பெரிய அதிபதியாகிய மிகாவேலின் முடிவான வெற்றி
“உன் ஜனத்தின் புத்திரருக்காக நிற்கிற பெரிய அதிபதியாகிய மிகாவேல் அக்காலத்திலே எழும்புவான்.”—தானியேல் 12:1.
1. யெகோவாவின் பேரரசுரிமையிடமாக அநேக உலக ஆட்சியாளர்கள் என்ன மனநிலையை வெளிக்காட்டியிருக்கின்றனர், வடதிசை ராஜா எவ்விதத்தில் வித்தியாசப்பட்டவனாக இருக்கவில்லை?
“நான் இஸ்ரவேலைப் போகவிடக் கர்த்தரின் [யெகோவாவின், NW] வார்த்தையைக் கேட்கிறதற்கு அவர் யார்?” (யாத்திராகமம் 5:2) இவையே மோசேயிடம் பார்வோனின் நிந்திக்கும் வார்த்தைகள். யெகோவாவின் ஒப்புயர்வற்ற தேவத்துவத்தை ஒத்துக்கொள்ள மறுப்பவனாய், இஸ்ரவேலை அடிமைத்தனத்தில் வைப்பதற்குப் பார்வோன் தீர்மானமாயிருந்தான். ஏனைய ஆட்சியாளர்களும் யெகோவாவுக்கு அதேபோன்ற ஏளன இகழ்ச்சியைக் காண்பித்திருக்கின்றனர்; தானியேல் தீர்க்கதரிசனத்திலுள்ள ராஜாக்கள் இதற்கு விதிவிலக்கானவர்கள் அல்ல. (ஏசாயா 36:13-20) உண்மையில், வடதிசை ராஜா இன்னும் மேலாகச் சென்றுவிட்டான். அந்தத் தூதன் சொல்கிறார்: “தன்னை உயர்த்தி, எந்தத் தேவனிலும் தன்னைப் பெரியவனாக்கி, தேவாதிதேவனுக்கு விரோதமாக ஆச்சரியமான காரியங்களைப் பேசுவான்; . . . அவன் தன் பிதாக்களின் தேவர்களை மதியாமலும், ஸ்திரீகளின் சிநேகத்தையும், எந்தத் தேவனையும் மதியாமலும், எல்லாவற்றிற்கும் தன்னைப் பெரியவனாக்கி” கொள்வான்.—தானியேல் 11:36, 37.
2, 3. எந்த விதத்தில் வடதிசை ராஜா மற்றொரு ‘தேவனை’ வணங்குவதற்குச் சாதகமாக “தன் பிதாக்களின் தேவர்களை” நிராகரித்தான்?
2 இந்தத் தீர்க்கதரிசன வார்த்தைகளை நிறைவேற்றுபவனாய், வடதிசை ராஜா “தன் பிதாக்களின் தேவர்களை” (அல்லது, “தன் மூதாதைய கடவுள்களை,” தி நியூ இங்கிலிஷ் பைபிள்), அவை ரோம புறமத கடவுள்களாக இருந்தாலும் சரி, கிறிஸ்தவமண்டலத்தின் திரித்துவ தெய்வமாக இருந்தாலும் சரி, அவற்றை நிராகரித்தான். ஹிட்லர் கிறிஸ்தவமண்டலத்தைத் தன் சொந்த நோக்கங்களுக்காகப் பயன்படுத்தினான்; ஆனால் அத்தாட்சிகளின்படி, ஒரு புதிய ஜெர்மானிய சர்ச்சால் அவளை மாற்றீடு செய்ய திட்டமிட்டான். அவனைத் தொடர்ந்துவந்த ராஜா நேரடியான நாத்திகத்தை முன்னேற்றுவித்தான். இவ்வாறு வடதிசை ராஜா “எல்லாவற்றிற்கும் தன்னைப் பெரியவனாக்கி” தன்னைத்தானே ஒரு கடவுளாக்கிக் கொண்டிருந்தான்.
3 அந்தத் தீர்க்கதரிசனம் தொடர்கிறது: “அரண்களின் தேவனைத் தன் ஸ்தானத்திலே கனம்பண்ணி, தன் பிதாக்கள் அறியாத ஒரு தேவனைப் பொன்னினாலும், வெள்ளியினாலும், இரத்தினங்களினாலும், உச்சிதமான வஸ்துக்களினாலும் கனம்பண்ணுவான்.” (தானியேல் 11:38) உண்மையில், வடதிசை ராஜா நவீன அறிவியல்பூர்வ இராணுவமாகிய “அரண்களின் தேவன்”மேல் தன் நம்பிக்கையை வைத்தான். முடிவின் காலம் முழுவதும் இந்த ‘கடவுள்’ மூலமாக, அதன் பலிபீடத்தின்மேல் ஏகப்பட்ட செல்வத்தைப் பலியாக்கி, இரட்சிப்பை நாடியிருக்கிறான்.
4. வடதிசை ராஜா என்ன வெற்றியை அடைந்திருந்தான்?
