அதிகாரம் பதினேழு
முடிவு காலத்தில் உண்மை வணக்கத்தாரை அடையாளங்காணுதல்
சிறிய, தற்காப்பில்லாத ஒரு தொகுதியினரை உலக மகா வல்லரசு ஒன்று கடுமையாய் தாக்குகிறது. ஆனால் அவர்கள் எவ்வித பாதிப்புமின்றி தப்பிக்கிறார்கள், ஏன் புத்துயிரும் பெறுகிறார்கள். இதற்கு, அவர்களது சொந்த பலம் அல்ல, ஆனால் யெகோவா தேவனால் உயர்வாய் மதிக்கப்பட்டதே காரணம். தானியேல் 7-ஆம் அதிகாரம் முன்னறிவித்த இச்சம்பவங்கள், 20-ஆம் நூற்றாண்டின் ஆரம்பப் பகுதியில் நிறைவேறின. ஆனால் இந்தத் தொகுதியினர் யார்? தானியேல் புத்தகத்தின் அதே அதிகாரம் அவர்களை யெகோவா தேவனுடைய, அதாவது ‘உன்னதமானவருடைய பரிசுத்தவான்கள்’ என குறிப்பிட்டது. இவர்கள் இறுதியாக, மேசியானிய ராஜ்யத்தில் உடன் அரசர்களாய் சேவிப்பார்கள் என்றும் அது வெளிப்படுத்தியது!—தானியேல் 7:13, 14, 18, 21, 22, 25-27.
2 தானியேல் 11-ஆம் அதிகாரத்தில் நாம் கற்றபடி, இப்படிப்பட்ட விசுவாசமுள்ள மக்களின் பாதுகாப்பான ஆவிக்குரிய நிலைமையை வடதிசை ராஜா அச்சுறுத்திய பிறகு அவன் முற்றிலும் அழிக்கப்படுவான். (தானியேல் 11:45; ஒப்பிடுக: எசேக்கியேல் 38:18-23.) ஆம், யெகோவா அபிஷேகம் செய்யப்பட்ட தம் உண்மையுள்ள ஊழியர்களைக் கண்மணிபோல் கருதுகிறார். சங்கீதம் 105:14, 15 இவ்வாறு சொல்கிறது: “அவர்கள் நிமித்தம் [யெகோவா] ராஜாக்களைக் கடிந்துகொண்டு: நான் அபிஷேகம்பண்ணினவர்களை நீங்கள் தொடாமலும், என்னுடைய தீர்க்கதரிசிகளுக்குத் தீங்குசெய்யாமலும் இருங்கள் என்றார்.” அப்படியென்றால், இந்தக் கொடிய நாட்களில், அதிகரித்துவரும் ‘திரள் கூட்டத்தார்’ இந்தப் பரிசுத்தவான்களோடு முடிந்தளவு நெருக்கமாக கூட்டுறவுகொள்வது புத்திசாலித்தனம் என்பதை ஒப்புக்கொள்கிறீர்கள் அல்லவா? (வெளிப்படுத்துதல் 7:9; சகரியா 8:23) இதைச் செய்யும்படியே செம்மறியாடு போன்ற மக்களை இயேசு கிறிஸ்து உற்சாகப்படுத்தினார். அதாவது அபிஷேகம் செய்யப்பட்ட அவரது ஆவிக்குரிய சகோதரர்களின் ஊழியத்தை ஆதரிப்பதன் மூலம் அவர்களோடு கூட்டுறவுகொள்ளும்படி ஊக்குவித்தார்.—மத்தேயு 25:31-46; கலாத்தியர் 3:29.
3 இருந்தாலும், கடவுளது எதிரியான சாத்தான் அபிஷேகம் செய்யப்பட்டவர்களை முழுமூச்சாய் எதிர்த்து வந்திருக்கிறான். அவன் பொய் மதத்தை முன்னேற்றுவித்து, கிட்டத்தட்ட முழு உலகையே போலி கிறிஸ்தவர்களால் நிரப்பியிருக்கிறான். இதன் காரணமாய், அநேகர் தவறாக வழிநடத்தப்பட்டிருக்கின்றனர். மற்றவர்கள் உண்மை மதத்தினரை கண்டுபிடிப்பதற்கான நம்பிக்கையையே இழந்திருக்கின்றனர். (மத்தேயு 7:15, 21-23; வெளிப்படுத்துதல் 12:9, 17) ‘சிறுமந்தையை’ அடையாளம் கண்டுகொண்டு, அவர்களோடு கூட்டுறவு கொள்பவர்களும்கூட தங்கள் விசுவாசத்தைக் காத்துக்கொள்ள போராட வேண்டியிருக்கிறது. (லூக்கா 12:32) ஏனெனில் இவ்வுலகம் விசுவாசத்தைக் குலைக்க எப்போதும் வழிதேடுகிறது. உங்களைப் பற்றியென்ன? நீங்கள் ‘உன்னதமானவருடைய பரிசுத்தவான்களை’ அடையாளங்கண்டு, அவர்களோடு கூட்டுறவு கொள்கிறீர்களா? நீங்கள் அடையாளம் கண்டுகொண்டிருப்பவர்களே கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்பதற்கான உறுதியான அத்தாட்சியை அறிந்திருக்கிறீர்களா? இப்படிப்பட்ட அத்தாட்சி உங்கள் விசுவாசத்தை பலப்படுத்தும். இன்றைய உலகில் நிலவும் மத குழப்பத்திலிருந்து தெளிவுபெற மற்றவர்களுக்கும் உங்களால் உதவ முடியும். தானியேல் 12-ஆம் அதிகாரம், உயிர்காக்கும் இந்த அறிவின் களஞ்சியமாய் இருக்கிறது.
பெரிய அதிபதி செயலில் இறங்குகிறார்
4 தானியேல் 12:1 இவ்வாறு வாசிக்கிறது: “உன் ஜனத்தின் புத்திரருக்காக நிற்கிற பெரிய அதிபதியாகிய மிகாவேல் அக்காலத்திலே எழும்புவான்.” இவ்வசனம் மிகாவேலைக் குறித்து இந்த இரு தெளிவான காரியங்களை முன்னறிவிக்கிறது: ஒன்று, அவர் ‘நிற்கிறார்’ என சொல்கிறது. இது, ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் நிலவும் நிலைமைகளைச் சுட்டிக்காட்டுகிறது; இரண்டாவது, அவர் ‘எழும்புவார்’ என குறிப்பிடுகிறது. இது, அந்தக் காலப்பகுதியில் நடக்கவிருக்கும் ஒரு சம்பவத்தை குறிக்கிறது. அப்படியென்றால் முதலாவதாக, மிகாவேல் ‘[தானியேலுடைய] ஜனத்தின் புத்திரருக்காக நிற்பது’ எந்தக் காலப்பகுதியில் என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். மிகாவேல் என்பது, பரலோக அரசருக்குரிய ஸ்தானத்தில் இயேசுவுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் பெயர் என்பதை நினைவில் வையுங்கள். அவர் ‘நிற்கிறார்’ என்பதை வாசிக்கையில், தானியேல் புத்தகத்தின் வேறு வசனங்களில் இப்பதம் பயன்படுத்தப்பட்டிருக்கும் விதம் நம் ஞாபகத்திற்கு வருகிறது. இது ஒரு ராஜாவின் செயலை, உதாரணத்திற்கு அவர் அரச அதிகாரம் பெற்றுக்கொள்வதைப் போன்ற ஒரு செயலைக் குறிப்பிட அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது.—தானியேல் 11:2-4, 7, 20, 21; NW.
5 தூதன் இங்கே சுட்டிக்காட்டிய காலப்பகுதி, வேறொரு பைபிள் தீர்க்கதரிசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள காலப்பகுதியே என்பது தெளிவாயிருக்கிறது. இதை இயேசு தம்முடைய “வந்திருத்தல்” (கிரேக்கில், பரோசியா) என அழைத்தார். அவர் பரலோகத்தில் ராஜாவாக ஆட்சிசெய்யும் காலப்பகுதியே இது. (மத்தேயு 24:37-39, NW) ‘கடைசி நாட்கள்,’ ‘முடிவுகாலம்’ என்றெல்லாம்கூட இது அழைக்கப்படுகிறது. (2 தீமோத்தேயு 3:1; தானியேல் 12:4, 9) இக்காலப்பகுதி ஆரம்பமான 1914-ம் ஆண்டிலிருந்தே, மிகாவேல் பரலோகத்தில் ராஜாவாக நின்றுகொண்டிருக்கிறார்.—ஒப்பிடுக: ஏசாயா 11:10; வெளிப்படுத்துதல் 12:7-9.
