‘யெகோவாவின் வழிகள் செம்மையானவை’
‘யெகோவாவின் வழிகள் செம்மையானவை, நீதிமான்கள் அவைகளில் நடப்பார்கள்.’—ஓசியா 14:9.
1, 2. இஸ்ரவேலருக்கு யெகோவா எத்தகைய வாழ்க்கையை ஆரம்பித்துக் கொடுத்தார், ஆனால் அவர்களுக்கு என்ன நடந்தது?
தீர்க்கதரிசியான மோசேயின் காலத்தில், இஸ்ரவேலருக்கு யெகோவா செம்மையான வாழ்க்கையை ஆரம்பித்துக் கொடுத்தார். ஆனால் பொ.ச.மு. எட்டாம் நூற்றாண்டின் ஆரம்பத்திற்குள், கடவுள் அவர்களைப் பெரும் பாவம் செய்த குற்றவாளிகளாக கருதும் அளவிற்கு அவர்களுடைய நிலைமை மிகவும் மோசமாகியிருந்தது. ஓசியா 10 முதல் 14 வரையான அதிகாரங்களிலிருந்து இது தெளிவாகத் தெரிகிறது.
2 இஸ்ரவேலின் இருதயம் மாய்மாலம் நிறைந்ததாக ஆகியிருந்தது. பத்துக் கோத்திர ராஜ்யத்தைச் சேர்ந்த ஜனங்கள் ‘அநியாயத்தை உழுது’ அநீதியை அறுவடை செய்தார்கள். (ஓசியா 10:1, 13) “இஸ்ரவேல் இளைஞனாயிருந்தபோது நான் அவனை நேசித்தேன்; எகிப்திலிருந்து என்னுடைய குமாரனை வரவழைத்தேன்” என யெகோவா சொன்னார். (ஓசியா 11:1) எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுவித்த கடவுளுக்கு அந்த இஸ்ரவேலர் பொய்யையும் வஞ்சகத்தையுமே கைமாறாக தந்தார்கள். (ஓசியா 11:12) ஆகவே, யெகோவா அவர்களுக்குப் பின்வரும் அறிவுரையை வழங்கினார்: ‘இப்போதும் நீ உன் தேவனிடத்தில் திரும்பு; [அன்புள்ள] தயவையும் நியாயத்தையும் கைக்கொள்.’—ஓசியா 12:6.
3. கலகத்தனமிக்க சமாரியாவுக்கு என்ன நிகழவிருந்தது, ஆனால் இஸ்ரவேலர் எவ்வாறு இரக்கத்தைப் பெற முடியும்?
3 கலகத்தனமிக்க சமாரியாவும் அதன் அரசனும் பயங்கரமான அழிவை சந்திக்க நேரிடும். (ஓசியா 13:11, 16) ஆனால் ஓசியா தீர்க்கதரிசனத்தின் கடைசி அதிகாரம், ‘இஸ்ரவேலே, உன் தேவனாகிய யெகோவாவிடத்தில் திரும்பு’ என்ற வேண்டுகோளோடு தொடங்குகிறது. இஸ்ரவேலர் மனந்திரும்பி மன்னிப்பை நாடினால் கடவுளும் இரக்கம் காட்டுவார். ஆனால், ‘யெகோவாவின் வழிகள் செம்மையானவை’ என்பதை அவர்கள் ஏற்றுக்கொண்டு, அவற்றின்படி நடக்க வேண்டும்.—ஓசி. 14:1-6, 9.
4. ஓசியா தீர்க்கதரிசனத்திலிருந்து நாம் சிந்திக்கப்போகும் நியமங்கள் யாவை?
4 ஓசியா தீர்க்கதரிசனத்தின் இந்தப் பகுதியில், கடவுளுடன் நடக்க உதவும் நியமங்கள் பல உள்ளன. பின்வருவனவற்றை நாம் சிந்திப்போம்: (1) மாய்மாலமற்ற வழிபாட்டை யெகோவா எதிர்பார்க்கிறார், (2) கடவுள் தமது ஜனங்களுக்கு பற்றுமாறா அன்பைக் காட்டுகிறார், (3) நாம் தொடர்ந்து யெகோவாவில் நம்பிக்கை வைக்க வேண்டும், (4) யெகோவாவின் வழிகள் எப்பொழுதும் செம்மையானவை, (5) பாவிகள் யெகோவாவிடம் திரும்பிவர முடியும்.