4 “ஓர் அந்நிய கடவுளுடன் சேர்ந்து, மிகவும் அரணிப்பான கோட்டைகளுக்கு விரோதமாக அவன் திறம்பட்டவிதத்தில் செயல்படுவான். அவனுக்கு அங்கீகாரம் அளித்திருக்கும் எவரும் மகிமையால் நிரம்பியிருக்கும்படி செய்து, உண்மையில், அவர்கள் அநேகருக்குள் ஆளும்படி செய்வான்; மேலும் அவன் நிலத்தை விலைக்குப் பங்கிட்டுக்கொடுப்பான்.” (தானியேல் 11:39, NW) தன்னுடைய இராணுவ ‘அந்நிய கடவுளில்’ நம்பிக்கைவைத்து, வடதிசை ராஜா மிகவும் “திறம்பட்டவிதத்தில்” செயல்பட்டிருக்கிறான்; “கடைசி நாட்களில்” ஒரு வெல்லமுடியாத இராணுவ பலமாக நிரூபிக்கிறான். (2 தீமோத்தேயு 3:1) அவனுடைய கருத்துப்போக்கை ஆதரித்தவர்கள், அரசியல், நிதி, சிலநேரங்களில் இராணுவ ஆதரவால் பலனளிக்கப்பட்டனர்.
“முடிவு காலத்தில்”
5, 6. தென்திசை ராஜா எவ்வாறு ‘முட்டுக்கு நின்றான்,’ வடதிசை ராஜா எவ்வாறு பிரதிபலித்தான்?
5 தானியேல் 11:40அ வாசிக்கிறது: “முடிவுகாலத்திலோவென்றால், தென்றிசை ராஜா அவனோடே முட்டுக்கு நிற்பான்.” இதுவும் இதைத் தொடரும் வசனங்களும் நம்முடைய எதிர்காலத்தில் ஒரு நிறைவேற்றத்தைக் கொண்டிருக்கும் என்று கருதப்படுகின்றன. இருந்தாலும், இங்கே ‘முடிவு காலம்’ என்பது தானியேல் 12:4, 9-லுள்ள அதே அர்த்தத்தை உடையதாய் இருந்தால், இந்த வார்த்தைகளின் நிறைவேற்றத்திற்காக நாம் கடைசி நாட்கள் முழுவதும் நோக்கி இருக்கவேண்டும். இந்தச் சமயத்தில், தென்திசை ராஜா வடதிசை ராஜாவுடன் ‘முட்டுக்கு நின்றிருக்கிறானா’? ஆம், உண்மையில் அவ்வாறிருந்தான். முதல் உலகப் போருக்குப்பின், தண்டனை இயல்புடைய சமாதான ஒப்பந்தம் நிச்சயமாக ‘முட்டுக்கு நிற்பதாக,’ பழிக்குப் பழி வாங்குவதற்கான ஒரு தூண்டுதலாக இருந்தது. இரண்டாம் உலகப் போரில் அவனுடைய வெற்றிக்குப்பின், தென்திசை ராஜா அவனுடைய எதிராளியின்மீது அச்சுறுத்தும் அணு ஆயுதங்களைக் குறியிலக்காக வைத்து, அவனுக்கு விரோதமாக ஒரு வல்லமையான இராணுவ கூட்டாகிய NATO-வை அமைத்தான். வருடங்கள் கடந்து சென்றபோது, உயர்ந்த தொழில்நுட்பம் வாய்ந்த வேவுபார்த்தல், அதோடு அரசியல் செயல்திறம் மற்றும் இராணுவ தாக்குதல் ஆகியவற்றை அவனுடைய ‘முட்டுக்கு நிற்பது’ உட்படுத்தியது.
6 வடதிசை ராஜா எப்படி பிரதிபலித்தான்? “வடதிசை ராஜாவும் இரதங்களோடும் குதிரைவீரர்களோடும் அநேகம் கப்பல்களோடும் சூறைக்காற்றுபோல் அவனுக்கு விரோதமாய் வருவான்; அவன் தேசங்களுக்குள் பிரவேசித்து, அவைகளைப் பிரவாகித்துக் கடந்துபோவான்.” (தானியேல் 11:40ஆ) கடைசி நாட்களின் சரித்திரம், வடதிசை ராஜாவின் ஆட்சி எல்லையின் விரிவாக்கத்தைச் சிறப்பித்துக் காட்டியது. இரண்டாம் உலகப் போரின்போது, நாசி “ராஜா” தன்னுடைய எல்லைகளைக் கடந்து சுற்றியுள்ள தேசங்களுக்குள் பெருக்கெடுத்து வந்தான். அந்தப் போரின் முடிவில், பின்னர் ஆட்சிக்கு வந்த “ராஜா” தன் சொந்த எல்லைகளுக்கு வெளியே ஒரு வல்லமையான பேரரசைக் கட்டியமைத்தான். பனிப்போரின்போது, வடதிசை ராஜா தன்னுடைய எதிராளியுடன் மறைமுகமாக, மற்ற நாடுகளுக்கு இடையிலான போர்களை ஆதரிப்பதன்மூலமும், ஆப்பிரிக்கா, ஆசியா, மற்றும் லத்தீன் அமெரிக்காவிலுள்ள கிளர்ச்சிகள் மூலமும் சண்டையிட்டான். அவன் உண்மை கிறிஸ்தவர்களை அவர்களுடைய நடவடிக்கையைக் கட்டுப்படுத்துவதன்மூலம் (ஆனால் எவ்விதத்திலும் நிறுத்திவிடாமல்) துன்புறுத்தினான். அவனுடைய இராணுவ மற்றும் அரசியல் தாக்குதல்கள் பல தேசங்களை அவனுடைய ஆதிக்கத்தின்கீழ் கொண்டுவந்தன. இது சரியாகவே அந்தத் தூதன் தீர்க்கதரிசனம் உரைத்ததுபோல் இருந்தது: “அவன் சிங்காரமான தேசத்திலும் [கடவுளுடைய மக்களின் ஆவிக்குரிய தேசம்] வருவான்; அப்பொழுது அநேக தேசங்கள் கவிழ்க்கப்படும்.”—தானியேல் 11:41அ.
