பைபிள் புத்தக எண் 28—ஓசியா
எழுத்தாளர்: ஓசியா
எழுதப்பட்ட இடம்: சமாரியா (மாகாணம்)
எழுதி முடிக்கப்பட்டது: பொ.ச.மு. 745-க்கு பின்
காலப்பகுதி: பொ.ச.மு. 804-க்கு முன்பிருந்து 745-க்கு பின் வரை
எபிரெய வேதாகமத்தின் கடைசி 12 புத்தகங்கள் பொதுவாக “சிறிய தீர்க்கதரிசிகள்” என்று அழைக்கப்படுகின்றன. ஆனால் “குட்டி தீர்க்கதரிசிகள்” என ஜெர்மனியில் பொதுவாக பயன்படுத்தப்படும் சொற்றொடரே அதிக பொருத்தமாயிருப்பதாக தோன்றுகிறது. ஏனெனில், அவற்றின் ஒட்டுமொத்த நீளம் ஏசாயா அல்லது எரேமியா புத்தகத்தின் நீளத்தைவிட குறைவாகவே இருந்தாலும், இந்தப் புத்தகங்கள் முக்கியத்துவத்தில் எந்த விதத்திலும் குறைந்தவை அல்ல. எபிரெய பைபிளில் அவை ஒரே புத்தக தொகுதியாக கருதப்பட்டு “அந்தப் பன்னிரண்டு” என்று அழைக்கப்பட்டன. தனியாக இருக்கும் ஒரு சிறிய சுருள் எளிதில் தொலைந்துவிடலாம் என்பதால் அவற்றைப் பாதுகாப்பதற்காக அவை ஒன்று சேர்க்கப்பட்டிருக்கலாம். இந்த 12 புத்தகங்களில் ஒவ்வொன்றும் அதன் எழுத்தாளரின் பெயரைப் பெற்றிருப்பதைப் போலவே இந்த முதல் புத்தகமும் அதன் எழுத்தாளராகிய ஓசியாவின் பெயரைப் பெற்றுள்ளது. இவருடைய பெயர், “‘யா’வால் காப்பாற்றப்பட்ட; ‘யா’ காப்பாற்றினார்” என பொருள்படும் ஹோஷையா என்பதன் சுருக்கம்.
2 இவருடைய பெயரைத் தாங்கியுள்ள இந்தப் புத்தகத்திலிருந்து, ஓசியா பெயேரியின் குமாரன் என்பதைத் தவிர அவரைப் பற்றி வேறு எதையும் நாம் அறிந்துகொள்ள முடிவதில்லை. இவருடைய தீர்க்கதரிசனங்கள் பெரும்பாலும் இஸ்ரவேலை மட்டுமே குறிப்பிட்டன, இடையிடையே எப்போதாவது யூதா குறிப்பிடப்படுகிறது. ஓசியா எருசலேமைப் பற்றி கூறவே இல்லை. ஆனால் இஸ்ரவேலின் முதன்மையான கோத்திரமாகிய எப்பிராயீம் பற்றி 37 தடவையும் இஸ்ரவேலின் தலைநகர் சமாரியா பற்றி 6 தடவையும் குறிப்பிடப்படுகிறது.
3 ஓசியா, யெகோவாவின் தீர்க்கதரிசியாக வெகு அதிக காலம் சேவித்தார் என இந்தப் புத்தகத்தின் முதல் வசனம் சொல்லுகிறது. அதாவது, இஸ்ரவேலின் அரசனான இரண்டாம் யெரொபெயாமின் ஆட்சியின் முடிவிற்கு சற்று முன்பிருந்து யூதாவின் அரசன் எசேக்கியாவின் ஆட்சி காலம் வரை அவர் சேவித்தார். அது, பொ.ச.மு. 804-க்கு முன்பிருந்து பொ.ச.மு. 745-க்கு பிற்பட்ட குறைந்தபட்சம் 59 ஆண்டுகளை உள்ளடக்கும். தீர்க்கதரிசியாக அவர் சேவித்த காலம், இரண்டாம் யெரொபெயாம் மற்றும் எசேக்கியாவின் ஆட்சியில் சில ஆண்டுகளையும் உட்படுத்தியிருக்க வேண்டும். இந்தக் காலத்தின்போது ஆமோஸ், ஏசாயா, மீகா, ஓபேத் ஆகியோரும் யெகோவாவின் உண்மையுள்ள தீர்க்கதரிசிகளாக இருந்தனர்.—ஆமோஸ் 1:1; ஏசா. 1:1; மீகா 1:1; 2 நா. 28:9.