மாய்மாலமற்ற வழிபாட்டை யெகோவா எதிர்பார்க்கிறார்
5. நாம் எப்படிப்பட்ட சேவை செய்ய வேண்டுமென கடவுள் நம்மிடம் எதிர்பார்க்கிறார்?
5 சுத்தமான, மாய்மாலமற்ற முறையில் பரிசுத்த சேவை செய்ய வேண்டுமென யெகோவா நம்மிடம் எதிர்பார்க்கிறார். ஆனால் இஸ்ரவேலோ ‘அழிந்துபோகும் திராட்சச்செடி போல்’ (NW) பலனற்றதாக ஆகியிருந்தது. இஸ்ரவேலின் குடிகள் பொய் வணக்கத்திற்காக ‘பலிபீடங்களைத் திரளாக்கியிருந்தார்கள்.’ அவர்கள் சிலைகளைக்கூட—ஒருவேளை அசுத்தமான வணக்கத்தில் உபயோகிப்பதற்காக நான்முக கம்பங்களைக்கூட—ஏற்படுத்தினார்கள். யெகோவா இந்தப் பலிபீடங்களை நொறுக்கி, கம்பங்களை உடைத்துப் போடவிருந்தார்.—ஓசியா 10:1, 2.
6. கடவுளுடன் நடப்பதற்கு, எத்தகைய போக்கை நாம் விட்டொழிக்க வேண்டும்?
6 கடவுளுக்கு ஒப்புக்கொடுத்த ஜனங்கள் மத்தியில் மாய்மாலத்திற்கு இடமே இல்லை. ஆனால், இஸ்ரவேலருக்கு என்ன ஆனது? ஏன், ‘அவர்கள் இருதயம் பிரிக்கப்பட்டிருந்ததே,’ அதாவது அவர்களுடைய இருதயத்தில் மாய்மாலம் நிறைந்திருந்ததே! ஒப்புக்கொடுக்கப்பட்ட தேசமாக யெகோவாவுடன் உடன்படிக்கை செய்திருந்தபோதிலும், மாய்மாலக் குற்றமுள்ளவர்கள் என அவர்களை அவர் அறிவித்தார். இதிலிருந்து என்ன பாடத்தை நாம் கற்றுக்கொள்ளலாம்? நாம் கடவுளுக்கு நம்மை ஒப்புக்கொடுத்திருந்தால், மாய்மாலக்காரர்களாக இருக்கக்கூடாது. நீதிமொழிகள் 3:32 இவ்வாறு எச்சரிக்கிறது: “மாறுபாடுள்ளவன் கர்த்தருக்கு அருவருப்பானவன்; நீதிமான்களோடே அவருடைய இரகசியம் [“அன்னியோன்னியம்,” NW] இருக்கிறது.” நாம் கடவுளுடன் நடக்க வேண்டுமென்றால், ‘சுத்தமான இருதயத்திலும் நல்மனச்சாட்சியிலும் மாயமற்ற விசுவாசத்திலும் பிறக்கும் அன்பை’ காண்பிக்க வேண்டும்.—1 தீமோத்தேயு 1:5.
கடவுள் தமது ஜனங்களிடம் பற்றுமாறா அன்பைக் காட்டுகிறார்
7, 8. (அ) கடவுளுடைய பற்றுமாறா அன்பை எத்தகைய சூழ்நிலைகளில் நாம் அனுபவிக்கலாம்? (ஆ) நாம் வினைமையான பாவத்தில் ஈடுபட்டிருந்தால் என்ன செய்ய வேண்டும்?
7 மாய்மாலமற்ற முறையிலும் செம்மையான முறையிலும் நாம் யெகோவாவை வழிபட்டால், அவருடைய அன்புள்ள தயவை, அதாவது பற்றுமாறா அன்பைப் பெறுகிறவர்களாக இருப்போம். நெறிகெட்ட இஸ்ரவேலரிடம் இவ்வாறு சொல்லப்பட்டது: “நீங்கள் நீதிக்கென்று விதை விதையுங்கள்; தயவுக்கொத்ததாய் [“அன்புள்ள தயவுக்கேற்ப,” NW] அறுப்பு அறுங்கள்; உங்கள் தரிசு நிலத்தைப் பண்படுத்துங்கள்; கர்த்தர் வந்து உங்கள்மேல் நீதியை வருஷிக்கப் பண்ணுமட்டும் [“உங்களுக்கு நீதியான போதனையைக் கொடுக்குமட்டும்,” NW] அவரைத் தேடக் காலமாயிருக்கிறது.”—ஓசியா 10:12.