7. வடதிசை ராஜாவின் ஆட்சி எல்லை விரிவாக்கத்திற்கு என்ன வரையறைகள் இருந்தன?
7 என்றபோதிலும்,—அவனுடைய எதிராளியின் நோக்குநிலையிலிருந்து—வடதிசை ராஜா ஓர் அச்சுறுத்தும் தோற்றமாகத் தெரிந்திருந்தாலும், அவன் உலக வெற்றியை அடையவில்லை. “ஆனாலும் ஏதோமும், மோவாபும், அம்மோன் புத்திரரில் பிரதானமானவர்களும் அவன் கைக்குத் தப்பிப்போவார்கள்.” (தானியேல் 11:41ஆ) பண்டைய காலங்களில், ஏதோம், மோவாப், மற்றும் அம்மோன், ஏறக்குறைய எகிப்துக்கும் சீரியாவுக்கும் இடையில் அமைக்கப்பட்டிருந்தன. வடதிசை ராஜா குறியிலக்காகக் கொண்டிருந்து, ஆனால் தன்னுடைய செல்வாக்கின்கீழ் கொண்டுவர முடியாத தேசங்களையும் அமைப்புகளையும் அவை குறிப்பதாக எடுத்துக்கொள்ளலாம்.
‘எகிப்து தப்புவதில்லை’
8, 9. வடதிசை ராஜாவின் செல்வாக்கு எப்படி அவனுடைய முக்கிய எதிரியால்கூட உணரமுடிந்தது?
8 அந்தத் தூதன் தொடர்ந்து சொல்கிறார்: “அவன் தேசங்களின்மேல் தன் கையை நீட்டுவான்; எகிப்துதேசம் தப்புவதில்லை. எகிப்தினுடைய [மறைவான பொக்கிஷங்களாகிய, NW] பொன்னும் வெள்ளியுமான ஐசுவரியங்களையும் உச்சிதமான எல்லா வஸ்துக்களையும் ஆண்டுகொள்ளுவான்; லீபியரும் எத்தியோப்பியரும் அவனுக்குப் பின்செல்லுவார்கள்.” (தானியேல் 11:42, 43) தென்திசை ராஜாவாகிய “எகிப்து”கூட, வடதிசை ராஜாவின் விரிவாக்க திட்டங்களின் விளைவுகளுக்குத் தப்பவில்லை. உதாரணமாக, வியட்நாமில் அவன் குறிப்பிடத்தக்க தோல்வியை அனுபவித்தான். ‘லீபியரையும் எத்தியோப்பியரையும்’ பற்றியதென்ன? பண்டைய எகிப்தின் இந்த அயலார், நிலவியல் அமைப்பைச் சார்ந்தவகையில் சொன்னால், நவீன ‘எகிப்தின்’ அயலாராகவும், சில நேரங்களில் வடதிசை ராஜாவைப் பின்பற்றுபவர்களாக, ‘பின்செல்பவர்களாக’ இருந்திருக்கும் தேசங்களையும் முன்நிழலாகக் குறிப்பிடக்கூடும்.
9 ‘எகிப்தின் மறைவான பொக்கிஷங்களின்’மீது வடதிசை ராஜா ஆண்டுகொண்டிருந்தானா? அவன் நிச்சயமாக தென்திசை ராஜாவின்மீது வெற்றி கொள்ளவில்லை; மேலும் 1993 வரை உலக நிலைமை, அவன் வெற்றி கொள்வதைச் சாத்தியமற்றதாகத் தோன்றும்படி செய்திருக்கிறது. ஆனால் தென்திசை ராஜா தன்னுடைய நிதி வளங்களைப் பயன்படுத்தும் வகையில் அவன் ஒரு வல்லமையான செல்வாக்குச் செலுத்தி இருக்கிறான். தன் எதிராளிக்கான பயத்தின் காரணமாக, தென்திசை ராஜா, ஓர் எதிர்த்து நிற்கமுடியாத தரைப்படை, கப்பற்படை, மற்றும் விமானப்படையைப் பராமரிப்பதற்காகப் பெருந்தொகையை ஒவ்வொரு வருடமும் ஒதுக்கி வைத்திருக்கிறான். இந்த அளவிற்கு வடதிசை ராஜா தென்திசை ராஜாவின் செல்வத்தின் நிலையை ‘ஆண்டு கொண்டிருப்பதாக,’ கட்டுப்படுத்தியிருப்பதாகச் சொல்லப்படலாம்.
