அதிகாரம் ஏழு
உலகை மாற்றிய அந்த நான்கு வார்த்தைகள்
சாந்து பூசப்பட்ட சுவரில் எழுதப்பட்டன நான்கு சாதாரண வார்த்தைகள். இருந்தாலும் அவை வல்லமைவாய்ந்த ராஜாவையே கதிகலங்க வைத்துவிட்டன. இரண்டு ராஜாக்களின் அரியணை பறிக்கப்படும், அவர்களில் ஒருவர் இறப்பார், உலக மகா வல்லரசு ஒன்று முடிவுக்கு வரும் என்பவற்றை அவை அறிவித்தன. உயர்வாய் மதிக்கப்பட்ட மத சமுதாயத்தினரை அவை தலைகுனிய வைத்துவிட்டன. மிக முக்கியமாய், அவை யெகோவாவின் உண்மை வணக்கத்தை உயர்த்தி, அவரது பேரரசுரிமையை மீண்டும் ஊர்ஜிதப்படுத்தின; அதுவும் பெரும்பாலானவர்கள் இந்த இரண்டையுமே மதிக்காத சமயத்தில். அதுமட்டுமா, இன்றைய உலக நிலைமைகளையும் அவை படம் பிடித்துக் காட்டின! நான்கே வார்த்தைகளுக்கு இவ்வளவு அர்த்தமா, அது எப்படி? எப்படியென பார்க்கலாம்.
2 தானியேல் 4-ஆம் அதிகாரத்தில் விவரிக்கப்பட்டிருக்கும் சம்பவங்கள் நடந்து பல பத்தாண்டுகள் ஓடிவிட்டன. பொ.ச.மு. 582-ல் கர்வம்பிடித்த நேபுகாத்நேச்சாரின் உயிர்பிரிந்தது. பாபிலோனிய ராஜாவாக அவரது 43 வருட ஆட்சியும் முடிவுக்கு வந்தது. அவரது வம்சத்தைச் சேர்ந்த அநேகர் அடுத்தடுத்து ராஜாக்கள் ஆயினர், ஆனால் அவர்களது ஆட்சி நீடிக்கவில்லை. ஒன்று அகால மரணமடைந்தனர் அல்லது கொல்லப்பட்டனர். இறுதியாக நபோனிடஸ் என்பவர் கலகம் செய்து அரியணையைக் கைப்பற்றினார். சின் என்ற சந்திரக் கடவுளின் பிரதான ஆசாரியையின் மகனான நபோனிடஸ், பாபிலோனிய அரச வம்சத்தைச் சேர்ந்தவரல்ல. அவர் தன் ஆட்சியை சட்டப்பூர்வமாக்க நேபுகாத்நேச்சாரின் மகளை திருமணம் செய்து, தங்கள் மகனான பெல்ஷாத்சாரை உடன் அரசராக்கி, அவ்வப்போது பாபிலோனை அவரிடம் வருடக்கணக்காய் ஒப்படைத்துச் சென்றுவிட்டதாய் சில புத்தகங்கள் சொல்கின்றன. அப்படியென்றால் பெல்ஷாத்சார், நேபுகாத்நேச்சாரின் பேரனாய் இருந்திருக்க வேண்டும். தன் தாத்தாவின் அனுபவத்திலிருந்து, யெகோவாவே உன்னதக் கடவுள் என்றும் அவரால் எந்த ராஜாவையும் தாழ்த்த முடியும் என்றும் இவர் கற்றுக்கொண்டாரா? அதுதான் இல்லை!—தானியேல் 4:37.
எல்லை மீறிய விருந்து
3 தானியேல் 5-ம் அதிகாரம் ஒரு விருந்தைப் பற்றி பேச ஆரம்பிக்கிறது. “பெல்ஷாத்சார் என்னும் ராஜா தன் பிரபுக்களில் ஆயிரம்பேருக்கு ஒரு பெரிய விருந்துசெய்து, அந்த ஆயிரம் பேருக்கு முன்பாகத் திராட்சரசம் குடித்தான்.” (தானியேல் 5:1) ராஜாவின் மனைவிகளையும் வைப்பாட்டிகளையும் சேர்த்து, இவ்வளவு பேரும் உட்காருவதற்கு எவ்வளவு பெரிய அறை தேவைப்பட்டிருக்குமென நீங்களே கற்பனை செய்து பாருங்கள். ஒரு அறிஞர் சொல்வதாவது: “பாபிலோனில் விருந்துகள் தடபுடலாக நடந்தன, ஆனால் முடிவில் குடித்து வெறித்துப்போவார்கள். வெளிநாட்டு திராட்சரசமும் விதவிதமான பதார்த்தங்களும் டேபிளில் குவிந்திருந்தன. அறையெங்கும் நறுமணம் வீசியது; பாடகர்களும் இசைக் கலைஞர்களும் வந்திருந்தோரை மகிழ்வித்தனர்.” எல்லாருக்கும் தெரியும் இடத்தில் அமர்ந்தபடி பெல்ஷாத்சார் மது அருந்தினார், அருந்தினார், அருந்திக்கொண்டே இருந்தார்.
4 இந்த இரவில் அதாவது பொ.ச.மு. 539, அக்டோபர் 5/6-ன் இரவில் பாபிலோனியர்கள் இந்தளவு குடித்துக் கும்மாளமடித்தது வியப்பளிக்கிறது. தேசத்தில் போர் நடந்துகொண்டிருந்தது, காரியங்கள் எதுவும் இவர்களுக்கு சாதகமாக இல்லை. மேதிய-பெர்சிய படைகளிடம் நபோனிடஸ் அப்போதுதான் தோற்றுப்போயிருந்தார். இதனால் பாபிலோனின் தென்மேற்கே அமைந்திருந்த பார்ஸிபாவில் அடைக்கலம் புகுந்திருந்தார். இப்போது கோரேசின் படைகள் பாபிலோனைத் தொட்டாற்போலேயே முகாமிட்டிருந்தன. அப்படியிருந்தும் பெல்ஷாத்சாரும் அவரது பிரபுக்களும் அதை பொருட்படுத்தியதாகவே தெரியவில்லை. அவர்கள் நகரம்தான் தகர்க்க முடியாத கோட்டையாயிற்றே(?)! ஐப்பிராத்து மகாநதி நகரில் ஓடியது. அதன் தண்ணீர், மலைபோல் நின்ற பாபிலோனின் மாபெரும் மதில்களைச் சுற்றி வெட்டப்பட்ட ஆழமான அகழிகளிலும் பாய்ந்தோடியது. ஆயிரம் ஆண்டுகளில் எந்த எதிரியாலும் பாபிலோனை நெருங்கக்கூட முடியவில்லை. ஆக கவலைப்படுவானேன்? தங்களது களியாட்டத்தின் சப்தத்தைக் கேட்டாவது வெளியேயிருந்த எதிரிகள், இவர்கள் எந்த சலசலப்புக்கும் அஞ்சாதவர்கள் என புரிந்துகொண்டு தளர்ந்துபோவார்கள் என பெல்ஷாத்சார் நினைத்திருக்கலாம்.
