலின் தீர்க்கதரிசனம் நம் நாட்களில் நிறைவேறுகிறது என காவற்கோபுரம் பல வருடங்களாக கூறி வந்திருக்கிறது.b அப்படியென்றால், அதற்கு ஒத்த எசேக்கியேல் தரிசனமும் நிச்சயமாகவே நம்முடைய நாளில் நிறைவேறி வருகிறது. பூர்வ இஸ்ரவேலில் நடந்ததைப் போலவே, இன்று கடவுளுடைய ஜனங்களின் திரும்ப நிலைநாட்டப்பட்ட தேசத்திலும் யெகோவாவின் ஏற்பாடுகளும் ஆசீர்வாதங்களும் உண்மையில் நிரம்பி வழிந்திருக்கின்றன.
பெருக்கெடுத்து வரும் ஆசீர்வாதங்கள்
6. தரிசனத்தின் பலிபீடத்தில் இரத்தத்தை தெளிப்பது யூதர்களுக்கு எதை நினைப்பூட்டியிருக்க வேண்டும்?
6 திரும்ப நிலைநாட்டப்பட்ட கடவுளுடைய ஜனங்கள் அனுபவிக்கும் ஆசீர்வாதங்களின் ஊற்றுமூலம் என்ன? அந்தத் தண்ணீர் கடவுளுடைய ஆலயத்திலிருந்து புறப்பட்டு வருகிறது என்பதைக் கவனியுங்கள். அதைப்போலவே இன்று, யெகோவாவின் ஆசீர்வாதங்கள் அவருடைய பெரிய ஆவிக்குரிய ஆலயத்தின்—தூய்மையான வணக்கத்திற்கான ஏற்பாட்டின்—வழியாக வருகின்றன. எசேக்கியேலின் தரிசனம் முக்கியமான ஒரு விஷயத்தைக் கூடுதலாக எடுத்துக்காட்டுகிறது. உட்பிரகாரத்தில், அந்த நதி பலிபீடத்திற்கு சற்று தெற்கே ஓடுகிறது. (எசேக்கியேல் 47:1) தரிசனத்தில் தோன்றும் ஆலயத்தின் மையத்தில் பலிபீடம் இருக்கிறது. யெகோவா அதைப் பற்றி எசேக்கியேலுக்கு மிகவும் நுட்பமாக விவரித்து, பலியின் இரத்தம் அதன்மீது தெளிக்கப்பட வேண்டுமென கட்டளையிடுகிறார். (எசேக்கியேல் 43:13-18, 20) அந்தப் பலிபீடம் எல்லா இஸ்ரவேலருக்கும் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. சீனாய் மலையின் அடிவாரத்திலிருந்த பலிபீடத்தில் இரத்தத்தைத் தெளித்து, யெகோவாவோடு செய்துள்ள அவர்களுடைய உடன்படிக்கையை வெகு காலத்திற்கு முன்பு மோசே உறுதிப்படுத்தியிருந்தார். (யாத்திராகமம் 24:4-8) திரும்ப நிலைநாட்டப்பட்ட தங்கள் தேசத்திற்கு அவர்கள் வந்துசேர்ந்த பிறகு யெகோவாவோடு உள்ள உடன்படிக்கைக்கு இசைவாக அவர்கள் வாழும்வரை அவருடைய ஆசீர்வாதங்கள் தொடர்ந்து கிடைக்கும் என்பதை தரிசன பலிபீடத்தில் இரத்தம் தெளிக்கப்படுவது அவர்களுக்கு நினைப்பூட்டி இருக்கும்.—உபாகமம் 28:1-14.
7. அடையாளப்பூர்வமான பலிபீடத்தில் இன்று கிறிஸ்தவர்கள் என்ன அர்த்தத்தை காண்கிறார்கள்?