6 ஆனால் மிகாவேல் எப்போது ‘எழும்புவார்’? ஒரு முக்கிய நடவடிக்கை எடுக்க புறப்படுகையில். இதை இயேசு இனிதான் செய்வார். தேவதூதர்களின் சேனைத் தலைவராக முன்சென்று கடவுளது எதிரிகளை அழிக்கும் வல்லமைமிக்க மேசியானிய ராஜாவாக இயேசுவை விவரிக்கிறது வெளிப்படுத்துதல் 19:11-16-ல் உள்ள தீர்க்கதரிசனம். தானியேல் 12:1 இவ்வாறு தொடர்கிறது: “யாதொரு ஜாதியாரும் தோன்றினது முதல் அக்காலமட்டும் உண்டாயிராத ஆபத்துக்காலம் வரும்.” யெகோவாவின் பிரதான நியாயத்தீர்ப்பாளராக கிறிஸ்து, முன்னறிவிக்கப்பட்டிருக்கும் ‘மிகுந்த உபத்திரவத்தின்போது’ இந்த முழு பொல்லாத ஒழுங்குமுறையையும் முடிவுக்குக் கொண்டுவருவார்.—மத்தேயு 24:21; எரேமியா 25:33; 2 தெசலோனிக்கேயர் 1:6-8; வெளிப்படுத்துதல் 7:14; 16:14, 16.
7 இந்த இருண்ட காலப்பகுதியில், விசுவாசிகளுக்கு என்ன ஏற்படும்? தானியேலிடம் மேலும் கூறப்பட்டதாவது: “அக்காலத்திலே புஸ்தகத்தில் எழுதியிருக்கிறவர்களாகக் காணப்படுகிற உன் ஜனங்கள் அனைவரும் விடுவிக்கப்படுவார்கள்.” (ஒப்பிடுக: லூக்கா 21:34-36.) இப்புஸ்தகம் என்ன? தமது சித்தத்தைச் செய்பவர்களை யெகோவா தேவன் ஞாபகம் வைத்திருப்பதை அது முக்கியமாய் குறிக்கிறது. (மல்கியா 3:16; எபிரெயர் 6:10) இந்த ஜீவ புஸ்தகத்தில் பெயர் எழுதப்பட்டிருப்பவர்கள், உலகிலேயே மிகப் பாதுகாப்பானவர்கள். ஏனெனில் அவர்கள் தெய்வீக பாதுகாப்பைப் பெறுகிறார்கள். அவர்களுக்கு வரும் எந்தத் தீங்கையும் கடவுளால் முறியடிக்க முடியும், முறியடிக்கவும் செய்வார். வரவிருக்கும் ‘ஆபத்துக்காலத்திற்கு’ முன்பாக அவர்களுக்கு மரணமே வந்தாலும் யெகோவாவின் நித்திய நினைவில் பாதுகாப்பாக இருப்பார்கள். அவர் அவர்களை ஞாபகம்வைத்து, இயேசு கிறிஸ்துவின் ஆயிர வருட அரசாட்சியில் உயிர்த்தெழுப்புவார்.—அப்போஸ்தலர் 24:15; வெளிப்படுத்துதல் 20:4-6.
பரிசுத்தவான்கள் “விழித்து எழுந்திருப்பார்கள்”
8 உயிர்த்தெழுதல் நம்பிக்கை எவ்வளவு ஆறுதலளிக்கிறது! இதைப் பற்றி தானியேல் 12:2 இவ்வாறு குறிப்பிடுகிறது: “பூமியின் தூளிலே நித்திரைபண்ணுகிறவர்களாகிய அநேகரில் சிலர் நித்திய ஜீவனுக்கும் [“அழிவில்லாத வாழ்வுக்கும்,” NW] சிலர் நித்திய நிந்தைக்கும் இகழ்ச்சிக்கும் விழித்து எழுந்திருப்பார்கள்.” (ஏசாயா 26:19-ஐ ஒப்பிடுக.) இவ்வார்த்தைகள், பொதுவான உயிர்த்தெழுதலைக் குறித்து இயேசு கிறிஸ்து கொடுத்த மனதைத் தொடும் வாக்குறுதியை நமக்கு நினைப்பூட்டலாம். (யோவான் 5:28, 29) என்னே ஒரு பூரிப்பளிக்கும் நம்பிக்கை! இறந்துபோயிருக்கும் நமது இனிய நண்பர்களும் குடும்பத்தினரும் மறுபடியும் வாழ்வதற்கான வாய்ப்பைப் பெறப்போவதை கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்! ஆனால் தானியேல் புத்தகத்திலுள்ள இந்த வாக்குறுதி முக்கியமாய் வேறொரு விதமான உயிர்த்தெழுதலைப் பற்றி குறிப்பிடுகிறது. இந்த உயிர்த்தெழுதல் ஏற்கெனவே நடந்தேறிவிட்டது. அது எப்படி?
9 வசனத்தின் சூழமைவைக் கவனியுங்கள். நாம் ஏற்கெனவே பார்த்தபடி, 12-ஆம் அதிகாரத்தின் முதல் வசனம், இந்த உலகின் முடிவை மட்டுமல்ல, ஆனால் கடைசி நாட்கள் என்ற முழு காலப்பகுதியையும் குறிக்கிறது. சொல்லப்போனால், இந்த அதிகாரத்தின் பெரும்பாலான பகுதி, வரக்கூடிய பூமிக்குரிய பரதீஸில் அல்ல, ஆனால் முடிவுகாலத்திலேயே நிறைவேறுகிறது. இந்தக் காலப்பகுதியில் உயிர்த்தெழுதல் நடந்திருக்கிறதா? “கிறிஸ்துவுக்குச் சொந்தமானவர்கள்,” “அவருடைய வந்திருத்தலின்போது” உயிர்த்தெழுப்பப்படுவார்கள் என அப்போஸ்தலனாகிய பவுல் குறிப்பிட்டார். இருந்தாலும் பரலோகத்திற்கு உயிர்த்தெழுப்பப்படுபவர்கள் “அழிவில்லாதவர்களாய்” எழுந்திருப்பார்கள். (1 கொரிந்தியர் 15:23, 52, NW) ஆக, தானியேல் 12:2-ல் முன்னறிவிக்கப்பட்டபடி அவர்களில் எவரும் “நித்திய நிந்தைக்கும் இகழ்ச்சிக்கும்” எழுப்பப்பட மாட்டார்கள். அப்படியென்றால் வேறொரு விதமான உயிர்த்தெழுதல் உண்டா? பைபிள் சிலசமயம் அடையாள அர்த்தத்திலும் உயிர்த்தெழுதலைப் பற்றி பேசுகிறது. உதாரணத்திற்கு, எசேக்கியேலிலும் வெளிப்படுத்துதலிலும், அடையாளப்பூர்வமாய் உயிர்த்தெழுவதை, அதாவது புத்துயிர் பெறுவதைக் குறிக்கும் தீர்க்கதரிசன வசனங்கள் இருக்கின்றன.—எசேக்கியேல் 37:1-14; வெளிப்படுத்துதல் 11:3, 7, 11.
10 முடிவு காலத்தில் கடவுளது அபிஷேகம் செய்யப்பட்ட ஊழியர்கள் இவ்விதமாய் புத்துயிர் பெற்றிருக்கிறார்களா? ஆம்! 1918-ல், உண்மையுள்ள கிறிஸ்தவர்களில் மீதியானோரான ஒரு சிறிய தொகுதியினர், பயங்கர தாக்குதலை சந்தித்தது சரித்திரப்பூர்வ உண்மையாகும். இத்தாக்குதல், ஒழுங்கமைக்கப்பட்ட அவர்களது ஊழியத்தை தடைசெய்தது. அதன்பின், சாத்தியமற்றதாக தோன்றியபோதிலும் 1919-ல் அவர்கள் ஆவிக்குரிய கருத்தில் மீண்டும் உயிர்பெற்றார்கள். இந்த உண்மைகள் தானியேல் 12:2-ல் முன்னறிவிக்கப்பட்டிருக்கும் உயிர்த்தெழுதலின் விவரத்தோடு பொருந்துகின்றன. ஏனெனில் அச்சமயத்திலும் அதற்கு பின்னரும் ஆவிக்குரிய அர்த்தத்தில் சிலர் ‘விழித்து எழுந்தனர்.’ ஆனாலும் அனைவருமே உயிர்பெற்றவர்களாய் தொடர்ந்து செயல்படாதது வருத்தத்திற்குரியது. விழித்து எழுந்த பிற்பாடு மேசியானிய ராஜாவை புறக்கணித்தவர்களும் கடவுளது சேவையைவிட்டு விலகியவர்களும் தானியேல் 12:2-ல் விவரிக்கப்பட்டபடி, ‘நித்திய நிந்தையையும் இகழ்ச்சியையும்’ தேடிக்கொண்டார்கள். (எபிரெயர் 6:4-6) இருந்தாலும், அபிஷேகம் செய்யப்பட்ட உண்மையுள்ள கிறிஸ்தவர்கள், புத்துயிர்பெற்ற நிலையை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு, மேசியானிய ராஜாவை உண்மையோடு ஆதரித்தனர். இறுதியில், அவர்களது உண்மைத்தன்மை, தீர்க்கதரிசனம் குறிப்பிடும் விதமாக, ‘அழிவில்லாத வாழ்வுக்கு’ வழிநடத்துகிறது. இன்று, எதிர்ப்பின் மத்தியிலும் அவர்கள் ஆவிக்குரிய பலம்பெற்றிருப்பது, அவர்களை அடையாளங்காண நமக்கு உதவுகிறது.