வடக்கத்திய ராஜாவின் முடிவான போர் நடவடிக்கை
10. இரு ராஜாக்களுக்கும் மத்தியிலுள்ள எதிர்ப்பின் முடிவை அந்தத் தூதன் என்ன விதத்தில் விவரிக்கிறார்?
10 இரு ராஜாக்களுக்கும் இடையிலான போட்டி வரையறையின்றி தொடருமா? இல்லை. அந்தத் தூதன் தானியேலிடம் சொன்னார்: “சூரியன் உதிக்கும் திசையிலும், வடக்கிலும் இருந்து வரும் செய்திகள் அவனைக் [வடதிசை ராஜா] கலங்கப்பண்ணும்; அப்பொழுது அவன் அநேகரை அழிக்கவும் சங்காரம் பண்ணவும் மகா உக்கிரத்தோடே நிச்சயமாகப் புறப்பட்டுப்போவான். மகா சமுத்திரத்திற்கும் சிங்காரமான பரிசுத்த பர்வதத்திற்கும் இடையில் தன் அரமனையாகிய கூடாரங்களை நாட்டுவான்; ஆனாலும் அவனுக்கு ஒத்தாசை பண்ணுவாரில்லாமல், அவன் முடிவடைவான்.”—தானியேல் 11:44, 45, NW.
11, 12. வடதிசை ராஜாவுக்கும் தென்திசை ராஜாவுக்கும் இடையிலுள்ள எதிர்ப்புடன் சமீப அரசியல் சம்பவங்களுக்கு என்ன தொடர்பு இருக்கிறது, நாம் இன்னும் என்ன கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது?
11 இந்தச் சம்பவங்கள் இனிவரும் எதிர்காலத்திற்கு உரியவையாய் இருக்கின்றன; ஆகவே தீர்க்கதரிசனம் எப்படி நிறைவேற்றப்படும் என்று நாம் விவரமாகச் சொல்ல முடியாது. சமீபத்தில், இரு ராஜாக்களைக்குறித்த அரசியல் நிலைமையும் மாறி இருக்கிறது. ஐக்கிய மாகாணங்களுக்கும் கிழக்கத்திய ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையிலுள்ள கடுமையான எதிர்ப்பு தணிந்திருக்கிறது. மேலும், 1991-ல் சோவியத் யூனியன் கலைக்கப்பட்டது; அது இனிமேலும் இல்லை.—ஜூன் 1, 1992, காவற்கோபுரம், பக்கங்கள் 4, 5-ஐப் பார்க்கவும்.
12 ஆகையால் இப்போது வடதிசை ராஜா யார்? பழைய சோவியத் யூனியனின் பாகமாய் இருந்த நாடுகளில் ஒன்றுடன் அவனை அடையாளப்படுத்த வேண்டுமா? அல்லது அவன் முன்னர் பலமுறை செய்திருப்பதைப்போல் முழுமையாகத் தன் அடையாளத்தை மாற்றிக்கொண்டிருக்கிறானா? நம்மால் சொல்ல முடியாது. தானியேல் 11:44, 45 நிறைவேறுகையில், வடதிசை ராஜாவாக இருக்கப்போவது யார்? இரு ராஜாக்களுக்கும் இடையிலுள்ள எதிர்ப்பு திரும்பவும் திடீரென சீற்றத்துடன் எழும்புமா? பல தேசங்களில் இன்னும் நிலைத்திருக்கும் பெரும் அணு ஆயுத சேகரிப்புகளைப் பற்றியதென்ன? காலம்தான் இந்தக் கேள்விகளுக்குப் பதில்களை அளிக்கும்.
13, 14. அந்த இரு ராஜாக்களின் எதிர்காலத்தைப்பற்றி நாம் என்ன தெரிந்திருக்கிறோம்?
13 ஒரு காரியம் நமக்குத் தெரிந்ததே. சீக்கிரத்தில், வடதிசை ராஜா ஒரு தாக்குதல் நடவடிக்கையை நடத்துவான்; இது “சூரியன் உதிக்கும் திசையிலும் வடக்கிலும் இருந்து வரும் செய்திகள் அவனைக் கலங்கப்பண்ணு”வதால் துவக்கிவைக்கப்படும். இந்த நடவடிக்கை அவனுடைய ‘முடிவுக்கு’ சற்றுமுன் நடக்கும். நாம் மற்ற பைபிள் தீர்க்கதரிசனங்களைக் கவனித்தால் இந்தச் “செய்திகள்”பற்றி அதிகத்தைக் கற்றுக்கொள்ளலாம்.
