தானியேல்
5 பெல்ஷாத்சார் ராஜா+ முக்கியப் பிரமுகர்கள் ஆயிரம் பேரை அழைத்து ஒரு பெரிய விருந்து வைத்தான். அப்போது, அவர்களுக்கு முன்னால் உட்கார்ந்து திராட்சமது குடித்தான்.+ 2 அவனுக்குப் போதை ஏறியபோது, எருசலேம் ஆலயத்திலிருந்து அவனுடைய தகப்பன் நேபுகாத்நேச்சார் கொண்டுவந்த தங்க, வெள்ளி கோப்பைகளை+ எடுத்துவரும்படி ஆணையிட்டான். அவனும் அவனுடைய மனைவிகளும் மறுமனைவிகளும் முக்கியப் பிரமுகர்களும் திராட்சமது குடிப்பதற்காக அவற்றை எடுத்துவரச் சொன்னான். 3 அதன்படியே, எருசலேம் ஆலயத்திலிருந்து கொண்டுவரப்பட்ட தங்கக் கோப்பைகளை அவனுடைய ஆட்கள் எடுத்துவந்தார்கள். ராஜாவும் அவனுடைய மனைவிகளும் மறுமனைவிகளும் முக்கியப் பிரமுகர்களும் அந்தக் கோப்பைகளில் குடித்தார்கள். 4 திராட்சமதுவைக் குடித்துக்கொண்டே தங்கம், வெள்ளி, செம்பு, இரும்பு, மரம், கல் ஆகியவற்றால் செய்யப்பட்ட தெய்வங்களைப் புகழ்ந்தார்கள்.
5 அப்போது திடீரென்று, மனித கைவிரல்கள் தோன்றி, குத்துவிளக்கின் எதிரில் இருந்த சாந்து பூசப்பட்ட அரண்மனைச் சுவரில் எதையோ எழுத ஆரம்பித்தன. சுவரில் எழுதிய அந்தக் கையை ராஜா பார்த்தவுடன், 6 அவனுடைய முகம் வெளுத்துப்போனது,* மனதை திகில் கவ்வியது, இடுப்பு கிடுகிடுவென்று ஆடியது,+ முழங்கால்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டன.
7 உடனே, மாயவித்தைக்காரர்களையும் ஜோதிடர்களையும்*+ குறிசொல்கிறவர்களையும் கூட்டிக்கொண்டு வரும்படி அவனுடைய ஆட்களைப் பார்த்துக் கத்தினான். பின்பு, பாபிலோனில் உள்ள ஞானிகளிடம், “யார் இந்த எழுத்துக்களை வாசித்து இதன் அர்த்தத்தைச் சொல்கிறானோ அவனுக்கு ஊதா நிற* உடை உடுத்தி, தங்கச் சங்கிலியைப் போட்டுவிட்டு,+ என் ராஜ்யத்தில் மூன்றாம் அதிபராக்குவேன்”+ என்றான்.