அவர்கள் ‘நட்சத்திரங்களைப்போல் பிரகாசிக்கிறார்கள்’
11 தானியேல் 12-ஆம் அதிகாரத்தின் அடுத்த இரண்டு வசனங்கள், ‘உன்னதமானவருடைய பரிசுத்தவான்களை’ அடையாளங்காண நமக்கு மேலும் உதவுகின்றன. மூன்றாம் வசனத்தில் தூதன் தானியேலிடம் சொல்வதாவது: “ஞானவான்கள் ஆகாயமண்டலத்தின் ஒளியைப்போலவும், அநேகரை நீதிக்குட்படுத்துகிறவர்கள் நட்சத்திரங்களைப்போலவும் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் பிரகாசிப்பார்கள்.” இன்று “ஞானவான்கள்” யார்? மீண்டும் அத்தாட்சி சுட்டிக்காட்டுவது, அதே ‘உன்னதமானவருடைய பரிசுத்தவான்களையே.’ இதை யோசித்துப் பாருங்கள்: பெரிய அதிபதியாகிய மிகாவேல் 1914 முதற்கொண்டு ராஜாவாக நிற்கிறார் என்பதை புரிந்துகொள்ளும் ஞானம், உண்மையுள்ள அபிஷேகம்செய்யப்பட்ட மீதியானோரைத் தவிர வேறு யாருக்கு இருந்திருக்கிறது? இதைப் போன்ற சத்தியங்களை பிரசங்கிப்பதன் மூலமும் கிறிஸ்தவ நடத்தையை காத்துக்கொள்வதன் மூலமும்கூட, அவர்கள் ஆவிக்குரிய இருள்நிறைந்த இவ்வுலகில் ‘சுடர்களைப்போலப் பிரகாசிக்கிறார்கள்.’ (பிலிப்பியர் 2:14; யோவான் 8:12) இவர்களைக் குறித்து இயேசு இவ்வாறு முன்னறிவித்தார்: “அப்பொழுது, நீதிமான்கள் தங்கள் பிதாவின் ராஜ்யத்திலே சூரியனைப் போலப் பிரகாசிப்பார்கள்.”—மத்தேயு 13:43.
12 அபிஷேகம் செய்யப்பட்ட இந்தக் கிறிஸ்தவர்கள் முடிவு காலத்தில் செய்யக்கூடிய வேலையைப் பற்றியும் தானியேல் 12:3 நமக்கு சொல்கிறது. அவர்கள் ‘அநேகரை நீதிக்குட்படுத்துவார்கள்.’ அபிஷேகம் செய்யப்பட்ட மீதியானோர், இயேசு கிறிஸ்துவின் உடன் அரசர்களான 1,44,000 பேரில் மீதமுள்ளவர்களை கூட்டிச்சேர்க்க ஆரம்பித்தனர். (ரோமர் 8:16, 17; வெளிப்படுத்துதல் 7:3, 4) அத்தாட்சியின்படி 1930-களின் மத்திபத்தில் இந்த வேலை முடிவடைந்தபோது, அவர்கள் ‘வேறே ஆடுகளான’ ‘திரள் கூட்டத்தினரை’ கூட்டிச்சேர்க்க ஆரம்பித்தனர். (வெளிப்படுத்துதல் 7:9; யோவான் 10:16) இவர்களும் இயேசு கிறிஸ்துவின் மீட்கும் பலியில் நம்பிக்கை வைக்கிறார்கள். ஆகவே யெகோவாவிற்கு முன்பாக சுத்தமான நிலைநிற்கையைப் பெறுகிறார்கள். இன்று லட்சக்கணக்கில் இருக்கும் இவர்கள், இப்பொல்லாத உலகிற்கு வரவிருக்கும் அழிவில் தப்பிப்பிழைக்கும் நம்பிக்கையில் திளைக்கிறார்கள். கிறிஸ்துவின் ஆயிர வருட அரசாட்சியில், அவரும் அவரது 1,44,000 உடன் அரசர்களும் ஆசாரியர்களும், பூமியில் வசிக்கும் கீழ்ப்படிதலுள்ள மனிதவர்க்கத்தினருக்கு மீட்கும் பொருளின் எல்லா நன்மைகளையும் பொழிவார்கள். இவ்வாறு ஆதாமிடமிருந்து சுதந்தரித்த பாவத்தை சுவடு தெரியாமல் துடைத்தழிக்க விசுவாசமுள்ள அனைவருக்கும் உதவுவார்கள். (2 பேதுரு 3:13; வெளிப்படுத்துதல் 7:13, 14; 20:5, 6) அப்போதுதான் முழுமையான கருத்தில் அபிஷேகம் செய்யப்பட்டவர்கள் ‘அநேகரை நீதிக்குட்படுத்துவார்கள்,’ பரலோகத்தில் ‘நட்சத்திரங்களைப்போல பிரகாசிக்கவும்’ செய்வார்கள். கிறிஸ்துவும் அவரது உடன் அரசர்களும் ஆட்சிசெய்யும் மகிமைபொருந்திய பரலோக அரசாங்கத்தின்கீழ் பூமியில் வாழும் நம்பிக்கையை நீங்கள் உயர்வாய் மதிக்கிறீர்களா? கடவுளது ராஜ்யத்தின் இந்த நற்செய்தியைப் பிரசங்கிப்பதில் ‘பரிசுத்தவான்களோடு’ பங்குகொள்வது என்னே ஒரு பாக்கியம்!—மத்தேயு 24:14.
“இங்கும் அங்கும் ஓடி ஆராய்வார்கள்”
13 தானியேலுக்கு தூதன் கொடுத்த அறிவிப்பு, தானியேல் 10:20-ல் ஆரம்பித்து இந்த இதமான வார்த்தைகளோடு முடிவுறுகிறது: “தானியேலாகிய நீயோவென்றால், முடிவுகாலமட்டும் இந்த வார்த்தைகளைப் புதைபொருளாக வைத்து வைத்து, இந்தப் புஸ்தகத்தை முத்திரைபோடு; அப்பொழுது அநேகர் இங்கும் அங்கும் ஓடி ஆராய்வார்கள், அறிவும் பெருகிப்போம்.” (தானியேல் 12:4) தானியேல் ஏவப்பட்டு எழுதியவற்றில் பெரும்பாலானவை ரகசியமாய் வைக்கப்பட்டு, மனிதரால் புரிந்துகொள்ள முடியாதபடி முத்திரை போடப்பட்டது. சொல்லப்போனால், “நான் அதைக் கேட்டும், அதின் பொருளை அறியவில்லை” என தானியேலே பிற்பாடு எழுதினார். (தானியேல் 12:8) இந்த அர்த்தத்திலேயே தானியேல் புத்தகம் பல நூற்றாண்டுகளுக்கு முத்திரையிடப்பட்டது. இன்று எப்படி?
14 தானியேல் புத்தகத்தில் முன்னறிவிக்கப்பட்டிருக்கும் ‘முடிவுகாலத்தில்’ வாழ்வதற்கு நாம் பாக்கியம் பெற்றிருக்கிறோம். தீர்க்கதரிசனத்தின்படியே, அநேக விசுவாசிகள் கடவுளது வார்த்தையில் ‘இங்கும் அங்கும் ஓடி ஆராய்ந்திருக்கிறார்கள்.’ இதன் விளைவென்ன? யெகோவாவின் ஆசீர்வாதத்தால் உண்மை அறிவு பெருகியிருக்கிறது. யெகோவாவின் உண்மையுள்ள அபிஷேகம் செய்யப்பட்ட சாட்சிகள், புரிந்துகொள்ளுதலால் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆகவே, மனுஷகுமாரன் 1914-ல் ராஜாவானார் என்பதை புரிந்துகொள்ளவும், தானியேலின் தீர்க்கதரிசனம் சொல்லும் மிருகங்களை அடையாளங்காணவும், ‘பாழாக்கும் அருவருப்பிற்கு’ எதிராக எச்சரிக்கவும் அவர்களால் முடிந்திருக்கிறது. இவை சில உதாரணங்களே. (தானியேல் 11:31) இந்த அபரிமித அறிவு, ‘உன்னதமானவருடைய பரிசுத்தவான்களை’ கண்டறிவதற்கான மற்றொரு அடையாளமாக இருக்கிறது. ஆனால் தானியேல் கூடுதலான அத்தாட்சியையும் பெற்றார்.