5 பெல்ஷாத்சாருக்கு போதை தலைக்கேற வெகு நேரம் எடுக்கவில்லை. நீதிமொழிகள் 20:1 சொல்லும் விதமாக, “திராட்சரசம் பரியாசஞ்செய்யும்.” ராஜா திராட்சரசத்தால் வினைமையான பாவம் செய்தார். விருந்துக்காக யெகோவாவின் ஆலயத்தைச் சேர்ந்த பரிசுத்த பாத்திரங்களை எடுத்துவர அவர் ஆணையிட்டார். நேபுகாத்நேச்சார் எருசலேமைக் கைப்பற்றியபோது இவற்றை கொள்ளைப் பொருட்களாக எடுத்துவந்திருந்தார். இவை உண்மை வணக்கத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். முன்பு எருசலேம் ஆலயத்தில் அவற்றைப் பயன்படுத்தும் உரிமைபெற்ற யூத ஆசாரியர்கள்கூட, தங்களை சுத்தமாக வைத்துக்கொள்ளும் பட்சத்திலேயே இவற்றை பயன்படுத்த வேண்டுமென எச்சரிக்கப்பட்டார்கள்.—தானியேல் 5:2; ஒப்பிடுக: ஏசாயா 52:11.
6 பெல்ஷாத்சார் அதோடு நிற்கவில்லை, இன்னும் துடுக்கோடு செயல்பட நினைத்தார். “ராஜாவும் அவனுடைய பிரபுக்களும் அவனுடைய மனைவிகளும் அவனுடைய வைப்பாட்டிகளும் . . . திராட்சரசம் குடித்து, பொன்னும் வெள்ளியும் வெண்கலமும் இரும்பும் மரமும் கல்லுமாகிய தேவர்களைப் புகழ்ந்தார்கள்.” (தானியேல் 5:3, 4) ஆகவே பெல்ஷாத்சார் தனது பொய்க் கடவுட்களை யெகோவாவுக்கும்மேல் உயர்த்த விரும்பினார்! இது பாபிலோனியர்களின் பரம்பரை குணம்போல் தெரிகிறது. அவர்கள் சிறைப்பிடித்து வந்த யூதர்களை கேவலமாக நடத்தி, அவர்களது வணக்கத்தை பரிகாசம் செய்து, அவர்களுடைய நேசத்திற்குரிய தாயகத்திற்குத் திரும்பும் நம்பிக்கையையே பறித்துப்போட்டார்கள். (சங்கீதம் 137:1-3; ஏசாயா 14:16, 17) போதையிலிருந்த இந்த ராஜா, நாடுகடத்தப்பட்டவர்களை அவமானப்படுத்தி அவர்களது கடவுளை இழிவுபடுத்தினால், மனைவிமாரும் அதிகாரிகளும் தன் வீரதீரத்தை மெச்சுவார்கள் என நினைத்திருக்கலாம். a ஏதோ தன் அதிகாரத்தைக் காட்டிவிட்டோம் என்ற நினைப்பில் பெல்ஷாத்சார் சற்று பெருமிதத்தில் திளைத்திருக்கலாம், ஆனால் அது நிலைக்கவில்லை.
சுவரில் கையெழுத்து
7 “அந்நேரத்திலே மனுஷ கைவிரல்கள் தோன்றி, விளக்குக்கு எதிராக ராஜ அரமனையின் சாந்து பூசப்பட்ட சுவரிலே எழுதிற்று; எழுதின அந்தக் கையுறுப்பை ராஜா கண்டான்” என ஏவப்பட்ட பதிவு சொல்கிறது. (தானியேல் 5:5) என்னே ஒரு பிரமிப்பூட்டும் காட்சி! எங்கிருந்தோ திடீரென ஒரு கை தோன்றி, வெளிச்சமிருந்த சுவர் பகுதிக்கு அருகில் அந்தரத்தில் தொங்குகிறது. திடீரென விருந்தில் மயான அமைதி; அனைவரது கண்களும் இந்தக் கைமேல். இது சாந்து பூசப்பட்ட சுவரின்மீது மர்மமான செய்தியை எழுதுகிறது. b அது அந்தளவு திகிலூட்டுவதாய் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவிட்டதால், உடனடி அழிவை எச்சரிக்க “சுவரில் கையெழுத்து” (“the handwriting on the wall”) என்ற பதத்தை இன்றுவரை சில மொழியினர் பயன்படுத்துகிறார்கள்.
8 தன்னையும் தன் கடவுட்களையும் யெகோவாவுக்கும்மேல் உயர்த்த முற்பட்ட இந்தக் கர்வம்பிடித்த ராஜாவை இது எப்படி பாதித்தது? “அப்பொழுது ராஜாவின் முகம் வேறுபட்டது; அவனுடைய நினைவுகள் அவனைக் கலங்கப்பண்ணினது; அவனுடைய இடுப்பின் கட்டுகள் தளர்ந்தது, அவனுடைய முழங்கால்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டது.” (தானியேல் 5:6) பெல்ஷாத்சார் அனைவர் முன்னும் ராஜ கம்பீரத்தோடும் பகட்டோடுமே காட்சியளிக்க விரும்பினார். ஆனால் அந்தோ, அரண்டுபோய் பயத்தின் சின்னமாகவே நின்றார்; அவர் முகம் வெளிறிப்போயிற்று, தொடை கிடுகிடுவென நடுங்கியது, உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால்வரை பயங்கரமான உதறல் ஏற்பட்டதால் அவரது முழங்கால்கள் மோதிக்கொண்டன. “மேட்டிமையானவர்களைத் தாழ்த்த, உம்முடைய கண்கள் அவர்களுக்கு விரோதமாய்த் திருப்பப்பட்டிருக்கிறது” என தாவீது யெகோவாவிற்கு ஏறெடுத்த பாடல்வரி எவ்வளவு உண்மையாகிவிட்டது!—2 சாமுவேல் 22:1, 28; ஒப்பிடுக: நீதிமொழிகள் 18:12.