4 கிறிஸ்தவ கிரேக்க வேதாகமம் ஓசியா புத்தகத்தை பல தடவை மேற்கோள் காட்டுவதால் இதன் நம்பகத் தன்மை உறுதிசெய்யப்படுகிறது. இயேசுவும்கூட, எருசலேமிற்கு விரோதமாக தண்டனைத் தீர்ப்பைக் கூறுகையில் ஓசியா 10:8-ஐ மேற்கோள் காட்டினார்: “அப்பொழுது மலைகளை நோக்கி: எங்கள் மேல் விழுங்களென்றும், குன்றுகளை நோக்கி: எங்களை மறைத்துக்கொள்ளுங்களென்றும் சொல்லத்தொடங்குவார்கள்.” (லூக். 23:30) இந்த வசனத்தின் ஒரு பகுதி, வெளிப்படுத்துதல் 6:16-ல் மேற்கோள் காட்டப்படுகிறது. மத்தேயு, “எகிப்திலிருந்து என்னுடைய குமாரனை வரவழைத்தேன்” என்ற தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றத்தைக் குறிப்பிடுகையில் ஓசியா 11:1-ஐ மேற்கோள் காட்டுகிறார். (மத். 2:15) இஸ்ரவேல் முழுவதும் திரும்ப நிலைநாட்டப்படும் என்ற ஓசியாவின் தீர்க்கதரிசனமும் நிறைவேறியது. யூதாவின் சிறையிருப்பிற்கு முன்பாக பத்து கோத்திர ராஜ்யத்திலிருந்த பலர் யூதாவுடன் சேர்ந்துகொண்டதாலும் சிறையிருப்பு முடிந்து திரும்பி வந்தவர்களில் அவர்களுடைய சந்ததியார் இருந்ததாலும் இது நிறைவேறியது. (ஓசி. 1:11; 2 நா. 11:13-17; 30:6-12, 18, 25; எஸ்றா 2:70) எஸ்றாவின் காலத்திலிருந்தே இந்தப் புத்தகம், “ஓசியாவின் மூலமான யெகோவாவின் வார்த்தை”யாக எபிரெய வேதாகமத்தின் அதிகாரப்பூர்வ பட்டியலின் பாகமாய் இருந்து வந்திருக்கிறது.—ஓசி. 1:2, NW.
5 யெகோவா ஓசியாவை தம்முடைய தீர்க்கதரிசியாக இஸ்ரவேலிடம் ஏன் அனுப்பினார்? இஸ்ரவேல் யெகோவாவின் உடன்படிக்கையை மீறி, உண்மையற்றதாயும் பாகாலின் வணக்கத்தால் தீட்டுப்பட்டதாயும் இருந்ததன் காரணமாகவே. வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தில் இஸ்ரவேலர் விவசாயிகளாக இருந்தனர். ஆனால் அவர்கள் கானானியரின் வாழ்க்கை முறையைப் பின்பற்றியது மட்டுமல்லாமல் இயற்கையின் கருவள தெய்வமாக கருதப்பட்ட பாகாலின் வணக்கம் உட்பட அவர்களுடைய மதத்தையும் ஏற்றுக்கொண்டனர். ஓசியாவின் நாளில் இஸ்ரவேலர்கள் யெகோவாவின் வணக்கத்தை முற்றிலுமாக கைவிட்டனர். மாறாக, ஆலய வேசிகளோடு ஒழுக்கங்கெட்ட உறவுகளை உட்படுத்திய கலகத்தனமான குடிவெறி நிறைந்த வணக்கத்தை ஏற்றனர். பாகாலே அவர்களுடைய செழுமைக்கு காரணம் என இஸ்ரவேலர் நினைத்தனர். அவர்கள் யெகோவாவுக்கு உண்மையற்றவர்களாகி அவருடைய ஜனங்களாயிருக்க தகுதியற்றவர்கள் ஆயினர், ஆகையால் அவர்களுக்கு சிட்சை தேவைப்பட்டது. அவர்களுடைய பொருளுடைமைகள் பாகாலிடமிருந்து வரவில்லை என யெகோவா அவர்களுக்கு நிரூபிப்பார். ஆகவே மனந்திரும்ப தவறினால் என்ன நேரிடும் என இஸ்ரவேலை எச்சரிக்க அவர் ஓசியாவை அனுப்பினார். இரண்டாம் யெரொபெயாம் மரித்த பிறகு இஸ்ரவேல் மிகக் கொடிய காலத்தை அனுபவித்தது. பல அரசர்கள் படுகொலை செய்யப்பட்டனர், பொ.ச.மு. 740-ல் அசீரியரால் சிறைப்படுத்தப்படும் வரை கொடூரமான ஆட்சிமுறை தொடர்ந்தது. இந்தக் காலத்தின்போது இரண்டு பிரிவுகள் ஒன்றோடு ஒன்று போரிட்டன. ஒன்று எகிப்துடனும் மற்றொன்று அசீரியாவுடனும் உடன்படிக்கை செய்ய விரும்பின. ஆனால் இரண்டு பிரிவுகளுமே யெகோவாவில் நம்பிக்கை வைக்க தவறின.
