இன்று ‘ஆலயமும்’ ‘அதிபதியும்’
‘அதிபதி அவர்கள் நடுவிலே அவர்களோடேகூட உட்பிரவேசித்து, அவர்கள் புறப்படும்போது அவனும்கூடப் புறப்படுவானாக.’—எசேக்கியேல் 46:10.
1, 2. எசேக்கியேல் கண்ட ஆலய தரிசனத்தின் அர்த்தத்தை அவிழ்க்க எந்த முக்கிய உண்மை நமக்கு உதவுகிறது?
பூர்வகால யூத ரபீக்கள் சிலருக்கு எசேக்கியேல் புத்தகத்தில் முழு திருப்தியில்லை. தால்மூட் சொல்கிறபடி, பரிசுத்த வேதாகமத்தின் அதிகாரப்பூர்வ பட்டியலிலிருந்து அந்தப் புத்தகத்தை நீக்கிவிடுவதற்கே அவர்களில் சிலர் யோசனை செய்தனர். ஆலய தரிசனத்திற்கு அர்த்தம் சொல்வது அவர்களுக்கு மிகவும் கடினமாக இருந்ததால், அது மனித மூளைக்கு அப்பாற்பட்டது என்றும் பறைசாற்றினர். யெகோவாவின் ஆலயத்தைப் பற்றிய எசேக்கியேல் தரிசனத்தால் மற்ற பைபிள் அறிஞர்களும் குழப்பமடைந்திருக்கின்றனர். நம்மைப் பற்றியென்ன?
2 தூய வணக்கம் திரும்ப நிலைநாட்டப்பட்டது முதற்கொண்டு, யெகோவா தம்முடைய ஜனங்களை ஆவிக்குரிய உட்பார்வை எனும் அநேக ஒளிப்பிரகாசங்களால் ஆசீர்வதித்திருக்கிறார். அதில் கடவுளுடைய ஆவிக்குரிய ஆலயம், அதாவது தூய வணக்கத்திற்கான யெகோவாவின் ஆலயம் போன்ற ஏற்பாடு எது என்பதைப் புரிந்துகொள்வதும் உட்பட்டுள்ளது.a எசேக்கியேல் கண்ட ஆலய தரிசனத்தில் பொதிந்துள்ள அர்த்தத்தை அவிழ்க்க இந்த முக்கிய சத்தியம் நமக்கு உதவுகிறது. இத்தரிசனத்தின் நான்கு முக்கிய அம்சங்களாகிய ஆலயம், ஆசாரியத்துவம், அதிபதி, தேசம் ஆகியவற்றைப் பற்றி நாம் மிகவும் கவனமாக சிந்திப்போமாக. இன்று இவை எதை அர்த்தப்படுத்துகின்றன?
ஆலயமும் நீங்களும்
3. உயரமான கூரை மற்றும் ஆலயத்தின் நுழைவாயில்களில் உள்ள சுவர் சித்திரங்களிலிருந்து எதை கற்றுக்கொள்கிறோம்?
3 தரிசனத்தில் வரும் இந்த ஆலயத்தைச் சுற்றி நாம் வலம்வருவதாக கற்பனை செய்துகொள்ளுங்கள். நாம் ஏழு படிகள் ஏறியதும் ஒரு பெரிய கதவு. இந்த நுழைவாயிலுக்கு உள்ளே பிரமிப்புடன் மேலே பார்க்கிறோம். அதன் உட்கூரை 100 அடியைவிட உயரம்! வணக்கத்திற்கான யெகோவாவின் ஏற்பாட்டில் உள்ள உயர்ந்த தராதரங்கள் இதன்மூலம் நமக்கு நினைப்பூட்டப்படுகிறது. ஜன்னல்களின் வழியே வரும் ஒளிக்கிரணங்கள் பேரீச்சம் மரங்கள் வரையப்பட்ட சுவர் சித்திரங்கள்மீது ஒளிபரப்புகின்றன. நேர்மைத்தன்மையை சித்தரிப்பதற்கே வேதாகமத்தில் இந்த மரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. (சங்கீதம் 92:12; எசேக்கியேல் 40:14, 16, 22) ஒழுக்க ரீதியிலும் ஆவிக்குரிய ரீதியிலும் நேர்மையாய் இருப்பவர்களுக்கே இந்தப் பரிசுத்த ஸ்தலம். இதற்கு இசைவாக, நாமும் நேர்மையாக இருந்து நம்முடைய வணக்கம் யெகோவாவுக்கு ஏற்கத் தகுந்ததாக இருப்பதற்கு விரும்புகிறோம்.—சங்கீதம் 11:7.
4. ஆலயத்தின் உள்ளே யார் அனுமதிக்கப்படுவதில்லை, இது நமக்கு எதை கற்பிக்கிறது?