அவர்கள் ‘நொறுக்கப்படுகிறார்கள்’
15 டைக்ரீஸ் என்றும் அறியப்பட்ட இதெக்கேலின் ‘பெரிய ஆற்றங்கரையில்’ தானியேல் இந்த செய்திகளை தூதனிடமிருந்து பெற்றார் என்பது நமக்கு நினைவிருக்கும். (தானியேல் 10:4) இப்போது இங்கே மூன்று தூதர்களை கண்ட அவர் இவ்வாறு சொல்கிறார்: “அப்பொழுது, தானியேலாகிய நான் ஆற்றுக்கு இக்கரையில் ஒருவனும் ஆற்றுக்கு அக்கரையில் ஒருவனுமாகிய வேறே இரண்டுபேர் நிற்கக்கண்டேன். சணல்வஸ்திரம் தரித்தவரும், ஆற்றின் தண்ணீர்களின்மேல் நிற்கிறவருமாகிய புருஷனை ஒருவன் நோக்கி: இந்த ஆச்சரியமானவைகளின் முடிவுவர எவ்வளவுகாலம் செல்லும் என்று கேட்டான்.” (தானியேல் 12:5, 6) இங்கே தூதன் எழுப்பிய கேள்வி, ‘உன்னதமானவருடைய பரிசுத்தவான்களை’ மீண்டும் நமக்கு நினைப்பூட்டலாம். ‘முடிவுகாலத்தின்’ ஆரம்பத்தில், அதாவது 1914-ல், கடவுளது வாக்குறுதிகள் நிறைவேறுவதற்கு எவ்வளவு காலம் செல்லும் என்பதைக் குறித்து இவர்கள் மிகுந்த அக்கறையுள்ளவர்களாக இருந்தனர். இந்தப் பரிசுத்தவான்களே தீர்க்கதரிசனத்தின் மையக் கரு என்பது இக்கேள்விக்கான பதிலிலிருந்து தெளிவாகிறது.
16 தானியேலின் பதிவு தொடர்கிறது: “அப்பொழுது சணல்வஸ்திரம் தரித்தவரும் ஆற்றின் தண்ணீர்களின்மேல் நிற்கிறவருமாகிய புருஷன் தம்முடைய வலதுகரத்தையும் தம்முடைய இடதுகரத்தையும் வானத்துக்கு நேராக ஏறெடுத்து, ஒரு காலமும், காலங்களும், அரைக்காலமும் செல்லும் என்றும்; பரிசுத்த ஜனங்களின் வல்லமையைச் சிதறடித்தல் [“நொறுக்கப்படுதல்,” NW] முடிவு பெறும்போதே இவைகளெல்லாம் நிறைவேறித் தீருமென்றும் என்றென்றைக்கும் ஜீவித்திருக்கிறவர்பேரில் ஆணையிடக் கேட்டேன்.” (தானியேல் 12:7) இது முக்கியத்துவம்வாய்ந்த விஷயம். தூதன் இரு கரங்களையும் ஏறெடுத்து, ஆணையிட்டார். அகலமான ஆற்றின் இரு பக்கங்களிலும் நிற்கும் இரண்டு தூதர்களுக்கும் தெரிவதற்காக இப்படி செய்திருக்கலாம். இவ்வாறு, இத்தீர்க்கதரிசனம் சந்தேகமின்றி கண்டிப்பாய் நிறைவேறும் என்பதை அவர் வலியுறுத்தினார். எனினும் இந்தக் காலங்கள் எந்தக் காலப்பகுதியைக் குறிக்கின்றன? நீங்கள் நினைக்கும் அளவுக்கு பதில் கடினமானது அல்ல.
17 இத்தீர்க்கதரிசனம், வேறு இரு தீர்க்கதரிசனங்களோடும் குறிப்பிடத்தக்க விதத்தில் ஒத்திருக்கிறது. ஒன்றை, இப்புத்தகத்தின் 9-ஆவது அதிகாரத்தில் நாம் கவனித்தோம். இது தானியேல் 7:25-ல் பதிவுசெய்யப்பட்டுள்ளது. மற்றொன்று, வெளிப்படுத்துதல் 11:3, 7, 9-ல் சொல்லப்பட்டுள்ளது. இவற்றில் உள்ள சில ஒற்றுமைகளை கவனியுங்கள். இரண்டுமே முடிவு காலத்தில் நடப்பவை. இரண்டுமே கடவுளுடைய பரிசுத்த ஊழியர்களைப் பற்றியது. இரண்டுமே அவர்கள் துன்புறுத்தப்படுவார்கள், தற்காலிகமாக அவர்களது பிரசங்க வேலை நிறுத்தப்படும் என்றும் சுட்டிக்காட்டுகின்றன. இரண்டுமே அவர்கள் புத்துயிர்பெற்று, எதிரிகளின் முயற்சியை முறியடித்து மீண்டும் தங்கள் ஊழியத்தை ஆரம்பிப்பதாகவும் காட்டுகின்றன. மேலும் இரண்டுமே, பரிசுத்தவான்கள் எவ்வளவு காலம் கஷ்டம் அனுபவிப்பார்கள் என்பதையும் குறிப்பிடுகின்றன. தானியேலிலுள்ள இரண்டு தீர்க்கதரிசனங்கள் (7:25 மற்றும் 12:7) ‘ஒரு காலமும், காலங்களும், அரைக்காலமும்’ அடங்கிய ஒரு காலப்பகுதியைப் பற்றி குறிப்பிடுகின்றன. இவை மூன்றரை காலங்களை அர்த்தப்படுத்துவதாய் அறிஞர்கள் பொதுவாய் ஒப்புக்கொள்கின்றனர். வெளிப்படுத்துதல் புத்தகம் இதே காலப்பகுதியை 42 மாதங்கள் அல்லது 1,260 நாட்கள் என குறிப்பிடுகிறது. (வெளிப்படுத்துதல் 11:2, 3) இதிலிருந்து, தானியேலில் சொல்லப்பட்டிருக்கும் மூன்றரை காலங்கள், தலா 360 நாட்கள் கொண்ட மூன்றரை வருடங்களைக் குறிப்பது உறுதியாகிறது. ஆனால் இந்த 1,260 நாட்கள் எப்போது ஆரம்பமாயின?
18 இந்த 1,260 நாட்கள் எப்போது முடிவடையும் என்பதை தீர்க்கதரிசனம் மிகத் தெளிவாக காட்டுகிறது. ‘பரிசுத்த ஜனங்களின் வல்லமை நொறுக்கப்படுதல் முடிவு’ பெறுகையில் என அது குறிப்பிடுகிறது. 1918-ன் மத்திபத்தில், உவாட்ச் டவர் பைபிள் அண்டு டிராக்ட் சொஸைட்டியின் தலைவரான ஜே. எஃப். ரதர்ஃபோர்டு உள்ளிட்ட முக்கிய அங்கத்தினர்கள் பொய் குற்றச்சாட்டின்பேரில் நீண்டகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர். கடவுளது பரிசுத்தவான்கள், தங்கள் ஊழியம் ‘நொறுக்கப்பட்டதை,’ தங்கள் வல்லமை குலைக்கப்பட்டதை காணத்தான் செய்தார்கள். 1918-ன் மத்திபத்திலிருந்து மூன்றரை வருடங்களை கழித்தால் 1914-ன் முடிவுக்கு வருகிறோம். அச்சமயத்தில் அபிஷேகம் செய்யப்பட்டவர்களின் ஒரு சிறிய தொகுதியினர், துன்புறுத்துதலை சந்திக்க தங்களைத் தயாராக்கிக் கொண்டிருந்தார்கள். முதல் உலகப் போர் துவங்கியிருந்தது, அவர்களது ஊழியத்திற்கு எதிர்ப்பும் பெருமளவு அதிகரித்தது. 1915-ஆம் ஆண்டிற்கான வருடாந்தர வசனமாக, ‘நான் குடிக்கப்போகிற பாத்திரத்தில் குடிக்க உங்களாலாகுமா?’ என இயேசு தம் சீஷர்களிடம் கேட்ட கேள்வி தேர்ந்தெடுக்கப்பட்டது. (மத்தேயு 20:22, தி.மொ.) அதன்பின் வந்த 1,260 நாட்கள் கொண்ட காலப்பகுதி, வெளிப்படுத்துதல் 11:3-ல் முன்னறிவிக்கப்பட்ட விதமாக, அபிஷேகம் செய்யப்பட்டவர்களுக்கு துக்கமானதாய் இருந்தது. அவர்கள் இரட்டு வஸ்திரமுடுத்தி தீர்க்கதரிசனம் சொன்னதுபோல் தோன்றியது. துன்புறுத்துதல் பயங்கரமாய் அதிகரித்தது. சிலர் சிறையில் அடைக்கப்பட்டார்கள், மற்றவர்கள் கும்பலால் தாக்கப்பட்டார்கள், இன்னும் சிலர் சித்திரவதை செய்யப்பட்டார்கள். 1916-ல் சங்கத்தின் முதல் தலைவரான சி. டி. ரஸலின் மறைவால் அநேகர் மனமுடைந்தார்கள். இருந்தாலும் இந்த இருண்ட காலப்பகுதியின் முடிவுக்குப் பின், அதாவது ஒரு அமைப்பாய் பிரசங்கித்துவந்த பரிசுத்தவான்கள் கொல்லப்பட்ட பிறகு என்ன நடக்கவிருந்தது?