6 ஓசியாவின் எழுத்துநடையிலிருந்து அதிகத்தை தெரிந்துகொள்ளலாம். அவருடைய வார்த்தைகளில் கனிவும் பரிவும் நிறைந்துள்ளன, மேலும் அவர் யெகோவாவின் அன்புள்ள தயவையும் இரக்கத்தையும் திரும்பத் திரும்ப வலியுறுத்துகிறார். மனந்திரும்புதலுக்கான சிறிய அறிகுறியைக் கண்டாலும்கூட அதை தவறாமல் குறிப்பிடுகிறார். மற்ற சமயங்களிலோ கண்டிப்பாகவும் உணர்ச்சிவயப்பட்டும் எழுதியிருப்பதை அவரது மொழிநடை காட்டுகிறது. அவருடைய மொழியில் சீரான ஏற்றத்தாழ்வுகள் இல்லாதபோதிலும் வேகமும் வலிமையும் நிறைந்துள்ளன. அவர் ஆழமான உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறார், அதோடு ஒரு விஷயத்திலிருந்து மற்றொரு விஷயத்திற்கு சட்டென்று மாறுகிறார்.
7 ஓசியா ஒரு தீர்க்கதரிசியாக தன் வாழ்க்கையை ஆரம்பித்த சமயத்தில் அவர் “ஒரு சோர ஸ்திரீயை” மனைவியாக ஏற்றுக்கொள்ளும்படி யெகோவா கட்டளையிட்டார். (1:2) ஒரு காரணத்தோடுதான் யெகோவா இவ்வாறு சொன்னார். இஸ்ரவேல், வேசித்தனம் செய்து உண்மையற்றுப்போன ஒரு மனைவியைப் போல் யெகோவாவுக்கு இருந்தது. ஆனாலும், அவர் தம்முடைய அன்பை அவளுக்கு காண்பித்து அவளைத் திரும்ப மீட்பதற்கு முயற்சி செய்வார். இதை மிகவும் அழகாக சித்தரிக்க ஓசியாவின் மனைவியாகிய கோமேர் மிகவும் பொருத்தமானவள். அவள் முதல் பிள்ளையைப் பெற்ற பிறகு உண்மையற்றவளாகி மற்ற பிள்ளைகளை வேசித்தனத்தில் பெற்றாள் என தோன்றுகிறது. (2:5-7) முதல் பிள்ளையின் பிறப்பைப் பற்றி குறிப்பிடுகையில், அவள் ‘அவனுக்கு [ஓசியாவுக்கு] ஒரு குமாரனைப் பெற்றாள்’ என பதிவு கூறுகிறது; ஆனால் மற்ற இரண்டு பிள்ளைகளின் பிறப்பு சம்பந்தமாக இந்தத் தீர்க்கதரிசியைப் பற்றி எதுவுமே குறிப்பிடப்படாமல் இருப்பதால் இது தெளிவாகிறது. (1:3, 6, 8) 3-ம் அதிகாரம், 1-3 வசனங்களில் ஓசியா கோமேரை ஒரு அடிமையை விலைக்கு வாங்குவதுபோல் திரும்ப வாங்குவதைப் பற்றி பேசுவதாக தோன்றுகிறது. யெகோவா, தம்முடைய ஜனங்கள் தங்கள் வேசித்தன போக்கைவிட்டு மனந்திரும்பின பிறகு அவர்களைத் திரும்ப ஏற்றுக்கொள்வதை இது நன்றாக சித்தரிக்கிறது.