7 அதைப்போலவே இன்று கடவுளுடைய மக்கள் ஒரு உடன்படிக்கை மூலம்—மேம்பட்ட ஒன்றாகிய புதிய உடன்படிக்கை மூலம்—ஆசீர்வதிக்கப்படுகின்றனர். (எரேமியா 31:31-34) அதுவும் வெகு காலத்திற்கு முன்பு இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் உறுதிப்படுத்தப்பட்டது. (எபிரெயர் 9:15-20) இன்று, அந்த உடன்படிக்கையில் உட்பட்டுள்ள அபிஷேகம் செய்யப்பட்டவர்களாக நாம் இருந்தாலும்சரி அதனால் பயனடையும் ‘வேறே ஆடுகளாக’ இருந்தாலும்சரி, அந்த அடையாளப்பூர்வ பலிபீடம் அதிக அர்த்தமுடையது என்பதை தெரிந்துகொள்கிறோம். கிறிஸ்துவின் பலி சம்பந்தமாக கடவுளுடைய சித்தத்தை அது அடையாளப்படுத்துகிறது. (யோவான் 10:16; எபிரெயர் 10:10) அந்த அடையாளப்பூர்வ பலிபீடம் ஆவிக்குரிய ஆலயத்தின் மையத்தில் இருப்பது போலவே, தூய வணக்கத்தில் கிறிஸ்துவின் கிரயபலி மையமாக இருக்கிறது. நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கு இதுவே அடிப்படையாக இருப்பதால், எதிர்காலத்திற்கான நம் எல்லா நம்பிக்கைகளும் அதன்மீதே சார்ந்திருக்கின்றன. (1 யோவான் 2:2) ஆகவே புதிய உடன்படிக்கையுடன் சம்பந்தப்பட்ட ‘கிறிஸ்துவினுடைய பிரமாணத்தின்படி’ வாழ நாம் முயற்சி செய்கிறோம். (கலாத்தியர் 6:2) நாம் அவ்வாறு செய்யும்வரை ஜீவனுக்கான யெகோவாவின் ஏற்பாடுகள் நமக்கு தாராளமாக கிடைக்கும்.
8. (அ) தரிசனத்தில் தோன்றும் ஆலயத்தின் உட்பிரகாரத்தில் என்ன விடுபட்டுள்ளது? (ஆ) தரிசனத்தில் தோன்றும் ஆலயத்திலுள்ள ஆசாரியர்கள் எதன்மூலம் தங்களை சுத்திகரித்துக்கொள்ளலாம்?
8 அப்படிப்பட்ட நன்மையில் ஒன்று யெகோவாவுக்கு முன்பாக ஒரு சுத்தமான நிலைநிற்கை. ஆசரிப்பு கூடாரத்தின் பிரகாரத்திலும் சாலொமோனின் ஆலயத்திலும் முக்கியமாக இருந்த ஒன்று தரிசனத்தில் காணப்படும் ஆலயத்தின் உட்பிரகாரத்தில் இல்லை. ஆசாரியர்கள் தங்களை சுத்திகரித்துக்கொள்வதற்கான மிகப் பெரிய தொட்டியே அது; பின்னர் கடல் தொட்டி என அழைக்கப்பட்டது. (யாத்திராகமம் 30:18-21; 2 நாளாகமம் 4:2-6) அப்படியானால், எசேக்கியேல் தரிசன ஆலயத்திலிருந்த ஆசாரியர்கள் சுத்திகரிப்பிற்காக எதை உபயோகிப்பார்கள்? உட்பிரகாரத்தின் வழியாக ஓடும் அந்த அற்புதகரமான நதியையே! ஆம், தூய்மையான அல்லது பரிசுத்தமான நிலைநிற்கையை அனுபவிப்பதற்கான ஏற்பாடுகள் மூலம் யெகோவா அவர்களை ஆசீர்வதிப்பார்.
9. இன்று அபிஷேகம் செய்யப்பட்டவர்களும் திரள்கூட்டத்தினரும் எவ்வாறு சுத்தமான நிலைநிற்கையை வகிக்கலாம்?