9 பெல்ஷாத்சார் காட்டியது தெய்வீக பயமல்ல என்பது கவனிக்கவேண்டிய குறிப்பு. தெய்வீக பயமென்பது யெகோவாவிற்கு மிகுந்த பயபக்தி காட்டுவதாகும்; இது ஞானத்தின் ஆரம்பம். (நீதிமொழிகள் 9:10) பெல்ஷாத்சார் காட்டியதோ ஆரோக்கியமற்ற பயம்; நடுநடுங்கிப்போன அரசருக்கு இப்பயத்தால் ஞானமேதும் வரவில்லை. c சற்று நேரத்துக்குமுன் தான் இழிவுபடுத்திய கடவுளிடம் மன்னிப்புக் கேட்பதற்குப் பதிலாக, அவர் “ஜோசியரையும் கல்தேயரையும் குறிசொல்லுகிறவர்களையும்” வரச்சொல்லி உரத்த சத்தமிட்டார். அதன்பின், “எழுத்தை வாசித்து, இதின் அர்த்தத்தை எனக்கு வெளிப்படுத்துகிறவன் எவனோ, அவன் இரத்தாம்பரமும் கழுத்திலே பொற்சரப்பணியும் தரிக்கப்பட்டு, ராஜ்யத்திலே மூன்றாம் அதிபதியாய் இருப்பான்” என்றும் அறிவித்தார். (தானியேல் 5:7) ராஜ்யத்தின் மூன்றாம் அதிபதிக்கு மிகுந்த அதிகாரமிருக்கும்; அரசாண்டு வந்த இரு ராஜாக்களான நபோனிடஸ் மற்றும் பெல்ஷாத்சாருக்கு அடுத்த அதிபதியாயிற்றே! அப்பதவி பெல்ஷாத்சாரின் மூத்த மகனுக்கு உரிய ஒன்றாகவே இருந்திருக்க வேண்டும். அதையே அளிக்க முன்வந்தாரென்றால், இந்த அற்புத செய்தியின் அர்த்தத்தைத் தெரிந்துகொள்ள ராஜா எந்தளவு துடித்திருக்க வேண்டும்!
10 ஞானிகள் அந்தப் பிரமாண்டமான அறையிலே வரிசையாக நுழைந்தார்கள். திரும்பிய பக்கமெல்லாம் ஆலயங்கள் கொண்ட, பொய் மதத்தில் ஊறிப்போன பாபிலோனில் ஞானிகளுக்கு பஞ்சமேயில்லை. சகுனம் சொல்லி, மர்ம எழுத்துக்களுக்கு விளக்கமளிப்பதாய் சொல்லிக்கொண்டோர் நிச்சயம் ஏராளமாய் இருந்தனர். இந்த ஞானிகள் ராஜாவின் அறிவிப்பைக் கேட்டு அகம் குளிர்ந்திருப்பார்கள். அனைத்து முக்கிய பிரமுகர்களுக்கு முன்பாகவும் தங்கள் திறமையைக் காட்டி, ராஜாவின் பாராட்டைப் பெற்று, மிக உயர்ந்த பதவியில் அமர என்னே ஒரு வாய்ப்பு! இருந்தும் அவர்கள் படுதோல்வி அடைந்தனர்! “அவர்கள் அந்த எழுத்தை வாசிக்கவும், அதின் அர்த்தத்தை ராஜாவுக்கு அறிவிக்கவும் முடியாமற்போனார்கள்.” d—தானியேல் 5:8, தி.மொ.
11 பாபிலோனிய ஞானிகளால் அந்த வார்த்தைகளின் எழுத்துக்களைக்கூட அடையாளங்காண முடியவில்லையா என தெரியவில்லை. அப்படியிருந்தால், பழிபாவங்களுக்கு அஞ்சாத இவர்கள், தங்கள் இஷ்டப்படி அதை வாசித்து, ராஜாவை மயக்கும் விதத்தில்கூட சொந்தமாய் விளக்கம் சொல்வதற்கு போதிய வாய்ப்பிருந்தது. ஒருவேளை அந்த எழுத்துக்களை மிகத் தெளிவாக அவர்கள் அடையாளம் கண்டுகொண்டதற்கும் சாத்தியம் உண்டு. இருந்தாலும் அரமிய, எபிரெய மொழிகள் உயிர் எழுத்துக்களின்றி எழுதப்பட்டதால், ஒவ்வொரு வார்த்தைக்கும் பல அர்த்தங்களை ஊகித்திருக்க முடியும். அப்படியென்றால், இந்தப் பல அர்த்தங்களில் எது சரியென ஞானிகளுக்குத் தெரிந்திருக்காது. அப்படியே தெரிந்திருந்தாலும், அந்த நான்கு வார்த்தைகளும் இதைத்தான் அர்த்தப்படுத்துகின்றன என திட்டவட்டமாக சொல்லுமளவுக்கு அவற்றின் அர்த்தத்தை அவர்களால் புரிந்துகொள்ள முடிந்திருக்காது. எதுவாயிருந்தாலும், ஒன்றை மட்டும் மறுக்கவே முடியாது: பாபிலோனிய ஞானிகள் படுதோல்வி அடைந்தனர்!
12 ஆகவே இந்த ஞானிகள் ஏமாற்றுப்பேர்வழிகள் என்பதும், மதிப்பு மரியாதையோடு கருதப்பட்ட இவர்களது வணக்கமுறை போலி என்பதும் தெளிவானது. இவர்களை நம்பியவர்கள் ஏமாந்ததுதான் மிச்சம்! இவர்கள்மேல் வைத்த நம்பிக்கையெல்லாம் வீண் என பெல்ஷாத்சாருக்கு புரிந்தபோது, அவருக்கு குலைநடுக்கம் அதிகமானது, முகம் இன்னும் வெளுத்தது, இவரது பிரபுக்களும் “திகில்கொண்டார்கள்.” e—தானியேல் 5:9, தி.மொ.
விவேகி வரவழைக்கப்படுகிறார்
13 இந்த இக்கட்டான சமயத்தில், விருந்தில் ஏற்பட்ட அமளியைக் குறித்துக் கேள்விப்பட்ட ராணி—ஒருவேளை அரசரின் தாயார்—விருந்து அறைக்குள் விரைகிறார். சுவரில் எழுதப்பட்டதை விளக்குவதற்கு திறமையுள்ள ஒருவரை அவர் அறிந்திருந்தார். பல பத்தாண்டுகளுக்கு முன்பு இந்த ராணியின் தகப்பனான நேபுகாத்நேச்சார் தானியேலை எல்லா ஞானிகளுக்கும் அதிகாரியாக நியமித்திருந்தார். அவர் “விசேஷித்த ஆவியும் அறிவும் விவேகமும்” பெற்றவரென்பது ராணிக்கு ஞாபகம் இருந்தது. பெல்ஷாத்சார் தானியேலை அறியாதிருந்ததால், நேபுகாத்நேச்சாரின் மறைவுக்குப் பின் தானியேல் தனது உயர்ந்த அரச பதவியை இழந்திருக்கலாம் என தெரிகிறது. ஆனால் தானியேல் பேரையும் புகழையும் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. 90 வயதை தாண்டிவிட்ட இந்தச் சமயத்திலும் தொடர்ந்து யெகோவாவை உண்மையோடு சேவித்துவந்தார். பாபிலோனுக்கு நாடுகடத்தப்பட்டு சுமார் 80 ஆண்டுகள் ஆகிவிட்டபோதும், அவர் இன்னமும் தன் எபிரெய பெயராலேயே அறியப்பட்டார். ராணியும் அவரை தானியேல் என்றே குறிப்பிட்டாரேயொழிய, ஒரு சமயத்தில் அவருக்கு கொடுக்கப்பட்ட பாபிலோனிய பெயரால் அழைக்கவில்லை. சொல்லப்போனால், “இப்போதும் தானியேல் அழைக்கப்படட்டும், அவன் அர்த்தத்தை வெளிப்படுத்துவான்” என்றும் ராஜாவைத் தூண்டினார் ராணி.—தானியேல் 1:7; 5:10-12, தி.மொ.