8 ஓசியாவின் இந்தத் தீர்க்கதரிசன வார்த்தைகள் முக்கியமாய் வட தேசத்து பத்து கோத்திர ராஜ்யமாகிய இஸ்ரவேலிடமே உரைக்கப்பட்டன. இது, அங்குள்ள முதன்மையான கோத்திரத்தின் பெயரால் எப்பிராயீம் என்றும் அழைக்கப்படுகிறது. இஸ்ரவேல், எப்பிராயீம் என்ற இந்தப் பெயர்கள் இப்புத்தகத்தில் மாறி மாறி பயன்படுத்தப்படுகின்றன.
ஓசியாவின் பொருளடக்கம்
9 இஸ்ரவேலின் வேசித்தன போக்கு சித்தரிக்கப்படுகிறது (1:1–3:5). ஓசியாவின் மனைவியாகிய “சோர ஸ்திரீ” அந்தத் தீர்க்கதரிசிக்கு யெஸ்ரயேல் என்னும் ஒரு குமாரனைப் பெறுகிறாள். பிறகு அவளுக்கு இரண்டு பிள்ளைகள் பிறக்கின்றனர், “[அவளுக்கு] இரக்கம் செய்வதில்லை” என அர்த்தப்படும் லோருகாமா என்ற ஒரு குமாரத்தி, “என் ஜனமல்ல” என அர்த்தப்படும் லோகம்மீ என்ற ஒரு குமாரன். யெகோவா “இனி இஸ்ரவேல் வம்சத்தாருக்கு இரக்கஞ்செய்வதில்லை” என்பதைக் குறிக்கவும் அவர்களைத் தம்முடைய ஜனமாக இராதபடி தாம் தள்ளிவிடுவதை அறிவுறுத்தவும் இந்த இரண்டு பெயர்களையும் கொடுத்தார். (1:2, 6, 9) எனினும், யூதாவும் இஸ்ரவேலும் ‘ஜீவனுள்ள தேவனுடைய பிள்ளைகளாக’ ஒரே தலைவனுடைய அதிகாரத்தின் கீழ் கூட்டிச்சேர்க்கப்படுவார்கள்; ஏனெனில் “யெஸ்ரயேலின் நாள் பெரிதாயிருக்கும்.” (1:10, 11) கடவுளுடைய ஜனங்கள், வேசித்தனம் மிக்க பாகால் வணக்கத்திலிருந்து சுத்திகரிக்கப்பட்டு யெகோவாவிடம் திரும்பி அவரைத் தங்கள் கணவராக ஏற்பர். (2:16, NW) யெகோவா இஸ்ரவேலுக்கு பாதுகாப்பை அளித்து, அதை நீதியிலும், நியாயத்திலும், அன்புள்ள தயவிலும், இரக்கத்திலும், உண்மையிலும் முடிவில்லா காலத்திற்கு தமக்காக நியமித்து கொள்வார். யெஸ்ரயேல் (“கடவுள் விதை விதைப்பார்” என்று அர்த்தம்) என்ற பெயருக்கு இசைவாக யெகோவா இவ்வாறு உறுதி கூறுகிறார்: “நான் அவளை எனக்கென்று பூமியிலே விதைத்து . . . என் ஜனமல்லாதிருந்தவர்களை நோக்கி நீ என் ஜனமென்று சொல்லுவேன்; அவர்கள் என் தேவனே என்பார்கள்.” (2:23) விபசாரத்தை விட்டு மனந்திரும்பின ஒரு மனைவியைப் போல, “இஸ்ரவேல் . . . திரும்பித் தங்கள் கடவுளாகிய யெகோவாவையும் தங்கள் ராஜாவாகிய தாவீதையும் தேடி . . . வருவார்கள்.”—3:5, தி.மொ.