19 வெளிப்படுத்துதல் 11:3, 9, 11-ல் காணப்படும் ஒத்த தீர்க்கதரிசனம், ‘இரண்டு சாட்சிகள்’ கொல்லப்பட்ட பிறகு, அவர்கள் ஒரு குறுகிய காலப்பகுதிக்கு மட்டுமே—மூன்றரை நாட்களுக்கு மட்டுமே—செத்தவர்களாய் கிடப்பார்கள் என்றும், அதன்பின் உயிர்ப்பிக்கப்படுவார்கள் என்றும் காட்டுகிறது. அதேவிதமாய், தானியேல் 12-ஆம் அதிகாரத்திலுள்ள தீர்க்கதரிசனம், பரிசுத்தவான்கள் செயலற்றவாறே இருந்துவிட மாட்டார்கள், ஆனால் இன்னுமதிக ஊழியம் செய்வார்கள் என காட்டுகிறது.
‘சுத்தமும் வெண்மையுமாக்கப்பட்டு, புடமிடப்படுகிறார்கள்’
20 முன்பு குறிப்பிட்டபடி, இவற்றை தானியேல் எழுதியபோதிலும் அவரால் புரிந்துகொள்ள முடியவில்லை. இருந்தாலும் பரிசுத்தவான்களை எதிரிகள் ஒரேயடியாக தீர்த்துக்கட்டிவிடுவார்களோ என அவர் யோசித்திருக்கலாம், ஏனெனில் “இவைகளின் முடிவு என்னமாயிருக்கும்” என கேட்டார். தூதன் பதிலளித்ததாவது: “தானியேலே, போகலாம்; இந்த வார்த்தைகள் முடிவு காலமட்டும் புதைபொருளாக வைக்கப்பட்டும் முத்திரிக்கப்பட்டும் இருக்கும். அநேகர் சுத்தமும் வெண்மையுமாக்கப்பட்டு, புடமிடப்பட்டவர்களாய் விளங்குவார்கள்; துன்மார்க்கரோ துன்மார்க்கமாய் நடப்பார்கள்; துன்மார்க்கரில் ஒருவனும் உணரான், ஞானவான்களோ உணர்ந்துகொள்ளுவார்கள்.” (தானியேல் 12:8-10) பரிசுத்தவான்களுக்கு உறுதியான நம்பிக்கை இருந்தது! அழிக்கப்படுவதற்கு பதிலாக, அவர்கள் வெண்மையாக்கப்பட்டு, யெகோவா தேவனுக்கு முன்பாக சுத்தமான நிலைநிற்கை பெறும்படி ஆசீர்வதிக்கப்படுவார்கள். (மல்கியா 3:1-3) ஆவிக்குரிய விஷயங்களைப் பற்றிய ஆழமான அறிவு, கடவுளது பார்வையில் சுத்தமாயிருக்க அவர்களுக்கு உதவுகிறது. இவர்களுக்கு முற்றிலும் மாறாக, பொல்லாதவர்கள் ஆவிக்குரிய விஷயங்களைப் புரிந்துகொள்ள மறுப்பார்கள். ஆனால் இவை அனைத்தும் எப்போது நடைபெறும்?
21 தானியேலிடம் இவ்வாறு சொல்லப்பட்டது: “அன்றாடபலி நீக்கப்பட்டு, பாழாக்கும் அருவருப்பு ஸ்தாபிக்கப்படுங்காலமுதல் ஆயிரத்திருநூற்றுத் தொண்ணூறு நாள் செல்லும்.” ஆகவே இந்தக் காலப்பகுதி, சில குறிப்பிட்ட நிலைமைகளுக்குப் பிறகு ஆரம்பிக்கும். “அன்றாடபலி” அல்லது “தொடர்ச்சியான பலி,” (NW அடிக்குறிப்பு) a நீக்கப்பட வேண்டியிருந்தது. (தானியேல் 12:11) எந்தப் பலியை தூதன் அர்த்தப்படுத்தினார்? எவ்வித பூமிக்குரிய ஆலயத்திலும் செலுத்தப்பட்ட மிருக பலிகளை அல்ல. சொல்லப்போனால், ஒருசமயத்தில் எருசலேமில் அமைந்திருந்த ஆலயமும்கூட வெறுமனே ‘மெய்யான பரிசுத்த ஸ்தலத்தின் அடையாளமாகத்தான்’ இருந்தது. மெய்யான பரிசுத்த ஸ்தலம், யெகோவாவின் ஆவிக்குரிய பேராலயமாகும். இது, பொ.ச. 29-ல் கிறிஸ்து அதன் பிரதான ஆசாரியரானபோது செயல்பட ஆரம்பித்தது! உண்மை வணக்கத்திற்கான கடவுளுடைய ஏற்பாட்டை அடையாளப்படுத்தும் இந்த ஆவிக்குரிய ஆலயத்தில், அன்றாட பாவ நிவாரண பலிகளுக்கான அவசியம் இல்லை. ஏனெனில் ‘கிறிஸ்து அநேகருடைய பாவங்களைச் சுமந்து தீர்க்கும்படிக்கு ஒரேதரம் பலியிடப்பட்டார்.’ (எபிரெயர் 9:24-28) இருந்தாலும் உண்மைக் கிறிஸ்தவர்கள் அனைவரும் இந்த ஆலயத்தில் பலிகள் செலுத்துகின்றனர். அப்போஸ்தலனாகிய பவுல் எழுதினார்: “அவருடைய நாமத்தைத் துதிக்கும் உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரபலியை அவர் [கிறிஸ்து] மூலமாய் எப்போதும் தேவனுக்குச் செலுத்தக்கடவோம்.” (எபிரெயர் 13:15) ஆகவே தீர்க்கதரிசனத்தின் இந்த முதல் நிலைமை—‘அன்றாடபலி’ நீக்கப்படுவது—1918-ன் மத்திபத்தில் நிகழ்ந்தது. அப்போது பிரசங்க வேலை முழுமையாய் நிறுத்தப்பட்டது என்றே சொல்லவேண்டும்.
22 இரண்டாவது நிலைமையான, ‘பாழாக்கும் அருவருப்பு’ ‘ஸ்தாபிக்கப்படுவதை’ அல்லது நிறுவப்படுவதைப் பற்றியென்ன? தானியேல் 11:31-ஐ கலந்தாலோசிக்கையில் நாம் பார்த்த வண்ணமே, இந்த அருவருப்பு முதலில் சர்வதேச சங்கமாக இருந்தது. அதன்பின் ஐக்கிய நாட்டு சங்கமாக மீண்டும் உருவெடுத்தது. பூமியில் சமாதானத்திற்கான ஒரே நம்பிக்கை என இவை பறைசாற்றப்பட்டிருப்பதால் அருவருப்பானவை ஆகின்றன. இவ்வாறு அநேகரது இருதயங்களில், கடவுளது ராஜ்யம் இடம்பெற வேண்டிய இடத்தை இந்த அமைப்புகள் எடுத்துக்கொள்கின்றன! ஜனவரி 1919-ல், சர்வதேச சங்கம் அதிகாரப்பூர்வமாய் முன்மொழியப்பட்டது. அப்படியென்றால் தானியேல் 12:11 குறிப்பிடும் இரு நிலைமைகளுமே அச்சமயத்தில் ஏற்பட்டன. ஆகவே 1,290 நாட்கள், 1919-ன் ஆரம்பத்தில் துவங்கி, 1922-ன் (வட அரைகோள) இலையுதிர்காலம் வரை நீடித்தன.