14 பெல்ஷாத்சாரின் உத்தரவின்கீழ் தானியேல் அவருக்குமுன் ஆஜரானார். இந்த யூதனிடம் தயவுக்காக கெஞ்சுவது வெட்கக்கேடாக இருந்தது ராஜாவுக்கு; ஏனெனில் இவரது கடவுளைத்தான் சற்று முன்னர் இழிவுபடுத்தியிருந்தார். இருந்தாலும் பெல்ஷாத்சார் தானியேலை உச்சிகுளிர வைக்க முயன்றார். மர்மமான வார்த்தைகளைப் படித்து விளக்கினால் அதே பரிசை, அதாவது மூன்றாம் அதிபதியாகும் பரிசை அளிப்பதாக வாக்குறுதியளித்தார். (தானியேல் 5:13-16) தானியேல் சுவரில் எழுதப்பட்டதை ஏறெடுத்துப் பார்த்தார், அர்த்தத்தைப் புரிந்துகொள்ள பரிசுத்த ஆவி அவருக்கு உதவியது. யெகோவா தேவன் தந்த அழிவின் செய்தி அது! தலைக்கனம் பிடித்த இந்த ராஜாவின் முகத்துக்கு நேராக, அதுவும் அவரது மனைவிகளுக்கும் பிரபுக்களுக்கும் எதிரே எப்படி இக்கடும் தண்டனைத் தீர்ப்பை சொல்வது? தானியேலின் தர்மசங்கடமான நிலையை யோசித்துப் பாருங்கள்! செல்வமும் பதவியும் தருவதாய் சொல்லி ஆசைகாட்டிய ராஜாவின் வசிய பேச்சில் தானியேல் மயங்கிவிடுவாரா? யெகோவாவினுடைய தீர்ப்பின் கடுமையை இந்தத் தீர்க்கதரிசி தணித்துச் சொல்வாரா?
15 தானியேல் தைரியமாக இப்படிப் பேசினார்: “உம்முடைய வெகுமானங்கள் உம்மிடத்திலேயே இருக்கட்டும்; உம்முடைய பரிசுகளை வேறொருவனுக்குக் கொடும்; இந்த எழுத்தை நான் ராஜாவுக்கு வாசித்து, இதின் அர்த்தத்தைத் தெரிவிப்பேன்.” (தானியேல் 5:17) அடுத்ததாக தானியேல் நேபுகாத்நேச்சாரின் சிறப்பைப் பற்றி பேசினார். அந்தளவு வல்லமைபடைத்த ராஜாவாக இருந்ததால் நினைத்தவரை கொல்லவும், தாக்கவும், உயர்த்தவும், தாழ்த்தவும் அவருக்கு அதிகாரம் இருந்தது. என்றாலும், ‘உன்னதமான தேவனாகிய’ யெகோவாவே நேபுகாத்நேச்சாருக்கு சிறப்பை அருளினார் என்பதை தானியேல் பெல்ஷாத்சாருக்கு நினைவுபடுத்தினார். அந்த வல்லமைமிக்க ராஜா செருக்கடைந்த சமயத்திலும் யெகோவாவே அவரைத் தாழ்த்தினார். ஆம், “உன்னதமான தேவன் மனுஷரின் ராஜ்யத்தில் ஆளுகைசெய்து, தமக்குச் சித்தமானவனை அதின்மேல் அதிகாரியாக்குகிறார்” என்பதை ஒப்புக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது நேபுகாத்நேச்சாருக்கு.—தானியேல் 5:18-21.
16 பெல்ஷாத்சார் ‘இதையெல்லாம் அறிந்திருந்தார்.’ இருந்தாலும் அவர் படிப்பினையை கற்றுக்கொள்ளவே இல்லை. சொல்லப்போனால், கர்வம்கொண்டு ஆகாததைச் செய்த நேபுகாத்நேச்சாருக்கும் ஒரு படி மேல் சென்று, யெகோவாவிற்கு எதிரான பொல்லாத பாதகத்தை துணிந்து செய்தார். ராஜாவின் பாவத்தை தானியேல் அம்பலமாக்கினார். மேலும், பொய் மதத்தினரின் அந்தக் கூட்டத்திற்கு முன்பாக, பொய் கடவுட்கள் “காணாமலும் கேளாமலும் உணராமலும்” இருப்பதாக அவர் பெல்ஷாத்சாரிடம் தைரியமாக சொன்னார். இந்தப் பயனற்ற கடவுட்களுக்கு நேர் மாறாக, ‘உமது சுவாசத்தை வைத்திருக்கிற’ தேவனே யெகோவா என்றும் இந்தத் தைரியமான தீர்க்கதரிசி கூறினார். இன்றுவரை, உயிரற்ற பொருட்களால் மக்கள் தெய்வங்களை உண்டுபண்ணுகிறார்கள், பணத்தையும் வேலையையும் கௌரவத்தையும், ஏன் சுகபோகத்தையும்கூட தெய்வமாக்குகின்றனர். ஆனால் இவை எவற்றாலும் ஜீவனளிக்க முடியாது. நாம் இன்று உயிர்வாழ்வதற்கு காரணம் யெகோவா மட்டுமே. நமது ஒவ்வொரு மூச்சும் அவரையே சார்ந்திருக்கிறது.—தானியேல் 5:22, 23; அப்போஸ்தலர் 17:24, 25.
கிடைத்தது விடை புதிருக்கு
17 பாபிலோனிலிருந்த எந்த ஞானியாலும் செய்ய முடியாததை வயது முதிர்ந்த தீர்க்கதரிசி இப்போது செய்ய ஆரம்பித்தார். சுவரில் எழுதப்பட்ட வார்த்தைகளை வாசித்து அவற்றின் அர்த்தத்தை தானியேல் விளக்கினார். அவ்வார்த்தைகள், “மெனே, மெனே, தெக்கேல், உப்பார்சின் என்பதே.” (தானியேல் 5:24, 25) அவற்றின் அர்த்தம் என்ன?