14 இருப்பினும், முதலில், வடதிசை ராஜாவின் இந்தச் செயல்கள் தென்திசை ராஜாவுக்கு விரோதமாகச் செய்யப்பட்டதாகச் சொல்லப்படவில்லை என்பதைக் கவனியுங்கள். தன்னுடைய பெரிய எதிரியின் கைகளில் அவன் முடிவுக்கு வருகிறதில்லை. அதேவிதமாக, தென்திசை ராஜா, வடதிசை ராஜாவால் அழிக்கப்படவில்லை. தெற்கத்திய ராஜா (மூர்க்க மிருகத்தின்மேல் தோன்றும் கடைசி கொம்பாக மற்ற தீர்க்கதரிசனங்களில் குறிப்பிடப்பட்டிருப்பவன்) [மனித] ‘கையினாலல்லாமல்’ கடவுளுடைய ராஜ்யத்தால் அழிக்கப்படுகிறான். (தானியேல் 7:26; 8:25) உண்மையில், பூமிக்குரிய எல்லா ராஜாக்களும் கடைசியாக கடவுளுடைய ராஜ்யத்தால், அர்மகெதோன் யுத்தத்தில் அழிக்கப்படுகிறார்கள்; முடிவில் இதுவே வடதிசை ராஜாவுக்கும் சம்பவிக்கிறது. (தானியேல் 2:44; 12:1; வெளிப்படுத்துதல் 16:14, 16) முடிவான யுத்தத்திற்கு வழிநடத்தக்கூடிய சம்பவங்களை தானியேல் 11:44, 45 விவரிக்கிறது. வடதிசை ராஜா தன்னுடைய முடிவை எதிர்ப்படும்போது “ஒத்தாசை பண்ணுவாரில்லாமல்” இருப்பதில் எவ்வித ஆச்சரியமுமில்லை!
15. என்ன முக்கிய கேள்விகள் கலந்தாலோசிக்கப்பட இருக்கின்றன?
15 அப்படியானால், வடதிசை ராஜாவை ‘அநேகரை சங்காரம் பண்ண’ புறப்படும்படி தூண்டுவித்த “செய்திகள்”மீது ஒளியூட்டும் மற்ற தீர்க்கதரிசனங்கள் யாவை? மேலும் அவன் சங்காரம் செய்ய விரும்பிய அந்த ‘அநேகர்’ யார்?
சூரியன் உதிக்கும் திசையிலிருந்து ஒரு செய்தி
16. (அ) அர்மகெதோனுக்குமுன் என்ன குறிப்பிடத்தக்க சம்பவம் நிகழ வேண்டும்? (ஆ) “சூரியன் உதிக்குந் திசையிலிருந்து வரும் ராஜாக்கள்” யார்?
16 முடிவான யுத்தமாகிய அர்மகெதோனுக்குமுன், மெய் வணக்கத்தின் ஒரு பெரிய பகைஞன் அழிக்கப்படவேண்டும்—வேசியைப்போன்ற மகா பாபிலோன், பொய் மத உலகளாவிய பேரரசு. (வெளிப்படுத்துதல் 18:3-8) கடவுளுடைய கோபத்தின் ஆறாம் கலசத்தை அடையாளப்பூர்வமான ஐபிராத்து நதியின்மேல் ஊற்றுவதன்மூலம் அவளுடைய அழிவு முன்நிழலாகக் காட்டப்பட்டிருக்கிறது. “சூரியன் உதிக்குந் திசையிலிருந்துவரும் ராஜாக்களுக்கு வழி ஆயத்தமாகும்படி” அந்த நதி வற்றிப்போகிறது. (வெளிப்படுத்துதல் 16:12) இந்த ராஜாக்கள் யார்? வேறு எவரும் அல்ல, யெகோவா தேவனும் இயேசு கிறிஸ்துவுமே!a
17. (அ) மகா பாபிலோனின் அழிவைப்பற்றி பைபிள் என்ன சொல்கிறது? (ஆ) “சூரியன் உதிக்கும் திசையிலிருந்து வரும்” செய்தி என்னவாக நிரூபிக்கக்கூடும்?
17 மகா பாபிலோனின் அழிவு வெளிப்படுத்துதல் புத்தகத்தில் படமாக விளக்கப்பட்டுள்ளது: “நீ கண்ட பத்துக் கொம்புகளும் [முடிவு காலத்தில் ஆட்சிபுரியும் ‘ராஜாக்கள்’], மூர்க்க மிருகமும் [ஐக்கிய நாட்டுச் சங்கத்தைப் பிரதிநிதித்துவம் செய்யும் சிவப்பு நிற மூர்க்க மிருகம்], அந்த வேசியைப் பகைத்து, அவளைப் பாழும் நிர்வாணமுமாக்கி, அவளுடைய மாம்சத்தைப் பட்சித்து, அவளை முழுமையாக நெருப்பினால் சுட்டெரிப்பார்கள்.” (வெளிப்படுத்துதல் 17:16) உண்மையில், அந்த தேசங்கள் ‘அதிக மாம்சத்தை அழிக்கின்றனர்’! (தானியேல் 7:5) ஆனால் மகா பாபிலோனை, வடதிசை ராஜா உட்பட அந்த ஆட்சியாளர்கள் ஏன் அழிப்பார்கள்? ஏனென்றால் ‘கடவுள் தம்முடைய யோசனையை நிறைவேற்றுவதை அவர்களுடைய இருதயங்களில் வைக்கிறார்.’ (வெளிப்படுத்துதல் 17:17) “சூரியன் உதிக்கும் திசையிலிருந்து” வரும் செய்தி, அந்தப் பெரிய மத வேசியை அழிப்பதற்கான எண்ணத்தை, யெகோவா தாம் தெரிந்தெடுக்கும் ஒரு வழியில், மனித தலைவர்களின் இருதயத்தினுள் வைக்கும், அவருடைய இந்தச் செயலை நன்றாகவே குறிக்கக்கூடும்.—தானியேல் 11:44.