23 அச்சமயத்தில், பரிசுத்தவான்கள் கடவுளது பார்வையில் வெண்மையாக்கப்பட்டு சுத்திகரிக்கப்படும் நிலைக்கு முன்னேறினார்களா? நிச்சயமாகவே! மார்ச் 1919-ல், உவாட்ச் டவர் சொஸைட்டியின் தலைவரும் அவரது நெருங்கிய கூட்டாளிகளும் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டனர். அதன் பிற்பாடு அவர்களுக்கு எதிரான பொய்க் குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டார்கள். தங்கள் வேலை இன்னும் முடியவில்லை என்பதை உணர்ந்து அவர்கள் உடனடியாக விறுவிறுப்போடு செயல்பட ஆரம்பித்தார்கள். 1919-ன் செப்டம்பர் மாதத்தில் ஒரு மாநாடு நடத்த ஏற்பாடு செய்தார்கள். அதே வருடம், காவற்கோபுரத்தின் துணைப் பத்திரிகை முதன்முதலாக பிரசுரிக்கப்பட்டது. அப்போது பொற்காலம் (இப்போது விழித்தெழு!) என அழைக்கப்பட்ட இது, இவ்வுலகின் சீரழிந்த நிலையை தைரியமாக பகிரங்கப்படுத்துவதிலும் சுத்தமாயிருக்க கடவுளது மக்களுக்கு உதவுவதிலும் காவற்கோபுரத்தை எப்போதும் ஆதரித்து வந்திருக்கிறது. முன்னறிவிக்கப்பட்ட 1,290 நாட்களின் முடிவில், பரிசுத்தவான்கள் சுத்தமாக்கப்பட்டு மீண்டும் நல்ல நிலைநிற்கை பெறும் நிலைக்கு வந்துவிட்டார்கள். செப்டம்பர் 1922-ல், இந்தக் காலப்பகுதி முடிந்த சமயத்தில், அவர்கள் அமெரிக்காவிலுள்ள ஒஹாயோவின் சீடர் பாய்ன்டில் நடத்திய மாநாடு திருப்புக்கட்டமாய் அமைந்தது. அது பிரசங்க வேலைக்கு மிகப் பெரிய தூண்டுகோலாய் அமைந்தது. இருந்தாலும், இன்னும் அதிக முன்னேற்றம் செய்யவேண்டியிருந்தது. அது அடுத்த குறிப்பிடத்தக்க காலப்பகுதியில் நடக்கவிருந்தது.
பரிசுத்தவான்களுக்கு சந்தோஷம்
24 பரிசுத்தவான்களைப் பற்றிய தீர்க்கதரிசனத்தை யெகோவாவின் தூதன் இவ்வாறு முடிக்கிறார்: “ஆயிரத்து முந்நூற்று முப்பத்தைந்து நாள்மட்டும் காத்திருந்து சேருகிறவன் பாக்கியவான் [“சந்தோஷமுள்ளவன்,” NW].” (தானியேல் 12:12) இந்த மூன்றாம் காலப்பகுதி எப்போது ஆரம்பித்து, எப்போது முடியும் என்பதைக் குறித்து தூதன் எவ்வித துப்பும் தரவில்லை. அது முந்தைய காலப்பகுதி முடிந்த உடனேயே ஆரம்பிப்பதாய் சரித்திரம் காட்டுகிறது. அப்படியென்றால் இது 1922-ன் [வட அரைகோள] இலையுதிர்காலம் முதல் 1926-ன் இளவேனிற்காலத்தின் பிற்பகுதி வரை நீடிக்கும். இக்காலப்பகுதியின் முடிவில் பரிசுத்தவான்கள் சந்தோஷமான நிலைமையை அடைந்தார்களா? ஆம், குறிப்பிடத்தக்க ஆவிக்குரிய விதங்களில்.
25 1922-ல் நடைபெற்ற மாநாட்டிற்குப் பிறகும்கூட (பக்கம் 302-ல் காட்டப்பட்டுள்ளது), கடவுளுடைய பரிசுத்தவான்களில் சிலர் கடந்தகாலத்தை ஏக்கத்தோடு நினைத்துப் பார்த்தார்கள். அப்போதும் அவர்களது கூட்டங்களில் பைபிளையே முக்கிய பாட புத்தகமாக பயன்படுத்தினார்கள். அதோடு சி. டி. ரஸலின் வேதாகமங்களின்பேரில் படிப்புகள் (ஆங்கிலம்) தொகுதிகளும் பயன்படுத்தப்பட்டன. ஆயினும், 1925-ஆம் ஆண்டில் உயிர்த்தெழுதல் ஆரம்பமாகி பூமி பரதீஸாக மாறும் என அச்சமயத்தில் பரவலாக நம்பப்பட்டது. இவ்வாறு அநேகர் ஒரு குறிப்பிட்ட தேதியை மனதில்வைத்து சேவைசெய்து வந்தனர். சிலர் பிரசங்க ஊழியத்தில் பங்குகொள்வதை ஆணவத்தோடு மறுத்தனர். இந்நிலைமைகள் சந்தோஷமளிப்பவையாய் இல்லை.
26 இருந்தாலும் 1,335 நாட்கள் செல்லச்செல்ல, இவை அனைத்தும் மாற ஆரம்பித்தன. பிரசங்க வேலை முதலிடத்தைப் பிடித்தது; அனைவரும் அதில் பங்குகொள்ளும்படி ஒழுங்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. வாராவாரம் காவற்கோபுரத்தைப் படிக்க சபைக் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. மார்ச் 1, 1925 தேதியிட்ட பிரதி, “ஒரு தேசத்தின் பிறப்பு” என்ற குறிப்பிடத்தக்க கட்டுரையை பிரசுரித்தது. 1914-19 காலப்பகுதியில் நடைபெற்றவற்றை தெளிவாக புரிந்துகொள்ள கடவுளது மக்களுக்கு இது உதவியது. 1925-க்குப் பிறகு, பரிசுத்தவான்கள் இனியும் ஒரு சமீப தேதியை திட்டவட்டமாக மனதில்கொண்டு கடவுளை சேவிக்கவில்லை. மாறாக, யெகோவாவின் நாமம் பரிசுத்தமாக்கப்படுவதே அதிமுக்கியமாக இருந்தது. இந்த முக்கிய சத்தியம், ஜனவரி 1, 1926 ஆங்கில காவற்கோபுரத்தில் “யெகோவாவை யார் கனப்படுத்துவார்கள்?” என்ற கட்டுரையில் முன்னொருபோதும் இல்லாத அளவுக்கு சிறப்பித்துக் காட்டப்பட்டது. மே 1926-ல் நடந்த மாநாட்டில் விடுதலை என்ற ஆங்கில புத்தகம் வெளியிடப்பட்டது. (பக்கம் 302-ஐக் காண்க.) இது, வேதாகமங்களின்பேரில் படிப்புகள் புத்தகத்தை மாற்றீடு செய்யவிருந்த புதிய புத்தகங்களில் ஒன்று. இனியும் பரிசுத்தவான்கள் கடந்தகாலத்தை நினைத்துக்கொண்டில்லை. எதிர்காலத்தையும் செய்யவிருந்த ஊழியத்தையும் நம்பிக்கையோடு எதிர்நோக்கியிருந்தனர். முன்னறிவிக்கப்பட்டபடி, 1,335 நாட்களின் முடிவில் பரிசுத்தவான்கள் சந்தோஷமான நிலையில் இருந்தார்கள்.
27 ஆனால் இந்தக் கொந்தளிப்பான காலங்களில் அனைவரும் சகித்திருக்கவில்லை. ‘காத்திருக்கவேண்டியதன்’ முக்கியத்துவத்தை தூதன் வலியுறுத்தியதற்கு சந்தேகமில்லாமல் இதுவே காரணம். சகிப்புத்தன்மையோடு காத்திருந்தவர்கள் மிகுந்த ஆசீர்வாதம் பெற்றார்கள். தானியேல் 12-ஆம் அதிகாரத்தின் சாராம்சம் இதைத் தெளிவாக்குகிறது. முன்னறிவிக்கப்பட்டபடியே அபிஷேகம் செய்யப்பட்டவர்கள் புத்துயிர் பெற்றார்கள் அல்லது ஆவிக்குரிய கருத்தில் உயிர்த்தெழுப்பப்பட்டார்கள். கடவுளது வார்த்தையைப் புரிந்துகொள்ளும் அபார அறிவு அவர்களுக்கு வழங்கப்பட்டது. அதில் ‘இங்கும் அங்கும் ஓடி ஆராயவும்,’ பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலோடு மிகப் பழமையான புதிர்களை விடுவிக்கவும் அதிகாரம்பெற்றார்கள். யெகோவா அவர்களை சுத்திகரித்து, ஆவிக்குரிய கருத்தில் நட்சத்திரங்களைப்போல் பிரகாசிக்கச் செய்தார். இதன் விளைவாய், யெகோவா தேவனுக்கு முன்பாக நீதியுள்ள நிலைநிற்கை பெற அவர்கள் அநேகருக்கு உதவினர்.