18 அவற்றின் நேரடியான அர்த்தம், “ஒரு மைனா, ஒரு மைனா, ஒரு சேக்கல், அரை சேக்கல்.” ஒவ்வொரு வார்த்தையும், நாணயத்தின் மதிப்பைக் குறிக்கிறது. அவற்றின் மதிப்பின் அடிப்படையில் இறங்குவரிசையில் குறிப்பிடப்பட்டுள்ளன. என்னே ஒரு புரியாப் புதிர்! பாபிலோனிய ஞானிகளால் இந்த எழுத்துக்களை ஒருவேளை வாசிக்க முடிந்திருந்தாலும், அவற்றின் அர்த்தத்தை ஏன் விளக்க முடியவில்லை என இப்போது தெளிவாய் புரிகிறது அல்லவா?
19 கடவுளுடைய பரிசுத்த ஆவியின் உதவியால் தானியேல் இவ்வாறு விளக்கினார்: “இந்த வசனத்தின் அர்த்தமாவது: மெனே என்பதற்கு, தேவன் உன் ராஜ்யத்தை மட்டிட்டு, அதற்கு முடிவுண்டாக்கினார்.” (தானியேல் 5:26) முதல் வார்த்தையான மெனே என்பது, வாசிப்பவர் பயன்படுத்தும் உயிரெழுத்துக்களைப் பொறுத்து “மைனா” என்பதாயும் இருந்திருக்கலாம்; “எண்ணிவிடுதல்” அல்லது “கணக்கிடுதல்” என்பதற்கான ஒரு அரமிய வார்த்தையாகவும் இருந்திருக்கலாம். நாடுகடத்தப்பட்ட யூதர்களுக்கு விரைவில் விடிவுகாலம் பிறக்கும் என தானியேல் நன்கு அறிந்திருந்தார். முன்னறிவிக்கப்பட்ட 70 வருட காலப்பகுதியில் ஏற்கெனவே 68 வருடங்கள் ஓடிவிட்டன. (எரேமியா 29:10) காரியங்களை கன கச்சிதமான நேரத்தில் நிறைவேற்றுபவரான யெகோவா உலக வல்லரசான பாபிலோனின் நாட்களை எண்ணிவிட்டிருந்தார். பெல்ஷாத்சாரின் விருந்துக்கு வந்தவர்கள் எவரும் நினைத்ததைவிட வெகு சமீபத்திலிருந்தது அதன் அழிவு. சொல்லப்போனால், பெல்ஷாத்சாருக்கு மட்டுமல்ல அவரது தகப்பனான நபோனிடஸுக்கும் முடிவு நெருங்கிவிட்டது. இதன் காரணமாகவே “மெனே” என்ற வார்த்தை இருமுறை எழுதப்பட்டிருக்கலாம்—அதாவது இந்த இரு ராஜாக்களின் முடிவையுமே அறிவிப்பதற்காக இருக்கலாம்.
20 மறுபட்சத்தில், “தெக்கேல்” என்பது ஒருமுறை மட்டும், ஒருமையில் எழுதப்பட்டது. இது முக்கியமாய் பெல்ஷாத்சாருக்காகவே எழுதப்பட்டதைக் குறிக்கலாம். அவர் தனிப்பட்ட விதமாய் யெகோவாவிற்கு பயங்கர அவமதிப்பை உண்டாக்கியிருந்ததால் இது பொருத்தமானதும்கூட. அந்த வார்த்தையின் நேரடி அர்த்தம் “சேக்கல்”; வேறு உயிரெழுத்துக்களைச் சேர்த்தால் “நிறுக்கப்பட்டது” என்றும் அர்த்தப்படுத்தலாம். ஆகவே தானியேல் பெல்ஷாத்சாருக்குச் சொன்னதாவது: ‘தெக்கேல் என்பதற்கு, நீ தராசிலே நிறுக்கப்பட்டு, குறையக் காணப்பட்டாய் என்று அர்த்தமாம்.’ (தானியேல் 5:27) யெகோவாவின் கண்களில், தேசங்கள் அனைத்தும் தராசிலே படியும் தூசிபோல அவ்வளவு அற்பமானவை. (ஏசாயா 40:15) அவர் செய்யவிருப்பதைத் தடுப்பதற்கு அவற்றிற்கு ஏது வல்லமை! தேசங்களின் கதியே இப்படியென்றால், கர்வம்பிடித்த ஒரேவொரு ராஜா எம்மூலைக்கு? பெல்ஷாத்சார் தன்னை சர்வலோக பேரரசருக்கும் மேலாக உயர்த்திக்கொள்ள முயன்றார். இந்தச் சாதாரண மனிதன் யெகோவாவையே கேவலப்படுத்தி உண்மை வணக்கத்தை பரிகசிக்குமளவுக்கு துணிந்துவிட்டார், ஆனாலும் ‘குறையக் காணப்பட்டார்.’ ஆம், பெல்ஷாத்சாரின் வாசலண்டைக்கே வந்துவிட்ட அழிவு அவருக்கு முற்றிலும் தகுந்த ஒன்றுதான்!
21 சுவரில் எழுதப்பட்ட கடைசி வார்த்தை “உப்பார்சின்.” தானியேல் அதை “பெரேஸ்” என ஒருமையில் வாசித்தார். ஒருவேளை இரு ராஜாக்களில் ஒருவரே அங்கிருக்க, அவரிடம் மட்டுமே பேசியதால் ஒருமையில் சொல்லியிருப்பார். யெகோவா அளித்த சிக்கலான புதிரின் உச்சக்கட்டமே இந்தக் கடைசி வார்த்தை. இவ்வார்த்தை, மூன்று அர்த்தங்களைக் கொடுத்து ஜாலம்புரிந்தது. சொல்லர்த்தமாக “உப்பார்சின்” என்பதற்கு “அரை சேக்கல்” என்று அர்த்தம். உயிரெழுத்துக்களைப் பொறுத்து அதற்கு “பிரிவுகள்,” “பெர்சியர்கள்” என்னும் வேறு இரு அர்த்தங்களும் சொல்லலாம். ஆகவே தானியேல் முன்னறிவித்ததாவது: “பெரேஸ் என்பதற்கு, உன் ராஜ்யம் பிரிக்கப்பட்டு, மேதியருக்கும் பெர்சியருக்கும் கொடுக்கப்பட்டது என்றும் அர்த்தமாம்.”—தானியேல் 5:28.