10 எப்பிராயீமுக்கு (மற்றும் யூதாவுக்கு) எதிரான தீர்க்கதரிசன நியாயத்தீர்ப்புகள் (4:1–14:9). நான்காம் அதிகாரத்தின் முதல் வசனம், அதைப் பின்தொடரும் தீர்க்கதரிசன எச்சரிக்கைகளுக்கான காரணத்தைக் கொடுக்கிறது: “தேசத்துக்குடிகளோடே கர்த்தருக்கு வழக்கு இருக்கிறது; அதேனென்றால் தேசத்திலே உண்மையும் இல்லை, இரக்கமும் இல்லை; தேவனைப் பற்றிய அறிவும் இல்லை.” இந்த நிலைமையின் முடிவு என்னவாய் இருக்கும்? “நீ அறிவை வெறுத்தாய், ஆகையால் நீ என் ஆசாரியனாயிராதபடிக்கு நானும் உன்னை வெறுத்து விடுவேன்; நீ உன் தேவனுடைய வேதத்தை மறந்தாய், ஆகையால் நானும் உன் பிள்ளைகளை மறந்துவிடுவேன்” என்று யெகோவா சொல்கிறார். (4:1, 6) வேசித்தனத்தின் காரணமாகவே இஸ்ரவேல் அலைந்து திரிந்தது. வேசியைப் போன்ற இஸ்ரவேலையும் யூதாவையும் யெகோவா கணக்கு கேட்பார். ஆனால் ‘கடும் இக்கட்டான நிலையில்’ இருக்கையில் அவர்கள் யெகோவாவைத் தேடுவார்கள்.—5:15, NW.
11 “கர்த்தரிடத்தில் திரும்புவோம் வாருங்கள்; . . . அவரே நம்மைக் குணமாக்குவார்” என்று ஓசியா ஜனங்களிடம் மன்றாடுகிறார். பலிகளையும் தகனபலிகளையும் பார்க்கிலும் பற்றுமாறா அன்பிலும் அவரை அறியும் அறிவிலுமே யெகோவா சந்தோஷம் கொள்கிறார். ஆனால் எப்பிராயீம் மற்றும் யூதாவின் பற்றுமாறா அன்பு ‘விடியற்காலையில் தோன்றும் பனியைப் போல ஒழிந்து போகிறது.’ (6:1, 4) எப்பிராயீம் “பேதையான புறாவைப்போல் இருக்கிறான், அவனுக்குப் புத்தியில்லை.” அந்த ஜனங்கள் உதவிக்காக யெகோவாவை நோக்கியிருப்பதற்கு பதிலாக எகிப்தையும் அசீரியாவையும் நாடுகிறார்கள். (7:11) அவர்களுக்கு ஐயோ. ஏன்? அவர்கள் சோம்பேறிகளாக அலைந்து திரிந்து, தீய காரியங்களைத் திட்டமிட்டு, யெகோவாவின் உடன்படிக்கையை அசட்டை செய்து, அவருடைய பிரமாணத்தை மீறி நடக்கிறார்கள். “அவர்கள் காற்றை விதைத்து, சூறைக்காற்றை அறுப்பார்கள்.” (8:7) யெகோவா அவர்களுடைய அக்கிரமத்தை நினைவுகூர்ந்து அவர்களுடைய பாவங்களுக்கு கவனம் செலுத்துவார். “அவர்கள் அந்நிய ஜாதிகளுக்குள்ளே அலைந்து திரிவார்கள்.” (9:17) இஸ்ரவேல் சீர்கெடும் திராட்சைச் செடி, அதன் இருதயம் கபடமுள்ளது. நீதியில் விதைவிதைத்து அன்புள்ள தயவை அறுவடை செய்வதற்கு பதிலாக, இஸ்ரவேல் அக்கிரமத்தை உழுது அநீதியை அறுவடை செய்தது. “எகிப்திலிருந்து என்னுடைய குமாரனை வரவழைத்தேன்” என யெகோவா கூறுகிறார். (11:1) இஸ்ரவேல் இளைஞனாயிருந்த சமயத்திலிருந்தே அவர் அவனை நேசித்தார், ஆனால் இஸ்ரவேலோ பொய்யினாலும் வஞ்சகத்தினாலும் நிறைந்துள்ளான். “நீ உன் தேவனிடத்தில் திரும்பு; தயவையும் நியாயத்தையும் கைக்கொண்டு, இடைவிடாமல் உன் தேவனை நம்பிக்கொண்டிரு” என யெகோவா ஆலோசனை கூறுகிறார்.—12:6.