8 இஸ்ரவேலர் மனந்திரும்பி யெகோவாவைத் தேடினால் நிலைமை எவ்வளவோ நன்றாக இருக்கும்! அப்போது அவர் மகிழ்ச்சியோடு ‘அவர்களுக்கு நீதியான போதனையைக் கொடுப்பார்.’ (NW) நாம் வினைமையான பாவம் செய்திருந்தால், யெகோவாவைத் தேடுவோமாக; மன்னிப்புக்காக ஜெபம் செய்து, கிறிஸ்தவ மூப்பர்கள் தரும் ஆவிக்குரிய உதவியை நாடுவோமாக. (யாக்கோபு 5:13-16) கடவுளுடைய பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலையும் தேடுவோமாக, ஏனென்றால் “தன் மாம்சத்திற்கென்று விதைக்கிறவன் மாம்சத்தினால் அழிவை அறுப்பான்; ஆவிக்கென்று விதைக்கிறவன் ஆவியினாலே நித்திய ஜீவனை அறுப்பான்.” (கலாத்தியர் 6:8) நாம் ‘ஆவிக்கென்று விதைத்தால்,’ தொடர்ந்து கடவுளுடைய பற்றுமாறா அன்பை அனுபவிப்போம்.
9, 10. ஓசியா 11:1-4 எவ்வாறு இஸ்ரவேலுக்குப் பொருந்துகிறது?
9 யெகோவா தமது ஜனங்களிடம் எப்போதும் அன்பாக நடந்துகொள்கிறார் என்ற நம்பிக்கையுடன் நாம் இருக்கலாம். ஓசியா 11:1-4-ல் இதற்கு அத்தாட்சி காணப்படுகிறது, அங்கே நாம் இவ்வாறு வாசிக்கிறோம்: ‘இஸ்ரவேல் இளைஞனாயிருந்தபோது நான் அவனை நேசித்தேன்; எகிப்திலிருந்து என்னுடைய குமாரனை வரவழைத்தேன். . . . பாகால்களுக்குப் பலியிட்டு, விக்கிரகங்களுக்குத் தூபங்காட்டினார்கள். நான் எப்பிராயீமை [அதாவது, இஸ்ரவேலரை] கைபிடித்து நடக்கப் பழக்கினேன்; ஆனாலும் நான் தங்களைக் குணமாக்குகிறவரென்று அறியாமற்போனார்கள். மனுஷரைக் கட்டி இழுக்கிற அன்பின் கயிறுகளால் நான் அவர்களை இழுத்தேன், அவர்கள் கழுத்துகளின்மேல் இருந்த நுகத்தடியை எடுத்துப் போடுகிறவரைப் போல் இருந்து, அவர்கள் பட்சம் சாய்ந்து, அவர்களுக்கு ஆகாரங்கொடுத்தேன்.”
10 இங்கே இஸ்ரவேல் ஒரு சிறு குழந்தைக்கு ஒப்பிடப்படுகிறது. இஸ்ரவேலரை தமது கைகளில் ஏந்திச் சென்று அவர்கள் நடப்பதற்கு யெகோவா அன்புடன் கற்றுக்கொடுத்தார். “அன்பின் கயிறுகளால்” அவர்களை தொடர்ந்து இழுத்தார். இதயத்தை நெகிழ்விக்கும் என்னே ஓர் வருணனை! உங்களுடைய குழந்தை தனது முதல் அடியை எடுத்து வைக்க ஒரு பெற்றோராக நீங்கள் அதற்கு உதவி செய்வதாக கற்பனை செய்துகொள்ளுங்கள். உங்கள் கைகளை நீட்டிப் பிடித்திருக்கிறீர்கள். உங்கள் செல்லக்குட்டி விழுந்துவிடக் கூடாது என்பதற்காக அவன் பிடித்துக்கொள்ள ஒருவேளை கயிறுகளைக்கூட உபயோகிக்கிறீர்கள். ஆம், அதைப் போலவே, யெகோவா உங்கள்மீது வைத்திருக்கும் அன்பும் கனிவானது. “அன்பின் கயிறுகளால்” உங்களை வழிநடத்த அவர் பிரியப்படுகிறார்.