8 அங்கு வந்த ராஜாவின் ஞானிகள் எல்லாரும் அந்த எழுத்துக்களைப் பார்த்தார்கள். ஆனால், அவற்றை வாசிக்கவோ விளக்கவோ அவர்களால் முடியவில்லை.+ 9 அதனால் பெல்ஷாத்சார் ராஜாவுக்குக் குலைநடுங்கியது, முகம் வெளுத்துப்போனது. அவனுடைய முக்கியப் பிரமுகர்களும் என்ன செய்வதென்று தெரியாமல் குழம்பிப்போனார்கள்.+
10 ராஜாவும் முக்கியப் பிரமுகர்களும் பேசிக்கொண்டது ராணியின்* காதில் விழுந்தது. உடனே அவள் விருந்து மண்டபத்துக்கு வந்து, “ராஜா நீடூழி வாழ்க! ஏன் உங்கள் முகமெல்லாம் இப்படி வெளுத்துப்போயிருக்கிறது? நீங்கள் பயப்பட வேண்டியதே இல்லை. 11 பரிசுத்தமான தெய்வங்களின் சக்தியைப் பெற்ற ஒருவர்* உங்கள் ராஜ்யத்தில் இருக்கிறார். அவருக்கு அபாரமான அறிவும் ஆழமான புரிந்துகொள்ளுதலும் தெய்வீக ஞானமும் இருப்பது உங்கள் தகப்பனாகிய நேபுகாத்நேச்சார் ராஜாவின் காலத்திலேயே தெரியவந்தது.+ அதனால், உங்கள் தகப்பன் அவரை எல்லா மந்திரவாதிகளுக்கும் மாயவித்தைக்காரர்களுக்கும் ஜோதிடர்களுக்கும்+ குறிசொல்கிறவர்களுக்கும் தலைவராக்கினார். 12 அவர்தான் தானியேலுக்கு பெல்தெஷாத்சார்+ என்று பெயர் வைத்தார். கனவுகளை விளக்குவதற்கும், விடுகதைகளை விடுவிப்பதற்கும், சிக்கல்களைத் தீர்ப்பதற்கும் தேவையான விசேஷ திறமையும், அறிவும், ஆழமான புரிந்துகொள்ளுதலும் அவருக்கு இருந்தது.+ இப்போதே அந்த தானியேலை வரச் சொல்லுங்கள், அவர் உங்களுக்கு விளக்கம் தருவார்” என்றாள்.
13 அதன்படியே, ராஜாவிடம் தானியேல் அழைத்து வரப்பட்டார். அப்போது ராஜா தானியேலிடம், “ராஜாவாகிய என் தகப்பன் யூதாவிலிருந்து சிறைபிடித்து வந்த தானியேல் நீதானா?+ 14 உன்னிடம் பரிசுத்தமான தெய்வங்களின் சக்தி இருக்கிறதென்றும்,+ உனக்கு அபார அறிவும் ஆழமான புரிந்துகொள்ளுதலும் விசேஷ ஞானமும் இருக்கிறதென்றும் கேள்விப்பட்டேன்.+ 15 இந்த எழுத்துக்களை வாசித்து விளக்குவதற்கு ஞானிகளையும் மாயவித்தைக்காரர்களையும் நான் வரச் சொன்னேன். ஆனால், யாராலுமே அதை விளக்க முடியவில்லை.+ 16 உன்னால் விளக்கங்களைச் சொல்லவும்+ சிக்கல்களைத் தீர்க்கவும் முடியும் என்று கேள்விப்பட்டேன். இப்போது நீ இந்த எழுத்துக்களை வாசித்து இதன் அர்த்தத்தைச் சொன்னால், உனக்கு ஊதா நிற* உடை உடுத்தி, தங்கச் சங்கிலியைப் போட்டுவிட்டு, என் ராஜ்யத்தில் மூன்றாம் அதிபராக்குவேன்” என்றான்.+
17 அதற்கு தானியேல், “ராஜாவே, பரிசுகள் உங்களிடமே இருக்கட்டும். இல்லையென்றால், வேறு யாருக்காவது கொடுங்கள். எப்படியிருந்தாலும், நான் இந்த எழுத்துக்களை உங்களுக்கு வாசித்துக் காட்டி விளக்குகிறேன். 18 ராஜாவே, உன்னதமான கடவுள் உங்கள் தகப்பனாகிய நேபுகாத்நேச்சாருக்கு ராஜ்யத்தையும் மேன்மையையும் மதிப்பையும் சிறப்பையும் கொடுத்தார்.+ 19 எல்லா இனங்களையும் தேசங்களையும் மொழிகளையும் சேர்ந்தவர்கள் அவரைப் பார்த்துப் பயந்து நடுங்குமளவுக்குக் கடவுள் அவரை உயர்ந்த இடத்தில் வைத்தார்.+ உங்கள் தகப்பன் தன்னுடைய இஷ்டப்படி யாரை வேண்டுமானாலும் கொன்றுபோடுவார், யாரை வேண்டுமானாலும் வாழ வைப்பார், யாரை வேண்டுமானாலும் உயர்த்துவார், யாரை வேண்டுமானாலும் தாழ்த்துவார்.+ 20 ஆனால் ஒரு கட்டத்தில் அவருடைய உள்ளத்தில் பெருமை வந்துவிட்டது, அவருடைய மனம் இறுகிப்போனது. அதனால் அகங்காரத்தோடு* நடந்துகொண்டார்.+ உடனே சிம்மாசனத்திலிருந்து இறக்கப்பட்டார், தன்னுடைய மதிப்பை இழந்தார். 21 மனிதர்களிடமிருந்து துரத்தப்பட்டார். மிருக இதயம் அவருக்குக் கொடுக்கப்பட்டது. அவர் காட்டுக் கழுதைகளோடு வாழ்ந்தார், மாடுகளைப் போல் புல்லை மேய்ந்தார். அவருடைய உடல் வானத்திலிருந்து பெய்த பனியில் நனைந்தது. கடைசியில், உன்னதமான கடவுள்தான் மனிதர்களுடைய ராஜ்யத்துக்கெல்லாம் ராஜா என்றும், தனக்கு விருப்பமானவரிடம் ஆட்சியைக் கொடுக்கிறார்+ என்றும் புரிந்துகொண்டார்.