12 இஸ்ரவேல் ஆரம்பத்தில் பெற்ற வாக்குறுதி, யெகோவாவின் கனிவான கவனிப்பு ஆகியவை சம்பந்தமாக அதுவரை நிகழ்ந்தவற்றைப் பற்றியும் இஸ்ரவேல் யெகோவாவை மறந்ததையும் கடைசியாக அந்த ஜனம் யெகோவாவுக்கு எதிராக திரும்பினதைப் பற்றியும் 13-ம் அதிகாரத்தில் ஓசியா சுருக்கமாக கூறுகிறார். “நான் என் கோபத்திலே உனக்கு ராஜாவைக் கொடுத்தேன்; என் உக்கிரத்திலே அவனை எடுத்துக்கொள்வேன்” என யெகோவா அறிவிக்கிறார். (13:11, NW) ஆனால் அவர்கள் திரும்ப நிலைநாட்டப்படுவார்கள்: “அவர்களை நான் பாதாளத்தின் வல்லமைக்கு நீங்கலாக்கி மீட்பேன்; அவர்களை மரணத்துக்கு நீங்கலாக்கி விடுவிப்பேன்; மரணமே, உன் வாதைகள் எங்கே? பாதாளமே, உன் சங்காரம் எங்கே?” (13:14) எனினும், கலகக்கார சமாரியாவுக்கு நிகழவிருப்பது பயங்கரமாயிருக்கும்.
13 இருதயத்தைத் தூண்டும் இந்த வேண்டுதலுடன் இப்புத்தகம் முடிகிறது: ‘இஸ்ரவேலே, உன் கடவுளாகிய யெகோவாவிடம் திரும்பு; நீ உன் அக்கிரமத்தினால் இடறிவிழுந்தாய். அவரிடம் மன்னிப்பு கோரி, உன் உதடுகளின் இளம் காளைகளைச் செலுத்து. யெகோவா உனக்கு இரக்கத்தையும் அன்பையும் காட்டுவார். அவர் உனக்கு புத்துயிரளிக்கும் பனி போலாவார், நீ லீலியைப் போலும் ஒலிவ மரத்தைப் போலும் மலருவாய்.’ ஞானமும் விவேகமும் உள்ளவர்கள் இந்தக் காரியங்களைப் புரிந்துகொள்வார்கள்: “யெகோவாவின் வழிகள் நேரானவை, நீதிமான்கள் அவைகளில் நடப்பார்கள்; துரோகிகளோ அவைகளில் இடறிவிழுவார்கள்.”—14:1-6, 9, தி.மொ.
ஏன் பயனுள்ளது
14 ஓசியா புத்தகம் யெகோவாவின் ஏவப்பட்ட தீர்க்கதரிசனங்களில் நம் விசுவாசத்தை பலப்படுத்துகிறது. இஸ்ரவேலையும் யூதாவையும் குறித்து ஓசியா உரைத்த தீர்க்கதரிசனங்கள் எல்லாம் முழுமையாய் நிறைவேறின. விக்கிரக வணக்கத்தில் ஈடுபட்டிருந்த அக்கம்பக்கத்து தேசங்களான இஸ்ரவேலின் காதலர்கள் அவளைக் கைவிட்டனர். பொ.ச.மு. 740-ல் அசீரியாவிலிருந்து வந்த அழிவின் கடும் புயற்காற்றை அவள் அறுவடை செய்தாள். (ஓசி. 8:7-10; 2 இரா. 15:20; 17:3-6, 18) எனினும், யெகோவா யூதாவுக்கு இரக்கம் காண்பித்து அவளைக் காப்பாற்றுவார். ஆனால் இராணுவ பலத்தினால் அல்ல என்று ஓசியா முன்னறிவித்தார். எருசலேமை பயமுறுத்தின 1,85,000 அசீரியரை யெகோவாவின் தூதன் கொன்றபோது இது நிறைவேறியது. (ஓசி. 1:7; 2 இரா. 19:34, 35) இருப்பினும், ஓசியா 8:14-ல் (தி.மொ.) கூறப்பட்டுள்ள தண்டனைத் தீர்ப்பில் யூதாவும் உட்பட்டிருந்தது: “நானே அதின் நகரங்களில் அக்கினியை எறிவேன், அது அவைகளின் அரமனைகளைப் பட்சிக்கும்.” இது, பொ.ச.மு. 609-607-ல் நேபுகாத்நேச்சார் யூதாவையும் எருசலேமையும் பாழாக்கியபோது பயங்கரமான முறையில் நிறைவேறியது. (எரே. 34:6, 7; 2 நா. 36:19) திரும்ப நிலைநாட்டப்படுவது பற்றிய ஓசியாவின் பல தீர்க்கதரிசனங்கள், யெகோவா யூதாவையும் இஸ்ரவேலையும் கூட்டிச்சேர்த்தபோது அதாவது பொ.ச.மு. 537-ல் அவர்களுடைய சிறையிருப்பு “தேசத்திலிருந்து புறப்பட்டு” வந்தபோது நிறைவேறின.—ஓசி. 1:10, 11; 2:14-23; 3:5; 11:8-11; 13:14; 14:1-9; எஸ்றா 2:1; 3:1-3.