4 நடைபாதையின் இருபுறத்திலும் மும்மூன்று காவல் அறைகள். காவலர்கள் நம்மை உள்ளே அனுமதிப்பார்களா? ‘விருத்தசேதனமில்லாத இருதயமுள்ள’ எந்த அந்நியனும் உள்ளே நுழையக்கூடாது என்று எசேக்கியேலிடம் யெகோவா கூறுகிறார். (எசேக்கியேல் 40:10; 44:9) அது எதை அர்த்தப்படுத்துகிறது? கடவுளுடைய சட்டங்களில் அன்புகூர்ந்து அவற்றின்படி வாழ்பவர்களையே கடவுள் தம் வணக்கத்தாராக ஏற்றுக்கொள்கிறார். (எரேமியா 4:4; ரோமர் 2:29) இப்படிப்பட்டவர்களை தம்முடைய ஆவிக்குரிய கூடாரத்தில், அதாவது தம்முடைய வணக்க வீட்டில் வரவேற்கிறார். (சங்கீதம் 15:1-5) 1919-ல் தூய வணக்கம் திரும்ப நிலைநாட்டப்பட்ட சமயத்திலிருந்தே யெகோவாவின் பூமிக்குரிய அமைப்பு அவருடைய ஒழுக்க சட்டங்களை ஆதரித்தும் படிப்படியாக தெளிவாக்கிக்கொண்டும் வந்திருக்கிறது. வேண்டுமென்றே கீழ்ப்படிய மறுப்பவர்கள் அவருடைய மக்களோடு கூட்டுறவுகொள்ள அழைக்கப்படுவதில்லை. இன்று, மனந்திரும்பாத குற்றவாளிகளை சபைநீக்கம் செய்யும் பைபிள் அடிப்படையிலான பழக்கம் நம்முடைய வணக்கத்தை சுத்தமாகவும் தூய்மையாகவும் வைக்க உதவி செய்திருக்கிறது.—1 கொரிந்தியர் 5:13.
5. (அ) எசேக்கியேல் தரிசனத்திற்கும், வெளிப்படுத்துதல் 7:9-15-ல் பதிவுசெய்யப்பட்டுள்ள யோவானின் தரிசனத்திற்கும் இடையே உள்ள ஒற்றுமைகள் யாவை? (ஆ) எசேக்கியேல் தரிசனத்தில், வெளிப்பிரகாரத்தில் வணங்கும் 12 கோத்திரத்தார் யாரை குறிக்கிறார்கள்?
5 யெகோவாவை மக்கள் வணங்கி அவரை துதிக்கும் வெளிப்பிரகாரத்திற்கு அந்த நடைபாதை செல்கிறது. இது, யெகோவாவை “இரவும் பகலும் அவருடைய ஆலயத்திலே” வணங்கும் ‘திரள் கூட்டத்தினர்’ பற்றி அப்போஸ்தலன் யோவான் கண்ட தரிசனத்தை நமக்கு நினைப்பூட்டுகிறது. இரண்டு தரிசனங்களிலுமே பேரீச்சம் மரங்கள் சித்தரிக்கப்படுகின்றன. எசேக்கியேலின் தரிசனத்தில் அவை நுழைவாயில் சுவர்களை அலங்கரிக்கின்றன. யோவானின் தரிசனத்தில் அந்த வணக்கத்தார் தங்கள் கைகளில் பேரீச்சமர கிளைகளை பிடித்திருக்கின்றனர். அது, யெகோவாவை துதிப்பதிலும் இயேசுவை தங்கள் ராஜாவாக வரவேற்பதிலும் ஏற்படும் சந்தோஷத்தை அடையாளப்படுத்துகிறது. (வெளிப்படுத்துதல் 7:9-15) எசேக்கியேல் தரிசனத்தின் சூழமைவில், இஸ்ரவேலின் 12 கோத்திரங்கள் ‘வேறே ஆடுகளைச்’ சித்தரிக்கின்றன. (யோவான் 10:16; ஒப்பிடுக: லூக்கா 22:28-30.) யெகோவாவுடைய ராஜ்யத்தைப் பற்றி பிரசங்கிப்பதன் மூலம் அவரை துதித்து மகிழ்வோரில் நீங்களும் ஒருவரா?
6. வெளிப்பிரகாரத்திலுள்ள உணவு அறைகளின் நோக்கம் என்ன, வேறே ஆடுகளுக்கு இது என்ன சிலாக்கியத்தை நினைப்பூட்டலாம்?
6 நாம் வெளிப்பிரகாரத்தை சுற்றிவருகையில், 30 உணவு அறைகளைப் பார்க்கிறோம். மனப்பூர்வமாய் செலுத்திய பலிகளை அங்கேதான் மக்கள் சாப்பிடுகின்றனர். (எசேக்கியேல் 40:17) இன்று வேறே ஆடுகளைச் சேர்ந்தவர்கள் மிருக பலிகளைச் செலுத்துவதில்லை, அதேசமயத்தில் அவர்கள் ஆவிக்குரிய ஆலயத்திற்கு வெறுங்கையோடும் வருவதில்லை. (யாத்திராகமம் 23:15-ஐ ஒப்பிடுக.) அப்போஸ்தலன் பவுல் எழுதினார்: “அவருடைய நாமத்தைத் துதிக்கும் உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரபலியை [இயேசு] மூலமாய் எப்போதும் தேவனுக்குச் செலுத்தக்கடவோம். அன்றியும் நன்மைசெய்யவும், தானதர்மம் பண்ணவும் மறவாதிருங்கள்; இப்படிப்பட்ட பலிகளின்மேல் தேவன் பிரியமாயிருக்கிறார்.” (எபிரெயர் 13:15, 16; ஓசியா 14:2) இப்படிப்பட்ட பலிகளை யெகோவாவுக்கு செலுத்துவது மிகப் பெரிய சிலாக்கியமே.—நீதிமொழிகள் 3:9, 27.
7. ஆலயத்தை அளவிடுவது நமக்கு எதை உறுதிப்படுத்துகிறது?