11. எந்த விதத்தில் ‘நுகத்தடியை எடுத்துப் போடுகிறவரைப் போல்’ கடவுள் இருந்தார்?
11 இஸ்ரவேலரோடு தொடர்புகொள்கையில், யெகோவா ‘அவர்கள் கழுத்துகளின்மேல் இருந்த நுகத்தடியை எடுத்துப் போடுகிறவரைப் போல் இருந்து, அவர்கள் பட்சம் சாய்ந்து, அவர்களுக்கு ஆகாரங்கொடுத்தார்.’ ஒரு மிருகம் வசதியாய் சாப்பிடுவதற்காக அதன் நுகத்தடியை நீக்கிவிடுவதை அல்லது தூரமாக விலக்கிவிடுவதைப் போல அவர்களிடம் கடவுள் நடந்துகொண்டார். கடவுளுக்கு கீழ்ப்பட்டிருத்தல் என்ற நுகத்தை இஸ்ரவேலர் உடைத்தெறிந்தபோதுதான் அவர்களுடைய எதிரிகளின் பாரமான நுகம் அவர்கள்மீது வந்தது. (உபாகமம் 28:45, 48; எரேமியா 28:14) நமது பிரதான எதிரியான சாத்தானின் இரும்புப்பிடியில் சிக்கி, அவனுடைய பாரமான நுகத்தின் வேதனையை அனுபவிக்காதிருப்போமாக. மாறாக, நம்முடைய அன்புள்ள கடவுளுடன் தொடர்ந்து உண்மைப் பற்றுறுதியோடு நடப்போமாக.
இடைவிடாமல் யெகோவாவை நம்புங்கள்
12. ஓசியா 12:6-ன்படி, கடவுளோடு தொடர்ந்து நடக்க நாம் என்ன செய்ய வேண்டும்?
12 யெகோவாவுடன் தொடர்ந்து நடப்பதற்கு, நாம் இடைவிடாமல் அவரை நம்ப வேண்டும். இஸ்ரவேலருக்கு இவ்வாறு சொல்லப்பட்டது: “இப்போதும் நீ உன் தேவனிடத்தில் திரும்பு; [அன்புள்ள] தயவையும் நியாயத்தையும் கைக்கொண்டு, இடைவிடாமல் உன் தேவனை நம்பிக்கொண்டிரு.” (ஓசியா 12:6) அன்புள்ள தயவை காண்பித்து, நியாயத்தைக் கடைப்பிடித்து, ‘இடைவிடாமல் தேவனை நம்புவதன் மூலம்’ அவரிடம் மனந்திரும்பி வந்ததற்கான அத்தாட்சியை இஸ்ரவேலரால் காண்பிக்க முடிந்தது. நாம் எவ்வளவு காலம் கடவுளோடு நடந்துவந்திருந்தாலும் சரி, தொடர்ந்து அன்புள்ள தயவைக் காண்பித்து, நியாயமாக நடந்து, கடவுளில் நம்பிக்கை வைக்க உறுதிபூண்டிருக்க வேண்டும்.—சங்கீதம் 27:14.
13, 14. யெகோவாவில் நம்பிக்கை வைப்பதற்குரிய காரணத்தைக் கொடுத்து, ஓசியா 13:14-ஐ பவுல் எப்படி பொருத்துகிறார்?
13 இஸ்ரவேலரைப் பற்றிய ஓசியாவின் தீர்க்கதரிசனம் கடவுளில் நம்பிக்கை வைப்பதற்கு விசேஷ காரணத்தை நமக்குத் தருகிறது. “அவர்களை நான் பாதாளத்தின் வல்லமைக்கு நீங்கலாக்கி மீட்பேன்; அவர்களை மரணத்துக்கு நீங்கலாக்கி விடுவிப்பேன்; மரணமே, உன் வாதைகள் எங்கே? பாதாளமே, உன் சங்காரம் எங்கே?” என யெகோவா சொன்னார். (ஓசியா 13:14) அந்தச் சமயத்தில் இஸ்ரவேலரை சொல்லர்த்தமான மரணத்திலிருந்து மீட்பதாக யெகோவா சொல்லவில்லை, ஆனால் கடைசியில் மரணத்தை என்றுமாக விழுங்கி, அதை தோற்கடிப்பார்.