15 ஓசியா தீர்க்கதரிசனத்திலிருந்து கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தின் எழுத்தாளர்கள் அநேக மேற்கோள்களைக் காட்டுகின்றனர். இவற்றை சிந்தித்து பார்ப்பதும் இன்று நமக்கு அதிக பயனளிக்கும். உதாரணமாக, பவுல் உயிர்த்தெழுதல் பற்றிப் பேசுகையில் ஓசியா 13:14-ஐ வல்லமை வாய்ந்த முறையில் பொருத்துகிறார்: “மரணமே, உன் ஜெயம் எங்கே? மரணமே, உன் கொடுக்கு எங்கே?” (1 கொ. 15:55, தி.மொ.) இரக்கம் பெற தகுதியானவர்களிடம் யெகோவா காட்டும் தகுதியற்ற தயவை வலியுறுத்துகையில் பவுல் ஓசியா 1:10-ஐயும் 2:23-ஐயும் மேற்கோள் காட்டுகிறார். “அந்தப்படி: எனக்கு ஜனங்களல்லாதவர்களை என்னுடைய ஜனங்கள் என்றும், சிநேகிக்கப்படாதிருந்தவளைச் சிநேகிக்கப்பட்டவள் என்றும் சொல்லி அழைப்பேன். நீங்கள் என்னுடைய ஜனங்களல்லவென்று அவர்களுக்குச் சொல்லப்பட்ட இடத்திலே அவர்கள் ஜீவனுள்ள தேவனுடைய பிள்ளைகள் என்னப்படுவார்கள் என்று ஓசியாவின் தீர்க்கதரிசனத்தில் சொல்லியிருக்கிறது.” (ரோ. 9:25, 26) ஓசியாவிலிருந்து இதே பகுதியை பேதுரு பின்வருமாறு சுருக்கிச் சொல்கிறார்: “முன்னே நீங்கள் தேவனுடைய ஜனங்களாயிருக்கவில்லை, இப்பொழுதோ அவருடைய ஜனங்களாயிருக்கிறீர்கள்; முன்னே நீங்கள் இரக்கம் பெறாதவர்களாயிருந்தீர்கள், இப்பொழுதோ இரக்கம் பெற்றவர்களாயிருக்கிறீர்கள்.”—1 பே. 2:10.
16 இவ்வாறு, செருபாபேலின் நாளில் மீதியானோர் திரும்பி வந்தபோது மட்டுமல்ல ஆவிக்குரிய மீதியானோரை யெகோவா இரக்கமாய் கூட்டிச்சேர்த்த சமயத்திலும் ஓசியாவின் தீர்க்கதரிசனம் நிறைவேறியது. இவர்களே ‘ஜீவனுள்ள தேவனுடைய அன்பான பிள்ளைகள்’ ஆகிறார்கள். இவர்கள் எட்ட வேண்டிய தகுதிகளையும் தேவாவியின் ஏவுதலால் ஓசியா கண்டார். முறைப்படியான சடங்காச்சாரங்கள் கொண்ட வணக்கத்தை கடவுள் எதிர்பார்ப்பது இல்லை. ஆனால் ஓசியா 6:6 கூறுகிறபடியே (மத்தேயு 9:13-லும் 12:7-லும் இயேசு இதையே மீண்டும் கூறினார்): “பலியை அல்ல இரக்கத்தையும், தகன பலிகளைப் பார்க்கிலும் தேவனை அறிகிற அறிவையும், விரும்புகிறேன்.”