9 அதைப்போலவே இன்று, யெகோவாவுக்கு முன்பாக சுத்தமான நிலைநிற்கையால் அபிஷேகம் செய்யப்பட்டவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கின்றனர். யெகோவா அவர்களை நீதியுள்ளவர்களாக அறிவித்து பரிசுத்தமானவர்களாக கருதுகிறார். (ரோமர் 5:1, 2) ஆசாரியரல்லாத கோத்திரங்களுக்கு படமாக இருக்கும் ‘திரள் கூட்டத்தைப்’ பற்றியென்ன? அவர்கள் வெளிப்பிரகாரத்தில் வணங்குகின்றனர். அதே நதி தரிசன ஆலயத்தின் அந்தப் பகுதி வழியாகவும் பாய்கிறது. ஆவிக்குரிய ஆலயத்தின் வெளிப்பிரகாரத்தில் வணங்கும் திரள் கூட்டத்தார் சுத்தமான, வெள்ளை அங்கிகளைத் தரித்திருப்பதாக அப்போஸ்தலன் யோவான் பார்ப்பது எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது! (வெளிப்படுத்துதல் 7:9-14) கீழ்த்தரமான இந்த உலகில் அவர்கள் எவ்வாறு நடத்தப்பட்டிருந்தாலும், கிறிஸ்துவின் கிரய பலியில் விசுவாசத்தை அப்பியாசிக்கும்வரை யெகோவா அவர்களை சுத்தமானவர்களாகவும் தூய்மையானவர்களாகவும் கருதுகிறார் என அவர்கள் உறுதியாக இருக்கலாம். அவர்கள் எவ்வாறு விசுவாசத்தை காண்பிக்கிறார்கள்? மீட்கும் பொருளில் முழு நம்பிக்கை வைத்து இயேசுவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுவதன் மூலமே.—1 பேதுரு 2:21.
10, 11. அடையாளப்பூர்வ தண்ணீரின் முக்கியமான ஒரு அம்சம் என்ன, நதி பெருக்கெடுத்து ஓடுவதோடு இது எவ்வாறு சம்பந்தப்பட்டிருக்கிறது?
10 ஏற்கெனவே குறிப்பிடப்பட்டபடி, இந்த அடையாளப்பூர்வ தண்ணீருக்கு மற்றொரு முக்கிய அம்சமும் இருக்கிறது; அதுவே அறிவு. திரும்ப நிலைநாட்டப்பட்ட இஸ்ரவேலில் ஆசாரியத்துவத்தின் மூலம் ஆவிக்குரிய போதனையால் யெகோவா தம்முடைய ஜனங்களை ஆசீர்வதித்தார். (எசேக்கியேல் 44:23) அதைப்போலவே இன்று, ‘ராஜரீகமான ஆசாரியக் கூட்டம்’ மூலம் சத்திய வார்த்தையைப் பற்றிய ஏராளமான போதனைகளால் யெகோவா தம்முடைய ஜனங்களை ஆசீர்வதித்திருக்கிறார். (1 பேதுரு 2:9) யெகோவா தேவனைப் பற்றியும், மனிதவர்க்கத்திற்கான அவருடைய நோக்கத்தைப் பற்றியும், முக்கியமாக இயேசு கிறிஸ்து மற்றும் மேசியானிய ராஜ்யத்தைப் பற்றியுமான அறிவு இந்தக் கடைசி நாட்களில் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருக்கிறது. நாம் பெற்றுவரும் ஆவிக்குரிய புத்துணர்ச்சியளிக்கும் ஆழமான இந்த வெள்ளம் எவ்வளவு மகத்தானது!—தானியேல் 12:4.
11 அந்தத் தேவதூதன் அளந்த நதி படிப்படியாக ஆழமானது போலவே, ஆசீர்வதிக்கப்பட்ட நம்முடைய ஆவிக்குரிய தேசத்தில் வந்து சேரும் திரளான மக்களின் தேவைக்கேற்ப யெகோவாவிடமிருந்து வரும் உயிரளிக்கும் ஆசீர்வாதங்களின் ஓட்டமும் அபரிமிதமாக அதிகரித்திருக்கிறது. திரும்ப நிலைநாட்டப்படுவதைப் பற்றிய மற்றொரு தீர்க்கதரிசனம் இவ்வாறு முன்னறிவித்தது: “சின்னவன் ஆயிரமும், சிறியவன் பலத்த ஜாதியுமாவான். கர்த்தராகிய நான் ஏற்றகாலத்தில் இதைத் தீவிரமாய் நடப்பிப்பேன்.” (ஏசாயா 60:22) இந்த வார்த்தைகள் நிறைவேறியிருக்கின்றன—தூய்மையான வணக்கத்தில் நம்மோடு சேர்ந்துகொள்ள லட்சக்கணக்கானோர் திரண்டு வந்திருக்கின்றனர்! தம்மிடம் திரும்பும் அனைவருக்கும் அபரிமிதமான “தண்ணீர்” கிடைக்கும்படி யெகோவா செய்திருக்கிறார். (வெளிப்படுத்துதல் 22:17) அவருடைய பூமிக்குரிய அமைப்பு நூற்றுக்கணக்கான பாஷைகளில் பைபிள்களையும் பைபிள் பிரசுரங்களையும் உலகமுழுவதிலும் விநியோகிப்பதற்கு அவர் வழிநடத்துகிறார். அதைப்போலவே, சத்தியத்தின் தெள்ளத்தெளிவான தண்ணீர் அனைவருக்கும் கிடைக்கும்படி கிறிஸ்தவ கூட்டங்கள் மற்றும் மாநாடுகளும்கூட உலகமுழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன. அப்படிப்பட்ட ஏற்பாடுகள் ஜனங்களுக்கு எவ்வாறு நன்மையளிக்கின்றன?