28 ‘உன்னதமானவருடைய பரிசுத்தவான்களை’ கண்டறிவதற்கு இவ்வளவு தீர்க்கதரிசன அடையாளங்கள் இருக்கின்றன. ஆகவே, அவர்களை அடையாளங்கண்டு அவர்களோடு கூட்டுறவுகொள்ள தவறுவதற்கு ஏதாவது சாக்கு சொல்ல முடியுமா என்ன? எண்ணிக்கையில் குறைந்துவரும் இந்த அபிஷேகம்செய்யப்பட்ட வகுப்பாரோடு சேர்ந்து யெகோவாவை சேவிக்கும் திரள் கூட்டத்தினருக்கு அருமையான ஆசீர்வாதங்கள் காத்திருக்கின்றன. கடவுளது வாக்குறுதிகளின் நிறைவேற்றத்திற்காக நாம் அனைவரும் ஆவலோடு காத்திருக்கவேண்டும். (ஆபகூக் 2:3) நம் நாளில் பெரிய அதிபதியாகிய மிகாவேல், கடவுளது மக்களின் சார்பாக பல பத்தாண்டுகளாய் நின்றுகொண்டிருக்கிறார். இந்த ஒழுங்குமுறையை நியாயந்தீர்க்க கடவுளால் நியமிக்கப்பட்டவராய் அவர் விரைவில் செயலில் இறங்குவார். அவ்வாறு அவர் நடவடிக்கை எடுக்கையில் நம் நிலை என்னவாயிருக்கும்?
29 இதற்கான பதில், இப்போது உத்தம வாழ்க்கை வாழ தெரிவுசெய்கிறோமா என்பதிலேயே சார்ந்திருக்கிறது. ‘முடிவுகாலம்’ முடியவிருக்கும் இச்சமயத்தில், இவ்வாறு வாழ்வதற்கான நம் தீர்மானத்தை பலப்படுத்த, தானியேல் புத்தகத்தின் கடைசி வசனத்தை அடுத்த அதிகாரத்தில் சிந்திப்போமாக. அந்தக் கலந்தாலோசிப்பு, தானியேல் எவ்வாறு கடவுள் முன்பு நின்றார் என்பதையும் எதிர்காலத்தில் எவ்வாறு நிற்கப்போகிறார் என்பதையும் தெரிந்துகொள்ள நமக்கு உதவும்.
[அடிக்குறிப்புகள்]
a கிரேக்க செப்டுவஜின்டில் வெறுமனே “பலி” என மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.
நீங்கள் என்ன புரிந்துகொண்டீர்கள்?
• எந்தக் காலப்பகுதியில் மிகாவேல் ‘நிற்கிறார்,’ அவர் எப்படி, எப்போது ‘எழும்புவார்’?
• தானியேல் 12:2 என்ன விதமான உயிர்த்தெழுதலைப் பற்றி குறிப்பிடுகிறது?
• இவை எப்போது ஆரம்பித்து, எப்போது முடிவடைந்தன:
தானியேல் 12:7-ல் குறிப்பிடப்பட்டுள்ள மூன்றரை காலங்கள்?
தானியேல் 12:11-ல் முன்னறிவிக்கப்பட்டுள்ள 1,290 நாட்கள்?
தானியேல் 12:12-ல் முன்னறிவிக்கப்பட்டுள்ள 1,335 நாட்கள்?
• தானியேல் 12-ஆம் அதிகாரத்திற்கு கவனம் செலுத்துவது, யெகோவாவின் உண்மை வணக்கத்தாரை அடையாளங்காண நமக்கு எவ்வாறு உதவுகிறது?
[கேள்விகள்]
1. தானியேல் 7-ஆம் அதிகாரத்தின்படி, நம் காலத்தில் சிறிய, தற்காப்பில்லாத ஒரு தொகுதியினருக்கு என்ன அசாதாரண அனுபவங்கள் ஏற்படவிருந்தன?
2. (அ) யெகோவா தமது அபிஷேகம் செய்யப்பட்ட ஊழியர்களை எவ்வாறு கருதுகிறார்? (ஆ) இந்நாட்களில் எதைச் செய்வது புத்திசாலித்தனம்?
3. (அ) இயேசுவின் அபிஷேகம் செய்யப்பட்ட சீஷர்களை அடையாளங்கண்டு அவர்களோடு நெருக்கமான கூட்டுறவுகொள்வது ஏன் சுலபமல்ல? (ஆ) தானியேல் 12-ஆம் அதிகாரம் இந்த விஷயத்தில் நமக்கு எவ்வாறு உதவும்?
4. (அ) தானியேல் 12:1 மிகாவேலைக் குறித்து எந்த இரண்டு தெளிவான காரியங்களை முன்னறிவிக்கிறது? (ஆ) தானியேல் புத்தகத்தில், ஒரு ராஜா ‘நிற்பது’ பெரும்பாலும் எதை அர்த்தப்படுத்துகிறது?
5, 6. (அ) எந்தக் காலப்பகுதியில் மிகாவேல் நிற்கிறார்? (ஆ) எப்போது, எப்படி மிகாவேல் ‘எழும்புவார்,’ என்ன விளைவுகளுடன்?
7. (அ) வரவிருக்கும் ‘ஆபத்துக்காலத்தில்’ விசுவாசிகள் அனைவருக்கும் என்ன நம்பிக்கை இருக்கிறது? (ஆ) யெகோவாவின் புஸ்தகம் எது, அதில் பெயர் இடம்பெறுவது ஏன் முக்கியம்?
8. தானியேல் 12:2 என்ன சந்தோஷமான எதிர்பார்ப்பை அளிக்கிறது?
9. (அ) தானியேல் 12:2 கடைசி நாட்களில் நிறைவேறும் என எதிர்பார்ப்பது ஏன் நியாயமானது? (ஆ) இத்தீர்க்கதரிசனம் எவ்வித உயிர்த்தெழுதலைப் பற்றி பேசுகிறது, நமக்கு எவ்வாறு தெரியும்?
10. (அ) அபிஷேகம் செய்யப்பட்ட மீதியானோர் எந்த அர்த்தத்தில் கடைசி நாட்களில் உயிர்த்தெழுப்பப்பட்டார்கள்? (ஆ) புத்துயிர் பெற்ற அபிஷேகம் செய்யப்பட்டவர்களில் சிலர், எவ்வாறு “நித்திய நிந்தைக்கும் இகழ்ச்சிக்கும்” விழித்து எழுந்தார்கள்?
11. இன்று “ஞானவான்கள்” யார், அவர்கள் எந்த அர்த்தத்தில் நட்சத்திரங்களைப்போல் பிரகாசிக்கிறார்கள்?
12. (அ) முடிவு காலத்தில், அபிஷேகம் செய்யப்பட்டவர்கள் எவ்வாறு ‘அநேகரை நீதிக்குட்படுத்தியிருக்கிறார்கள்’? (ஆ) அபிஷேகம் செய்யப்பட்டவர்கள் கிறிஸ்துவின் ஆயிர வருட அரசாட்சியில் எவ்வாறு அநேகரை நீதிக்குட்படுத்தி, ‘நட்சத்திரங்களைப்போல பிரகாசிப்பார்கள்’?
13. எந்த அர்த்தத்தில் தானியேல் புத்தகம் முத்திரையிடப்பட்டு, ரகசியமாய் வைக்கப்பட்டது?
14. (அ) ‘முடிவுகாலத்தில்’ யார், எங்கே ‘ஓடி ஆராய்ந்திருக்கிறார்கள்’? (ஆ) இவ்வாறு ‘ஓடி ஆராய்ந்ததை’ யெகோவா ஆசீர்வதித்தார் என்பதற்கு என்ன அத்தாட்சி உண்டு?
15. இப்போது தூதன் எழுப்பும் கேள்வி என்ன, இக்கேள்வி யாரை நமக்கு நினைப்பூட்டுகிறது?
16. தூதன் என்ன தீர்க்கதரிசனம் உரைக்கிறார், அது நிச்சயமாய் நிறைவேறும் என்பதை எவ்வாறு வலியுறுத்துகிறார்?
17. (அ) தானியேல் 7:25, தானியேல் 12:7, வெளிப்படுத்துதல் 11:3, 7, 9 ஆகிய வசனங்களில் உள்ள தீர்க்கதரிசனங்களில் என்ன ஒற்றுமைகள் காணப்படுகின்றன? (ஆ) மூன்றரை காலங்கள் எவ்வளவு நாட்களைக் குறிக்கின்றன?