17 ஓசியாவின் சொந்த வாழ்க்கையில் அவ்வளவு அழகாக சித்தரித்துக் காட்டப்பட்ட வேசியான மனைவி பற்றிய உவமை, யெகோவாவைவிட்டு விலகி விக்கிரக வணக்கத்திலும் பொய் மத வழிகளிலும் ஈடுபடுபவர்களை அவர் வெறுக்கிறார் என்பதைக் காட்டுகிறது. இவ்வாறு செய்பவர்கள் ஆவிக்குரிய வேசித்தனத்தில் ஈடுபடுகிறார்கள். தவறு செய்து இடறி விழுந்தவர்கள் அனைவரும் உண்மையான மனந்திரும்புதலுடன் யெகோவாவிடம் திரும்பி வந்து, ‘தங்கள் உதடுகளின் காளைகளைச் செலுத்த வேண்டும்.’ (ஓசி. 14:2; எபி. 13:15) இவர்கள், ஓசியா 3:5-ல் (தி.மொ.) உள்ள ராஜ்ய வாக்கின் நிறைவேற்றத்தில் ஆவிக்குரிய இஸ்ரவேலரின் மீதிபேருடன் களிகூரலாம்: “பின்பு இஸ்ரவேல் புத்திரர் திரும்பித் தங்கள் கடவுளாகிய யெகோவாவையும் தங்கள் ராஜாவாகிய தாவீதையும் தேடி கடைசி நாட்களில் யெகோவாவையும் அவருடைய தயவையும் நாடி நடுக்கத்தோடு வருவார்கள்.”
[கேள்விகள்]
1, 2. (அ) எபிரெய வேதாகமத்தின் கடைசி 12 புத்தகங்கள் சில சமயங்களில் எவ்வாறு அழைக்கப்படுகின்றன? (ஆ) ஓசியாவைப் பற்றி என்ன அறியப்பட்டுள்ளது, அவருடைய தீர்க்கதரிசனம் முக்கியமாய் யாருக்காக எழுதப்பட்டது?
3. ஓசியா எவ்வளவு காலம் தீர்க்கதரிசனம் உரைத்தார், இந்தச் சமயத்திலிருந்த மற்ற தீர்க்கதரிசிகள் யாவர்?
4. ஓசியாவின் நம்பகத் தன்மையை என்ன மேற்கோள்களும் தீர்க்கதரிசன நிறைவேற்றங்களும் உறுதிசெய்கின்றன?
5. எந்த உண்மையற்ற தன்மையின் காரணமாக யெகோவா இஸ்ரவேலை தண்டித்தார்?
6. ஓசியாவின் எழுத்துநடையிலிருந்து என்ன தெரிந்துகொள்ளலாம்?
7. கோமேர் உண்மையற்றவளாகி, பின்னர் மீட்கப்பட்டது எதை சித்தரித்து காட்டுகிறது?
8. இந்தப் புத்தகத்தில் என்ன பெயர்கள் மாறி மாறி பயன்படுத்தப்படுகின்றன?
9. யெகோவா இஸ்ரவேலை எவ்வாறு நடத்துவார் என்பதை கோமேரின் பிள்ளைகளுடைய பெயர்கள் எவ்வாறு குறிப்பிட்டு காட்டுகின்றன?
10. அந்தத் தேசம் அறிவை வெறுத்ததால் என்ன நேரிட போகிறது?
11. ஓசியா ஜனங்களிடம் எவ்வாறு மன்றாடுகிறார், ஆனாலும் அவர்களுக்கு ஏன் ஆபத்து வரும்?
12. (அ) 13-வது அதிகாரத்தில் ஓசியா எதை சுருக்கமாக கூறுகிறார்? (ஆ) என்ன திரும்ப நிலைநாட்டப்படுதல் உறுதியளிக்கப்படுகிறது?
13. ஓசியா புத்தகம் என்ன வேண்டுதலுடன் முடிகிறது, யார் யெகோவாவின் வழிகளில் நடப்பார்கள்?
14. ஓசியா தீர்க்கதரிசனத்தின் துல்லியமான எந்த நிறைவேற்றங்கள் குறிப்பிடத்தக்கவை?
15. கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தின் எழுத்தாளர்கள் எவ்வாறு ஓசியா புத்தகத்திலிருந்து எடுத்த மேற்கோள்களைப் பொருத்துகிறார்கள்?
16. வணக்கம் சம்பந்தமாக யெகோவா எதிர்பார்க்கும் தகுதிகளைக் காண்பித்த ஓசியாவின் எந்த வார்த்தைகளை இயேசு மீண்டும் கூறினார்?
17. (அ) ஆவிக்குரிய வேசித்தனத்தில் இடறி விழுவோர் என்ன செய்ய வேண்டும்? (ஆ) மகிழ்ச்சி தரும் என்ன ராஜ்ய வாக்குறுதி ஓசியாவில் உள்ளது?