வடக்கிலிருந்து ஒரு செய்தி
18. வடதிசை ராஜா வேறு என்ன குறியிலக்கைக் கொண்டிருக்கிறான், அவன் தன்னுடைய முடிவுக்கு வருகையில் இது அவனை எங்கே வைக்கிறது?
18 ஆனால் வடதிசை ராஜாவின் கோபத்திற்கு மற்றொரு குறியிலக்கு இருக்கிறது. “மகா சமுத்திரத்துக்கும் சிங்காரமான பரிசுத்த பர்வதத்திற்கும் இடையில் தன் அரமனையாகிய கூடாரங்களை நாட்டுவான்,” என்று அந்தத் தூதன் சொல்கிறார். (தானியேல் 11:45, NW) தானியேலின் காலத்தில், மகா சமுத்திரம் மத்தியதரைக் கடலாகவும் (Mediterranean), பரிசுத்த பர்வதம், ஒருகாலத்தில் கடவுளுடைய ஆலயத்தின் இடமாகிய சீயோனாகவும் இருந்தன. எனவே, தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றத்தில், சினங்கொண்ட வடதிசை ராஜா கடவுளுடைய மக்களுக்கு விரோதமாக ஓர் இராணுவ நடவடிக்கையை நடத்துகிறான்! இன்று ஓர் ஆவிக்குரிய அர்த்தத்தில், “மகா சமுத்திரத்துக்கும் . . . பரிசுத்த பர்வதத்திற்கும் இடையில்” என்பது, புறம்பாயிருக்கும் மனிதவர்க்க ‘கடலிலிருந்து’ வெளியே வந்து, பரலோக சீயோன் மலையில் இயேசு கிறிஸ்துவுடன் ஆட்சிசெய்யும் நம்பிக்கையை உடைய கடவுளின் அபிஷேகம் செய்யப்பட்ட ஊழியர்களின் ஆவிக்குரிய தேசத்தில் அவனை வைக்கிறது.—ஏசாயா 57:20; எபிரெயர் 12:22; வெளிப்படுத்துதல் 14:1.
19. எசேக்கியேலின் தீர்க்கதரிசனத்தில் குறிப்பிடப்பட்டபடி, கோகின் தாக்குதலைத் தூண்டுவிக்கும் செய்தியை நாம் எவ்வாறு அடையாளம் காணலாம்? (அடிக்குறிப்பைப் பார்க்கவும்.)
19 தானியேல் வாழ்ந்த சமயத்திலிருந்த எசேக்கியேலும், “கடைசி நாட்களிலே” கடவுளுடைய மக்கள்மீதான ஒரு தாக்குதலைப் பற்றி தீர்க்கதரிசனம் உரைத்தார். பிசாசாகிய சாத்தானைப் பிரதிநிதித்துவம் செய்யும் மாகோகின் கோகால் போர் நடவடிக்கைகள் துவங்கி வைக்கப்படும் என்று அவர் சொன்னார். (எசேக்கியேல் 38:16) அடையாளப்பூர்வமாக, கோகு எந்தத் திசையிலிருந்து வருகிறான்? எசேக்கியேல் மூலம் யெகோவா சொல்கிறார்: “நீயும் . . . வடதிசையிலுள்ள உன் ஸ்தானத்திலிருந்து வருவீர்கள்.” (எசேக்கியேல் 38:15) எனவே, ‘வடக்கிலிருந்து வரும்’ செய்தி, யெகோவாவின் மக்களைத் தாக்கும்படி வடதிசை ராஜாவையும் மற்ற எல்லா ராஜாக்களையும் தூண்டுவிக்கும் சாத்தானின் பிரச்சாரமாகவே இருக்கக்கூடும்.b—ஒப்பிடவும் வெளிப்படுத்துதல் 16:13, 14; 17:14.
20, 21. (அ) ஏன் கோகு, வடதிசை ராஜா உட்பட தேசங்களை, கடவுளுடைய மக்களைத் தாக்கும்படி தூண்டுவிப்பான்? (ஆ) அவனுடைய தாக்குதல் வெற்றி அடையுமா?