14 அபிஷேகம் செய்யப்பட்ட சக விசுவாசிகளுக்கு எழுதியபோது ஓசியா தீர்க்கதரிசனத்திலிருந்து பவுல் மேற்கோள் காட்டி இவ்வாறு எழுதினார்: “அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் தரித்துக்கொள்ளும்போது, மரணம் ஜெயமாக விழுங்கப்பட்டது என்று எழுதியிருக்கிற வார்த்தை நிறைவேறும். மரணமே! உன் கூர் எங்கே? பாதாளமே! உன் ஜெயம் எங்கே? மரணத்தின் கூர் பாவம், பாவத்தின் பெலன் நியாயப்பிரமாணம். நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலே நமக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம்.” (1 கொரிந்தியர் 15:54-57) இயேசுவை மரணத்திலிருந்து யெகோவா எழுப்பினார். இவ்வாறு, தமது நினைவில் இருப்போரை உயிர்த்தெழுப்புவார் என்ற ஆறுதல் அளிக்கும் உத்தரவாதத்தை கொடுத்தார். (யோவான் 5:28, 29) யெகோவாவில் நம்பிக்கை வைப்பதற்கு மகிழ்ச்சியூட்டும் எப்பேர்ப்பட்ட காரணம்! என்றாலும், கடவுளோடு நடப்பதற்கு உயிர்த்தெழுதல் நம்பிக்கையோடுகூட மற்றொன்றும் நம்மை உந்துவிக்கிறது.
யெகோவாவின் வழிகளெல்லாம் எப்பொழுதும் செம்மையானவை
15, 16. சமாரியாவைப் பற்றி என்ன முன்னறிவிக்கப்பட்டது, இத்தீர்க்கதரிசனம் எப்படி நிறைவேறியது?
15 ‘யெகோவாவின் வழிகள் செம்மையானவை’ என்ற நம்பிக்கை கடவுளோடு தொடர்ந்து நடக்க நமக்கு உதவுகிறது. சமாரியாவின் குடிகள் கடவுளுடைய நீதியான வழிகளில் நடக்கவில்லை. இதனால், பாவம் செய்ததற்கும் யெகோவாவில் நம்பிக்கை வைக்கத் தவறியதற்குமான பின்விளைவுகளை அவர்கள் சந்தித்தே தீரவேண்டும். “சமாரியா தன் தேவனுக்கு விரோதமாகக் கலகம் பண்ணினபடியால், குற்றஞ் சுமத்தப்பட்டதாயிருக்கும்; அவர்கள் பட்டயத்தால் விழுவார்கள்; அவர்களுடைய குழந்தைகள் மோதியடிக்கப்படும்; அவர்களுடைய கர்ப்பவதிகள் கீறப்பட்டுப் போவார்கள்” என முன்னறிவிக்கப்பட்டது. (ஓசியா 13:16) சமாரியாவை வென்ற அசீரியர்கள் அத்தகைய கொடூரமான அராஜகங்களை செய்தார்கள் என்பதை சரித்திர பதிவுகள் காட்டுகின்றன.
16 சமாரியா பத்துக் கோத்திர ராஜ்யமான இஸ்ரவேலின் தலைநகரமாக இருந்தது. என்றாலும், இந்தச் சந்தர்ப்பத்தில் சமாரியா என்ற பெயர் அந்த முழு ராஜ்யத்தையும் குறிக்கலாம். (1 இராஜாக்கள் 21:1) பொ.ச.மு. 742-ல், அசீரிய அரசனான ஐந்தாம் சல்மனாசார் சமாரியா நகரை முற்றுகையிட்டான். கடைசியாக, பொ.ச.மு. 740-ல் சமாரியா வீழ்ந்தபோது அதன் குடிமக்களில் பிரபலமானோர் மெசொப்பொத்தாமியாவிற்கும் மேதியாவிற்கும் கைதிகளாக கொண்டு செல்லப்பட்டார்கள். சமாரியாவை கைப்பற்றியது ஐந்தாம் சல்மனாசாரா அல்லது அவருக்குப் பின் ஆண்ட இரண்டாம் சர்கோனா என்பது தெளிவாகத் தெரியவில்லை. (2 இராஜாக்கள் 17:1-6, 22, 23; 18:9-12) இருந்தபோதிலும், 27,290 இஸ்ரவேலரை வட ஐப்பிராத்திலும் மேதியாவிலும் உள்ள இடங்களுக்கு நாடுகடத்திச் சென்றதாக சர்கோனின் பதிவுகள் குறிப்பிடுகின்றன.