ஜீவனைக் கொண்டுவரும் தண்ணீர்!
12. (அ) எசேக்கியேல் தரிசனத்தில் காணப்படும் மரங்கள் ஏன் கனிகொடுக்க முடியும்? (ஆ) கடைசி நாட்களில் கனிதரும் இந்த மரங்கள் எதை அர்த்தப்படுத்துகின்றன?
12 எசேக்கியேலின் தரிசனத்தில் வரும் நதி உயிர்ப்பிக்கிறது, ஆரோக்கியமும் அளிக்கிறது. நதியின் இரண்டு பக்கங்களிலும் வளரும் மரங்களைப் பற்றி எசேக்கியேல் அறிந்துகொண்ட பிறகு அவரிடம் இவ்வாறு சொல்லப்படுகிறது: “அவற்றின் இலைகள் உதிரா; அவற்றில் கனிகள் குறையா. . . . அவற்றின் கனிகள் உணவாகவும் இலைகள் மருந்தாகவும் பயன்படும்.” (பொது மொழிபெயர்ப்பு) ஏன் இவ்வளவு அற்புதகரமான விதத்தில் இந்த மரங்கள் விளைச்சலை தருகின்றன? ஏனென்றால் “அவைகளுக்குப் பாயும் தண்ணீர் பரிசுத்த ஸ்தலத்திலிருந்து பாய்கிற[து].” (எசேக்கியேல் 47:12ஆ) அடையாளப்பூர்வமான இந்த மரங்கள், இயேசுவின் கிரய பலியின் அடிப்படையில் மனிதவர்க்கத்தை மறுபடியும் பரிபூரணத்திற்கு உயர்த்துவதற்கான கடவுளுடைய எல்லா ஏற்பாடுகளையும் முன்நிழலாக குறிக்கின்றன. இக்காலத்தில் பூமியில், ஆவிக்குரிய போஷாக்கையும் சுகமளித்தலையும் கொடுப்பதில் அபிஷேகம் செய்யப்பட்ட மீதியானோர் முன்நின்று வழிநடத்துகின்றனர். பரலோக வெகுமதியை 1,44,000 பேரும் பெற்ற பிறகு, கிறிஸ்துவோடு உடன் அரசர்களாக அவர்களுடைய ஆசாரியத்துவ சேவையால் வரும் நன்மைகளை எதிர்காலத்திலும் அனுபவிக்க முடியும். அது முடிவில் ஆதாமிய மரணத்தை முற்றிலுமாக வெல்வதற்கு வழிநடத்தும்.—வெளிப்படுத்துதல் 5:9, 10; 21:2-4.
13. நம்முடைய நாளில் என்ன சுகப்படுத்துதல் நிறைவேற்றப்பட்டிருக்கிறது?
13 தரிசனத்தில் வரும் நதி பயனற்ற சவக்கடலுக்கு ஓடுகையில் வழியில் உள்ளவற்றையெல்லாம் செழிப்படைய செய்கிறது. இந்தக் கடல் ஆவிக்குரிய மரித்த நிலையைக் குறிக்கிறது. ஆனால் “இந்த நதி போகுமிடமெங்கும்” உயிர் செழித்தோங்குகிறது. (எசேக்கியேல் 47:9) அதைப்போலவே, இந்தக் கடைசி நாட்களில் ஜீவத்தண்ணீர் எங்கெல்லாம் சென்றெட்டியதோ அங்கெல்லாம் ஜனங்கள் ஆவிக்குரிய விதத்தில் உயிரடைந்து வருகின்றனர். 1919-ல் இவ்வாறு புத்துயிர் அடைந்தவர்களில் முதலானோர் அபிஷேகம் செய்யப்பட்ட மீதியானோரே ஆவர். மரித்ததைப் போன்ற செயலற்ற நிலையில் இருந்தவர்கள் ஆவிக்குரிய விதத்தில் உயிரடைந்தனர். (எசேக்கியேல் 37:1-14; வெளிப்படுத்துதல் 11:3, 7-12) அதுமுதல் அந்த முக்கியத்துவம் வாய்ந்த தண்ணீர் ஆவிக்குரிய விதத்தில் மரித்த மற்றவர்களையும் எட்டியிருக்கிறது. இவர்கள் உயிரடைந்து வேறே ஆடுகளின் அதிகரித்துவரும் திரள் கூட்டத்தின் பாகமாகி, யெகோவாவை நேசித்து அவரைச் சேவிக்கின்றனர். சீக்கிரத்தில், உயிர்த்தெழுப்பப்படும் எண்ணற்றவர்களும் இந்த ஏற்பாடுகளிலிருந்து பயனடைவர்.