7 தரிசனத்தில் வரும் ஆலயத்தை ஒரு தேவதூதன் அளவெடுப்பதை எசேக்கியேல் கவனிக்கிறார். (எசேக்கியேல் 40:3) அதேபோல அப்போஸ்தலன் யோவானிடமும் சொல்லப்பட்டது: “தேவனுடைய ஆலயத்தையும், பலிபீடத்தையும், அதில் தொழுதுகொள்ளுகிறவர்களையும் அளந்துபார்.” (வெளிப்படுத்துதல் 11:1) இந்த அளவெடுத்தல் எதை அர்த்தப்படுத்துகிறது? இது தூய வணக்கம் சம்பந்தப்பட்டதில் யெகோவா தம்முடைய நோக்கங்களை நிறைவேற்றுவதை எதுவும் தடைசெய்ய முடியாது என்பதற்கான உறுதியை இந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் அளித்தது. அதைப் போலவே இன்றும், தூய வணக்கம் திரும்ப நிலைநாட்டப்படுவதை எதுவும்—வலிமைமிக்க அரசாங்கங்களிடமிருந்து வரும் கடுமையான எதிர்ப்பும்கூட—தடைசெய்ய முடியாது என்பதில் நாம் உறுதியாக இருக்கலாம்.
8. உட்பிரகாரத்திலுள்ள வாசல்களின் வாயிலாக யார் மட்டுமே நுழையலாம், இந்தக் கதவுகள் நமக்கு எதை நினைப்பூட்டுகின்றன?
8 நாம் வெளிப்பிரகாரத்தைக் கடந்துசெல்கையில் உட்பிரகாரத்திற்கு வழிநடத்தும் மூன்று வாசல்கள் இருப்பதைப் பார்க்கலாம். வெளிக் கதவுகளைப் போல உட்கதவுகள் நேர் வரிசையிலும் ஒரே அளவாகவும் இருக்கின்றன. (எசேக்கியேல் 40:6, 20, 23, 24, 27) ஆசாரியர்கள் மட்டுமே உட்பிரகாரத்திற்குள் நுழையலாம். அபிஷேகம் செய்யப்பட்டவர்கள் தெய்வீக தராதரங்களுக்கும் சட்டங்களுக்கும் கீழ்ப்படிய கவனமாயிருக்க வேண்டும். அதே தராதரங்களும் சட்டங்களும் மெய் கிறிஸ்தவர்கள் அனைவரையும் வழிநடத்துகின்றன என்பதை இந்த உட்கதவுகள் நமக்கு நினைப்பூட்டுகின்றன. அப்படியென்றால், ஆசாரியர்களின் வேலை என்ன, இன்று அதன் அர்த்தம் என்ன?
உண்மையுள்ள ஆசாரியத்துவம்
9, 10. எசேக்கியேல் தரிசனத்தில் ஆசாரிய வகுப்பால் முன்நிழலாக காட்டப்படுகிறபடி, எவ்வாறு ‘ராஜரீக ஆசாரியத்துவம்’ ஆவிக்குரிய போதனையை தந்திருக்கிறது?
9 கிறிஸ்தவத்திற்கு முன்னான காலத்தில், ஆலயத்தில் ஆசாரியர்கள் கடினமாய் உழைத்தனர். பலிக்குரிய மிருகங்களை வெட்டுவது, பலிபீடத்தின் மேல் அவற்றை பலியிடுவது, உடன் ஆசாரியர்களுக்கும் மக்களுக்கும் சேவைசெய்வது ஆகியவை கடினமான சரீர உழைப்பை தேவைப்படுத்தின. ஆனால் வேறு ஒரு முக்கியமான வேலையும் அவர்களுக்கு இருந்தது. ஆசாரியர்களைப் பற்றி யெகோவா இவ்வாறு கட்டளையிட்டார்: “அவர்கள் பரிசுத்தமானதற்கும் பரிசுத்தமல்லாததற்கும், தீட்டானதற்கும் தீட்டல்லாததற்கும் இருக்கும் வித்தியாசத்தை என் ஜனத்துக்குப் போதித்து, அவர்களுக்குத் தெரியப்பண்ணக்கடவர்கள்.”—எசேக்கியேல் 44:23; மல்கியா 2:7.
10 தூய வணக்கத்திற்காக ‘ராஜரீக ஆசாரியர்களாகிய’ அபிஷேகம் செய்யப்பட்டவர்கள் செய்திருக்கும் கடின உழைப்பையும் மனத்தாழ்மையான சேவையையும் நீங்கள் மதித்துணருகிறீர்களா? (1 பேதுரு 2:9) அந்தப் பூர்வகால ஆசாரியர்களைப்போல ஆவிக்குரிய விதமாக போதிப்பதில் முன்நின்று வழிநடத்தி, கடவுளுடைய பார்வையில் எது தூய்மையாகவும் ஏற்றுக்கொள்ளத்தக்கதாகவும் இருக்கிறது, ஆனால் எது அவ்வாறு இல்லை என்பதைப் புரிந்துகொள்ள மக்களுக்கு உதவி செய்திருக்கின்றனர். (மத்தேயு 24:45) பைபிள் அடிப்படையிலான பிரசுரங்கள், கிறிஸ்தவ கூட்டங்கள், மாநாடுகள் ஆகியவை மூலம் வரும் அப்படிப்பட்ட போதகம், கடவுளோடு ஒப்புரவாக லட்சக்கணக்கானோருக்கு உதவியிருக்கிறது.—2 கொரிந்தியர் 5:20.