20 ‘தேவனுடைய இஸ்ரவேலரின்’ செழுமை காரணமாக கோகு இந்த முழுமையான தாக்குதலை ஒழுங்கமைக்கிறான்; இவர்கள் வேறே ஆடுகளின் திரள் கூட்டத்தாருடன் சேர்ந்து இனிமேலும் அவனுடைய உலகின் பாகமாக இருக்கிறதில்லை. (கலாத்தியர் 6:16; யோவான் 10:16; 17:15, 16; 1 யோவான் 5:19) ‘ஜாதிகளிடத்திலிருந்து சேர்க்கப்பட்டதும், [ஆவிக்குரிய] செல்வத்தையும் ஆஸ்திகளையும் சம்பாதிக்கும் ஒரு ஜனத்தை’ கோகு வெறுப்புத் தெரிவிக்கும் வகையில் நோக்குகிறான். (எசேக்கியேல் 38:10; வெளிப்படுத்துதல் 5:9; 7:9) இந்த வார்த்தைகளின் நிறைவேற்றமாக, யெகோவாவின் மக்கள் முன்னொருபோதும் இராத வகையில் இன்று செழித்தோங்குகிறார்கள். ஐரோப்பா, ஆப்பிரிக்கா, மற்றும் ஆசியாவில், ஒரு காலத்தில் தடைவிதிக்கப்பட்டிருந்த பல தேசங்களில், அவர்கள் இப்போது சுதந்திரத்துடன் வழிபட்டுவருகின்றனர். யெகோவாவின் மெய் வணக்க வீட்டிற்கு, 1987-க்கும் 1992-க்கும் இடையில் பத்து லட்சத்திற்கும் மிக அதிகமான ‘விரும்பத்தக்கவைகள்’ பல தேசங்களிலிருந்தும் வெளியே வந்தனர். ஆவிக்குரிய விதத்தில் அவர்கள் செல்வந்தராகவும் சமாதானமுள்ளவர்களாகவும் இருக்கின்றனர்.—ஆகாய் 2:7; ஏசாயா 2:2-4; 2 கொரிந்தியர் 8:9.
21 கிறிஸ்தவ ஆவிக்குரிய தேசத்தை, எளிதில் கைப்பற்றக்கூடிய “கிராமங்களுள்ள தேச”மாகக் கருதி, கோகு, மனிதவர்க்கத்தை தான் முழுமையாகக் கட்டுப்படுத்துவதற்கு ஏதுவாக, இந்தத் தடையை துடைத்தழிப்பதற்கு மிகச் சிறந்த முயற்சி செய்கிறான். (எசேக்கியேல் 38:12) ஆனால் அவன் தோற்றுவிடுகிறான். பூமியின் ராஜாக்கள் யெகோவாவின் மக்களைத் தாக்குகையில், அவர்கள் ‘தங்களுடைய முடிவுக்கு வருவார்கள்.’ எவ்வாறு?
ஒரு மூன்றாவது ராஜா
22, 23. கோகு தாக்கும்போது, கடவுளுடைய மக்களுக்காக எழும்புவது யார், என்ன விளைவுகளுடன்?
22 கோகின் தாக்குதல், யெகோவா தேவன் தம்முடைய மக்களின் சார்பாக எழும்பி கோகின் சக்திகளை “இஸ்ரவேலின் மலைகளில்” அழிக்கும்படி அவருக்கு முன்அறிகுறியாக இருக்கிறது என்று எசேக்கியேல் சொல்கிறார். (எசேக்கியேல் 38:18; 39:4) இது அந்தத் தூதன் தானியேலிடம் சொல்வதை நமக்கு நினைவுபடுத்துகிறது: “உன் ஜனத்தின் புத்திரருக்காக நிற்கிற பெரிய அதிபதியாகிய மிகாவேல் அக்காலத்திலே எழும்புவான். யாதொரு ஜாதியாரும் தோன்றியது முதல் அக்காலமட்டும் உண்டாயிராத ஆபத்துக்காலம் வரும்; அக்காலத்திலே புஸ்தகத்தில் எழுதியிருக்கிறவர்களாகக் காணப்படுகிற உன் ஜனங்கள் அனைவரும் விடுவிக்கப்படுவார்கள்.”—தானியேல் 12:1.
23 இயேசு—பரலோக போர்வீரர் மிகாவேல்—1914-ல் கடவுளின் பரலோக ராஜ்யத்திற்கு ராஜாவானார். (வெளிப்படுத்துதல் 11:15; 12:7-9) அப்போது முதல், அவர் ‘தானியேலின் ஜனத்தின் புத்திரருக்காக’ நின்று கொண்டிருக்கிறார். என்றபோதிலும், சீக்கிரத்தில், அவர் யெகோவாவின் பெயரில் ஒரு வெல்லமுடியாத போர்வீர-ராஜாவாக ‘எழும்புவார்’; “தேவனை அறியாதவர்களுக்கும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாதவர்களுக்கும் நீதியுள்ள ஆக்கினையை” கொண்டுவருபவராக இருப்பார். (2 தெசலோனிக்கேயர் 1:7) தானியேல் தீர்க்கதரிசனத்தின் ராஜாக்கள் உட்பட பூமியின் எல்லா தேசங்களும், “புலம்புவார்கள்.” (மத்தேயு 24:30) ‘தானியேலின் மக்களிடம்’ இன்னும் பொல்லாத எண்ணங்களைத் தங்கள் இருதயங்களில் கொண்டிருந்து, ‘பெரிய அதிபதியாகிய மிகாவேலின்’ கைகளில் அவர்கள் என்றென்றைக்குமாக அழிந்துபோவார்கள்.—வெளிப்படுத்துதல் 19:11-21.