14. சவக்கடலின் கரைநெடுக மீன்பிடி தொழில் செழித்தோங்குவது இன்று எதை நன்றாக படம்பிடித்துக் காட்டுகிறது?
14 ஆவிக்குரிய வீரியத்துக்கேற்ப உற்பத்தித் திறனும் அதிகரிக்கிறது. அக்கடலின் கரைகளில் முன்பு முடங்கிப்போன மீன்பிடி தொழில் செழித்தோங்குவதிலிருந்து இது சுட்டிக்காட்டப்படுகிறது. இயேசு தம்முடைய சீஷர்களிடம் கூறினார்: “உங்களை மனுஷரைப் பிடிக்கிறவர்களாக்குவேன்.” (மத்தேயு 4:19) கடைசி நாட்களில், அபிஷேகம் செய்யப்பட்டவர்களின் மீதியானோரை கூட்டிச்சேர்ப்பதுடன் மீன்பிடிக்கும் வேலை ஆரம்பமானது. ஆனால் அதோடு நின்றுவிடவில்லை. திருத்தமான அறிவின் ஆசீர்வாதம் உட்பட யெகோவாவின் ஆவிக்குரிய ஆலயத்திலிருந்து வரும் உயிரளிக்கும் தண்ணீர் எல்லா தேசத்து மக்களையும் சென்றெட்டியிருக்கிறது. எங்கெல்லாம் அந்த வெள்ளம் சென்றதோ அங்கெல்லாம் ஆவிக்குரிய ஜீவன் கிடைத்தது.
15. ஜீவனுக்கான கடவுளுடைய ஏற்பாடுகளை எல்லாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதை எது காட்டுகிறது, இப்படிப்பட்டவர்களுடைய முடிவு என்ன?
15 ஆனால், ஜீவனுக்குரிய செய்தியை எல்லாருமே ஏற்றுக்கொள்வதில்லை. கிறிஸ்துவின் ஆயிர வருட ஆட்சியின்போது உயிர்த்தெழுப்பப்படும் ஆட்களிலும் அனைவருமே சாதகமாக செயல்படமாட்டார்கள். (ஏசாயா 65:20; வெளிப்படுத்துதல் 21:8) கடலின் சில பகுதிகள் சீரடையவில்லை என்று அந்தத் தேவதூதன் கூறுகிறான். சதுப்புநிலமான இந்த உயிரற்ற இடங்கள் ‘உப்பாகவே விட்டுவிடப்படும்.’ (எசேக்கியேல் 47:11) நம்முடைய நாளிலிருக்கும் மக்களைப் பொருத்தவரையில், யெகோவாவின் உயிரளிக்கும் தண்ணீரைப் பெறும் அனைவருமே அதை ஏற்றுக்கொள்வதில்லை. (ஏசாயா 6:10) ஆவிக்குரிய விதத்தில் மரித்த, நோயுற்ற நிலையிலேயே இருக்க தெரிந்துகொள்ளும் அனைவரும் ‘உப்பாகவே விட்டுவிடப்படுவர்,’ அதாவது அர்மகெதோனில் அழிக்கப்படுவர். (வெளிப்படுத்துதல் 19:11-21) என்றபோதிலும், இந்தத் தண்ணீரை உண்மையுடன் பருகிவந்த அனைவரும் தப்பிப்பிழைத்து, இந்தத் தீர்க்கதரிசனத்தின் முடிவான நிறைவேற்றத்தைக் காண்பதில் நம்பிக்கை வைக்கலாம்.