22 இவ்வாறு புதிர் விடுவிக்கப்பட்டது. மகா வல்லமைபடைத்த பாபிலோன் விரைவில் மேதிய-பெர்சிய படைகளிடம் தோல்வி காணவிருந்தது. பெல்ஷாத்சார் இந்த அழிவுச் செய்தியைக் கேட்டு மனமுடைந்தாலும், கொடுத்த வாக்கைக் காப்பாற்றினார். அவரது கட்டளைப்படியே, ஊழியர்கள் தானியேலுக்கு இரத்தாம்பரத்தை கொடுத்து, அவருடைய கழுத்தில் பொற்சரப்பணியை தரிப்பித்து, ராஜ்யத்திலே அவரை மூன்றாம் அதிபதி என்று பறைசாற்றினர். (தானியேல் 5:29) இவ்வாறு கௌரவிக்கப்படுவதை தானியேல் மறுக்கவில்லை, ஏனெனில் அவை யெகோவாவிற்கு உரிய கனத்தை ஈட்டித்தந்தன. யெகோவாவின் கோபத்தைத் தணிக்க அவரது தீர்க்கதரிசியை கௌரவிப்பதே வழியென பெல்ஷாத்சார் நினைத்திருக்கலாம். அப்படி அவர் நினைத்திருந்தாலும், காலம் கடந்துவிட்டது!
பாபிலோனின் வீழ்ச்சி
23 பெல்ஷாத்சாரும் அவரது அரசவை அதிகாரிகளும் தங்கள் தெய்வங்களைப் புகழ்ந்து, திராட்சரசம் குடித்துக்கொண்டிருக்கையில், மாளிகைக்கு வெளியே இருட்டில் அதிசயிக்கத்தக்க காரியங்கள் நடந்துகொண்டிருந்தன. கிட்டத்தட்ட இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர் ஏசாயா முன்னறிவித்தது அப்போது நிறைவேறிக்கொண்டிருந்தது. பாபிலோனைக் குறித்து யெகோவா இவ்வாறு முன்னறிவித்திருந்தார்: “அதினாலே உண்டான தவிப்பையெல்லாம் ஒழியப்பண்ணினேன்.” அந்தப் பொல்லாத நகரத்தார் கடவுளின் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களை ஒடுக்கிய காலம் முடிவுக்கு வரவிருந்தது. எப்படி? அதே தீர்க்கதரிசனம், ‘ஏலாமே எழும்பு; மேதியாவே முற்றுகைபோடு’ என்றது. தீர்க்கதரிசியாகிய ஏசாயாவின் நாட்களுக்குப் பிறகு ஏலாம் பெர்சியாவின் பாகமானது. பெல்ஷாத்சார் விருந்தை ஏற்பாடு செய்வார் எனவும் அதே ஏசாயா தீர்க்கதரிசனத்தில் முன்னறிவிக்கப்பட்டது. விருந்து நடந்த அச்சமயத்தில் பெர்சியாவும் மேதியாவும் பாபிலோனுக்கு எதிராக ‘எழும்பி’ அதை ‘முற்றுகையிட’ கூட்டணி சேர்ந்திருந்தன.—ஏசாயா 21:1, 2, 5, 6.
24 சொல்லப்போனால், இப்படைகளை நடத்திவந்த தலைவனது பெயர்கூட முன்னறிவிக்கப்பட்டது. அவர் கையாளவிருந்த யுத்த தந்திரங்களின் முக்கிய விவரங்களும் சொல்லப்பட்டன. பாபிலோனுக்கு எதிராக படையெடுக்க கோரேசு என்பவரை யெகோவா அபிஷேகம் செய்யப்போவதாக ஏசாயா சுமார் 200 வருடங்களுக்கு முன்னதாக அறிவித்தார். கோரேசு தாக்குதல் நடத்துகையில், அவர் பாதையிலுள்ள எல்லா தடைகளும் நீக்கப்படும். பாபிலோனின் தண்ணீர் ‘வெட்டாந்தரையாகும்,’ அதன் பலத்த கதவுகள் திறந்துகிடக்கும். (ஏசாயா 44:27–45:3) முன்னறிவித்தபடியே அனைத்தும் நடந்தன. கோரேசின் படைகள் ஐப்பிராத்து நதியை திசைதிருப்பி, நதிப்படுகையின்மீது நடந்துசெல்வதற்கு சௌகரியமாய் தண்ணீரின் மட்டத்தைக் குறைத்தன. அஜாக்கிரதையான காவலாளிகள் பாபிலோனின் மதில் கதவுகளை திறந்து போட்டிருந்தனர். நகரத்து மக்கள் புசித்துக் குடித்து வெறித்திருக்கும்போது நகரம் படையெடுக்கப்பட்டதாய் சரித்திராசிரியர்களும் ஒப்புக்கொள்கின்றனர். எந்த விதமான எதிர்த்தாக்குதலுமின்றி பாபிலோன் கைப்பற்றப்பட்டது. (எரேமியா 51:30) இருந்தாலும் ஒரு முக்கிய நபர் உயிரிழந்தார். தானியேல் இவ்வாறு அறிக்கையிட்டார்: “அன்று இராத்திரியிலே கல்தேயரின் ராஜாவாகிய பெல்ஷாத்சார் கொலை செய்யப்பட்டான். மேதியனாகிய தரியு தன் அறுபத்திரண்டாம் வயதில் ராஜ்யத்தைக் கட்டிக்கொண்டான்.”—தானியேல் 5:30, 31.
அந்தக் கையெழுத்து புகட்டும் பாடம்
25 தானியேல் 5-ஆம் அதிகாரத்தில் ஏவப்பட்டு எழுதப்பட்ட பதிவு, நமக்கு விசேஷ அர்த்தமுள்ளது. பொய் மத பழக்கவழக்கங்களின் மையமான பூர்வ பாபிலோன், இன்றைய பொய் மத உலகப் பேரரசுக்கு பொருத்தமான அடையாளமாக இருக்கிறது. இரத்தவெறிகொண்ட வேசியாக வெளிப்படுத்துதலில் விவரிக்கப்பட்டிருக்கும் இந்த உலக வஞ்சகக் கூட்டமைப்பு, “மகா பாபிலோன்” என்று அழைக்கப்படுகிறது. (வெளிப்படுத்துதல் 17:5) கடவுளைக் கனவீனப்படுத்தும் அவளது பொய் கோட்பாடுகளுக்கும் பழக்கவழக்கங்களுக்கும் எதிரான எல்லா எச்சரிக்கைகளையும் அசட்டை செய்து, கடவுளுடைய வார்த்தையைப் பிரசங்கிப்பவர்களை அவள் துன்புறுத்தியிருக்கிறாள். பூர்வ எருசலேம் மற்றும் யூதாவின் குடிமக்களைப் போலவே, அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களின் உண்மையுள்ள மீதியானோர் 1918-ல் ‘மகா பாபிலோனில்’ நாடுகடத்தப்பட்டிருந்தார்கள் என சொல்லலாம். அவ்வருடத்தில் குருமார்களின் தூண்டுதலால் ராஜ்ய பிரசங்க வேலை கிட்டத்தட்ட நின்றேவிட்டது.