22 அவருடைய மகனாகிய பெல்ஷாத்சார் ராஜாவே, இதெல்லாம் தெரிந்தும்கூட நீங்கள் மனத்தாழ்மையோடு நடந்துகொள்ளாமல், 23 பரலோகத்தின் எஜமானுக்கு மேலாக உங்களை உயர்த்தினீர்கள்.+ அவருடைய ஆலயத்தின் பாத்திரங்களை எடுத்துவரச் சொன்னீர்கள்.+ பின்பு, நீங்களும் உங்கள் மனைவிகளும் மறுமனைவிகளும் முக்கியப் பிரமுகர்களும் ஆலயத்தின் கோப்பைகளில் திராட்சமது குடித்தீர்கள். அதுமட்டுமல்லாமல், எதையும் பார்க்கவோ கேட்கவோ தெரிந்துகொள்ளவோ முடியாத வெள்ளி, தங்கம், செம்பு, இரும்பு, மரம், கல் ஆகியவற்றால் செய்யப்பட்ட தெய்வங்களைப் புகழ்ந்தீர்கள்.+ ஆனால், உங்கள் உயிருக்கும் உங்களுடைய எல்லா செயல்களுக்கும் அதிகாரியான கடவுளை+ மகிமைப்படுத்தவில்லை. 24 அதனால் அவர் ஒரு கையை அனுப்பி, சுவரில் எழுத வைத்தார்.+ 25 அந்தக் கை எழுதிய வார்த்தைகள் இவைதான்: மெனே, மெனே, தெக்கேல், பார்சின்.
26 மெனே என்றால், உங்களுடைய ராஜ்யத்தின் நாட்களைக் கடவுள் எண்ணி, அதை முடிவுக்குக் கொண்டுவந்துவிட்டார்+ என்று அர்த்தம்.
27 தெக்கேல் என்றால், நீங்கள் தராசில் நிறுத்தப்பட்டு, குறையுள்ளவராகக் காணப்பட்டீர்கள் என்று அர்த்தம்.
28 பெரேஸ் என்றால், உங்கள் ராஜ்யம் பிரிக்கப்பட்டு மேதியர்களுக்கும் பெர்சியர்களுக்கும் கொடுக்கப்பட்டது+ என்று அர்த்தம்” என்றார்.
29 உடனே, தானியேலுக்கு ஊதா நிற உடையை உடுத்திவிட்டு, தங்கச் சங்கிலியைப் போட்டுவிடும்படி பெல்ஷாத்சார் கட்டளை கொடுத்தான். பின்பு, அவனுடைய ராஜ்யத்தில் தானியேல் மூன்றாம் அதிபராவார் என்ற அறிவிப்பு செய்யப்பட்டது.+
30 அன்றைக்கு ராத்திரியே, கல்தேயனான பெல்ஷாத்சார் ராஜா கொல்லப்பட்டான்.+ 31 அதன்பின், மேதியனாகிய தரியு+ ஆட்சிக்கு வந்தான். அப்போது, அவனுக்குச் சுமார் 62 வயது.