பரதீஸில் அந்த நதி பாய்கிறது
16. எப்பொழுது மற்றும் எப்படி எசேக்கியேலின் ஆலய தரிசனம் கடைசியில் நிறைவேறும்?
16 திரும்ப நிலைநாட்டுதல் பற்றிய மற்ற தீர்க்கதரிசனங்களைப் போலவே எசேக்கியேல் ஆலய தரிசனத்தின் இறுதி நிறைவேற்றம் ஆயிரவருட ஆட்சியின்போது நடைபெறும். அப்போது ஆசாரியத்துவ வகுப்பு பூமியில் இருக்காது. “இவர்கள் தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும் முன்பாக ஆசாரியராயிருந்து, அவரோடேகூட [பரலோகத்தில்] ஆயிரம் வருஷம் அரசாளுவார்கள்.” (வெளிப்படுத்துதல் 20:6) கிறிஸ்துவின் கிரய பலியின் முழுமையான நன்மைகளை பகிர்ந்தளிப்பதில் கிறிஸ்துவோடு இந்தப் பரலோக ஆசாரியர்கள் பங்குகொள்வார்கள். இவ்வாறாக உண்மையுள்ள மனிதவர்க்கம் இரட்சிக்கப்பட்டு, திரும்பவும் பரிபூரண நிலையை அடையும்.—யோவான் 3:17.
17, 18. (அ) வெளிப்படுத்துதல் 22:1, 2-ல் ஜீவ நதி எவ்வாறு வர்ணிக்கப்படுகிறது, அத்தரிசனம் முக்கியமாக நிறைவேறும் காலம் எப்பொழுது? (ஆ) பரதீஸில் ஜீவத்தண்ணீர் ஏன் பெருக்கெடுத்தோடும்?
17 உண்மையில், எசேக்கியேல் பார்த்த அந்த நதியில் அப்போதுதான் மிகவும் ஆற்றல்மிக்க ஜீவத்தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். வெளிப்படுத்துதல் 22:1, 2-ல் பதிவு செய்யப்பட்டிருக்கும் தீர்க்கதரிசனம் முக்கியமாக இந்தக் காலப்பகுதியில்தான் நிறைவேறுகிறது: “பின்பு, பளிங்கைப்போல் தெளிவான ஜீவத்தண்ணீருள்ள சுத்தமான நதி தேவனும் ஆட்டுக்குட்டியானவரும் இருக்கிற சிங்காசனத்திலிருந்து புறப்பட்டு வருகிறதை எனக்குக் காண்பித்தான். நகரத்து வீதியின் மத்தியிலும், நதியின் இருகரைகளிலும், பன்னிரண்டு விதமான கனிகளைத்தரும் ஜீவவிருட்சங்கள் இருந்தன, அது மாதந்தோறும் தன் கனியைக் கொடுக்கும்; அந்த விருட்சத்தின் இலைகள் ஜனங்கள் ஆரோக்கியமடைகிறதற்கு ஏதுவானவைகள்.”
18 ஆயிரவருட ஆட்சியின்போது சரீர, மன மற்றும் உணர்ச்சி சம்பந்தப்பட்ட எல்லாவித வியாதிகளும் குணமாக்கப்படும். இது, அடையாளப்பூர்வமான மரங்கள் மூலம் ‘ஜனங்கள் ஆரோக்கியமடைவதால்’ நன்கு சித்தரித்துக் காட்டப்படுகிறது. கிறிஸ்துவும் 1,44,000 பேரும் பகிர்ந்தளிக்கும் ஆவிக்குரிய ஏற்பாடுகளின் காரணமாக, “வியாதிப்பட்டிருக்கிறேன் என்று நகரவாசிகள் சொல்வதில்லை.” (ஏசாயா 33:24) அந்த நதி குறிப்பிட்ட காலத்தில் மிகப் பெரிய அளவில் விரிவடைய ஆரம்பிக்கும். இந்தச் சுத்தமான ஜீவத்தண்ணீரைப் பருகும் உயிர்த்தெழுப்பப்பட்ட கோடிக்கணக்கான, ஒருவேளை நூறு கோடிக்கணக்கான, மனிதர்களுக்கு ஏற்றாற்போல அந்த நதி அகலமாகவும் ஆழமாகவும் ஆகவேண்டும். எசேக்கியேலின் தரிசனத்தில் அந்த நதி சவக்கடலை குணப்படுத்தி, அது சென்ற இடமெல்லாம் செழிப்படைய செய்தது. அவ்வாறே பரதீஸில், ஆண்களும் பெண்களும் அவர்களுக்கு அளிக்கப்படும் மீட்கும்பொருளின் நன்மைகளில் விசுவாசத்தைக் காட்டினால், சுதந்தரிக்கப்பட்ட ஆதாமிய மரணத்திலிருந்து குணப்படுத்தப்பட்டு முழுமையான கருத்தில் உயிரடைவர். அந்நாட்களில் “புஸ்தகங்கள்” திறக்கப்படும் என வெளிப்படுத்துதல் 20:12 முன்னறிவிக்கிறது. அது கூடுதலான புரிந்துகொள்ளுதலை தருவதால் உயிர்த்தெழுப்பப்பட்டவர்களும் அதிலிருந்து பயனடைவர். வருத்தகரமாக, பரதீஸில்கூட சிலர் குணமடைய விரும்பமாட்டார்கள். இந்தக் கலகக்காரர்களே நித்திய அழிவாகிய ‘உப்பிற்கு விட்டுவிடப்படுவர்.’—வெளிப்படுத்துதல் 20:15.