26 இருந்தாலும், திடீரென “மகா பாபிலோன்” வீழ்ந்தது! அதுவும் சப்தமின்றி விழுந்தது என்றே சொல்லவேண்டும். பொ.ச.மு. 539-ல் பூர்வ பாபிலோன் சப்தமின்றி விழுந்ததுபோலவே இதுவும் ஆயிற்று. இருந்தாலும் இந்த அடையாளப்பூர்வ வீழ்ச்சி பெரும் சேதத்திற்குரியதாய் இருந்தது. அது நடந்தது பொ.ச. 1919-ல். அப்போது யெகோவாவின் மக்கள் பாபிலோனிய சிறையிருப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, தெய்வீக அங்கீகாரத்தைப் பெற்றனர். கடவுளின் மக்கள்மீது ‘மகா பாபிலோனுக்கு’ இருந்த அதிகாரமும் பறிக்கப்பட்டது. அவளது போலித்தனம் வெட்டவெளிச்சமாகத் தொடங்கியதும் அப்போதுதான். எழுந்திருக்க முடியாதபடி அவள் விழுந்துவிட்டாள். ஒட்டுமொத்த அழிவும் இதோ, வந்துகொண்டிருக்கிறது. ஆகவே யெகோவாவின் ஊழியர்கள் இந்த எச்சரிக்கையை அறிவித்து வந்திருக்கின்றனர்: ‘நீங்கள் அவளுடைய பாவங்களுக்கு உடன்படாமல் இருக்க . . . அவளைவிட்டு வெளியே வாருங்கள்.’ (வெளிப்படுத்துதல் 18:4) நீங்கள் இந்த எச்சரிக்கைக்கு செவிகொடுத்திருக்கிறீர்களா? மற்றவர்களையும் எச்சரிக்கிறீர்களா? f
27 இன்றும் “சுவரில் கையெழுத்தைப் பார்க்கிறோம்,” ஆனால் அது குறிக்கும் அழிவு ‘மகா பாபிலோனுக்கு’ மட்டுமல்ல. தானியேல் புத்தகத்தின் மையக் கருவான பின்வரும் முக்கிய சத்தியத்தை நினைவில்கொள்ளுங்கள்: யெகோவாவே சர்வலோகப் பேரரசர். மனிதருக்கு ஓர் அரசரை தேர்ந்தெடுக்க அவருக்கே உரிமை உண்டு; ஆம், அவருக்கு மட்டுமே உரிமை உண்டு. (தானியேல் 4:17, 25; 5:21) யெகோவாவின் நோக்கத்திற்கு எதிரான அனைத்தும் நீக்கப்படும். குறித்த காலத்தில் யெகோவா செயல்படப்போவதில் சந்தேகமேயில்லை. (ஆபகூக் 2:3) தானியேலின் விஷயத்தில் அந்தக் குறிக்கப்பட்ட காலம், ஒருவழியாக அவர் 100 வயதைத் தாண்டிய பிறகு வந்தது. அப்போது, தனது சிறு பிராயத்திலிருந்தே கடவுளுடைய மக்களை ஒடுக்கிவந்த ஓர் உலக வல்லரசு யெகோவாவினால் வீழ்த்தப்படுவதை அவர் கண்ணார கண்டார்.
28 யெகோவா தேவன் மனிதவர்க்கத்திற்காக ஓர் அரசரை பரலோக அரியணையில் அமர்த்தியிருக்கிறார் என்பதற்கு மறுக்கமுடியாத ஆதாரங்கள் உண்டு. உலகம் இந்த அரசரை புறக்கணித்து, இவரது ஆட்சியை எதிர்த்திருப்பதுதானே, ராஜ்ய ஆட்சியை எதிர்க்கும் எல்லாரையும் யெகோவா விரைவில் துடைத்தழிப்பார் என்பதற்கு உறுதியான ஆதாரமாய் அமைகிறது. (சங்கீதம் 2:1-11; 2 பேதுரு 3:3-7) நீங்கள் காலத்தின் அவசரத்திற்கேற்ப நடந்து, கடவுளுடைய ராஜ்யத்தின்மீது நம்பிக்கை வைத்திருக்கிறீர்களா? அப்படியென்றால் சுவரில் தோன்றிய அந்தக் கையெழுத்து புகட்டும் பாடத்தை நீங்கள் கற்றுக்கொண்டுவிட்டீர்கள்!
[அடிக்குறிப்புகள்]
a பண்டைய கல்வெட்டு ஒன்றில், “கோழை ஒருவன் தன் நாட்டின் [அதிபதி]யாக்கப்பட்டிருக்கிறான்” என பெல்ஷாத்சாரைப் பற்றி கோரேசு ராஜா குறிப்பிட்டார்.
b தானியேல் பதிவின் இந்த நுணுக்கமான விவரம்கூட திருத்தமானதென நிரூபிக்கப்பட்டிருக்கிறது. பூர்வ பாபிலோனில் அரண்மனை சுவர்கள் செங்கலால் கட்டப்பட்டு, சாந்து பூசப்பட்டிருந்தன என்பதை புதைபொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கின்றனர்.
c இந்த அற்புதத்தைப் பார்த்து பாபிலோனியர்கள் அதிகம் அரண்டுபோனதற்குக் காரணம், அவர்களது மூடநம்பிக்கைகளாகவும் இருக்கலாம். பாபிலோனிய வாழ்க்கையும் சரித்திரமும் என்ற ஆங்கில புத்தகம் குறிப்பிடுகிறது: “பாபிலோனியர்கள் அநேக கடவுட்களை வணங்கியதோடு, ஆவிகளை நம்பியதாகவும் தெரிகிறது. அவற்றை அந்தளவு நம்பியதால், அவர்களது மத புத்தகங்களில் பெரும்பாலானவற்றில் பாதுகாப்பளிக்கும் ஜெபங்களும் மந்திரங்களும் இருந்தன.”