11. (அ) ஆசாரியர்களின் பாகத்தில் சுத்தமாயிருப்பதன் முக்கியத்துவத்தை எசேக்கியேல் தரிசனம் எவ்வாறு வலியுறுத்தியது? (ஆ) கடைசி நாட்களில், ஆவிக்குரிய கருத்தில் அபிஷேகம் செய்யப்பட்டவர்கள் எவ்வாறு சுத்திகரிக்கப்பட்டிருக்கிறார்கள்?
11 ஆனால், சுத்தமாயிருக்கும்படி ஆசாரியர்கள் மற்றவர்களுக்கு போதிப்பது மட்டுமே போதாது. அவர்கள் தாமே முதலில் சுத்தமாயிருக்க வேண்டும். இவ்வாறு, இஸ்ரவேலின் ஆசாரியத்துவம் சுத்திகரிக்கப்படும் ஒரு நிகழ்ச்சியை எசேக்கியேல் முன்பே கண்டார். (எசேக்கியேல் 44:10-16) அதேவிதமாகவே 1918-ல் யெகோவா தம்முடைய ஆவிக்குரிய ஆலயத்தில் ‘புடமிடுகிறவரை’ போல அமர்ந்து, ஆசாரியத்துவ அபிஷேகம் செய்யப்பட்டவர்களின் வகுப்பை பரிசோதித்தார். (மல்கியா 3:1-5) எல்லாவித விக்கிரக ஆராதனையிலிருந்து மனந்திரும்பினவர்களுக்கும் அல்லது ஆவிக்குரிய விதத்தில் சுத்தமானவர்களுக்குமே அவருடைய ஆவிக்குரிய ஆலயத்தில் தொடர்ந்து சேவை செய்யும் சிலாக்கியம் கிடைத்தது. இருந்தாலும், எல்லாரையும் போலவே, அபிஷேகம் செய்யப்பட்ட தனிநபர்கள் ஆவிக்குரிய அல்லது ஒழுக்க ரீதியில் அசுத்தமாக முடியும். (எசேக்கியேல் 44:22, 25-27) “உலகத்தால் கறைபடாதபடிக்கு” தங்களைக் காத்துக்கொள்ள அவர்கள் கடினமாய் உழைக்க வேண்டும்.—யாக்கோபு 1:27; ஒப்பிடுக: மாற்கு 7:20-23.
12. அபிஷேகம் செய்யப்பட்டோருடைய வேலையை நாம் ஏன் போற்ற வேண்டும்?
12 நாம் ஒவ்வொருவரும் இவ்வாறு கேட்டுக்கொள்ளலாம்: ‘அநேக வருடங்களாக உண்மையாய் சேவை செய்துவரும் அபிஷேகம் செய்யப்பட்டவர்களின் முன்மாதிரியை நான் போற்றுகிறேனா? அவர்களுடைய விசுவாசத்தை நான் பின்பற்றுகிறேனா?’ அபிஷேகம் செய்யப்பட்டவர்கள் எப்போதும் இங்கே பூமியில் தங்களோடு இருக்கமாட்டார்கள் என்பதை திரள் கூட்டத்தார் நினைவில் வைப்பது நல்லது. எசேக்கியேல் தரிசனத்தில் வரும் ஆசாரியர்களைப் பற்றி யெகோவா இவ்வாறு கூறினார்: “இஸ்ரவேலில் அவர்களுக்கு [நிலத்தில்] காணியாட்சியைக் கொடாதிருப்பீர்களாக; நானே அவர்கள் காணியாட்சி.” (எசேக்கியேல் 44:28) அதைப் போலவே அபிஷேகம் செய்யப்பட்டோருக்கு பூமியில் நித்திய ஜீவன் இல்லை. அவர்களுக்கு பரலோக சுதந்தரம் இருக்கிறது, அவர்கள் இன்னும் பூமியில் இருக்கையில் ஆதரவளித்து உற்சாகப்படுத்துவதை திரள் கூட்டத்தார் ஒரு சிலாக்கியமாய் கருதுகின்றனர்.—மத்தேயு 25:34-40; 1 பேதுரு 1:3, 4.
அதிபதி—அவர் யார்?
13, 14. (அ) அதிபதி ஏன் வேறே ஆடுகளைச் சேர்ந்தவராயிருப்பார்? (ஆ) அதிபதி யாரை குறிக்கிறார்?
13 இப்போது ஆர்வத்தைத் தூண்டும் ஒரு கேள்வி எழும்புகிறது. அப்படியானால், அந்த அதிபதி யாரை பிரதிநிதித்துவம் செய்கிறார்? அவர் ஒரு தனிநபராகவும் அதேசமயம் குழுவாகவும் பேசப்பட்டிருப்பதால், ஒரு தொகுதியான ஆண்களை பிரதிநிதித்துவம் செய்கிறார் என நாம் எடுத்துக்கொள்ளலாம். (எசேக்கியேல் 44:3; 45:8, 9) ஆனால் யாரை? நிச்சயமாகவே அபிஷேகம் செய்யப்பட்டவர்களை அல்ல. தரிசனத்தில் ஆசாரியர்களோடு நெருக்கமாக அவர் வேலைசெய்கிறார், ஆனால் அவர்களில் ஒருவர் அல்ல. ஆசாரிய வகுப்பைப் போலில்லாமல், தேசத்தில் அவருக்கு ஒரு பங்கு கொடுக்கப்படுகிறது; அதனால் அவருடைய எதிர்கால வாழ்க்கை பரலோகத்தில் அல்ல, இங்கே பூமியிலேயே இருக்கிறது. (எசேக்கியேல் 48:21) மேலும், எசேக்கியேல் 46:10 இவ்வாறு கூறுகிறது: “[ஆசாரியரல்லாத கோத்திரங்கள்] உட்பிரவேசிக்கும்போது, அதிபதி அவர்கள் நடுவிலே அவர்களோடேகூட [ஆலயத்தின் வெளிப்பிரகாரத்திற்குள்] உட்பிரவேசித்து, அவர்கள் புறப்படும்போது அவனும்கூடப் புறப்படுவானாக.” அவர் உட்பிரகாரத்திற்குள் நுழைவதில்லை, ஆனால் வெளிப்பிரகாரத்திற்குச் சென்று வழிபட ஜனங்களோடு சேர்ந்து ஆலயத்திற்கு உள்ளே வருவதும் வெளியே போவதுமாய் இருக்கிறார். தெளிவாகவே, வேறே ஆடுகளாகிய திரள் கூட்டத்தின் மத்தியில் அதிபதி வகுப்பார் இருப்பார்கள் என்பதை இந்தக் காரணிகள் சுட்டிக்காட்டுகின்றன.