24. தானியேல் தீர்க்கதரிசனத்தைப் பற்றிய இந்தப் படிப்பு நம்மீது என்ன விளைவைக் கொண்டிருக்கவேண்டும்?
24 மிகாவேல் மற்றும் அவருடைய கடவுளாகிய யெகோவாவின் மகத்தான வெற்றியைக் காண நாம் விரும்பிக் காத்திருக்கிறோம் அல்லவா? ஏனென்றால் அந்த வெற்றி, மெய்க் கிறிஸ்தவர்களுக்கு ‘விடுவிப்பும்,’ தப்பிப்பிழைத்தலுமாக இருக்கும். (ஒப்பிடவும் மல்கியா 4:1-3.) எனவே, ஆவலான எதிர்பார்ப்புடன், வருங்காலத்தை நோக்கியிருக்கையில், அப்போஸ்தலன் பவுலின் வார்த்தைகளை நாம் மனதில் கொள்ளவேண்டும்: “சமயம் வாய்த்தாலும், வாய்க்காவிட்டாலும் ஜாக்கிரதையாய்த் திருவசனத்தைப் பிரசங்கம்பண்ணு.” (2 தீமோத்தேயு 4:2) ஜீவ வார்த்தையை உறுதியாகப் பற்றிக்கொண்டு, சாதகமான காலம் தொடர்ந்திருக்கையில் யெகோவாவின் ஆடுகளை ஊக்கமாகத் தேடுவோமாக. ஜீவனுக்கான ஓட்டத்தில் கடைசிக்கட்டத்தில் நாம் இருக்கிறோம். பரிசு காட்சியில் இருக்கிறது. முடிவுபரியந்தம் சகித்து நிலைத்திருக்கும்படி நாம் அனைவரும் உறுதிபூண்டு, இவ்வாறு இரட்சிக்கப்படுகிறவர்களின் மத்தியில் இருப்போமாக.—மத்தேயு 24:13; எபிரெயர் 12:1.
[அடிக்குறிப்புகள்]
a உவாட்ச்டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸையிட்டியால் பிரசுரிக்கப்பட்ட வெளிப்படுத்துதல்—அதன் மகத்தான உச்சக்கட்டம் சமீபித்துவிட்டது! சிற்றேடு எண் 7, பக்கங்கள் 8, 9-ஐப் பார்க்கவும்.
b இன்னொரு வகையில், ‘வடக்கிலிருந்து வரும்’ செய்தி, யெகோவா கோகிடம் சொன்ன வார்த்தைகளைக் கருத்தில்கொண்டு, அவரிடம் துவங்குவதாக நிரூபிக்கலாம்: “நான் . . . உன் வாயில் துறடுகளைப் போட்டு, உன்னை . . . புறப்படப்பண்ணுவேன்.” “நான் . . . உன்னை வடபுறங்களிலிருந்து எழும்பவும் இஸ்ரவேல் மலைகளில் வரவும் பண்”ணுவேன்.—எசேக்கியேல் 38:4; 39:2; ஒப்பிடவும் சங்கீதம் 48:2.
உங்களுக்குப் புரிகிறதா?
◻ முடிவு காலம் முழுவதும் எப்படி தென்திசை ராஜா வடதிசை ராஜாவுடன் முட்டுக்கு நின்றிருக்கிறான்?
◻ இரு ராஜாக்களின் மத்தியிலிருக்கும் எதிர்ப்பின் விளைவைக் குறித்ததில் நாம் இன்னும் என்ன கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது?
◻ அர்மகெதோனுக்கு முன்னான என்ன இரு சம்பவங்கள் நிச்சயமாக வடதிசை ராஜாவை ஈடுபடுத்தும்?
◻ ‘பெரிய அதிபதியாகிய மிகாவேல்’ எப்படி கடவுளுடைய மக்களைப் பாதுகாப்பார்?
◻ தானியேல் தீர்க்கதரிசனத்தைப் பற்றிய படிப்பிற்கு நாம் எப்படி பிரதிபலிக்கவேண்டும்?
[பக்கம் 19-ன் படங்கள்]
வடதிசை ராஜா தன்னுடைய முன்னோர்களின் தேவர்களிலிருந்து வேறுபட்ட ஒரு தேவனை வணங்கியிருக்கிறான்
[படத்திற்கான நன்றி]
Top left and middle: UPI/Bettmann; bottom left: Reuters/Bettmann; bottom right: Jasmin/Gamma Liaison