d பைபிள் புதைபொருள் மறுபார்வை என்ற ஆங்கில பத்திரிகை குறிப்பிடுகிறது: “பாபிலோனிய நிபுணர்கள் ஆயிரக்கணக்கான சகுனங்களை பட்டியலிட்டிருந்தார்கள். . . . சுவர்மீது எழுதப்பட்டதை விளக்குமாறு பெல்ஷாத்சார் கட்டளையிட்டபோது, பாபிலோனின் ஞானிகள் இந்தச் சகுன என்ஸைக்ளோப்பீடியாக்களை கண்டிப்பாக புரட்டிப் பார்த்திருப்பார்கள். ஆனால் அவை பிரயோஜனமளிக்கவில்லை.”
e “திகில்கொண்டார்கள்” என்பதற்குப் பயன்படுத்தப்பட்டிருக்கும் வார்த்தை, கூட்டத்தில் குழப்பம் ஏற்பட்டதுபோன்ற பயங்கர அமளியை அர்த்தப்படுத்துவதாக அகராதி ஆசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள்.
f உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டி ஆஃப் இண்டியாவால் பிரசுரிக்கப்பட்ட வெளிப்படுத்துதல்—அதன் மகத்தான உச்சக்கட்டம் சமீபித்துவிட்டது! என்ற புத்தகத்தில் பக்கங்கள் 205-71-ஐக் காண்க.
நீங்கள் என்ன புரிந்துகொண்டீர்கள்?
• பொ.ச.மு. 539, அக்டோபர் 5/6-ன் இரவில், பெல்ஷாத்சார் ஏற்பாடு செய்த விருந்தின்போது நடந்தது என்ன?
• சுவரில் எழுதப்பட்டவற்றின் அர்த்தம் என்ன?
• பெல்ஷாத்சாரின் விருந்து நடக்கையில் பாபிலோனிய வீழ்ச்சியைப் பற்றிய எந்த தீர்க்கதரிசனம் நிறைவேறிக்கொண்டிருந்தது?
• சுவரில் எழுதப்பட்ட வார்த்தைகள் நம் நாளில் எதை அர்த்தப்படுத்துகின்றன?
[கேள்விகள்]
1. வெகு காலத்திற்கு முன் சுவரில் எழுதப்பட்ட நான்கு வார்த்தைகள் எந்தளவு தாக்கத்தை ஏற்படுத்தின?
2. (அ) நேபுகாத்நேச்சார் இறந்த பின் பாபிலோனில் என்ன நடந்தது? (ஆ) யார் அரசரானார்?
3. பெல்ஷாத்சார் எப்படிப்பட்ட விருந்தை ஏற்பாடு செய்தார்?
4. (அ) பொ.ச.மு. 539, அக்டோபர் 5/6-ன் இரவில் பாபிலோனியர்கள் இந்தளவு குடித்துக் கும்மாளமடித்தது ஏன் வியப்பளிக்கிறது? (ஆ) படையெடுத்து வந்த சேனைகளைக் கண்டு பாபிலோனியர்கள் அஞ்சாததற்கு என்ன காரணம்?
5, 6. மது போதையில் பெல்ஷாத்சார் என்ன செய்தார், இது ஏன் யெகோவாவிற்கு பெரும் அவமதிப்பை உண்டாக்கியது?
7, 8. பெல்ஷாத்சாரின் விருந்தின்போது திடீரென என்ன நடந்தது, இது ராஜாவை எந்தளவுக்கு பாதித்தது?
9. (அ) பெல்ஷாத்சாரின் நடுக்கம் ஏன் தெய்வீக பயத்தின் அடையாளமல்ல? (ஆ) பாபிலோனிய ஞானிகளுக்கு ராஜா எதை அளிக்க முன்வந்தார்?
10. சுவரில் எழுதப்பட்டவற்றை ஞானிகளால் விளக்க முடிந்ததா?
11. பாபிலோனிய ஞானிகளால் ஏன் அந்த வார்த்தைகளை வாசிக்க முடியவில்லை?
12. ஞானிகள் அடைந்த தோல்வியிலிருந்து எது தெளிவாயிற்று?
13. (அ) தானியேலை அழைக்கும்படி ராணி சொன்னது ஏன்? (ஆ) தானியேல் எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்ந்துவந்தார்?
14. சுவரில் எழுதப்பட்டதை வாசித்த தானியேலின் தர்மசங்கடமான நிலை என்ன?
15, 16. பெல்ஷாத்சார் கற்கத் தவறிவிட்ட முக்கிய படிப்பினை என்ன, இன்றும் அதே தவறு எந்தளவு சகஜமாயிருக்கிறது?
17, 18. சுவரில் எழுதப்பட்ட அந்த நான்கு வார்த்தைகள் என்ன, அவற்றின் நேரடியான அர்த்தமென்ன?
19. “மெனே” என்பதன் அர்த்தமென்ன?
20. “தெக்கேல்” என்ற வார்த்தைக்கு என்ன விளக்கம் தரப்பட்டது, அது எவ்வாறு பெல்ஷாத்சாருக்குப் பொருந்தியது?
21. “உப்பார்சின்” என்ற வார்த்தை எவ்வாறு மூன்று அர்த்தங்களைக் கொடுத்து ஜாலம்புரிந்தது, உலக வல்லரசாக பாபிலோனின் எதிர்காலத்தைப் பற்றி இவ்வார்த்தை என்ன சுட்டிக்காட்டியது?
22. புதிரின் விடையை அறிந்துகொண்ட பெல்ஷாத்சார் என்ன செய்தார், அவர் என்ன நினைத்திருக்கலாம்?
23. பெல்ஷாத்சாரின் விருந்து நடக்கையிலேயே எந்த பூர்வ தீர்க்கதரிசனம் நிறைவேறிக்கொண்டிருந்தது?
24. பாபிலோனின் வீழ்ச்சியைப் பற்றிய என்ன விவரங்களை ஏசாயாவின் தீர்க்கதரிசனம் முன்னறிவித்தது?
25. (அ) இன்றைய பொய் மத உலக பேரரசிற்கு பூர்வ பாபிலோன் ஏன் பொருத்தமான அடையாளம்? (ஆ) கடவுளுடைய நவீன நாளைய ஊழியர்கள் எந்த அர்த்தத்தில் பாபிலோனிய சிறையிருப்பில் இருந்தனர்?
26. (அ) “மகா பாபிலோன்” எவ்வாறு 1919-ல் வீழ்ந்தது? (ஆ) எந்த எச்சரிக்கைக்கு நாம் செவிசாய்க்க வேண்டும், மற்றவர்களுக்கும் அறிவிக்க வேண்டும்?
27, 28. (அ) எந்த முக்கிய சத்தியத்தை தானியேல் ஒருபோதும் மறக்கவில்லை? (ஆ) இன்றைய பொல்லாத உலகை யெகோவா விரைவில் நீக்குவார் என்பதற்கு என்ன அத்தாட்சி உண்டு?
[பக்கம் 98-ன் முழுபடம்]
[பக்கம் 103-ன் முழுபடம்]