14 கடவுளுடைய மக்கள் மத்தியில் அதிபதிக்கு ஓரளவு உத்தரவாதம் இருப்பது தெளிவாக இருக்கிறது. அவர் வெளிப்பிரகாரத்தில் கிழக்கு வாசலின் மண்டபத்தில் உட்காருகிறார். (எசேக்கியேல் 44:2, 3) நகரத்தின் வாசலில் அமர்ந்து நியாயத்தீர்ப்பு செய்த இஸ்ரவேலின் மூப்பர்களைப்போல மேற்பார்வை செய்யும் ஒரு ஸ்தானத்தை இது குறிக்கும். (ரூத் 4:1-12; நீதிமொழிகள் 22:22) இன்று வேறே ஆடுகள் மத்தியில் மேற்பார்வைக்குரிய ஸ்தானங்களை வகிப்பவர்கள் யார்? ஆவியால் நியமிக்கப்பட்ட பூமிக்குரிய நம்பிக்கையுடைய மூப்பர்களே ஆவர். (அப்போஸ்தலர் 20:28) ஆகவே, எதிர்காலத்தில் புதிய உலகில் நிர்வாக பொறுப்பில் சேவை செய்யும் நோக்கத்திற்காக அதிபதி வகுப்பு இப்போதே தயாராகி வருகிறது.
15. (அ) திரள் கூட்டத்தைச் சேர்ந்த மூப்பர்களுக்கும் அபிஷேகம் செய்யப்பட்ட ஆசாரிய வகுப்பாருக்கும் இடையே உள்ள உறவை எவ்வாறு எசேக்கியேல் தரிசனம் விளக்குகிறது? (ஆ) கடவுளுடைய பூமிக்குரிய அமைப்பில் அபிஷேகம் செய்யப்பட்ட மூப்பர்கள் எதை முன்நின்று வழிநடத்தியிருக்கின்றனர்?
15 ஆனால், அபிஷேகம் செய்யப்பட்ட ஆசாரியத்துவ வகுப்பாருக்கும் திரள் கூட்டத்தின் பாகமாயிருந்து இப்போது மேற்பார்வைக்குரிய ஸ்தானங்களில் சேவை செய்யும் மூப்பர்களுக்கும் மத்தியில் இன்று எப்படிப்பட்ட உறவு நிலவுகிறது? அபிஷேகம் செய்யப்பட்டவர்கள் ஆவிக்குரிய விதத்தில் முன்னின்று வழிநடத்துகையில், திரள் கூட்டத்தின் பாகமாக இருக்கும் மூப்பர்கள் அவர்களோடு ஒத்துழைத்து, அவர்களுக்கு கீழ்ப்பட்டிருக்கும் ஒரு ஸ்தானத்தை வகிப்பதாக எசேக்கியேல் தரிசனம் காட்டுகிறது. எப்படி? ஆவிக்குரிய காரியங்களை மக்களுக்கு போதிக்கும் பொறுப்பு, தரிசனத்தில் வரும் ஆசாரியர்களிடம் கொடுக்கப்பட்டது என்பதை நினைவில் வையுங்கள். சட்ட விஷயங்களில் நியாயாதிபதிகளாய் சேவிக்கும்படியும் அவர்களிடம் சொல்லப்படுகிறது. கூடுதலாக, ஆலய வாசல்களில் லேவியர்கள் “மேற்பார்வைக்குரிய ஸ்தானங்களில்” நியமிக்கப்பட்டனர். (எசேக்கியேல் 44:11, NW, 23, 24) தெளிவாகவே, ஆசாரியர்களின் ஆவிக்குரிய சேவைகளுக்கும் தலைமைத்துவத்திற்கும் அதிபதி மனத்தாழ்மையோடு கீழ்ப்படிய வேண்டும். ஆகவே, அபிஷேகம் செய்யப்பட்டவர்கள் நவீன காலங்களில் தூய்மையான வணக்கத்தை முன்நின்று வழிநடத்தியிருப்பது பொருத்தமாக இருக்கிறது. உதாரணமாக, யெகோவாவின் சாட்சிகளுடைய ஆளுங்குழு அங்கத்தினர்கள் அவர்கள் மத்தியிலிருந்துதான் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அப்படிப்பட்ட உண்மையுள்ள அபிஷேகம் செய்யப்பட்ட மூப்பர்கள் வளர்ந்துவரும் அதிபதி வகுப்பாருக்கு பல பத்தாண்டுகளாக பயிற்சியளித்து வந்திருக்கின்றனர். இதன்மூலம், வரவிருக்கும் கடவுளுடைய புதிய உலகில் முழுமையான அதிகாரம் கொடுக்கப்படும் நாளுக்காக இந்த வகுப்பின் எதிர்கால அங்கத்தினர்களை இப்போதே தயார்படுத்தி வருகின்றனர்.