17. கடவுளுடைய தராதரங்களை அவமதிப்பதற்குப் பதிலாக, நாம் என்ன செய்ய வேண்டும்?
17 சமாரியாவின் குடிகள் யெகோவாவின் நீதியான வழிகளில் நடக்கத் தவறியதால் பயங்கரமான விளைவுகளை சந்தித்தார்கள். ஒப்புக்கொடுக்கப்பட்ட கிறிஸ்தவர்களாக, நாமும் பழக்கமாய் பாவம் செய்து அவருடைய நீதியுள்ள தராதரங்களை அவமதித்தால், மோசமான விளைவுகளைச் சந்திப்போம். அத்தகைய துன்மார்க்கமான பாதையை ஒருபோதும் பின்பற்றாதிருப்போமாக! மாறாக, அப்போஸ்தலன் பேதுருவின் இந்த அறிவுரையை நாம் ஒவ்வொருவரும் பின்பற்றுவோமாக: “உங்களில் ஒருவனும் கொலைபாதகனாயாவது, திருடனாயாவது, பொல்லாங்கு செய்தவனாயாவது, அந்நிய காரியங்களில் தலையிட்டுக்கொண்டவனாயாவது பாடுபடுகிறவனாயிருக்கக் கூடாது. ஒருவன் கிறிஸ்தவனாயிருப்பதினால் பாடுபட்டால் வெட்கப்படாமலிருந்து, அதினிமித்தம் தேவனை மகிமைப்படுத்தக்கடவன்.”—1 பேதுரு 4:15, 16.
18. நாம் எப்படி தொடர்ந்து ‘தேவனை மகிமைப்படுத்தலாம்’?
18 காரியங்களை நம் இஷ்டத்திற்கு செய்வதற்குப் பதிலாக, கடவுளுடைய நீதியுள்ள வழிகளில் நடப்பதன் மூலம் நாம் தொடர்ந்து ‘தேவனை மகிமைப்படுத்துகிறோம்.’ காயீன் தன் இஷ்டப்படி நடந்ததாலும் பாவம் அவனை சீக்கிரத்தில் ஆண்டுகொள்ளப் போகிறது என யெகோவா கொடுத்த எச்சரிப்பை அசட்டை செய்ததாலும் அவன் கொலை செய்தான். (ஆதியாகமம் 4:1-8) இஸ்ரவேலரை சபிப்பதற்காக மோவாபிய ராஜாவிடம் பிலேயாம் பணம் வாங்கியிருந்தான், ஆனால் அவர்களை அவனால் சபிக்க முடியவில்லை. (எண்ணாகமம் 24:10) மோசே மற்றும் ஆரோனின் அதிகாரத்தை எதிர்த்து கலகம் செய்ததால் லேவியனாகிய கோராகையும் மற்றவர்களையும் கடவுள் அழித்தார். (எண்ணாகமம் 16:1-3, 31-33) நாம் ‘காயீனுடைய கொலைகார வழியில் நடக்கவோ,’ ‘பிலேயாம் கூலிக்காகச் செய்த வஞ்சகத்திலே’ விரைந்தோடவோ, ‘கோராகு எதிர்த்துப் பேசின பாவத்திற்குள்ளாகவோ’ விரும்ப மாட்டோம். (யூதா 11) இருந்தாலும், நாம் தவறு செய்துவிட்டால் ஓசியா தீர்க்கதரிசனம் நமக்கு ஆறுதல் அளிக்கிறது.
பாவிகள் யெகோவாவிடம் திரும்பிவர முடியும்
19, 20. மனந்திரும்பிய இஸ்ரவேலரால் எத்தகைய பலிகளைச் செலுத்த முடிந்தது?
19 வினைமையான பாவம் செய்து விழுந்துபோனவர்கள்கூட யெகோவாவிடம் திரும்பிவர முடியும். ஓசியா 14:1, 2-ல் இந்த வேண்டுகோளை கவனிக்கிறோம்: “இஸ்ரவேலே, உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் திரும்பு; நீ உன் அக்கிரமத்தினால் விழுந்தாய். வார்த்தைகளைக்கொண்டு கர்த்தரிடத்தில் திரும்புங்கள்; அவரை நோக்கி: தேவரீர் எல்லா அக்கிரமத்தையும் நீக்கி, எங்களைத் தயவாய் அங்கீகரித்தருளும்; அப்பொழுது நாங்கள் எங்கள் உதடுகளின் காளைகளைச் செலுத்துவோம் என்று சொல்லுங்கள்.”