19. (அ) தேசத்தை பங்கிடுதல் எவ்வாறு பரதீஸில் நிறைவேறும்? (ஆ) பரதீஸில் நகரம் எந்த அம்சத்தை குறிக்கிறது? (இ) ஆலயத்திலிருந்து சற்று தொலைவிலுள்ள நகரம் அமைந்திருக்கும் இடத்தின் தனிச்சிறப்பு என்ன?
19 எசேக்கியேலின் தரிசனத்தில் வரும் நிலத்தைப் பங்கிடுதலும் அந்தச் சமயத்தில் முடிவாக நிறைவேறும். தேசம் சரியாக பங்கிடப்படுவதை எசேக்கியேல் தன்னுடைய தரிசனத்தில் பார்த்தார். அதைப்போலவே, பரதீஸில் ஓரிடத்தை, உண்மையாகவே ஒரு சொந்த நிலத்தைப் பெறுவோம் என்று உண்மையுள்ள ஒவ்வொரு கிறிஸ்தவனும் உறுதியாக நம்பலாம். சொந்தமாக வீடுகட்டி அதைக் கண்போல பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசையும் முறையாக நிறைவேறும். (ஏசாயா 65:21; 1 கொரிந்தியர் 14:33, NW) பொருத்தமாகவே, எசேக்கியேல் பார்த்த நகரம், இந்தப் பூமியை நிர்வகிப்பதில் யெகோவாவின் நோக்கத்தை சித்தரிக்கிறது. அபிஷேகம் செய்யப்பட்ட ஆசாரிய வகுப்பார் சொல்லர்த்தமாக மனிதவர்க்கத்தினர் மத்தியில் இனிமேலும் இருக்கமாட்டார்கள். ஆலயத்திலிருந்து சிறிது தூரம் தள்ளியிருக்கும் ‘பரிசுத்தமாயிராத’ நிலத்தில் அந்த நகரம் இருப்பதாகக் காட்டும் தரிசனம் இதையே குறிக்கிறது. (எசேக்கியேல் 48:15) என்றபோதிலும், 1,44,000 பேர் பரலோகத்தில் கிறிஸ்துவோடு ஆட்சி செய்கையில், பூமியிலும்கூட ராஜாவின் பிரதிநிதிகள் இருப்பார்கள். அதிபதி வகுப்பின் அன்புள்ள வழிநடத்துதலால் அவருடைய மனித பிரஜைகள் அதிகம் பயனடைவர். இருப்பினும், அந்த அரசாங்கத்தின் உண்மையான ஆசனம், பூமியில் அல்ல, பரலோகத்தில் இருக்கும். அதிபதி வகுப்பார் உட்பட, பூமியிலுள்ள ஒவ்வொருவரும் மேசியானிய ராஜ்யத்திற்கு கீழ்ப்படிந்து நடப்பார்கள்.—தானியேல் 2:44; 7:14, 18, 22.
20, 21. (அ) நகரத்தின் பெயர் ஏன் பொருத்தமானது? (ஆ) எசேக்கியேல் தரிசனத்தைப் பற்றிய நம்முடைய புரிந்துகொள்ளுதல் என்ன கேள்விகளை நாம் கேட்டுக்கொள்ளும்படி செய்ய வேண்டும்?