16. ஏசாயா 32:1, 2-ன்படி, எல்லா மூப்பர்களும் எவ்வாறு செயல்பட வேண்டும்?
16 அதிபதி வகுப்பாராக கூடுதலான பொறுப்புகள் கொடுக்கப்படவிருக்கும் இந்த எதிர்கால அங்கத்தினர்கள் எப்படிப்பட்ட கண்காணிகள்? ஏசாயா 32:1, 2-ல் உள்ள தீர்க்கதரிசனம் கூறுகிறது: ‘இதோ, ஒரு ராஜா நீதியாக அரசாளுவார்; பிரபுக்களும் நியாயமாகத் துரைத்தனம் பண்ணுவார்கள். [ஒவ்வொருவரும்] காற்றுக்கு ஒதுக்காகவும், பெருவெள்ளத்துக்குப் புகலிடமாகவும், வறண்ட நிலத்துக்கு நீர்க்கால்களாகவும், விடாய்த்த பூமிக்குப் பெருங்கன்மலையின் நிழலாகவும் இருப்பார்.’ துன்புறுத்தல், சோர்வுறுதல் போன்ற ‘பெருவெள்ளத்துக்கு’ எதிராக மந்தையைப் பாதுகாக்க கிறிஸ்தவ மூப்பர்கள்—அபிஷேகம் செய்யப்பட்டவர்களும் வேறே ஆடுகளும்—உழைத்துவருகையில் இந்தத் தீர்க்கதரிசனம் இன்று நிறைவேறி வருகிறது.
17. கிறிஸ்தவ மேய்ப்பர்கள் தங்களை எவ்வாறு கருத வேண்டும், மந்தை அவர்களை எவ்வாறு நோக்க வேண்டும்?
17 எபிரெய மொழியில் “பிரபு,” “அதிபதி” ஆகிய வார்த்தைகளுக்கு ஒரே அர்த்தம்தான். இவை மனிதரை கௌரவிப்பதற்கான பட்டப்பெயர்களாய் பயன்படுத்தப்படவில்லை. மாறாக, கடவுளுடைய ஆடுகளை கவனித்துக்கொள்வதில் இந்த ஆண்கள் வகிக்கும் உத்திரவாதத்தை அவை சித்தரிக்கின்றன. யெகோவா இவ்வாறு கடுமையாக எச்சரிக்கிறார்: “இஸ்ரவேலின் அதிபதிகளே, நீங்கள் செய்ததுபோதும்; நீங்கள் கொடுமையையும் கொள்ளையிடுதலையும் தவிர்த்து, நியாயத்தையும் நீதியையும் செய்யுங்கள்.” (எசேக்கியேல் 45:9) இன்றுள்ள எல்லா மூப்பர்களும் அப்படிப்பட்ட ஆலோசனையை கவனத்தில் எடுத்துக்கொள்வது நல்லது. (1 பேதுரு 5:2, 3) மறுபட்சத்தில், இந்த மேய்ப்பர்களை “மனிதர்களில் வரங்களாக” இயேசு அளித்திருக்கிறார் என்பதை மந்தையில் உள்ளவர்கள் அங்கீகரிக்கின்றனர். (எபேசியர் 4:8, NW) கடவுளுடைய ஏவப்பட்ட வார்த்தையில் அவர்களுக்கான தகுதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. (1 தீமோத்தேயு 3:1-7; தீத்து 1:5-9) ஆகவே கிறிஸ்தவர்கள் மூப்பர்களின் வழிநடத்துதலைப் பின்பற்றுகின்றனர்.—எபிரெயர் 13:7.
18. இப்பொழுது அதிபதியாய் ஆகப்போகிற வகுப்பாரின் சில பொறுப்புகள் யாவை, எதிர்காலத்தில் அவர்களுடைய பொறுப்பு என்ன?
18 பைபிள் காலங்களில் சில அதிபதிகளுக்கு கூடுதலான அதிகாரம் இருந்தது, மற்றவர்களுக்கு குறைவாக இருந்தது. இன்றும் திரள் கூட்டத்தைச் சேர்ந்த மூப்பர்களுக்கு வெவ்வேறு பொறுப்புகள் உள்ளன. சிலர் ஒரு சபையில் சேவை செய்கின்றனர்; மற்றவர்கள் பயணக் கண்காணிகளாக அநேக சபைகளுக்கு சேவை செய்கின்றனர்; மற்றவர்கள் கிளை அலுவலக கண்காணிகளாக முழு தேசங்களையும் கண்காணிப்பதில் உதவுகின்றனர்; மற்றவர்கள் ஆளும் குழுவின் பல்வேறு குழுக்களுக்கு நேரடியாக உதவுகின்றனர். பூமியில் இருக்கும் யெகோவாவின் வணக்கத்தார் மத்தியில், முன்நின்று வழிநடத்துவதற்காக புதிய உலகில் ‘பூமியெங்கும் பிரபுக்களை’ இயேசு நியமிப்பார். (சங்கீதம் 45:16) இவர்களில் அநேகரை இன்றைய உண்மையுள்ள மூப்பர்கள் மத்தியிலிருந்து அவர் தெரிவு செய்வார் என்பதில் சந்தேகமேதுமில்லை. இந்த ஆண்கள் இப்பொழுதே தங்களை தகுதியுள்ளவர்களாக நிரூபித்து வருவதால் எதிர்காலத்தில் இன்னும் கூடுதலான சிலாக்கியங்களைக் கொடுப்பதற்கு இவர்களில் அநேகரை அவர் தெரிவு செய்வார்.