20 மனந்திரும்பிய இஸ்ரவேலர் ‘தங்கள் உதடுகளின் காளைகளை கடவுளுக்கு செலுத்த’ முடிந்தது. இவை உண்மையான துதிகள் எனும் பலிகளாகும். “அவருடைய நாமத்தைத் துதிக்கும் உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திர பலியை அவர் மூலமாய் எப்போதும் தேவனுக்குச் செலுத்தக்கடவோம்” என்று எபிரெய கிறிஸ்தவர்களை உந்துவிக்கையில் பவுல் இந்தத் தீர்க்கதரிசனத்தையே மறைமுகமாய் குறிப்பிட்டார். (எபிரெயர் 13:15) இன்று கடவுளுடன் நடந்து இத்தகைய பலிகள் செலுத்துவது எப்பேர்ப்பட்ட பாக்கியம்!
21, 22. மனந்திரும்பிய இஸ்ரவேலர் எத்தகைய திரும்ப நிலைநாட்டுதலை அனுபவிப்பார்கள்?
21 தங்களுடைய தவறான வழியைவிட்டு கடவுளிடம் திரும்பிய இஸ்ரவேலர் ‘தங்கள் உதடுகளின் காளைகளை’ அவருக்குச் செலுத்தினர். அதன் விளைவாக, யெகோவா வாக்குறுதி அளித்திருந்தபடியே அவர்கள் ஆவிக்குரிய விதத்தில் திரும்ப நிலைநாட்டப்பட்டனர். ஓசியா 14:4-7 இவ்வாறு கூறுகிறது: “நான் [யெகோவா] அவர்கள் சீர்கேட்டைக் குணமாக்குவேன்; அவர்களை மனப்பூர்வமாய்ச் சிநேகிப்பேன்; என் கோபம் அவர்களை விட்டு நீங்கிற்று. நான் இஸ்ரவேலுக்குப் பனியைப் போலிருப்பேன்; அவன் லீலிப் புஷ்பத்தைப் போல் மலருவான்; லீபனோனைப் போல் வேரூன்றி நிற்பான். அவன் கிளைகள் ஓங்கிப் படரும், அவன் அலங்காரம் [அதாவது, மதிப்பு] ஒலிவ மரத்தினுடைய அலங்காரத்தைப் போலவும், அவனுடைய வாசனை லீபனோனுடைய வாசனையைப் போலவும் இருக்கும். அவன் நிழலில் குடியிருக்கிறவர்கள் திரும்புவார்கள்; தானிய விளைச்சலைப் போலச் செழித்து, திராட்சச்செடிகளைப் போலப் படருவார்கள்; அவன் வாசனை லீபனோனுடைய திராட்சரசத்தின் வாசனையைப் போல இருக்கும்.”
22 மனந்திரும்பிய இஸ்ரவேலர் ஆவிக்குரிய ரீதியில் குணமாக்கப்பட்டு, கடவுளுடைய அன்பை மீண்டும் அனுபவிப்பார்கள். யெகோவா அவர்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் பனியைப் போலிருந்து, அவர்களை அபரிமிதமாய் ஆசீர்வதிப்பார். திரும்ப நிலைநாட்டப்பட்ட அவருடைய ஜனங்கள் ‘ஒலிவ மரத்தைப் போல’ மதிப்பைப் பெறுவார்கள். அவர்கள் நிச்சயமாக கடவுளுடைய வழிகளில் நடப்பார்கள். நாம் யெகோவா தேவனோடு நடக்க திடத்தீர்மானமாக இருப்பதால், நம்மிடம் என்ன எதிர்பார்க்கப்படுகிறது?
யெகோவாவின் செம்மையான வழிகளில் தொடர்ந்து நடவுங்கள்
23, 24. ஓசியா புத்தகம் என்ன ஊக்கமூட்டும் தீர்க்கதரிசனத்துடன் முடிவடைகிறது, அது நம்மை எப்படி பாதிக்கிறது?