20 எசேக்கியேல் தீர்க்கதரிசனத்தின் முடிவான வார்த்தைகளை கவனியுங்கள்: ‘அந்நாள் முதல் நகரத்தின் பெயர் யெகோவாவே அங்கு வீற்றிருக்கிறார் என்பதாகும்.’ (எசேக்கியேல் 48:35, NW) மனிதர்களுக்கு வல்லமையையும் அதிகாரத்தையும் அளிப்பதற்காகவோ எந்த மனிதனுடைய சித்தத்தைச் செய்வதற்காகவோ இந்த நகரம் இராது. இது யெகோவாவின் நகரம். இது அவருடைய மனதையும், காரியங்களைச் செய்வதில் அவருடைய அன்புள்ள, நியாயமான வழிகளையும் வெளிப்படுத்தும். (யாக்கோபு 3:17) ‘புதிய பூமியாகிய’ ஒழுங்கமைக்கப்பட்ட மனித சமுதாயத்தை முடிவில்லா நித்திய எதிர்காலத்திற்கும் யெகோவா ஆசீர்வதிப்பார் என்ற இதமளிக்கும் வாக்குறுதியை இது நமக்கு தருகிறது.—2 பேதுரு 3:13.
21 அடுத்து என்ன நடக்கவிருக்கிறது என்ற எதிர்பார்ப்பின் காரணமாக நாம் கிளர்ச்சி அடையவில்லையா? ஆகவே நாம் ஒவ்வொருவரும் இவ்வாறு கேட்டுக்கொள்வது பொருத்தமாக இருக்கும்: ‘எசேக்கியேலின் தரிசனத்தில் வெளிப்படுத்தப்படும் அற்புதமான ஆசீர்வாதங்களால் நான் எவ்வாறு தூண்டப்படுகிறேன்? அபிஷேகம் செய்யப்பட்ட மீதியானோரும் எதிர்கால அதிபதி வகுப்பின் அங்கத்தினர்களும் செய்யும் அன்புள்ள கண்காணிகளின் வேலையை நான் உண்மையோடு ஆதரிக்கிறேனா? தூய்மையான வணக்கத்தை என்னுடைய வாழ்க்கையின் மையமாக்கியிருக்கிறேனா? இன்று அவ்வளவு அபரிமிதமாக ஓடும் ஜீவத்தண்ணீரை நான் முழுமையாக பிரயோஜனப்படுத்திக் கொள்கிறேனா?’ நாம் அனைவருமே அவ்வாறு செய்து, கடவுள் காட்டும் ஜீவ வழிக்கான ஏற்பாடுகளின் மூலம் நித்திய காலத்திற்கும் தொடர்ந்து சந்தோஷத்தை அனுபவிப்போமாக!
[அடிக்குறிப்புகள்]
a வெள்ளப் பெருக்கெடுத்தோடும் இந்த பள்ளத்தாக்கு கீதரோன் பள்ளத்தாக்கை குறிக்கலாம், இது எருசலேமிலிருந்து தென்கிழக்கே சென்று சவக் கடலில் முடிவடைகிறது. குறிப்பாக அதன் கீழ்ப்பக்கம் வருடமுழுவதும் தண்ணீரற்ற வறண்ட பகுதியாக இருக்கிறது.
b ஆங்கில காவற்கோபுரம், மே 1, 1881, ஜூன் 1, 1981 ஆகியவற்றை காண்க.
எவ்வாறு பதிலளிப்பீர்கள்?
◻ ஆலயத்திலிருந்து வழிந்தோடும் தண்ணீர் எதை அர்த்தப்படுத்துகிறது?
◻ அடையாளப்பூர்வ நதியால் என்ன சுகப்படுத்துதலை யெகோவா நிறைவேற்றியிருக்கிறார், ஏன் நதி பெருக்கெடுத்து ஓடுகிறது?
◻ நதியின் கரைநெடுக இருக்கும் மரங்கள் எதை அடையாளப்படுத்துகின்றன?
◻ ஆயிரவருட ஆட்சியில் நகரம் எதை அடையாளப்படுத்தும், நகரத்தின் பெயர் ஏன் பொருத்தமானது?
[பக்கம் 23-ன் படங்கள்]
ஜீவ நதி, இரட்சிப்புக்கான கடவுளுடைய ஏற்பாட்டைக் குறிக்கிறது