இன்று கடவுளுடைய மக்களின் தேசம்
19. எசேக்கியேல் தரிசனத்தில் தேசம் எதை பிரதிநிதித்துவம் செய்கிறது?
19 திரும்ப நிலைநாட்டப்பட்ட இஸ்ரவேல் தேசத்தையும் எசேக்கியேலின் தரிசனம் சித்தரிக்கிறது. தரிசனத்தின் இந்த அம்சம் எதை குறிக்கிறது? இஸ்ரவேல் தேசம் ஏதேனைப் போன்ற பரதீஸாகும் என திரும்ப நிலைநாட்டுவதற்கான மற்ற தீர்க்கதரிசனங்கள் முன்னறிவித்தன. (எசேக்கியேல் 36:34, 35) இன்று நாம் திரும்ப நிலைநாட்டப்பட்ட ஒரு ‘தேசத்தில்’ இருப்பதைப்போன்ற நிலையில் இருக்கிறோம்; அதுவும் ஒரு கருத்தில் ஏதேனைப் போன்றே இருக்கிறது. அதைப் போலவே, நம்முடைய ஆவிக்குரிய பரதீஸைப் பற்றியும் நாம் அடிக்கடி பேசுகிறோம். நம்முடைய ‘தேசத்தை’ தெரிந்தெடுக்கப்பட்ட கடவுளுடைய மக்கள் ‘செயல்படும் பிராந்தியமாக’ காவற்கோபுரம் வரையறுத்திருக்கிறது.b யெகோவாவின் ஓர் ஊழியர் எங்கு இருந்தாலும்சரி, இயேசு கிறிஸ்துவின் அடிச்சுவடுகளில் நடப்பதன் மூலம் உண்மையான வணக்கத்தை ஆதரிக்க முயற்சி செய்துவரும் வரையில், அவர் திரும்ப நிலைநாட்டப்பட்ட அந்தத் தேசத்தில் இருக்கிறார்.—1 பேதுரு 2:21.
20. எசேக்கியேல் தரிசனத்தில் ‘பரிசுத்த பங்கிலிருந்து’ என்ன நியமத்தைக் கற்றுக்கொள்ளலாம், இந்த நியமத்தை நாம் எவ்வாறு பொருத்தலாம்?
20 “பரிசுத்த பங்கு” என அழைக்கப்படும் நிலத்தின் பங்கைப் பற்றியென்ன? ஆசாரியத்துவத்தையும் நகரத்தையும் ஆதரிப்பதற்காக மக்கள் அதை நன்கொடையாக கொடுக்க வேண்டியிருந்தது. அதைப் போலவே, “தேசத்தின் ஜனங்களெல்லாரும்” அதிபதிக்காக நிலத்தின் ஒரு பகுதியை நன்கொடை கொடுக்க வேண்டும். இன்று இது எதை அர்த்தப்படுத்துகிறது? சம்பளம் கொடுக்கப்படும் பாதிரி வகுப்பாரால் கடவுளுடைய மக்கள் பாரமடைவதை இது நிச்சயமாகவே அர்த்தப்படுத்துவதில்லை. (2 தெசலோனிக்கேயர் 3:8) மாறாக, இன்று மூப்பர்களுக்கு கொடுக்கப்படும் ஆதரவு முக்கியமாக ஆவிக்குரிய விதமானது. இப்போது செய்யப்படும் வேலையில் உதவிசெய்வதையும், கீழ்ப்படிதலுள்ள மனப்பான்மையுடன் ஒத்துழைப்பதையும் இது உட்படுத்துகிறது. இருந்தாலும், எசேக்கியேலின் நாளில் இருந்ததைப்போல இந்த நன்கொடை ‘யெகோவாவுக்கு’ கொடுக்கப்படுகிறது, எந்த மனிதனுக்கும் அல்ல.—எசேக்கியேல் 45:1, 7, 16, NW.
21. எசேக்கியேல் தரிசனத்தில் தேசத்தைப் பங்கிடுவதிலிருந்து நாம் எதைக் கற்றுக்கொள்ளலாம்?
21 திரும்ப நிலைநாட்டப்பட்ட இத்தேசத்தில் அதிபதிக்கும் ஆசாரியர்களுக்கும் மட்டுமே நியமிக்கப்பட்ட இடங்கள் கொடுக்கப்படவில்லை. 12 கோத்திரங்களில் ஒவ்வொன்றுக்கும் ஒரு பங்கு இருப்பதை தேசத்தைப் பங்கிடும் விதம் காண்பிக்கிறது. (எசேக்கியேல் 47:13, 22, 23) ஆகவே, இன்று ஆவிக்குரிய பரதீஸில் திரள் கூட்டத்தினருக்கு ஓர் இடம் இருப்பது மட்டுமல்லாமல், கடவுளுடைய ராஜ்யத்தின் பூமிக்குரிய பகுதியைச் சுதந்தரிக்கையில் பூமியின் நிலத்தில் ஒரு பங்கையும் பெறுவர்.