23 நாம் கடவுளோடு தொடர்ந்து நடக்க வேண்டுமாகில், ‘பரத்திலிருந்து வருகிற ஞானத்தைப்’ பயன்படுத்தி எப்பொழுதும் அவருடைய செம்மையான வழிகளுக்கு இசைவாக நடக்க வேண்டும். (யாக்கோபு 3:17, 18) ஓசியா தீர்க்கதரிசனத்தின் கடைசி வசனம் இவ்வாறு சொல்கிறது: “இவைகளை உணரத்தக்க ஞானமுள்ளவன் யார்? இவைகளைக் கிரகிக்கத்தக்க புத்தியுள்ளவன் யார்? கர்த்தருடைய வழிகள் செம்மையானவைகள், நீதிமான்கள் அவைகளில் நடப்பார்கள்; பாதகரோவென்றால் அவைகளில் இடறிவிழுவார்கள்.”—ஓசியா 14:9.
24 இந்த உலகின் ஞானத்தாலும் தராதரங்களாலும் வழிநடத்தப்படுவதற்குப் பதிலாக, கடவுளுடைய ஞானமுள்ள, செம்மையான பாதைகளில் நடப்பதற்கு திடத்தீர்மானமாய் இருப்போமாக. (உபாகமம் 32:4) கடவுளுடைய செம்மையான வழிகளில் 59 அல்லது அதற்கும் அதிகமான ஆண்டுகள் ஓசியா நடந்தார். ஞானமும் விவேகமும் உள்ளவர்கள் இத்தகைய வார்த்தைகளைப் புரிந்துகொள்வர் என்ற நம்பிக்கையில் தெய்வீக செய்திகளை அவர் உண்மையோடு அறிவித்தார். நம்மைப் பற்றியென்ன? சாட்சி கொடுக்கும் வேலையை யெகோவா அனுமதிக்கிறவரை, அவருடைய தகுதியற்ற தயவை ஞானமாய் ஏற்றுக்கொள்வோரை நாம் தொடர்ந்து தேடுவோமாக. ‘உண்மையும் விவேகமுமுள்ள அடிமைக்கு’ முழு ஒத்துழைப்பு கொடுத்து இதைச் செய்வதில் நாம் மகிழ்ச்சி அடைகிறோம்.—மத்தேயு 24:45-47, NW.
25. ஓசியா தீர்க்கதரிசனத்தை நாம் சிந்தித்தது எதைச் செய்ய நமக்கு உதவும்?
25 ஓசியா தீர்க்கதரிசனத்தை சிந்தித்துப் பார்த்தது, கடவுளுடைய புதிய உலகில் நித்திய ஜீவனைப் பெறும் நம்பிக்கையுடன் தொடர்ந்து அவரோடு நடக்க நமக்கு உதவும். (2 பேதுரு 3:13; யூதா 20, 21) எப்பேர்ப்பட்ட அருமையான நம்பிக்கை! ‘யெகோவாவின் வழிகள் செம்மையானவை’ என்று நாம் சொல்லும்போது, உண்மையில் அதை நம்புகிறோம் என்பதை நம் சொல்லிலும் செயலிலும் நிரூபித்துக் காட்டினால் அந்த நம்பிக்கை நமக்கு நிஜமானதாகும்.
எப்படி பதிலளிப்பீர்கள்?
• கடவுளுக்குத் தூய வழிபாடு செலுத்தினால், அவர் நம்மை எப்படி நடத்துவார்?
• ஏன் யெகோவாமீது எப்பொழுதும் நம்பிக்கை வைக்க வேண்டும்?
• யெகோவாவின் வழிகள் செம்மையானவை என ஏன் நம்புகிறீர்கள்?
• யெகோவாவின் செம்மையான வழிகளில் எப்படித் தொடர்ந்து நடக்க முடியும்?
[பக்கம் 28-ன் படம்]
கிறிஸ்தவ மூப்பர்களிடமிருந்து வரும் ஆன்மீக உதவியை ஏற்றுக்கொள்ளுங்கள்
[பக்கம் 29-ன் படம்]
யெகோவா தரும் உயிர்த்தெழுதல் வாக்குறுதிகளில் நம்பிக்கை வைப்பதற்குரிய காரணத்தை ஓசியா தீர்க்கதரிசனம் தருகிறது
[பக்கம் 31-ன் படங்கள்]
நித்திய ஜீவ நம்பிக்கையுடன் தொடர்ந்து கடவுளுடன் நடவுங்கள்