18. (அ) தானியேல் 12:7-ன்படி, 1,260 நாட்களின் முடிவை எது குறிக்கும்? (ஆ) ‘பரிசுத்தவான்களின் வல்லமை’ எப்போது நொறுக்கப்பட்டது, இது எவ்வாறு நடந்தது? (இ) 1,260 நாட்கள் எப்போது ஆரம்பமாயின, அந்தக் காலப்பகுதியில் அபிஷேகம் செய்யப்பட்டவர்கள் எப்படி ‘இரட்டு வஸ்திரந்தரித்து’ பிரசங்கித்தார்கள்?
19. வெளிப்படுத்துதல் 11-ஆம் அதிகாரத்திலுள்ள தீர்க்கதரிசனம், அபிஷேகம் செய்யப்பட்டவர்கள் வெகு காலத்திற்கு செயலற்று இருக்க மாட்டார்கள் என்ற உறுதியை எப்படி தருகிறது?
20. தானியேல் 12:10-ன்படி, கஷ்டங்களை சகித்த பிறகு அபிஷேகம் செய்யப்பட்டவர்கள் என்ன ஆசீர்வாதங்களை அனுபவிப்பார்கள்?
21. (அ) தானியேல் 12:11-ல் முன்னறிவிக்கப்பட்டிருக்கும் காலப்பகுதி, என்ன நிலைமைகளுக்குப் பிற்பாடு ஆரம்பமாகும்? (ஆ) ‘அன்றாட பலி’ எது, எப்போது நீக்கப்பட்டது? (பக்கம் 298-ல் உள்ள பெட்டியைக் காண்க.)
22. (அ) பாழாக்கும் ‘அருவருப்பு’ எது, எப்போது ஸ்தாபிக்கப்பட்டது? (ஆ) தானியேல் 12:11-ல் முன்னறிவிக்கப்பட்டிருக்கும் காலப்பகுதி எப்போது ஆரம்பமாகி, எப்போது முடிவடைந்தது?
23. தானியேல் 12-ஆம் அதிகாரத்தில் முன்னறிவிக்கப்பட்டிருக்கும் 1,290 நாட்களின்போது கடவுளுடைய பரிசுத்தவான்கள் எவ்வாறு சுத்தமான நிலைநிற்கை பெறும் அளவுக்கு முன்னேறினார்கள்?
24, 25. (அ) தானியேல் 12:12-ல் முன்னறிவிக்கப்பட்டிருக்கும் காலப்பகுதி எது, எப்போது ஆரம்பித்து, எப்போது முடிவடைந்தது? (ஆ) 1,335 நாட்களின் ஆரம்பத்தில் அபிஷேகம் செய்யப்பட்ட மீதியானோரின் ஆவிக்குரிய நிலை என்ன?
26. 1,335 நாட்கள் செல்லச்செல்ல, அபிஷேகம் செய்யப்பட்டவர்களின் ஆவிக்குரிய நிலைமை எவ்வாறு மாறியது?
27. தானியேல் 12-ஆம் அதிகாரத்தின் சாராம்சம், யெகோவாவின் அபிஷேகம் செய்யப்பட்ட ஊழியர்களை தெளிவாய் அடையாளங்காண நமக்கு எவ்வாறு உதவும்?
28, 29. ‘முடிவுகாலம்’ முடியவிருக்கும் இச்சமயத்தில் நம் தீர்மானம் என்னவாய் இருக்கவேண்டும்?
[பக்கம் 298-ன் பெட்டி]
அன்றாட பலி நீக்கப்படுதல்
தானியேல் புத்தகத்தில், ‘அன்றாடபலி’ என்ற பதம் ஐந்து முறை வருகிறது. இது, யெகோவா தேவனுக்கு அவரது ஊழியர்கள் இடைவிடாமல் செலுத்தும் “உதடுகளின் கனியாகிய” ஸ்தோத்திர பலியைக் குறிக்கிறது. (எபிரெயர் 13:15) அது நீக்கப்படும் என்பது தானியேல் 8:11, 11:31, 12:11 ஆகிய வசனங்களில் முன்னறிவிக்கப்பட்டது.
இரண்டு உலகப் போர்களின் போதுமே, “வடதிசை,” “தென்றிசை” ராஜாக்களின் ஆட்சியில் யெகோவாவின் மக்கள் கடுமையாய் துன்புறுத்தப்பட்டனர். (தானியேல் 11:14, 15) முதல் உலகப்போரைப் பின்தொடர்ந்து, 1918-ன் மத்திபத்தில் பிரசங்கவேலை கிட்டத்தட்ட நிறுத்தப்பட்டபோது, ‘அன்றாடபலி’ நீக்கப்பட்டது. (தானியேல் 12:7) இரண்டாம் உலகப் போரின்போதும் அதேவிதமாய் ‘அன்றாடபலி’ ஆங்கிலோ-அமெரிக்க உலக வல்லரசால் 2,300 நாட்களுக்கு ‘நீக்கப்பட்டது.’ (தானியேல் 8:11-14; இப்புத்தகத்தின் 10-ஆம் அதிகாரத்தைக் காண்க.) அது, வேதவாக்கியங்களில் குறிப்பிடப்படாத காலப்பகுதிக்கு நாசி ‘கரங்களாலும்’ நீக்கப்பட்டது.—தானியேல் 11:31; இப்புத்தகத்தின் 15-ஆம் அதிகாரத்தைக் காண்க.
[பக்கம் 301-ன் அட்டவணை/படங்கள்]
தானியேலில் தீர்க்கதரிசன காலப்பகுதிகள்
ஏழு காலங்கள் (2,520 வருடங்கள்): பொ.ச.மு. 607, அக்டோபர் முதற்கொண்டு
தானியேல் 4:16, 25 பொ.ச. 1914 அக்டோபர் வரை
(மேசியானிய ராஜ்யம் ஸ்தாபிக்கப்பட்டது.
இப்புத்தகத்தின் 6-ஆம் அதிகாரத்தைக் காண்க.)
மூன்றரை காலங்கள் டிசம்பர் 1914 முதற்கொண்டு ஜூன் 1918 வரை
(1,260 நாட்கள்): (அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள்
துன்புறுத்தப்படுகிறார்கள்.
தானியேல் 7:25; 12:7 இப்புத்தகத்தின் 9-ஆம் அதிகாரத்தைக் காண்க.)
2,300 இரவுகளும் ஜூன் 1 அல்லது 15, 1938 முதற்கொண்டு
பகல்களும்: அக்டோபர் 8 அல்லது 22, 1944 வரை
தானியேல் 8:14 (‘திரள் கூட்டத்தார்’ தோன்றுகின்றனர்,
அதிகரிக்கின்றனர்.
இப்புத்தகத்தின் 10-ஆம் அதிகாரத்தைக் காண்க.)
70 வாரங்கள் (490 வருடங்கள்): பொ.ச.மு. 455 முதற்கொண்டு பொ.ச.
தானியேல் 9:24-27 36 வரை
மேசியாவின் வருகையும்,
பூமிக்குரிய ஊழியமும். இப்புத்தகத்தின்
11-ஆம் அதிகாரத்தைக் காண்க.)
1,290 நாட்கள்: ஜனவரி 1919 முதற்கொண்டு
தானியேல் 12:11 செப்டம்பர் 1922 வரை
(அபிஷேகம் செய்யப்பட்ட
கிறிஸ்தவர்கள் விழித்தெழுந்து,
ஆவிக்குரிய விதத்தில் முன்னேறுகிறார்கள்.)
1,335 நாட்கள்: செப்டம்பர் 1922 முதற்கொண்டு மே
1926 வரை
தானியேல் 12:12 (அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள்
சந்தோஷமான நிலையைப் பெறுகிறார்கள்.)
[பக்கம் 287-ன் படங்கள்]
யெகோவாவின் ஊழியர்களில் முக்கிய பிரமுகர்கள் அமெரிக்காவிலுள்ள, ஜார்ஜியா, அட்லாண்டாவின் ஃபெடரல் சீர்திருத்த சிறைச்சாலைக்கு அநியாயமாய் அனுப்பப்பட்டனர். இடமிருந்து வலம்: (அமர்ந்திருப்போர்) ஏ. எச். மாக்மில்லன், ஜே. எஃப். ரதர்ஃபோர்டு, டபிள்யூ. ஈ. வான் ஆம்பர்க்; (நிற்போர்) ஜி. எச். ஃபிஷர், ஆர். ஜே. மார்டின், ஜி. டிசெக்கா, எஃப். எச். ராபிசன், சி. ஜே. உட்வர்த்
[பக்கம் 299-ன் படங்கள்]
அமெரிக்காவிலுள்ள ஒஹாயோ, சீடர் பாய்ன்டில் 1919-லும் (மேலே), 1922-லும் (கீழே) நடத்தப்பட்ட மாநாடுகள் திருப்புக்கட்டமாய் அமைந்தன
[பக்கம் 302-ன் முழுபடம்]