22. (அ) எசேக்கியேல் தரிசனத்திலுள்ள நகரம் எதைக் குறிக்கிறது? (ஆ) அந்த நகரத்திற்கு எல்லா பக்கங்களிலும் வாசல்கள் இருப்பதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
22 கடைசியாக, இத்தரிசனத்தில் வரும் நகரம் எதைக் குறிக்கிறது? அது பரலோக நகரமல்ல. ஏனென்றால், அது ‘பரிசுத்தமாயிராத’ தேசத்தின் மத்தியில் இருக்கிறது. (எசேக்கியேல் 48:15-17) ஆகவே அது பூமிக்குரிய ஒன்றாகத்தான் இருக்கவேண்டும். அப்படியென்றால், ஒரு நகரம் என்பது என்ன? ஜனங்கள் ஒன்றுசேர்ந்து, வடிவமைத்து ஒழுங்கமைக்கப்பட்ட ஒன்றை உருவாக்கும் கருத்தை அது கொடுக்கிறது அல்லவா? ஆம். ஆகவே, நீதியுள்ள பூமிக்குரிய சமுதாயத்தின் பாகமாக இருக்கப்போகும் அனைவருக்கும் நன்மையளிக்கும் பூமிக்குரிய நிர்வாகத்தை அந்த நகரம் சித்தரிப்பதாக தெரிகிறது. வரவிருக்கும் ‘புதிய பூமியில்’ அது முழுமையாக செயல்படும். (2 பேதுரு 3:13) ஒவ்வொரு கோத்திரத்தாருக்கும் ஒன்று என எல்லா பக்கங்களிலுள்ள அந்நகரத்தின் வாசல்கள், எல்லாருக்கும் பொதுவானது என்பதை நன்றாக சித்தரித்துக் காட்டுகின்றன. இன்று, கடவுளுடைய ஜனங்கள் ஏதோ இரகசியமான, கள்ளத்தனமான நிர்வாகத்தின்கீழ் இல்லை. உத்தரவாதமுள்ள சகோதரர்கள், தங்களிடம் மற்றவர்கள் அணுகத்தக்கவர்களாய் இருக்க வேண்டும்; அவர்களை வழிநடத்தும் நியமங்கள் அனைவரும் நன்கு அறிந்தவை. அந்த நகரத்தை ஆதரிக்கும் நிலப்பகுதியில் அனைத்து கோத்திரத்தின் ஜனங்களும் வேலை செய்கிறார்கள். இந்த உண்மையானது, அப்படிப்பட்ட நிர்வாகத்தால் வழிநடத்தப்படும் உலகளாவிய ஏற்பாடுகளையும் நடவடிக்கைகளையும் வேறே ஆடுகளைச் சேர்ந்தோர் பொருளாதார விதத்திலும் ஆதரிக்கின்றனர் என்பதை நமக்கு நினைப்பூட்டுகிறது.—எசேக்கியேல் 48:19, 30-34.
23. பின்வரும் கட்டுரையில் நாம் எதைப் பற்றி சிந்திப்போம்?
23 ஆனால், ஆலயப் பிரகாரத்திலிருந்து ஓடிவரும் நதியைப் பற்றியென்ன? அது இன்றும் எதிர்காலத்திலும் எதை அர்த்தப்படுத்துகிறது என்பதே இத்தொடரில் வரும் கடைசியும் மூன்றாவதுமான கட்டுரையின் பொருள்.
[அடிக்குறிப்புகள்]
a உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டி ஆஃப் இண்டியாவால் பிரசுரிக்கப்பட்ட வெளிப்படுத்துதல்—அதன் மகத்தான உச்சக்கட்டம் சமீபித்துவிட்டது! என்ற புத்தகத்தில் பக்கம் 64, பாரா 22-ஐக் காண்க.
b காவற்கோபுரம், ஜூலை 1, 1995, பக்கம் 20, 21-ஐக் காண்க.
மறுபார்வை குறிப்புகள்
◻ எசேக்கியேல் கண்ட தரிசனத்தில் ஆலயம் எதைக் குறிக்கிறது?
◻ ஆலயத்தில் சேவிக்கும் ஆசாரியர்கள் யாரை குறிக்கின்றனர்?
◻ அதிபதி வகுப்பார் என்றால் என்ன, அதன் பொறுப்புகள் சில யாவை?
◻ எசேக்கியேல் தரிசனத்திலுள்ள தேசம் எது, 12 கோத்திரத்தாருக்கு எந்த அர்த்தத்தில் பங்கிட்டு கொடுக்கப்பட்டது?
◻ நகரம் எதை அடையாளப்படுத்துகிறது?
[பக்கம் 15-ன் வரைப்படம்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
எசேக்கியேல் தரிசனத்தில் வர்ணிக்கப்பட்டுள்ளபடி தேசத்தைப் பங்கிடுதல்
பன்னிரெண்டு கோத்திரங்கள்
மத்திய தரை கடல்
கலிலேயா கடல்
யோர்தான் நதி
உப்புக் கடல்
தாண்
ஆசேர்
நப்தலி
மனாசே
எப்பிராயீம்
ரூபன்
யூதா
அதிபதி
பென்யமின்
சிமியோன்
இசக்கார்
செபுலோன்
காத்
[வரைப்படம்]
பரிசுத்த பங்கின் விரிவாக்கம்
அ. “யெகோவாதாமே அங்கு இருக்கிறார்” (யெகோவா ஷம்மா); ஆ. நகரத்தின் விளைநிலம்
லேவியரின் பங்கு
யெகோவாவின் பிரகாரம்
ஆசாரியர்களின் பங்கு
ஆ அ ஆ